ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருபத்து நாலாராயிரப்படி -அவதாரிகை –
இந்த ஜகத்தில் சித் அசித் ஈச்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்கள் ஒன்றும் அறியாதே
புருஷார்த்த உபாயங்கள் ஒன்றிலும் மூளாதே-சப்தாதி விஷயங்களிலே மிகவும் மண்டி
பொறுக்கவும் கடக்கவும் ஒண்ணாது இருக்கிற சம்சார துக்க சாகரத்திலே அழுந்தா நின்ற சேதனருக்கு
துர்லபோ மனுஷோ தேக தேஹி நாம் ஷண பங்குர தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்ட ப்ரிய தர்சனம் – என்கிறபடியே
புருஷார்த்த உபயோகியான மனுஷ்ய சரீரம் துர்லபம்
இப்படி துர்லபமான சரீரத்தைப் பெற்றாலும் மோஷ இச்சை பிறக்கை அரிது –
மானுஷ்யம் ப்ராப்ய லோகேச்மின் அமூகோ அபதிரோபிவா நபக்ராமதி சம்சாராத் ச கலு ப்ரஹ்ம ஹா பவேத் -என்கிறபடியே
இந்த லோகத்திலே மனுஷ்ய சரீரத்தைப் பெற்றும் மூகபதிரனும் அன்றிக்கே இருக்கிறவன் சம்சாராத் உத்தீர்ணன் ஆகாதவன் -ப்ரஹ்ம ஹந்தாவாகக் கடவன் இ றே
மோஷ இச்சை பிறந்தாலும் நிரதிசய ஸூ க ரூபமாய் பகவத் குண அனுபவ காரிதமான தத் கைங்கர்ய ரூப மோஷ இச்சை ஒருவருக்கும் பிறக்கிறது இல்லை –
மோஷ இச்சை பிறந்தாலும் நிரதிசய ஸூ க ரூபமாய் பகவத் குண அனுபவ காரிதமான தத் கைங்கர்ய ரூப மோஷ இச்சை ஒருவருக்கும் பிறக்கிறது இல்லை
பாகவத சேஷ தைகரதித்வா பாவம் கிம்பு நர்ந்யாய சித்தம் -கலௌ ஜகத் பதிம் இத்யாதி ஸ்லோகத்தில் படியே
-மிகவும் கலி காலத்தில் பகவத் ருசி ஒருவருக்கும் பிறக்கிறது இல்லை –
இத்தன்மையை மனுஷ்யாணாம் சகஸ்ரேஷூ இத்யாதி ச்லோகத்தாலே எம்பெருமான் தானும் அருளிச் செய்தான் இ றே –
இப்படி இருக்கிற சம்சாரத்திலே -ததோகில ஜகத்பத்ம இத்யாதி ஸ்லோகத்தாலே சொல்லுகிறபடியே
ஜகத்தில் அஜ்ஞ்ஞான அந்தகாரம் எல்லாம் நீங்கி லோகம் எல்லாம் வாழும்படியாக
சேதனர் பண்ணின பாக்யத்தாலே ஆழ்வார் திரு நகரியிலே வந்து திருவவதாரம் பண்ணி அருளினார் –
ஹசிதம் பாஷிதம் -இத்யாதி -பிரசாதாத் -ஸ்லோகத்தில் படியாலே பகவத் பிரசாதத்தாலே சாஷாத்க்ருதமான பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவராய்
ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்று எம்பெருமான் அருளிச் செய்த ஜ்ஞாநிகளுக்கு அக்ரேசராய்
பால்யாத் ப்ரப்ருதி ஸூ ஸ் நிக்த-என்றும் நச சீதா த்வயா ஹீ நா -என்றும் சொல்லுகிற படிகளை யுடைய
இளைய பெருமாளைப் போலே ஜன்மப்ரப்ருதி எம்பெருமானையே தாரகாதிகளாக யுடையராய்
அவனைப் பிரியில் தரியாத தன்மையருமாய் நிரஸ்த நிகில சாம்சாரிக ஸ்வ பாவருமாய்
ந தேவ லோக க்ரமணம் -இத்யாதி ஸ்லோகத்தில் சொல்லுகிறபடியே பகவத் வ்யதிரிக்த புருஷார்த்த பிரச்தாவத்திலே வெருவும் ஸ்வ பாவருமாய்
விச்தரேணா மநோ யோகம் -ந ததர்ப்ப சமாயாந்தம் -இத்யாதியில் சொல்லுகிற படிகளை யுடைய அர்ஜுன தசராதிகளைப் போலே
காலதத்வம் உள்ளதனையும் எம்பெருமானை அனுபவித்தாலும் திருப்தி பிறவாதே மென் மேல் எனக் கடல் போல் பெருகுகிற தம்முடைய அபி நிவேசத்தாலே
கபளீக்ருத சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் உடையவராய்
பிராட்டிமார் பக்கலாதல் அந்த லஷ்மண பரதாதிகள் பக்கலாதல் ஸ்ரீ கோபிமார் பக்கலாதல் தம்முடைய இப்படிக்கு சர்வதா சாம்யம்
காண ஒண்ணாத படியான பிரபாவத்தை உடையராய் தர்மாத்மா சத்ய சௌதாதி குணா நாமா கரஸ் ததா -இத்யாதி ஸ்லோகத்தில்
ஸ்ரீ பிரகலாத ஆழ்வானை சாதுக்களுக்கு எல்லாம் உபமான பூமியாய் சொன்னால் போலே எல்லாருக்கும் தம்முடைய ஒரோ வகைகளால் உபமான பூமியுமாய்
குணைர் தாஸ்யம் உபாகத -என்னும்படியாலே பகவத் குணங்களுக்குத் தோற்று அடிமை கொள்ளுவது புகுவதும் செய்து
அஹம் தாவத் மகாராஜா -இத்யாதி ஸ்லோகத்தில் -சேலேய் கண்ணியரும்இத்யாதி படியே பகவத் ஏக காந்த்ய சீமையுமாய்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்னும்படியாலே எப்பேர்பட்ட அடிமையும் செய்து அல்லது தரியாத படியையும் யுடையராய்
தம்முடைய சந்நிதி மாத்ரத்தாலே எல்லாருடைய அஹங்கார மமகார ரூபமான அவித்யாக்ய தமசைப் போக்கி
ஜ்ஞான பக்திகளைப் பிறப்பித்து அவர்களை பகவத் கைங்கர்ய லஷண மோஷத்துக்கு நிலவராக்கும் ஸ்வ பாவத்தை யுடையராகக் கொண்டு
வளர்ந்து அருளுகிற காலத்திலேயே
இவருடைய பகவத் குண அனுபவம் உள்ளடங்காமை வேதங்களிலும் வேத உபப்ரும்ஹணமான இதிகாச புராணா திகளில் உண்டான
சம்சயங்களை அறுக்கைக்கு ஈடான சாத்குண்யத்தை யுடைத்தான திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி
திருவாய்மொழி ஆகிய பிரபந்தங்களைக் கொண்டு ப்ரவ்ருத்தம் ஆயிற்று
இப்படியை அவாவில் அந்தாதிகள் இவை ஆயிரமும் என்று ஆழ்வார் தாமே அருளிச் செய்தார் –
இது இங்கன் ஆகில் இப்பிரபந்தங்களுக்கு பாட்டும் சங்கையையும்-பாட்டுக்கள் நாலடியாகையும் -அஷரங்கள் சமமாகையும்
தொடக்கமான இப்பிரபந்த லஷணங்கள் சேர விழுந்த படி எங்கனே என்னில் -சோகவேகத்தால் பிறந்த
-மாநிஷாத இத்யாதி ஸ்லோகம் ஆனது மச்சந்தா தேவ -என்கிற
ஸ்லோகத்தின் படி ப்ரஹ்மாவின் பிரசாதத்தாலே சர்வ லஷணோபேதம் ஆனால் போலே
பகவத் பிரசாதம் அடியாகப் பிறந்த இப்பிரபந்தங்களுக்கு இவற்றில் கூடாதது இல்லை -இவை என்ன கோடியிலே அடைக்கப்பட்ட பிரபந்தங்கள் –
இவை பிறந்தபடி எங்கனே -இவற்றுக்கு மூலம் என்-ஒன்றை மூலமாகச் சொன்னால் அது மூலம் என்று அறியும் படி எங்கனே
இவை பிரமாணம் என்று அறிவது எத்தாலே -இவற்றுக்கு பிரதிபாத்யர் யார் -இப்பிரபந்தங்கள் கற்கைக்கு அதிகாரிகள் யார் –
இவற்றுக்கு போக்தாக்கள் யார் -இவை எதுக்காகப் பண்ணப் பட்டன என்று அவ்யுத்பன்னர் கேட்கில்
இவை புருஷார்த்த பிரகாசமான பிரபந்தங்களில் பிரதானமான பிரபந்தங்கள் பகவத் குண அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ பலாத்காரம்
சொல்லுவிக்கப் பிறந்தன -பகவத் பிரசாத லப்தமான திவ்ய சஷூர் மூலமாகப் பிறந்தன வென்னும் இடம்
ஸ்வரவசன வ்யக்திகளாலே அறியலாம் -வேதார்த்த வித்துக்களான சர்வ சிஷ்ட ஜனங்களும் பரிக்ரஹிக்கையாலும் -சம்சாரத்தில் உத்வேகம்
பிறந்தார்க்கு ஜ்ஞாதவ்யமான வேதார்த்தங்களை இப்பிரபந்தங்களிலே காண்கையாலும்-இவை உத்க்ருஷ்ட தமமான பிரமாணங்கள் என்று அறியலாம்
எல்லாருக்கும் பரம ப்ராப்ய பூதனான ஸ்ரீ யபதி இப்பிரபந்தங்க ளுக்கு பிரதிபாத்யன் –
சம்சாரத்தில் ருசியற்று எம்பெருமான் திருவடிகளிலே எப்பேர்பட்ட அடிமைகளும் செய்ய வேணும் என்று இருக்குமவன் இவை கற்கைக்கு அதிகாரி
முமுஷுக்களும் முக்தரும் நித்தியரும் ஸ்ரீ யபதியான எம்பெருமான் தானும் இவற்றுக்கு போக்தாக்கள்
பகவத் கைங்கர்யம் ஆகிற நிரதிசய புருஷார்த்தம் இன்னபடிப் பட்டு இருக்கும் என்று அறிவிக்கைக்காக பிறந்த பிரபந்தங்கள் என்று
சிரோ உபாசீத சத் வ்ருத்தராய் இருப்பவர் பரிஹரித்தார்கள்
நிஷித்த பாஷையாய் இருக்கையாலும் -இப்பிரபந்தங்களை ஸ்திரீ சூத்ராதிகளும் அப்யசிக்கக் காண்கையாலும்
இக்கலிகாலத்திலே ஜ்ஞானத்துக்கு அடைவில்லாத சதுர்த்த வர்ணத்திலே பிறந்தார் ஒருவராலே நிர்மிதங்கள் ஆகையாலும்
தேசாந்தரங்களில் இன்றிக்கே ப்ராதேசிகங்கள் ஆகையாலும் -அவைதிகர் க்ரஹிக்கையாலும் சுருதி ஸ்ம்ருதி விருத்தமான காம புருஷார்த்தத்தைப் பலகால் பேசுகையாலும்
சுருதி ஸ்ம்ருதிகளில் புருஷார்த்தயா சொல்லப்படுகிற ஐஸ்வர்ய கைவல்யன்களைக் கால் கடைக் கொள்ளுகையாலும்
இப்பிரபந்தங்கள் பிரமாணம் ஆக மாட்டா -என்று வைதிக கோஷ்டியில் பழக்கம் இல்லா சில அறிவுகேடர் பிரத்யாவச்தானம் பண்ண
மாத்ச்ய புராணத்திலே பாஷாந்தரத்திலே பாடா நின்றுள்ள கைசிகாதிகளை தன நாட்டின் நின்றும் போக விட்ட ராஜாவைக் குறித்து –
ஹரி கீர்த்தினம் விநைவான் யத் ப்ராஹ்மணேந நரோத்தம -பாஷாகா நம் நகாதவ்யம் தஸ்மாத் பாவம் த்வயாக்ருதம் -என்ற வசனத்தின் படி
பாஷா நிஷேதம் பகவத் விஷயம் ஒழிய பாஹ்ய விஷயங்களிலே யாகையாலும்
இங்கன் அன்றிக்கே பாஷா மாத்ர அவதியாக விதி நிஷேதங்களை அங்கீ கரிக்கில் சம்ஸ்க்ருத பாஷையான பாஹ்ய சாஸ்திர அப்யாசங்கள் பண்ண பிரசங்கிக்கையாலும்
ஆழ்வார் தம்முடைய க்ருபாதிசயத்தாலே வேதத்தில் அனதிகாரிகளான ஸ்திரீ சூத்ராதிகளும் இழவாதபடி வேதார்த்தத்தை திராவிட பாஷையாலே அருளிச் செய்கையாலும்
எதிர் சூழல் புக்கு என்னும் கணக்காலே அநேக ஜன்மங்கள் எம்பெருமான் தானே தொடர்ந்து விஷயீகரிக்கைக்கு ஈடான பாக்யத்தை யுடையராய்
நிரந்தர பகவத் கடாஷ பாத்ரமுமாய் -தத்வ ஹிதங்களில் நிபுணராய் -அவற்றினுடைய உபதேசத்திலும் பிரவ்ருத்தராய்
விதுர சபர்யாதிகளில் விலஷணரான ஆழ்வார் பக்கலிலே இப்பிரபந்தங்கள் பிறக்கையாலும்
இப்பாஷை நடையாடி சிஷ்ட பிரசுரமான தேசங்கள் எங்கும் உண்டாய் பாஷாந்தரன்களிலே பிறந்து விலஷணராய் உள்ளாரும் இவற்றின் வை லஷண்யத்தைக் கேட்டு
இவற்றை அப்யசிக்கைக்கு ஈடான இப்பாஷை நடையாடும் தேசத்திலே பிறக்கப் பெற்றிலோமே என்று இருக்கையாலும்
இவற்றின் நன்மையைக் கண்ட அவைதிகனும் கூட பரிக்ரஹிக்கை ச்லாக்யதா ஹேது வாகையாலும்
வேதனம் என்றும் உபாசனம் என்றும் உபநிஷத்து தன்னில் சொல்லப்படுகிற பக்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகையாலும்
ஐஸ்வர்ய கைவல்யங்களை தூஷித்தது -அல்ப அஸ்த்ரத்வாதி தோஷத்தாலே யாகையாலும்
ப்ரதிபாத்யனான எம்பெருமானுடைய மாஹாத்ம்யத்தாலும்-அவனை ஸூ ஸ்பஷ்டமாக பிரதிபாதிக்கையாலும் -பக்திக்கும் உத்பாதங்கள் ஆகையாலும்
உத்பன்னையான பக்திக்கு வர்த்தகங்கள் ஆகையாலும் ஸ்ரவணாதிகளில் அப்போதே நிரதிசய ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும்
இவற்றில் சொல்லுகிற பொருளுக்கு பல இடங்களில் வேதத்தை சாஷியாகச் சொல்லுகையாலும்
ப்ரஹ்ம காரண வாதத்தாலும் ப்ரஹ்ம ஜ்ஞான மோஷத்தைச் சொல்லுகையாலும்
புருஷார்த்த விஷயமான பிரபந்தங்கள் எல்லா வற்றிலும் இப்பிரபந்தங்களை த்ருடதர பிரமாணங்களாக உபபாதித்து
வைதிக கோஷ்டியில் அபியுக்தர் ஆனவர்கள் பரிஹரித்தார்கள்
பகவத் பிரசாதத்தாலே பரிபூர்ணமாக அவனை அனுபவித்து பூர்ணராய் இருந்த ஆழ்வாருக்கு எம்பெருமானைப் பிரிகையும்
-பிரிவாலே நோவுபட்டுக் கூப்பிடிகையும் கூடினபடி எங்கனே -என்னில்
ஒரோ குணத்தை அனுபவித்தால் அனுபூத குணங்களில் உண்டான ப்ரீதி பிரகர்ஷம் ஷூத்ர விஷயங்களில் வைராக்யத்தைப் பிறப்பித்து
குணாந்தரங்களிலே ச்ப்ருஹையைப் பிறப்பிக்கும்
அக்குணங்களில் க்ரம ப்ராப்தி பற்றாதே யாதொரு போது ஆசை மிக்கது அப்போது ஆசைப் பட்ட பொருள் கிடைக்காமையாலும்
பகவத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்த ஸ்மாரணாதி களாலுமாக பகவத் விஷயத்தில் அனுபவித்த அம்சத்தையும் இழந்து நோவுபடா நிற்பார் –
பஹூ குணனான எம்பெருமான் பக்கல் நிரதிசய பக்திமான்களாய்-தத் சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கராய்
அவனை அல்லது அறியாத படியாய் பகவத் அனுபவ ஸூ கமே மிக்க போது இதர பதார்த்தங்கள் எல்லாம் தம்மைப் போலே
எம்பெருமானைப் பெற்று ஸூ கிக்கிறனவாக நினைத்தும் -விச்லேஷம் என்று ஒரு பதார்த்தம் உண்டு என்று அறியாதே
லோக யாத்ரையோடு ஒக்க மறந்தும் விஸ்லேஷ வியசனம் மிக்கால் சம்ச்லேஷ ரசம் உண்டு என்று அறியாதே
அந்ய பரமான இதர பதார்த்தங்கள் எல்லாம் தம்மைப் போலே எம்பெருமானைப் பிரிந்து நோவு படுகிறனவாகக் கொண்டு அவற்றுக்குமாக தாம் நோவு படா நிற்பார்
இவருக்கு பிரிய அப்ரியங்கள் ஒரு காலும் முடியாதே பர்யாயேண உண்டாய் இருக்கையாலே சிந்தயந்தி யுடையபடி நித்யமாகச் செல்லும் என்று சொல்லுவர் –
சேதனருக்கு ஸ்த்ர்யன்ன பாநாதிகளே தாரக போஷாக போக்யங்களாக செல்லா நிற்க இவரை பகவத் குணைக தாரகர் என்னக் கூடுமோ என்னில்
திரு அயோத்யையிலும் கோசல ஜன பதத்திலும் உள்ள ஸ்தாவர ஜங்கமங்கள் அடைய ராம குணைக தாரகங்களாய் இருக்கும் படியை அனுசந்தித்து
இதுவும் கூடும் என்று கொள்ளுவது
இப்படி இருக்கிற இவருக்கு எம்பெருமான் உடன் சம்ச்லேஷம் ஆவது ப்ரத்யஷ சாமாநாகாரமான ஜ்ஞான சாஷாத்காரம்
விச்லேஷம் ஆவது பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பண்ணி அது பெறாமையாலே மானச அனுபவத்துக்கு வந்த கலக்கம்
சர்வஜ்ஞனாய் -சர்வ சக்தியாய் -சர்வ நியந்தாவாய் -நிரவதிக க்ருபாவானாய் இருந்த எம்பெருமான் இவருடைய இவ்வனுபவத்தை
உருவ நடத்தாதே விச்சேதித்ததுக்கு பிரயோஜனம் என் என்னில்
திரு அயோத்யையிலும் திருக் குரவையிலும் பிரிந்த பிரிவில் போலே இவர்க்கு அனுபூத குணங்கள் சாத்மிக்கைக்கும் -மேன் மேல் என திருஷ்ணை பிறக்கைக்கும்
எம்பெருமான் பக்கல் பிறந்த ஆசை முதிர்ந்து நினைத்த படி பெறா விட்டவாறே சோக மோஹங்கள் பிறக்கும்
இப்படி உள்ள கலவியலும் பிரிவாலும் ஆழ்வாருக்கு வந்த தசை அன்யாபதேசப் பேச்சை பேசுவிக்கும்
இப்பிரபந்தங்களில் ஸூ க்திகள் ப்ராப்யனான எம்பெருமான் உடைய ஸ்வரூப பிரதி பாதங்களாய் இருக்கும் சில –
ப்ராப்தாவான பிரத்யகாம ஸ்வரூப விஷயமாய் இருக்கும் சில -ப்ராப்த்யுபாயத்தை சொல்லா நிற்கும் சில -பலத்தை சொல்லா நிற்கும் சில
-ப்ராப்தி விரோதிகளை சொல்லா நிற்கும் சில -அவசிஷ்டமானவை இவ்வர்த்தங்களுக்கு உப பாதகங்களாய் இருக்கும்
இவற்றில் உத்தேச்யம் பலம் -தத்தர்த்தமாக மற்றுள்ள நாலு அர்த்தமும் சொல்லுகிறது –
இவற்றில் பிரதம பிரபந்தமான திரு விருத்தத்தில் த்வத் அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேணும்
என்று எம்பெருமானை அர்த்திக்கிறார்
திருவாசிரியத்தில் நிவ்ருத்த சம்சாரர்க்கு விஷய பூதனான எம்பெருமானை பரிபூர்ணமாக அனுபவித்து ப்ரீதர் ஆகிறார்
பெரிய திருவந்தாதியில் நிரதிசய போக்யனான எம்பெருமானை அனுபவிக்கையாலே தத் அனுகுணமாக அவனைப் பேசியும் நினைத்தும் தரிக்கிறார்
திருவாய்மொழியில் இவருடைய த்ருஷ்ண அனுகுணமாக ஸ்ரீ யபதியாய் சமஸ்த கல்யாண குணாத் மகனாய்
தனக்குத் தகுதியான திவ்ய தேசத்தையும் யுடையனாய் -திவ்ய பூஷண பூஷிதனுமாய்
சங்க சக்ராதி திவ்யாயுதனுமாய் பரமவ்யோமத்தில் ஆனந்தமயமான திவ்ய ஸ்தான ரத்ன மண்டபத்திலே பிராட்டிமாரோடு கூட
திவ்ய சிம்ஹாசனத்திலே வீற்று இருந்து அருளி அஸ்தாநே பய சங்கிகளான அயர்வறும் அமரர்களாலே அநவரத பரிசர்ய மாண
சரண நளினனாய்க் ச்வேதர சமஸ்தத்தையும் சரீரதயா சேஷமாக யுடையனாய்
அந்தராத்மதயா சேதன அசேதனங்களை அடைய வியாபித்து -தத்கத தோஷைக சம்ச்ப்ருஷ்டனாய் –
நாராயணாதி நாமங்களை தனக்கு வாசகமாக யுடையவனாய்
ஏவம்விதனாக உபநிஷத் பிரசித்தனுமாய் -இப்படி விசஜாதீயனுமாய் இருந்து வைத்து ஆஸ்ரித வாத்சல்யத்தாலே
தேவ மனுஷ்யாதி சஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணும் ஸ்வ பாவனுமாய்
தன்னுடைய திருவவதாரங்களிலும் உதவுகைக்கு ஈடான பாக்கியம் இல்லாதார்க்கும் இழக்க வேண்டாத படி
சர்வ அபராதசஹனாய் பத்ர புஷ்பாதிகளாலே ஸ்வ ஆராதனாய்க் கொண்டு ஆஸ்ரிதற்கு அத்யந்த பராதீனனாய் -அவர்களுடைய
இச்சா நுகுணமாக போஜன சயநாதிகளை யுடையனாய்
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தானே ஆஸ்ரித ஸூ லப அர்த்தமாக கோயில்களிலே வந்து நின்று அருளியும்
இப்படி உள்ள சர்வேச்வரத் வத்துக்கும் ஆஸ்ரித அனுக்ரஹத்துக்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான எம்பெருமான்
தன்னை நிர்ஹேதுகமாகக் கட்டி அருளக் கண்டு அனுபவித்து தம்முடைய பிரகிருதி சம்பந்தம் ஆகிற பிரதிபந்தகமும் அற்று எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார்
இனிச் சொல்ல வேண்டுவன அவ்வவ திருவாய் மொழிகள் தோறும் சொல்லக் கண்டு கொள்வது –
முதல் திருவாய் மொழியில் சொல்லிற்று ஆயிற்று
நாநா ரத்ன பூர்ணமாய்-அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே ஸ்வரூப ரூப குண விபூதிகளால் பரி பூர்ணனாய்
எல்லாப் படியாலும் எல்லாரிலும் மேற்பட்டு சர்வேஸ்வர ரூபனாய் ஸ்ரீ யபதியாக -அபௌருஷேயமாய்க் கொண்டு ஸூ த்ருட பிரமாணமான ஸ்ருதிகளாலே
பிரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானை பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜனித ப்ரீதி உள் அடங்காமை அனுபவித்தபடியே ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி ஏவம் விதனானவன் திருவடிகளிலே
அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
கடலைத் திரளக் கண்டான் ஒருவன் அதில் திரைகளையும் மற்றும் அங்கு உண்டான ரத்னாதிகளையும் தனித்தனியே காணுமா போலே
முதல் திருவாய் மொழியிலே திரள அனுபவிக்கப்பட்ட
எம்பெருமானுடைய ஒரோ வகைகளிலே ஒரோ திருவாய் மொழியாகச் செல்லுகிறது
இரண்டாம் திருவாய் மொழி தொடங்கி மேல் எல்லாம்
இப்படிச் செய்தார் இவரே அல்லர் -பாராத ராமாயணங்களைப் பண்ணின வ்யாசாதிகளும் சங்ஷேப விச்தரங்களாலே
தங்கள் பிரபந்தங்களை பிரபந்தீகரித்தார்கள்-
முதல் பாட்டுக்கு கருத்து
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணாத் மகனாய்
அக்குணங்களுக்கும் நிறம் கொடுக்க வற்றான திவ்ய தேக யுக்தனாய்
ஸ்ரீ யபதியாய் -இந்த சௌந்த்ர்யாதிகளுக்கு போக்தாக்களான அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாய் இருந்து வைத்து
தன்னுடைய நிரவதிக கிருபையாலே என்னுடைய தோஷாகரத்வத்தைப் பாராதே என்னுடைய அஜ்ஞ்ஞானம் எல்லாம் நீங்கும் படியாக
ஸ்வ விஷய பக்தி ரூபா பன்ன ஜ்ஞானத்தை நிர்ஹேதுகமாக சாதரனாய் கொண்டு தந்து அருளினான்
ஆனபின்பு அவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவிப்போம் என்று திரு உள்ளத்தோடு கூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே பிரவ்ருத்தர் ஆகிறார்
இத்தால் பிரபந்த ஆரம்பத்திலே வஸ்து நிர்தேச நமஸ்காரங்களும் பண்ணப் பட்டனவாய் விழுந்தது –
திரு விருத்தத்தில் -தேவரீரை அனுபவிக்கைக்கு விரோதியான தேக சம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேணும் என்கிறார்
இப்படி சம்சாரம் அத்யசஹ்யம் என்று கைவிட்ட இவரைக் கொண்டு ஈஸ்வரன் நாட்டுக்கு ஒரு வெளிச்சிறப்பை பண்ண நினைத்து இருக்கிறவன்
ஒருவன் ஆகையால் அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய சூரிகளுக்கு விஷயமான தன்னுடைய ஸ்வரூபாதிகளை தானே
இவருக்குக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து ப்ரீதர் ஆகிறார் திருவாசிரியத்தில்
அவ்விஷய அனுகுணமாக திருஷ்ணை பிறந்து அந்த திருஷ்ணை அனுகுணமாக பேசியும் நினைத்தும் தருகிறார் பெரிய திருவந்தாதியில்
இவ்விடாய்க்கு அனுகூலமாக ஸ்ரீ யபதியாய் நித்ய விபூதியிலே அயர்வறும் அமரர்களுக்கு அழகு ஓலக்கம்
கொடுத்துக் கொண்டு இருக்கிற பெரிய மேன்மையையும்
இப்பால் லீலா விபூதி நிர்வஹன அர்த்தமாக வ்யூஹ விபவ அர்ச்சாவதார அந்தர்யாமித்வ பர்யந்தமாக
தன அனுக்ரஹத்தாலே பார்த்துக் கொண்டு இருக்கிற நன்மையையும்
அவன் நிர்ஹேதுகமாக காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து அதுக்கு மேலே தமக்கு பர பக்த்யாதிகளைப் பிறப்பித்து
தாம் ஆசைப்பட்ட படியே தம்முடைய பிரகிருதி சம்பந்தத்தையும் சவாசனமாக அறுத்து எம்பெருமான் பெரிய திருவடியை மேல் கொண்டு அருளி
நாச்சிமாரும் தானுமாக வந்து தோற்றி தன் படிகள் ஒன்றும் குறையாமே வந்து -நயாமி -என்கிறபடியே இவரை பரமபததுக்கு ஏறக் கொண்டு போய்
இவர் முதலிலே அபேஷித்த படியே நித்ய கைங்கர்யத்திலே அன்வயிக்கப் பெற்று க்ருதார்த்தர் ஆகிறார் திருவாய் மொழியில் –
முதல் திருவாய் மொழி திருவாய் மொழிக்கு எல்லாம் சங்க்ரஹம் –
——————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
நம் பிள்ளை திருவடிகளே சரணம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply