கேசவன் தமர் பிரவேசம் –
ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து
வர்ஷித்த படி சொல்லிற்று -அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே -ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்
இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீத்தி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில்
சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இ றே-என்று இனியராய் தம்மை விஷயீ கரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீ கரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இ றே –
மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒளிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இ றே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே
மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ணா நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இ றே
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அசர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –
எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இ றே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –
————————————————————–
அவதாரிகை –
சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீ கார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-
கேசவன் தமர்
பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே வா வதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி –ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இ றே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவளைகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா
நாராயணனாலே என்ற இடம் -மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு –
—————————————————————————————
அவதாரிகை –
நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-
நாரணன் -இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் கரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்
காரணம் செயல்பாடு பலன் -என்றுமாம்
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வ பாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கு ஏத்தும் படி நின்று
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் -ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படி யாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்
————————————————————————————————-
அவதாரிகை –
கீழே மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் -ஜாமாதாதயிதஸ்தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம -என்றார் இ றே பட்டர் –
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-
மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இ றே
மேல் அத்யல்ப காலமாய்த் தொடரா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இ றே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர்கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ் ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இ றே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் -நரக ஹேதுவான அவித்யாதிகள்
புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -அயோக்யன் என்று அகல விடுதல்
-உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்ப்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
ஸ்தாவர பிரதிஷ்டியாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இ றே
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீ கரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போகய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்கியம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இ றே
—————————————————————————————-
அவதாரிகை –
என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-
கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இ றே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இ றே –
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று -குடக்கூத்தாவது -அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இ றே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இ றே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இ றே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை -தன்னை என்கிறது ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் -பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்
இங்கு ஐஸ்வர்யமும் செல்வமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொள்ளவுமாம்
அன்றிக்கே என்று என்றே என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் -குனிக்கை யாவது உத்தியோகத்து அளவாய்
இங்கு சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூ ரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வ பாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ -வ்யாப்தியும் தமக்காக -என்று இருக்கிறார் –
———————————————————————————-
அவதாரிகை –
திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு -ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவ ஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாப்பிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-6-
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள் -தம்மை அணைத்த கை -குளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே -விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் -உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இ றே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன்னா ஸ்வ பாவன் ஆனவனுக்கு –
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –
——————————————————————————————–
அவதாரிகை –
தன பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன கிருபையாலே -என்கிறார் –
மது சூதனை யன்றி மற்றிலேன் என்றத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-
மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இ றே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததா தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை -சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இ றே –
னைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இ றே –
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது
—————————————————————————————
அவதாரிகை –
உன்னுடைய குண அனுசந்தான பூர்வகமாக ஸ்துதி பிரணாமங்களைப் பண்ணிக் கொண்டு உன்னை அனுபவிக்கும்
இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனஸை எனக்குத் தந்தாய் -என்கிறார் –
திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்த பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-
திரிவிக்ரமன் –
மூன்று அடிகளாலே சகல லோகங்களையும் தன கால் கீழே இட்டுக் கொண்டவன்
செந்தாமரைக் கண் எம்மான் –
நோக்காலே என்னைத் தன கால் கீழே இட்டுக் கொண்டவன்
என் செங்கனி வாய் -உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன்
இவர் ஜிதம்-என்ற பின்பு அவன் ஸ்மிதம் பண்ணின படி -என்னை அனந்யார்ஹன் ஆக்குகையாலே சிவந்த கனிந்த
திரு வதரத்தின் உருவிலே -அழகிலே -நிறத்திலே
பொலிந்த பரபாகத்தாலே சம்ருத்தமாய் பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திரு முத்து நிரையினுடைய நிறத்தை யுடையவன்
என்று என்று உள்ளி –
இதர விஷயங்களினுடைய ஸ்மிதத்தில் உண்டான ஸ்ம்ருதி அகவாய் கண்டவாறே விட்டு அல்லது நிற்க ஒண்ணாத தாய் இருக்கும் இ றே
இது மாறாதே அனுசந்திக்கலாம் இ றே
பரவிப் பணிந்த
அக்ரமாகக் கூப்பிட்டு -நிர்மமனாய்த் திருவடிகளில் விழுந்து
இப் பேறு தான் ஒரு நாள் உண்டாய் மற்றை நாள் மறுக்கை யன்றிக்கே
பல்லூழி யூழி நின் பாத பங்கயமே மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் –
கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே
மனஸ் ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இ றே இருப்பது
அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே மருவித் தொழும் மனசைத் தந்தாய் என்றுமாம்
பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் –திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –
பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது
என் வாமனனே –வல்லை காண்
கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்-
வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்
அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்
வல்லை காண் -என்று உகக்கிறார் –
———————————————————————————————
அவதாரிகை –
எம்பெருமான் தம் திறத்தில் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமல் தடுமாறுகிறார் –
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8-
வாமனன் –
வடிவு அழகைச் சொல்லுதல் -என்னுதல்
நன்மைகளைத் தருமவன் என்னுதல் –
என் மரகத வண்ணன் –
ஸ்ரமஹரமான வடிவு அழகை என்னை அனுபவிப்பித்தவன்
தாமரைக் கண்ணினன்-
வடிவு அழகே அன்றிக்கே அகவாயில் தண்ணளிக்கு பிரகாசகமான திருக் கண்களை உடையவன்
காமனைப் பயந்தாய் –
வடிவு அழகாலே நாட்டை வெருட்டித் திரிகின்ற காமனுக்கு உத்பாதகன் ஆனவனே
அனுசந்தானாத்தாலே ஒரு வைசத்யம் பிறந்தவாறே முன்னிலை போலே தோற்றும் -அப்படியும் சொல்லிக் கூப்பிடுவார்
அதுக்கு மேலே சில பரிமாற்றங்களை ஆசைப்பட்டு அது கிடையாமையாலே படர்க்கையாகவும் சொல்லிக் கூப்பிடுவார்
இவை இரண்டுக்கும் அடி அபி நிவேசம்
என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
இத் திரு நாமங்களை இப்படி வாயாலே மாறாதே சொல்லா நிற்கத் திருவடிகளிலே விழுந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான நெஞ்சு இன்றிக்கே மோஷத்துக்கே ஏகாந்தமான நெஞ்சை உடையனாய்
பரி சுத்த அந்தக்கரணனாய்-அதின் பலமாய் வருமதே ஜன்மம் போமது
பிறவித் துழுதி உண்டு –தூர் -துக்கம் -அது நீங்கும்
படியாக
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும்
உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்
நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் -ஸ்ரீ கீதை -10-10-
தேஷா மேவா நுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞ்ஞானாஜம் தம நாசயாமி -ஸ்ரீ கீதை -10-11-போலே
உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே —
பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்
நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் -புஷ்கலனாய் இருக்கிற
உனக்கு நான் எத்தைச் செய்வேன்
—————————————————————————————–
அவதாரிகை –
ஆடியாடியில் பிறந்த வ்யசனம் எல்லாம் நான் மறந்து மிகவும் பிரீதனாம் படி பண்ணி இந்த்ரியங்களைத் தான் இட்ட வழக்காக்கினான் என்கிறார் –
பக்தி பூர்வகமாக உன்னை அனுபவியா நிற்கச் செய்தே -பிரதி பந்தகங்களும் நீங்கி நிரதிசய ஹர்ஷமும் பிறக்கும்படி
உன்னை என்னுள்ளே வைத்தாய் என்று ப்ரீதர் ஆகிறார் என்னுமாம் –
சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9-
சிரீ இதரன் –
பெரிய பிராடியாரைத் திரு மார்விலே உடையவன்
செய்ய தாமரைக் கண்ணன்
நீர் பாய்ந்த பயிர் செவ்வி பெற்று இருக்குமா போலே -அவள் திரு மார்விலே இருக்கையாலே குளிர்ந்த கண் அழகை உடையவன்
வஷஸ் ஸ்தலேந ஸ்ரீ யமுத்வஹன் விபு விஸ்தாரி பத்மோத் பல பத்ர லோசந –ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்கிறபடியே
என்று என்று
இப்படி மாறாதே சொல்லி
இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –
இவர் பக்தி பரவசர் ஆகையாலே இவருடைய தேக யாத்ரை இருக்கும் படி என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அன்றிக்கே -பட்டர் -இராப்பகல் வாய் வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து மரீ இய தீ வினை மாள-என்கிற இடத்தளவும் ஆடியாடியிலே இவர்க்கு ஓடின தசையாய்
இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ உன்னை என்னுள் வைத்தனை-என்கிற இது அந்தாமத்து அன்பு தோடங்கி கேசவன் தமர் அளவும்
வர உண்டான பரிதியைச் சொல்லுகிறது -என்று
இராப்பகல் வாய் வெரீ இ -என்கிறது -இவள் இராப்பகல் வாய் வெரீ இ -என்றத்தை
அலமந்து -என்கிறது எங்கும் நாடி நாடி என்றத்தை
கண்கள் நீர் மல்கி -என்கிறது -தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டால் -என்றத்தை
வெவ்வுயிர்த்து உயிர்த்து-என்கிறது -உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -என்றத்தை
மரீ இய தீ வினை மாள
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே ஆனை இடர் பட்டால் போலே -ஆடியாடியில் ஆற்றாமை
இவருக்கு இப்படி பொருந்தின விஸ்லேஷ வ்யசனம் ஆரும்படியாக
இன்பம் வளர
அந்தாமத்து அன்பு தொடங்கப் பிறந்த ப்ரீதி
வைகல் வைகல்
கழிகிற காலம் தோறும்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை
உன்னை என்னுள்ளே இருத்தி வைத்தனை
யென்னிருடீ கேசனே –
எனக்குப் பரிகரமாய் விரோதித்த இந்த்ரியங்களும் உன் பக்கலிலே படையற்றன
பரம சேஷியைக் கண்டார் த்வார சேஷிகள் அளவில் நில்லார்கள் இ றே –
———————————————————————————-
அவதாரிகை –
நமக்கு உபகாரகன் ஆனவனை நீ ஒரு காலும் விடாதே கண்டாய் -என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10-
இருடீகேசன் எம்பிரான் –
தன்னை அறிகைக்கு பரிகரமாக தந்த இந்த்ரியங்களைக் கொண்டு சப்தாதி விஷயங்களை விரும்பி நான் அனர்த்தப் படாமே
தன்னையே அறிகைக்கு பரிகரமாம் படி பண்ணி உபகரித்த மகா உபகாரகன்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –
இவருடைய இந்த்ரிய வசதியைத் தவிர்த்த படி -இலங்கையில் ராஷச ஜாதியில் விபீஷணாதிகளை வைத்து முருடரான
ராவணாதிகளை நிரசித்தால் போலே யாயிற்று
எம்மான் அமரர் பெம்மான்
இந்த்ரியங்களுடைய இதர விஷய பிராவண்யத்தை தவிர்த்த மாத்ரம் அன்றிக்கே நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக்
கொடுக்குமா போலே -எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன் –
என்று என்று
இப்படிச் சொல்லா நின்று கொண்டு
தெருடியாகில் நெஞ்சே வணங்கு
தெருளுதியாகில் -ஜ்ஞான பிரகாச த்வாராமிகில் -நெஞ்சே வணங்கு -ஜ்ஞான இந்த்ரியங்களுக்கும் அறிவுக்கும் வாய்த்தலையான
ஏற்றம் உனக்கு உண்டாகில் உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே விழப் பார் –
திண்ணம் அறி
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே த்ருடமாகப் புத்தி பண்ணு
அறிந்து
அறிகை தானே போரும் பிரயோஜனம் -அதுக்கு மேலே
மருடி யேலும் விடேல் கண்டாய்
உனக்கு ஒரு பிச்சு உண்டு இ றே-அவன் வைலஷண்யத்தைப் பாரா வருவது –
நாம் இவ்விஷயத்தை தூஷிக்கை யாவது என்-என்று அயோக்ய அனுசந்தானத்தாலே அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -அத்தைத் தவிரப் பார் கிடாய் –
நம்பி பற்ப நாபனையே —
கெடுவாய் இவ்விஷயத்தை விட்டு புறம்பே போய் மண்ணை முக்கவோ
அவன் குண பூர்த்தி இருந்த படி கண்டாயே
வடிவு அழகு இருந்தபடி கண்டாயே
முன்பு நமக்கு உபகரித்த படி கண்டாயே –
——————————————————————————————–
அவதாரிகை –
அத்யந்த விலஷணனாய் இருந்து வைத்து -அத்யந்த ஸூ லபனாய் என்னை அடிமை கொண்டவன் -என்னை யல்லது அறியானானான் என்கிறார் –
பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11-
பற்பநாபன் –
சகல ஜகத் உத்பத்தி காரணமான திரு நாபி கமலத்தை உடையவன்
உயர்வற உயரும் பெரும் திறலோன் –
பேசப் புக்கால் பரிச்சேதித்துப் பேச ஒண்ணாத படியான சௌர்ய வீர்யாதி குண ப்ரதையை உடையவன்
திறல் -பர அபிபுவன சாமர்த்தியம் –அல்லாத குணங்களுக்கும் உப லஷணம் இது –
காரணத்வ பிரயுக்தமான மேன்மை அது -பர அபிபவன சாமர்த்தியம் தொடக்கமான குணங்கள் அவை –
இப்படி இருக்கிறவன்
எற்பரன் –
மதேக சித்தன்
என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்
ஔதார்யத்தில் பிரசித்தமாய் இருப்பது கல்பகம் இ றே -அதில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது -என்னை யாக்கிக் கொண்டு
அர்த்திகளை உண்டாக்கிக் கொடுக்கும் அது இல்லை இ றே அதுக்கு
எனக்கே –
ஒருவனுக்கே குறைவறக் கொடுக்குமது இல்லை இ றே அதுக்கு
தன்னைத் தந்த –
சில பிரயோஜனன்களை கொடுக்குமல்லது-தன்னைக் கொடுக்குமது இல்லை இ றே அதுக்கு
என்னமுதம் –
தான் போக்யமாய் இருக்குமது இல்லை இ றே அதுக்கு –
எனக்கு நிரதிசய போக்யமானவன் –
கார் முகில் போலும் வேங்கட நல வெற்பன் –
இந்த ஔதார்யத்துக்கு அடி திருமலையின் சம்பந்தம்
சஹ்யம் பற்றின ஔதார்யம் இ றே
கொடுத்தத்தை நினையாதே கொடுக்கும் மேகம் போன்ற ஸ்வ பாவத்தை உடைய திருமலையை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையவன்
விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே —
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து வைத்து -ஆஸ்ரிதரான இடையருக்கும் இடைச்சிகளுக்கும் கட்டவும் அடிக்கவுமாம் படி
வந்து அவதரித்து அச் செயலாலே அடிமை கொண்டவன் –
——————————————————————————–
அவதாரிகை –
எற்பரன் என்கிறபடியே என்னளவில் அவன் செய்தால் போல் செய்வார்க்கு அவனைக் காணலாம் அல்லது
ஸ்வ யத்னத்தாலே அறிவோம் என்பார்க்கு ஆரியப் போகாது என்கிறார்
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வணனையே –2-7-12-
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே யாயிற்று ப்ரஹ்மாதிகள் சொல்லுவது
தாமோதரனை –
அவன் ஆஸ்ரித பரதந்த்ரனாய் நிற்கிற நிலையை அறியப் போமோ
தனி முதல்வன் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் என்கிறபடியே த்ரிவித காரணமும்
தானேயாய் இருக்கிற இருப்பை அறியப் போமோ
ஞாலம் உண்டவனை –
உண்டாக்கி விடுகை யன்றிக்கே ஆபத் சகனாய் நிற்கும் நிலையை அறியப் போமோ –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய-
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்னா நிற்பார்கள்-தாங்கள் எல்லாம் அறிந்தார்களாக நினைத்து தொழுமவர்கள்
ஆமோ தரம் அறிய ஒருவற்கு என்றே தொழும்வராய் -தாமோதரன் உருவாகிய சர்வேஸ்வரனுக்கு சரீரவத் விதேயரான
சிவர்க்கும் திசை முகர்க்கும் தரமறிய யாமோ
அல்லாதாரில் காட்டில் தாங்கள் அறிந்தார்களாக அபிமானித்து இருக்கிறவர்களாலே தான் அறியப்போமோ –
ஆரைத் தான் என்னில்
எம்மானை என்னாழி வணனையே —
குளப்படியில் கடலை மடுத்தால் போலே தான் குண ஆர்ணவமாய் இருக்கிற இருப்பை எனக்கு அறிவித்தவனை –
இப்படி அவன் தானே காட்டக் கண்ட நான் கண்டால் போலே காண்பார்க்கு காணலாம் அத்தனை அல்லது –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு அறியப் போமோ –
தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை ஆமோ தரமறிய ஒருவர்கென்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய
சிவற்கும் திசை முகற்கும் எம்மானை என்னாழி வணனையே தரமறிய ஆமோ -என்று அந்வயம் –
————————————————————————————————-
அவதாரிகை –
நிகமத்தில் இத் திருவாய் மொழி கற்றவர்களை இத் திருவாய் மொழி தானே எம்பெருமான் திருவடிகளைச் சேர்த்து விடும் -என்கிறார் –
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-11-
வண்ண மா மணிச் சோதியை –
அழகிய நிறத்தை உடைத்தாய் -பெரு விலையனான ரத்னம் போலே இருக்கிற விக்ரகத்தை உடையவனை –
வண்ணம் -நிறம்
மா மணி -மா கறுப்பு -கறுத்த மணி போலே -நீல ரத்னம் போன்ற வடிவில் தேஜஸ் சை உடையவன் -என்றுமாம் –
இவ் வழகைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறது -அமரர் தலைமகனை –
ஒரு நாடாக அனுபவியா நின்றாலும் தன அழகைப் பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கிறவனை
கண்ணனை
அவர்களே அனுபவித்துப் போகாமே -இங்கு உள்ளாரும் அனுபவிக்கும் படி கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை
நெடுமாலைத்
ஒருவனை விஷயீ கரித்தால்-அவன் அளவில் தலைக் கட்டாத வ்யாமோஹத்தை உடையவனை –
தென் குருகூத்ச் சடகோபன் பண்ணிய -தமிழ் மாலை யாயிரத்துள் இவை பன்னிரண்டும் -பண்ணில்
வேதம் போலே பிறப்பிலி யன்று -அபௌருஷேயம்-என்னும் அதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று-வக்த்ரு விசேஷத்தாலே
இவை பண்ணிலே யாயிற்று நடந்தது
பன்னிரு நாமப் பாட்டு-
வைஷ்ணத்வ சிஹ்னமான திரு நாமங்களை வைத்துப் பாடினவை –
இவை செய்வது என் என்னில்
அண்ணல் தாள் அணைவிக்குமே–
சர்வேஸ்வரன் திருவடிகளிலே சேர்த்து விடும்
இத் திருவாய் மொழி யோட்டை சம்பந்தம் தானே கேசவன் தமர் ஆக்கி விடும் –
முதல் பாட்டில் தம்மோடு சம்பந்தி சம்பந்திகளும் எல்லாரும் தம்மைப் போலே விஷயீ க்ருதரானார்கள் -என்றார்
இரண்டாம் பாட்டில் அதுக்கு அடி நாராயணன் ஆகையாலே என்றும் அந் நாராயண சப்தார்த்தத்தையும் அருளிச் செய்தார் –
மூன்றாம் பாட்டில் இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது சொன்னார் –
நாலாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணினான் என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படி தன்னை அனுபவித்ததனாலே அவன் வடிவில் வந்த புகரைச் சொன்னார்
ஆறாம் பாட்டில் இப்படி என்னை விஷயீ கரிக்கைக்கு அடி நிர்ஹேதுக கிருபை என்றார்
ஏழாம் பாட்டில் சர்வ காலமும் தன்னையே அனுபவிக்கும் படியான நெஞ்சைத் தந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் தந்த அளவன்றிக்கே விரோதியான நெஞ்சையும் போக்கினான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் தன்னுடைய கல்யாண குணங்களையே நான் அனுபவிக்கும் படி என் ஹிருதயத்திலே புகுந்தான் -என்றார்
பத்தாம் பாட்டில் அனுபவ விரோதியான இந்த்ரியங்களையும் தன் வழி யாக்கிக் கொண்டான் என்றார்
பதினோராம் பாட்டில் ஏவம் பூதனானவன் என்னை அல்லாது அறியானானான் என்றார்
பன்னிரண்டாம் பாட்டில் என்னைப் போலே காண்பார்க்கு காணலாம் அது ஒழிய ஸ்வ யத்னத்தால் அறியப் போகாது என்றார் –
நிகமத்தில் பலம் சொல்லித் தலைக் கட்டினார்
——————————————————————————————
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply