ஸ்ரீ வத்சம் அம்சம் கார்த்திகை ரோஹிணி
தென் திருக் காவேரி தென் கரையிலே திரு முகத் துறையிலே
வீணையும்-யாழும்- கையுமாக
நம்பெருமாளை திசை நோக்கி தொழுது
திவ்ய கீதங்களை
கண்டமும் கருவியும் ஒக்க கேட்பவர் செவியும் மனமும் குளிர
எம்பெருமான் திரு உள்ளம் உகக்க
கின்னர கந்தர்வாதியர் வியப்புற பாடிக் கொண்டே இருக்க
பாண குல திலகர்
சில முரட்டு குணர் கல் வீச
இந்த்ரன் ஏக காலத்தில் பொழிவித்த சிலா வர்ஷத்துக்கு சற்றும் பின்னிடாத கோவர்த்தன மலை
போலே சிறிதும் சலியாது இருந்தார்-
அது கண்டு அமரர் கோன் போலே அஞ்சி அகன்றனர்
பக்தர்கள் அந்தரங்கத்தில் அமர்த்து இருக்கும் அரங்கன் திரு உள்ளம் கலங்கி திரு நெற்றியும் இரத்தப் பெருக்குற்றது
பகவத் பக்திக்கு ஜாதி முக்கியம் அன்று பக்தியே அமையும்
சகல சாஸ்திர சாரப் பொருளை காட்டி அருள
திரு லோக சாரங்கர் திரு முதுகில் எழுந்து அருளப் பண்ண நியமிக்க
ஆதி வாஹகர் எழுந்து அருளிவித்துக் கொண்டு திரு மா மணி மண்டபத்துக்கு போவது போலே
இருள் அகற்றும் எரி கதிரோன் மண்டலத்துள் ஏற்றி
வைத்தேணி வாங்கி அருள் கொடுத்திட்டு
அடியவரை ஆள் கொள்வான் அரங்கன்
திவ்ய மங்கள விக்ரஹத்தை பாதாதி கேசம் நேத்திர அந்தமாக சேவித்து
அதிலே ஆழ்ந்து
அதன் அழகை அனுபவித்து
அந்த அனுபவ அதிசயத்தை பின்புள்ளார்க்கும் விசதமாக்கும் பொருட்டு
அமலனாதிபிரான் திவ்ய பிரபந்தத்தை திருவாய் மலர்ந்து அருளி
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே
என்கிற தனது துணிவை வெளியீட்டு
உலகோரை வாழ்வித்து
உகப்போடு நிற்கையில்
பெரிய பெருமாள் அத் திருமேனியுடன் அவரை அங்கீ கரித்து அருள
அனைவரும் காண அரங்கன் திருவடிகளிலே அந்தர்பவித்து
காய்ந்த இரும்பு உண்ட நீரானார்
கோபாலன் குழல் இசையால் கோக்களை மகிழ்வித்தது போலே
அக் கோவிந்தனை யாழ் இசையால் மகிழ்வித்த இவ் வாழ்வார்
இவ்வுலகில் வாழ்ந்தது ஐம்பது வருஷ காலம் என்பர்-
————————————————————
காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல்
பாண் பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பழ மறையின் பொருள் என்று பரவுமின்கள்
கார்த்திகையில் ரோகிணி நாள் காண்மின் என்று காசினியீர்
வாய்த்த புகழ் பாணர் வந்துதிப்பால் -ஆத்தியர்கள்
அன்புடனே தான் அமலனாதி பிரான் கற்றதன் பின்
நன்குடனே கொண்டாடும் நாள்
——————————————-
இந்த திவ்ய பிரபந்தம் திருப் பெயர் -அமலனாதி பிரான் -என்றது
முதல் குறிப்பு இலக்கண முறைப் படி
திருப் பல்லாண்டு -கண்ணி நுண் சிறுத் தாம்பு -போலே
முனி வாகன போஹம் -தேசிகன் அருளிச் செய்தது இந்த ஒரே திவ்ய பிரபந்தத்துக்கு மட்டும் வியாக்யானம்
அருளிய காரணம் சத் சம்ப்ரதாயம் வல்ல பெரியோர் கூறுமாறு
நிஹீன ஜாதி கழியப் பெற்று பாகவத உத்தமர்கள் -அவர்கள் பண்டைக் குலம் நீங்கி -தொண்டக்குலம் அடைவர் –
தமது ரகஸ்ய த்ரய சாரத்தில் 25 – பிரபாவ வ்யவஸ்த அதிகாரத்தில்
அதோ ஜாதேர் நிஷ்க்ருஷ்டாயாஸ் சர்வச்யாவா விசாசத சாஜாத்யம்
விஷ்ணு பக்தா நா மிதி மந்த மிதம் வச வைஷ்ணவத்வே நமான்யத்வம்
சமாநம் முனி சம்மதம் ஜாத்யாதித்வம் சதச் சாம்யம் முக்தி காலே பவிஷ்யதிர் –
ரஜஸ்வலையாய் இருக்கும் காலத்தில் தாய் கூட அணுக தகாதவள் போலே
சரீரத்துடன் இருக்கும் அளவும் உபசர்யைகளுக்கு உரியர் அல்லர்
முக்தி பெற்ற பின்பு தான் விசேஷமாக கௌரவிக்கத் தக்கவர் ஆவார்
இத்தால் மதுரகவி ஆழ்வார் நம் ஆழ்வார் திருவடிகளில் பரிசர்யைகள் செய்து கொண்டிருந்த வாற்றிலும்
லோக சாரங்க முனிகள் திருப் பாண் ஆழ்வாரை தோளில் தூக்கி சந்நிதிக்கு எழுந்து அருளின வாற்றிலும்
சம்சய விபர்யய உணர்ச்சி நெஞ்சிலே குடி கொண்டு இருக்க
எம்பெருமான் இவரை சதாச்சார்யர் திருவடிகளில் ஆஸ்ரயிக்கச் செய்து அருள திரு உள்ளம் கொள்ள
எம்பெருமான் தேசிகன் கனவிலே தோன்றி
பிள்ளாய் உமக்கு இந்த விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி ஆகாது
நம் பூர்வர்கள் பிர பாவங்களைக் கேட்டு அறியீரோ
பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்திகளில் அஸூயை ஒழித்து
புது வழிகளை விட்டு விடும் என்று நியமிக்க
தேசிகனும் கண் விளித்து
தன்யோஸ்மி க்ருதார்த்தோஸ்மி அனுக்ருஹீதோஸ்மி-என்று
பலவாறாக ஆனந்தித்திக் கொண்டு
கீழ் நின்ற நிலைக்கு நொந்து
கண்ணும் கண்ண நீருமாக
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளில் படுகாடு கிடைக்கையில்
அவரும் திருக் கைகளால் அனைத்து
உமக்கு இப்படி அனுதாபம் பிறந்த போதே சமஸ்த அபராதங்களும் கழிந்தன
இனி அஞ்சாதே கொள்ளும் என்று ஆஸ்வசிப்பிக்க
திரு இலச்சினையும் விசேஷார்த்தங்களையும் பெற்று
கண்ணை மூடி திருவாராதன பெருமாள் ஒருவரை எழுந்து அருள பண்ண நியமிக்க
தூப்புல் பிள்ளையும் அப்படியே செய்ய
கண்ணை திறந்து பார்த்த அளவில்
அவர் எழுந்து அருளப் பண்ணிய பெருமாள் திருப் பாண் ஆழ்வாராக
சேவை சாதிக்க
உம்மை திருத்திப் பணி கொள்ள எம்பெருமான் இவ்வாறு அருள் புரிந்தான்
இவரை ஆராதனை செய்து அமலனாதி பிரானுக்கு வியாக்யானம் இடும்
ஜாதி நிரூபணம் அடியாக வந்த அபசாரம் எல்லாம் தீயினில் தூசாகும் என்று அருளிச் செய்ய
முனி வாஹன போகம் திருவவதரித்தது
பிள்ளை லோகாச்சார்யர் என்பாரும் உண்டு
தேசிகன் அருளிய லோகார்ய பஞ்சசாத் ஸ்தோத்ரம்- சேவிக்கத் தக்கது –
வடகலையார்
அதிகார சங்க்ரஹம் -முதல் பாட்டில் நம் பாண் நாதன் -என்கிற இடத்துக்கு உரையிட்டவர்
திருப் பாண் ஆழ்வார் ஆகிற நம்முடைய நாதன்
முனி வாஹனன்-என்று திருநாமம் ஆம்படியாகவும்
ஸ்ரீ வேதாந்தசார்யர் என்று திரு நாமம் சாத்தி அருளியும்
தங்கள் இருவர் இடத்தில் பெரிய பெருமாள் வ்யாமோஹம் செய்து அருளின
இச் சம்பந்தத்தை இட்டு விசேஷித்து நம்முடைய நாதன் என்று அனுசந்திக்கிறார்
இது காரணமாக முனி வாகன போகம் அருளிச் செய்து இருக்கிறார் என்பர்
பெரியோம் அல்லோம் நாம் நன்றும் தீதும் நமக்கு உரைப்பார் உளர் என்று நாடுவோமே -என்று
அருளிச் செய்து இருப்பதால் உண்மை விஷயம் உள்ளத்தே புகும்-
—————————————————————-
பெரிய பெருமாள் திருவடிகளிலழகு மேல்விழுந்து தம்மைப் பரவசமாக்கியவாறு கூறுகின்றார்,
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——-1-
பதவுரை
அமலன்–பரிசுத்தனாய்
ஆதி–ஜகத்காரபூதனாய்
பிரான்–உபகாரகனாய்
என்னை–(இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு–(தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த–ஆட்படுத்துகையாலே வந்த
விமலன்–சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து
(ஆஸ்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில்–பரிமளம் மிக்க சோலைகளையுடைய
வேங்கடவன்–திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன்–ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று, ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன்–அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன்–சேஷசேஷி முறைவழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள்–உயர்ந்த மதிள்களையுடைய
அரங்கத்து–கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான்–ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திருக் கமல பாதம்–திருவடித் தாமரைகளானவை
வந்து–தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே–என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே
இதில். அமலன், விமலன், நிமலன், நின்மலன் என்ற நான்கு சப்தங்களுக்கும் பொருள் ஒன்றே :
தாத்பர்ய பேதம் மாத்திரம் கொள்ள வேண்டும்.
பரம நிஹீநரான தாம் ஸந்நிதிக்குள்ளே புகுவதனால் பெருமாளுக்குப் பெருத்த அவத்யம் உண்டாயிடும என்று அஞ்சியிருந்தவர்.
அந்த நங்கை தவிர்ந்தமை தோற்ற அமலன் என்கிறார்.
ஹேய ப்ரதிபடன்-ஹேய வஸ்து ஸம்பந்தத்தால் தனக்கொரு கெடுதி விளையப் பெறாதவன் என்கை.
தமது சிறுமையை நோக்காதே தம்மைப் பாகவதர்க்கு ஆட்படுத்தி ஒரு சீரிய பொருளாக ஆக்குகையாலே
எம்பெருமானது திருமேனியிற்பிறந்த ஒரு விலக்ஷண தேஜஸ்ஸை அநுபவிப்பார் விமலன் என்கிறார்.
தன்னுடைய ஸ்வம்மான ஒரு சரக்கு மிக்க சிறப்புப் பெற்றால் ஸ்வாமியின் மேனி ஒளிபெற்றுத் தோன்றுமன்றோ.
பிரமன் சிவன் முதலானோரும் அஞ்சி அணுக வேண்டும்படியான ஐஸ்வரியம் மிகுந்திருக்கச் செய்தேயும்
குறும்பறுத்த நம்பிக்குக் கூசாதே நித்யஸம் ச்லேஷம் பண்ணலாம்படி தனது ஈச்வரச்சுணையாகிற
ஆஸ்ரயண விரோதி தோஷத்தை மறைத்து
அர்ச்சக பராதீ நாகிலாத்மஸ்திதி:” என்றபடி
அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையை வெளியிட்டு நிற்குமவன் என்பார். நிமலன் என்கிறார்.
நின்மலன் என்றது-அடியார்களுடைய குற்றங்களைக் காண்கையாகிற குற்றமில்லாதவன் என்றபடி.
அடியார் குற்றங்களைக் கண்டாலும் அவற்றை போக்யமாகக் கொள்ளுமவனிறே எம்பெருமான்.
முதலடியில், ஆதி என்றவிடத்துக்கு வியாக்கியான மருளிச்செய்யா நின்ற தேசிகன்,
“இக்காரணத்வமும் மோக்ஷ ப்ரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே ஸர்வ லோக ஸரண்யனுக்கு விசேஷ சிஹ்நங்கள்”
என்று அருளிச் செய்திருப்பதைக் கண்டு வைத்தும், ஜகத் காரணத்வத்திலும் மோக்ஷ ப்ரதத்வத்திலும்
பிராட்டிக்கும் ஸாக்ஷாத் அந்வயமுண்டென்று சிலர் சொல்லுவர்கள்!.
லோக ஸாரங்கமா முனிவரின் திருத் தோளின் மேல் ஏறின திருப்பாணாழ்வார் ஸேஷித்வத்தைக் கொண்டாடினாரே
யொழிய ஸேஷத்வத்தைப் பாராட்ட வில்லையே;
அப்படியிருக்க “அடியார்க்கென்னை ஆட்படுத்தவிமலன்” என்றது எங்ஙனே? என்று ஸங்கை பிறக்கக்கூடும்;
ஸேஷத்வத்துக்குத் தகுதியாகத் திருவடியிலே யிருக்க வேண்டிய திருத்துழாய் திருமுடி மேலேறியிருந்தால்
அவ்வளவாலே அதன் ஸேஷத்வம் குறைபடாதன்றோ; அதுபோலக் கொள்க
பிள்ளை திருநறை யூரரையரைச் சிலர்
“பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்த இவ் வாழ்வார் திருவேங்கமுடையான் பக்கல் போவானேன்?” என்று கேட்க;
“ஆற்றிலே அழுந்துகிறவன் ஒரு காலைத் தரையிலே ஊன்றினால் பிழைக்கலாமோ என்று கால் தாழ்க்குமா போலே,
இவரும் பெரிய பெருமாளழகிலே அழுந்துகிறவராகையாலே திருமலையிலே கால் தாழ்ந்தார்” என்றாராம்.
“ஒருவனைக் கவிபாடும் போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவிபாட வேணும்;
பரமபதத்தில் நின்றும் ஸ்ரீமதுரையிலே தங்கித் திருவாய்ப்பாடிக்கு வந்தாப்போலே
ஸ்ரீவைகுண்டத்தில் நின்றும் திருமலையில் தங்கி யாய்த்துக் கோயிலுக்கு வந்தது;
அவ்வரலாற்றைப் பாடுகிறபடி” என்றும் ஒருகால் அருளிச் செய்தாராம்.
அமலன் –
ஹேய பிரதி படன் -நீசனான தம்மை வந்து திருவடி அணுகிற்றே
தம்மை அடியாரவர்க்கு ஆட்படுத்தும் படி சீரிய பொருளாக ஆக்கிமையால்
வந்த புகர் தோற்ற திரு மேனியில் பிறந்த விலஷண தேஜஸ் அனுபவித்து –
விமலன்
ஆஸ்ரயணீய விரோத தோஷத்தை மறைத்து அடியவர்க்கு எளியனாய் சம்ஸ்லேஷித்த படி
நிமலன்
குற்றங்களை போக்யமாக கொள்கையாலே நின்மலன்
ஆதி –
காரணத்வமும் மோஷ பிரதத்வமும் சத்ர சாமரங்கள் போலே
சர்வ லோக சரண்யனுக்கு விசேஷ சிஹ்னங்கள் -தேசிகன்
திருவடி திரு முடி மேல் ஏறி இருந்தாலும் சேஷத்வம் குறைபடாது அன்றோ
பிள்ளை திரு நறையூர் அரையரை சிலர்
பெரிய பெருமாளை அனுபவிக்க இழிந்த இவ்வாழ்வார்
திருவேங்கட முடையான் பக்கல் போவான் என் என்ன
ஆற்றில் அழுந்தினவன் ஒரு காலை தரையிலே ஊன்றினால்
பிழைக்கலாமோ என்று கால் தாழ்க்குமா போலே
இவரும் பெரிய பெருமாள் அழகில் அழுந்துபவர் ஆகையாலே
திருமலையிலே கால் தாழ்ந்தார் -என்றாராம்-
ஒருவனைக் கவி பாடும் போது அவனது வரலாறு சொல்லிக் கவி பாட வேணும்
பரம பதத்தில் நின்றும்
ஸ்ரீ மதுரையில் தங்கி
திருவாய்ப்பாடிக்கு வந்தால் போலே
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும்
திருமலையிலே தங்கி யாய்த்து
கோயிலுக்கு வந்தது
அவ் வரலாற்றைப் பாடுகிற படி -என்றும் ஒரு கால் அருளிச் செய்தாராம்-
———————————————————–
கீழ்ப்பாட்டில், “திருக்கமலபாதம் வந்து” என்றதும்,
இப்பாட்டில் “ஆடையின்மேற் சென்ற தாமென சிந்தனை” என்றதும் உற்று நோக்கத் தக்கவை.
முதலில் எம்பெருமான் தானாக ஆழ்வாரை அடிமை கொள்ள மேல் விழுந்தபடியும்,
பிறகு ஆழ்வார் ருசி கண்டு தாம் மேல் விழுகிறபடியும் இவற்றால் தோற்றும்.
ஈன்ற நாகானது தன் கன்றுக்கு முதலில் முலைச் சுவை தெரியாமையாலே தானே தன் முலையை அதன் வாயிலே கொடுக்கும்;
பின்பு சுவடறிந்தால் நாகு காற்கடைக் கொண்டாலும் கன்று தானே மேல் விழும்;
அப்படியே, திருவடிகள் தானே வந்து போக்யமானவாறு கூறினர் முதற்பாட்டில்;
இதில், தம்முடைய நெஞ்சு சுவடறிந்து மேல்விழுமாறு கூறுகின்றனரென்க.
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே —-2-
பதவுரை
உவந்த உள்ளத்தன் ஆய்–மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து–மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற–அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த–உயர்த்தியை அடைந்த
நீள் முடியன்–பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று–முற்காலத்தில்
நேர்ந்த–எதிர்த்து வந்த
நிசரசரரை–ராக்ஷஸர்களை
கவர்ந்த–உயிர் வாங்கின
வெம் கணை–கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன்–இராம பிரானாய்,
கடி ஆர்–மணம் மிக்க
பொழில்–சோலைகளை யுடைய
அரங்கத்து-ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான்-எம்பிரானுடைய
அரை-திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல்-பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை-என்னுடைய நினைவானது
சென்றது ஆம் பதிந்ததாம்
உலகமளந்த வரலாறு:-மஹாபலியென்னும் அஸூரராஜன் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவரையும் வென்று
மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாட்சி செய்துகொண்டு செருக்குற்றிருந்தபொழுது,
அரசிழந்த தேவர்கள் திருமாலைச் சரணமடைந்துவேண்ட, அப்பெருமான் குள்ள வடிவமான வாமநாவதாரங்கொண்டு
காச்யப மா முனிவனுக்கு அதிதி தேவியினிடந் தோன்றிய பிராமண ப்ரஹ்மசாரியாகி, வேள்வியியற்றி
யாவர்க்கும் வேண்டிய அனைத்தையுங் கொடுத்துவந்த அந்த மாவலியிடஞ்சென்று,
தவஞ்செய்ததற்குத் தன் காலடியால் மூவடி மண்வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன் தாரைவார்த்துக்
தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவி வளர்ந்து
ஓரடியால் பூலோகத்தையும் மற்றோரடியால் மேலுலகத்தையுமளந்து, தாநமாகப் பெற்ற மற்றோரடிநிலத்திற்கு இடமில்லாதொழியவே
அதற்காக் அவன் வேண்டுகோளின்படி அவனது முடியில் அடியை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம்.
பூலோகத்தை அளந்ததில் அதன்கீழுள்ள பாதாளலோகமும் அடங்கிற்று; எனவே எல்லா வுலகங்களையுமளந்ததாம்.
இச்சரித்திரத்தினால், கொடியவரை அடக்குவதற்கும், இயல்பில் அடிமையாகின்ற அனைத்துயிரையும்
அடிமைகொள்வதற்கும் வேண்டிய தந்த்ரம் வல்லவன் என்பது போதரும்.
உலகளக்கும்போது அடியாரோடு அஹங்காரிகளோடு வாசியற எல்லார் தலையிலும் திருவடியை வைத்து
அவர்களை தந்யராக்கப்போகிறோமென்று எம்பெருமான திருவுள்ளத்திற்கொண்ட உகப்பை வெளியிடுகிறார்.
உவந்த உள்ளத்தனாய் என்று.
நிசாசரர், காகுத்தன், சிந்தனை – வடசொற்கள். நிசாசரர்-இரவில் திரியுமர்களிறே ராக்ஷஸர்கள்.
காகுத்தன்-ககுத்ஸ்னென்று ப்ரஸித்தி பெற்ற அரசனது குலத்திற் பிறந்தவன்; (ஸ்ரீராமன்;)
எருதுவடிவங்கொண்ட இந்திரனது முசுப்பின் மேலேறி யுத்தஞ்செய்யச் சென்றதனால்
இவ்வரசனுக்குக் ககுத்ஸ்தனென்று பெயராயிற்று. (ககுத்-முசுப்பு; ஸ்தன்-இருப்பவன்.)
“நிமிர்ந்த நீண்முடியன்” என்பதும் பாடம்.
திருகமல பாதம் வந்ததும்
ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனை –
தானாகவே எம்பெருமான் அடிமை கொள்ள மேல் விழுந்த படியும்
பின்பு ஆழ்வார் ருசி கண்டு
தாம் மேல் விலுகிறபடியும் இவற்றால் தோற்றும்
ஈன்ற நாகு கன்றுக்கு முலைச் சுவை தெரியாமையாலே
தானே முலையை அதன் வாயிலே கொடுக்குமே
அனைத்து உலகையும் அடிமை கொள்ளவன் என்பதைக் காட்ட உலகு அளந்த வரலாறு
அனைவரையும் தந்யராக வாசி அற வைத்து அருளினதால் உகந்தவனும் அவனே -உவந்த உள்ளத்தனாய்
நிமிர்ந்த நீண் முடியன் -என்பதும் பாடம்-
———————————————————-
மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே–3-
பதவுரை
மந்தி–குரங்குகளானவை
பாய்-(ஒரு கிளையில் நின்றும் மற்றொரு கிளையில்) பாயப்பெற்ற
வடவேங்கடம் மா மலை–வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே
வானவர்கள்-நித்ய ஸூரிகள்
சந்தி செய்ய நின்றான்–பூக்களைக் கொண்டு ஆராதிக்கும்படி நிற்பவனாய்
அரங்கத்து–கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற போக்யமான படுக்கையை யுடையனான அழகிய மணவாளனுடைய
அந்தி போல் நிறத்து ஆடையும்–செவ்வானம் போன்ற நிறத்தையுடைய திருப்பீதாம்பரமும்
அதன்மேல்–அப்பீதாம்பரத்தின் மேலே
அயனை படைத்தது ஓர் எழில் உந்திமேலது அன்றோ–பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகையுடைய திருநாபிக் கமலமும் ஆகிய இவற்றின் மேற்படிந்ததன்றோ
அடியேன் உள்ளத்து இன் உயிரே-என்னுடைய மனஸ்ஸிலே விளங்குகிற இனிதான ஆத்மஸ்வரூபம்.
“அடியேனுள்ளத்தின்னுயிர் எழிலுந்திமேலதன்றோ” என இயையும்.
இங்கு வாநரங்களைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம்.
“நின்றவா நில்லா நெஞ்சினையுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற
க்ஷுத்ர பல காமிகளான ஸம்ஸாரிகளுக்கு வாநரங்களே ஒத்த நிதர்சநமாம்.
பரமபதத்திலே கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துக்கு முடிசூடி யிருக்கிற முக்தரும் நித்யரும் தேஸோசிதமான
தேஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு திருமலையிலே வந்து கைங்கர்யங்கள் பண்ண,
அவற்றைப் பெறுகைக்காக அங்கே நித்ய ஸந்நிஹிதனாயிருக்கும் ஸ்ரீரங்கநாதனுடைய
திருப்பீதாம்பரத்திலும் திருநாபீகமலத்திலும் என் சிந்தை குடிகொண்டதென்கை.
‘வடவேங்கடமாலை நின்றான்’ என்றவுடனே,
வருந்தி ஏற வேண்டும்படியான திருமலையும் நம்போன்றவர்க்குப் பரமபதம்போல் அரிதேயன்றோ என்று சிலர் குறைபட,
உடனே, ‘அரங்கத்தரவினணையான்’ என்று எளிமையை அருளிச்செய்தபடி.
“அந்திபோல்நிறம்” என்பதற்கு-
அடியாருடைய அஜ்ஞான விருளைக் கழிக்கவல்ல நன்ஞானமாகிற ஸூர்யோதயத்துக்குக் கிழக்கு ஸந்த்யை போலவும்,
அவர்களுடைய தாபத்ரயத்தை ஆற்றுதற்கு மேற்கு ஸந்த்யைபோலவும் இராநின்ற, என்று கருத்துரைப்பர் தூப்புற்பிள்ளை.
முதற்பாட்டில் ஆதி என்ற அடைமொழியால் எம்பெருமானுக்குச் சொன்ன
ஜகத் காரணத்வத்தை இப்பாட்டில் மூன்றாமடி நிலைகாட்டுகின்றது போலும்.
த்ரயோதேவா ஸ்துல்யா, த்ரிதயமிதமத்வைதமதிகம்
த்ரிகாதஸ்மாத் த்த்வம் பரமிதி விதர்க்காந் விகடயந்
விபோர்நாபிபத்மோ விதிசிவ நிதாநம் பகவத
த்தந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந–என்ற ஸ்ரீ ரங்கராஜஸ்தவ ஸூக்தி இங்கு அநுஸந்திக்கத்தக்கது.
“சந்திசெய்யநின்றான்“ என்றவிடத்து,
சந்தி என்பதற்கு ஆராதநம் என்று எப்படி பொருளாயிற்றென்னில்,
சந்தி என்று ஸந்த்யாவந்தனத்துக்குப் பேராய்
அது ஸ்ரீ பகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபமாகையாலே லக்ஷிதலக்ஷணை‘ என்னும் முறையால்
பகவதாராதநத்தைச் சொல்லிற்றாகிறதென்று கொள்ளலாம்.
நின்றான் – வினையாலணையும் பெயர்.
அடியேன் உள்ளத்து இன்னுயிர் எழில் உந்தி மேலது அன்றோ
வானரங்கள்
சபலரான சம்சாரிகள்
நின்றவா நில்லா நெஞ்சினை உடையராய்
வடவேங்கடமா மலை நின்றவன் -வருந்தி ஏற வேண்டும்படியான திருமலை
அரங்கத்து அரவின் அணையான் -எளிமையை அருளிச் செய்து
அந்தி போல் நிறம்
அஞ்ஞானம் இருளை கழிக்க வல்ல நல்ல ஞானம் ஆகிற சூர்யோததுக்கு
கிழக்கு சந்தை போலேவும்
தாபத் த்ரயம் ஆற்ற மேற்கு சந்தை போலேயும் இரா நின்ற -தூப்புல் பிள்ளை
அயனைப் படைத்ததோர் எழில் இத்தால் முதல் பாட்டில் –ஆதி -அருளினதை -நிலை நாட்டுகிறது
சந்தி செய்ய நின்றான் -சந்த்யா வந்தனம் -ஸ்ரீ பகவத் ஆஞ்ஞாயா -ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம்
லஷித லஷணை முறையால் பகவத் ஆராதனம்
நின்றான் -வினையால் அணையும் பெயர்-
——————————————————-
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-
பதவுரை
சதுரம்–நாற்சதுரமாய்
மா–உயர்ந்திருக்கிற
மதிள்சூழ்–மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு–லங்கா நகரத்திற்கு
இறைவன்–நாதனான இராவணனை
ஓட்டி–(முதல்நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து
(மறுநாட்போரில்)
தலைபத்து–(அவனது) தலைபத்தும்
உதிர–(பனங்காய்போல்) உதிரும்படி
ஓர்–ஒப்பற்ற
வெம் கணை–கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன்–ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன்–கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு–வண்டுகளானவை
மதுரமா–மதுரமாக
பாட–இசைபாட
(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு–சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான்–திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதரபந்தம்–திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று–என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது–உலாவுகின்றது
குலபர்வதங்களையெல்லாம திரட்டிக் கொணர்ந்து சேர்த்து வைத்தாற்போல் செறிவும் திண்மையும் உயர்த்தியுமுடைத்தாய்
அஷ்டதிக்பாலகர்களுக்கும் எட்டிப்பார்க்கவொண்ணாத மதிள்களாலே சூழப்பட்டிருந்த இலங்கைக்கு அரசனான
இராவணனை முதல்நாட்போரில் மிகவும் இளைக்கப்பண்ணி “சசால சாபஞ்ச முமோசவீர:” என்றபடி-
அவன் சளைத்துப்போய் வில்லையும் பொகட்டு ஒன்றுஞ் செய்யமாட்டாது நின்றவளவிலே
அவன்மேல் இரக்கமுற்று ‘அப்பா! இன்று மிகவும் இளைத்தாய்; இப்போது உன்னை ஒரு நொடிப்பொழுதில்
உயிர்தொலைக்கக் கூடுமாயினும் அது தர்மமல்லவென்று விட்டிட்டேன்; இன்று போய் நாளை வா’ என்று சொல்லியனுப்பி,
அப்படியே அவன் மறுநாள் மிக வல்லவன் போல வந்து நின்றவாறே ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பிரயோகித்து
அவன் தலைகளை அறுத்துத் தள்ளின வரலாற்றை அநுஸந்திக்கிறார முன் இரண்டடிகளில்.
ஓட்டி என்பதற்கு இராவணனையோட்டி என்று பொருள் கொள்ளாமல்,
ஓர் வெங்கணையை ஓட்டி என்று பொருள் கூறுவதும் ஒன்று.
ஓதவண்ணன்-
கண்டவர்களுடைய பாபத்தையும் தாபத்தையும் கழிக்க வல்ல கடல்போன்ற ச்யாமளமான திருமேனியையுடையவன்.
திருவயிறு உதரம் என்று புநருக்தியன்றோவென்று சங்கிக்கவேண்டா;
‘உதரபந்தம்’ என்பது திருவாபரணத்தின் பெயர் ;
அது திருவயிற்றிற் சாத்தப்பட்டுள்ளமையைக் கூறியிருப்பதாக உணர்க.
“திருவயிற்றுதாபந்தனம்” என்றும் பாடமுண்டு.
ஒட்டி
வெங்கணையை ஒட்டி
ராவணனை ஒட்டி என்றுமாம்
ஓத வண்ணன்
பாபம் தாபம் கழிக்க வல்ல கடல் போன்ற ச்யாமளமான திருமேனி
திரு வயிறு உதரம் -புநருக்தி சங்கை வேண்டாம்
உதரபந்தம் -திரு ஆபரணம்
அது திரு வயிற்றில் சாத்தப் பட்டுள்ளமையை அருளிச் செய்கிறார்
சாஸீச ரோஜ சத்ருசாய தேஷண-என்பதும் உண்டே
திரு வயிற்று உதர பந்தனம் -பாட பேதம்-
——————————————————
அடியார்களைப் பரிந்து காத்தருள வல்ல பெரியபிராட்டியாரும்,
ஸர்வ ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்தவல்ல ஹாரமும் திகழப்பெற்ற திருமார்பின் அழகே
என்னை ஆட்படுத்திக் கொண்டதென்கிறார்.
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே —–5-
பதவுரை
பாரம் ஆய–பொறுக்கமுடியாத சுமையாயிராநின்ற
பழ வினை–அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து–சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை-(அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான்-தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்);
வைத்தது அன்றி–இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான்–என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக, நான்)
கோரம் மா தவம்-உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல்–(முற்பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன்-அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான்-ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம்-பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ-அத்திருமார்பன்றோ
அடியேனை-தாஸனான என்னை
ஆள் கொண்டது-அடிமைப்படுத்திக் கொண்டது.
காலமுள்ளதனையும் ப்ராயச்சித்தம் பண்ணினாலும் கழிக்க வொண்ணாதபடி வளர்ந்து செல்லுகிற
என் தொல்லைத் தீவினைகளை வாஸனையோடுகூட அடியறுத்து அடியேனை நிஷ்கல்மஷனாக்கித்
தன்னிடத்தில் பக்ஷபாதமுடையவனாக ஆக்கிக்கொண்ட மாத்திரத்தோடு நில்லாமல்,
இத்தனை காலமாய்ப் பாவங்களுக்கு இருப்பிடமாயிருந்த என்னெஞ்சை அப்பாவங்களை யோட்டிவிட்டுத்
தனக்கிருப்பிடமாக்கிக் கொண்டான் ஸ்ரீ ரங்கநாதன் என்கிறார் முன் அடிகளில்.
“கல்லும் கனைகடலும் வைகுந்தவானொடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-
வெல்ல நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்” என்ற
பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு அநுஸந்திக்கத் தகும்.
தன்வீட்டைத் தான் தான் ஆளவொண்ணாதபடி நெடுநாளாக ஆக்ரமித்துப் போந்த குறும்பர்களைச் சீற்றத்தோடு ஓட்டித்
துரத்திவிட்டு மேனாணிப்புடன் தன் வீட்டில் விஜயஞ்செய்கின்ற மஹாராஜன்போல,
அடியேனுடைய நெஞ்சை எம்பெருமான் தன்னதாக அபிமானித்து அரிய பெரிய காரியங்கள் செய்து
வந்து புகும்படிக்கீடாக நான் எந்த ஜந்மத்தில் என்ன தபஸ்ஸூ பண்ணினேனோ தெரியவில்லையே!
என்று தடுமாறுகிறார் மூன்றாமடியில்.
“பெண்ணுலாஞ் சடையினாலும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப” என்றபடி-
மெய்யே தவம்புரிந்த பெரியோர்களும் இப்போது பெறாமல் வருந்தி நிற்க,
தமக்கு அசிந்திதமாக இப்பேறு வாய்த்தது தீவ்ரமானதொரு அபூர்வ தபஸ்ஸின் பலனாயிருக்கவேணுமென்றும்,
அத்தபஸ்ஸூ தம் முயற்சியால் நிகழ்ந்தல்லவென்றும்,
எம்பெருமானே இதற்கு நோன்புநோற்றவன் என்றும் இவருடைய உட்கருத்தாமென்க.
இனி, செய்தனன் என்பதைத் தன்மை வினைமுற்றாகக் கொள்ளாமல் படர்க்கை வினைமுற்றாகக் கொண்டு,
இப்படி என் நெஞ்சினுள் புகுவதற்கு எம்பெருமான் உபயகாவேரி மத்தியத்திலே நின்று கொண்டு என்ன கடுந்தவம் புரிந்தானோ?
என்பதாக உரைத்தருளின தூப்புற்பிள்ளை வியாக்கியானமும் மிக்க பொருத்தமுடைத்தேயாம்.
அந்த முநிவாஹநபோகத்தில், “இது அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேக்ஷித்தபடி” என்று ஊடே ஒருவரி வரைந்து
அச்சிட்டிருப்பது ஆது நிகர்களின் கைச் சரக்காயிருக்க வடுக்கும்.
ஓரடியானைப் பெறுதற்கு எம்பெருமான் படுகிற பாடு இப்பிச்சுக்களுக்கு என்ன தெரியும்?
அநாவ்ருத்தி ஸூத்ர ஸ்ரீபாஷ்யத்தில்
நச பரமபுருஷஸ்ஸத்ய ஸங்கல்ப: அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநி நம் ல்ப்த்வா” என்று எம்பெருமானார் அருளிச் செய்த
ஸ்ரீஸூக்தியில் லப்த்வா என்ற பரம ரஸத்தைப். பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளிற் பணிந்து கேட்கப் பெற்ற
நம் தேசிகன் திருந்தி உரைத்த இச் சுவடறிவார் ஆர் கொல்?
பாரம், கோரம், ஆரம் என்பவை வடசொற்களின் விகாரம். வாரம்-பக்ஷபாதம்.
பாரமாய
தொல்லைத் தீ வினைகளை வாசனை உடன் அடி அறுத்து
அடியேனை நிஷ் கல்மஷன் ஆக்கி
தன்னிடத்தில் பஷ பாதம் உடையன் ஆக்கிக் கொண்ட மாத்ரம் நில்லாமல்
தனக்கே இருப்பிடம் ஆக்கிக் கொண்டான்
கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து
நீங்கான் அடியேன் உள்ளத்து அகம் -பெரிய திருவந்தாதி
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெல்கி நிற்ப –
தமக்கு அசிந்திதமாக இந்த பேறு வாய்த்ததே
எம்பெருமானே இதற்கு நோன்பு நோற்றவன்
செய்தனன் -தன்மை வினை முற்று -படர்க்கை வினைமுற்று
ஒரு அடியானை பெற இவன் படும் பாடு யார் அறிவார்
அநாவ்ருத்தி சூத்திர ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார்
நச பரம புருஷஸ் சத்ய சங்கல்ப அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞானி நம் லப்த்வா –
லப்த்வா -பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளில் பணிந்து கேட்கப் பெற்ற தேசிகன்
திருந்தி உரைத்த சுவடு அறியாமல்
அதிவாத கர்ப்பமாக உத்ப்ரேஷித்த படி -என்று ஊடே வரி
ஆது நிகர்களின் கைச் சரக்காய் இருக்க அடுக்கும்-
வாரம் -பஷ பாதம்
———————————————-
ஒருகாலத்திலே, பரமசிவன், தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனா யிருப்பது பலரும் பார்த்து
மயங்குவதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக் கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும், அவன் ‘இதற்கு என் செய்வது?’ என்று கவலைப்பட,
தேவர்களும் முனிவர்களும் ‘இப்பாவந்தொலையப் பிச்சை யெடுக்க வேண்டும்;
என்றைக்குக் கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்ட அகலும்’ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக,
பின்பு ஒருநாள் பதரிகாஸ்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயண மூர்த்தியை வணங்கி இரந்தபோது,
அப்பெருமான்: ‘அக்ஷயம்’ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.
இவ் வரலாற்று முகத்தால், ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தை வெளியிட்டவாறு.
ஈஸ்வரனென்று பெயருடைய ருத்ரன் கர்ம வச்யனென்பதும்,
தன்னைத் தான் ரக்ஷித்துக் கொள்ள மாட்டாத இவன் வேறொருவர்க்கும நிரபேஷ ரக்ஷகனாக மாட்டானென்பதும்,
ஸ்ரீமந்நாராயணனே ஸர்வாநிஷ்ட நிவர்த்தகன் என்பதும் நன்கு வெளியாகும்–
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய வப்பன்
அண்ட ரண்ட பகிரண்டத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை யுய்யக் கொண்டதே —-6-
பதவுரை
துண்டம்–ஒரு துண்டாயிருக்கிற (கலா மாத்ரமான)
வெண்பிறையன்–வெளுத்த சந்திரனை (முடியிலே) உடையனான சிவனுடைய
துயர்-(பிச்சை யெடுத்துத் திரிந்த) பாதகத்தை
தீர்த்தவன்–போக்கினவனும்
அம் சிறைய வண்டு–அழகிய சிறகையுடைய வண்டுகள்
வாழ்–வாழ்தற்கிடமான
பொழில் சூழ்–சோலைகள் சூழப் பெற்ற
அரங்கம் நகர்-திருவரங்கப் பெரு நகரிலே
மேய-பொருந்தி யிரா நின்ற
அப்பன்-ஸ்வாமியுமான ஸ்ரீரங்கநாதனுடைய
அண்டர்-அண்டத்துக்குட்பட்ட தேவாதி வர்க்கங்களையும்
அண்டம்–அண்டங்களையும்
பகிரண்டம்-அண்டாவரணங்களையும்
ஒரு மா நிலம்-ஒப்பற்ற மஹா ப்ருதிவியையும்
எழு மால் வரை-ஏழு குல பர்வதங்களையும்
முற்றும்-சொல்லிச் சொல்லாத மற்றெல்லாவற்றையும்
உண்ட-அமுதுசெய்த
கண்டம் கண்டீர்-திருக்கழுத்துக்கிடீர்
அடியேனை-தாஸனான என்னை
உய்யக் கொண்டது-உஜ்ஜீவிப்பித்தது
அஞ்சிறைய வண்டு என்றது ஞானானுட்டானங்கள் நன்கு அமைந்த ஆச்சார்யர்களை க் கூறியபடி.
பலவகை மலர்களிலு ஞ்சென்று அவற்றின் ஸாரமான தேனை அம்மலர்கள் கெடாதபடி கவர்ந்து
உண்ணுந்தன்மை யனவான வண்டுகளை, பலவகை சாஸ்த்ரங்களிலும் அவகாஹித்து அவற்றின் ஸாரமான
தத்துவப் பொருளை அந் நூல்கள் நலிவுபடாதபடி க்ரஹித்து அநுபவிக்குந் தன்மையரான ஆச்சார்யராகச் சொல்லத் தட்டில்லை.
சிறகுகள் வண்டுகளின் கமநத்துக்கு ஸாதநமாவதுபோல்
ஜ்ஞாநாநுஷ்டா நங்கள் உன்னதகதிக்கு ஸாதநமாமென்க.
காரணாவஸ்தையில் எல்லாக் காரியங்களையும் தன்பக்கலில் உபஸம்ஹரித்துப் பின்பு ஸ்ருஷ்டிக்குமாறு
“வெற்றிப் போர்க் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட” என்றபடி
ஸகல பதார்த்தங்களையும் பிரளயப் பெரு வெள்ளத்தில் நின்றும் தப்ப வைத்துத் தன் திருவயிற்றிலே அடக்கி நோக்கின
பெரு நன்றியையும், இப்போதும் தம்மை ஸம்ஸார ஸாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக்கொண்ட உபகாராதிசயத்தையும்
ஆநந்தமாகப் பேசுகிறார் பின்னடிகளில்.
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்-
“சந்த்ரனுடைய க்ஷயத்தைப்போக்கினானென்றுமாம்” என்று அர்த்தாந்தரமும் அருளிச் செய்யப்பட்டிருப்பதால்
“துண்டவெண்பிறையின்” என்றும் ஒருபாடமுண்டு போலே.
அண்டம், பஹிரண்டம், கண்டம்-வடசொற்கள்.
துண்டம்
அஞ்சிறைய வண்டு -ஞானம் அனுஷ்டானங்கள் நன்கு அமைந்த ஆரியர்கள்
சாஸ்த்ரங்களில் அவஹாகித்து
சாரமான தத்துவ பொருளை நூல்கள் நலிவு படாத படி க்ரஹித்து
அனுபவிக்கும் தன்மையான ஆச்சார்யர்
வெற்றிப் போர் கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட –
பிரளய வெள்ளத்தில் நின்றும் திரு வயிற்றிலே அடக்கி நோக்கி அருளிய
சம்சார சாகரம் விழுங்காதபடி ஆட்படுத்திக் கொண்ட உபகார அதிசயம்
பிறையன் பிறையின்
சந்தரன் உடைய ஷயத்தை போக்கி அருளினவன் என்றுமாம்
————————————————————–
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல்
மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம்
ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ——-7–
பதவுரை
கையின்–திருக் கைகளில்
ஆர்-பொருந்தியிருக்கிற
சுரி சங்கு-சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர்-தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்,
நீள் வரை போல்-பெரியதொரு மலை போன்ற
மெய்யனார்-திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர்-திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ்-பரிமளியா நின்றுள்ள
நீள்முடி–உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார்–எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார்-அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய–திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார்–ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய்–சிவந்த திருப்பவளமானது
என்னை-என்னுடைய
சிந்தை-நெஞ்சை
கவர்ந்தது-கொள்ளை கொண்டது;
ஐயோ–(ஆநந்தாதிசயக் குறிப்பு.)
திருக்கைக்கு ஆயுதமாகவும் ஆபரணமாகவும் விளங்குகின்ற திருவாழி திருச்சங்குகளையுடையனாய்,
மாம்ஸ சக்ஷூஸ்ஸூக்களான நம் போன்றவர்களும் கண்ணாரக் காணும்படியாகப்
பெரிய பச்சைமாமலை போன்ற மேனியையுடையனாய்,
அனைவரையும் ரக்ஷிக்க ஸித்தனாயிருக்கும்படியை விளங்குகின்றனாய்,
திருவரங்கத்தில் திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொள்பவனான அழகிய மணவாளனுடைய
கொவ்வைக் கனி போற் சிவந்த திருவதரமானது என் நெஞ்சைக் கவர்கின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார்.
எம்பெருமானை முழுக்க அநுபவிக்கப் பார்த்திருக்கையில் இடையிலே நெஞ்சைக் கொள்ளை கொண்டுவிட்டதே அதரம்!
இதற்கென் செய்வேன் என்பார் ஐயோ! என்கிறார்.
“பண்டே நெஞ்சு பறி கொடுத்த வென்னை அநியாயம் செய்வதே! என்று கூப்பிடுகிறார்” என்பர் பெரியவாச்சான்பிள்ளை.
“ஐயோ வென்றது-ஆச்சர்யத்தை யாதல், அநுபவிக்க அரிதான படியையாதல், அநுபவ ரஸத்தையாதல் காட்டுகிறது” என்பர் தூப்புற்பிள்ளை.
சுரி-சங்குக்கு உள்ளதொரு லக்ஷணம்.
கையினார்
சுரி -சங்குக்கு உள்ளதொரு லஷணம்
ஐயோ
பண்டே நெஞ்சு பறி கொடுத்த என்னை அநியாயம் செய்வதே
ஆச்சர்யம்
அனுபவிக்க அரிதான படியை யாதல்
அனுபவ ரசத்தை யாதல்
———————————————————-
எப்போதும் அழகிய மணவாளனுடைய திருக் கண்களின் பெருமையையே தாம் வாய் வெருவி,
பலரும் ‘இவன் பேயன்’ என்று ஏசும்படியான உன்மத்த நிலைமையை அடைந்துவிட்டதாக அருளிச் செய்கிறார்.
“ஏழையராவியு ண்ணுமிணைக் கூற்றங்கொலோவறியேன்,
ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள் கொலோவறியேன்,
சூழவுந்தாமரை நாண்மலர்போல் வந்து தோன்றுங்கண்டீர்,
தோழியர்காளன்னைமீர்! என்செய்தேன் துயராட்டியேனே” என்று திருக் கண்களில் ஈடுபட்டு
நம்மாழ்வார் பட்டபாடு இவரும் படுகிறார் போலும்–
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–
பதவுரை
பரியன் ஆகி–மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு
வந்த–(ப்ரஹ்லாதனை நலிய) வந்த
அவுணன்–அஸூரனான இரணியனுடைய
உடல்–சரீரத்தை
கீண்ட-கிழித்துப் பொகட்டவனும்,
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்கட்கும்
அரிய-அணுக முடியாதவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பிரான்-மஹோபகாரகனும்
அரங்கத்து-கோயிலில் எழுந்தருளியிருக்கிற
அமலன்-பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய
முகத்து–திருமுக மண்டலத்தில்
கரிய ஆகி–கறுத்த நிறமுடையவையாய்
புடை பரந்து–விசாலங்களாய்
மிளிர்ந்து–பிரகாசமுடையவையாய்
செவ்வரி ஓடி–செவ்வரி படர்ந்திருப்பனவாய்
நீண்ட–(காதுவரை) நீண்டிருப்பவனாய்
பெரிய ஆய-பெருமை பொருந்தியவையுமான
அக் கண்கள்–அந்தத் திருக்கண்களானவை
என்னை-அடியேனை
பேதைமை செய்தன–உந்மத்தனாகச் செய்துவிட்டன.
அவுணனுடல் கீண்ட வரலாறு:-
தனித்தனி தேவர் விலங்கு முதலிய பிராணிகளாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத்திலும்
வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம்பெற்ற இரணியன்,
தேவர் முதலியவர்களுக்கும் கொடுமைகள் இயற்றித் தன்னையே கடவுளாக அனைவரும் வணங்கும்படி செய்து வருகையில்,
அவனது மகனான ப்ரஹ்லாதாழ்வான், இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய் தந்தையின் கட்டளைப்படி
முதலில் அவனது பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயணநாமஞ் சொல்லி வரவே கடுங்கோபங் கொண்ட இரணியன்
ப்ரஹ்லாதனைத் தன்வழியில் இணக்குவதற்குப் பலவாறு முயன்றவளவிலும் அங்ஙனம் வழிபடாத
அவனைக் கொல்லுவதற்கு என்ன உபாயஞ்செய்தும் அவன் திருமாலருளால் இறவாதொழிய,
ஒருநாள் ஸாயங்காலத்தில் தந்தை மைந்தனை நோக்கி ‘அடா! நீ சொல்லும் நாராயணன் என்பான் எங்கு உளன்? காட்டு’ என்ன;
அப்பிள்ளை ‘தூணிலும் உளன் துரும்பிலும் உளன், எங்கும் உளன்’ என்று உறுதியாய்ச் சொல்ல,
உடனே இரணியன் ‘இங்கு உளனோ?’ என்று சொல்லி எதிரில் நின்ற ஒரு தூணைப் புடைக்க,
அதிலிருந்து திருமால் உடனே மனிதரூபமும் சிங்கவடிவமுங் கலந்த நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றி இரணியனைப் பிடித்து
வாசற்படியில் தன் மடிமீது வைத்துக்கொண்டு தனது திருக்கை நகங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டு
ப்ரஹலாதனுக்கு அருள் செய்தான் என்பதாம்.
எம்பெருமானது அருள் ஒன்றையே நம்பி அவனுடைய சரணமே சரணம் என்ற உறுதியின்றித் தன் முயற்சியாலே
அவனைப் பெறலாம் என்று நினைப்பவர்கள் தேவர்களாயிருப்பினும் அவர்கட்கும் அருமைப்படுவான் எம்பெருமான் என்பார்,
அமரர்க்கு அரிய என்றார்.
திருக்கண்களை வருணிப்பன பின்னடிகள். கறுத்த நிறமுடைத்தாதல், விசாலமாயிருத்தல், ஒளிபொருந்தியிருத்தல்,
செவ்வரிபடர்ந்திருத்தல் (சிறுகொடிபோன்ற சிவந்தரேகை ஒடுதல்,) காதளவும் நீண்டிருத்தல்
இவை கண்களின் சிறப்புகுறிப்பா மென்க.
பேதைமை – அறிவில்லாமையும், உந்மத்தமும்.
திருக் கண்களில் ஈடுபட்டு பேதையேன் என்கிறார்
பேதைமை அறிவில்லாமையும் உன்மத்தமும்
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கொலோ அறியேன்
ஆழி யம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோற்றும் கண்டீர்
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே-போலே –
கறுத்த
விசாலமான
ஒளி பொருந்தி
செவ்வரி படர்ந்து -சிறு கொடி போன்ற சிவந்த ரேகை
காதளவும் நீண்டு இருத்தல்
பல விசேஷணங்கள் கொண்டு அனுபவிக்கிறார்
அமரர்க்கும் அரியவன் –
—————————————————-
தனித்தனி ஒவ்வொரு அவயவத்திலும் ஈடுபட்டுபோந்த ஆழ்வார்,
அவயவியான திருமேனியை அநுபவித்துத் தமது நெஞ்சு பரவசமாகப் பெற்ற பெருமையைப் பேசுகிறார் இதில்.
ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-
பதவுரை
மா-பெரிதான
ஆல மரத்தின்–ஆல மரத்தினுடைய
இலை மேல்–(சிறிய) இலையிலே
ஒரு பாலகன் ஆய்-ஒரு சிறு பிள்ளையாகி
ஞாலம் ஏழும் உண்டான்–ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும்
அரங்கத்து-கோயிலிலே
அரவு இன் அணையான்-திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியின் மீது சாய்ந்தருள் பவனுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
கோலம்-அழகிய
மா–சிறந்த
மணி ஆரமும்–ரத்நங்களாற் செய்யப்பட்ட ஹாரமும்
முத்து தாமமும்–முத்து வடமும் (ஆகிய இவை போன்ற பல்லாயிரம் திருவாபரணங்கள்)
முடிவு இல்லது–எல்லை காண முடியாமல் அபரிமிதமாக விளங்கா நிற்கப் பெற்றதும்
ஓர் எழில்–ஒப்பற்ற அழகை யுடையதும்
நீலம்–கரு நெய்தல் மலர் போன்றதுமான
மேனி-திருமேனி யானது
எனது நெஞ்சினுடைய
நிறை–அடக்கத்தை
கொண்டது–கொள்ளை கொண்டு போயிற்று;
ஐயோ! இதற்கென் செய்வேன்? என்கிறார்.
ஓர் அவாந்தர ப்ரளயத்தில், ஸாகோபஸகமாக மிகப் பெரியதாய் வளர்ந்திருப்பதொரு ஆலமரத்தின்
ஒரு சிறு பசுந்தளிரிலே, தாயும் தந்தையுமில்லாததொரு தனிக்குழவியாய்ப் பள்ளி கொண்டு ஸகல லோகங்களையும்
திருவயிற்றிலே வைத்து நோக்கியருளின திருவரங்கமானது ஸகல திருவாபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள
கரிய திரு மேனியானது எனக்கு ஸேவை ஸாதித்து என் நெஞ்சினது காம்பீர்யத்தைக் கொள்ளை கொண்டு போயிற்றே! என்கிறார்.
என் நெஞ்சினை
“ஐயோ!-பச்சைச் சட்டை யுடுத்துத் தனக்குள்ளதை யடையக் காட்டி எனக்குள்ளதை யடையக் கொண்டானே!”
என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
“நான் எல்லாவற்றையும் நின்று நின்று அநுபவிக்க வேணுமென்றிருக்க, அநுபவ பரிகரமான என் நெஞ்சைத்
தன் பக்கலிலே இழுத்துக் கொள்வதே! ஐயோ! என்கிறார்” என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
கோலமா மணி யாரங்களையும்; முத்துத் தாமங்களையும், முடிவு இல்லாத அழகையும்,
நீலநிறமுடைய திருமேனி என்ற உரைத்தலுமாம்.
நெஞ்சை நிறை கொள்வதாவது-மோஹிக்கச் செய்கை என்க.
நெஞ்சினை- உருபு மயக்கம்.
ஆல மா
ஐயோ
பச்சை சட்டை உடுத்துத்
தனக்கு உள்ளதை அடையக் காட்டி
எனக்கு உள்ளதை அடையக் கொண்டானே -பெரியவாச்சான் பிள்ளை
நான் எல்லா வற்றையும் நின்று நின்று
அனுபவிக்க வேணும் என்று இருக்க
அது பவ பரிகரமான என் நெஞ்சை தன் பக்கலிலே
இழுத்துக் கொள்வதே
ஐயோ -என்கிறார் -நாயனார்
கோலமா மணி ஆரங்களையும்
முத்துத் தாமங்களையும்
முடிவு இல்லாத அழகையும்
நீல நிறத்தையும் உடைய திரு மேனி
நெஞ்சினை உருபு மயக்கம்
நெஞ்சை நிறை கொள்வது -மோஹிக்கச் செய்கை
——————————————————
இவ்வாழ்வார் ‘அடியேன்’ என்னுமதொழிய இப்பிரபந்தம் தலைக்கட்டுமளவிலும்
தம்முடைய பேரும் ஊரும் பேச மறக்கும்படி தாம்பெற்ற அநுபவத்துக்கு இனி ஒருவிச்சேதம் (இடையூறு)
வாராதபடி பெரிய பெருமாள் அருள் புரிந்தமையைக் கண்டு வியந்து
அப் பெரிய பெருமாளுடைய திருமேனியிலேயே தாம் ஒரு நீராக லயம் பெற்ற படியைப் பேசித் தலைக் கட்டுகிறார்.
ஸூந்தரபாஹூஸ்தவத்தில்,
-யசோதாங்குள் யக்ரோந்நமித சுபுகாக்ராணமுதிதௌ”
கபோலாவத்யாபி ஹ்யநு பரத தத்தரஷகமகௌ” என்ற ஆழ்வான்,
பண்டு யசோதைப் பிராட்டி முத்தங்கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்ய கபோலங்களில்
திகழா நிற்குமென்று அநுபவித்தாற் போல,
இவரும், பண்டு வெண்ணெயுண்ட முடை நாற்றம் இன்றும் பெரிய பெருமாள்
திருப்பவளத்திலே கமழா நிற்பதாக அநுபவிக்கிறார் –
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–
பதவுரை
கொண்டல் வண்ணனை–காள மேகம்போன்ற வடிவையுடையனும்
கோவலன் ஆய் வெண்ணெய் உண்ட வாயன்–கோபால குமாரனாகப் பிறந்து வெண்ணெயமுது செய்த திருவாயை யுடையனும்
என் உள்ளம்–என்னுடைய நெஞ்சை
கவர்ந்தானை–கொள்ளை கொண்டவனும்
அண்டர் கோன்–நித்யஸூரிகட்குத் தலைவனும்
அணி அரங்கன்–(பூமண்டலத்துக்கு) அலங்காரமான திருவரங்கத்தில் கண்வளர்ந்தருள்வபனும்
என் அமுதினை–எனக்குப் பரம போக்யமான அம்ருதமாயிருப்பவனுமான அழகிய மணவாளனை
கண்ட கண்கள்–ஸேவிக்கப் பெற்ற (பரமபத நாதனையும்)
காணா–காண மாட்டா.
கொண்டல் வண்ணன் –
கடலிலுள்ள நீரை யடங்கலும் முகந்து கொண்டு காவேரீ மத்தியில் வந்து படிந்ததொரு காளமேகம் போன்று
கண்டாருடைய விடாயைத் தீர்க்க வல்ல திருமேனியையுடையன்:
அன்றி,
மேடு பள்ள வாசி யின்றித் தாழ்ந்தார் உயர்ந்தாரனைவரும் உஜ்ஜீவிக்கும்படி
காருண்ய ரஸத்தை வர்ஷிக்குமவன் என்றுமாம்.
கொண்டல்-தொழிலாகு பெயர்.
கோவலனாய் இத்யாதி–
தசரத சக்ரவர்த்தி, தன்னுடைய ராஜைஸ்வர்யத்தைப் புஜிக்கைக்கு ‘எனக்கொரு பிள்ளை வேணும்’ என்று
நோன்பு நோற்றுப் பெருமாளைப் பெற்றாற் போலே,
ஸ்ரீநந்தகோபரும் “ கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய்பருக நந்தன்பெற்ற ஆனாயன்” என்றபடியே
திருவாய்ப்பாடியில் கவிய ஸம்ருத்தி யடங்கலும் பாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக
நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாய்த்து ஸ்ரீக்ருஷ்ணன்.
பெரிய பெருமாள் கொறுட்டை மோந்துபார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறாநிற்குமாம்.
உப்புச்சாறாய் எட்டாநிலத்திலே யிருக்கும் தேவர்களம்ருதம் போலன்றிப்
பரம மதுரமாய்ப் பரம ஸூலபமாயிருக்கும் நான் கண்ட அமுதம் எனபார் என் அமுதினை என்கிறார்.
‘அமுதனை’ என்று சிலர் ஒதுவர்; அப்பாடம் ரஸமற்றதா மென மறுக்க;
ஆழ்வார்க்கு அம்ருததாதாத்மியம் விவக்ஷிதமே யல்லது அம்ருத தாத்ரூப்யம் விவக்ஷிதமன்று காணீர்.
“அளப்பரிய ஆரமுதை” என்றார் திருமங்கையாழ்வாரும்.
மற்றொன்றினைக் காணா –
அம்ருத பாநம் பண்ணினவர்கள் பாலையும் சோற்றையும் கண்ணெடுத்துப் பார்ப்பர்களோ?
பாவோ நாந்யத்ர கச்சதி” என்று திருவடி சொன்னாப்போலே இவரும் மற்றொன்றினை என்கிறார்-
பேர் சொல்லவும் கூசுகிறபடி பர வ்யூஹாதிகள், மற்றுள்ள அர்ச்சாவதாரங்கள் ஒன்றையும் காண மாட்டா என்கை.
“பண்கொள் சோலைவழுதிநாடன் குருகைக்கோன் சடகோபன்” என்றும்,
“அங்கமலத்தடவயல்சூழ் ஆலிநாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்,
கொங்குமலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்றவேற் பரகாலன் கலியன்” என்றும்
மற்றுள்ள ஆழ்வார்கள் தம் ஊரையும் பேரையும் பாசுரக் கணக்கையும் பரக்கச் சொல்லிக் கொண்டாற்போலே
இவர் ஒன்றும் சொல்லிக் கொள்ளாதொழிந்ததென்? எனில்;
“மற்றொன்றினைக் காணா” என்ற மற்றொன்றில் இவையும் சேர்ந்து விட்டன போலும்
பர வ்யூஹாதிகளையும் வேறு அர்ச்சாவதார எம்பெருமான்களையும் மறந்தாற்போலே
தம்மையும் தம் ஊரையும் பாட்டையும் எல்லாவற்றையும் மறந்தொழிந்தாரென்ப.
அழகியமணவாளப்பெருமாள் நாயனார் வியாக்கியான ஸ்ரீஸூக்தி-
“அல்லாதார் திருநாமப் பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர் –
‘விஸஸஹ– தஷாதா நா-விஸஸ்மார ததாத்மாநம்’ என்கிறபடியே தாம் போக ப்ரவணராய்த்
தம்மை மறக்கையாலே.
பலம்- ஸதாபச்யந்தி யாகையாலே அது இங்கே ஸித்திக்கையாலே
பலத்துக்குப் பலம் வேணுமோவென்று பலஞ் சொல்லிற்றிலர்.”
இப்பாட்டு அருளிச் செய்தவுடனே
பெரிய பெருமாள் அத் திருமேனியோடு ஆழ்வாரை அங்கீகரித்தருள,
அனைவருக்கான அப் பிரானது திருமேனியிலே அந்தர்ப்பவித்துக்
காய்ந்த இரும்பு உண்ட நீராயினர் என்று-
ஸம்ப்ரதாயம் வல்ல பெரியோர்கள் அருளிச் செய்யக் கேட்டிருக்கை யாயிருக்கும்.
கொண்டல்
அடியேன் என்னுமது ஒழிய
இப் பிரபந்தம் தலைக் கட்டும் அளவும்
தம்முடைய ஊரும் பேரும் பேச மறக்கும் படி
தாம் பெற்ற அனுபவத்துக்கு விச்சேதம் வாராதபடி
பெரிய பெருமாள் அருள் புரிந்தமை கண்டு வியந்து
பெரிய பெருமாள் திரு மேனியிலே நீராக லயம் பெற்ற படியைப் பேசித் தலைக் கட்டுகிறார்
ஆழ்வான் பண்டு யசோதை முத்தம் கொடுத்த சுவடு அழகர்
கபோலங்களில் திகழா நிற்கும்
என்று அனுபவித்தால் போலே
இவரும்
வெண்ணெய் உண்ட முடை நாற்றம் பெரிய பெருமாள் திருப் பவளத்தில் கமழா நிற்பதாக அனுபவிக்கிறார்
சக்கரவர்த்தி -ராஜ ஐஸ்வர்யம் புஜிக்க எனக்கு ஒரு பிள்ளை வேணும் நோற்றுப் பெற்றால் போலே
ஸ்ரீ நந்த கோபரும்
கானாயன் கடிமனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் -என்றபடி
இதற்கே நோன்பு நோற்று பெற்ற பிள்ளை அன்றோ
பரம மதுரமாய்
பரம சுலபமாய்
இருப்பதால் என்னமுதம் என்கிறார்
உப்புச் சாறு அல்லவே
அமுதனை -ரசம் அற்ற பாடம்
அமுதினை என்பதே சரி -ஆழ்வாருக்கு அம்ருத தாதாமியம் விவஷிதமே அல்லது
அம்ருத தாத்ரூபம் விவஷிதம் அன்று
அளப்பரிய ஆரமுதை -என்றார் திரு மங்கை ஆழ்வாரும் –
மற்று ஒன்றினைக் காணா
அம்ருத பானம் பண்ணினவர்கள்
பாலையும் சோற்றையும் கண் எடுத்துப் பார்ப்பார்களோ
பாவோ நான்யத்ர கச்சதி போலே
பேரையும் சொல்ல கூசி மற்று ஒன்றை என்று அருளுகிறார்
பர வியூஹாதிகள் மற்றைய அர்ச்சா ஸ்தலங்கள் எல்லாவற்றையும்
தம் ஊரையும் பேரையும் பாட்டையும் எல்லா வற்றையும் மறந்து அருளுகிறார்
அல்லாதார் திரு நாம பாட்டுப் போலே தம்மைச் சொல்லிற்றிலர்
விசஸ்மார ததாத்மா நம் -என்கிறபடி
தாம் போக பிரவணராய் தம்மை மறக்கையாலே
பலம் -சதா பஸ்யந்தி -யாகையாலே
அது இங்கே சித்திக்கையாலே
பலத்துக்கு பலம் வேணுமோ என்று பலம் சொல்லிற்றிலர்
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply