பொருளடக்கம்
1 இராவணன் இலங்கை மீளுதல்
2 தூதரை அழைத்து வரக் கஞ்சுகியை இராவணன் ஏவுதல்
3 எண்திசைச் சேனைகளையும் கொணரத் தூதர்களை இராவணன் பணித்தல்
4 இராவணன் வருந்தி இருத்தல்
5 இராவணனிடம் மாலியவான் வினவுதல்
6 இராவணன் நிகழ்ந்தவை கூறல்
7 மாலியவான் உரை
8 மகோதரன் உரை
—————————————————
இராவணன் இலங்கை மீளுதல்
வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான். 1-
வாரணம் பொருதமார்பும் – திசையானைகளின் எதிர் சென்று
போரிட்டுத் தந்தங்கள் துளைத்த மார்பும்; வரையினை எடுத்த
தோளும் – கைலாயமலையை அள்ளி எடுத்த வலிமிகு தோளும்;
நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும்- நாரத முனிவன்
நன்று நன்று என்று ஏற்குமாறு சாமவேதத்தை இசைநயத்தோடு
பாடிய நாவும்; தாரணி மௌலி பத்தும் – பத்துத்
தலைகளிலணிந்திருந்த மாலையணிந்த அரசச் சின்னமான மணிமுடி
பத்தும்; சங்கரன் கொடுத்த வாளும் – சிவபிரான் தவஆற்றல்
கண்டு கொடுத்த வாளும்; வீரமும் களத்தே போட்டு –
தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும்
போர்க்களத்திலே போட்டு விட்டு; வெறுங்கையே மீண்டு
போனான் – தன்னிடமிருந்த பிறிதின் கிழமைப் பொருள்களையும்
தற்கிழமையாய உறுப்பு, குணம் ஆகியவற்றையும் இழந்து
வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டும் போனான்.
——————-
கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்,
தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய கரங்களோடும்,
நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான். 2-
கிடந்தபோர் வலியார் மாட்டே- போர் செய்யும் வலிமை
பொருந்திய பெருவலியுடையவர்களிடம்; கெடாத வானவரை
யெல்லாம் – தோல்வியடையாத தேவர்களை எல்லாம்; கடந்து
போய் – வென்று மேல் சிறந்து; உலக மூன்றும் காக்கின்ற
காவலாளன்- மூவுலகங்களையும் காக்கும் காவல் தொழிலுடைய
மால்போல் விளங்கும் இராவணன்; தொடர்ந்து போம்
பழியினோடும் – என்றும் அழியாது பின்பற்றி வருகின்ற
பழியுடனும்; தூக்கிய கரங்களோடும் – எதிரியை வெல்ல
முடியாது வீணாகத்தொங்கும் இருபது கரங்களோடும்; நடந்து
போய் நகரம் புக்கான் – நாணத்தோடு நடந்து போய் இலங்கை
நகர் புக்கான்; அருக்கனும் நாகம் சேர்ந்தான் – சூரியன் அத்தகிரியை
அடைந்தான்.
————
மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கான். 3-
மாதிரம் எவையும் நோக்கான் – தோற்று நாணி நகர்
திரும்பும் இராவணன் தான் வென்ற திசைகளை நோக்கானாய்;
வளநகர் நோக்கான் – களிக்கின்றார் அலால் கவல்கின்றார்
ஒருவருமில்லாத வளநகரை நோக்கானாய்; வந்த காதலர்
தம்மை நோக்கான்- வெற்றி பெற்று வந்தபோது வரவேற்றது
போல் இப்போதும் வரவேற்க வந்த மக்களையும்,
மனைவியரையும் நோக்கானாய்; கடல் பெருஞ்சேனை
நோக்கான்- புக்க போர் எல்லாம் வெல்ல உதவிய கடல்
போல் பரந்த பெருஞ்சேனையை நோக்கானாய்; தாது அவிழ்
கூந்தல் மாதர்- விரிந்த மலரணிந்த கூந்தலையுடைய
மண்டோதரி முதலிய மனைவியர்; தனித்தனி நோக்க –
இராவணனின் நிலை கண்டு தனித்தனியாகப் பார்க்க; தான் –
இராவணன்; அப்பூதலம் என்னும் நங்கை தன்னையே –
பூமி தேவி என்ற பெண்ணையே; நோக்கிப் புக்கான் –
பார்த்த வண்ணம் நகரிலுள்ள அரண்மனை முற்றத்தில்
புகுந்தான்.
————
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;-
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை. 4-
கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு-
ஒன்பது கோள்களையும் ஒருங்கே சிறைவைத்து அடிமைப்படுத்தி
ஆண்ட வெற்றி வீரனான இராவணனுக்கு; அற்றை நாள் –
தோற்றுத் திரும்பிய அந்த நாளில்; நாள் ஒத்த நளினம் அன்ன
முகத்தியர்- பகலில் ஒருசேர மலர்ந்த தாமரை மலர் போன்ற
முகத்தினையுடைய மகளிரது;நயனம் எல்லாம் வாள் ஒத்த –
கண்கள் எல்லாம் வாட்படை போல் துன்பத்தை மிகுவித்தன;
மைந்தர் வார்த்தை- மக்களுடைய சொற்கள்; இராகவன் வாளி
ஒத்த – இரகுகுல நாயகனின் அம்பு போல் துன்பம் தந்தன;
இதற்கு காரணம் என்னையோ எனின். தோள் ஒத்த துணை
மென் கொங்கை – தோள் வலிக்குச் சார்ந்த மார்பில் அமைந்த
இரட்டை மென் கொங்கைகளையுடைய வெற்றித் தெய்வமாகிய
கொற்றவையின்; நோக்கு அங்குத் தொடர்கிலாமை- வெற்றி
நோக்கு அவனிடத்தில் இதுவரை தொடர்ந்து இப்போது
தொடர்கிலாமையேயாகும்.
—————
மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும்,
தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும்,
எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர்
சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான். 5-
மந்திரச் சுற்றத்தாரும்- அடுக்கு மீது அடாதது என
உரைக்கும் மந்திரத் துணையானவர்களும்; வாணுதல்
சுற்றத்தாரும்- ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவியரும்;
தந்திரச் சுற்றத்தாரும் – சேனைத்தலைவர்களாகிய துணைவரும்;
தன் கிளைச் சுற்றத்தாரும் – உறவு முறையானவர்களும்;
எந்திரப் பொறியின் நிற்ப – இதுவரை இராவணனிடம் காணாத
தன்மை கண்டதால் இயந்திரத்தின் வன்மையால் இயங்கும் பொறி
அவ் இயந்திர வன்மை தீர்ந்தவுடன் செயல் படாது நிற்றல் போல்
நிற்க; யாவரும் இன்றி – ஒருவரும் பின் தொடரும் வலிமையின்றி
அசையாது நிற்றலால் தனியாக; தான் ஓர் – இராவணன் ஒரு;
சிந்துரக் களிறு – செம்பொடியை உடல் முழுதும் அணிந்த
ஆண்யானை; கூடம்புக்கென – கொட்டாரம் சென்று சேர்வது
போல்; கோயில் சேர்ந்தான் – அரண்மனையின் உட்புறம்
சேர்ந்தான்.
————-
தூதரை அழைத்து வரக் கஞ்சுகியை இராவணன் ஏவுதல்
ஆண்டு ஒரு செம் பொன் பீடத்து இருந்து, தன் வருத்தம் ஆறி,
நீண்டு உயர் நினைப்பன் ஆகி, கஞ்சுகி அயல் நின்றானை,
‘ஈண்டு, நம் தூதர் தம்மை இவ்வழித் தருதி’ என்றான்,
பூண்டது ஓர் பணியன், வல்லை, நால்வரைக் கொண்டு புக்கான். 6-
ஆண்டு- அவ்வரண்மனையிடத்தில்; ஒரு செம்பொன்
பீடத்து இருந்து- செம்பொன்னால் செய்யப்பட்ட ஒப்பற்ற
பீடத்தில் அமர்ந்து;தன் வருத்தம் ஆறி – போரில் ஏற்பட்ட
உடல் வருத்தமும் தோல்வியால் ஏற்பட்ட மனவருத்தமும் ஓரளவு
தணிந்தவுடனே; நீண்டு உயிர் நினைப்பன் ஆகி – இனிமேல்
செய்ய வேண்டியதைப் பற்றி மிகப்பெருஞ் சிந்தனையுடையவன்
ஆகி; கஞ்சுகி அயல் நின்றானை – அருகில் நின்றவனாகிய
மெய்ப்பை புக்கவனாகிய மெய்க்காப்பாளனைப் பார்த்து; ஈண்டு
– இப்போதே; நம் தூதர் தம்மை- நம் தூதுவர்களை; இவ்வழித்
தருதி என்றான்- இந்த இடத்திற்கு அழைத்து வா என்று
கட்டளையிட்டான்; பூண்டதோர் பணியன் வல்லை – அப்பணி
தலை மேற்கொண்ட கஞ்சுகி மேற்கொண்ட பணியினை முடித்து
விரைவில்; நால்வரைக் கொண்டு புக்கான்- நான்கு தூதரை
அழைத்து வந்தான்.
—————–
எண்திசைச் சேனைகளையும் கொணரத் தூதர்களை இராவணன் பணித்தல்
மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்று இவ்
வினை அறி தொழிலர் முன்னா, ஆயிரர் விரவினாரை,
‘நினைவதன் முன்னம், நீர் போய் நெடுந் திசை எட்டும் நீந்தி,
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர், கடிதின்’ என்றான். 7-
வினை அறி தொழிலர்- செய்யவேண்டிய செயலைச்
செய்யவேண்டியவாறு செய்யும் செயல் அறிந்தவராய, மனகதி,
வாயு வேகன், மருத்தன், மாமேகன் என்று இவ் – என்ற
பெயருடைய இவர்கள்; முன்னை ஆயிரர் விரவினாரை –
முதலாக வந்து சேர்ந்த ஆயிரக்கணக்காக வந்த தூதரை
(நோக்கிய இராவணன்); நினைவதன் முன்னம்- நினைப்பு
எழும் காலஅளவுக்குள்; நீர் போய் – நீங்கள் போய்;
நெடுந்திசை எட்டும் நீந்தி – பெரிய எட்டுத் திசைகளையும்
கடந்து; கனைகழல் அரக்கர் தானை- ஒலிக்கின்ற வீரக்கழல்
அணிந்த அரக்கச் சேனைகளையெல்லாம்; கடிதின்
கொணருதிர் என்றான்- விரைவில் அழைத்துக்கொண்டு
வாருங்கள் என்று கட்டளையிட்டான்.
——————
‘ஏழ் பெருங் கடலும், சூழ்ந்த ஏழ் பெருந் தீவும், எண் இல்
பாழி அம் பொருப்பும், கீழ்பால் அடுத்த பாதாளத்துள்ளும்,
ஆழி அம் கிரியின் மேலும், அரக்கர் ஆனவரை எல்லாம்,
தாழ்வு இலிர் கொணர்திர்’ என்றான்; அவர் அது தலைமேல் கொண்டார். 8-
ஏழ்பெருங்கடலும் சூழ்ந்த ஏழ் பெருந்தீவும் – ஏழு
பெருங்கடல்களால் சூழப்பட்ட ஏழு பெரிய தீவுகளிலும்; எண்
இல் பாழி அம் பொருப்பும் – எண்ணி அளவிடமுடியாத அழகிய
வலிய மலைகளிலும்; கீழ் பால் அடுத்த பாதாளத்துள்ளும் –
கீழே உள்ள பாதாள உலகத்திலும்; ஆழியம் கிரியின் மேலும்
– சக்கரவாளம் என்ற மலையின் மீதும் உள்ள; அரக்கர்ஆனவரை
எல்லாம் – எல்லா அரக்கர்களையும்; தாழ்வு இலிர் கொணர்திர்
என்றான்- காலம் தாழ்த்தாது அழைத்து வாருங்கள் என்று
இராவணன் கூறினான்; அவர் அது தலைமேல் கொண்டார்-
அத்தூதுவர், தலைவன் கட்டளையைத் தலை மேல் கொண்டனர்.
—————
இராவணன் வருந்தி இருத்தல்
மூவகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார்,
பாவகம் இன்னது என்று தெரிகிலர், பதைத்து விம்ம,
தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக் கை யானை
சேவகம் அமைந்தது என்ன, செறி மலர் அமளி சேர்ந்தான். 9-
முறையில் நின்று ஏவல் செய்வார் – தங்களுக்கு உரிய
முறைப்படி இட்ட ஏவலைச் செய்பவர்களாகிய; மூவகை
உலகுளோரும்- விண், மண், பாதலம் என்ற மூன்று உலகத்தில்
உள்ளவர்களும்; பாவகம் இன்னது என்று தெரிகிலர் –
இராவணனுடைய மனக்கருத்து இதுவென அறியாதவர்களாகிப்;
பதைத்து விம்ம – மனம் வருந்தி அழுது விம்ம; தூ
அகலாதவைவாய் எஃகு உறத்- தசை நீங்காத கூரிய வேல்
உடலில் ஆழமாகப் பாய்தலால்; தொளைக்கையானை – உட்புழை
உடைய கையினையுடைய யானை; சேவகம் அமைந்தது என்ன
– யானைக் கூடத்திற்குச் சென்று சேர்ந்ததுபோல; செறிமலர் அமளி
சேர்ந்தான்- மலர் நிறைந்த மலர்ப் படுக்கையில் சேர்ந்தான்.
———
பண் நிறை பவளச் செவ் வாய், பைந் தொடி, சீதை என்னும்
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்,
கண் இறை கோடல் செய்யான், கையறு கவலை சுற்ற,
உள் நிறை மானம் தன்னை உமிழ்ந்து, எரி உயிர்ப்பதானான். 10-
பண்நிறை பவளச் செவ்வாய் – இனிய இசை போன்று
பேசும் பவளம் போன்ற சிவந்த வாயினையும்; பைந்தொடி
சீதை – பைம்பொன்னால் ஆன வளையல்களையும் அணிந்த
சீதை; என்னும் பெண் இறை கொண்ட நெஞ்சில் –
என்கின்ற பெண் தங்கி இடம் முழுதும் கொண்ட நெஞ்சத்தில்;
நாண் நிறை கொண்ட பின்னர் – முதல் நாள் ஏற்பட்ட
தோல்வி காரணமாகத் தோன்றிய நாணம் முழுதும் நிரம்பிய
பின்னர்; கண் இறை கோடல் செய்யான் – சிறிதும் கண்
துயிலாதவனாய்; கையறு கவலை சுற்ற – செயலறவும்
கவலையும் சூழ; உள்நிறை மானம் தன்னை – தன் நெஞ்சில்
சீதையிருந்த இடத்தில் நிரம்பிய மான உணர்வை; உமிழ்ந்து
எரி உயிர்ப்பதானான் – வெளிப்படுத்த விரும்புபவன் போல்
நெருப்பென பெருமூச்சு விட்டான்.
————–
வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்;-நெடு வயிரத் தோளான்-
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்;
வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல், மிதிலை வந்த,
சானகி நகுவள்-என்றே நாணத்தால் சாம்புகின்றான். 11-
நெடுவயிரத் தோளான் – வயிரம் போல் உறுதி உள்ள
நீண்ட திரள் தோள் இராவணன்; வான் நகும் – தான் வென்று
நகைத்த வானவர் சிரிப்பர்; மண்ணும் எல்லாம் நகும் –
மண்ணுலக மாந்தரும் பிறரும் சிரிப்பர்; நான்நகு பகைஞர்
எல்லாம் நகுவர் என்று – தான் வென்று சிரித்தற்குரிய
பகைவர்களாகிய சிறுதொழில் மனிதர்கள் சிரிப்பர் என்று;
அதற்கு நாணான்- எண்ணி அதற்கு நாணப்படாதவனாய்;
வேல் நகு நெடுங்கண்- வேலை வென்றிட்ட நீண்ட
கண்களையும்; செவ்வாய்- சிவந்த வாயினையும்; மெல் இயல்
– மெத்தென்ற சாயலினையும் உடைய; மிதிலை வந்த சானகி
நகுவள்- மிதிலையில் தோன்றிய சனகன் மகளாகிய சானகி
எள்ளிச் சிரிப்பாள்; என்றே நாணத்தால் சாம்புகின்றான் –
என்று எண்ணி எண்ணியே நாணத்தால் வாடினான்.
—————
இராவணனிடம் மாலியவான் வினவுதல்
ஆங்கு, அவன்தன் மூதாதை ஆகிய, மூப்பின் யாக்கை
வாங்கிய வரி வில் அன்ன, மாலியவான் என்று ஓதும்
பூங் கழல் அரக்கன் வந்து, பொலங் கழல் இலங்கை வேந்தைத்
தாங்கிய அமளிமாட்டு, ஓர் தவிசுடைப் பீடம் சார்ந்தான். 12-
ஆங்கு- அப்போது; வாங்கிய வரிவில் அன்ன – வளைந்த
கட்டமைந்த வில்லைப் போன்ற; மூப்பின் யாக்கை –
முதுமையால் வளைந்த உடம்பினையுடைய; மாலியவான் என்று
ஓதும்- மாலியவான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற; அவன்
தன் மூதாதை ஆகிய- இராவணனுக்குப் பாட்டன் முறை உடைய;
பூங்கழல் அரக்கன் வந்து – அழகிய வீரக்கழலணிந்த அரக்கன்
வந்து; பொலங்கழல் இலங்கை வேந்தை – பொன்னால் ஆகிய
வீரக்கழலணிந்த இலங்கை வேந்தனாம் இராவணனைத்;
தாங்கிய அமளி மாட்டு- தாங்கிக் கொண்டுள்ள படுக்கையின்
பக்கத்தில் இருந்த; ஓர் தவிசுடைப்பீடம் சேர்ந்தான்-
மெத்தை இட்ட அமரும் ஆசனத்தில் அமர்ந்தான்.
————-
இருந்தவன், இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி,
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா,
‘வருந்தினை, மனமும்; தோளும் வாடினை;-நாளும் வாடாப்
பெருந் தவம் உடைய ஐயா!-என், உற்ற பெற்றி?’ என்றான். 13-
இருந்தவன் – தவிசுடைப் பீடத்தில் இருந்தவன் ஆகிய
மாலியவான்; இலங்கை வேந்தன்- இராவணனுடைய; இயற்கையை
எய்த நோக்கி – நிலைமையை உற்றுப் பார்த்து; பொருந்த
வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா- அண்மையில்
நெருங்கி வந்த போரில் இவன் தோற்றுவிட்டான் போலும்
என்று மனத்தில் எண்ணி; நாளும் வாடாப் பெருந்தவம் உடைய
ஐயா – எந்நாளும் கெடாத பெருந்தவ ஆற்றல் பெற்ற ஐயனே!;
மனமும் வருந்தினை – மனம் வருத்தமுற்றுள்ளாய்; தோளும்
வாடினை – யார்க்கும் தோலாத தோள்களும் வாடியுள்ளன; என்
உற்ற பெற்றி என்றான்- உற்ற செயல் யாது என வாய்விட்டு
வினவினான்.
—————-
இராவணன் நிகழ்ந்தவை கூறல்
கவை உறு நெஞ்சன், காந்திக் கனல்கின்ற கண்ணன், பத்துச்
சிவையின் வாய் என்னச் செந் தீ உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன்,
நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
சுவை அறப் புலர்ந்த நாவான், இனையன சொல்லலுற்றான்: 14-
கவை உறு நெஞ்சன் – துன்பம் மிகப் பொருந்திய
மனத்தையும்; காந்திக் கனல்கின்ற கண்ணன்- நெருப்புப்
போல் எரிகின்ற கண்ணினையும்; பத்துச் சிவையின் வாய்
என்ன – பத்துத் துருத்திகளின் வாய் போன்று; செந்தீ
உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன் – செந்தீயுடன் பெருமூச்சுக்
காற்று வெளிப்படும் விடைத்த பத்து மூக்குகளையும்; நவை அறு
பாகை அன்றி- குற்றமில்லாத வெல்லப்பாகையன்றி; அமுதினை
நக்கினாலும்- அமுதத்தையே நக்கி உண்டாலும்; சுவை அறப்
புலர்ந்த நாவான் – சுவை முழுதும் உறைக்காதவாறு உலர்ந்த
நாவினையும் உடையவனான இராவணன்; இனையன
சொல்லலுற்றான்- (கீழ்வரும்) இத்தகைய சொற்களைக் கூறத்
தொடங்கினான்.
——————-
‘சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக, அமரர் வந்து உற்றார் அன்றே;
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்
பங்கம் வந்துற்றது அன்றி, பழியும் வந்துற்றது’ அன்றே? 15-
சங்கம் வந்து உற்ற – தொகுதியாக வானரச் சேனையோடு
வந்து சேர்ந்த; கொற்றத் தாபதர்- வெற்றியுடைய தவ
வேடத்தையுடைய இராம இலக்குவர்; தம்மோடு எம்மோடு –
தமக்கும் எமக்கும்; அங்கம் வந்து உற்றது ஆக- போர் வந்து
மூண்டபோது; அமரர் வந்து உற்றார் அன்றே- அப்போரினைக்
காணத் தேவர்கள் வந்தார்கள் அல்லவா; கங்கம் வந்து உற்ற
செய்ய களத்து- கழுகுகள் பறந்து வந்து நெருங்கிய குருதியால்
சிவந்த அப்போர்க்களத்தில்; நம் குலத்துக்கு ஒவ்வாப் பங்கம்
வந்து உற்றது அன்றி – நம் அரக்கர் குலத்துக்குப் பொருந்தாத
தோல்வி வந்து பொருந்தியது அல்லாமல்;பழியும் வந்து உற்றது
– தீராத பழியும் வந்து பொருந்தி விட்டது என்று இராவணன்
கூறினான்.
————
‘முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக,
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும்,
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின்,
இளையவன் தனக்கும் ஆற்றாது, என் பெருஞ் சேனை-நம்ப! 16-
நம்ப- குல முதல்வ; முளை அமை திங்கள் சூடும் முக்கணான்
– பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய மூன்று கண்களையுடைய
சிவபெருமானை; முதல்வர் ஆக – முதலாகக் கொண்டு; கிளை
அமை புவனம் மூன்றும்- மேலும் மேலும் வளருந்தன்மை கொண்ட
மூன்று உலகத்திலுள்ள மக்களும்; வந்து உடன் கிடைத்த வேனும்
– ஒரு சேர வந்து பக்கத் துணையாய் நின்றாலும்; என்
பெருஞ்சேனை – என்னுடைய பெரிய படை; வளை அமை
வரிவில் வாளி – வளைதல் பொருந்திய கட்டமைந்த வில்லிலிருந்து
அம்புகளை; மெய் உற வழங்கும் ஆயின்- உடலில் உறப்
பொருந்துமாறு வெளிப்படுத்தினால்; இளையவன் தனக்கும்
ஆற்றாது- இளையவனாகிய இலக்குவனின் ஆற்றலுக்கு முன் நிற்க
மாட்டாது.
—————–
‘எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்சப்
பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை தெரிந்தது இல்லை. 17-
எறித்த போர் அரக்கர் ஆவி – தன் மேல் படைக்
கலங்களை எறிந்த போரில் வல்ல அரக்கரது உயிரினை; எண்
இலா வெள்ளம் எஞ்சப் பறித்த போது – எண்ணிக்கையில்
அடங்காத வெள்ளத்தவரில் ஒருவரும் எஞ்சி நிற்காமல் கவர்ந்த
போதும்; என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப்
பொறித்த போது- எனக்கு இப்படிப்பட்ட அவமானம் முதுகில்
தங்கும்படி அம்புகளைப் பதித்த போது; அன்னான் – அந்த
இராமனிடம்; அந்தக் கூனி கூன் போக உண்டை தெறித்த
போது- சிறு வயதில் கூனியின் கூன் போக வேண்டும் என்ற
நல்லெண்ணத்தோடு மண்ணுருண்டைகளை அடித்தபோது;
ஒத்ததன்றி – இருந்த விளையாட்டு மனநிலையை ஒத்த
மனநிலை அன்றி; சினம் உண்மை தெரிந்தது இல்லை –
சினம் இருத்த நிலை தெரியவில்லை.
—————–
‘மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை
நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்று-இரண்டு எனினும், நேரே
குலை உறக் குளித்த வாளி, குதிரையைக் களிற்றை ஆளைத்
தலை உறப் பட்டது அல்லால், உடல்களில் தங்கிற்று உண்டோ ? 18-
மலை உறப் பெரியர் ஆய – மலையை மாறுபட்டுப் பெரிய
உடலினை உடைய; வாள் எயிற்று அரக்கர் தானை –
கூர்மையான பற்களை உடைய அரக்கரது சேனை; நிலை உறச்
செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும்- இராமனை
நிலையாக நெருங்கி நின்றவை நூற்று இரண்டு வெள்ளம் எனினும்;
நேரே குலை உறக்குளித்த வாளி – அவனால் நேராகக் குறி
தவறாமல் செலுத்தப்பட்ட அம்புகளின் தொகுதி; குதிரையைக்
களிற்றை ஆளை – குதிரைப் படையினையும்,
யானைப்படையினையும், காலாட்படையினையும்; தலை உறப்பட்டது அல்லால் –
தலைகீழ் உறச் செய்ததன்றி; உடல்களில் தங்கிற்று
உண்டோ- எந்த உடலிலும் தடைப்பட்டு நின்றதுண்டோ,
இல்லை.
—————-
‘போய பின், அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்,
ஓயும் என்று உரைக்கலாமோ, ஊழி சென்றாலும்? ஊழித்
தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்; சொல்லும்,
வாயையும் தீய்க்கும்; முன்னின், மனத்தையும் தீய்க்கும் மன்னோ. 19-
அவன் கை வாளி போய பின் – அந்த இராமன்
கையிலுள்ள வில்லிலிருந்து அம்பு வெளிப்படத் தொடங்கினால்
அது; உலகு எலாம் புகுவது அல்லால் – உலகமெல்லாம்
புகுந்து எய்த இலக்கைத் தேடிச் செல்வதல்லாமல்; ஓயும்
என்று உரைக்கலாமோ – ஓய்ந்து விடும் என்று சொல்லலாமா?
சொல்ல இயலாது; ஊழி சென்றாலும் – ஊழிக்காலம் ஆனாலும்;
ஊழித் தீயையும் தீய்க்கும் – அவ்வூழிக்காலத்தில் தோன்றும்
ஊழித்தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும்-
அவ்வம்பு செல்லுகின்ற திசைகளையெல்லாம் தீய்க்கும்;
சொல்லும் வாயையும் தீய்க்கும்- மாறுபடப் பேசுவோர்
வாயையும் தீய்க்கும்; முன்னின் மனத்தையும் தீய்க்கும்-
மாறுபட எண்ணுவோர் மனத்தையும் தீய்க்கும்.
————-
‘மேருவைப் பிளக்கும் என்றால், விண் கடந்து ஏகும் என்றால்,
பாரினை உருவும் என்றால், கடல்களைப் பருகும் என்றால்,
ஆருமே அவற்றின் ஆற்றல்; ஆற்றுமேல், அனந்தகோடி,
மேருவும், விண்ணும், மண்ணும், கடல்களும் வேண்டும் அன்றே? 20-
மேருவைப் பிளக்கும் என்றால் – மேரு மலையைப்
பிளக்கும்படி சொன்னாலும்; விண் கடந்து ஏகும் என்றால்-
ஆகாயத்தைக் கடந்து அப்பால் ஏகுக என்று சொன்னாலும்;
பாரினை உருவும் என்றால் – நிலவுலகை ஊடுருவுக என்று
சொன்னாலும்; கடல்களைப் பருகும் என்றால் – கடல்களைப்
பருகுக என்று சொன்னாலும்; அவற்றின் ஆற்றல் ஆருமே-
அவ்வம்புக்கு ஆற்றல் நிரம்பி இருக்கும்; ஆற்றுமேல் –
அவ்வம்பின் விரைவைத் தாங்குவதற்கு; அனந்த கோடி
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும்
அன்றே- கோடிக்கணக்கான மேரு மலையும் விண்ணும்
மண்ணும் கடல்களும் வேண்டும்.
—————–
‘வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும்
தெரிகிலர், அமரரேயும்; ஆர் அவன் செய்கை தேர்வார்?
“பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக” என்று
கருதவே, உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே. 21-
வரிசிலை நாணில் கோத்து – இராமன் கட்டமைந்த
வில்லில் நாணைப் பூட்டி; வாங்குதல் விடுதல் ஒன்றும் –
வளைத்தலையும் அம்பை விடுதலையும் ஆகிய ஒன்றையும்;
அமரரேயும் தெரிகிலர்- இமையா நாட்டத்துத் தேவர்களும் தெரிந்து கொள்ள
முடியாதென்றால்; ஆர் அவன் செய்கை தேர்வார் –
அவனுடைய அம்பு விடுந்திறனாகிய செய்கையை ஆய்ந்து
அறியக் கூடியவர் யார் உளர்; பொருசினத்து அரக்கர்
ஆவி – போரினைச் சினந்து செய்யும் அரக்கர்களுடைய
உயிரை; போகிய போக என்று கருதவே –
போக்குவதற்காகச் செய்க என்று சங்கற்பித்த அளவிலே;
உலகம் எங்கும் சரங்களாய்க் காட்டும் அன்றே-
உலகம் முழுவதும் அம்பு மயமாய் ஆகிவிடும்.
—————–
‘நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல் என, செய்யுள் கொண்ட தொடை என, தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பே காகுத்தன் பகழி மாதோ. 22-
காகுத்தன் பகழி- இராமனுடைய அம்புகள்; நல் இயல்
கவிஞர் – கருவில் திருவுடைக் கவிஞர்களின்; நாவில்
பொருள் குறித்து அமர்ந்த- நாவில் பொருளுக்குத் தக
வெளிப்பட்ட; நாமச் சொல் என – சிறப்புடைய சொற்கள்
போலவும்; செய்யுள் கொண்ட தொடை என- செய்யுளில்
அமைந்துள்ள தொடை போலவும்; தொடையை நீக்கி –
தொடையைத் தாண்டி; எல்லையில் சென்றும் தீரா இசை
என- அளவிட்டுச் சொல்ல முடியாத நீங்காத இசை போலவும்;
பழுதிலாத பல் அலங்காரப் பண்பே – குற்றமற்ற
பலவகைப்பட்ட அலங்காரப் பண்பு கொண்டவை ஆகும்.
————–
‘இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்? 23-
இந்திரன் குலிச வேலும் – இந்திரனுடைய வச்சிராயுதமும்;
ஈசன் கை இலை மூன்று என்னும் மந்திர அயிலும் –
சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று இலை வடிவத்தைக் கொண்ட
மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும்; மாயோன் வளை
எஃகின் வரவும் கண்டேன் – திருமாலின் வளைந்த சக்கரப்
படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அந்தரம்
நீளிது அம்மா- அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும்
வேற்றுமை மிகுதி;யான் தாபதன் அம்புக்கு ஆற்றா நொந்தனன்
– இந்திரன் படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை
எஃகின் வரவு ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான்
தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது
நொந்தனன்; அலாதார் யார் அவை நோற்ககிற்பார் –
யானல்லாத மற்றையோர் யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத்
தாங்க வல்லார்.
————–
‘பேய் இருங் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும், இந்திரன் இரண்டு தோளும்,
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும், அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா. 24-
பேய் இருங்கணங்களோடு – பெரிய கரிய பேய்க்
கூட்டத்தோடு; சுடுகளத்து உறையும் – சுடுகாட்டிலே வாழ்கின்ற;
பெற்றி ஏயவன் – தன்மை பொருந்தியவனான இராமபிரானின்;
தோள்கள் எட்டும்- எட்டுத் தோள்களும்; இந்திரன் இரண்டு
தோளும்- இந்திரனுடைய இரண்டு தோள்களும்; மா இரு ஞால
முற்றும்- மிகப் பெரிய உலகம் முழுவதையும்; வயிற்றிடை
வைத்த மாயன்- தன் திருவயிற்றடக்கிய திருமாலின்; ஆயிரம்
தோளும் – ஆயிரந்தோள்களும்; அன்னான் விரல் ஒன்றின்
ஆற்றல் ஆற்றா – அந்த இராமனுடைய ஒரு விரலின்
ஆற்றலுக்குத் தாங்க மாட்டாது.
—————
‘சீர்த்த வீரியராய் உள்ளார், செங் கண் மால் எனினும், யான் அக்
கார்த்தவீரியனை நேர்வார் உளர் எனக் கருதல் ஆற்றேன்;
பார்த்த போது, அவனும், மற்று அத் தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார்? 25-
சீர்த்த வீரியராய் உள்ளார் – மிகு புகழ் பொருந்திய
வீரர்கள் எனப்படுபவர்களில்; செங்கண் மால் எனினும் –
சிவந்த கண்களையுடைய திருமாலே என்றாலும்; அக்கார்த்த
வீரியனை நேர்வார் உளர் என – அவர்கள் அந்தக் கார்த்த
வீரியனுடைய ஆற்றலுக்கு ஒப்பாக உளர் என; யான் கருதல்
ஆற்றேன் – நான் கருதுதலைச் செய்யேன்; பார்த்தபோது-
எண்ணிப் பார்க்கும் இடத்து; அவனும் – அக்கார்த்த வீரியனும்;
அத்தாபதன் தம்பி- அந்தத் தவக்கோலத்தையுடைய இராமனின்
தம்பியாகிய இலக்குவனது; பாதத்து ஆர்த்தது ஓர் துகளுக்கு
– பாதத்திலே ஒட்டிக்கொண்டுள்ள ஒரு தூசிக்கு; ஒவ்வான்-
ஒப்பாக மாட்டான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – (என்றால்)
அந்த இராமனுக்கு முன் எதிர் நிற்க வல்லார் யார் எவருமில்லை
என்றவாறு.
—————-
‘முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ் சிலையும், வீரன்
அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக் கொளலும் ஆகா;
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை; வேதம்
தப்பின போதும், அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா. 26-
ஐய- ஐயனே; முப்புரம் ஒருங்கச் சுட்ட- முப்புரங்களையும்
ஒருங்கே அழித்த; மூரி வெஞ்சிலையும்- வலிமை பொருந்திய
சிவபிரானது வில்; வீரன்- இராமனது; அற்புத வில்லுக்கு-
கோதண்டமாகிய அற்புத ஆற்றல் நிறைந்த வில்லுக்கு; அம்பு
எனக் கொளலும் ஆகா – அம்பு என்று கொள்ளுவதற்கும்
அதற்கு ஒப்பு என்று சொல்ல வேறு ஒரு பொருளும் இல்லை;
வேதம் தப்பின போதும்- வேதம் ஓதுவதால் வரும் பயன்கள்
ஓதியவரைச் சென்றடையாமல் தப்பினாலும்; அன்னான் – அந்த
இராமனது; தனு உமிழ் சரங்கள் தப்பா – வில்லிலிருந்து
வெளிப்படுகின்ற அம்புகள் இலக்குத் தவற மாட்டா.
—————
‘உற்பத்தி அயனே ஒக்கும்; ஓடும்போது அரியே ஒக்கும்;
கற்பத்தின் அரனே ஒக்கும், பகைஞரைக் கலந்த காலை;
சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ? என்னைத் தீராத்
தற்பத்தைத் துடைத்த என்றால்; பிறிது ஒரு சான்றும் உண்டோ ? 27-
உற்பத்தி அயனே ஒக்கும் – இராமனது அம்புகள்
தோன்றும் போது பிரம தேவனை ஒக்கும்; ஓடும் போது அரியே
ஒக்கும்- பகைவர் மேல் செல்லும் போது ஆயிரமுகம் உடைய
திருமாலை ஒக்கும்; பகைஞரைக் கலந்த காலை- பகைவரை
அழிக்கச் சேரும்போது; கற்பத்தின் அரனே ஒக்கும் – யுக
முடிவுக் காலத்துச் சங்கார மூர்த்தியை ஒக்கும்; சிற்பத்தின்
நம்மால் பேசச் சிறியவோ – அவ்வம்புகளின் தொழில் திறமை
நம் போன்றோரால் பேசப்படும் சிறுமையுடையதன்று; என்னை –
என் இடமிருந்து; தீராத் தற்பத்தைத் துடைத்த- என்றும் நீங்காத செருக்கையே
முழுதும் நீக்கியது என்றால்; பிறிது ஒரு சான்றும் உண்டோ-
அதன் ஆற்றற்கு வேறு கரி வேண்டுமோ? வேண்டா என்றவாறு.
————-
‘குடக்கதோ? குணக்கதேயோ? கோணத்தின் பாலதேயோ?
தடத்த பேர் உலகத்தேயோ? விசும்பதோ? எங்கும்தானோ?
வடக்கதோ? தெற்கதோ? என்று உணர்ந்திலன்;-மனிதன் வல்வில்-
இடத்ததோ? வலத்ததோ? என்று உணர்ந்திலேன், யானும் இன்னும். 28-
மனிதன் வல்வில் – மனிதனாகிய இராமன்
கைக்கொண்டுள்ள வலிமையான வில்; குடக்கதோ- மேற்குப்
பகுதியில் உள்ளதா?; குணக்கதோ – மேற்குப் பகுதியில்
உள்ளதா?; கோணத்தின் பாலதேயோ- திசை மூலைப்
பகுதியில் உள்ளதா?; வடக்கதோ – வடக்குப் பகுதியில்
உள்ளதா? தெற்கதோ – தெற்குப் பகுதியில் உள்ளதா? தடத்த
பேர் உலகத்தேயோ- அகன்ற பெரிய உலகத்திலுள்ளதா?
விசும்பதோ – ஆகாயத்தில் உள்ளதா? எங்கும் தானோ-
எல்லா இடங்களிலும் உள்ளதா? என்று உணர்ந்திலன் –
என்று அவனுடன் போரிட்ட யான் உணர்ந்தேன் இல்லை;
யானும் இன்னும்- இன்னும் கூட யான் அது; இடத்ததோ-
இடப்புறத்தில் உள்ளதா? வலத்ததோ- வலப்புறத்தில் உள்ளதா
என்று உணர்ந்திலேன் – என்று உணர முடியாதவனாய் உள்ளேன்.
————–
‘ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே?
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே, அமரின் ஆற்றல்!-
காற்றையே மேற்கொண்டானோ? கனலையே கடாவினானோ?
கூற்றையே ஊர்கின்றானோ?-குரங்கின்மேல் கொண்டு நின்றான். 29-
குரங்கின் மேல் கொண்டு நின்றான் – அனுமனை
வாகனமாகக் கொண்டு போரில் எதிர் நின்ற இராமன்; காற்றையே
மேற்கொண்டானோ- காற்றை வாகனமாகக் கொண்டுள்ளானோ?;
கனலையே கடாவினானோ – தீயை வாகனமாகக்
கொண்டுள்ளானோ; கூற்றையே ஊர்கின்றானோ – இயமனை
வாகனமாகக் கொண்டுள்ளானோ?; ஏற்றம் ஒன்று இல்லை
என்பது – (எனவே) அவனது வாகனத்துக்குப் பெருமை ஒன்றும்
இல்லை என்பது; ஏழைமைப் பாலது அன்றே – அறியாமையின்
பாற்பட்டது அல்லவா? அமரின் ஆற்றல் – வாகனமாகிய
அனுமன் போரில் செய்யும் செயலை; ஆற்றல் சால் கலுழனே
தான் ஆற்றுமே – வலிமை பொருந்திய திருமாலின் வாகனமாகிய
கருடன்தான் செய்யுமோ என்றவாறு.
—————-
‘போய் இனித் தெரிவது என்னே? பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மேனி நோக்கி,
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்,
நாய் எனத் தகுதும் அன்றே, காமனும் நாமும் எல்லாம். 30-
பொறையினால் உலகம் போலும் – அகழ்வாரைத் தாங்கும்
நிலம் போல் பொறுமையுடைய; வேய் எனத் தகைய தோளி-
மூங்கில் எனத் தகுந்த தோளினையுடைய சீதை; இராகவன் மேனி
நோக்கி – இராமனின் திருமேனி அழகையும்; தீ எனக் கொடிய
வீரச் சேவகச் செய்கை கண்டால் – தீயினை ஒத்த பெரும்
போர் வீரத்தையும் முன்பே கண்டிருத்தலால்; காமனும் நாமும்
– மன்மதனும் யாமும்; எல்லாம் – மற்றையோரும்; நாய் எனத்
தகுதும் அன்றே- அவளுக்கு நாய் என்று சொல்வதற்குத்
தகுவோம் அல்லவா?; போய் இனித் தெரிவது என்னே –
இனிமேல் போய் அவளது மனத்தைத் தெரிய என்ன உள்ளது
என்றவாறு.
——————–
‘வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்ற போதும், நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;-
பூசல் வண்டு உறையும் தாராய்!-இது இங்குப் புகுந்தது’ என்றான். 31-
பூசல் வண்டு உறையும் தாராய் – ஒலிக்கும் வண்டுகள்
தங்குகின்ற மாலை அணிந்த மார்பினனே; வாசவன் – இந்திரன்;
மாயன் – திருமால்; மற்றை மலருளோன்- மற்றும் உள்ள
தாமரை மலரில் உறையும் நான்முகன்; மழுவாள் அங்கை
ஈசன் – மழுப்படையைக் கையில் கொண்ட சிவன்; என்று
இனைய தன்மை – என்று இப்படிப்பட்ட தன்மை கொண்ட;
இளிவரும் இவரால் அன்றி – இகழ்ச்சிக்குரிய தன்மை
கொண்ட இவர்களன்றி; நாசம் வந்து உற்றபோதும்-
அழிவுக்காலம் வந்து நெருங்கி விட்ட போதும்; நல்லது ஓர்
பகையைப் பெற்றேன் – சிறந்தது ஓர் பகையை அடைந்தேன்;
இது இங்குப் புகுந்தது என்றான்- இதுவே இங்கு நிகழ்ந்தது
என இராவணன் மாலியவானிடம் கூறினான்.
——————-
மாலியவான் உரை
‘முன் உரைத்தேனை வாளா முனிந்தனை; முனியா உம்பி
இன் உரைப் பொருளும் கேளாய்; ஏது உண்டு எனினும், ஓராய்;
நின் உரைக்கு உரை வேறு உண்டோ ?-நெருப்பு உரைத்தாலும், நீண்ட
மின் உரைத்தாலும், ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய்! 32-
நெருப்பு உரைத்தாலும் – நெருப்பை உவமை என
உரைத்தாலும்; நீண்ட மின் உரைத்தாலும் – வானத்தில்
தோன்றும் நீண்ட மின்னலை உவமை என உரைத்தாலும்;
ஒவ்வா விளங்கு ஒளி – ஒப்பாகாது விளங்குகின்ற
ஒளியுடைய; அலங்கல் வேலோய் – வெற்றி மாலை சூடிய
வேற்படையை உடைய தலைவனே; முன் உரைத்தேனை
வாளா முனிந்தனை- முன்பு இராமனின் ஆற்றலைக் கூறிய
என்னை வீணே கோபித்தாய்; முனியா உம்பி-
சினமென்னும் குணம் இல்லாத உன்னை ஒரு பொழுதும்
வெறுக்காத வீடணன் கூறிய; இன் உரைப் பொருளும்
கேளாய்- இனிய சொற்களில் பொதிந்துள்ள உட்பொருளையும்
காதால் கேட்காமல் விட்டாய்; ஏது உண்டு எனினும் ஓராய்
– நீ தோல்வியடையப் போவதற்குக் காரணம் உண்டு என்றாலும்
அதை ஆராய்ந்து அறியாது விட்டு விட்டாய்; நின் உரைக்கு
உரை வேறு உண்டோ- எனினும் உன் சொல்லுக்கு மறுசொல்
உண்டா என்கிறான் மாலியவான்.
————
‘உளைவன எனினும், மெய்ம்மை உற்றவர், முற்றும் ஓர்ந்தார்,
விளைவன சொன்னபோதும், கொள்கிலை; விடுதி கண்டாய்;
கிளைதரு சுற்றம், வெற்றி, கேண்மை, நம் கல்வி, செல்வம்,
களைவு அருந் தானையோடும் கழிவது காண்டி’ என்றான். 33-
உளைவன எனினும்- மனத்திற்கு வருத்தம் தருவன என்றாலும்;
மெய்ம்மை உற்றவர் – மெய்ம்மையான உறவினர்களும்; முற்றும்
ஓர்ந்தார் – மேல் வருவனவற்றை முழுவதும் ஆய்ந்தவர்களும்;
விளைவன சொன்ன போதும் – விளையப் போகிற செயல்களைச்
சொன்னபோதும்; கொள்கிலை – நீ அவற்றை ஏற்றுக் கொள்ளாது;
விடுதி கண்டாய் – விட்டிடுதலைச் செய்தாய் காண்; கிளை தரு
சுற்றம் – தொகுதியாக உள்ள சுற்றத்தாரும்; வெற்றி – வெற்றியும்;
கேண்மை – நட்பும்; நம் கல்வி- நமது கல்வியும்; செல்வம் –
உறுபொருளும் உல்குபொருளும் ஒன்னார்த் தெறு பொருளுமாகிய
செல்வமும்; களைவு அருந்தானையோடு- பிறரால் அழித்தற்கரிய
அரக்கர் படையும்; கழிவது காண்டி என்றான் – அழிந்து
படுவதை நீ காண்பாய்.
————
மகோதரன் உரை
ஆயவன் உரைத்தலோடும், அப் புறத்து இருந்தான், ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல, மகோதரன் கடிதின் வந்து,
தீ எழ நோக்கி, ‘என் இச் சிறுமை நீ செப்பிற்று?’ என்னா,
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான்: 34-
ஆயவன் உரைத்தலோடும் – அந்த மாலியவான் அவ்வாறு
சொன்ன உடனே; அப்புறத்து இருந்தான் – அப்புறத்திலே
இருந்தானாகிய; ஆன்ற மாயைகள் பலவும் வல்ல மகோதரன்
– மிக்க மாயைத் தொழில்கள் பலவற்றிலும் வல்லவனாகிய
மகோதரன்; கடிதின் வந்து- விரைவாக வந்து; தீ எழ நோக்கி
– தீ எழுமாறு சினந்து மாலியவானைப் பார்த்து; என் இச்சிறுமை நீ
செப்பிற்று என்னா- நீ இப்படி நம் தலைவனைப் பார்த்துச்
சிறுமையாகச் சொல்லியது என்னே என அதட்டிக் கேட்டு;
ஓய்வுறு சிந்தையானுக்கு- தோல்வியால் துவண்டுள்ள
மனத்தை உடைய இராவணனுக்கு; உறாத பேர் உறுதி
சொன்னான் – நன்மை தராத பெரிய உறுதி மொழிகளைச்
சொன்னான்.
————-
‘”நன்றி ஈது” என்று கொண்டால், நயத்தினை நய்ந்து, வேறு
வென்றியே ஆக, மற்றுத் தோற்று உயிர் விடுதல் ஆக,
ஒன்றிலே நிற்றல் போலாம், உத்தமர்க்கு உரியது; ஒல்கிப்
பின்றுமேல், அவனுக்கு அன்றோ, பழியொடு நரகம் பின்னை? 35-
நயத்தினை நயந்து- இனியதைப் பெற விரும்பி; நன்றி
ஈது என்று கொண்டால் – இது நல்லது என்று ஒரு செயலை
மேற்கொண்டால்; வேறு வென்றியே ஆக – தோல்விக்கு
வேறுபட்ட வெற்றியே விளையட்டும்; மற்று தோற்று உயிர்
விடுதல் ஆக- அல்லது தோற்று உயிர் விடும் நிலையே
விளையட்டும்; உத்தமர்க்கு உரியது- சிறப்பானவர்களுக்கு
உரிய செயல்; ஒன்றிலே நிற்றல் போலாம் – மேற்கொண்ட
அந்தச் செயல் ஒன்றில் மட்டும் ஊன்றி நிற்றலாம்; ஒல்கிப்
பின்று மேல்- மனந்தளர்ந்து பின் வாங்குமேல்; அவனுக்கு
அன்றோ- அவ்வாறு பின்வாங்குபவனுக்கலல்வா; பழியொடு
நரகம் பின்னை- பிறகு இம்மைப் பழியும் மறுமை நரகமும்
ஏற்படும்.
—————–
‘திரிபுரம் எரிய, ஆங்கு ஓர் தனிச் சரம் துரந்த செல்வன்,
ஒருவன் இப் புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கிக் கொண்டோன்,
பொருது, உனக்கு உடைந்து போனார்; மானிடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும்; மன்ன! கயிலையை வெருவல் கண்டாய்! 36-
மன்ன- மன்னனே; கயிலையை வெருவல் கண்டாய் –
கயிலை மலையை அஞ்ச அசைத்தவனே; திரிபுரம் எரிய-
முப்புரங்களும் எரியும்படி; ஆங்கு ஓர் – அங்கே ஒப்பற்ற;
தனிச்சரம் – சிறப்பான அம்பைச்; துரந்த செல்வன் –
செலுத்திய சிவபிரானும்; ஒருவன் – தான் ஒருவனே;
இப்புவனம் மூன்றும் – இந்த உலகங்கள் மூன்றையும்; ஓர்
அடி ஒடுக்கிக் கொண்டோன் – ஓரடியிலே அடக்கிக்
கொண்ட திருமாலும்; பொருது உனக்கு உடைந்து போனார்
– போர் செய்து உனக்குத் தோற்றுப் போனார்கள்; மானிடர்
பொருத போர்க்கு வெருவுதி போலும் – அப்படி இருக்க
மனிதர் புரியும் போருக்கு நீ அஞ்சுகிறாய் போலும் என்றான்.
—————–
‘”வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே”
என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ?-புகழ்க்கு மேலோய்! 37-
புகழ்க்கு மேலோய் – உரைப்பார் உரையாம் புகழ்
கடந்து நின்ற மேம்பட்டவனே; வென்றவர் தோற்பர்-
வெற்றி பெற்றவர்கள் -தோல்வியடைவர்; தோற்றோர் வெல்வர் – தோல்வி அடைந்தவர்
வெற்றி பெறுவர்; எவர்க்கும் மேலாய் நின்றவர் தாழ்வர்-
பிறருக்கு மேலாக உயர்ந்து நின்றவர் தாழ்ச்சியடைவார்கள்;
தாழ்ந்தோர் உயர்குவர் – தாழ்ந்து நின்றவர்கள் உயர்ச்சியடைவர்;
நெறியும் அஃதே- உலகத்து முறை அதுதான்; என்றனர் அறிஞர்
அன்றே- என்று உலகியல் அறிந்த அறிஞர்கள் கூறியுள்ளனர்;
ஆற்றலுக்கு எல்லை உண்டோ- வல்லமைக்கு எல்லை இது
எனக் கூற முடியுமா? புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ-
அதனால் புல்லிய தவவேடத்தை உடைய இருவர் செய்த போரை
நீ புகழ்வது என்? என்றவாறு.
—————-
‘தேவியை விடுதிஆயின், திறல் அது தீரும் அன்றே;
ஆவியை விடுதல் அன்றி, அல்லது ஒன்று ஆவது உண்டோ?
தா அரும் பெருமை அம்மா நீ இனித் தாழ்த்தது என்னே?
காவல! விடுதி, இன்று இக் கையறு கவலை; நொய்தின். 38-
தேவியை விடுதி ஆயின்- சீதையை விட்டு விடுவாய் ஆனால்;
திறல் அது தீரும் அன்றே- உன் வலிமையால் வந்து புகழ் நீங்கும்
அல்லவா? அல்லது- அவ்வாறு விடாமல் போனால்; ஆவியை
விடுதல் அன்றி- உயிரை விடுதல் அல்லது; ஒன்று ஆவது
உண்டோ- வேறு ஒன்று நடப்பது உண்டோ? தா அரும் பெருமை
அம்மா – இதுவரை அழிவில்லாத உன் பெருமையை;நீ இனித்
தாழ்த்தது என்னே- இப்போது நீயே தாழ்த்திக் கொள்வது
எதற்கு? இன்று இக்கையறு கவலை – இப்போது செயலற்றுப்
போவதற்குக் காரணமான கவலையைக்; காவல நொய்தின் விடுதி
– காவலனே விரைவாக விடுக.
—————-
‘இனி இறை தாழ்த்தி ஆயின், இலங்கையும் யாமும் எல்லாம்
கனியுடை மரங்கள் ஆக, கவிக் குலம் கடக்கும் காண்டி;
பனியுடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத்
துனி உழந்து அயர்வது என்னே? துறத்தியால் துன்பம்’ என்றான். 39-
இனி இறை தாழ்த்தி ஆயின் – இனி நொடிப்
பொழுதேனும் நீ போர் செய்யாது தாமதித்தால்; இலங்கையும்
– இலங்கை மாநகரமும்; யாமும் எல்லாம் – அரக்கர்களாகிய
நாமும் பிறவும்; கனியுடை மரங்கள் ஆக – பழங்களைக்
கொண்ட மரங்கள் போல் ஆகுமாறு; கவிக்குலம் கடக்கும்-
வானரர் கூட்டம் வென்று விடும்; காண்டி – இதனைக் காண்;
பனியுடை வேலைச் சில்நீர்- குளிர்ச்சி பொருந்திய கடலில்
உள்ள மிகுதியான நீரில் சிறிதளவு நீரைப்; பருகினன் பருதி-
சூரியன் பருகினான்; என்னத் – என்பதற்காகத்; துனி உழந்து
– மனவெறுப்புக் கொண்டு; அயர்வது என்னே- வருந்துவது
எதற்காக? துறத்தியால் துன்பம் என்றான் – துன்பத்தை
விட்டு விடுவாய் என்றான் மகோதரன்.
—————
‘முன், உனக்கு, இறைவர் ஆன மூவரும் தோற்றார்; தேவர்
பின், உனக்கு ஏவல் செய்ய, உலகு ஒரு மூன்றும் பெற்றாய்; புல்
நுனைப் பனி நீர் அன்ன மனிசரைப் பொருள் என்று உன்னி, என்,
உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது?-எந்தாய்! 40-
எந்தாய் – என் தந்தையே!; முன் உனக்கு- முன்பு உனக்கு;
இறைவர் ஆன மூவரும் தோற்றார் – தலைமையுடைய அரி
அரன் அயன் ஆகிய மூவரும் தோற்றனர்; தேவர்பின் –
அதற்குப் பிறகு தேவர்கள் தோற்றார்கள்; உலகு ஒரு மூன்றும்-
உலகு மூன்றையும்; உனக்கு ஏவல் செய்யப் பெற்றாய்-
உனக்கு ஏவல் செய்யும்படி வென்று பெற்றுள்ளாய்; அப்படிப்பட்ட
வரமும் வலிமையும் உடைய நீ; புல் நுனைப் பனிநீர் அன்ன-
புல்லின் நுனியில் ஒட்டியுள்ள பனிநீரைப் போன்று உள்ள;
மனிசரைப் பொருள் என்று உன்னி- மனிதர்களை ஒரு
பொருளாக மதித்து எண்ணி; என் உனக்கு இளைய
கும்பகருணனை இகழ்ந்தது- உனக்கு இளைய கும்பகருணனின்
ஆற்றலை மதியாது இகழ்ந்தது என்ன காரணமோ? என்றவாறு.
————-
‘ஆங்கு அவன் தன்னைக் கூவி, ஏவுதிஎன்னின், ஐய!
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே;
தாங்குவர் செரு முன் என்னின், தாபதர் உயிரைத் தானே
வாங்கும்’ என்று இனைய சொன்னான்; அவன் அது மனத்துக் கொண்டான். 41-
ஐய – தலைவனே; ஆங்கு அவன் தன்னைக் கூவி-
அந்தக் கும்பகருணனை அழைத்து; ஏவுதி என்னின் – போர்
செய்யக் கட்டளையிடுவாயாயின்; ஓங்கலே போல்வான்- மலை
போன்ற அவனது; மேனி காணவே ஒளிப்பர் அன்றே-
உடலின் தன்மையைக் காணவே அஞ்சி ஒளிந்து
கொள்வார்களன்றோ? தாங்குவர் செரு முன் என்னில்-
அவ்வாறு அஞ்சி ஒளிந்து கொள்ளாமல் எதிர் வந்து போர்
செய்வர் எனில்; தாபதர் உயிரைத்- அந்தத் தவவேடம்
கொண்ட இராம இலக்குவரது உயிரைத்; தானே வாங்கும்
என்று – கும்பகருணனே போக்குவான் என்று; இனைய
சொன்னன் – இத்தன்மையான வார்த்தைகளை மகோதரன்
சொன்னான்; அவன் அது – அந்த இராவணன் அந்த
சொல்லை; மனத்துக் கொண்டான் – மனத்திலே ஏற்றுக்
கொண்டான்.
————–
இராவணன் மகோதரனைப் புகழ்தல்
‘பெறுதியே, எவையும் சொல்லி;-பேர் அறிவாள்!-சீரிற்று
அறிதியே; என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ?
உறுதியே சொன்னாய்’ என்னா, உள்ளமும் வேறுபட்டான்;-
இறுதியே இயைவது ஆனால், இடை, ஒன்றால் தடை உண்டாமோ? 42-
பேர் அறிவாள – பேர் அறிவு உடையவனே; பெறுதியே
யெவையும் சொல்லி – எல்லாவற்றையும் சொல்லால் பெறுவாய்;
சீரிற்று அறிதியே- நீ சிறந்த செயலை அறிந்துள்ளாய்; என்பால்
வைத்த – என்னிடத்தில் கொண்ட; அன்பினுக்கு அவதி
உண்டோ – அன்பினுக்கு ஓர் எல்லை உண்டோ; உறுதியே
சொன்னாய் – எனக்கு உறுதி தரும் செயலையே சொன்னாய்;
என்னா- என்று புகழ்ந்து; உள்ளமும் வேறுபட்டான்- மனம்
மாறுபட்டவன் ஆனான் இராவணன்; இறுதியே இயைவது
ஆனால் – ஒருவனுக்கு இறுதி வந்து நேரும்போது; இடை
யொன்றால் தடை உண்டாமோ- இடையில் வேறு ஒன்றினால்
தடை உண்டாகுமோ? (உண்டாகாது என்றவாறு).
—————
வீரர்கள் கும்பகருணனைத் துயில் எழுப்புதல்
‘நன்று இது கருமம்’ என்னா, ‘நம்பியை நணுக ஓடிச்
சென்று இவண் தருதிர்’ என்றான்; என்றலும், நால்வர் சென்றார்;
தென் திசைக் கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன,
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மாக் கோயில் புக்கார். 43-
நன்று இது கருமம் என்னா- கும்பகருணனைப் போருக்கு
அனுப்பும் இச்செயல் செயத் தக்கதே என்று சொல்லி; நம்பியை
நணுக ஓடிச் சென்று இவண் திருதிர் என்றான் – (தூதரை
அழைத்த இராவணன் அவர்களிடம்) நீங்கள் ஓடிப்போய் ஆடவர்
திலகனாய கும்பகருணனை இங்கே அழைத்து வாருங்கள் என்றான்;
என்றலும் – என்று இராவணன் கூறிய அளவிலே; தென்திசைக்
கிழவன் தூதர் – தெற்குத்திசைத் தலைவனாகிய இயமனது தூதர்;
தேடினர் திரிவர் என்ன- தேடித்திரிவது போல; நால்வர்
சென்றார் – நான்கு பேர் சென்றார்கள்; குன்றினும் உயர்ந்த
தோளான்- அவர்கள் குன்றைக் காட்டிலும் உயர்ந்த தோள்களை
உடைய கும்பகருணனது; கொற்ற மாக்கோயில் புக்கார் –
வெற்றி பொருந்திய பெரிய அரண்மனைக்குள் சென்று புகுந்தார்கள்.
————–
கிங்கரர் நால்வர் சென்று, அக் கிரி அனான் கிடந்த கோயில்
மங்குல் தோய் வாயில் சார்ந்து, ‘மன்ன! நீ உணர்தி’ என்ன,
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க, பின்னும்
வெங்கணான் துயில்கின்றானை வெகுளியால் இனைய சொன்னார்: 44-
கிங்கரர் – பணியாளர்; நல்வர் சென்று- நல்வர் போய்:
அக்கிரி அனான் – மலையை ஒத்தவனான கும்பகருணன்;
கிடந்த கோயில் – படுத்துறங்கும் அரண்மனையின்; மங்குல்
தோய் – மேகம் படிந்துள்ள; வாயில் சார்ந்து – வாயிலை
அடைந்து; மன்ன- அரசனே; நீ உணர்தி என்ன – நீ துயில்
விட்டு எழுதி என்று சொல்லி; தம் கையின் எழுவினாலே-
தங்கள் கையில் உள்ள இரும்புத் தூண்களால்; தலை செவி
தாக்க – தலையிலும் செவியிலும் தாக்க; பின்னும்- அவ்வாறு செய்த பின்னும்;
வெங்கணான் துயில்கின்றானை- கொடிய கண்களையுடைய
தூங்குகின்ற கும்பகருணனைப் பார்த்து; வெகுளியால்-
சினத்தினால்; இனைய சொன்னார் – இச்சொற்களைச்
சொல்லலானார்.
————
கிங்கரர் கூற்றும் இராவணன் செயலும்
‘உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்’! 45-
உறங்குகின்ற கும்பகன்ன- உறங்குகின்ற கும்பகர்ணனே;
உங்கள் – உங்களுடைய; மாய வாழ்வு எலாம்- பொய்யான
வாழ்வு எல்லாம்; இன்று இறங்குகின்றது- இன்றில் இருந்து
இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது; எழுந்திராய் எழுந்திராய்
– அதனைக் காண்பதற்காக எழுந்திருப்பாய் எழுந்திருப்பாய்;
கறங்கு போல- காற்றாடி போல் எல்லா இடத்திலும் திரிகின்ற;
வில்பிடித்த- வில்லைப் பிடித்த; காலதூதர்- காலனுக்குத்
தூதரானவர்; கையிலே இனிக் கிடந்து – கையில் இனிப்
படுத்து; உறங்குவாய் உறங்குவாய் – தூங்குவாயாக.
———
கும்பகருணனை துயிலெழுப்பல்
என்று சொல்ல, அன்னவன் எழுந்திராமை கண்டு போய்,
‘மன்றல் தங்கு மாலை மார்ப! வன் துயில் எழுப்பலம்’
அன்று, ‘கொள்கை கேண்மின்’ என்று மாவொடு ஆளி ஏவினான்,
‘ஒன்றன்மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர்.’ 46-
என்று சொல்ல- என்று பலவாறு சொல்லி எழுப்பவும்;
அன்னவன்- அந்தக் கும்பகருணன்; எழுந்திராமை –
உறக்கத்தில் இருந்து எழுந்திராமையைக்; கண்டு போய் –
கண்டு இராவணனிடம் திரும்பிப் போய்;மன்றல் தங்கு மாலை
மார்ப- மணம் நிறைந்த மாலை அணிந்த மார்பை உடையவனே;
வன்துயில் எழுப்பலம்- கும்பகருணனை வலிய உறக்கத்தில்
இருந்து எழுப்ப வல்லோம் அல்லோம்; என்று சொல்ல- என்று
கூற; அன்று- அப்போது (இராவணன்); கொள்கை கேண்மின்
என்று – செய்யத்தக்க செயலைக் கேண்மின் என்று கூறி;
ஒன்றன் மேல் – ஒன்றன் மேல் ஒன்றாக;மாவொடு ஆளி ஓர்
ஆயிரம்- ஓராயிரக்கணக்கான குதிரைகளையும் யாளிகளையும்;
உழக்கி விட்டு எழுப்புவீர் – மிதிக்கச் செய்து எழுப்புவீர்;
என்று ஏவினான் – என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
—————
‘அனைய தானை அன்று செல்ல, ஆண்டு நின்று பேர்ந்திலன்;
இனைய சேனை மீண்டது’ என்று இராவணற்கு இயம்பலும்
‘வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்மின்’ என்று,
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான். 47-
அனையதானை- இராவணனால் அனுப்பப்பட்ட ஆயிரம்
மாவோடாளியான அந்தச் சேனை; அன்று செல்ல- அப்போது
கும்பகருணனை மிதித்துச் செல்லவும்; ஆண்டு- உறங்கிய
இடத்தில்; நின்று- இருந்து; பேர்த்திலன் – அசையவில்லை;
இனையசேனை – இந்தச் சேனை; மீண்டது என்று- எழுப்ப
முடியாமல் திரும்பியது என்று; இராவணற்கு இயம்பலும் –
கிங்கரர் நால்வரும் இராவணனுக்குச் சொல்ல; மல்லர்
ஆயிராரை- ஆயிரம் மல்லர்களை; இனைய வினையும் வல்ல
நீங்கள் – இப்படிப்பட்ட தொழில் செய்வதில் வல்லமை
உடைய நீங்கள்; உங்கள் தானையோடு சென்மின் – உங்கள்
படையுடன் செல்லுங்கள்; என்று ஏவி நின்று இயம்பினான் –
என்று அவர்களுக்கு ஆணையிட்டு நின்று கூறினான்.
—————-
சென்றனர் பத்து நூற்றுச் சீரிய வீரர் ஓடி
‘மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற
இன்றுஇவன் முடிக்கும்’ என்னா, எண்ணினர்; எண்ணி, ஈண்ட,
குன்று என உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில் புக்கார். 48-
பத்து நூற்றுச் சீரிய வீரர் – ஆயிரம் சிறந்த வீரர்கள்;
மன்றல் அம் தொங்கலான் தன் – மணம்மிக்க அழகிய மலர்
மாலையணிந்த இராவணன் தன்; வருத்தம் மாற- மனவருத்தம்
தீரும்படி; இன்று இவன் முடிக்கும் என்னா – இன்றே
இக்கும்பகருணன் பகையை முடிப்பான் என; எண்ணினர்
எண்ணி ஈண்ட- மனத்தில் பலவாறு எண்ணியவர்களாய்
நெருங்கச் சூழ்ந்து; குன்று என உயர்ந்த தோளான் –
குன்றைவிட உயர்ந்த தோள்களையுடைய கும்பகருணனது;
கொற்றமாக்கோயில் – வெற்றி தங்கிய பெரிய
அரண்மனைக்கண்; ஓடிச் சென்றனர் புக்கார் – ஓடிச் சென்று
புகுந்தார்கள்.
———————
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும், சுவாத வாதம்
மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக,
கொண்டுறு தடக் கை பற்றி, குலமுடை வலியினாலே
கண் துயில் எழுப்ப எண்ணி, கடிது ஒரு வாயில் புக்கார். 49-
கண்துயில் எழுப்ப எண்ணி – கொற்றமாக்கோயில் புக்க
பத்து நூற்றுச் சீரியவீரர் கும்பகருணனைத் துயில் எழுப்பக்
கருதிச் சென்று; திண்திறல் வீரன்- வலிமை மிக்க
கும்பகருணனது; வாயில் திறத்தலும் – அரண்மனை வாயிலைத்
திறந்தவுடன்; சுவாதவாதம் – மூச்சுக்காற்றானது; மண்டுற –
மிகுதியாக வீசியதால் அதன் வேகத்திலிருந்து தப்பித்
துயிலெழுப்புவதற்காக; வீரர் எல்லாம் வருவது போவதாக-
அவ்வீரர்கள் தாங்கள் அலைக்கழிக்கப் படுவதைக் கண்டு;
கொண்டுறு தடக்கை பற்றி- வலிமை கொண்டுள்ள தங்கள்
கைகளை ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டு; குலமுடை
வலியினாலே – ஒன்றாகத் திரண்ட தங்கள் வலிமையால்; கடிது
ஒருவாயில் புக்கார் – விரைவாக வேறொரு வாயில் வழியாக
புகுந்தார்கள்.
————-
ஓதநீர் விரிந்ததென்ன உறங்குவான் நாசிக் காற்றால்
கோது இலா மலைகள் கூடி, வருவது போவதாக,
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர், துணுக்கமுற்றார்;
போதுவான் அருகு செல்லப் பயந்தனர், பொறி கொள் கண்ணார். 50-
பொறிகொள் கண்ணார்- தீப்பொறி வெளிப்படும்
கண்ணையுடைய அவ்வீரர்கள்; ஓதநீர் விரிந்த தென்ன
உறங்குவான் – கடல்நீரின் விரிந்த பரப்பு உறங்குவது போல்
உறங்குகின்றவனான கும்பகருணனது; நாசிக் காற்றால் – மூச்சுக்
காற்றினது வேகத்தால்; கோது இலா மலைகள் கூடி – குற்றம்
இல்லாத மலைக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து; வருவது
போவதாக- வந்து செல்வதாக; ஈதுஎலாம் கண்ட வீரர்-
இத்தன்மையைக் கண்ட வீரர்கள்; ஏங்கினர்- என்ன செய்வது
என்று தெரியாது ஏக்கங்கொண்டு; துணுக்கமுற்றார் –
மனநடுக்கங்கொண்டார்கள்; போதுவான் அருகு செல்லப்
பயந்தனர்- அக்கும்பகருணனது அருகில் செல்ல அஞ்சினார்கள்.
—————-
‘இங்கு இவன் தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது?’ என்று,
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு, மெய் துணுக்கமுற்றார்;
அங்கைகள் தீண்ட அஞ்சி, ஆழ் செவிஅதனினூடு,
சங்கொடு தாரை, சின்னம், சமைவுறச் சாற்றலுற்றார். 51-
துங்கவெவ்வாயும் மூக்குங்கண்டு- கும்பகருணனது வலிய
வாயினையும் மூக்கினையும் கண்டு; மெய் துணுக்கமுற்றார் –
உடல் நடுங்கிய அவ்வீரர்கள்; அங்கைகள் தீண்ட அஞ்சி-
தங்கள் கைகளினால் அவனைத் தொட்டு எழுப்பப் பயந்து; இங்கு
இவன் தன்னை- இன்று இப்போது இவனை; யாம் இன்று
எழுப்பலாம் வகை ஏது என்று- வேறு வகையில் யாம் இவனை
இன்று எழுப்புவது எவ்வாறு என எண்ணி; ஆழ் செவி
அதனினூடு- ஆழமான காதுகளின் உள்ளே; சங்கொடு, தாரை,
சின்னம் – சங்கு அடிக்கும் தாரை, ஊதுகொம்பு ஆகிய
கருவிகளின் மூலம், சமைவுறச் சாற்றலுற்றார் – பெருத்த பேரொலி
செய்யத் தொடங்கினார்கள்.
——————–
கோடு, இகல் தண்டு, கூடம், குந்தம், வல்லோர்கள்
கூடி, தாடைகள், சந்து, மார்பு, தலை எனும் இவற்றில் தாக்கி,
வாடிய கையர் ஆகி, மன்னவற்கு உரைப்ப, ‘பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும், விரைவின்’ என்றான். 52-
கோடு இகல் தண்டு- மலையோடு மாறுபட்ட தண்டாயுதமும்;
கூடம்- சம்மட்டியும்; குந்தம் – ஈட்டி; வல்லோர்கள் கூடி-
என்னும் இப்படைக்கலங்களைக் கையாள்வதில் பயிற்சி
வலிமையுடையவர்கள் ஒருங்கு கூடித்; தாடைகள் –
கும்பகருணனது கன்னத்தாடைகள்; சந்து- உடல் பொருத்துக்கள்;
மார்பு – மார்பு; தலை- தலை; எனும் இவற்றில் தாக்கி –
என்னும் உடலின் மெல்லிய பகுதிகளில் எல்லாம் தாக்கி;
வாடிய கையர் ஆகி – துயிலெழுப்ப முடியாது கை
ஓய்ந்தவர்களாய்; மன்னவற்கு உரைப்ப- இராவணனிடம் சென்று
அதனைத் தெரிவிக்க; பின்னும் நீடிய பரிகள் எல்லாம்
விரைவின் நிரைத்திடும் – அதற்கு அவன் இதற்கு மேல் நீண்ட
குதிரைகளை எல்லாம் சீக்கிரம் வரிசையாக நிரம்பச் செலுத்துங்கள்;
என்றான்.
———–
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான். 53-
மட்டுஅற உறங்குவான் தன் – (இராவணன் ஆணை பெற்ற
வீரர்கள்) அளவு மீறி அதிகமாக உறங்குபவனான கும்பகருணனது;
மார்பிடை- மார்பில்; ஓர் ஆயிரம்- ஓராயிரம்; கட்டுறு கவனமா
– கடிவாளம் பூட்டப்பெற்ற விரைவாகச் செல்லும் குதிரைகளுடன்;
கடிதின் வந்து – விரைந்து வந்து; விட்டு உற நடத்தி ஓட்டி-
அவற்றை மார்பில் நடத்தி ஓட்டி; மார்பிடை மாலைமான-
அவனுடைய மார்புக்கு மாலை போல; விரைவுளசாரி வந்தார் –
விரைவாகச் சுற்றி வந்தார்கள்; (அவ்வாறு அவர்கள் செய்த
செயலால்) குறங்கு தட்டுறு போல – துடையைத் தட்டுவது
போலத்; தடந்துயில் கொள்வதானான்- அவன் பெருந்துயில்
கொள்ளலானான்.
————
கொய்ம் மலர்த் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி, ‘ஐய!
உய்யலாம் வகைகள் என்று, அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்;
கய் எலாம் வலியும் ஓய்ந்த; கவன மா காலும் ஓய்ந்த;
செய்யலாம் வகை வேறு உண்டோ ? செப்புதி, தெரிய’ என்றார். 54-
கொய்ம்மலர்த் தொங்கலான் தன்- (குதிரைகளை விட்டு
உழக்கி எழுப்ப முடியாத வீரர்கள்) கொய்த மலர்களால்
தொடுக்கப் பெற்ற இராவணனது; குரைகழல் வணங்கி –
ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த பாதங்களை வணங்கி; ஐய –
ஐயனே; உய்யலாம் வகைகள் என்று – அக்கும்பகருணனை
எழுப்பினால் போரில் வென்று உய்யலாம் என எண்ணி; அங்கு
எழுப்பல் ஆம் வகையே செய்தும்- அவனை எழுப்பக்கூடிய
எல்லா வழிகளையும் செய்தோம் அவ்வாறு செய்ததால்; கய்
எலாம் வலியும் ஓய்ந்த- எங்கள் கை வலிமை எல்லாம்
போய்விட்டது; கவனமா காலும் ஓய்ந்த – விரைந்து செல்லும்
குதிரைகளின் காலும் அவன் மார்பை மிதித்து ஓய்ந்தன;
செய்யலாம் வகை வேறு உண்டோ? – இனி
அக்கும்பகருணனைத் துயிலெழுப்பச் செய்யக்கூடிய வழி வேறு
ஏதாவது உண்டோ; செப்புதி தெரிய என்றார்- உண்டெனின்
யாங்கள் அறியும்படி சொல்லுவாயாக என்றார்கள்.
————-
‘இடை பேரா இளையானை, இணை ஆழி மணி நெடுந் தேர்
படை பேரா வரும்போதும், பதையாத உடம்பானை,
மடை பேராச் சூலத்தால், மழு வாள் கொண்டு, எறிந்தானும்,
தொடை பேராத் துயிலானை, துயில் எழுப்பிக் கொணர்க!’ என்றான். 55-
இடை பேரா இளையானை- எக்காலத்திலும் என்னை விட்டு
நீங்காத தம்பியும்; இணை ஆழி மணி நெடுந்தேர் – இரண்டாக
இணைந்த சக்கரங்களையுடைய மணிகளால் அழகுபடுத்தப்பட்ட
பெரிய தேர்ப்; படை பேரா வரும் போதும் – படை முதலிய
படைகள் தன் மீது எதிர்த்து வந்தாலும்; பதையாத உடம்பானை
– சிறிதும் மனம் மற்றும் உடல் வருத்தப்படுதலில்லாதவனும்;
தொடை பேராத்துயிலானை- இடைவிடாது உறங்குகின்றவனும்
ஆகிய கும்பகருணனை; மடை பேராச்சூலத்தால்- மூட்டுவாய்
நீங்காத சூலப்படையாலும்; மழுவாள் கொண்டு- மற்றும் நீங்காத
சூலப்படையாலும்; மழுவாய் கொண்டு- மற்றும் மழுப்படை
வாட்படையாலும்; எறிந்தானும் – தாக்கியாயினும்; துயில் எழும்பிக் கொணர்க என்றான்- துயில் எழுப்பி
அழைத்து வருக என்று இராவணன் கூறினான்.
—————–
என்றலுமே அடி இறைஞ்சி, ஈர்-ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்,
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி, நின்று
இரண்டு கதுப்பும் உற, நெடு முசலம் கொண்டு அடிப்ப,
பொன்றினவன் எழுந்தாற்போல், புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான். 56-
என்றலுமே- என்று இராவணன் கூறியவுடனே; அடி
இறைஞ்சி – அவனது அடியை வணங்கிவிட்டு; ஈர்-ஐஞ்ஞூற்று
– ஆயிரம்; இராக்கதர்கள் – அரக்கர்கள்; துயில்கின்ற
மன்னவன் தன் மாடு அணுகி நின்று- உறங்குகின்ற
கும்பகருணனது பக்கத்தில் நெருங்கி நின்று; வன்தொழிலால்-
தங்களது வலிய தொழில் திறத்தால்; இரண்டு கதுப்பும் உற-
இரண்டு கன்னத்திலும் பொருந்துமாறு; நெடு முசலம் கொண்டு
அடிப்ப – நீண்ட உலக்கைகளைக் கொண்டு அடிக்கப்;
பொன்றினவன் எழுந்தாற்போல் – இறந்தவன் எழுந்தது
போல; புடை பெயர்ந்து- படுத்த இடத்தை விட்டு அசைந்து;
அங்கு எழுந்திருந்தான்- அப்போது எழுந்தான்.
—————
மூவகை உலகும் உட்க, முரண் திசைப் பணைக் கை யானை
தாவரும் திசையின் நின்று சலித்திட, கதிரும் உட்க,
பூவுளான், புணரி மேலான், பொருப்பினான், முதல்வர் ஆய
யாவரும் துணுக்குற்று ஏங்க, எளிதினின் எழுந்தான், வீரன். 57-
ரன்- வீரனாகிய கும்பகருணன்; மூவகை உலகும் உட்க-
மூன்று உலகங்களும் அஞ்சி நடுங்கவும்; முரண் திசைப்
பணைக்கையானை- ஒன்றோடு ஒன்று முரண்பட்டு எதிர் எதிர்
நிற்கும் திசைகளில் உள்ள வலிய பருத்த கைகளைக் கொண்ட
திசையானைகள்; தாவரும் திசையின் நின்று சலித்திட-
தங்களுக்கு உரிய திசைகளில் இருந்து நிலை பெயரவும்; கதிரும்
உட்க- சூரியனும் அஞ்சி நடுங்கவும்; பூவுளான் – பிரமனும்;
புணரி மேலான்- பாற்கடலிற் பள்ளி கொண்டுள்ள திருமாலும்:
பொருப்பினான்- வெள்ளிப் பொருப்பில் தங்கியுள்ள
சிவனும் – முதல்வர் ஆய யாவரும் – ஆகிய மூவரை முதலாகக்
கொண்ட பிற தேவர்களும் பிறரும்; துணுக்குற்று ஏங்க-
நடுக்கம் உற்று ஏக்கங்கொள்ளுமாறு; எளிதினின் எழுந்தான் –
எளிமையாக எழுந்தான்.
————-
விண்ணினை இடறும் மோலி; விசும்பினை நிறைக்கும் மேனி;
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்;
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன்,
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான். 58-
எண்ணினும் பெரியன் ஆன- எண்ணும் எண்ணத்தில் அடங்காத
வலிமையும் வர ஆற்றலும் பெற்ற பெரியவன் ஆன; இலங்கையர்
வேந்தன்- இலங்கையர்க்கு அரசனான இராவணனது; பின்னோன்-
பின்பிறந்தவனான கும்பகருணன்; விண்ணினை இடறும் மோலி –
ஆகாயத்தை முட்டும் மோலியுடனும்; விசும்பினை நிறைக்கும் மேனி – ஆகாயத்தை
மறைக்கும் மேனியுடனும்; கடல்களின் பெரிய ஆகும்- கடலை
விடப் பெரியவை என்று சொல்லும் படியான; கண்ணெனும் இவை
இரண்டும் – கண்கள் இரண்டு உடனும் தோன்றினான்;
(அத்தோற்றம்) மண்ணினை அளந்து நின்றமால் – மாபலியிடம்
மூவடி மண் கேட்ட குறளனாக வந்த திருமால்; என வளர்ந்து
நின்றான்- வளர்ந்து நின்றது போல் இருந்தது என்றவாறு.
————–
கும்பகருணன் உணவு அருந்தல்
உறக்கம் அவ் வழி நீங்கி, உணத் தகும்
வறைக்கு அமைந்தன ஊனொடு, வாக்கிய
நறைக் குடங்கள் பெறான், கடை நக்குவான்,
இறக்க நின்ற முகத்தினை எய்துவான்; 59-
அவ்வழி உறக்கம் நீங்கி- அப்போது முற்றும் உறக்கம்
கலைந்து; உணத்தகும் – உடனே உண்ணுதற்குத் தகுந்த; வறைக்கு
அமைந்தன ஊனொடு- வறுத்தல் செய்யப்பட்ட; வாக்கிய நறைக்
குடங்கள் பெறான்- நிரப்பிய கட்குடங்களும் குடித்தற்குக்
கிடைக்காமையாலே; இறக்க நின்ற முகத்தினை எய்துவான்-
சோர்ந்து தாழ்ந்த முகத்தினையுடையவனாய்க்; கடை தக்குவான்
– தன் கடை வாயை நக்கினான்.
——————
ஆறு நூறு சகடத்து அடிசிலும்,
நூறு நூறு குடம் களும், நுங்கினான்;
ஏறுகின்ற பசியை எழுப்பினான்-
சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 60-
சீறுகின்ற முகத்து- சினம் மிக்குத் தோன்றுகின்ற
முகத்தில்; இரு செங்கணான்- அச்சினம் மேலும் மிக்குத்
தோன்றுவதற்கு அமைந்த சிவந்த இரு கண்களையுடைய கும்பகருணன்;
ஆறுநூறு சகடத்து அடிசிலும்- அறுநூறு வண்டிச் சோற்றையும்; நூறு நூறு
குடங்களும்- பல நூறு குடம் கள்ளையும்; நுங்கினான் –
விரைந்து உண்டான்; ஏறுகின்ற பசியை எழுப்பினான் – அதனால்
அவன் மிகுகின்ற பசியை மேலும் அதிகமாக எழுப்பியவன்
ஆனான்.
————-
எருமை ஏற்றை ஓர் ஈர்-அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று, இறை ஆறினான்,
பெருமை ஏற்றது கோடும் என்றே-பிறங்கு
உருமை ஏற்றைப் பிசைந்து, எரி ஊதுவான். 61-
பிறங்கு உருமை ஏற்றை- விளங்குகின்ற ஆண் இடியைப்;
பிசைந்து எரி ஊதுவான் – கையினால் பிசைந்து நெருப்புப்
பொறியாக ஊதவல்ல வலிமையுடைய கும்பகருணன்; பெருமை ஏற்றது-
பெருமை பெற்றதாகிய பேருண்டியைக்; கோடும் என்றே-
உட்கொள்வோம் என்று கருதி; எருமை ஏற்றை ஓர் ஈர் அறு
நூற்றையும்- எருமைக்கடாக்கள் ஆயிரத்திருநூற்றையும் அருமை
இன்றியே; தின்று- வருத்தமில்லாமல் தின்று, இறை
ஆறினான்-ஓரளவு பசி தணித்தான்.
————-
கும்பகருணன் தோற்றம்
இருந்த போதும், இராவணன் நின்றெனத்
தெரிந்த மேனியன், திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்,
சொரிந்த சோரி தன் வாய் வர, தூங்குவான்; 62-
திண் கடலின் திரை தெரிந்தது அன்ன- வலிய கடலின்
அலைகள் வளைந்து, தோன்றுவதைப் போன்ற; புருவத்து
நெற்றியான்- புருவத்தைக் கொண்ட நெற்றியை உடையவனும்;
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான்- தான் உண்ட
ஊனில் இருந்து வெளிவரும் குருதி தன் வாயில் இருந்து
வெளிப்படுமாறு உறங்குபவனும் ஆன கும்பகருணன்; இருந்த போதும்
– உட்கார்ந்திருந்த போதும்; இராவணன் நின்றெனத்
தெரிந்த மேனியன் – இராவணன் எழுந்து நின்றது போன்றுள்ள
ஓங்கிய உடம்பினையுடையவன் ஆக விளங்கினான்.
——–
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
உதிர, வாரி நுகர்வது ஒர் ஊணினான்;
கதிர வாள் வயிரப் பணைக் கையினான்;
கதிர வாள் வயிரக் கழற் காலினான்; 63-
உதிர வாரியொடு- குருதி பெருக்கெடுக்கும்; ஊனொடு எலும்பு
தோல் உதிர- ஊனும் எலும்பும் தோலும் சிதறி விழுமாறு;
வாரி நுகர்வது ஓர் ஊணினான் – வாரி எடுத்து உட்கொள்ளும்
உண்ணுதல் தொழில் உடையவன்; கதிர வாள் – ஒளியையுடைய
வாளேந்திய; வயிரப் பணைக்கையினான் – வலிமையுடைய பருத்த
கைகளை உடையவன்; கதிரவாள் – கதிரின் ஒளி போல் ஒளி
விடுகிற; வயிரக் கழற் காலினான் – வயிரங்கள்
பதிக்கப்பட்ட வீரக்கழல் அணிந்த கால்களை உடையவன்.
—————
இரும் பசிக்கு மருந்து என, எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்; வரும்
களிற்றினைத் தின்றனன்; மால் அறா
அருங்களில் திரிகின்றது ஓர் ஆசையான்; 64-
எஃகினோடு இரும்பு அசிக்கும்- எஃகு, இரும்பு முதலியவற்றை
அவமதிக்கின்ற; அருந்தும் எயிற்றினன் – உண்ணும் பற்களை
உடையவன்; இரும்பசிக்கு மருந்து என- தன் மிக்க பசியைத்
தணிப்பதற்கு மருந்து என்று; வரும் களிற்றினைத் தின்றனன் –
தன்மேல் வரும் களிறுகளைத் தின்றான்; மால் அறா
அரும்களில்- மயக்கம் தருவதில் இருந்து நீங்காத அருமையான
கள்ளில்; திரிகின்றது ஓர் ஆசையான் – செல்லுகின்ற
மனவிருப்பம் உடையவன்.
—————
சூலம் ஏகம் திருத்திய தோளினான்;
சூல மேகம் எனப் பொலி தோற்றத்தான்;
காலன்மேல் நிமிர் மத்தன்; கழல் பொரு காலன்;
மேல் நிமிர் செம் மயிர்க் கற்றையான்; 65-
ஏகம் சூலம் – ஒப்பற்ற சூலப்படையைத்; திருத்திய
தோளினான்- தீட்டி வைத்துள்ள தோளினையுடையவன்; சூலமேகம்
எனப் பொலி தோற்றத்தான் – கருக்கொண்ட கருமேகம் போல்
விளங்குகின்ற தோற்றம் உள்ளவன்; காலன் மேல்
நிமிர்மத்தன்- இயமன் மேல் போருக்குச் செல்லும் அளவு
உடற்செருக்குடையவன்; கழற்பொருகாலன் – வீரக் கழல்
அணிந்த கால்களை உடையவன்; மேல்நிமிர் செம்மயிர்க்
கற்றையான் – மேல் நோக்கி வளர்ந்த சிவந்த மயிர்த்
தொகுதியை உடையவன்.
——————-
எயில் தலைத் தகர, தலத்து இந்திரன் எயிறு
அலைத்த கரதலத்து, எற்றினான்; அயில்
தலைத் தொடர் அங்கையன்; சிங்க ஊன்
அயிறலைத் தொடர் அங்கு அகல் வாயினான். 66-
இந்திரன் எயிறு அலைத்த கரதலத்து- இந்திரனது பற்களை
உதிரச் செய்தகையினால்; தலத்து எயில் தலைத் தகர
எற்றினான்- அவனது இந்திரலோகத்தில் உள்ள மதில்
தலையுடைந்திடும்படி மோதியவன்; அயில் தலைத் தொடர்
அங்கையன்- வேற்படை தலைமையாக உடைய அகங்கைகளை
உடையவன்; சிங்க ஊன் அயிறலைத் தொடர் அங்கு அகல்
வாயினான் – சிங்க ஊனை உண்ணுவதை மேற்கொண்டு அகன்ற
வாயினை உடையவன்.
———————-
உடல் கிடந்துழி, உம்பர்க்கும் உற்று, உயிர்,
குடல் கிடந்து அடங்கா நெடுங் கோளினான்;
கடல் கிடந்தது நின்றதன்மேல் கதழ் வட
கடுங் கனல்போல் மயிர்ப் பங்கியான்; 67-
உடல் கிடந்துழி- தன் உடல் படுத்துக் கிடக்கும்போதே;
உம்பர்க்கும் – தேவர்களுக்கும்; உயிர்க்குடல் கிடந்து
உற்று அடங்கா – உயிர் வாழத் தேவையான குடல் இருக்கவேண்டிய
இடத்துக் கிடந்து அடங்காதே; நெடுங்கோளினான்- மிக்க வலிமை
உடையவன்; கடல் கிடந்தது- கடல் ஒன்று படுத்திருப்ப; அதன்
மேல் நின்ற- அந்தக் கடலின் மீது நின்ற; கதழ் வட
நெடுங்கனல் போல் – ஒளி விடும் கோபமிக்க கொடிய வடவைக்
கனல் போல் அமைந்த; மயிர்ப் பங்கியான்- செம்மயிர்க்
கற்றையை உடையவன்.
——-
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட,
மிக்கு அடங்கிய வெங் கதிர் அங்கிகள்
புக்கு அடங்கிய மேருப் புழை என,
தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான்; 68-
திக்கு அடங்கலும் வென்றவன் – திக்குகள் முழுவதையும்
வென்றவனான இராவணன்; சீறிட- சினந்து சீறிடும்போது;
மிக்கு அடங்கிய- அச்சீற்றத்துக்கு முன் மிகவும் அடங்கிய;
வெங்கதிர் – சூரியனும்,; அங்கிகள்- நெருப்பும்; புக்கு
அடங்கிய- அஞ்சிப் புகுந்து பதுங்குவதற்குரிய; மேருப்புழை என
– மேரு மலையில் உள்ள குகை போல் தோன்றுகிற; தொக்கு அடங்கித்
– தோல் சுருங்கித்; துயில் தரு கண்ணினான் – உறக்கக்
குறிப்பை வெளிக்காட்டும் கண்களை உடையவன்.
————-
காம்பு இறங்கும் கன வரைக் கைம்மலை
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து, உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான்;
பாம்பு உறங்கும் படர் செவிப் பாழியான்; 69-
தூம்பு உறங்கும் முகத்தின் கைம்மலை- துளை உடைய துதிக்கை
பொருந்திய முகத்தினையுடைய யானைகள்; துய்த்து உடல்
ஓம்புறும்- உண்டு உடலைப் பேணுவதற்குரிய; காம்பு இறங்கும்
கனவரை முழை என்று- மூங்கில் தாழ வளர்ந்த பெரிய மலையில்
உள்ள குகை எனுமாறு; உயர் மூக்கினான்- பெரிய
மூக்கினையுடையவன்; பாம்பு உறங்கும்- பாம்பு உறங்குமாறு அமைந்த; படர் செவிப் பாழியான்- பரந்து நீண்ட
காதாகிப் படுக்கையிடத்தை உடையவன்.
———–
இராவணன் கும்பகருணன் சந்திப்பு
‘கூயினன் நும் முன்’ என்று அவர் கூறலும்,
போயினன், நகர் பொம்மென்று இரைத்து எழ;
வாயில் வல்லை நுழைந்து, மதி தொடும்
கோயில் எய்தினன், குன்று அன கொள்கையான். 70-
நும்முன் கூயினன் – உன் தமையன் உன்னை அழைத்தான்; என்று
அவர் கூறலும்- என்று துயில் எழுப்பிய அரக்கர் கூறிய உடன்;
குன்று அன கொள்கையான் – மலையை ஒத்த தோற்றமும் கொள்கை
உறுதியும் உள்ள கும்பகருணன்; நகர் பொம்மென்று இரைத்து
எழப்போயினன்- இலங்கை மாநகர மக்கள் பொம்மென்று
அவனைக் கண்டு மகிழ்ச்சி ஒலி எழுப்பப் போய்; மதி
தொடும் கோயில் வாயில் வல்லை நுழைந்து எய்தினன் –
சந்திரனைத் தொடும் அளவு ஓங்கி உயர்ந்துள்ள இராவணனது
அரண்மனை வாயிலில் விரைவாக நுழைந்து சேர்ந்தான்.
—————–
நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து
அலை கிடந்த இலங்கையர் அண்ணலைக்
கொலை கிடந்த வேல் கும்பகருணன், ஓர்
மலை கிடந்தது போல, வணங்கினான். 71-
நெடுமதிள் நிலை கிடந்த கோபுரத்து- நீண்ட மதிலையும்
பலநிலைகளாகக் கிடந்த கோபுரத்தையும் உடைய; அலை கிடந்த
இலங்கையர் அண்ணலைக் – கடலால் சூழப்பெற்ற இலங்கை
மக்களுக்குத் தலைவனான இராவணனைக்; கொலை கிடந்த வேல்
கும்பகருணன் – கொலைத்தொழிலில் பயின்ற வேல் ஏந்திய
கும்பகருணன்; ஓர் மலை கிடந்தது போல வணங்கினான் – ஒரு
மலை படுத்துக் கிடப்பதைப் போன்று நிலத்தில் விழுந்து
வணங்கினான்.
———————
இராவணன் கும்பகருணனைத் தழுவி, உணவு அளித்துப் போர்க்கோலம் செய்தல்
வன் துணைப் பெருந் தம்பி வணங்கலும்,
தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்- நின்ற
குன்று ஒன்று, நீள் நெடுங் காலொடும்
சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான். 72-
வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும் – தனக்கு வலிமையான
துணைவனான பெருமை பெற்ற தம்பியாகிய கும்பகருணன் கிடந்து
தன்னை வணங்கிய உடனே; நின்ற குன்று ஒன்று- அசையாது நிலை
பெற்று நின்ற குன்று ஒன்று; நீள் நெடுங்காலொடும் – மிக
நீண்ட காலோடு; சென்ற குன்றைத் தழீஇயன்ன செய்கையான் –
தன்னை நோக்கி வந்த மலையைத் தழுவிக் கொண்டது போன்ற
தன்மையனாய்; தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான் – தன்
திரண்ட தோளினால் ஆரத் தழுவிக் கொண்டான்.
—————–
உடன் இருத்தி, உதிரத்தொடு ஒள் நறைக்
குடன் நிரைத்தவை ஊட்டி, தசைக் கொளீஇ கடல்
நுரைத் துகில் சுற்றி, கதிர்க் குழாம் புரை
நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான். 73-
உடன் இருத்தி- இராவணன் கும்பகருணனைத் தன்னுடன்
அமர்த்தி; உதிரத்தொடு- இரத்தத்துடன்; ஒள்நறைக்குடன்
நிரைத்தவை ஊட்டி- சிறந்த கட்குடங்களை வரிசையாக வைத்து
உண்பித்து; தசைக்கொளீஇ- ஊனையும் உண்ணக் கொடுத்து;
கடல் நுரைத் துகில் சுற்றி- கடல் நுரை போன்ற
வெண்பட்டாடையை அரையில் சுற்றி உடுத்து; கதிர்க்குழாம்
புடை நிரைத்து ஒளிர் பல்கலன் பூட்டினான் –
ஒளித்தொகுதிகளைப் பக்கங்களில் வரிசையாக வெளியிடுகின்ற
பல மணிகள் பதித்த அணிகளைப் பூட்டினான்.
—————
பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்,
சோர விட்ட சுடர் மணி ஓடையை
வீர பட்டம் என, நுதல் வீக்கினான். 74-
பெருவலி பேரவிட்ட இந்திரன்- தன் பெருவலிமை நிலை பெயர
விட்ட இந்திரன்; ஊர் விட்ட களிற்றொடும் ஓடுநாள்-
தான் செலுத்தி வந்த ஐராவதம் என்னும் யானையுடன் தோற்று
ஓடும் நாளில்; சோரவிட்ட- தவறவிட்ட; சுடர்மணி ஓடையை-
மிக்க ஒளியை வெளிப்படுத்துகின்ற முகபடாத்தை; வீரபட்டம்
என நுதல் வீக்கினான் – வீரபட்டம் என்று கும்பகருணனது
நெற்றியில் கட்டினான்.
——————
மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட,
தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என, கடல் மேனியில்,
தெய்வம் நாறு செஞ் சாந்தமும் சேர்த்தினான். 75-
மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட- உடம்பு
எல்லாம் விளங்குகின்ற மின்னல் போல் அணிகலங்கள்
ஒளிவீச; வாசத் தொய்யில் துவர் துதைந்து ஆடிய- மணமுள்ள
சந்தனக் குழம்பின் செந்நிறத்தில் மிகுதியும் தோய்ந்த;
கையின் நாகம் என- கை உடைய யானையைப் போல் கும்பகருணன்
தோன்றுமாறு; கடல் மேனியில் – அவனது கடல் போன்ற
மேனியில்; தெய்வம் நாறு செஞ்சாந்தமும் சேர்த்தினான்-
தெய்வத்தன்மையுடைய இயற்கை மணம் வீசுகின்ற செஞ்சந்தனக்
குழம்பைப் பூசினான்.
————–
விடம் எழுந்ததுபோல், நெடு விண்ணினைத்
தொட உயர்ந்தவன் மார்பிடைச் சுற்றினான்,
இடபம் உந்தும், எழில் இரு-நான்கு தோள்,
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான். 76-
நெடுவிண்ணினைத் தொட- நீண்ட ஆகாயத்தைத்
தீண்டுதற்காக; விடம் எழுந்தது போல் உயர்ந்தவன் –
நஞ்சானது எழுந்து நின்றாற்போல உயர்ந்து நின்றவனாகிய
கும்பகருணனது; மார்பிடை- மார்பில்; இடபம் உந்தும் எழில்
இரு நான்கு தோள் கடவுள் ஈந்த- இடபவாகனத்தைச் செலுத்தும்
அழகிய எண்தோள்களையுடைய சிவபிரான் தந்த; கவசமும்
சுற்றினான் கட்டினான் – கவசத்தைச் சுற்றி வந்து
கட்டினான்.
—————–
கும்பகருணன்-இராவணன் உரையாடல்
அன்ன காலையின், ‘ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால்?’ என்று இயம்பினான்-
மின்னின் அன்ன புருவமும், விண்ணினைத்
துன்னு தோளும், இடம் துடியா நின்றான். 77-
மின்னின் அன்ன புருவமும் – மின்னலைப் போன்ற வடிவமும்
நிறமும் உடைய புருவமும்; விண்ணினைத் துன்னுதோளும்-
வானத்தை நெருங்குமளவு உயர்ந்த தோளும்; இடந்துடியா
நின்றான்- இடப்பக்கத்திலேயே துடிக்கப் பெற்றவனான
கும்பகருணன்; அன்ன காலையில் – அப்போது; ஆயத்தம்
யாவையும் என்ன காரணத்தால் – இப்போர் ஆயத்தங்கள்
செய்யப்படுவது என்ன காரணத்தால்; என்று இயம்பினான்-
என்று வினவினான்.
————————-
‘வானரப் பெருந் தானையர், மானிடர்,
கோ நகர்ப் புறம் சுற்றினர்; கொற்றமும்
ஏனை உற்றனர்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி, போய்’ என்றான். 78-
மானிடர்- மானிடர் இருவர்; வானரப்பெருந் தானையர் –
வானரப் பெருஞ் சேனையுடையவர்களாய்க்; கோநகர்ப் புறம்
சுற்றினர்- நம் நகர்ப்புறத்தைச் சுற்றி வளைத்தனர்; ஏனை
கொற்றமும் உற்றனர்- ஏனையவர் யாரும் பெறாத
வெற்றியையும் அடைந்துள்ளார்கள்; நீ அவர் இன் உயிர்
போனகத் தொழில் முற்றுதி போய் என்றான்- நீ போய்
அவர்களுடைய உயிரை உண்ணுகின்ற தொழிலைச் செய்து முடிப்பாய் என்று இராவணன்
கூறினான்.
—————
கும்பகருணனின் அறிவுரை
‘ஆனதோ வெஞ் சமம்? அலகில் கற்புடைச் சானகி துயர்
இனம் தவிர்ந்தது இல்லையோ? வானமும்
வையமும் வளர்ந்த வான் புகழ் போனதோ?
புகுந்ததோ, பொன்றும் காலமே? 79-
வெஞ்சமம் ஆனதோ- கொடிய போர் தொடங்கி விட்டதோ?;
அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ
– உவமை கூறமுடியாத கற்பையுடைய சானகியின் சிறைத்துயரம்
நீங்கிய பாடு இல்லையா?; வானமும் வையமும் வளர்ந்த-
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஒப்புக் கூற முடியாதபடி வளர்ந்த;
வான் புகழ் போனதோ?- உன் மிகுபுகழ் அழிந்து போய்
விட்டதோ?; பொன்றும் காலமே புகுந்ததோ- அழிவு காலம்
வந்து புகுந்து விட்டதோ?
————-
‘கிட்டியதோ, செரு? கிளர் பொன் சீதையைச்
சுட்டியதோ? முனம், சொன்ன சொற்களால்,
திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! 80-
செருக்கிட்டியதோ- போர் கிட்டி விட்டதோ?; கிளர்
பொன் சீதையைச் சுட்டியதோ- அப்பேர் அழகு விளங்குகின்ற
சீதையைக் காரணமாகக் கொண்டதோ? திட்டியின் விடம் அன்ன
கற்பின் செல்வியை- கண்ணில் நஞ்சுடைய திட்டி விடம்
என்ற பாம்பு போன்ற கற்புக்கரசியை; முனம் சொன்ன சொற்களால் – முன்பு
நான் சொல்லிய சொற்களைக் கருதிப் பார்த்து;
விட்டிலையோ- நீ விடவில்லையோ? இது விதியின் வண்ணமே –
அவ்வாறு விடாமல் இருந்த இது விதியின் கொடுஞ்செயல்
ஆகும்.
————–
‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால்-ஐயா! 81-
ஐயா- ஐயனே; உலகினைக் கல்லலாம்- உலகினைப்
பெயர்த்தெடுக்கலாம்; வரம்பு கட்டவும் சொல்லலாம்- அது
மட்டுமல்லாமல் அவ்வுலகம் முழுவதற்கும் வேலி கட்டவும்
சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை- பெருவலிமை
படைத்த இராமனது தோள் ஆற்றலை; வெல்லலாம் என்பது-
வென்றுவிடலாம் என்று கருதுவது; சீதை மேனியைப் புல்லலாம்
என்பது போலுமால் – சீதையின் மேனியைத் தழுவலாம் என்பது
போலும்.
——————
‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு
குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?
வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். 82-
புலத்தியன் வழிமுதல் வந்த- புலத்தியனுடைய மரபிலே வந்த;
பொய்யறு குலத்து இயல்பு அழிந்தது- தருமவழி நீங்காத
குலத்தின் தன்மை உன் செயலால் அழிந்துவிட்டது; வலத்து
இயல் அழிவதற்கு ஏது- அதுவே வெற்றித் தன்மை அழிவதற்குக் காரணமாகும்; கொற்றம் முற்றுமோ- அதனால் உனக்கு வெற்றி
கிட்டுமோ?; மையறு நிலத்து இயல் நீர்இயல் என்னும்
நீரதால்- இது குற்றமற்ற நிலத்தின் இயல்பே நீரின்
இயல்பு என்ற முறைமைக்கு ஏற்றுள்ளது.
————-
‘கொடுத்தனை, இந்திரற்கு உலகும் கொற்றமும்;
கெடுத்தனை, நின் பெருங் கிளையும்; நின்னையும்
படுத்தனை; பல வகை அமரர்தங்களை
விடுத்தனை; வேரு இனி வீடும் இல்லையால். 83-
இந்திரற்கு உலகும் கொற்றமும் கொடுத்தனை- சீதையை
விட்டிடாத இச்செயலால் உனக்குத் தோற்ற இந்திரனுக்கு
அவனுடைய உலகத்தையும் வெற்றியையும் கொடுத்து விட்டாய்;
நின் பெருங் கிளையும் கெடுத்தனை- உன்னுடைய பெரிய
சுற்றத்தாராகிய அரக்கர்களையும் கெடுத்து விட்டாய்;
நின்னையும் படுத்தனை- உன்னையும் நீயே அழித்துக்
கொண்டாய்; பலவகை அமரர் தங்களை விடுத்தனை- பலவகையான
தேவர்களையும் சிறையில் இருந்து விட வேண்டியவனாய்
விட்டாய்; வேறு இனி வீடும் இல்லையால் – இதிலிருந்து
நீங்குவதற்கு வேறு வழியும் இல்லை.
—————–
‘அறம் உனக்கு அஞ்சி, இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின், வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி,
நீ இற, முன் அங்கு, யார் உனை எடுத்து நாட்டுவார்? 84-
இன்று அறம் உனக்கு அஞ்சி ஒளித்ததால்- இப்போது உன்
செயல் கண்டு அறம் அஞ்சி ஒளித்துக் கொண்டது; முனம் அதன் திறன் உழத்தலின் – முன்பு நீ அறத்தின் கூறுபாட்டை
வருந்திச் செய்தலால்; உனக்கு வலியும் செல்வமும் நிறம்
அளித்தது- அவ்வறம் உனக்கு வலிமை செல்வம் ஆகிய
மேன்மையைக் கொடுத்தது; அங்கு அதனை நீக்கி நீ இற –
அத்தருமத்தை நீக்கி நீ அழிகையில்;யார் உனை எடுத்து
அங்கு முன் நாட்டுவார் – பிறர் யார் வந்து உன்னை எடுத்து
மீட்க வல்லார்.
—————–
‘தஞ்சமும் தருமமும் தகவுமே, அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே; நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ? அதற்கு ஒரு குறை உண்டாகுமோ? 85-
அவர் நெஞ்சமும் கருமமும் உரையுமே- அந்த மனிதர்களுடைய
நெஞ்சமும் செயலும் பேச்சும்; தஞ்சமும் தருமமும் தகவுமே-
பிறருக்கு அபயமளித்தலும், அறச்செயல் செய்வதும், நடுநிலை
நின்று உண்மை கூறுவதுமாகும்; நெடு வஞ்சமும் பொய்யும் வல்ல
நாம்- அவ்வாறன்றி நெஞ்சில் வஞ்சனையும், செயலில்
பாவமும், பேச்சில் பொய்யும் வல்ல அரக்கர்களாகிய நாம்;
உஞ்சுமோ அதற்கு ஒரு குறையுண்டாகுமோ- உய்யமுடியுமா?
அவர்களின் தருமத்திற்குக் குறை ஏதாவது உண்டாகுமா
என்றவாறு.
—————–
‘காலினின் கருங் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள; சீதை போகிலன்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன கோல் உள;
யாம் உளேம்; குறை உண்டாகுமோ?’ 86-
காலினின் கருங்கடல் கடந்த- தன் கால்களால் பெரிய
கடலைக் கடந்த; காற்றது போல்வன குரங்கு உள- காற்றுப்
போல் விரைந்து இயங்கும் அனுமன் போன்ற குரங்குகள் உள்ளன;
சீதை போகிலள் – சீதை சிறையை விட்டு இன்னும்
போகவில்லை; வாலியை உரம் கிழித்து ஏக வல்லன கோல் உள
– வாலியைக் கூட மார்பைக் கிழித்துச் செல்ல வல்ல வன்மையுடைய அம்புகள்
நம் பகைவர்களிடம் உள்ளன; யாம் உளேம் – அவற்றை ஏற்க
நாம் இருக்கிறோம்; குறை உண்டாகுமோ- இனி நமக்கு என்ன
குறையிருக்கிறது.
————–
என்று கொண்டு இனையன இயம்பி, ‘யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்,
நன்று அது; நாயக! நயக்கிலாய் எனின்,
பொன்றினை ஆகவே கோடி; போக்கு இலாய்! 87-
நாயக- தலைவனே; என்று கொண்டு இனையன இயம்பி- என்று
இவ்வாறான பல சொற்களைச் சொல்லி; யான் உனக்கு ஒன்று
உளது உணர்த்துவது- யான் உனக்கு உணர்த்த வேண்டியது மேலும்
ஒன்றுள்ளது; உணர்ந்து கோடியேல் நன்றது- அதன் பொருள்
தன்மை தெளிந்து ஏற்றுக் கொள்வாய் ஆனால் நல்லது;
நயக்கிலாய் எனின்- அதனை விரும்பி ஏற்காமல் போவாய்
ஆனால்; போக்கிலாய் – நல்வழியில் செல்ல வழி
இல்லாதவனாவாய்; பொன்றினை ஆகவே கோடிஇப்போதே நீ
இறந்து விட்டதாகவே கருதிக் கொள் என்றவாறு.
——————–
‘தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து,
நின் ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய் திறம்; அன்று எனின், உளது, வேறும் ஓர்
செய் திறம்; அன்னது தெரியக் கேட்டியால்: 88-
தையலை விட்டு- சீதையைச் சிறையில் இருந்து விட்டுவிட்டு;
அவன் சரணம் தாழ்ந்து- அந்த இராமனுடைய பாதங்களை
வணங்கி; நின் ஐயறு தம்பியொடு அளவளாவுதல்- உனது
ஐயப்படத்தகாத தம்பியாகிய வீடணனுடன் நட்புப் பூணுதல்;
உய்திறம்- நாம் உயிர் பிழைத்திருக்க ஒரு வழியாகும்;
அன்று எனின் வேறும் ஓர் செய்திறம் உளது- அவ்வாறு செய்வது
நன்றன்று எனின் செய்ய வேண்டிய வேறு ஒரு செயலும் உள்ளது;
அன்னது தெரியக் கேட்டியால்- அச்செயலைத் தெளிவாகக்
கேட்பாயாக.
—————–
‘பந்தியில் பந்தியில் படையை விட்டு, அவை
சிந்துதல் கண்டு, நீ இருந்து தேம்புதல்
மந்திரம் அன்று; நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம்’ என்று உணரக் கூறினான். 89
நீ இருந்து- நீ இங்கிருந்து கொண்டு; பந்தியில்
பந்தியில் படையை விட்டு- பகுதி பகுதியாகப் படைகளைப்
போருக்குவிட்டு; அவை- அப்படைகள்; சிந்துதல் கண்டு-
உயிர் விட்டு அழிதல் கண்டு; தேம்புதல் – எண்ணி எண்ணி
வருந்துதல்; மந்திரம் அன்று- உரிய ஆலோசனையான செயலன்று;
நம் வலி எலாம் உடன் உந்துதல்- நமது படை வலிமை
முழுமையையும் பகைவர் மேல் செலுத்துதல்; கருமம் –
செயத்தகுசெயல்; என்று உணரக் கூறினான் – என்று இராவணன்
உணருமாறு கும்பகருணன் கூறினான்.
—————-
இராவணன் சினந்து உரைத்தல்
‘உறுவது தெரிய அன்று, உன்னைக் கூயது;
சிறு தொழில் மனிதரைக் கோறி, சென்று; எனக்கு
அறிவுடை அமைச்சன் நீ அல்லை, அஞ்சினை;
வெறுவிது, உன் வீரம்’ என்று இவை விளம்பினான்; 90-
உன்னைக் கூயது- உன்னை இங்கு அழைத்தது; உறுவது
தெரிய அன்று – இனிமேல் நடக்கப் போவதைத் தெரிந்து
கொள்வதற்கல்ல; சென்று- போருக்குச் சென்று; சிறுதொழில்
மனிதரைக் கோறி – சிறுதொழிலுடைய மானிடரைக் கொல்வாய்;
எனக்கு அறிவுடை அமைச்சன் நீ அல்லை- எனக்கு
அறிவுரை கூறுவதற்கு நீ அறிவு படைத்த அமைச்சன் அன்று;
அஞ்சினை- நீ போருக்கு அஞ்சுகிறாய்; உன் வீரம் வெறுவிது-
உன் வீரம் வீணானது; என்று இவை விளம்பினான் – என்று
கூறி மேலும் இவைகளைக் கூறினான்.
—————-
‘மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை;
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை;
இறங்கிய கண் முகிழ்த்து, இரவும் எல்லியும்
உறங்குதி, போய்’ என, உளையக் கூறினான். 91-
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை – வீரம்
விளங்க வேண்டிய போர்க்களத்துக்குத் தகுதியில்லாதவனாயினாய்;
பிறங்கிய தசையொடு- உண்ண மிகுதியான ஊனொடு; நறவும்
பெற்றனை- குடிக்கக் கள்ளையும் பெற்றாய்; இறங்கிய கண்
முகிழ்த்து- குழி விழுந்துள்ள கண்களை மூடிக்கொண்டு; இரவும்
எல்லியும் – இரவும் பகலும்; போய் உறங்குதி என- போய்த்
தூங்குவாய் என்று; உளையக் கூறினான் – கும்பகருணனது மனம்
வருந்துமாறு இராவணன் கூறினான்.
—————-
‘மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக்
கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில்
ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்;
யான் அது புரிகிலேன்; எழுக போக!’ என்றான். 92-
மானிடர் இருவரை வணங்கி- வலிவற்ற மானிடர் இருவரை
வணங்கி; மற்றும் அக்கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு-
அதோடு அமையாமல் மேலும் அந்தக் கூனல் முதுகுடைய
குரங்கையும் கும்பிட்டுக்கொண்டு; உய்தொழில் – உயிர்
வாழ்ந்திருக்கும் தொழில்; – ஊனுடை உம்பிக்கும்- ஊனுடலோடு
உயிர் வாழ்தலை விரும்பும், உன் தம்பியாகிய வீடணனுக்கும்;
உனக்குமே கடன்- உனக்குமே முறைமையான செயலாகும்; அது
யான் புரிகிலேன் – அச்செயலை நான் செய்யேன்; போக எழுக
என்றான்- போவதற்கு எழுக என்று இராவணன் கூறினான்.
—————-
‘தருக, என் தேர், படை; சாற்று, என் கூற்றையும்;
வருக, முன் வானமும் மண்ணும் மற்றவும்;
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக, வெம் போர்’ எனப் போதல் மேயினான். 93-
என் தேர் படை தருக-(மேற்கண்டவாறு) கூறிய இராவணன்)
என்னுடைய தேரையும், படைக்கலங்களையும் கொண்டு வருக;
என் கூற்றையும் சாற்று- என் கட்டளைக் கூற்றை யாவருக்கும்
சொல்லுவாய்; வானமும் மண்ணும் மற்றவும் – விண்ணகத்
தோரும், மண்ணகத் தோரும் பாதாள உலகத்தோரும்; இருகைவன்
சிறுவரோடு ஒன்றி முன் வருக- இருகையுடைய வலிய
சிறுவர்களான இராம இலக்குவருடன் கூடி என் முன் வந்து;
என்னொடும் வெம்போர் பொருக- என்னுடன் கொடிய
போரைச் செய்யட்டும்; எனப் போதல் மேயினான்- என்று
பணியாளரிடம் கூறிப் போருக்குச் செல்லத் தொடங்கினான்.
—————
கும்பகருணன் போருக்கு எழுதல்
அன்னது கண்டு, அவன் தம்பியானவன்
பொன் அடி வணங்கி, ‘நீ பொறுத்தியால்’
என, வல் நெடுஞ் சூலத்தை வலத்து வாங்கினான்,
‘இன்னம் ஒன்று உரை உளது’ என்னக் கூறினான்: 94-
அவன் தம்பியானவன் – அவன் தம்பியான கும்பகருணன்;
அன்னதுகண்டு- அச்செயலைக் கண்டு;நீ பொறுத்தியால் என-
யான் கூறியதை நீ பொறுத்தி எனக் கூறிப்; பொன் அடி வணங்கி-
இராவணனுடைய பொன்னால் ஆகிய வீரக்கழல் அணிந்த அடியை
வணங்கி; வல்நெடுஞ் சூலத்தை- போருக்குச் செல்ல வலிய
நெடிய சூலத்தை; வலத்து வாங்கினான் – வலப்பக்கத் தோளிலே
கொண்டவனாய்; உரை ஒன்று இன்னம் உளது-சொல்லவேண்டிய
சொல் ஒன்று உள்ளது; என்னக் கூறினான் – என்று கூறினான்.
————–
‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி
நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;
பொன்றுவென்; பொன்றினால், பொலன் கொள் தோளியை,
“நன்று” என, நாயக விடுதி; நன்றுஅரோ. 95-
நாயக- தலைவனே; இவண் வென்று வருவென் என்று
உரைக்கிலேன் – இங்கு மீண்டும் வெற்றி பெற்று வருவேன்
என்று சொல்ல இயலாமல் உள்ளேன் என்று; விதி நின்றது-
வெல்லுதற்கரிதாய் நின்றதாகிய விதி; பிடர் பிடித்து உந்த
நின்றது- கழுத்தின் புறத்தைப் பிடித்துத் தள்ளும்படி நின்றது;
பொன்றுவென் – அதனால் யான் போரில் இறந்து விடுவேன்;
பொன்றினால் -அவ்வாறு யான் அழிந்தால்;பொலன் கொள்
தோளியை-அழகு கொண்ட தோளையுடைய சீதையை; நன்று
என விடுதி-உனக்கு நன்மை என்று கருதி விட்டிடுவாய்;நன்று
– அவ்வாறு விட்டிடுதலே உனக்கு நன்மை பயக்கும்.
———
‘இந்திரன் பகைஞனும், இராமன் தம்பி கை
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்;
தந்திரம் காற்று உறு சாம்பல்; பின்னரும்
அந்தரம் உணர்ந்து, உனக்கு உறுவது ஆற்றுவாய். 96-
இந்திரன் பகைஞனும்- இந்திரசித்தனும்; இராமன் தம்பி
கை-இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவனுடைய கையில் உள்ள;
மந்திர அம்பினால் – மந்திர ஆற்றல் கொண்ட அம்பினால்;
மடிதல் வாய்மையால் – இறந்து படுதல் திண்ணம்; தந்திரம்
காற்றுறு சாம்பல்- அரக்கருடைய பிறபடைகள் மிக்க காற்றின்
முன் சாம்பல் போல் ஆகும்; பின்னரும்- இவற்றையெல்லாம்
கேட்ட பின்னர்; அந்தரம் உணர்ந்து – வரும் கேட்டை
உணர்ந்து; உனக்கு உறுவது ஆற்றுவாய்- உனக்குத் தக்க
செயலைச் செய்வாய்.
——————-
‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை; ஆதலால்,
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை-
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே. 97-
இலங்கை காவல – இலங்கைக்குக் காவலனே; என்னை
வென்றுளர் எனில் – அப்பகைவர்களாகிய இருவர் என்னை
வென்றார்களானால்; உன்னை வென்று உயருதல் உண்மை-
உன்னையும் வென்று மேம்படுதல் திண்ணம்; ஆதலால்-
அதனால்; பின்னை- மேலும்; நின்று எண்ணுதல் பிழை-
அவர்களை வெல்ல வேறு உபாயங்களை எண்ணுதல் தவறான
செயல்; அப்பெய்வனை தன்னை- அந்த வளையல் அணிந்த
சீதை தன்னை; அளிப்பது- விட்டு விடுவது; நன்கு தவத்தின்
பாலதே- சிறந்த தவப்பயன் அளிக்க வல்லதாம்.
—————
‘இற்றைநாள் வரை, முதல், யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி; கொற்றவ!
அற்றதால் முகத்தினில் விழித்தல்; ஆரிய!
பெற்றனென் விடை’ என, பெயர்ந்து போயினான். 98-
கொற்றவ- வெற்றித் தலைவனே; முன் முதல் இற்றை நாள்
வரை- முன்னாள் முதல் இன்றைய நாள் வரை; யான் செய்தன-
நான் செய்தனவாகிய; குற்றமும் உள எனின் பொறுத்தி –
குற்றங்கள் ஏதாவது இருக்குமானால் அவற்றை நீ பொறுத்தருள்க;
ஆரிய – ஆரியனே; முகத்தினில் விழித்தல் அற்றதால் – இனி
உன் முகத்தில் நான் விழித்தல் இல்லாமல் போய்விட்டது; விடை
பெற்றனன் – விடை பெற்றுக் கொண்டேன்; என பெயர்ந்து
போயினான் – என்று கூறிப் புறப்பட்டுச் சென்றான்.
—————-
படைகளை கும்பகருணனுடன் செல்ல இராவணன் பணித்தல்
அவ் வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செவ் வழி நீரொடும் குருதி தேக்கினான்;
எவ் வழியோர்களும் இரங்கி ஏங்கினார்;
இவ் வழி அவனும் போய், வாயில் எய்தினான். 99-
அவ்வழி- அப்போது; இராவணன் அனைத்து நாட்டமும்
– தன் இருபது கண்களிலும்; செவ்வழி நீரொடும் – நேரே
வழிகின்ற கண்ணீருடன்; குருதி தேக்கினான் – குருதியையும்
வெளிவிடாது தடுத்துத் தேக்கினான்; எவ்வழியோர்களும்- பிற
எல்லா உறவின் வழி வந்தவர்களும்; இரங்கி ஏங்கினார் –
இரக்கம் மிகக்கொண்டு ஏக்கம் உற்றனர்; இவ்வழி- இவ்வாறு
நிகழும் பொழுதே; அவனும் போய் – அக்கும்பகருணனும்
போய்; வாயில் எய்தினான் – நகர் வாயிலை அடைந்தான்.
——————
‘இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக!
பெரும் படை இளவலோடு’ என்ற பேச்சினால்,
வரும் படை வந்தது, வானுளோர்கள் தம்
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே. 100-
இளவலொடு- கும்பகருணனுடன்; இரும்படை ஏகுக என்ற
பேச்சினால் – பெரும்படை செல்லட்டும் என்ற இராவணனது
கட்டளையினால்; வானுளோர்கள் தம் – தேவர்களுடைய;
சுரும்பு அடை- வண்டுகள் மொய்க்கின்ற; மலர் முடி- மலர்
அணிந்த தலைகளில்; தூளி தூர்க்கவே- தூசிகள் சென்று
நிரம்புமாறு; கடிப்பு எடுத்து வெற்றி- குறுந்தடியை எடுத்துப்
போர்ப்பறை அறைந்து கொண்டு; பெரும்படை வரும்படை
வந்தது- பெரிய படையாகிய வருதற்கு உரிய படை வந்தது.
——————–
படைப் பெருக்கம்
தேர்க் கொடி, யானையின் பதாகை, சேண் உறு
தார்க் கொடி என்று இவை தகைந்து வீங்குவ-
போர்க் கொடுந் தூளி போய்த் துறக்கம் பண்புற,
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ. 101-
தேர்க்கொடி- தேரின் கண் கட்டப்பட்டுள்ள கொடிகளும்;
யானையின் பதாகை – யானை மேல் உயர்த்திப் பிடித்த
கொடிகளும்; சேண் உறு தார்க்கொடி- முன்னணித் தூசிப்
படையினர் பிடித்த உயர்ந்த கொடிகளும்; என்று இவை
– என்று இவ்வகைப்பட்ட கொடிகளுமாக; ததைந்து வீங்குவ-
நெருங்கி மிக்கிருப்பவை; போர்க் கொடுந் தூளி-
போர்க்களத்தில் இருந்து புறப்பட்ட தூசுகள்;போய்த் துறக்கம்
பண்பற- போய்ச் சுவர்க்கத்தின் பண்பு கெட; ஆர்ப்பன-
நிறைந்திருப்பனவற்றைத்; துடைப்பன போன்ற ஆடுவ-
துடைப்பன போன்றவாய் ஆடலாயின.
————–
எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும், படைக்கு நாயகர்
கண்ணுறு பொறிகளும், கதுவ, கண் அகல்
விண்ணுறு மழை எலாம் கரிந்து, வீழ்ந்தவால். 102-
எண்ணுறு படைக்கலம் – மதிக்கப்படுகின்ற படைக்கலங்கள்;
இழுக எற்றிட-உராய்ந்து மோதுவதனால்; நண்ணுறு பொறிகளும்
– தோன்றிய நெருப்புப் பொறிகளும்; படைக்கு நாயகர்-
படைத்தலைவர்களின்; கண்ணுறு பொறிகளும் – கண்களில்
மிக்குத் தோன்றுகின்ற தீப்பொறிகளும்; கதுவ- ஒன்றோடொன்று
கலந்ததனால்; கண் அகல் – இடம் அகன்ற; விண்ணுறு-
ஆகாயத்தில் பொருந்திய; மழை எலாம்- மேகங்கள் எல்லாம்;
கரிந்து வீழ்ந்தவால்- கரிந்து வீழ்ந்தன.
———–
தேர் செல, கரி செல, நெருக்கிச் செம் முகக்
கார் செல, தேர் செல, புரவிக் கால் செல,
தார் செல, கடை செல, சென்ற தானையும்,
‘பார் செலற்கு அரிது’ என, விசும்பில் பாய்ந்ததால். 103-
தேர்செல- முன்னால் தேர் செல்வதனாலும்; கரி செல-
யானைகள் செல்வதனாலும்; நெருக்கி – அவற்றை மேலும்
நெருக்கிக் கொண்டு; செம்முகக்கார் செல- புகர் அமைந்த
முகத்தினையுடைய யானைகள் செல்வதனாலும்; தேர் செல –
மேலும் தேர்கள் செல்ல; கால் புரவி செல- காற்றுப் போல்
குதிரைகள் விரைந்து செல்வதனாலும்; தார் செல – இவ்வாறாக
முன்னணிப் படை செல்லவும்; கடை செல- பின்னணிப் படையும்
நெருக்கமாகச் செல்வதால்; சென்ற தானையும் – இடையில்
சென்ற இடையணிச் சேனையும்; பார் செலற்கு அரிது என-
நிலத்தில் செல்லுவது அரியது என எண்ணி; விசும்பில்
பாய்ந்ததால்- ஆகாயத்தில் பாய்ந்து செல்லல் ஆயிற்று.
————–
கும்பகருணன் புறப்பாடு
ஆயிரம் கோள் அரி, ஆளி ஆயிரம்,
ஆயிரம் மத கரி, பூதம் ஆயிரம், மா
இரு ஞாலத்தைச் சுமப்ப வாங்குவது ஏய்
இருஞ் சுடர் மணித் தேர் ஒன்று ஏறினான். 104-
மாஇரு ஞாலத்தைச் சுமப்ப- மிகப்பெரிய பூமியைச்
சுமப்பனவாகி; வாங்குவது – மேற்கொள்ளும் வன்மையுடைய;
ஆயிரம் கோள் அரி- ஆயிரம் சிங்கங்களும்; ஆயிரம் ஆளி
– ஆயிரம் ஆளிகளும்; ஆயிரம் மதகரி- ஆயிரம் மதம் மிக்க
யானைகளும்; ஆயிரம் பூதம்- ஆயிரம் பூதங்களும் பூட்டப்
பெற்றதுமான; ஏய்- ஒப்பில்லாத; இருஞ்சுடர் மணித்தேர் ஒன்று-
மிக்க ஒளியுள்ள மணிகள் அழுத்திப் பதிக்கப் பெற்ற தேர்
ஒன்றில்; ஏறினான்- கும்பகருணன் ஏறினான்.
——————
தோமரம், சக்கரம், சூலம், கோல், மழு,
நாம வேல், உலக்கை, வாள், நாஞ்சில், தண்டு,
எழு, வாம வில், வல்லையம், கணையம், மற்று
உள சேம வெம் படை எலாம் சுமந்து, சென்றவால். 105-
தோமரம் – பெரிய மரங்களையும்; சக்கரம் – சக்கர
வடிவில் அமைந்த வீசு படைகளையும்; சூலம் – முத்தலைச்
சூலங்களையும்; கோள் – அம்புகளையும்; மழு- கோடரிப்
படையினையும்; நாமவேல் – பகைவருக்கு அச்சம் உண்டாக்கும்
வேல் படைகளையும்; உலக்கை-உலக்கைகளையும்; வாள்- வாள்
படைகளையும்; நாஞ்சில் – கலப்பை வடிவில் அமைந்த
படைக்கலங்களையும்; தண்டு-பெரிய தண்டாயுதங்களையும்; எழு
– இரும்பு உலக்கைகளையும்; வாமவில்- வளைந்த பெரிய
வில்களையும்; வல்லையம்-எறி ஈட்டிகளையும்; கணையம்-வளை
தடிகளையும்; மற்று உள – மற்றுமுள்ள பிற; சேம வெம்படை
-கையில் உள்ள படைக்கலங்கள் தீர்ந்தபோது பயன்படுத்தப்படும்
சேமிப்புப் படைக்கலங்கள்; எலாம் – எல்லாவற்றையும்; சுமந்து
சென்றவால் – கும்பகருணனுடன் சென்ற சேனைகள் சுமந்து
சென்றன.
———–
நறையுடைத் தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு,
பிறையுடை எயிற்றவன் பின்பு சென்றனர்,
முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார். 106-
முறை முறை- முறை முறையாக (தரவேண்டிய உணவுகளைத்
தருவதில் முறைகொண்டு); கைக்கொடு- கையிலே உணவுகளைக்
கொண்டு; முடுகி நீட்டுவார்- விரைந்து நீட்டுபவர்களாகிய அரக்கர்
பலர்; பிறை உடை எயிற்றவன் பின்பு – பிறை போன்ற பற்களை
உடைய கும்பகருணனுக்குப் பின்னால்; நறையுடைத் தசும்பொடு-
கள்ளைக் கொண்டுள்ள குடங்களையும்; நறிதின் வெந்த ஊன்-
நன்றாக வெந்த ஊனினையும்; குறைவு இல் நல்சகடம் –
குறைவில்லாது நிரப்பிய வலிய வண்டிகள்; ஓர் ஆயிரம் கொடு- ஓராயிரத்தைப் பின் கொண்டு; சென்றனர்-
கும்பகருணனுடன் சென்றனர்.
—————-
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை
பின்ற அரும் பிலனிடைப் பெய்யுமாறு போல்,
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே,
சென்றனன், யாவரும் திடுக்கம் எய்தவே. 107-
பற்பலர்- பற்பல அரக்கர்; உதவும் – முறை முறை தந்து
உதவுகின்ற; ஒன்று அல ஊன், நறை- ஒன்றல்லாத பலவாகிய
ஊனையும் கள்ளையும்; பின்ற அரும் – மீளுதலுக்கு அருமையான;
பிலனிடைப் பெய்யுமாறு போல் – குகைக்குள் பெய்யும் தன்மை
போல்; வன்திறல்- மிக்க வலிமை கொண்ட; இருகரம் வாங்கி-
இரண்டு கைகளிலும் வாங்கி; மாந்தியே – மிகுதியாக உண்டு
கொண்டே; யாவரும் – கண்டவர் யாவரும்; திடுக்கம் எய்தவே-
திகைப்பு அடையும்படி; சென்றனன் – கும்பகருணன் போர்க்களம்
நோக்கிச் சென்றான்.
———–
‘கணம் தரு குரங்கொடு கழிவது அன்று, இது;
நிணம் தரு நெடுந் தடிக்கு உலகு நேருமோ?
பிணம் தலைப்பட்டது; பெயர்வது, எங்கு இனி;
உணர்ந்தது கூற்றம்’ என்று, உம்பர் ஓடினார். 108-
இது- கும்பகருணனது உண்ணும் தொழில்; கணம் தரு-
கூட்டமாகப் பொருந்திய; குரங்கொடு கழிவது அன்று- வானரக்
கூட்டத்தோடு நீங்குவது அன்று; நிணம் தரு நெடுந்தடிக்கு-
இவன் உண்ணும் கொழுப்போடு கூடிய மிக்க மாமிசத்துக்கு; உலகு
நேருமோ – இவ்வுலகத்து உயிர்கள் எல்லாம் போதுமானதாய்
ஆகுமா?; பிணம் தலைப்பட்டது – எங்கும் பிண மயமாய்
ஆகிவிட்டது; கூற்றம் உணர்ந்தது- இதைக் கொலைத்
தொழிற்குரிய யமனும் உணர்ந்து விட்டான்; எங்கு இனி பெயர்வது
– இனித் தப்பி நாம் எங்கே ஓடிச் செல்வது; என்று உம்பர்
ஓடினார் – என்று எண்ணிய வண்ணம் தேவர்கள் ஓடினார்கள்.
————–
கும்பகருணனைப் பற்றி இராமன் வீடணனிடம் வினவல்
பாந்தளின் நெடுந் தலை வழுவி, பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால் வரை
போந்தது போல் பொலந் தேரில் பொங்கிய
ஏந்தலை, ஏந்து எழில் இராமன் நோக்கினான். 109-
பாந்தளின்- ஆதிசேடனுடைய; நெடுந்தலை வழுவி- பெரிய
தலையில் இருந்து நழுவி; பாரொடும் – நிலவுலகத்துடன்; வேந்து
என விளங்கிய மேரு மால் வரை – பிற மலைகளின் வேந்து
போன்ற மேரு என்னும் பெருமலை; போந்தது போல்- வந்தது
போல; பொலந்தேரில் பொங்கிய- பொன்னால் ஆன தேரில்
விளங்கித் தோன்றுகின்ற; ஏந்தலை-கும்பகருணனை; எழில் ஏந்து
இராமன் -அழகு மிகத் தங்கிய இராமன்; நோக்கினான்-கண்டான்.
——————–
‘வீணை என்று உணரின், அஃது அன்று;
விண் தொடும் சேண் உயர் கொடியது, வய வெஞ் சீயமால்;
காணினும், காலின் மேல் அரிய காட்சியன்;
பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்? 110-
விண் தொடும் சேண் உயர் கொடியது- விண்ணைத்
தொடுகின்ற மிக உயர்ந்த கொடியில் இருப்பது; வீணை என்று
உணரின்- வீணை என்று எண்ணினால்; அஃது அன்று- அது
இல்லை; வய வெஞ்சீயமால் – வெற்றி பொருந்திய கொடிய
சிங்கமாகும்; காணினும் – மிக்க வேகத்துடன் கண்டாலும்; காலின்
மேல் அரிய காட்சியன் – காற்பகுதிக்கு மேல் முழுதும்
பார்த்தற்கரிய பெருந்தோற்றமுடையவனாய் இருக்கிறான்; பூண்
ஒளிர் மார்பினன் – அணிகலன் ஒளி விடுகின்ற மார்பை
உடையவனாய் இருக்கிறான்; யாவன் போலுமால் – இவன்
யாவனோ?
————
‘தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்,
நாள் பல கழியுமால்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலைகொலாம்; சமரம் வேட்டது ஓர்
ஆள் என உணர்கிலேன்; ஆர்கொலாம் இவன்? 111-
தோளொடு தோள் செலத் தொடர்ந்து- இவனுடைய ஒரு
தோளோடு மற்றொரு தோள் வரை முழுவதும்; தொடர்ந்து-
தொடர்ச்சியாக; நோக்குறின்- பார்க்க முயலின்; பலநாள்
கழியுமால் – பலநாள் கழிந்துவிடும்; நடுவண் நின்றது ஓர்
தாளுடை மலை கொலாம்- உலகுக்கு நடுவில் உள்ள ஒப்பற்ற
கால் முளைத்த மேருமலை இவ்வாறு வந்தது கொல்லோ?; சமரம்
வேட்டது ஓர் ஆளென உணர்கிலேன் – இவனைப் போரை
விரும்பி வந்த ஒரு வீரனென்று நினைக்க முடியவில்லை;
ஆர்கொலாம்இவன்- இவன் யாரோ.
————–
‘எழும் கதிரவன் ஒளி மறைய, எங்கணும்
விழுங்கியது இருள், இவன் மெய்யினால்; வெரீஇ,
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது;
அழுங்கல் இல் சிந்தையாய்! ஆர் கொலாம் இவன்? 112-
இவன் மெய்யினால் – இக்கும்பகருணனது பேருடம்பினால்;
எழும் கதிரவன் ஒளி மறைய- உதயகிரியில் எழும் சூரியனது
ஒளியானது மறைய; எங்கணும் இருள் விழுங்கியது- எல்லா
இடமும் இருளால் நிரம்பியது; புழுங்கும் நம் பெரும்படை-
பேருடம்பு கண்டு மனம் வேர்க்கின்ற நமது பெரிய படை; வெரீஇ
இரியல் போகின்றது-அஞ்சி நிலை கெட்டு ஓடுகின்றது; அழுங்கல் இல் சிந்தையாய்- வருந்துதல் இல்லாத மனமுடைய வீடணனே;
ஆர் கொலாம் இவன்- இவன் யாவனோ
————–
‘அரக்கன் அவ் உரு ஒழித்து, அரியின் சேனையை
வெருக் கொளத் தோன்றுவான், கொண்ட வேடமோ?
தெரிக்கிலேன் இவ் உரு; தெரியும் வண்ணம், நீ
பொருக்கென, வீடண! புகறியால்’ என்றான். 113-
அரக்கன் -இராவணன்; அவ் உரு ஒழித்து-தன்னுடைய அந்த
வடிவத்தை விட்டுவிட்டு; அரியின் சேனையை- குரங்குச் சேனை;
வெருக் கொளத் தோன்றுவான் – அஞ்சும்படி தோன்றுவதற்காக;
கொண்ட வேடமோ- மேற்கொண்ட மாயவேடமோ; இவ் உரு
தெரிக்கிலேன் – இந்த உரு எது என்று எனக்குத் தெரியவில்லை;
தெரியும் வண்ணம் – தெரிந்து கொள்ளும் படி; நீ புகறியால்
என்றான்- நீ சொல்லுவாய் என்றான் இராமன்.
—————–
வீடணன் கும்பகருணனைப் பற்றி எடுத்துரைத்தல்
ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ‘ஐய!
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னோன்;
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான்’ என்று, அவன் நிலை கூறலுற்றான்; 114-
ஆரியன் – இராமன்; அனைய கூற- இவ்வாறு கேட்க;
இணையடி இறைஞ்சி- அவனது திருப்பாத மிரண்டையும் வணங்கி;
ஐய! – ஐயனே; பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன்-
இவன் வரச்சிறப்புடைய இலங்கைத் தலைவனாகிய இராவணனுக்குப்
பின்பிறந்தவன்; எனக்கு முன்னோன் – எனக்கு முன் பிறந்தவன்; கார் இயல் காலன் அன்ன- கருமை நிறம்
பொருந்திய இயமனை ஒத்த; கழல் கும்பகருணன் என்னும்-
வீரக்கழல் அணிந்த கும்பகருணன் என்னும் பெயர் கொண்ட;
கூரிய சூலத்தான் என்று- கூர்மையான சூலத்தைக் கையிலே
கொண்டவன் என்று; அவன் நிலை கூறலுற்றான்- அவனது
தன்மையைக் கூறத் தொடங்கினான்.
———–
‘தவன் நுணங்கியரும் வேதத் தலைவரும் உணரும் தன்மைச்
சிவன் உணர்ந்து, அலரின் மேலைத் திசைமுகன் உணரும்
தேவன் – அவன் உணர்ந்து எழுந்த காலத்து, அசுரர்கள் படுவது எல்லாம்,
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர், எந்தாய்! 115-
எந்தாய்! – எந்தாய்; தவன் நுணங்கியரும் – தவத்தால்
உடல் சுருங்கி அறிவுக் கூர்மை பெற்ற தவத்தரும்;வேதத்
தலைவரும் – வேதத் தலைவர்களான அந்தணரும்;
உணருந்தன்மைச் சிவன் – உணர்வைப் பெறுவதற்காக
உபாசனை செய்கின்ற சிவபிரானால்உணர்ந்து- தியானிக்கப்பட்டு;
அலரின் மேலைத் திசைமுகன் உணரும்- தாமரை மலரிலே
வாழ்கிற பிரமனாலும் தியானிக்கப்படுகிற; தேவன் அவன்-
தேவனாகிய அந்தத் திருமால்; உணர்ந்து எழுந்த காலத்து-
அரிதுயில் நீங்கிப் பக்தர்களைக் காக்க எழுந்த காலத்தில்;
அசுரர்கள் படுவது எல்லாம் – அசுரர்கள் எல்லாம் இறப்பர்;
இவன் உணர்ந்து எழுந்த காலத்து- இக்கும்பகருணன் துயில்
நீங்கி எழுந்த காலத்தில்; இமையவர் படுவர் – தேவர்கள்
இறப்பர்.
————–
ஆழியாய்! இவன் ஆகுவான்,
ஏழை வாழ்வுடை எம்முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன்;
ஊழி நாளும் உறங்குவான், 116-
ஆழியாய் – பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் மாலின்
அம்சமானவனே; இவன் ஆகுவான் – இவனானவன்; ஏழை
வாழ்வுடை- அறத்திற்காக வாழாத எளிமைப்பட்ட உலக
வாழ்வையுடைய; எம்முனோன்- எமக்கு முன்னோனான
இராவணனுடைய; தாழ்வு இலா – அறமனத்தாழ்வில்லாத; ஒரு
தம்பியோன் – ஒப்பற்ற தம்பியானவன்; ஊழி நாளும்
உறங்குவான்- ஒருழிக்காலம் உறங்கும் தன்மையன் என்றவாறு.
————-
‘காலனார் உயிர்க் காலனால்;
காலின் மேல் நிமிர் காலினான்;
மாலினார் கெட, வாகையே,
சூலமே கொடு, சூடினான்; 117-
காலனார் உயிர்க் காலனால்- இயமனது உயிர்க்கு எமன்
போன்றவன்; காலின் மேல் நிமிர் காலினான் – காற்றை விட
விரைவாகச் செல்லும் கால்களையுடையவன்; மாலினார் கெட
வாகையே – கருநிறமுள்ள இந்திரன் தோற்றோட வெற்றியைக்
குறிக்கும் வாகை மாலையைத்; சூலமே கொடு சூடினான்- தன்
சூலப் படை கொண்டு சூடியவன்.
—————
‘தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை, உம்பர்கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான்
தூங்க, நின்று சுழற்றினான்; 118-
உம்பர் கோன் – தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன்;
வீங்கு நெஞ்சன் – அச்சம் மிக்க நெஞ்சுடையவனாய்;
விழுந்திலான் தூங்க- கீழே விழுந்திலனாய்த் தொங்க; தாங்கு
கொம்பு ஒரு நான்கு கால் – தாங்குகின்ற நான்கு
கொம்புகளையும் நான்கு கால்களையும் உடைய; ஓங்கல்
ஒன்றினை – மலை போன்ற ஐராவதமென்னும் வெள்ளை
யானையினை; நின்று சுழற்றினான் – தான் ஒருவனாய் நின்று
போர்க்களத்தில் சுழற்றினான்.
————-
‘கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான்;
அழிந்து மீன் உக, ஆழி நீர்
இழிந்து, காலினின் எற்றுவான்; 119-
கழிந்த தீயொடு காலையும் – மிகுதியான தீயுடன்
காற்றையும்; பிழிந்து சாறு கொள் பெற்றியான் – பிழிந்து சாறு
எடுக்கவல்ல வலிமையுடையவன்; மீன் அழிந்து உக- மீன்கள்
எல்லாம் அழிந்து உயிர் சிந்துமாறு; ஆழிநீர் இழந்து காலினின்
எற்றுவான் – கடல் நீரில் இறங்கிக் காலால் எற்றிக் கடலைக்
கடக்கும் பேருருவத்தினன்.
—————
‘ஊன் உயர்ந்த உரத்தினான்,
மேல் நிமிர்ந்த மிடுக்கினான்;
தான் உயர்ந்த தவத்தினான்,
வான் உயர்ந்த வரத்தினான்; 120-
ஊன் உயர்ந்த உரத்தினான் – உடம்பில் மிக்க வலிமை
படைத்திருப்பதால்; மேல் நிமிர்ந்த மிடுக்கினான் – மிகுதியும்
மேம்பட்ட மன உறுதியுடையவன்; தான் உயர்ந்த தவத்தினால்
-தான் செய்த பெருந்தவத்தினால்; வான் உயர்ந்த வரத்தினான்
– வானம் போல் உயர்ந்த மிக்க வரத்தினை உடையவன்.
————-
‘திறம் கொள் சாரி திரிந்த நாள்,
கறங்கு அலாது கணக்கு இலான்;
இறங்கு தாரவன் இன்று காறு
உறங்கலால், உலகு உய்ந்ததால்; 121-
இறங்குதாரவன்-தொங்குகின்ற மாலையை அணிந்தவனாகிய
இக்கும்பகருணன்; திறம் கொள் சாரி திரிந்த நாள்- போரில்
பலவகையில் வேகமாகச் சுழன்று சாரி திரியும் காலத்தில்; கறங்கு
அலாது- காற்றாடி அல்லாது; கணக்கு இலான்- பிறிதொன்றின்
தன்மையில்லாதவன்; இன்று காறு உறங்கலால்-
இப்படிப்பட்டவன் இன்று வரை தூங்கியதால்;உலகு உய்ந்ததால்
– உலகம் அழியாமல் பிழைத்துள்ளது.
————-
‘சூலம் உண்டு; அது சூர் உளோர்
காலம் உண்டது; கைக் கொள்வான்;
ஆலம் உண்டவன் ஆழிவாய்,
ஞாலம் உண்டவ! நல்கினான்; 122-
ஞாலமுண்டவ- மண்ணுண்டு உலகையெல்லாம் திருவாயில்
காட்டியவனே; ஆழிவாய் ஆலம் உண்டவன்-திருப்பாற்கடலில்
தோன்றிய ஆலகால நஞ்சை உண்டவனாகிய சிவபிரான்;
நல்கினான் -கொடுத்ததாகிய; சூலம் உண்டு- சூலப்படை ஒன்று
உள்ளது; அது சூர் உளோர் – அச்சூலப்படை வீரம்
உடையவர்களுடைய; காலம் உண்டது- வாழ்நாளையெல்லாம்
உண்ணும் தன்மையது; கைக்கொள்வான் – அப்படையை இவன்
கையில் கொண்டவன்.
————–
‘மின்னின் ஒன்றிய விண்ணுளோர்,
‘முன் நில்’ என்று, அமர் முற்றினார்-
என்னின், என்றும் அவ் எண்ணிலார்
வென்னில் அன்றி, விழித்திலான்; 123-
மின்னின் ஒன்றிய – மின்னல் போல் ஒளி பொருந்திய;
விண்ணுளோர் – தேவர்கள்; முன்நில் என்று- எங்கள் முன்னே
நில் என்று; அமர் முற்றினார் – பெரும் போரைத்
தொடங்குவாராயின்; என்னின்- எப்போதும்; அவ் எண்ணிலார்-
அந்த எண்ணிக்கையில் அடங்காத தேவர்களின்; வென்னில்
அன்றி – முதுகுப் புறத்தில் அன்றி; விழித்திலான்-
இக்கும்பகருணன் விழித்தில்லாதவன்.
—————–
“தருமம் அன்று இதுதான்; இதால்
வரும், நமக்கு உயிர் மாய்வு” எனா,
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான். 124-
உருமின் வெய்யவனுக்கு- இடிபோல் கொடிய இராவணனுக்கு;
இது- பிறிதொருவன் இல்லுறை தவத்தியை மறை துறந்து வவ்விய
செயல்; தருமம் அன்று- அறச்செயலன்று; இதால்- இச்செயலால்;
நமக்கு உயிர் மாய்வு வரும் – நமக்கு உயிர் மாய்தல் நேரும்;
எனா- என்று; இருமை மேலும் உரை- இருமுறைக்கு மேல் பல
முறை நல் வார்த்தையை; இயம்பினான் – சொன்னான்.
—————-
‘மறுத்த தம்முனை, வாய்மையால்
ஒறுத்தும், ஆவது உணர்த்தினான்;
வெறுத்தும், ‘மாள்வது மெய்’ எனா
இறுத்து, நின் எதிர் எய்தினான். 125-
மறுத்த தம்முனை- தையலை விட மறுத்த தன் முன்னவனாகிய
இராவணனை; வாய்மையால் – தன் வாய்மைப் பற்றின் காரணமாக;
ஒறுத்தும் – வன் சொற்களால் கடிந்து கூறியும்; ஆவது
உணர்த்தினான் – நடக்க இருப்பது பற்றி அறிவு கொளுத்தினான்;
வெறுத்தும் – பலவாறு கூறியும் இராவணன் கேளாமையால்
வெறுப்புக் கொண்டு; மாள்வது மெய் – இறப்பது உண்மை; எனா
இறுத்து- என்று முடிவாகக் கூறிவிட்டு; நின் எதிர் எய்தினான்-
இவன் உன் எதிரே வந்து சேர்ந்தான்.
—————-
‘”நன்று இது அன்று நமக்கு” எனா,
ஒன்று நீதி உணர்த்தினான்;
இன்று காலன் முன் எய்தினான்’
என்று சொல்லி, இறைஞ்சினான். 126-
இது- பிறர்மனை கவர்ந்து சிறை வைத்த செயல்; நமக்குநன்று
அன்று- நமக்கு நன்மையைத் தருவது அன்று; எனா- என்று; ஒன்று நீதி – பொருத்தமான அறச்சொற்களை; உணர்த்தினான்
– இராவணனுக்கு எடுத்துச் சொன்னான்; இன்று காலன் முன்
எய்தினான்-அவன் அதைக் கேளாமையால் ஒருத்தரின் முன்னம்
சாதல் உண்டவர்க்கு உரியது என்று யமனுக்கு முன்னே வந்து
சேர்ந்தான்; என்று சொல்லி- என்று கூறி; இறைஞ்சினான்-
இராமனை வணங்கி நின்றான் வீடணன்.
————-
சுக்கிரீவன், கும்பகருணனை உடன் சேர்த்துக் கொள்ளல் நலம் எனல்
என்று அவன் உரைத்தலோடும், இரவி சேய், ‘இவனை
இன்று கொன்று ஒரு பயனும் இல்லை; கூடுமேல், கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும்; மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்;
“நன்று” என நினைந்தேன்’ என்றான்; நாதனும், ‘நயன் இது’ என்றான். 127-
என்று அவன் உரைத்தலோடும் – என்று அந்த வீடணன்
கூறிய உடனே; இரவி சேய் – சூரியன் மகனாகிய சுக்கிரீவன்;
இவனை இன்று- இக்கும்பகருணனை இப்போரில்; கொன்று ஒரு
பயனும் இல்லை- கொன்று பயன் ஒன்றும் இல்லை; கூடு மேல்
கூட்டிக்கொண்டு – இவன் நம்மொடு சேர்வான் ஆனால்
சேர்த்துக்கொண்டு; நின்றது புரிதும்- மேல் நிகழ வேண்டிய
செயல்களைச் செய்வோம்; இந்நிருதர் கோன் இடரும் நீங்கும்-
இந்த அரக்கர் தலைவனான வீடணனது துன்பமும் நீங்கும்; நன்று
என்று நினைந்தேன் என்றான் – இதுவே நல்லது என நான்
நினைத்தேன் என்றான்; நாதனும் – இராமனும்; இது நயன்
என்றான் – இச்செயல் அரசநீதிக்கு ஏற்றது என்று கூறினான்.
—————-
கும்பகருணனை அழைத்து வர வீடணன் செல்லுதல்
‘ஏகுதற்கு உரியார் யாரே?’ என்றலும், இலங்கை வேந்தன்,
‘ஆகின், மற்று அடியனே சென்று, அறிவினால், அவனை உள்ளம்
சேகு அறத் தெருட்டி, ஈண்டுச் சேருமேல், சேர்ப்பென்’ என்றான்;
மேகம் ஒப்பானும், ‘நன்று, போக!’ என்று விடையும் ஈந்தான். 128-
ஏகுதற்கு உரியார் யாரே? – கும்பகருணனிடத்தில்
செல்லுவதற்கு உரியவர் யாவர்; என்றலும்- என்று இராமன்
வினவுதலும்; இலங்கை வேந்தன்- இலங்கைக்கு அரசனாகிய
வீடணன்; ஆகின்- அப்படியானால்; அடியனே சென்று –
அடியனாகிய யானே போய்; அறிவினால் – அறிவின்
வல்லமையால்; அவனை உள்ளம் – அவனது உள்ளத்தில் உள்ள;
சேகு அறத்தெருட்டி- ஐயம் நீங்கத் தெளிவித்து; ஈண்டுச்
சேருமேல் – இங்கு வந்து சேர்வானேயானால்; சேர்ப்பென்
என்றான்-சேரச் செய்வேன் என்று கூறினான்; மேகம் ஒப்பானும்
– மேகத்தை ஒத்த நிறமும் பயனும் உடைய இராமனும்; நன்று
போக- நல்லது போய் வருக; என்று விடையும் ஈந்தான்- என்று
அவனுக்கு விடை தந்தான்.
————-
தந்திரக் கடலை நீந்தி, தன் பெரும் படையைச்
சார்ந்தான்; வெந் திறலவனுக்கு, ‘ஐய! வீடணன் விரைவில் உன்பால்
வந்தனன்’ என்னச் சொன்னார்; வரம்பு இலா உவகை கூர்ந்து,
சிந்தையால் களிக்கின்றான் தன் செறிகழல் சென்னி சேர்ந்தான். 129-
தந்திரக் கடலை நீந்தி – குரக்குச் சேனையாகிய
பெருங்கடலை அரிதில் கடந்து; தன்பெரும் படையைச்
சார்ந்தான்- தனது பெரிய அரக்கர் சேனையை வீடணன் சென்று
சேர்ந்தான்; வெந்திறலவனுக்கு – அ வனது வரவு கண்ட
அரக்கப்படையினர் கொடும் வலிமையுடைய அந்தக்கும்ப
கருணனுக்கு; ஐய!- தலைவனே; வீடணன் விரைவில் உன்பால்
வந்தனன் – வீடணன் விரைவாக உன்னிடத்து வருகிறான்; என்னச்
சொன்னார் – என்று சொன்னார்கள்; வரம்பு இலா உவகை
கூர்ந்து – அது கேட்டு எல்லை இல்லாத மகிழ்ச்சி மிக்கு;
சிந்தையால் களிக்கின்றான் தன் – மனமகிழ்பவனாகிய
கும்பகருணனது; செறிகழல் சென்னி சேர்த்தான் – வீரக்கழல்
அணிந்த கால்கள் தன் தலைமேல் படும்படி வீடணன் நிலத்தில்
விழுந்து வணங்கினான்.
—————-
கும்பகருணன் வீடணனிடம் ‘நீ வந்தது தகுதி அன்று’ எனல்
முந்தி வந்து இறைஞ்சினானை, முகந்து உயிர் மூழ்கப் புல்லி,
‘உய்ந்தனை, ஒருவன் போனாய்’ என மனம் உவக்கின்றேன் தன்
சிந்தனை முழுதும் சிந்த, தெளிவு இலார் போல மீள வந்தது
என், தனியே?’ என்றான், மழையின் நீர் வழங்கு கண்ணான். 130-
மழையின் நீர் வழங்கு கண்ணான் – மழை போல கண்ணீர்
சொரியும் கண்களையுடையவனான கும்பகருணன்; முந்தி வந்து
இறைஞ்சினானை – தன் முன்னே வந்து வணங்கியவனாகிய
வீடணனை; மோந்து – உச்சி மோந்து; உயிர் மூழ்கப் புல்லி-
ஈருடலும் ஓருயிரும் ஆகுமாறு இறுகத் தழுவி; ஒருவன்
உய்ந்தனை போனாய் என- நீ ஒருவனாவது விலகிச் சென்று
உய்ந்து விட்டாய் என்று எண்ணி; மனம் உவக்கின்றேன் – மனம்
பெருங்களிப்புக் கொள்ளுகிற; தன் – என்னுடைய; சிந்தனை
முழுதும் சிந்த- மன எண்ணம் முழுவதும் சிதறிக் கெடுமாறு;
தெளிவு இலார் போல- அறம் இது மறம் இது என மனத்
தெளிவில்லாதவர் போல; மீள- மீண்டும்; தனியே வந்தது என்
என்றான் – தனியாக வந்தது என்ன காரணம் கருதியோ என
வினாவினான்.
—————-
‘அவயம் நீ பெற்றவாறும், அமரரும் பெறுதல் ஆற்றா, உவய லோகத்தினுள்ள சிறப்பும், கேட்டு
உவந்தேன், உள்ளம்; கவிஞரின் அறிவு மிக்கோய்! காலன்
வாய்க் களிக்கின்றேம்பால் நவை உற வந்தது என், நீ?
அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? 131-
கவிஞரின் அறிவு மிக்காய் – கவிஞர்களைக் காட்டிலும்
அறிவு மிகுந்தவனே! நீ அவயம் பெற்றவாறும் – நீ இராமனிடம்
அடைக்கலம் பெற்ற தன்மையையும்; அமரரும் பெறுதல் ஆற்றா-
அதனால் தேவர்களும் பெறுதற்கு இயலாத; உவய லோகத்திலுள்ள
சிறப்பும் கேட்டு- இம்மை மறுமை ஆகிய இருவேறு உலகங்களில்
உள்ள சிறப்புக்கள் பெற்றதையும் ஒற்றர் சொல்லக் கேட்டு; உள்ளம்
உவந்தேன்- யான் மனம் மகிழ்ந்தேன்; நீ காலன் வாய்க்
களிக்கின்றேம் பால் – (அப்படிப்பட்ட) நீ காலன் வாயில்
இருந்துகொண்டு எங்களிடம்; நவை உற வந்தது என் – குற்றம்
உண்டாகுமாறு வந்த காரணம் என்னையோ?; அமுது உண்பாய்
நஞ்சு உண்பாயோ?-வாழ வைக்கும் அமுதத்தை உண்டு கொண்டு
இருக்கிற நீ அழிவுதரும் நஞ்சை உண்ண எண்ணுவையோ?
—————–
‘”குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று” என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை
உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம், அந்தோ! 132-
குமர – குமரனே; மன்ன- மன்னவனே; குலத்து இயல்பு
அழிந்ததேனும் – புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு
குலத்தின் தன்மை வேறு ஒருவன் இல்லுறை தவத்தியை மறை
துறந்து சிறை வைத்ததால் அழிந்து விட்டதாயினும்; உன்னைக்
கொண்டு- உன்னை முதலாகக் கொண்டு; புலத்தியன் மரபு
மாயாப் புண்ணியம் பொருந்திற்று- அப்புலத்தியன் கால்வழி
அழிந்திடாத புண்ணியத்தைப் பெற்றது;என்னா- என்று; வலத்து
இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்- நான் என் வெற்றி
பொருந்திய தோளைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளுகின்றேன்;வாயை
உலத்தினை திரிய வந்தாய் – ஆனால் நீ என் வாய் ஈரம்
உலருமாறு திரும்பி வந்தாய்; அந்தோ உள்ளம் உளைகின்றது-
அதுகண்டு ஐயோ என் உள்ளம் வருந்துகின்றது என்றவாறு.
—————-
‘அறப் பெருந் துணைவர், தம்மை அபயம் என்று அடைந்த நின்னைத்
துறப்பது துணியார், தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்;
இறப்பு எனும் பதத்தை விட்டாய்; இராமன் என்பளவும் மற்று இப்
பிறப்பு எனும் புன்மை இல்லை; நினைந்து, என்கொல் பெயர்ந்த வண்ணம்? 133-
அறப் பெருந்துணைவர் தம்மை- தர்மத்தின் தனிமை
தீர்ப்பானாகி அறத்திற்குப் பெருந்துணைவரான இராமனை;
அபயம் என்று அடைந்த நின்னை- சரணம் என்று அடைந்த
உன்னை; தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் – தங்களுடைய
அருமையான உயிர் நீங்கப் போகிற நிலை வந்தாலும்; துறப்பது
துணியார் – கை விடுவதற்குத் துணியமாட்டார்கள்;இறப்பு எனும்
பதத்தை விட்டாய் – நீ இராமனையடைக்கலமாக அடைந்ததால்
இறப்பு என்னும் நிலையைக் கடந்துவிட்டாய்; இராமன்
என்பளவும் மற்று இப்பிறப்பு எனும் புன்மை இல்லை-
இராமனது திருநாமத்தைக் கூறிக் கூறி வரும் உனக்குப் பிறப்பு
என்னும் இழிவும் இல்லை; நினைந்து பெயர்ந்த வண்ணம் என்-
அப்படியிருக்கும் போது நீ நினைத்து இங்கு மீண்டு வந்தது
எதனால் என்றவாறு.
————–
‘அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று, அவன் தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமை உறவு எனப் பெறுதி போலாம்? 134-
அறம் என நின்ற நம்பற்கு- அறத்தின் மூர்த்தி எனச்
சொல்லுமாறு நின்ற தலைவனுக்கு; அடிமை பெற்று- அடிமையாகப்
பெற்று; அவன் தனாலே- அவனது கருணை வள்ளல் தன்மையாலே;
மறம் என நின்ற மூன்றும்- பாவத்துக்குக் காரணம் என்னுமாறு
நின்ற காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும்; மருங்கு அற
மாற்றி- முழுதும் இல்லாமல் போக்கி; மற்றும்- மேலும்; திறம் என
நின்ற தீமை- வலிமையுடையதாக இருந்த பிற தீய பண்புகளையும்;
இம்மையே தீர்ந்த செல்வ-இப்பிறவியிலேயே போக்கிய செல்வனே;
பிறர் மனை நோக்கு வேமை- அயலவரது மனைவியைஅறந்துறந்து நோக்கும் எங்களை;
உறவு எனப் பெறுதி போலாம் – உறவு என இனிமேலும்
கொள்வாய் போலும் என்றவாறு.
—————
‘நீதியும், தருமம் நிறை நிலைமையும், புலமைதானும்,
ஆதி அம் கடவுளாலே அருந் தவம் ஆற்றிப் பெற்றாய்;
வேதியர் தேவன் சொல்லால், விளிவு இலா ஆயுப் பெற்றாய்;
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும்,-தக்கோய்! 135-
தக்கோய் – நற்பண்புகள் உடையவனே; நீதியும்-
நீதியையும்; தருமம் நின்ற நிலைமையும்- அறத்தில் ஊன்றி
இருக்கின்ற தன்மையையும்; புலமை தானும்-நல்லறிவையும்; ஆதி
அம் கடவுளாலே – முழுமுதற் கடவுள் பால்; அருந்தவம்
ஆற்றிப் பெற்றாய் – மிக்க தவம் செய்து அடைந்தாய்; வேதியர்
தேவன் சொல்லால் – அந்தணர்க்குத் தலைவனாகிய பிரமன்
கொடுத்த வரத்தால்; விளிவு இலா ஆயுள் பெற்றாய்- அழிவற்ற
ஆயுளை அடைந்தாய்; சாதியின் புன்மை- இவ்வாறிருக்கவும்
சாதியினது இழிவை; இன்னும் தவிர்ந்திலை போலும்- இன்னும்
விட்டு விடவில்லை போலும்.
—————–
ஏற்றிய வில்லோன், யார்க்கும் இறையவன், இராமன் நின்றான்;
மாற்ற அருந் தம்பி நின்றான்; மற்றையோர் முற்றும் நின்றார்;
கூற்றமும் நின்றது, எம்மைக் கொல்லிய; விதியும் நின்ற;
தோற்ற எம் பக்கல், ஐய! வெவ் வலி தொலைய வந்தாய். 136-
ஐய- ஐயனே; யார்க்கும் இறையவன் இராமன்-
யாவருக்கும் தலைவனாகிய இராமன்; ஏற்றிய வில்லோன்
நின்றான்- நாண் ஏற்றிய வில்லையுடையவனாய்க் காத்து நின்று
கொண்டிருக்கிறான்; மாற்ற அருந்தம்பி நின்றான்-
விலக்குதற்கு அரிய பெருவலி படைத்த தம்பியும் நின்று
கொண்டிருக்கிறான்; மற்றையோர் முற்றும் நின்றார் – பிற
படை வீரர்களாகிய வானரரும் மிகுதியும் இருக்கின்றார்கள்;
எம்மைக் கொல்லிய கூற்றமும் நின்ற- எங்களைக்
கொல்லுவதற்காக யமனும் காத்திருக்கிறான்; விதியும் நின்ற
– அதற்கு ஏற்பவே விதியும் அமைந்துள்ளது; வெவ்வலி
தொலைய- உனது தவவலியும் அறவலியும் கெட; தோற்ற எம்
பக்கல் வந்தாய் – தோற்க இருக்கிற எங்கள் பக்கம் ஏன்
வந்தாய்.
—————-
‘ஐய! நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி, ஆங்கே
உய்கிலை என்னின், மற்று இல் அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து, பாழ் முழுதும் பட்டால்,
கையினால் எள் நீர் நல்கி, கடன் கழிப்பாரைக் காட்டாய். 137-
ஐய – ஐயனே; அயோத்தி வேந்தற்கு- அயோத்திக்கு
வேந்தன் ஆகிய இராமனுக்கு; அடைக்கலம் ஆகி – அடைக்கலப்
பொருள் ஆகி; நீ ஆங்கே- நீ அங்கு; உய்கிலை என்னின்-உயிர்
உய்ந்து வாழாய் ஆயின்; மற்று இவ் அரக்கராய் உள்ளோர்
எல்லாம் – இந்த அரக்கர்களாய் உள்ள நாங்கள் எல்லாம்;
எய்கணை மாரியாலே- இராமன் எய்யும் அம்பு மழையாலே;
முழுதும் இறந்து பாழ்பட்டால் – முற்றிலும் இறந்து பாழாகிப்
போனால்; கையினால் எள்நீர் நல்கி- கையினால் எள்ளொடு
கூறிய நீரை இறந்தவர் பொருட்டுக் கொடுத்து; கடன் கழிப்பாரைக்
காட்டாய் – நீர்க் கடன் நிறைவேற்றுவர் யாவர் உளர் எனக்
காட்டாய் என்றவாறு.
——————
‘வருவதும், இலங்கை மூதூர்ப் புலை எலாம் மாண்ட பின்னை;
திருவுறை மார்பனோடும் புகுந்து, பின் என்றும் தீராப் பொருவ
அருஞ் செல்வம் துய்க்கப் போதுதி, விரைவின்’ என்றான்,
‘கருமம் உண்டு உரைப்பது’ என்றான்; ‘உரை’ என, கழறலுற்றான்; 138-
இலங்கை மூதூர் வருவதும்-நீ இலங்கை மூதூர்க்கு(வரத்தக்க
காலம் இப்போது அன்று வரும் காலம்; புலை எலாம் மாண்ட
பின்னை- இழிதொழில் உடைய அரக்கர் கூட்டம் எல்லாம்
அழிந்தபிறகு; திருவுறை மார்பனோடும் புகுந்து – திருமகள்
வாழும் மார்பினை உடைய இராமனோடு புகுந்து; பின் என்றும்
தீராப்- பிறகு என்றும் அழியாத; பொருவ அருஞ்செல்வம்-
ஒப்பற்ற இலங்கையரசச் செல்வத்தையும் மற்றும் வீட்டு உலகச்
செல்வத்தையும்; துய்க்கப் போதுதி விரைவின்-
அனுபவிப்பதற்காக விரைவில் திரும்பிப் போய்விடுக; என்றான்-
என்று கும்பகருணன் கூறினான்; கருமம் உண்டு உரைப்பது
என்றான்- (அதற்கு வீடணன் உன்னிடம்)சொல்லவேண்டிய காரியம்
ஒன்று உள்ளது என்றான்; உரை என- அதைச் சொல் என்று
கும்பகருணன் கேட்க; கழறலுற்றான் – வீடணன் கூறத்
தொடங்கினான்.
———
இராமனைச் சரண் புகுமாறு கும்பகருணனுக்கு வீடணன் உரைத்தல்
‘இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன்
அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி,
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139-
இருள் உறு சிந்தையேற்கும் – அறியாமை நிரம்பிய
மனத்தையுடையவனான எனக்கும்; இன் அருள் சுரந்த வீரன்-
இனிய அருளைச் சுரந்து அடைக்கலம் தந்த வீரனாகிய இராமன்;
நீ சேரின் அருளும் – நீ அடைக்கலமாக வந்து சேரினும் அருள்
புரிவான்; ஒன்றோ-அது மட்டுமா?; அவயமும் அளிக்கும்-உனக்கு
எவராலும் துன்பம் நேராமல் அபயக் கருணையும் செய்வான்;
அன்றி- அதோடு; மருள் உறு பிறவி நோய்க்கு- மயக்கம் தருகிற
பிறவிப் பிணிக்கு; மருந்தும் ஆம்- மருந்தும் ஆவான்; மாறிச்
செல்லும்- இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் தன்மையுடைய;
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து – உருண்டு வரும் வண்டிச்
சக்கரம் போன்ற இந்த உலக வாழ்வை நீக்கி; வீடு அளிக்கும்
அன்றே- வீட்டுலகை அளிப்பான் அன்றோ?.
————–
‘எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென்; தந்து, உன் ஏவலின் நெடிது நிற்பென்;
உனக்கு இதின் உறுதி இல்லை; உத்தம! உன் பின் வந்தேன்
மனக்கு நோய் துடைத்து, வந்த மரபையும் விளக்கு வாழி! 140-
உத்தம! – உத்தமனே; எனக்கு அவன் தந்த- எனக்கு அந்த
இராமன் கொடுத்த; செல்வத்து இலங்கையும்- செல்வத்தையுடைய
இலங்கையையும்; அரசும் – அதனை ஆளும் உரிமையினையும்;
எல்லாம் நினக்கு நான் தருவென் – பிற எல்லாவற்றையும்
உனக்கு நான் கொடுப்பேன்; தந்து- அவ்வாறு கொடுத்து; உன்
ஏவலின் நெடிது நிற்பென் – உன் ஏவலின் வழியே என்றும்
நடப்பேன்; உனக்கு இதின் உறுதி இல்லை- உனக்கு இதைக்
காட்டிலும் உறுதி தருவது வேறு ஒன்றும் இல்லை; உன் பின்
வந்தேன் – உன் பின் பிறந்தோனாகிய எனது; மனக்கு நோய்
துடைத்து – மனத்தில் உள்ள வருத்தத்தைப் போக்கி; வந்த
மரபையும் விளக்கு- பிறந்த குலமரபையும் விளங்கச் செய்வாய்.
——————-
‘போதலோ அரிது; போனால், புகலிடம் இல்லை; வல்லே,
சாதலோ சரதம்; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால், உளதாம் ஆவி அநாயமே உகுத்து என்? ஐய!
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும். 141-
ஐய!- ஐயனே; நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் –
நீதியையும் அறத்தையும் பற்றி நிற்பவனே!; போதலோ அரிது
– போரில் உயிர் தப்பிப் போதல் மிக அரிதாகும்; போனால்
புகலிடம் இல்லை – அவ்வாறு தப்பிப் போனாலும் புகலாக
அடைவதற்கு உரிய வேறு இடமும் இல்லை; வல்லே சாதலோ
சரதம் – விரைவாகச் சாவதோ உறுதி; ஆதலால் – ஆதலால்;
உளதாம் ஆவி- உள்ள உயிரினை; அநாயமே உகுத்து என்-
வீணாகப் போக்கி என்ன பயன்?; வேத நூல் மரபுக்கு ஏற்ற-
வேதநூல்களில் கூறிய முறைமைக்குத் தக்க; ஒழுக்கமே
பிடிக்கவேண்டும் – நல்லொழுக்கத்தையே உறுதியாகக்
கடைப்பிடிக்கவேண்டும்.
—————–
‘தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார்,
தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?
நீ அவை அறிதி அன்றே? நினக்கு நான் உரைப்பது என்னோ?
தூயவை துணிந்த போது, பழி வந்து தொடர்வது உண்டோ ? 142-
தருமம் பார்ப்பார்- தருமத்தையே சிறப்பாகப் பார்ப்பவர்கள்;
தீயவை செய்வர் ஆகின்- தீய செயல்களைச் செய்வார்களாயின்;
சிறந்தவர் – அன்பிற் சிறந்தவர்; பிறந்த உற்றார்- உடன் பிறந்த
உறவு முறையினர்; தாய் அவை- தாயாகிய அவ்வை; தந்தைமார்-
தந்தைமார்; என்று உணர்வரோ- என்று எண்ணிப் பார்ப்பார்களா?;
நீ அவை அறிதி அன்றே- நீ அவற்றை அறிவாய் அல்லவா?;
நினக்கு நான் உரைப்பது என்னோ- உனக்கு நான் சொல்ல வேண்டுவது என்ன உள்ளது; தூயவை துணிந்த போது-
தூய்மையான செயல்களைச் செய்யத் துணியும் போது; பழி வந்து
தொடர்வது உண்டோ? – பழிச் செயல் வந்து தொடர்வது
உண்டாகுமா?
—————–
‘மக்களை, குரவர்தம்மை, மாதரை மற்றுளோரை,
ஒக்கும் இன் உயிர் அன்னாரை, உதவி செய்தாரோடு ஒன்ற,
“துக்கம், இத் தொடர்ச்சி” என்று, துறப்பரால், துணிவு பூண்டோர்;
மிக்கது நலனே ஆக, வீடுபேறு அளிக்கும் அன்றே! 143-
துணிவு பூண்டோர் – உறுதியான துறவு எண்ண வலிமை
உள்ளவர்கள்; மக்களை- பெற்ற மக்களையும்; குரவர் தம்மை
– இருமுது குரவரையும்; மாதரை- மனைவியரையும்; மற்றுளோரை-
மற்றுமுள்ள உறவினர்களையும்; இன் உயிர் ஒக்கும் அன்னாரை-
இனிய உயிரை ஒத்த நண்பர்களையும்; உதவி செய்தாரோடு- உதவி
செய்தவர்களையும் ஒன்ற- முழுமையாக; இத்தொடர்ச்சி துக்கம்
என்று- இந்த உலகியல் பந்தத் தொடர்ச்சி துன்பம் விளைவிக்கும்
என்று எண்ணித்; துறப்பாரால் – துறந்து விடுவார்கள்; மிக்கது-
சிறந்ததாகிய அத்துறவு; நலனே ஆக-நற்செயலாக ஆகி; வீடு பேறு
அளிக்கும் அன்றே – வீட்டுலகத்தைத் தருமல்லவா?
——————–
‘தீவினை ஒருவன் செய்ய, அவனொடும் தீங்கு இலாதோர்
வீவினை உறுதல், ஐய! மேன்மையோ? கீழ்மைதானோ?
ஆய் வினை உடையை அன்றே? அறத்தினை நோக்கி, ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ, கொன்றனன், தவத்தின் மிக்கான்? 144-
ஐய!-ஐயனே; தீவினை ஒருவன் செய்ய-தீய செயலை ஒருவன்
செய்ய; அவனொடும் தீங்கு இலாதோர் – அதற்காக அவனொடு
தீமை செய்யாதவர்களும்; வீவினை உறுதல் – உயிர் விடுதலை
அடைதல்; மேன்மையோ- மேன்மை விளைவிப்பதா?; கீழ்மை
தானோ – தாழ்வினை விளைவிப்பதா?; ஆய்வினை உடையை
அன்றே – நீ ஆய்வு செய்யும் திறமை படைத்துள்ளாய் அல்லவா?
அறத்தினை நோக்கி – அறத்துக்காகப் பார்த்து; ஈன்ற தாய்
– தன்னைப் பெற்ற தாய்; வினை செய்ய அன்றோ- தீய செயலைச்
செய்ததனாலன்றோ; தவத்தின் மிக்கான் கொன்றனன்- தவத்தில்
மிகுந்த பரசுராமன் அத்தாயையே கொன்றான் என்றவாறு.
——————
‘கண்ணுதல், தீமை செய்ய, கமலத்து முளைத்த தாதை
அண்ணல் தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே?
புண் உறு புலவு வேலோய்! பழியொடும் பொருந்தி, பின்னை,
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ? 145-
புண் உறு புலவு வேலோய்!- பகைவர் உடல் புண்ணிலிருந்து
பொருந்திய ஊன் நாற்றம் படிந்த வேற்படையை உடையவனே;
கமலத்து முளைத்த தாதை அண்ணல்- தாமரையில் தோன்றிய
பெருமை மிகு பிரமன்; தீமை செய்ய – ஒரு தீய தொழிலைச்
செய்தபோது; கண்ணுதல் – நெற்றியில் கண்ணுடைய சிவபிரான்;
தன் தலையின் ஒன்றை அறுக்க- அவனது தலையில் ஒரு
தலையை அறுத்துவிட; அன்று அமைந்தான் அன்றோ-அப்போது
அவன் அதற்கு உடன்பட்டான் அல்லவா?; பழியொடும் பொருந்தி-
இம்மையில் பழியைப் பொருந்தி; பின்னை- மறுமையில்; எண்ணுறு
நரகின் வீழ்வது- கொடிய நரகத்தில் வீழ்வதற்குக் காரணமான
செயலை; அறிஞரும் இயற்றுவாரோ- அறிஞரும் செய்வார்களோ.
——————
‘உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்து, அதன் உதிரம் ஊற்றி,
சுடல் உறச் சுட்டு, வேறு ஓர் மருந்தினால், துயரம் தீர்வர்;
கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால்
மடலுடை அலங்கல் மார்ப! மதி உடையவர்க்கு மன்னோ! 146-
மடலுடை அலங்கல் மார்ப!- இதழ்களையுடைய மலர்களால்
ஆன மார்பை உடையவனே!; உடலிடைத் தோன்றிற்று ஒன்றை-
உடலில் தோன்றிய ஒரு கழற்புண்ணை; அறுத்து- கத்தியால் அறுத்து;
அதன் உதிரம் ஊற்றி – அதில் உள்ள தீய உதிரத்தையும் சீழ்
நீரையும் வெளியேற்றி; சுடல் உறச் சுட்டு – கார மருந்துகளை
அல்லது தீச்சுடலைப் பொருத்தமாக வைத்துச் சுட்டு; வேறு ஓர்
மருந்தினால்- புண்ணை ஆற்றுவதற்குரிய வேறு ஒரு மருந்தினால்;
துயரம் தீர்வர்- உலகத்தவர் துயரம் நீங்குவார்கள்; மதி
உடையவர்க்கு மன்னோ – அறிவுடையவர்களுக்கு; கடலிடைக்
கோட்டம் தேய்த்துக் கழிவது- கடலின் கண் நறுமணப்
பொருள்களைத் தேய்த்துக் கழிய விடுவது; கருமம் அன்றால் –
செயத்தகு செயலாகாது.
——————
‘காக்கலாம் நும் முன் தன்னை எனின், அது கண்டது இல்லை;
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும், ஆவது இல்லை;
தீக் கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம்; செருவில் ஆவி
போக்கலாம்; புகலாம், பின்னை நரகு; அன்றிப் பொருந்திற்று உண்டோ ? 147-
நும்முன் தன்னைக் காக்கலாம் எனின் – உன் தமையனான
இராவணனைக் காக்கலாம் என்றாலோ; அது கண்டது இல்லை-
அதற்கு உபாயம் ஏதும் ஏற்பட்டிலது; அறத்தை வேறே
ஆக்கலாம் என்னினும்-அவனுடன் இருந்து தருமத்தை வேறாகச்
செய்யலாம் என்றாலும்; ஆவது இல்லை – அச்செயல் ஆவது
அன்று; தீக்கலாம் கொண்ட தேவர் – நம்மோடு கொடிய
மாறுபாடு கொண்ட தேவர்கள்; சிரிக்கலாம் செருவில் – சிரிக்கும்
படி நடக்க உள்ள போரில்; ஆவி போக்கலாம்-உயிரை விடலாம்;
பின்னை நரகு புகலாம் – பின்பு நரகத்திலும் புகலாம்; அன்றிப்
பொருந்திற்று உண்டோ- இதுவல்லாது வேறு பொருந்திய செயல்
உண்டோ என்றவாறு.
————–
‘மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை; மண்ணின் மேலா
இறங்கினை; இன்றுகாறும் இளமையும் வறிதே ஏக,
உறங்கினை என்பது அல்லால், உற்றது ஒன்று உளதோ? என், நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது?-ஐயா! 148-
ஐயா- ஐயனே; இன்று காறும் – இன்று வரையிலும்; இளமையும்
வறிதே ஏக- இளமைப் பருவமும் வீணாகக் கழியுமாறு; உறங்கினை
என்பது அல்லால் – ஆறு மாதம் உறங்குவதும் ஒருநாள்
விழிப்பதுமாக இருக்கின்றாய் என்பதல்லது; மறம் கிளர் செருவில்
வென்று வாழ்ந்திலை-பெரு வீரனாய் இருந்தும் வீரம் விளங்குகின்ற
போரில் வென்று வாழ்வு பெறவில்லை; மண்ணின் மேலா
இறங்கினை-நில உலகில் மதிப்பு இழந்து தாழ்வு அடைந்து விட்டாய்;
உற்றது ஒன்று உளதோ- பெற்ற நற்பயன் வேறு ஒன்று உள்ளதோ?;
நீ அறங்கெட உயிரை நீத்து- நீ இப்போது அறம் கெடுமாறு
உயிரை இராவணனுக்காக விட்டு; மேற் கொள்வான் அமைந்தது
என் – பெற இருப்பது என்னவோ?
——————
திரு மறு மார்பன் நல்க, அனந்தரும் தீர்ந்து, செல்வப்
பெருமையும் எய்தி, வாழ்தி; ஈறு இலா நாளும் பெற்றாய்;
ஒருமையே அரசு செய்வாய்; உரிமையே உனதே; ஒன்றும்
அருமையும் இவற்றின் இல்லை; காலமும் அடுத்தது, ஐயா! 149-
ஐயா! – ஐயனே; திருமறு மார்பன் நல்க- திருமகளையும்,
ஸ்ரீவத்சமென்னும் மச்சத்தையும் திருமார்பில் கொண்ட மாலின்
திருவவதாரமாகிய இராமபிரான் கருணை செய்தலால்; அனந்தரும்
தீர்ந்து-உன் உறக்க சாபம் நீங்கப் பெற்று; செல்வப் பெருமையும்
எய்தி- செல்வச் செழிப்பையும் பெற்று; ஈறு இலா நாளும்
பெற்றாய் வாழ்தி- அழிவில்லாத வாழ்நாளும் பெற்று வாழ்வாயாக;
ஒருமையே அரசு செய்வாய் – நீ இணையின்றி அரசு செய்வாய்;
உரிமையே உனதே- அதற்கு உனக்கு உரிமையும் உன்னதே;
இவற்றின் ஒன்றும் அருமையும் இல்லை- இவ்வாறு எல்லாம்
செய்வதில் சிறிதும் அருமையும் இல்லை; காலமும் அடுத்தது-
அதற்குரிய காலமும் வந்துவிட்டது.
—————
‘தேவர்க்கும் தேவன் நல்க, இலங்கையில் செல்வம் பெற்றால்,
ஏவர்க்கும் சிறியை அல்லை; யார், உனை நலியும் ஈட்டார்?-
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார், அறத்தை முற்றும்
காவற்குப் புகுந்து நின்றார், காகுத்த வேடம் காட்டி! 150-
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் – அரி அரன்
அயன் என்னும் மூவர்க்கும் தலைவரான பரம்பொருள்; அறத்தை
முற்றும் காவற்கு – அறத்தை முழுதும் காக்கும் பொருட்டுக்;
காகுத்த வேடம் காட்டி புகுந்து நின்றார் – காகுத்த
வேடங்கொண்டு நில உலகில் புகுந்துள்ளார்; தேவர்க்கும் தேவன்
நல்க- அத்தகைய தேவர்க்குத் தேவன் ஆகிய இராமன் தந்தருள;
இலங்கையில் செல்வம் பெற்றால் – இலங்கையை ஆளும்
செல்வத்தைப் பெற்றால்; ஏவர்க்கும் சிறியை அல்லை-எவருக்கும்
சிறுமையுடையவன் ஆகாய்; உனை யார் நலியும் ஈட்டார்-
உன்னை எதிர்த்து வருத்தக் கூடியவர் யாவர்?
—————
‘உன் மக்கள் ஆகி உள்ளார், உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார், இக் குடிக்கு இறுதி சூழ்ந்தான்-
தன் மக்கள் ஆகி உள்ளார், தலையொடும் திரிவர் அன்றே-
புன் மக்கள் தருமம் பூணாப் புல மக்கள் தருமம் பூண்டால்? 151-
புன் மக்கள் தருமம் பூணாப் – நீ புல்லிய
தன்மையுடைய அரக்கர்களின் தருமத்தை மேற்கொள்ளாமல்;
புலமக்கள் தருமம் பூண்டால்- அறிவுடை மக்களது தருமத்தைக்
கைக்கொண்டால்; உன் மக்கள் ஆகி உள்ளார்- உன் மக்களாய்
இருப்பவர்களும்; உன்னொடும் ஒருங்கு தோன்றும்என்
மக்கள் ஆகி உள்ளார் – உன்னோடு உடன் பிறந்த எனக்கு
மக்களாய் இருப்பவர்களும்; இக்குடிக்கு இறுதி சூழ்ந்தான்-
இந்த அரக்கர் குலத்துக்கு அழிவைத் தேடியவனான இராவணன்;
தன் மக்கள் ஆகி உள்ளார் – தனக்கு மக்களாய்
இருப்பவர்களும்; தலையொடும் திரிவர் அன்றே-
இராமபாணத்தால் தலையை இழக்காது திரிவர் அன்றோ.
——————
‘முனிவரும் கருணை வைப்பர்; மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை; “ஈறு உண்டு” என்று இரங்க வேண்டா;
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்;-
கனி வரும் காலத்து, ஐய! பூக் கொய்யக் கருதலாமோ? 152-
ஐய- ஐயனே!; முனிவரும் கருணை வைப்பர் – நீ இராமனைச்
சேர்ந்தால் உன் மீது பகைமை வைத்துள்ள முனிவர்களும் கருணை
கொள்வார்கள்; மூன்று உலகத்தும் தோன்றி இனி வரும் பகையும்
இல்லை- மூன்று உலகங்களிலும் பகையாகத் தோன்றி வருபவரும்
எவருமிலர்; ஈறு உண்டு என்று இரங்க வேண்டா- மரணம் உண்டு
என்று இரக்கப்படத் தேவையில்லை; துணிவரும் செறுநர் ஆன
தேவரே துணைவர் ஆவர்- வெறுப்பால் வரும் மிகு பகை கொண்ட
தேவர்களே நமக்குத் துணைவராக மாறுவர்; கனி வரும் காலத்து
பூக்கொய்யக் கருதலாமோ- கனி தோன்றும் காலத்தில் பூக்களைக்
கொய்துவிட நினைக்கலாமோ?
———-
‘வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி, விட்டான்;
காதலால், என்மேல் வைத்த கருணையால், கருமம் ஈதே;
ஆதலால், அவனைக் காண, அறத்தொடும் திறம்பாது, ஐய!
போதுவாய் நீயே’ என்னப் பொன் அடி இரண்டும் பூண்டான். 153-
ஐய! – ஐயனே; வேதநாயகனே- வேதங்கள் துதிக்கும்
தலைவனாகிய இராமனே; கருணையால்- உன்மீது கொண்டுள்ள
அருளால்; உன்னைவேண்டி- உன்னை வேண்டி அழைத்து
வருமாறு; விட்டான் – என்னை அனுப்பினான்; காதலால்
என்மேல் வைத்த கருணையால் – அதற்குக் காரணம் அவன்
என் மேல் சிறப்பாகக் கொண்டுள்ள காதலாகிய திருவருளாகும்;
கருமம் ஈதே- செய்யத்தக்க காரியமும் அதுவேயாகும்; ஆதலால்-
ஆகவே; அறத்தொடும் திறம்பாது- அறத்தில் இருந்து
மாறுபடாமல்; நீயே அவனைக் காணப் போதுவாய் – நீயே
அவ்விராமனைக் காண்பதற்காக வருவாய்; என்ன- என்று கூறிப்;
பொன்அடி இரண்டும் பூண்டான் – அக்கும்பகருணனது அழகிய
திருவடி இரண்டும் தலைமேல் பூண்டான்.
—————–
கும்பகருணனின் மறுப்புரை
‘தும்பி அம் தொடையல் மாலைச் சுடர் முடி படியில் தோய,
பம்பு பொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து, மார்பில் தழுவி, தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான், இனையன விளம்பலுற்றான்; 154-
தும்பி அம் தொடையல் மாலைச் சுடர்முடி- வண்டுகள்
மொய்க்கிற அழகிய தொடுத்தல் அமைந்த மலர் மாலையைச் சூடிய
ஒளி பொருந்திய முடி; படியில் தோய- நிலத்தில் படிய விழுந்து
வணங்கிப்; பம்பு பொற்கழல்கள் – பரவியுள்ள பொன்னால் ஆகிய
வீரக்கழல்கள் அணிந்த கால்களை; கையால் பற்றினன் புலம்பும்-
கையால் பற்றிப் புலம்புகிற; பொன் தோள் தம்பியை- அழகிய
தோள்களையுடைய தம்பியாகிய வீடணனை; எடுத்து மார்பில் தழுவி-
எடுத்து மார்பில் தழுவிக் கொண்டு; தன் தறுகணூடு- தன் வீரம்
வெளிப்படும் கண்களின் வழியாக;வெம்புணீர் சொரிய நின்றான்- வெப்பத்துடன் கூடிய குருதி
வெளிப்பட நின்றவனாகிய கும்பகருணன்; இனையன
விளம்பலுற்றான்- இத்தகைய சொற்களைச் சொல்லல் ஆனான்.
—————–
‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி, 155-
தார்க்கோல மேனி மைந்த- மார்பில் மாலையணிந்த அழகிய
உடம்பினை உடைய மைந்தனே; நெடிது நாள் வளர்த்து- என்னை
நீண்ட நாள் அருமையாக வளர்த்துப்; பின்னை- இன்று;
போர்க்கோலம் செய்து விட்டாற்கு- தன் கையாலேயே
போர்க்கோலம் பூணுவித்துப் போர்க்குச் சென்று வா என விட்ட
இராவணனுக்காக; உயிர் கொடாது- போரில் என்னுயிரைக்
கொடுக்காமல்; நீர்க்கோல வாழ்வை நச்சி- நீரில் எழுதிய
கோலத்தைப் போல் விரைந்து அழியும் செல்வ வாழ்க்கையை
விரும்பி; அங்குப் போகேன் – அந்த இராமனிடம் போய்ச்
சேரமாட்டேன்; என் துயர் தவிர்த்தி ஆகின்- என் துன்பத்தைப்
போக்க விரும்பினால்; கார்க்கோல மேனியானை- காளமேகம்
போல் கரிய அழகிய திருமேனியுடைய இராமனை; கடிதின் ஏகி
கூடுதி – விரைவில் சென்றடைவாய்.
————————
‘மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால், நீ உலைவு
இலாத் தருமம் பூண்டாய்; உலகு உளதனையும் உள்ளாய்; தலைவன் நீ,
உலகுக்கு எல்லாம்; உனக்கு அது தக்கதேயால்;
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால். 156-
நீ மலரின் மேல் இருந்த வள்ளல் – தாமரை மலரின் மேல்
இருக்கும் வள்ளலாகிய பிரமதேவனது; வழு இலா வரத்தினால்-
குற்றம் இல்லாத வரத்தினால்; உலைவு இலாத் தருமம் பூண்டாய்
– என்றும் அழிவு இல்லாத தருமத்தைக் கைக்கொண்டாய்; உலகு
உளதனையும் உள்ளாய் – உலகம் உள்ளவரை அழியாமல் வாழ
உள்ளாய்; நீ உலகுக்கு எல்லாம் தலைவன்- நீ உலகுக்கெல்லாம்
தலைவனாய் உள்ளவன்; உனக்கு அது தக்கதேயால்-
அப்படிப்பட்ட உனக்கு இராமனைச் சேர்தல் என்னும் அது
தகுதியானது; புலை உறு மரணம் எய்தல் – இழிவு பொருந்திய
மரணத்தை அடைதல்; எனக்கு இது புகழதேயால் – எனக்குப்
புகழை விளைவிக்கக் கூடியது.
————–
‘கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின்,
பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி,
ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா. 157-
கருத்து இலா இறைவன் – மந்திரம் கேட்கும் சூழ்தல் இல்லாத
தலைவன்; தீமை கருதினால்- தீத்தொழில் செய்ய எண்ணினால்;
அதனைக் காத்துத் – அவன் அவ்வாறு செய்யாமல் தடுத்து;
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் – திருத்துதல்
கூடுமாயின் அன்றோ திருத்தலாம்; தீராது ஆயின்- அவ்வாறு திருத்த
முடியாது போனால்; பொருத்துறு பொருள் உண்டாமோ-அவனுக்கு எதிர் சென்று நின்று அடையத் தக்க பெரும் பொருள்
உண்டோ?; உண்டவர்க்கு உரியது- ஒருவனுடைய உணவை உண்டு
வளர்ந்தவர் செய்ய உரிய செயல்; பொருதொழிற்கு உரியர் ஆகி-
அவனுக்காகப் போர் செய்யும் தொழிலுக்கு உரிமையுடையவர் ஆகி;
ஒருத்தரின் முன்னம் சாதல் – ஒப்பற்ற தலைவனுக்கு முன்னர்ச்
சாதலே; அம்மா- கேட்பாயாக.
——————
‘தும்பி அம் தொடையல் வீரன் சுடு கணை துரப்ப, சுற்றும்
வெம்பு வெஞ் சேனையோடும், வேறு உள கிளைஞரோடும்,
உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு,
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்? 158-
உம்பரும் பிறரும் போற்ற- தேவர்களும் மற்றுள்ளோரும்
போற்றி வணங்குமாறு; மூவுலகை தமையன் ஒருவன் ஆண்டு-
மூன்று உலகங்களையும் ஒப்பற்றவனாய் ஆண்டவனாகிய அண்ணன்;
தும்பி அம் தொடையல் வீரன் – வண்டுகள் மொய்க்கின்ற அழகிய
மலர் மாலையை அணிந்த வீரனாகிய இராமன்; சுடுகணை துரப்ப-
சுடுகின்ற அம்புகளைச் செலுத்துவதால்; வெம்பு
வெஞ்சேனையோடும் – வாடுகின்ற சினம் மிக்க படைகளுடனும்;
வேறு உள கிளைஞரோடும் – பிற உறவினர்களுடனும்; தம்பியை
இன்றி- தனக்காக இறக்கத் தம்பியும் இன்றி; மண் மேல் மாண்டு
கிடப்பனோ- மண் மேல் இறந்து கிடப்பதற்கு உரியவனா?
—————–
‘அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக,
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெருங் கிரி நெருங்கப் பேர்த்த
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப, கூசி,
துணை இன்றிச் சேரல் நன்றோ, தோற்றுள கூற்றின் சூழல்? 159-
பிணை ஒன்று கண்ணாள் பங்கன்-பெண் மானின் கண்ணை
ஒத்த கண் உடைய உமையம்மையை இடப்பக்கத்தில் கொண்ட
சிவபிரானது; பெருங்கிரி நெருங்கப் பேர்த்த – பெரிய
மலையாகிய கைலாயத்தை நெருங்கிப் பெயர்த்தெடுத்த; பணை
ஒன்று திரள்தோள் – பெருமை பொருந்திய திரண்ட தோள்கள்;
கால பாசத்தால் பிணிப்ப – இயமனது கால பாசத்தால்
பிணிக்கப்படுவது கண்டு; அணை இன்றி உயர்ந்த வென்றி
அஞ்சினார் – முன்பு தடையில்லாமல் பெற்ற வெற்றி கண்டு
அச்சங்கொண்ட மாற்றார்; நகையது ஆக கூசி – நகைத்துப்
பேரொலி செய்ய அதற்கு நாணி; தோற்றுள கூற்றின் குழல்
-முன்பு தனக்குத் தோற்றவனாகிய இயமன் இடத்தில்; துணை
இன்றிச் சேரல் நன்றோ – துணையாகத் தம்பியும் இல்லாமல்
செல்லுவது நன்றாக உள்ளதோ.
———————–
‘செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்! 160-
ஐய!- ஐயனே; கூற்றையும் ஆடல் கொண்டேன்-
கூற்றுவனையும் வெற்றி கொண்டவனாகிய; யான் – நான்; செம்பு
இட்டுச் செய்த இஞ்சித் திருநகர் – செம்பை உருக்கி
வலிமையும் அழகும் படச் செய்த மதிலால் சூழப்பட்ட அழகிய
இலங்கை நகரின்; செல்வம் தேறி – அரசுச் செல்வத்தை
நிலையானது என்று கருதி; வம்பு இட்ட தெரியல் எம்முன்-
மணம் பொருந்திய மலர் மாலையணிந்த என் அண்ணனுடைய;
உயிர் கொண்ட பகையை வாழ்த்தி- உயிரைக் கொண்ட
பகைவனாகிய இராமனை வாழ்த்திக் கொண்டு; அம்பு இட்டுத்
துன்னம் கொண்ட – அம்பு பட்டுத் துளைபட்ட; புண்ணுடை
நெஞ்சோடு -புண்பட்ட நெஞ்சத்துடன்; கும்பிட்டு வாழ்கிலேன்-
கும்பிட்டு வாழ மாட்டேன்.
——————–
‘அனுமனை, வாலி சேயை, அருக்கன் சேய்தன்னை, அம் பொன்
தனு உடையவரை, வேறு ஓர் நீலனை, சாம்பன் தன்னை, கனி தொடர்
குரங்கின் சேனைக் கடலையும், கடந்து மூடும் பனி துடைத்து
உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; பார்த்தி! 161-
அனுமனை- அனுமனையும்; வாலி சேயை- வாலி மகனாகிய
அங்கதனையும்; அருக்கன் சேய் தன்னை- சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும்; அம்பொன்தனு உடையவரை-
அழகிய பொன் போன்ற வில்லையுடைய இராம இலக்குவர்களையும்;
வேறு ஓர் நீலனை – வேறுபட்ட தன்மையுடைய நீலனையும்;
சாம்பன் தன்னை- சாம்பவான் தன்னையும்; கனி தொடர்
குரங்கின் சேனைக் கடலையும் – கனியைக் கைப்பற்றத்
தொடர்ந்து செல்லும் குரங்குகளின் சேனையாகிய கடலையும்;
கடந்து- வஞ்சியாது எதிர் நின்று வென்று;உலகம் மூடும் பனி
துடைத்து – உலகத்தை மூடுகின்ற பனியைப் போக்கி; சுற்றும்
பரிதியின் திரிவென் – வலமாகச் சுற்றுகின்ற கதிரவன் போல்
திரிவேன்; பார்த்தி – காண்பாய்.
——————
‘ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட,
சூலம் கொண்டு ஓடி, வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற,
நீலம் கொள் கடலும் ஓட, நெருப்பொடு காலும் ஓட,
காலம் கொள் உலகும் ஓட, கறங்கு எனத் திரிவென்; காண்டி! 162-
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் – ஆல கால நஞ்சைக் கண்டு
அஞ்சி ஓடிய; அமரர் போல் அரிகள் ஓட-தேவர்களைப் போல்
வானரப் படைகள் ஓட; வேலை சூலம் கொண்டு ஓடி- ஒரு கடல்
ஆனது சூலத்தைக் கையில் கொண்டு ஓடி; தொடர்வது ஓர்
தோற்றம் தோன்ற – மற்றொரு கடலைத் தொடர்ந்து செல்வது
போல் ஒரு தோற்றத்தை உண்டாக்கி; நீலம் கொள் கடலும் ஓட-
நீல நிறங்கொண்ட கடல் தன் இடம் விட்டுப் புடை பெயர்ந்து
செல்லவும்; நெருப்பொடு காலும் ஓட- நெருப்பும் காற்றும் நிலை
கெட்டு ஓடவும்; காலம் கொள் உலகும் ஓட- அழிவுக் காலத்தை
நோக்கி உலகமும் ஓடவும்; கறங்கு எனத் திரிவென் காண்டி-
(போர்க்களத்தில் நான்) காற்றாடி போலத் திரிவேன் அதனைக்
காண்பாய்.
—————–
‘செருவிடை அஞ்சார் வந்து, என் கண் எதிர் சேர்வர் ஆகின்,
கரு வரை, கனகக் குன்றம், என்னல் ஆம் காட்சி தந்த
இருவரும் நிற்க, மற்று அங்கு யார் உளர், அவரை எல்லாம்,
ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில்’ என்றான். 163-
செருவிடை அஞ்சார் வந்து- போர்க்களத்தில் அஞ்சாதவராய்
வந்து; என்கண் எதிர் சேர்வர் ஆகின்- என் கண்ணுக்கு எதிரில்
சேர்வார்கள் ஆனால்; கருவரை- கரிய மலையும்; கனகக்குன்றம்-
பொன் குன்றமும்; என்னல் ஆம் காட்சி தந்த- என்று கூறுமாறு
தோற்றம் பொருந்திய; இருவரும் நிற்க- இராம இலக்குவர் நிற்க;
மற்று அங்கு யார் உளர் – வேறு அங்கு உள்ளவர் எவரோ;?
அவரை எல்லாம் – அவர்களை எல்லாம்; உலகில் உயிர் சுமந்து-
உலகத்தில் உயிர் சுமந்து கொண்டு; ஒருவரும் திரிய ஒட்டேன்-
ஒருவரையும் நடமாட ஒருப்படேன்; என்றான்.
——————
‘தாழ்க்கிற்பாய் அல்லை; என் சொல் தலைக்கொளத் தக்கது என்று
கேட்கிற்பாய் ஆகின், எய்தி, அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய்; “இனி, ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு” என்று,
சூழ்க்கிற்பாய் அல்லை; யாரும் தொழ நிற்பாய்!” என்னச் சொன்னான். 164-
யாரும் தொழ நிற்பாய்! – பிறர் தொழத்தக்க மேன்மை
பெற்றவனே; என் சொல் தலைக் கொளத்தக்கது- என் சொல்
ஆனது தலையில் ஏற்கத்தக்கது; என்று கேட்கிற்பாய் ஆகின்-
என்று கருதிக் கேட்பாய் ஆனால்; தாழ்க்கிற்பாய் அல்லை-
காலந்தாழ்த்தாமல்; எய்தி – திரும்பிப் போய்; அவரொடும்
கெழீஇய நட்பை வேட்கிற்பாய் – அந்த இராம இலக்குவரோடு
பொருந்திய நட்பை மேலும் விரும்புவாய்; இனி ஓர் மாற்றம்
விளம்பினால்- இனிமேலும் ஒரு பேச்சுப் பேசினால்; விளைவு
உண்டு என்று- அதனால் நன்மை உண்டு என்று; சூழ்க்கிற்பாய்
அல்லை – எண்ணி ஆலோசிப்பதற்கு உரியவனல்லை; என்னச்
சொன்னான் – என்று கூறினான்.
—————-
‘போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி,
மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165-
ஐய!- ஐயனே; நீ போதி – நீ இராமனிடம் திரும்பிச் செல்;
பின்னை- பிறகு; எல்லாம் நின்ற- சரஅசரப் பொருள்கள்
எல்லாமுமாய் நின்ற; வேதியர் தேவன் தன்னை – வேதியர்
தலைவனான இராமன் தன்னை; வேண்டினை பெற்று- அனுமதி
வேண்டிப் பெற்று; மெய்ம்மை ஆதி நூல் மரபினாலே-
மெய்ம்மையாகப் பழ நூலில் கூறிய முறைப்படி;பொன்றினார்க்கு-
இறந்துபட்டவர்களுக்கு எல்லாம்;கடன்களும் ஆற்றி- அந்திமச்
சடங்குகளைச் செய்து; ஏற்றி- உடம்புடன் கிடந்து அல்லல்படும்
நிலையில் இருந்து ஏற்றி; மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும்
காத்தி- மிக்க துயரத்தைத் தரும் நரகத்தை அடையாதவாறும்
காப்பாய்;
————–
‘ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப்
போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;
சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,
ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!’ 166-
என்றும் உள்ளாய்! – எக்காலத்தும் அழியாது வாழ்பவனே!;
ஆகுவது ஆகும் காலத்து- உரிய காலத்தில் ஆக வேண்டியது
ஆகியே தீரும்; அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது-
அழியவேண்டியது அழிந்து சிதறிப் போகும்; அயலே நின்று
போற்றினும் போதல் திண்ணம்- அவ்வாறு அழிந்து போவதைப்
பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து போயே தீரும்;
சேகு அறத் தெளிந்தோர் – குற்றமற அதை உணர்ந்து
தெளிந்தவர்கள்; நின்னின் யார் உளர்- உன்னைக் காட்டிலும்
யாவர் உலகில் உளர்; வருத்தம் செய்யாது- துன்பப்படாமல்;
எம்மை நோக்கி இரங்கலை- எம்மைக் குறித்து இரங்கலையாய்;
ஏகுதி- செல்வாய்.
—————
வீடணன் விடை பெறுதல்
என்று, அவன் தன்னை மீட்டும் எடுத்து, மார்பு இறுகப் புல்லி,
நின்று நின்று, இரங்கி ஏங்கி, நிறை கணால் நெடிது நோக்கி,
‘இன்றொடும் தவிர்ந்தது அன்றே, உடன்பிறப்பு’ என்று விட்டான்;
வென்றி வெந் திறலினானும், அவன் அடித்தலத்து வீழ்ந்தான். 167-
என்று- என்று கூறி; அவன் தன்னை- அந்த வீடணன்
தன்னை;மீட்டும் எடுத்து- மறுமுறை மீண்டும் எடுத்து; மார்பு
இறுகப் புல்லி- மார்பில் அழுத்தமாகத் தழுவி; நின்று நின்று-
மீக நீண்ட நேரம்; இரங்கி ஏங்கி- அழுது ஏக்கம் கொண்டு;
நிறை கணால் நெடிது நோக்கி- நீர்நிறை கண்ணால் நீண்ட
நேரம் பார்த்து; உடன்பிறப்பு- உனக்கும் எனக்கும் உள்ள
உடன்பிறப்பு என்னும் தொடர்பு; இன்றொடும் தவிர்ந்தது
அன்றே-இன்றோடு போய் விட்டதல்லவா?; என்று விட்டான்
– என்று கூறித் தழுவியதை விட்டான்; வென்றி
வெந்திறலினானும் – வெற்றியும் வலிய வலிமையும் உள்ள
வீடணனும்; அவன் அடித்தலத்து வீழ்ந்தான் – அந்தக்
கும்பகருணனது அடித்தலத்து வீழ்ந்து வணங்கினான்.
—————-
வணங்கினான்; வணங்கி, கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான்; உயிரோடு யாக்கை ஒடுங்கினான்; ‘உரைசெய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை; பெயர்வது; என்று உணர்ந்து போந்தான்.
குணங்களால் உயர்ந்தான், சேனைக் கடல் எலாம் கரங்கள் கூப்ப. 168-
வணங்கினான் – வணங்கினனாகிய வீடணன்; வணங்கிக்
கண்ணும், வதனமும், மனமும், வாயும் உணங்கினான்
– வணங்கிக் கண்ணும், முகமும், மனமும் வாயும் உலர்ந்தான்;
உயிரோடு யாக்கை ஒடுங்கினான்- உயிரும் உடம்பும் ஒடுங்கிச்
சோாந்தான்; இன்னும் உரை செய்து- இக்கும்பகருணனுடன்
இன்னும் பேசி; பிணங்கினால் ஆவது இல்லை – மனமாறுபாடு
கொள்வதால் ஆகக்கூடிய பயன் எதுவும் இல்லை; பெயர்வது
என்று உணர்ந்து- திரும்பிச் செல்வதே தக்கது என்று;
குணங்களாலுயர்ந்தான் – பண்புகளால் இமயம் என உயர்ந்து
நிற்கும் கும்பகருணனது,சேனைக் கடல் எலாம் – அரக்கர் சேனையாகிய கடல்
எல்லாம்; கரங்கள் கூப்ப- கைகூப்பித் தொழ; போந்தான்
– திரும்பினான்.
—————–
வீடணன் செல்ல, கும்பகருணன் கண்ணீர் உகுத்து நிற்றல்
‘கள்ள நீர் வாழ்க்கையேமைக் கைவிட்டு, காலும் விட்டான்;
பிள்ளைமை துறந்தான்’ என்னாப் பேதுறும் நிலையன் ஆகி,
வெள்ள நீர் வேலைதன்னில் வீழ்ந்த நீர் வீழ, வெங் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி, உதிர நீர் ஒழுக, நின்றான். 169-
கள்ளநீர் வாழ்க்கை யேமை- கள்ளத்தன்மை பொருந்திய
வாழ்க்கை உள்ள எங்களைக்; கைவிட்டு- விட்டுவிட்டு; காலும்
விட்டான் – தொடர்பையும் அறுத்துக்கொண்டு விட்டான்;
பிள்ளைமை துறந்தான் – இளம் பிள்ளைத் தன்மையைத்
துறந்துவிட்டான்; என்னா- என்று கருதி; பேதுறும் நிலையன்
ஆகி – கலங்கிய மனத்தை உடைய நிலையனாய்; வெள்ள
நீர் வேலை தன்னில்- வெள்ள நீர் நிரம்பிய கடல் தன்னில்;
வீழ்ந்த நீர் வீழ – விழும் தன்மையுள்ள ஆற்று நீர்
பின்னிடுமாறு; வெங்கண் உள்ள நீர் எல்லாம் மாறி- தன்
கொடிய கண்களில் உள்ள கண்ணீர் எல்லாம் மாறி; உதிரநீர்
ஒழுக நின்றான் – குருதி நீராகப் பெருக நின்றான்.
——————
வீடணன் உரையைக் கேட்ட இராமன் கூற்று
எய்திய நிருதர் கோனும், இராமனை இறைஞ்சி, ‘எந்தாய்!
உய் திறம் உடையார்க்கு அன்றோ, அறன் வழி ஒழுகும் உள்ளம்?
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென்; பெயருந் தன்மை
செய்திலன்; குலத்து மானம் தீர்ந்திலன், சிறிதும்’ என்றான். 170-
எய்திய நிருதர் கோனும்- இராமனை வந்து அடைந்த
அரக்கர் தலைவன் ஆகிய வீடணனும்; இராமனை இறைஞ்சி-
இராமனை வணங்கி; எந்தாய்! – எந்தையே; உய்திறம்
உடையார்க்கு அன்றோ – தீமையில் இருந்து தப்புகிற
மனக்கூறுபாடு உடையவர்களுக்கல்லவா?; அறன் வழி ஒழுகும்
உள்ளம் – அற வழியில் செல்லும் மனம் அமையும்; பெய்திறன்
எல்லாம் பெய்து பேசினென்- செலுத்த வல்ல விரகு எல்லாம்
செலுத்திப் பேசினேன்; பெயருந்தன்மை செய்திலன்- மனம்
மாறும் தன்மையை அவன் மேற்கொள்ளவில்லை; குலத்து மானம்
சிறிதும் தீர்ந்திலன் என்றான்- குலப்பற்று சிறிது கூட தீரப்
பெற்றானில்லை என்றான்.
—————
கொய் திறச் சடையின் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
நொய்தினில் துளக்கி, ‘ஐய! “நுன் எதிர், நும்முனோனை
எய்து இறத் துணித்து வீழ்த்தல் இனிது அன்று” என்று இனைய சொன்னேன்;
செய் திறன் இனி வேறு உண்டோ ? விதியை யார் தீர்க்ககிற்பார்?” 171-
(இராமன்)கொய்திறச் சடையின் கற்றைக் கொந்தளக்-
கொய்து விடுதற்கு உரிய சடைத் தொகுதியினைக் கொண்ட மயிர்
முடியாகிய; கோலக்கொண்டல்- அழகிய மேகத்தை;நொய்தினில்
துளக்கி- மெல்ல அசைத்து; ஐய!- ஐயனே; நுன் எதிர் – உனக்கு
எதிரே; நும் முனோனை- உன் முன்னவனாகிய தமையனை; எய்து-
அம்பால் எய்து; இறத் துணித்து வீழ்த்தல்-உடல் துண்டுபடும்படி
துண்டித்து வீழ்த்தல்; இனிது அன்று என்று-இனிமையானது அல்ல
என்று கருதி; இனைய சொன்னேன்- இவ்வாறான சொற்களைச்
சொன்னேன்; செய்திறன் இனி வேறு உண்டோ- இனி நாம்
செய்யக் கூடிய செயல் வேறு உள்ளதா?; விதியை யார் தீர்க்க
கிற்பார் – விதியை யாரால் தவிர்க்க முடியும்; (என இனிது
உரைக்கும் வேலை என்று தொடரும் குளகம்)
—————
அரக்கர் சேனை வானர சேனையைச் சுற்றி வளைத்தல்
என இனிது உரைக்கும் வேலை, இராக்கதர் சேனை என்னும்
கனை கடல், கவியின் தானைக் கடலினை வளைந்து கட்டி,
முனை தொழில் முயன்றதாக, மூவகை உலகும் முற்றத்
தனி நெடுந் தூளி ஆர்த்தது; ஆர்த்தில, பரவை தள்ளி, 172-
என இனிது உரைக்கும் வேலை- என்று இராமன் இனிதாகச்
சொல்லும் பொழுது; இராக்கதர் சேனையென்னும் – அரக்கர்
சேனையெனப் படுகின்ற; கனை கடல்- ஒலிக்கின்ற கடல்;கவியின்
தானைக் கடலினை- குரங்குச் சேனையாகிய கடலினை; வளைந்து
கட்டி- வளைத்து நெருக்கி; முனை தொழில் முயன்றதாக-போர்த்
தொழில் செய்ய முயன்றதாக; மூவகை உலகும் முற்ற- மூவகை
உலகங்களையும் முற்றுகையிடுமாறு; தனி நெடுந்தூளி ஆர்த்தது-
ஒப்பற்ற மிக்க தூசு மிகுந்தது; பரவை தள்ளி ஆர்த்தில-
கடல் அத்தூசியைத் தள்ளி ஒலித்தில
————–
ஓடின புரவி; வேழம் ஓடின; உருளைத் திண் தேர்
ஓடின; மலைகள் ஓட, ஓடின உதிரப் பேர் ஆறு;
ஓடின கவந்த பந்தம்; ஆடின அலகை; மேல்மேல்
ஓடின பதாகை; ஓங்கி ஆடின, பறவை அம்மா! 173-
புரவி ஓடின- போர்க்களத்தில் குதிரைகள் ஓடின; வேழம்
ஓடின – யானைகள் ஓடின; உருளைத் திண் தேர் ஓடின-
சக்கரங்கள் பூட்டப்பெற்ற வலிய தேர்கள் ஓடின; மலைகள் ஓட
– மலைகள் ஓடும்படி; உதிரப் பேர் ஆறு ஓடின- வீரர்கள்
தம்முன் பொருதமையால் குருதியாறு ஓடின; கவந்த பந்தம்
ஆடின-கவந்த தொகுதிகள் ஆடின; அலகை ஆடின- பேய்கள்
களக்கூத்து ஆடின; மேல் மேல் பதாகை ஆடின – மேல்
மேல் உயர்ந்து கொடிகள் ஆடின; பறவை ஓங்கி ஆடின-
பருந்து முதலிய பறவைகள் வானில் உயர்ந்து ஆடின;
——————
மூளையும், தசையும், என்பும், குருதியும், நிணமும், மூரி
வாளொடும் குழம்பு பட்டார், வாள் எயிற்று அரக்கர்; மற்றுஅவ்
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள்;-அம்பொன்
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க. 174-
வாள் எயிற்று அரக்கர் – ஒளி பொருந்திய பற்களை உடைய
அரக்கர்கள்; அம்பொன் தோளொடு- அழகிய பொன் போன்ற
நிறமுடைய தோளும்; மரனும் கல்லும் தாக்க- மரமும் கல்லும்
தாக்கியதால்; மூளையும், தசையும் என்பும் குருதியும், நிணமும்,
மூரி வாளொடும் குழம்பு பட்டார்- மூளையும்,தசையும், எலும்பும்,
குருதியும், கொழுப்பும், கையில் ஏந்திய வலிய வாள் படையுடனே
குழம்பாகி அழிந்தார்கள்; கவிகள்- குரங்குகள்; சூலமும் வேலும்
தாக்க- முத்தலைச் சூலமும் வேலும் தாக்கியதால்; மற்று அவ்
– மற்று அந்த; ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின-
ஆளை அழிக்கக்கூடிய அரக்கரின் குழம்பு பட்ட குருதி
வெள்ளத்தில் அழுந்தின.
——————–
எய்தனர், நிருதர்; கல்லால் எறிந்தனர், கவிகள்; ஏந்திப்
பெய்தனர், அரக்கர்; பற்றிப் பிசைந்தனர் அரிகள்; பின்றா
வைதனர், யாதுதானர்; வலித்தனர்; வானரேசர்;
செய்தனர், பிறவும் வெம் போர்; திகைத்தனர், தேவர் எல்லாம். 175-
நிருதர் எய்தனர்-அரக்கர்கள் அம்புகளைக் கொண்டு எய்தனர்;
கவிகள் கல்லால் எறிந்தனர்- குரங்குகள் அவர்கள் மீது கற்களால்
எறிந்தனர்; அரக்கர் ஏந்திப் பெய்தனர் – அரக்கர்கள்
அக்கற்களைத் தம் கைகளால் ஏந்தி மீண்டும் வானரர் மீது எறிந்தனர்;
அரிகள் பின்றா பற்றிப் பிசைந்தனர் – அரக்கர்கள் அவற்றைப்
பின்வாங்காமல் கைகளால் பற்றிப் பிசைந்தார்கள்; யாது தானர்
வைதனர் – அரக்கர்கள் திட்டலானார்கள்; வானரேசர் வலித்தனர்-
வானரர்கள் பற்றி இழுக்கல் ஆனார்கள்; பிறவும் வெம்போர்
செய்தனர் – இவ்வாறு மற்றுமுள்ள போர்ச் செயலையும் செய்தார்கள்;
தேவர் எல்லாம் திகைத்தனர் – அதுகண்டு அனைத்துத்
தேவர்களும் திகைத்தார்கள்.
————–
கும்பகருணன் போர்
நீரினை ஓட்டும் காற்றும், காற்று எதிர் நிற்கும் நீரும்,
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி,
தேரினை ஓட்டி வந்தான் – திருவினைத் தேவர் தங்கள்
ஊரினை நோக்காவண்ணம், உதிர வேல் நோக்கியுள்ளான். 176-
நீரினை ஓட்டும் காற்றும் – மழை நீரை விழாமல் ஓட்டுகின்ற
காற்றும்; காற்று எதிர் நிற்கும் நீரும்- காற்றை எதிர்த்து நிற்கின்ற
மழை நீரும்; போர் இணை ஆக- போருக்கு இணை என்று
சொல்லும்படி; ஏன்று- எதிர்த்துப்; பொருகின்ற பூசல்
நோக்கி-போர் செய்கிற போரைப் பார்த்து; திருவினைத்தேவர்
தங்கள் ஊரினை நோக்கா வண்ணம்- திருமகள் தேவர்களின்
ஊரை நோக்காதபடி; உதிர வேல் நோக்கி உள்ளான்- உதிரம்
படிந்த வேலைப் பார்த்துக் கொண்டு இருப்பவன் ஆகிய
கும்பகருணன்; தேரினை ஓட்டி வந்தான்- தன் தேரினை ஓட்டி
வந்தான்.
—————
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப,
பூழியில் பட்டு, செந்நீர்ப் புணரியில் பட்டு, பொங்கும்
சூழியில் பட்ட நெற்றிக் களிற்றொடும், துரந்த தேரின்
ஆழியில் பட்ட அன்றே-அவனியில் பட்ட எல்லாம். 177-
அவனியில் பட்ட எல்லாம் – பூமியில் பொருந்திய
வானரங்கள் எல்லாம்; ஊழியில் பட்ட காலின்- உக முடிவுக்
காலத்தில் வீசுகின்ற காற்றில்; உலகங்கள் பட்டால் ஒப்ப
– உலகங்கள் அகப்பட்டதைப் போல; பூழியில் பட்டு- புழுதியில்
அகப்பட்டும்; நெந்நீர்ப் புணரியில் பட்டு- குருதிக் கடலில்
பட்டும்; பொங்கும் சூழியின் பட்ட நெற்றிக் களிற்றொடும்-
விளங்குகிற முகபடாத்தொடு பட்டமும் கட்டிய நெற்றியையுடைய
களிறுகளிலும்; துரந்ததேரின் ஆழியில் பட்ட அன்றே-
செலுத்துகிற தேர்ச்சக்கரங்களிலும் பட்டு இறந்து போயின.
————–
குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும். 178-
குன்று கொண்டு எறியும் – கும்பகருணன் வானரப் படை
மீது குன்றை வீசி எறிவான்; பாரில் குதிக்கும் – நிலத்தில்
குதிப்பான்; வெங்கூலம் பற்றி- கொடிய வாலினைப் பிடித்து;
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்- ஒன்றைக் கொண்டு பிறிது
ஒன்றின் மீது மோதுவான்; உதைக்கும்- உதைப்பான்; விட்டு
உழக்கும்- போக விட்டுக் காலினால் துகைப்பான்; வாரித்
தின்று தின்று உமிழும்- வாரித் தின்று தின்று உமிழ்வான்;
சிரங்களைப் பற்றித் திருகும் – தலைகளைப் பிடித்துத்
திருகுவான்; தேய்க்கும் – பூமியில் தேய்ப்பான்; மென்றுமென்று
இழிச்சும்-வாயில் போட்டு மென்று துப்புவான்;விண்ணில் வீசும்-
வானத்தில் எறிவான்; பிசைந்து மேல்பூசும்- பிசைந்து உடம்பின்
மேல் பூசிக்கொள்வான்.
———–
வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை நிமிர வீசும்;
தேரிடை எற்றும்; எட்டுத் திசையினும் செல்லச் சிந்தும்;
தூரிடை மரத்து மோதும்; மலைகளில் புடைக்கும், சுற்றி. 179-
வாரியின் அமுக்கும் – கடலில் அமுக்குவான்; கையால்
மண்ணிடைத் தேய்க்கும் – கையினால் வாரி எடுத்து நிலத்தில்
தேய்ப்பான்; வாரி நீரிடைக் குவிக்கும்- எடுத்து நீரில் மூழ்கச்
செய்வான்; அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – மேலும்
நெருப்பில் நேராக உயர்ந்து நிற்கும்படி வீசுவான்;தேரிடை எற்றும்
– தேரில் அடித்து அழிப்பான்; எட்டுத் திசையினும் செல்லச்
சிந்தும்- எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி இறைக்கும்;
மரத்தூரிடை மோதும் – மரத்தின் அடிப்பகுதியில் மோதி
அழிப்பான்; சுற்றி மலைகளில் புடைக்கும்- சுழற்றி மலைகளில்
மோதி அழிப்பான்.
——————-
பறைந்தனர், அமரர் அஞ்சி; பல் பெரும் பிணத்தின் பம்மல்
நிறைந்தன, பறவை எல்லாம்; நெடுந் திசை நான்கும் நான்கும்
மறைந்தன; பெருமை தீர்ந்த, மலைக் குலம்; வற்றி வற்றிக்
குறைந்தன, குரக்கு வெள்ளம்; கொன்றனன், கூற்றும் கூச. 180-
அமரர் அஞ்சி பறைந்தனர்- தேவர்கள் அஞ்சிப் பறந்து
ஓடினார்கள்; பல்பெரும் பிணத்தின் பம்மல் நிறைந்தன-
எங்கும் பிணக்கூட்டங்கள் தொகுதியாய் நிறைந்தன; நெடுந்திசை
நான்கும் நான்கும் பறவை எல்லாம் மறைந்தன-நெடுந்திசை
நான்கு, கோணத்திசை நான்கு ஆகிய எட்டுத்திசைகளையும்
பறவைக் கூட்டங்கள் மறைத்தன; மலைக்குலம் பெருமை தீர்ந்த-
மலைக்கூட்டங்கள் பெருமையை இழந்தன; குரக்கு வெள்ளம்
வற்றி வற்றிக் குறைந்தன- எழுபது வெள்ளங்கொண்ட குரங்குப்
படை சிறிது சிறிதாகக் குறைந்தன; கூற்றும் கூச கொன்றனன்-
கும்பகருணன் இவ்வாறு யமனும் அஞ்சும்படி குரங்குச்
சேனையைக் கொன்றான்.
——————–
‘மற்று இனி ஒருவர்மேல் ஓர் மரனொடும் கற்கள் வீசப்
பெற்றிலம் ஆதும் அன்றே; இன்றொடும் பெறுவது ஆமே;
அற்றன, தீங்கும்’ என்னா, அரிக் குலத் தலைவர் பற்றி,
எற்றின, எறிந்த, எல்லாம் இணை நெடுந் தோளின் ஏற்றான். 181-
மற்று இனி- இனி; ஒருவர் மேல் வீச- வேறு ஒருவர் மேல்
எறிவதற்கு; ஓர் மரனொடும் கற்கள் பெற்றிலம் ஆதும் – ஒரு
மரமாவது கற்கள் ஆவது பெறாதவர் ஆவோம்; இன்றொடும்
பெறுவது ஆமே- எல்லாவற்றையும் இன்றே எடுத்து இவன் மீது
எறிவோம்; தீங்கும் அன்றே அற்றன என்னா- இவனால்
விளையும் அழிவும் முழுதும் நீங்கிவிடும் என்று;
அரிக்குலத்தலைவர்- குரங்குப் படைத்தலைவர்கள்; எற்றின
எறிந்த எல்லாம்-காலால் எற்றினவும் கையால் எறிந்தனவுமாகிய
எல்லாவற்றையும்; இணை நெடுந்தோளின் ஏற்றான்-தனது இரு
பெருந்தோள்களில் தாங்கிக் கொண்டான்.
—————-
கல்லொடு மரனும், வேரும், கட்டையும், காலில் தீண்டும்
புல்லொடு பிறவும், எல்லாம், பொடிப் பொடி ஆகிப் போன;
‘இல்லை, மற்று எறியத் தக்க, எற்றுவ, சுற்றும்’ என்ன,
பல்லொடு பல்லு மென்று பட்டன, குரங்கும் உட்கி. 182-
காலில் தீண்டும்- காற்றுப் போல் விரைவாகத் தீண்டுகிற;
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் புல்லொடு பிறவும்-
கற்கள், மரங்கள், வேர்கள், கட்டைகள், புற்கள் மற்றயாவும்
குரங்குப் படையால் எறியப்பட்டு; எல்லாம் – முழுதும்; பொடிப்
பொடி ஆகிப் போன-கும்பகருணன் உடம்பில் பட்டுப் பொடிப்
பொடியாய்ப் போயின; சுற்றும் எற்றுவ எறியத்தக்க மற்று
இல்லை என்ன- சுற்றிலும் காலால் எற்றவும் கையால் எறியவும்
எப்பொருளும் இல்லை என்று எண்ணி; குரங்கும் உட்கி
பல்லொடு பல்லு மென்று பட்டன – குரங்குப் படைகள்
அஞ்சிப் பல்லைக் கடித்துக் கொண்டு இறந்தன.
——————-
குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின் குழாம் கொடு குதித்துக் கூடி,
சென்று மேல் எழுந்து பற்றி, கைத் தலம் தேயக் குத்தி,
வன் திறல் எயிற்றால் கவ்வி, வள் உகிர் மடியக் கீளா,
‘ஒன்றும் ஆகின்றது இல்லை’ என்று, இரிந்து ஓடிப் போன. 183-
குழாம் கொடு குதித்துக் கூடி- குரங்குகள் கூட்டமாகக்
குதித்துக் கூடிக்கொண்டு; குன்றின் வீழ் குரீஇக் குழாத்தின்
– மலையின் மீது விழுகின்ற குருவிக் கூட்டம் போல; சென்று-
கும்பகருணனை நோக்கிச் சென்று; மேல் எழுந்து பற்றி-
உடம்பின் மேல் ஏறிப் பற்றி; கைத்தலம் தேயக் குத்தி- கை
வருந்தும்படி குத்தியும்; வன்திறல் எயிற்றால் கவ்வி- மிக்க
வலிமை உடைய பற்களால் கவ்வியும்; வள் உகிர் மடியக்கீளா-
கூரிய நகங்கள் நுனி மடங்கும்படி கிழித்தும்;ஒன்றும் ஆகின்றது
இல்லை என்று- நம்மால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை
என்று தெரிந்து; இரிந்து ஓடிப் போன- இறங்கி ஓடிப் போயின.
————–
நீலன் பொருது தோற்றல்
மூலமே மண்ணில் மூழ்கிக் கிடந்தது ஓர் பொருப்பை, முற்றும்
காலம் மேல் எழுந்த கால் போல், கையினால் கடிதின் வாங்கி, நீலன்,
மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு எனத் திரிந்து விட்டான்;
சூலமே கொண்டு நூறி, முறுவலும் தோன்ற நின்றான். 184-
நீலன் – நீலன்; மூலமே – அடிப்பகுதி முழுமையும்;
மண்ணில் மூழ்கிக் கிடந்து ஓர் பொருப்பை- நிலத்தில்
முழ்கிக் கிடந்த ஒப்பற்ற மலையை;முற்றும்-முழுவதும்; காலம்
மேல் எழுந்தகால் போல் – உக முடிவுக் காலத்தில் தோன்றிய பெருங்காற்றுப்
போல்; கடிதின் கையினால் வாங்கி- விரைவாகக் கையினால்
பெயர்த்து எடுத்து; மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு
என – வானத்தின் மேல் ஓங்கியதாகிய ஒரு நெருப்புப் போல;
திரித்து விட்டான்-சுழற்றி விட்டான்; சூலமே கொண்டு நூறி-
(அதனைக் கும்பகருணன்) தன் முத்தலைச் சூலத்தைக் கொண்டு
பொடியாக்கி விட்டு; முறுவலும் தோன்ற நின்றான்-
புன்சிரிப்புத் தோன்ற நின்றான்.
———-
‘பெயர்ந்து ஒரு சிகரம் தேடின், அச்சம் ஆம் பிறர்க்கும்’ என்னா,
புயங்களே படைகள் ஆகத் தேர் எதிர் ஓடிப் புக்கான்,
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய, யாரும்
பயம் கொள, கரங்கள் ஓச்சிக் குத்தினான், உதைத்தான், பல் கால். 185-
பெயர்ந்து-பின் வாங்கி மீண்டும்; ஒரு சிகரம் தேடின்-ஒரு
மலையைத் தேடித் திரிந்தால்; பிறர்க்கும் அச்சம் ஆம்
என்னா- பிற படை வீரர்களுக்கு அச்சம் தோன்றும் என்று
கருதி; புயங்களே படைகள் ஆக- தன் தோள்களையே
படைக்கலமாகக் கொண்டு; தேர் எதிர் ஓடிப் புக்கான்-அவனது
தேருக்கு எதிரில் ஓடிப் புகுந்து; இயங்களும்- பல்வகை
வாச்சியங்களும்; கடலும் – கடலும்; மேகத்து இடிகளும் –
மேகத்தின் கண் தோன்றும் இடிகளும்; ஒழிய- ஓசையால்
பின்னடையுமாறு; யாரும் பயங்கொள – யாவரும் அஞ்சும்படி;
கரங்கள் ஓச்சிக் குத்தினான் – கைகளால் ஓங்கிக் குத்தினான்;
பல்கால் உதைத்தான் – காலால் பலமுறை உதைத்தான்.
————-
கைத்தலம் சலித்து, காலும் குலைந்து, தன் கருத்து முற்றான்.
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன் தன்னை,
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான், இடது கையால்;
மெய்த்தலை, சூலம் ஓச்சான், வெறுங் கையான் என்று வெள்கி. 186-
கைத்தலம் சலித்து- குத்திய கை சலித்து; காலும் குலைந்து
– உதைத்த காலும் வருந்தித்; தன் கருத்து முற்றான்- தன்
எண்ணமும் நிறைவேறாமல்; நெய்த்தலை அழலின் காந்தி
எரிகின்ற நீலன் தன்னை- நெய் பெய் தீப்போல் சினம் கொண்டு
எரிகின்ற நீலனை; வெறும் கையான் என்று வெள்கி- இவன்
போர்க்கருவி இல்லாத வெறும் கையன் என்று வெட்கம் கொண்டு;
மெய்த்தலை சூலம் ஓச்சான்- கூரிய நுனியை உடைய
சூலப்படையை ஓங்கி எறியாது; எய்த்து உயிர் குடிப்பல் என்னா
– இளைத்துத் தளருமாறு இவனுயிர் குடிப்பேன் என்று எண்ணி;
இடது கையால் எற்றினான்- இடது கையினால் ஓங்கித்
தட்டினான்.
——————
நீலன் தளர்ந்தது கண்டு, அங்கதன் வந்து பொருதல்
ஆண்டு, அது நோக்கி நின்ற அங்கதன், ஆண்டுச் சால
நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி,
‘மாண்டனன் அரக்கன் தம்பி’ என்று உலகு ஏழும் வாழ்த்தத்
தூண்டினன்; அதனை அன்னான் ஒரு தனித் தோளின் ஏற்றான். 187-
ஆண்டு- அப்பொழுது; அது நோக்கி நின்ற அங்கதன்-
நீலன் நிலையைப் பார்த்து நின்ற அங்கதன்; ஆண்டு- அங்கே
இருந்த; சால நீண்டது ஓர் நெடுந் திண் குன்றம் – மிக
நீண்டதாகிய ஒரு பெரிய மலையினை; நில முதுகு ஆற்ற
வாங்கி – நிலமகள் தன் முதுகை ஆற்றிக் கொள்ளும்படி
பெயர்த்து; அரக்கன் தம்பி மாண்டனன் – இராவணன் தம்பி
மாண்டான்; என்று உலகு ஏழும் வாழ்த்த – என்று
ஏழுலகத்தவரும் வாழ்த்தத்; தூண்டினன் – எறிந்தான்; அதனை
அன்னான்- அம்மலையை அந்தக் கும்பகருணன்;ஒரு தனித்
தோளின் ஏற்றான் – தன் ஒப்பற்ற ஒரு தோளில் தாங்கிக்
கொண்டான்.
—————
ஏற்ற போது, அனைய குன்றம் எண்ண அருந் துகளது ஆகி,
வீற்று வீற்று ஆகி, ஓடி விழுதலும், கவியின் வெள்ளம்,
‘ஊற்றம் ஏது, எமக்கு!’ என்று எண்ணி, உடைந்தது; குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான்; பெயர்ந்திலன், சென்று பாதம். 188-
ஏற்ற போது- அங்கதன் எறிந்த குன்றத்தைக் கும்பகருணன்
தன் ஒரு தனித் தோளில் ஏற்றபோது; அனைய குன்றம்-
அந்தக் குன்றானது; எண்ண அருந்துகளது ஆகி- எண்ணற்கு
அருமையான தூளாகி; வீற்று வீற்று ஆகி – சின்ன பின்னப்
பட்டு; ஓடி விழுதலும் – சிதறுண்டு விழுதலும்; கவியின்
வெள்ளம்- குரங்குப் படையின் தொகுதி; எமக்கு ஊற்றம் ஏது
என்று எண்ணி – எமக்கு வலிமையாவது யாது என்று எண்ணி;
உடைந்தது- சிதறி ஓடியது; குமரன் – அங்கதன்; பாதம்
பெயர்ந்திலன் – முன் வைத்த காலைப் பின் வைக்காது; உற்ற
சீற்றமும் தானும் சென்று நின்றான் – பொருந்திய சினமும்
தானுமாக முன் சென்று நின்றான்.
————-
இடக் கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிரத் தண்டு,
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது, தருக்கின் வாங்கி,
‘மடக்குவாய் உயிரை’ என்னா, வீசினன்; அதனை மைந்தன்
தடக் கையால் பிடித்துக் கொண்டான், வானவர் தன்னை வாழ்த்த. 189-
ஆங்கு -அப்பொழுது; அரக்கன் – கும்பகருணன்; தடுக்கல்
ஆம் தரத்தது அல்லா வலியது- தடுக்கக் கூடிய
தன்மையுடையது அல்லாத வலிமையுடையதும்; ஓர் எழு முனை
வயிரத் தண்டு-ஒப்பற்ற ஏ ழுமுனைகளையுடையதும் ஆன வலிய
தண்டாயுதத்தை; இடக்கையால்-தன் இடது கையினால்; தருக்கின்
வாங்கி- செருக்கோடு எடுத்து; மடக்குவாய் உயிரை என்னா-
இந்த அங்கதனுடைய உயிரை நீக்குவாய் என்று; வீசினன்-
வீசினான்; அதனை மைந்தன் – அத்தண்டினை வலியுடைய
அங்கதன்; வானவர் தன்னை வாழ்த்த – வானவர் தன்னை
வாழ்த்தும்படி; தடக்கையால் பிடித்துக் கொண்டான் – தன்
பெரிய கைகளினால் பிடித்துக் கொண்டான்.
—————
பிடித்தது சுழற்றி, ‘மற்று அப் பெரு வலி அரக்கன் தன்னை,
இடித்து, உரும் ஏறு, குன்றத்து எரி மடுத்து, இயங்குமா போல்,
அடித்து, உயிர் குடிப்பென்’ என்னா, அனல் விழித்து, ஆர்த்து, மண்டி,
கொடித் தடந் தேரின் முன்னர்க் குதித்து, எதிர் குறுகி, நின்றான். 190-
பிடித்தது சுழற்றி – பிடித்ததாகிய தண்டைச் சுழற்றிக்
கொண்டு; அப் பெருவலி அரக்கன் தன்னை- பெருவலி
படைத்த அரக்கனான கும்பகருணனை; அடித்து உயிர்
குடிப்பேன் என்னா- இத்தண்டினால் அடித்து உயிரைக்
குடிப்பேன் என்று சொல்லி; ஆர்த்து- பேரொலி செய்து; அனல்
விழித்து மண்டி- தீப்பொறி பறக்குமாறு விழித்து மூண்டு; உரும்
ஏறு இடித்து – பேரிடி இடித்து; குன்றத்து எரிமடுத்து
இயங்குமா போல்- மலையில் நெருப்பைப் பரப்பிக் கொண்டு
இயங்குமாறு போல; கொடித் தேரின் முன்னர்க் குதித்து-
கொடி கட்டிய பெரிய தேரின் முன்னால் குதித்து; எதிர் குறுகி
நின்றான் – அக்கும்பகருணன் எதிரே சென்று நின்றான்.
————-
கும்பகருணன் அங்கதன் உரையாடல்
நின்றவன் தன்னை அன்னான் நெருப்பு எழ நிமர நோக்கி,
‘பொன்ற வந்து அடைந்த தானைப் புரவலன் ஒருவன் தானோ?
அன்று, அவன் மகனோ? எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்தம்மை
வென்றவன் தானோ? யாரோ? விளம்புதி, விரைவின்’ என்றான். 191-
நின்றவன் தன்னை – தன் எதிர் வந்து நின்றவனாகிய
அங்கதனை; அன்னான்- அந்தக் கும்பகருணன்; நெருப்பு எழ
நிமிர நோக்கி- நெருப்புப் பொறி புறப்பட நிமிர்ந்து பார்த்து;
பொன்ற வந்து அடைந்த- இறப்பதற்காக என்னிடம் வந்து சேர்ந்த;
தானைப் புரவலன் ஒருவன் தானோ- குரக்குச் சேனைத்
தலைவனாகிய சுக்கிரீவனோ?; அன்று அவன் மகனோ?-
அல்லது அவனது மகனாகிய அங்கதனோ?; எம் ஊர்-
எம்முடைய ஊரில்;அனல் மடுத்து- நெருப்பை இட்டு; அரக்கர்
தம்மை வென்றவன் தானோ-அரக்கர்களை வென்றவன்
ஆகிய அனுமனோ?; யாரோ-அன்றெனின் யாரோ?; விரைவின்
விளம்புதி என்றான் – விரைவாகச் சொல்லுவாய் என்றான்.
————-
‘நும்முனை வாலின் சுற்றி, நோன் திசை நான்கும் தாவி,
மும் முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த
வெம் முனை வீரன் மைந்தன்; நின்னை என் வாலின் வீக்கி,
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட, செல்வென்’ என்றான். 192-
நும்முனை- உனக்கு அண்ணனாகிய இராவணனை; வாலின்
சுற்றி- வாலினால் சுற்றி; நோன் திசை நான்கும் தாவி- வலிய
திசை நான்கிலும் தாவிச் சென்று; மும்முனை நெடுவேல்
அண்ணல் – மூன்று முனையைக் கொண்ட முத்தலை வேல்
ஏந்திய பெருமை உடைய சிவபிரானது; முளரி அம்சரணம்
தாழ்ந்த- தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளை
வணங்கிய; வெம்முனை வீரன் மைந்தன் – கொடிய
போர்த்திறம் மிக்க வீர வாலியின் மகன்; நின்னை என் வாலின்
வீக்கி – யான் உன்னை என் தந்தை போல் வாலில் கட்டி;
தெம்முனை இராமன் பாதம்- பகைப் புலத்துள்ள இராமனது
திருப்பாதத்தை; வணங்கிடச் செல்வென் என்றான்-
வணங்குவதற்காகச் செல்லுவேன் என்று கூறினான்.
—————
‘உந்தையை, மறைந்து, ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்குப்
பந்தனைப் பகையைச் செற்றுக காட்டலை என்னின், பாரோர்
நிந்தனை நின்னைச் செய்வர்; நல்லது நினைந்தாய்; நேரே
வந்தனை புரிவர் அன்றே, வீரராய் வசையின் தீர்ந்தார்? 193-
உந்தையை- உன் தந்தையை; ஓர் அம்பால் மறைந்து
உயிருண்ட- ஓரம்பினால் மறைந்திருந்து உயிரைப் போக்கி;
உதவியோற்கு- உதவி செய்தவனாகிய இராமனுக்கு; பந்தனைப்
பகையைச் செற்றுக் காட்டலை என்னின்- கட்டாக உள்ள
பகையை அழித்துக் கொடுக்காமல் போவாய் என்றால்; நின்னைப்
பாரோர் நிந்தனை செய்வர் – உன்னை உலகில் உள்ளவர்கள்
நிந்தனை செய்வார்கள்; நல்லது நினைந்தாய்- நல்ல செயலையே
செய்யக் கருதினாய்; வீரராய் வசையின் தீர்ந்தார்- வீரராய்க்
குற்றம் அற்றவர்; நேரே வந்தனை புரிவர் அன்றே- உனக்கு
நேராக வந்து வணக்கம் செய்வார்கள் அல்லவா.
———————-
‘இத்தலை வந்தது, என்னை இராமன்பால், வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த
முத் தலை அயிலின் உச்சி முதுகு உற, மூரி வால்போல்
கைத்தலம் காலும் தூங்க, கிடத்தலைக் கருதி’ என்றான். 194-
இத்தலை வந்தது- நீ இந்த இடத்திற்கு வந்தது; என்னை –
என்னை; இராமன் பால் – இராமனிடம்; வாலின் ஈர்த்து
வைத்தலைக் கருதி அன்று- வாலால் கட்டி இழுத்துக் கொண்டு
போய் வைத்தலைக் கருதி அன்று; வானவர் மார்பின் தைத்த-
தேவர்களின் மார்பில் தைத்த; முத்தலை அயிலின் உச்சி-
முத்தலைச் சூலத்தின் முனை; முதுகு உற- மார்பில் பாய்ந்து
முதுகின் வழி வெளிப்பட, அதனால் உயிர் இழந்து; மூரி வால் போல்- வலிய வாலைப் போலவே; கைத்தலம் காலும்- கையும்
காலும்; தூங்க- துவண்டு தொங்க; கிடத்தலைக் கருதிஎன்றான்-
இறந்து கிடத்தலைக் கருதியே என்று கூறினான்.
————–
அங்கதன் எறிந்த தண்டு பல துண்டமாதல்
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து, அசனி
குன்றத்து உற்றது போலும் என்னும் ஒலிபட, உலகம் உட்க,
பொன் தடந் தோளின் வீசிப் புடைத்தனன்; பொறியின் சிந்தி,
இற்றது நூறு கூறாய், எழு முனை வயிரத் தண்டு. 195-
அற்று – அவ்வாறாக; அவன் – அந்தக் கும்பகருணன்;
உரைத்தலோடும்- சொன்ன உடனே; அனல் விழித்து-
நெருப்பப் பொறி வெளிப்பட விழித்து; அசனி- இடி; குன்றத்து
உற்றது போலும் என்னும் ஒலிபட- மலையில் விழுந்தது
என்னுமாறு ஒலி தோன்ற; உலகம் உட்க- உலகத்தவர் அச்சம்
கொள்ள; பொன் தடந்தோளின் – கும்பகருணனது அழகிய
பெரிய தோளில்;வீசிப் புடைத்தனன்-வீசி அவனை அடித்தான்;
எழு முனை வயிரத் தண்டு- அந்த ஏழுமுனைகளை உடைய
வலிய தண்டாயுதம்; பொறியின் சிந்தி- தீப்பொறி போல் சிதறி;
நூறு கூறாய் இற்றது – நூறு துண்டுகளாய் முறிந்து விட்டது.
————-
அனுமன் போரிடுதல்
தண்டு இற, தடக் கை ஓச்சி, ‘தழுவி அத் தறுகணானைக்
கொண்டு இறப்புறுவென்’ என்னா, தலையுறக் குனிக்குங் காலை,
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த,
மண் திறப்பு எய்த வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான். 196-
தண்டு இற- தண்டாயுதம் முறிந்தவுடன்; தடக்கை ஓச்சி-
தன் பெரிய கைகளைச் செலுத்தி; அத்தறுகணானை – அந்த
வலிய கும்பகருணனை; தழுவிக்கொண்டு இறப்புறுவென்-
பற்றிக் கொண்டு இறப்பு உறச் செய்வேன்; என்னா- என்று எண்ணி;
தலையுறக் குனிக்குங் காலை – தலைப்பகுதி கீழ் உறக்
குனிந்தபோது; வலாளன் – வலிமையுடைய கும்பகருணன்;
புண்திறப்புற – அங்கதன் உடம்பில் புண் பல பிளந்து
தோன்றுமாறு; கையினால் புகைந்து குத்த- கையினால் சினந்து
குத்த; மண் திறப்பு எய்த வீழ்ந்தான் – அவன் நிலம் பிளவு
படும்படி வீழ்ந்தான்; மாருதி இமைப்பின் வந்தான் – அனுமன்
நெடிப் பொழுதுக்குள் அங்கு வந்தான்.
————-
மறித்து அவன் அவனைத் தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில், குன்றம் ஒன்று
பறித்து, அவன் நெற்றி முற்றப் பரப்பிடை, பாகம் உள்ளே
செறித்தெனச் சுரிக்க வீசி, தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான். 197-
அவன் மறித்து- அக்கும்பகருணன் மீண்டும்; அவனை-
அங்கதனை; தன் கை- தனது கையில் உள்ள; வயிர வான்சூலம்-
உறுதி பொருந்திய கூரிய சூலத்தை; மார்பில் – மார்பில்; குறித்துற
எறியலுற்ற காலையில் – குறியாகப் பொருந்த எறியத் தொடங்கிய
பொழுது; குன்றம் ஒன்று பறித்து – அனுமன் குறுக்கிட்டு
மலையொன்றைப் பரித்து; அவன் நெற்றி முற்றப் பரப்பிடை-
அவன் நெற்றியாகிய விசாலமான இடத்தில்; பாகம் உள்ளே
செறித்தென- பாதி உள்ளே பொத்தி உள்ளது என்னுமாறு; சுரிக்க
வீசி- உள்ளே பதியுமாறு வீசி; தீர்த்தனை-தூய்மை உள்ளவனான
இராமனை; வாழ்த்திஆர்த்தான்-வாழ்த்திப் பேரொலி செய்தான்.
—————
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றதன்ன
மலையினைக் கையின் வாங்கி, மாருதி வயிர மார்பின்,
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப,
குலை உறு பொறிகள் சிந்த, வீசி, தோள் கொட்டி ஆர்த்தான். 198-
தலையினில் தைத்து- கும்பகருணனது தலையில் பொருந்தி;
வேறு ஓர் தலை என நின்ற தன்ன-வேறு ஒரு தலை தோன்றி
உள்ளது என்னுமாறு நின்ற; மலையினைக் கையின் வாங்கி-
மலையினைத் தன் கையினால் எடுத்து; மாருதி வயிர மார்பின்-
அனுமனது உறுதியான மார்பில்; பொன் செய் கம்மியர்-
இரும்புத் தொழில் செய் கம்மியரது; உலையுற வெந்த-
உலையில் வெந்த இரும்பின் மீது; கூடம் ஒப்ப- சம்மட்டியை
ஒப்பக்; குலையுறு பொறிகள் சிந்த- தொகுதியாகப் பொருந்திய
தீப்பொறிகள் சிதறும்படி;வீசித்தோள் கொட்டி ஆர்த்தான்-
எறிந்து தோளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
———–
அவ்வழி வாலி சேயை அரிகுல வீரர் அஞ்சார்
வவ்வினர் கொண்டு போனார்; மாருதி வானை முற்றும்
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி,
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 199-
அவ்வழி – அவ்விடத்து; அரிகுல வீரர் – குரங்குக் குல
வீரர்கள்; வாலி சேயை – வாலியின் மகனாகிய அங்கதனை;
அஞ்சார் வவ்வினர் கொண்டு போனார்- அஞ்சாதவராய்த்
தூக்கிக் கொண்டு போனார்கள்; மாருதி – அனுமன்; வானை
முற்றும் கவ்வியது அனையது – வானம் முழுவதும்
மறைத்ததை ஒத்ததாகிய; ஆங்கு ஓர் நெடுவரை .- அங்குள்ள
ஒரு பெரிய மலையை;கடிதின் வாங்கி – விரைவாகக் கையில்
எடுத்து; எவ்வம் இல் ஆற்றலானை – குற்றம் அற்ற
வலிமையுடைய ஆற்றல் உடைய கும்பகருணனை;நோக்கி நின்று – பார்த்து நின்று; இனைய சொன்னான் –
இச்சொற்களைச் சொல்லலானான்.
————–
‘எறிகுவென் இதனை நின்மேல்; இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி, வல்லை மாற்றினை என்னின், வன்மை
அறிகுவர் எவரும்; பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்;
பிறிகுவென்; உலகில், வல்லோய்! பெரும் புகழ் பெறுதி’ என்றான். 200-
வல்லோய் – மிகு வலியுடைய கும்பகருணனே; இதனை நின்
மேல் எறிகுவென்- இம்மலையினை உன்மேல் எறியப் போகிறேன்;
இமைப்புறும் அளவில் – இதனால் இமைப்பொழுதில்; ஆற்றல்
மறிகுவது அன்றி – உன் வலிமை மாய்ந்து போவது அல்லாமல்;
வல்லை மாற்றினை என்னின் – விரைவாக இதனைத் தள்ளி
மாற்றிவிட்டாய் என்றால்; வன்மை அறிகுவர் எவரும்- உன்
வல்லமையை எல்லோரும் அறிவர்; யான் பின்னை உன்னோடு
அமரும் செய்யேன் – நான் பிறகு உன்னோடு போர் செய்யாமல்;
பிறிகுவென்- அப்பால் சென்று விடுவேன்; உலகில் – உலகத்தில்;
பெரும் புகழ் பெறுதி – நீ உலகத்தில் பெரும் புகழ் பெறுவாய்
என்றான்.
—————-
மாற்றம் அஃது உரைப்பக் கேளா, மலை முழை திறந்தது என்னக்
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து, ‘நீ கொணர்ந்த குன்றை ஏற்றனென்;
ஏற்ற காலத்து, இறை அதற்கு ஒற்கம் எய்தின், தோற்றனென், உனக்கு;
என் வன்மை சுருங்கும்’ என்று அரக்கன் சொன்னான். 201-
மாற்றம் அஃது உரைப்பக் கேளா- அனுமன் கூறிய
அச்சொற்களைக் கேட்டு; மலை முழை திறந்தது என்ன- மலைக்
குகையைத் திறந்தது போல; கூற்று உறழ்பகுவாய் விள்ள
நகைத்து – கூற்றுவனோடு மாறுபட்ட பெரியவாயைத் திறந்து சிரித்து; நீ
கொணர்ந்த குன்றை – நீ கொண்டு வந்து பெருமலையை;
ஏற்றனென் – ஏற்றவனாய்; ஏற்ற காலத்து – அவ்வாறு ஏற்ற
காலத்தில்; இறை அதற்கு ஒற்கம் எய்தின்- சிறிதளவாவது
அதற்குத் தளர்ச்சி அடைந்தால்; உனக்கு தோற்றனென்-
உனக்குத் தோற்றவன் ஆவேன்; என் வன்மை சுருங்கும் – என்
வலிமை உன் வலிமைக்குத் தாழ்ந்தது ஆகும்; என்று அரக்கன்
சொன்னான் – என்று கும்பகருணன் கூறினான்.
————-
மாருதி, ‘வல்லை ஆகின், நில், அடா! மாட்டாய் ஆகின்,
பேருதி, உயிர்கொண்டு’ என்று, பெருங் கையால் நெருங்க விட்ட கார் உதிர்
வயிரக் குன்றைக் காத்திலன், தோள் மேல் ஏற்றான்;
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது, எவ் உலகும் உட்க. 202-
மாருதி – அனுமன்; அடா! – அடா!; வல்லைஆகின் நில்-
வல்லமை உடையவனாயின் நில்; மாட்டாய் ஆகின்- மாட்டாய்
ஆகின்; உயிர் கொண்டு பேருதி – உயிரைக் கொண்டு அப்பால்
போ; என்று – என்று சொல்லி; பெருங்கையால் நெருங்க விட்ட
– தன் பெரிய கைகளினால் அவனை நெருங்குமாறு வீசிய; கார்
உதிர் வயிரக் குன்றை – மேகங்கள் உதிர்வதற்குக் காரணம் ஆன
வலிய மலையை; காத்திலன் – தடுத்துக் காத்திலனாய்த்; தோள்
மேல் ஏற்றான் – தன் தோளின் மீது ஏற்றுக் கொண்டான்; எவ்
உலகும் உட்க- எல்லா உலகமும் அஞ்சுமாறு; ஓர் உதிர் நூறு
கூறாய் உக்கது- அது ஒருமுறை உதிர்கையிலே நூறு பகுதியாகச்
சிந்திச் சிதறி விட்டது.
————
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து, ‘இவனது ஆற்றல்
அளக்குறற்பாலும் ஆகா; குலவரை அமரின் ஆற்றா;
துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி
பிளக்குமேல், பிளக்கும்’ என்னா, மாருதி பெயர்ந்து போனான். 203-
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து- வலிய
மலை தாக்கியும் தளர்ச்சி எதுவும் இல்லாமல் கும்பகருணன் நின்ற
தன்மையைப் பார்த்து; இவனது ஆற்றல் அளக்குறற்பாலும்
ஆகா- இவனுடைய வலிமை இவ்வளவு என்று அளவிட்டுச்
சொல்லக் கூடியதல்ல; குலவரை அமரின் ஆற்றா- கூட்டமாக
உள்ள மலைகளும் போரில் இவன் வலிமைக்குத் தாங்க மாட்டா;
துளக்குறும் நிலையன் அல்லன்-எவராலும் தளர்ச்சி அடையச்
செய்யும் தன்மை உடையவன் அல்லன்; சுந்தரத் தோளன்
வாளி – அழகிய தோள்களையுடைய இராமபிரானது அம்பு;
பிளக்கு மேல் பிளக்கும் – பிளக்கக் கூடுமானால் கூடும்;
என்னா – என்று கூறி; மாருதி பெயர்ந்து போனான்-அனுமன்
அப்பால் போயினன்
—————–
குரக்குச் சேனையின் அழிவு
‘எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய, யாரும்
முழுவதும் மாள்வர், இன்றே இவன் வலத்து அமைந்த முச் சூழ்
கழுவினில்’ என்று வானோர் கலங்கினார், நடுங்கினாரால்-
‘பொழுதினின் உலகம் மூன்றும் திரியும்’ என்று உள்ளம் பொங்கி. 204-
எழுபது வெள்ளத்துள்ளார்- எழுபது வெள்ள அளவுடைய
குரங்குப் படை வீரர்களில்; இறந்தவர் ஒழிய- போரில் இறந்தவர்
தவிர; யாரும் – எஞ்சியுள்ள யாவரும்; முழுவதும் மாள்வர்-
அனைவரும் இறந்து படுவார்கள்; இன்றே- இப்பொழுதே; இவன்
வலத்து அமைந்த முச்சூல் கழுவினில்- இவனது வெற்றியுடன்
அமைந்த முச்சூலமாகிய கழுவினில்; என்று – என்று எண்ணியும்;
பொழுதினில் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம்
பொங்கி இமைப் பொழுதில் மூன்று உலகங்களும் நிலைமாறும்
என்று மனம் கொதித்தும்;வானோர் கலங்கினார் நடுங்கினாரால்
– தேவர்கள் கலங்கி நடுங்கினார்கள்.
————
தாக்கினார்; தாக்கினார்தம் கைத்தலம் சலித்தது அன்றி,
நூக்கினார் இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை-
ஆக்கினான்; களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றிப்
போக்கினான்; ஆண்மையாலே புதுக்கினான், புகழை அம்மா! 205-
தாக்கினார் – கும்பகருணனைக் குரங்குப் படைவீரர்
தாக்கினார்; தாக்கினார் தம் – அவ்வாறு தாக்கியவர்களுடைய;
கைத்தலம் சலித்தது அன்றி-கைத்தலம் சலித்ததே அல்லாமல்;
நூக்கினார் இல்லை- அவனை அசைத்துத் தள்ளியவர் எவரும்
இல்லை; ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை- எந்த
வகையிலும் நோவு செய்தவர்களும் இல்லை; களத்தின் ஆங்கு
ஓர் குரங்கினது அடியும் இன்றி- போர்க் களத்தில் ஒரு
குரங்கினது அடிச்சுவடும் இன்றி; ஆக்கினான் போக்கினான்
– போரைச் செய்தவன் ஆன கும்பகருணன் அழித்தான்;
ஆண்மையாலே புதுக்கினான் புகழை – தன்னுடைய
ஆண்மையால் புகழைப் புதுப்பித்தான்.
————–
‘சங்கத்து ஆர் குரங்கு சாய, தாபதர் என்னத் தக்கார்
இங்கு உற்றார் அல்லரோதான்? வேறும் ஓர் இலங்கை உண்டோ?
எங்குற்றார் எங்குற்றார்?’ என்று எடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,
துங்கத் தோள் கொட்டி, ஆர்த்தான்-கூற்றையும் துணுக்கம் கொண்டான். 206-
கூற்றையும் நுணுக்கம் கொண்டான்- யமனையும் அச்சம்
கொள்ளச் செய்திட்ட கும்பகருணன்; சங்கத்து ஆர் குரங்கு
சாய – கூட்டமாகப் பொருந்திய குரங்கு வீரர் அழிய; தாபதர்
என்னத் தக்கார் – தவத்தவர் என்று சொல்லத் தக்கவர் ஆன
இராமலக்குவர்; இங்கு உற்றார் அல்லரோ தான்- இங்கு
வந்துற்றார் அல்லரோ; வேறும் ஓர் இலங்கை உண்டோ-
அல்லது அவர்கள் முற்றுகை இட வேறு ஒரு இலங்கையும் இருக்கின்றதோ?;
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து – எங்கே
போனார், எங்கே போனார் என்று பெரும் குரல் எடுத்து
அழைத்து; இமையோர் அஞ்ச – தேவர்கள் அஞ்சும்படி;
துங்கத் தோள் கொட்டி ஆர்த்தான் – வலிய தோளைத்
தட்டிப் பேரொலி செய்தான்.
———–
பறந்தலை அதனின் வந்த பல் பெருங் கவியின் பண்ணை
இறந்தது கிடக்க, நின்ற இரிதலின், யாரும் இன்றி
வறந்தது; சோரி பாய வளர்ந்தது, மகர வேலை-
குறைந்துளது, உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன. 207-
பறந்தலை அதனின் வந்த – போர்க்களமாகிய அதன்
இடத்து வந்த; பல்பெருங் கவியின் பண்ணை – பலவாகிய
பெரிய குரங்கினது கூட்டம்;இறந்தது கிடக்க- இறந்தது போக;
நின்ற இரிதலின்- நின்ற குரங்குகள் நிலைகெட்டு ஓடியதால்;
யாரும் இன்றி வறந்தது – எவரும் இல்லாமல் வறியது
ஆயிற்று; குறைந்துளது மகர வேலை – குறைந்துள்ளதான
மகர மீன்களை உடைய கடல்; உவாவுற்று ஓதம் கிளர்ந்து
மீக்கொண்டது என்ன- முழுமதி நாளில் வெள்ளப் பெருக்கு
மேல் பொங்குவது ஒப்ப; சோரி பாய வளர்ந்தது- இரத்தம்
பாய்ந்ததனால் மிக்கு வளர்ந்தது.
————-
இலக்குவன்-கும்பகருணன் போர்
குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன; குரங்கின்
வென்றி அம் பெருஞ் சேனை ஓர் பாதியின் மேலும்
அன்று தேய்ந்தது’ என்று உரைத்தலும், அமரர் கண்டு உவப்பச்
சென்று தாக்கினன், ஒரு தனிச் சுமித்திரை சிங்கம். 208-
குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன- போர் செய்ய
உதவிய மலைகளும் கற்களும் மரங்களும் குறைந்து விட்டன;
குரங்கின் வென்றி அம் பெருஞ்சேனை- குரங்கினது வெற்றி
பொருந்திய பெரிய படையானது; ஓர் பாதியின் மேலும் அன்று
தேய்ந்தது – ஒரு பாதி அளவுக்கு மேல் தேய்ந்து அழிந்து
விட்டது; என்று உரைத்தலும்- என்று படை வீரர் உரைத்தலும்;
ஒரு தனிச் சுமித்திரை சிங்கம்- ஒப்பற்ற சுமித்திரை மகனான
சிங்கம் போன்ற இலக்குவன்; அமரர் கண்டு உவப்ப-தேவர்கள்
கண்டு மகிழும்படி; சென்று தாக்கினன் – சென்று
கும்பகருணனைத் தாக்கலானான்.
———-
நாண் எறிந்தனன், சிலையினை; அரக்கியர் நகு பொன்
பூண் எறிந்தனர்; படியிடை இடி பொடித்தென்னச்
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன; அலகை,
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை. 209-
சிலையினை நாண் எறிந்தனன்- இலக்குவன் தன் வில்லின்
நாணைத் தெறித்தான்; அரக்கியர் நகுபொன் பூண் எறிந்தனர்
-அவ்வொலி கேட்டு அரக்கர் இறந்தமையால் இறந்தவர்களுடைய
மனைவியர் பொற்றாலியைக் கழற்றி எறிந்தனர்; படியினை இடி
பொடித்தென்ன- நிலத்தில் இடி உண்டானாற் போல; சேண்
எறிந்து எழுதிசை செவிடு எறிந்தன – வெகுதூரம் வரை
தோன்றும் திக்குகள் ஓசையால் செவிடு பட்டன; அலகை தூண்
எறிந்தன கை எடுத்து- பேய்கள் தூண்களை அடித்து வைத்தாற்
போன்ற கைகளை உயரத் தூக்கி; துணங்கை ஆடின-துணங்கைக்
கூத்தாடின.
————-
இலக்குவன் கடிது ஏவின, இரை பெறாது இரைப்ப,
சிலைக் கடுங் கணை நெடுங் கணம் சிறையுடன் செல்வ,
உலைக் கொடுங் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி,
குலக் கயங்களில் குளித்தன; குடித்தன, குருதி. 210-
இலக்குவன் கடிது ஏவின- இலக்குவன் விரைவாகச்
செலுத்தியனவும்; இரை பெறாது இரைப்ப- இரை பெறாமையால்
ஒலிப்பனவுமாகிய; சிலைக் கருங்கணை- சிலை வடிவு உடைய
கொடிய அம்புகளின்; நெடுங்கணம் – பெருங்கூட்டங்கள்;
சிறையுடன் செல்வ- சிறகுகளுடன் சென்றதனால்; உலைக்
கொடுங்கனல் வெதும்பிட- உலைக்களத்தில் உள்ள கொடிய
தீயும் வெதும்பும்படி; வாய் எரிந்து ஓடி- நெருப்பை வாயில்
வெளியிட்டுக் கொண்டு ஓடிக்; குலக்கயங்களில் குளித்தன-
கூட்டமாக உள்ள திசையானைகளின் உடம்பில் மூழ்கி; குருதி
குடித்தன- அவற்றின் குருதியைப் பருகின.
———
அலை புடைத்த வாள் அரக்கரைச் சில கழுத்து அரிவ;
சில, சிரத்தினைத் துணித்து, அவை திசைகொண்டு செல்வ;
கொலை படைத்த வெங் களத்திடை விழா, கொடு போவ;
தலை படைத்தன போன்றனவால், நெடுஞ் சரங்கள். 211-
சில- சில அம்புகள்; அலை புடைத்த வாள் அரக்கரை-
கடல் அலையை அடித்து வென்ற பெருமையுடைய கொடிய
அரக்கர்களைக்; கழுத்து அரிவ- கழுத்தை அரிவனவாயின; சில
நெடுஞ்சரங்கள்-சில நீண்ட அம்புகள்; சிரத்தினைத் துணித்து-
கழுத்தினைத் துண்டித்து; அவை கொலை படைத்த
வெங்களத்திடை விழா- அக்கழுத்துக்கள் கொலைத் தொழில்
படைத்த கொடிய போர்க்களத்தில் வீழாதவாறு; கொடு போவ-
கொண்டு போகின்றவைகளாகித்; திசை கொண்டு செல்வ-
திசைகளின் எல்லைக்குக் கொண்டு செல்வதனால்; தலை
படைத்தன போன்றனவால் – தலை பெற்றவை போன்று
விளங்கின.
———-
உருப் பதங்கனை ஒப்பன சில கணை, ஓடைப்
பொருப்பதங்களை உருவி, மற்று அப்புறம் போவ,
செருப் பதம் பெறா அரக்கர்தம் தலை பல சிந்தி,
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன, முழை புகு பாம்பின். 212-
உரு பதங்களை ஒப்பன- வடிவம் சூரியனை ஒப்பனவாகிய;
சில கணை- சில அம்புகள்; ஓடைப் பொருப் பதங்களை
உருவி- முகபடாம் அணிந்த மலை போன்ற யானைகளை ஊடுருவி; மற்று
அப்புறம் போவ- பின் அப்புறம் போனவையாய்; செருப்பதம்
பெறா அரக்கர் தம் தலை பல சிந்தி-போர்க்களத்தில் காலடி
வைத்திருக்காத அரக்கர்களின் பல தலைகளை உருட்டி; முழை
புகு பாம்பின்- குகையில் புகும் பாம்புகள் போல; பருப்
பதங்கள் புக்கு ஒளிப்பன – மலைகளில் புகுந்து
ஒளிப்பனவாயின.
———–
மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடிங் கணை போவ,
முன்பு நின்றவர் முகத்திற்கும், கடைக் குழை முதுகின்
பின்பு நின்றவர் பிடர்க்கும், இவ் விசை ஒக்கும், பிறழா. 213-
பல் குழுவாம் மின் புகுந்தன என- பல கூட்டங்களாக
மின்னல்கள் புகுந்தன போன்று; மிளிர்வ- கருதும்படி
விளங்குவனவும்; பொன் புகுந்து ஒளிர் வடிம்பின- பொன்
போல் விளங்கி ஒளிர்கின்ற விளிம்புகளையுடையவையும் ஆன;
கருங்கணை போவ- கொடிய கணைகள் விரைந்து போவனவாய்;
முன்பு நின்றவர் முகத்திற்கும் – தார்ப் படையில் நின்றவர்
உடைய முகத்துக்கும்; கடைக்குழை முதுகின் பின்பு நின்றவர்
பிடர்க்கும் – கடைப்படையான கூழையின் பின்புறமான இடத்து
நிற்பவர் பிடரியிலும்; இவ்விசை பிறழா ஒக்கும் – இந்த
வேகத்தில் மாறுபடாமல் ஒத்து அமையும்.
————
போர்த்த பேரியின் கண்ணன, காளத்தின் பொகுட்ட,
ஆர்த்த வாயன, கையன, ஆனையின் கழுத்த,
ஈர்த்த தேரன, இவுளியின் தலையன, எவர்க்கும்
பார்த்த நோக்கன, கலந்தன-இலக்குவன் பகழி. 214-
இலக்குவன் பகழி- இலக்குவனுடைய அம்புகள்; போர்த்த
பேரியின் கண்ணன- தோலால் போர்த்தப்பட்ட பேரிகையின்
கண்ணிடத்துப் பாய்வனவும்; காளத்தின் பொகுட்ட- காளம்
என்ற ஊது கொம்பின் ஊதுகின்ற முனையில் பாய்வனவும்;
ஆர்த்த வாயின கையின- பிற கருவிகளை ஊதும் வாயிலும்
பிடித்த கையிலும் பாய்வனவும்; ஆனையின் கழுத்த – யானைகளின்
கழுத்தில் பாய்வனவும்; ஆனையின் கழுத்த- யானைகளின்
கழுத்தில் பாய்வனவும்; ஈர்த்த தேரன- குதிரைகள் பூட்டி
இழுக்கப்பட்ட தேரில் பாய்வனவும்; இவுளியின் தலையன-
குதிரைகளின் தலையில் பாய்வனவும்; எவர்க்கும் பார்த்த
நோக்கன – பார்க்கும் எவராயினும் பார்த்த கண்களில்
பாய்வனவுமாகி; கலந்தன- எங்கும் பரவின.
———-
மருப்பு இழந்தன;-களிறு எலாம்-வால் செவி இழந்த,
நெருப்பு உகும் கண்கள் இழந்தன; நெடுங் கரம் இழந்த;
செருப் புகும் கடுங் காத்திரம் இழந்தன; சிகரம்
பொருப்பு உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட. 215-
களிறு எலாம் மருப்பு இழந்தன- இலக்குவன் பகழியால்
யானைகள் எல்லாம் கொம்புகளை இழந்தன; வால் செவி
இழந்த- வாலையும் செவிகளையும் இழந்தன; நெருப்பு உகும்
கண்கள் இழந்தன – நெருப்பை வெளிப்படுத்தும்
கண்களையிழந்தன; நெடுங்கரம் இழந்த – நீண்ட
துதிக்கைகளை இழந்தன; செருப்புகும் கடுங்காத்திரம்
இழந்தன – போரில் புக்கு விரைந்து செல்லும்
முன்னங்கால்களை இழந்தன; சிகரப் பொருப்பு
உருண்டனவாம் எனத் தலத்திடைப் புரண்ட- அவ்வாறு
இழந்து சிகரத்தை உடைய மலைகள் நிலத்தில் உருள்கின்றன
என்னுமாறு உருண்டன.
————-
நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின், திசை எங்கும்
நிறைந்த சரம் தலைத்தலை படப் பட, மயங்கின சாய்ந்த;
உரம் தலத்துற உழைத்தவால்; பிழைத்தது ஒன்று இல்லை-
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலாக் குதிரை. 216-
குரம் தலத்தினும்- குளம்புகள் நிலத்திலும்; விசும்பினும்
– ஆகாயத்திலும்; மிதித்திலாக் குதிரை- மிதித்துச் செல்லாத
குதிரைகள்;நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் -இலக்குவன்
இடைவிடாமல் அம்புகளை விடுவதனால்; திசை எங்கும்
நிறைந்த – திக்குகள் எங்கும் நிறைந்த; சரம் தலைத்தலை
படப்பட- அம்புகள் மேலும் மேலும் மிகுதியாகப் படுவதனால்; மயங்கின சாய்ந்த-
மயங்கிச் சாய்ந்தன; உரம் தலத்துற உழைத்தவால்- மார்பு
பூமியில் படுமாறு விழுந்து வருந்தின; ஒன்று பிழைத்தது
இல்லை – ஒன்று கூட உயிர் பிழைத்து இல்லை.
————-
பல்லவக் கணை பட, படு புரவிய, பல் கால்
வில்லுடைத் தலையாளொடு சூதரை வீழ்த்த,
எல்லை அற்ற செங் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்,
செல்லகிற்றில, நின்றில-கொடி நெடுந் தேர்கள். 217-
கொடி நெடுந்தேர்கள் – கொடி கட்டப்பட்ட பெரிய
தேர்கள்; பல்லவக் கணைபட- இலக்குவன் விடுத்த இளந்தளிர்
போன்ற சிவப்பு நிறமான அம்புகள் பாய்ந்ததனால்; படு புரவிய-
இறந்த குதிரைகளையுடையனவாயின; பல்கால் வில்லுடைத்
தலையாளொடு-பல இடங்களில் தேரில் இருந்து போர் செய்யும்
தேர் வீரரோடு; சூதரை வீழ்த்த- அவை தேர்ப்பாகரையும்
கொன்றழித்தன; செல்லகிற்றில- அதனால் அத்தேர்கள் ஓடிச்
செல்ல மாட்டா ஆயின; எல்லை அற்ற செங்குருதியின்
ஈர்ப்புண்ட அல்லால் – ஆயினும் தேர்கள் போர்க்களத்து
ஓடிய குருதி வெள்ளத்தில் இழுத்துச் செல்லப் பட்டன
அல்லாமல்; நின்றில- ஓர் இடத்து நிற்க மாட்டா ஆயின.
—————-
பேழை ஒத்து அகல் வாயன பேய்க் கணம் முகக்கும்
மூழை ஒத்தன-கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன, உதிரத்
தாழி ஒத்த வெங் குருதியில் மிதப்பன, தலைகள். 218-
முறை சால் – முறைமையின் படி பயன்தரும்; ஊழை ஒத்தன
ஒரு கணை தைத்தன- ஊழ்வினையை ஒத்தனவாகிய ஒப்பற்ற
இலக்குவனின் கணைகள் தைத்ததனால்; தலைகள் கழுத்து அற
வீழ்ந்தன – வீரர்களின் தலைகள் கழுத்து அறுபட்டு வீழ்ந்தன;
பேழை ஒத்து அகல்வாயின – அவை பெட்டியைப் போன்று
அகன்ற வாயையுடையனவாயும்; பேய்க்கணம் முகக்கும் மூழை
ஒத்தன – பேய்க்கணங்கள் களக்கூழ் துழாவுவதற்கு உதவும்
அகப்பையை ஒத்தனவாயும்; உதிரத்தாழி ஒத்த வெங்குருதியில்
மிதப்பன-குருதித் தாழியாகிய கடலில் உள்ள குருதியில் மிதக்கும்
தோணி போன்றும் இருந்தன.
————–
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள்
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன-அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன, துடிகளின் நவை தீர்
வட்ட வான்கணில், வதிந்தன வருண சாமரைகள். 219-
அழிந்து நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் – அழிந்து
குத்திட்டாற்போல் வீழ்ந்தனவாகிய துடிகளின்; நவை தீர் வட்ட
வான்கணில்- துடிப்பறையின் குற்றமற்ற நடுவில் வட்டமாக உள்ள
வாய்களில் (அடிக்கப்படும் இடங்களில்); வதிந்தன – பொத்துக்
கொண்டு விளங்குகிற; வருண சாமரைகள் – நன்னிறம் கொண்ட
சாமரைகள்; ஒட்டி நாயகன் வென்றி நாள் – அண்மையில் வர
இருக்கிற இராமனுடைய வென்றி நாள் கொண்டாட;குறித்து ஒளிர்
முளைகள் அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன- எண்ணி
வெண்மையாக ஒளிரும் முளைகளைக் கொண்ட பாலிகைகள்
வரிசையாக வைக்கப்பட்டதை நிகர்த்தன.
—————–
எரிந்த வெங் கணை நெற்றியில் படுதொறும், யானை,
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால்,
திரிந்த வேகத்த, பாகர்கள் தீர்ந்தன, செருவில்
புரிந்த வானரத் தானையில் புக்கன, புயலின். 220-
எரிந்த வெங்கணை நெற்றியில் படுதொறும்- இலக்குவனது
எரியும் தன்மையுள்ள கொடிய கணைகள் நெற்றியில் படுந்தோறும்;
யானை யானைகள்; அரிந்த அங்குசத்து-கூர்மையாக அரியப்பட்ட
அங்குசத்தை; அங்கையின் – கொண்ட அழகிய கைகளோடு;
கல்வியின் அமைவால் – பாகன் கற்றுத் தந்த போர்க் கல்வியின்
தன்மையால்; திரிந்த வேகத்த- திரிந்த வேகத்தையுடையனவாய்;
பாகர்கள் தீர்ந்தன- செலுத்துகின்ற பாகர்களையும் இழந்தனவாய்;
புயலின்- புயல் போல; செருவில் புரிந்த வானரத் தானையில்
புக்கன- போர்க்களத்தில் விருப்பம் கொண்ட வானரப் படையின்
இடையில் புகுந்தன.
—————
வேனிலான் அன்ன இலக்குவன் கடுங் கணை விலக்க,
மான வெள் எயிற்று அரக்கர் தம் படைக்கல வாரி
போன போன வன் திசைதொறும் பொறிக் குலம் பொடிப்ப,
மீன் எலாம் உடன் விசும்பின்நின்று உதிர்ந்தென வீழ்ந்த. 221-
வேனிலான் அன்ன இலக்குவன் – மன்மதனை ஒத்த
இலக்குவனுடைய; கடுங்கணை விலக்க- கொடிய அம்புகள்
விலக்கியதனால்; மான வெள் எயிற்று அரக்கர்தம்-மானமிகு
வெள்ளிய பற்களையுடைய அரக்கர்கள் வீசிய; படைக்கல
வாரி-படைக்கலங்களாகிய கடல்கள்;போன போன வன்திசை
தொறும்- சென்ற சென்ற வலிமையான திசைகளில் எல்லாம்;
பொறிக்குலம் பொடிப்ப- தீப்பொறித் திரள் தோன்ற;மீன்
எலாம் உடன் – விண்மீன்கள் எல்லாம் ஒருசேர; விசும்பின்
நின்று-ஆகாயத்தில் இருந்து;உதிர்ந்தென வீழ்ந்த-உதிர்ந்தாற்
போன்று வீழ்ந்தன.
————–
கரம் குடைந்தன, தொடர்ந்து போய்க் கொய் உளைக் கடு மாக்
குரம் குடைந்தன, வெரிநுறக் கொடி நெடுங் கொற்றத்
தரம் குடைந்தன, அணி நெடுந் தேர்க் குலம் குடைந்த,-
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா! 222-
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் – அரத்தில்
அராவப் பட்ட வாய்க் கூர்மையுள்ள நீண்ட அம்புகள்; கரம்
குடைந்தன – இலக்குவன் கைகளால் வில்லில் பூட்டப் பெற்று;
தொடர்ந்து போய் – வரிசையாகப் போய்; கொய் உளைக்
கடுமாக்குரம் குடைந்தன வெரி நுற- கொய்யப்பட்ட
பிடரிமயிரை உடைய விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்பினையும் முதுகினையும்
துளைத்தனவாய்; கொடி நெடுங் கொற்றத் தரம் குடைந்தன-
அக்குதிரை வீரர் கைக்கொண்டுள்ள கொடிகளின் வெற்றிச்
சிறப்பையும் ஒழித்தன; அணி நெடுந் தேர்க்குலம் குடைந்த-
அழகிய நீண்ட தேர்க்கூட்டங்களையும் ஒழித்திட்டன.
———–
‘துரக்கம், மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை’ எனும் இது கண்டோம்;
இரக்கம் நீங்கினர், அறத்தொடும் திறம்பினர் எனினும்,
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர், விரும்பி, 223-
இரக்கம் நீங்கினர்-அரக்கர்கள் இரக்கம் நீங்கியவர்களாய்;
அறத்தொடும் திறம்பினர் எனினும் – அறநெறி தவறியவர்கள்
என்றாலும்; அரக்கர் ஆக்கையை- அரக்கர்களின் உடம்பினை;
அரம்பையர் விரும்பித் தழுவினர்- அமர மகளிர் விரும்பித்
தழுவினார்கள் இதனால்; மெய்யுணர்வு இருவினைகளைத்
துரக்கும் எனும் சொல்லின் – தத்துவ ஞானம்
இருவினைகளையும் நீக்கும் என்னும் சொல்லைப் பிரமாணத்தால்
கண்டது போல; வீரதை தீமையைக் கரக்கும் எனும் இது
கண்டோம்- வீரப் பண்பானது பாவத்தைப் போக்கும்
என்பதையும் கண்டோம்.
————-
மறக் கொடுந் தொழில் அரக்கர்கள், மறுக்கிலா மழைபோல்
நிறக் கொடுங் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர,
இறக்கம் எய்தினர் யாவரும், எய்தினர் எனின், அத்
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம். 224-
மறக் கொடுந்தொழில் அரக்கர்கள் – பாவத்தோடு சேர்ந்த
கொடுமையான தொழிலைச் செய்யும் அரக்கர்கள்; மறுக்கிலா
மழை போல்- விலக்க முடியாத மழையைப் போல; நெருப்பொடு
நிகர்வன – நெருப்பைப் போன்ற; நிறக்கொடுங்கணை-
இலக்குவனுடைய கொடிய அம்புகள்; நிமிர- உயர்ந்து ஓங்கிப்
பட்டதனால்; இறக்கம் எய்தினர் யாவரும்- இறந்தவர்கள்
யாவரும்; துறக்கம் எய்தினர் எனின் – வீர சுவர்க்கம்
அடைந்தார்கள் என்றால்; அத்துறக்கம் என்பதின் பெரியது
ஒன்று உளது எனச் சொல்லேம்- அச்சுவர்க்கத்தைக் காட்டிலும்
பெரிய உலகம் வேறு ஒன்று உண்டு என்று சொல்லத்துணியோம்.
————–
ஒருவரைக் கரம், ஒருவரைச் சிரம், மற்று அங்கு
ஒருவர் குரை கழல் துணை, தோள் இணை, பிற
மற்றும் கொளலால், விரவலர்ப் பெறா வெறுமைய ஆயின;
வெவ்வேறு இரவு கற்றன போன்றன-இலக்குவன் பகழி. 225-
வெவ்வேறு இரவு கற்றன போன்றன- வெவ்வேறு
வகையாகப் பொருளை இரத்தல் தொழிலைக் கற்றன
போன்றவாகிய; இலக்குவன் பகழி – இலக்குவன் அம்புகள்;
ஒருவரைக் கரம் – ஒருவரது கையையும்; ஒருவரைச் சிரம்-
ஒருவரது தலையையும்; மற்று அங்கு ஒருவர்-பின்னும் ஒருவரது;
குரை கழல் துணை-வீரக்கழல் அணிந்த இரு பாதங்கள்; தோள்
இணை- ஒருவரது இரு தோள்கள்; மற்றும் பிற கொளலால்-
மற்றுக் கிடைக்கும் பிறவற்றையும்; கொளலால் – கொண்டு
விட்டதால்; விரவலர் பெறா வெறுமைய ஆயின- பகைவர்
இல்லாமல் வறுமை அடைந்தனவாயின.
————-
சிலவரைக் கரம், சிலவரைச் செவி, சிலர் நாசி,
சிலவரைக் கழல், சிலவரைக் கண், கொளும் செயலால்,
நிலவரைத் தரு பொருள்வழித் தண் தமிழ் நிரப்பும் புலவர்
சொல் துறை புரிந்தவும் போன்றன-சரங்கள். 226-
சரங்கள் – இலக்குவன் அம்புகள்; சிலவரைக் கரம்- சிலரது
கைகளையும்; சிலவரைச் செவி- சிலரது காதுகளையும்;சிலர்நாசி-
சிலரது மூக்கையும்; சிலவரைக் கண் – சிலரது கண்; கொளும்
செயலால் – கொள்ளுகின்ற தன்மையால்; நிலவரை- நிலத்தில்;
தரு பொருள் வழி- கொடுக்கின்ற பொருளுக்கேற்ப; தண் தமிழ்
நிரப்பும் – தண் தமிழ்ச் செய்யுளைப் பாடுகின்ற; புலவர் சொல்
துறை புரிந்தவும் போன்றன- புலவர்களின் சொல் துறையை
விரும்பியவற்றை ஒத்திருந்தன.
—————
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட, அரக்கர்,
‘இறத்தும், இங்கு இறை நிற்பின்’ என்று இரியலின் மயங்கி,
திறத்திறம் படத் திசைதொறும் திசைதொறும்
சிந்திப் புறத்தின் ஓடினர், ஓடின குருதியே போல. 227-
அறத்தின் இன் உயிர் அனையவன்- அறத்திற்கு இனிய
உயிரை ஒத்தவனாகிய இலக்குவனது;கணைபட- அம்புகள்
படுவதால்; அரக்கர் – அரக்கர்கள்; இங்கு இறை நிற்பின்
இறத்தும் என்று-இங்கு ஒரு நொடிப்பொழுது நிற்பினும் இறந்து
விடுவோம் என்று; மயங்கி – நிலை கெட்டு; ஓடின குருதியே
போல- களத்தில் ஓடிய இரத்த வெள்ளம் போல; திறத்திறம்
பட- கூட்டம் கூட்டமாக; திசை தொறும் திசை தொறும்-
நாலா திசைகளிலும்; இரியலின் சிந்திப் புறத்தின் ஓடினர்- ஓடிச் சிதறுண்டு
வெளியே ஓடலாயினர்.
————
இலக்குவன் வில்லாண்மையைக் கும்பகருணன் வியத்தல்
செருவில் மாண்டவர் பெருமையும், இலக்குவன் செய்த
வரி வில் ஆண்மையும், நோக்கிய புலத்தியன் மருமான்,
‘திரிபுரஞ் செற்ற தேவனும் இவனுமே செருவின் ஒரு
விலாளர்’ என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான். 228-
செருவில் மாண்டவர் பெருமையும்- போர்க் களத்தில்
இறந்தவர்களது மிகுதியையும்; இலக்குவன் செய்த வரிவில்
ஆண்மையும் – இலக்குவன் போரில் செய்த கட்டமைந்த
வில்லாண்மையையும்; நோக்கிய- கண்ணால் கண்ட; புலத்தியன்
மருமான்- புலத்தியனது வழித் தோன்றலாகிய கும்பகருணன்;
திரிபுரஞ் செற்ற தேவனும் – முப்புரங்களையும் அழித்த
சிவபிரானும்; இவனுமே செருவின் ஒருவிலாளர் என்று-
போரில் ஒப்பற்ற வில்லாளர் என்று; ஆயிரம் கால் எடுத்து
உரைத்தான் – பலமுறை எடுத்துக் கூறினான்.
—————
படர் நெடுந் தடத் தட்டிடைத் திசைதொறும் பாகர்
கடவுகின்றது, காற்றினும் மனத்தினும் கடியது,
அடல் வயங் கொள் வெஞ் சீயம் நின்று ஆர்க்கின்றது,
அம் பொன் வட பெருங் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான். 229-
படர் நெடுந் தடந்தட்டிடைப் பாகர்- பரவி ஓங்கி
அகன்ற தேர்த் தட்டில் அமர்ந்துள்ள பாகரால்; திசை தொறும்
கடவுகின்றது- திசையெல்லாம் செலுத்தப்படுவதும்; காற்றினும்
மனத்தினும் கடியது- காற்று மனம் ஆகியவற்றைக் காட்டிலும்
வேகமானதும்; அடல் வயம் கொள் வெஞ்சீயம் நின்று
ஆர்க்கின்றது-வலிய வெற்றி பொருந்திய தேரில் பூட்டப்பெற்ற
சிங்கங்கள் இடைவிடாமல் ஒலிக்கப்பெற்றதும்; அம்பொன்
வடபெருங்கிரி பொருவு தேர்-அழகிய பொன்மயமான வடமேருமலையை ஒத்த தேரினை;
ஓட்டினன் வந்தான்- கும்பகருணன் ஓட்டியவனாய் வந்தான்.
————–
அனுமன் தோள் மீது இலக்குவன் ஏறிச் சென்று பொருதல்
தொளை கொள் வான் நுகச் சுடர் நெடுந் தேர் மிசைத் தோன்றி,
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெஞ் செருத் தொழில் மலைய,
‘கிளை கொளாது, இகல்’ என்று எண்ணி, மாருதி கிடைத்தான்,
‘இளைய வள்ளலே! ஏறுதி தோள்மிசை’ என்றான். 230-
வளை கொள் வெள் எயிற்று அரக்கன்- வளைதலைக்
கொண்ட வெள்ளிய பற்களை உடைய கும்பகருணன்; தொளை
கொள்வான் நுகச் சுடர் நெடுந்தேர் மிசைத் தோன்றி-
தொளையில் பூட்டப்பட்ட பெரிய நுகத்தடியை உடைய ஒளி
பொருந்திய பெரிய தேரில் ஏறி; வெஞ்செருத் தொழில் மலைய-
கொடிய போர்த்தொழில் செய்கையில்; இகல்கிளை கொளாது-
தரையில் இருந்து இலக்குவன் செய்யும் போர் மேம்பாடு
அடையாது; என்று எண்ணி- என்று கருதி; மாருதி கிடைத்தான்-
அனுமன் இலக்குவனை நெருங்கி; இளைய வள்ளலே- இளைய
பெருமானே; தோள் மிசை ஏறுதி என்றான் – என் தோள் மீது
ஏறிக் கொள்க என்றான்
————-
ஏறினான், இளங் கோளரி; இமையவர் ஆசி
கூறினார்; எடுத்து ஆர்த்தது, வானரக் குழுவும்;
நூறு பத்துடைப் பத்தியின் நொறில் பரி பூண்ட
ஆறு தேரினும் அகன்றது, அவ் அனுமன் தன் தடந் தோள் 231-
இளங்கோளரி ஏறினான்- அனுமன் தோளில் இளஞ்சிங்கம்
போன்ற இலக்குவன் ஏறினான்; இமையவர் ஆசி கூறினார்-
இமையவர்கள் ஆசி கூறினார்கள்; வானரக் குழுவும் எடுத்து
ஆர்த்தது- குரங்குக் கூட்டங்களும் பெருங் குரல் எடுத்து
ஆரவாரம் செய்தன; நூறு பத்துடை- ஆயிரம்; பத்தியின்
நொறில் பரிபூண்ட- வரிசையாக விரைந்து செல்லும் குதிரைகள்
பூட்டப்பெற்ற; ஆறு தேரினும் – கும்பகருணனது ஆறு
தேர்களைக் காட்டிலும்; அவ் அனுமன் தன் தடந்தோள்
அகன்றது- அந்த அனுமனது பெரிய தோள்கள் அகன்றன.
———–
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள்மேல்,
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்,
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசைப் பொலிந்தது
என்னுமாறு அன்றி, பிறிது எடுத்து இயம்புவது யாதோ? 232-
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் – தனக்கு
ஒப்புத் தானேயன்றிப் பிறர் இல்லாதவனாகிய அனுமன்; தோள்
மீது-தோளின் மீது; துன்னு பேர் ஒளி இலக்குவன்-நெருங்கிய
பேரொளி உடைய இலக்குவன்; தோன்றிய தோற்றம்-தோன்றிய
தோற்றமானது; பொன்னின் மால்வரை- பொன் மயமான மேரு
மலை; வெள்ளி மால் வரை- வெள்ளி மயமான பெரிய கைலாய
மலையின்;மிசைப் பொலிந்தது- மேல் விளங்கிற்று; என்னுமாறு
அன்றி- என்று கூறுமாறு அன்றி; பிறிது எடுத்து இயம்புவது
யாதோ- வேறு ஒன்றை உவமையாக எடுத்துச் சொல்ல யாது
உளது.
—————
ஆங்கு, வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன்,
தாங்கு பல் கணைப் புட்டிலும் தகை பெறக் கட்டி,
வீங்கு தோள் வலிக்கு ஏயது, விசும்பில் வில் வெள்க,
வாங்கினான், நெடு வடவரை புரைவது ஓர் வரி வில். 233-
ஆங்கு- அப்போது; வீரனோடு – வீரன் ஆகிய
இலக்குவனுடன்; அமர் செய்வான் அமைந்த- போர் செய்வான்
பொருட்டு;வாள் அரக்கன்- கொடிய கும்பகருணன்; பல்கணைத்
தாங்கு புட்டிலும் – பலகணைகளைத் தாங்கின அம்பு
அறாத்தூணியையும்; தகை பெறக்கட்டி- அழகு பெறக் கட்டி;
வீங்கு தோள் வலிக்கு ஏயது- பருத்த தன் தோள் வலிமைக்கு
ஏற்றதும்; நெடுவட வரை புரைவது – பெரிய மேரு மலையை
ஒத்ததும் ஆன; ஓர் வரிவில்- ஒப்பற்ற கட்டமைந்த வில்லினை;
விசும்பில் வில் வெள்க வாங்கினான் – ஆகாயத்தில் உள்ள
வானவில்லும் வெட்கம் கொள்ளும் படி வளைத்தான்.
———-
கும்பகருணனின் வீரவார்த்தையும், இலக்குவனின் மறுமொழியும்
‘இராமன் தம்பி நீ; இராவணன் தம்பி நான்;
இருவேம் பொரா நின்றேம்; இது காணிய வந்தனர், புலவோர்;
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து,
விராவு நல் அமர் விளைக்குதும், யாம்’ என விளம்பா, 234-
நீ இராமன் தம்பி – நீ இராமனுக்குத் தம்பி; நான்
இராவணன் தம்பி- நான் இராவணனுக்குத் தம்பி; இருவேம்
பொரா நின்றேம் – இருவரும் இப்பொழுது போர் செய்ய
நின்றோம்; இது காணிய வந்தனர் புலவோர் – இப்போர்த்
தொழிலைக் காண்பதற்காகத் தேவர்கள் வந்துள்ளனர்; பராவும்,
தொல் செருமுறை வலிக்கு – வழிபடுவதற்கு உரிய
பழைமையான போர் முறை வலிக்கு; உரியன – உரியவற்றை;
பகர்ந்து- சொல்லி; விராவு நல் அமர் விளைக்குதும்-
பொருந்திய சிறந்த போரைச் செய்வோம்; யாம் என விளம்பா-
நாம் என்று சொல்லி.
————–
‘பெய் தவத்தினோர் பெண்கொடி, எம்முடன் பிறந்தாள்,
செய்த குற்றம் ஒன்று இல்லவள், நாசி வெஞ் சினத்தால்
கொய்த கொற்றவ! மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடைக் கிடத்துவென்; காக்குதி’ என்றான். 235-
பெய்தவத்தினோர் பெண் கொடி- எங்களிடம் தங்கிய
நல்வினைத் தவத்தால் ஒப்பற்ற கொடி போன்ற பெண் ஒருத்தி;
எம்முடன் பிறந்தாள் – எங்களுடன் பிறந்தாள்;செய்த குற்றம்
ஒன்று இல் – அவள் செய்த குற்றம் ஒன்றும் இல்லை; அவள்
நாசி வெஞ்சினத்தால் கொய்த கொற்றவ- அவ்வாறு
இருப்பினும் அவளது மூக்கைக் கொடிய சீற்றத்தால் அரிந்த
வெற்றிக்குரியவனே; மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த-
அவளது கூந்தலைத் தொட்டு இழுத்த; கை தலத்திடைக்
கிடத்துவென்- கையை நிலத்தில் விழச் செய்யப் போகிறேன்;
காக்குதி என்றான்- காத்துக்கொள் என்றான் கும்பகருணன்.
———–
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர,
மல்லினால் செய்த புயத்தவன், ‘மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது, வெந் திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம், யாம்’ எனச் சொன்னான். 236-
அல்லினால் செய்த நிறத்தவன்- இருட்டினால் செய்தது
போன்ற கருநிறத்தை உடைய கும்பகருணன்; அனையது பகர-
அவ்வாறாகச் சொற்களைச் சொல்ல;மல்லினால் செய்த
புயத்தவன் – வலிமைப் பண்பால் செய்யப்பட்ட தோளை
உடைய இலக்குவன்; நும்பால் மாற்றங்கள்- நும்மிடம்
மறுமொழிகளை; வில்லினால் சொல்லின் அல்லது-
வில்லினால் சொல்வது அல்லது; வெந்திறல் வெள்க-கொடிய
வலிமைக்கு நாணம் உண்டாக; யாம் சொல்லினால் சொலக்
கற்றிலம் – யாம் சொல்லினால் சொல்வதற்குக் கற்கவில்லை;
எனச் சொன்னான் – என்று கூறினான்.
——————–
இருவரும் செய்த பெரும்போர்
‘விண் இரண்டு கூறு ஆயது; பிளந்தது வெற்பு;
மண் இரண்டு உறக் கிழிந்தது’ என்று இமையவர் மறுக,
கண் இரண்டினும் தீ உக, கதிர் முகப் பகழி
எண்-இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான். 237-
கண் இரண்டினும் தீ உக – கும்பகருணன் தன்
கண்ணிரண்டில் இருந்து தீ வெளிப்பட; விண் இரண்டு கூறு
ஆயது- ஆகாயம் இரண்டு பகுதியாகப் பிளவுபட்டது; வெற்பு
பிளந்தது-மலை பிளந்தது; மண் இரண்டு உறக் கிழிந்தது- மண்
இரண்டாகக் கிழிந்தது; என்று இமையவர் மறுக- என்று கருதித்
தேவர்கள் கலங்கும்படி; கதிர் முகப்பகழி – ஒளி விடுகின்ற
முனையையுடைய அம்புகள்; எண் இரண்டினோடு இரண்டு-
பதினெட்டினை, ஒரு தொடை தொடுத்து எய்தான் – ஒரு
தொடுப்பில் தொடுத்து விட்டான்.
————-
கொம்பு நாலுடைக் குலக் கரிக் கும்பத்தில் குளித்த,
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய, உரும் எனச் செல்வ,
வெம்பு வெஞ் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான். 238-
வெம்பு வெஞ்சினத்து இராவணற்கு இளையவன்-வெம்புகிற
கொடிய சினத்தை உடைய இராவணனது தம்பி; விட்ட- செலுத்திய;
கொம்பு நாலுடைக் குலக் கரிக்கும்பத்தில் குளித்த – நான்கு
தந்தங்களை உடைய ஐராவதம் என்னும் யானையின் மத்தகத்தில்
பாய்ந்தனவும்; உம்பர் ஆற்றலை ஒதுக்கிய- தேவர்களின்
வலிமையைப் போக்கியனவும்; உரும் எனச் செல்வ- இடிபோல்
செல்வனவும் ஆகிய; அம்பு பத்தினோடு எட்டையும்
– பதினெட்டு அம்புகளையும்; நான்கினால் அறுத்தான்-
இலக்குவன் நான்கு அம்புகளினால் தடுத்து அறுத்திட்டான்.
—————–
அறுத்த காலையின், அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது, ஆயிரம் உருவது, திசைமுகன் உதவப்
பொறுத்தது, ஆங்கு ஒரு புகர் முகக் கடுங் கணைப் புத்தேள்,
‘இறுத்து மாற்று, இது வல்லையேல்’ என்று, கோத்து, எய்தான். 239-
அறுத்த காலையின்- இலக்குவன் தன் அம்புகளை அறுத்த
பொழுது; அரக்கனும் – கும்பகருணனும்; அமரரை நெடுநாள்
ஒறுத்தது – தேவர்களை நெடுநாள் அடக்கித் தண்டித்ததும்;
ஆயிரம் உருவது- ஆயிரம் உருவத்தை உடையதும்; திசைமுகன்
உதவப் பொறுத்தது- நான்முகன் உதவப் பெற்று வைத்துக்
கொண்டிருப்பதுமான; ஆங்கு ஒரு புகர் முகக் கடுங்கணை-
அப்போது ஒளிவிடும் முகத்தை உடைய அம்பில்; புத்தேள்
இறுத்து – தெய்வத்தைத் தங்கச் செய்து; இது வல்லையேல்
மாற்று என்று- இதனை வலிமை உடையையாயின் மாற்றுவாய்
என்று; கோத்து எய்தான்- அம்பில் கோய்த்து எய்தான்.
———–
புரிந்து நோக்கிய திசைதொறும், பகழியின் புயலால்,
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்,
தெரிந்து, மற்ற அதுதன்னை ஓர் தெய்வ வெங் கணையால்
அரிந்து வீழ்த்தலும், ஆயிரம் உருச் சரம் அற்ற. 240-
புரிந்து நோக்கிய திசைதொறும் – கண்ணால் விரும்பிப்
பார்க்கும் திசையெங்கும்; பகழியின் புயலால்- அம்புகளின்
வேகத்தால்; எரிந்து செல்வதை நோக்கிய-எரிந்து போவதைக்
கண்ட; இராமனுக்கு இளையான் – இராமன் தம்பியாகிய
இலக்குவன்; மற்ற அது தன்னை- அதனை; தெரிந்து ஓர்
தெய்வ வெங்கணையால்- ஆராய்ந்து ஒப்பற்ற தெய்வக் கணை
ஒன்றால்; அரிந்து வீழ்த்தலும் – அறுத்து வீழ்த்திய அளவில்;
ஆயிரம் உருச்சரம் அற்ற – ஆயிரம் உருவம் கொண்ட
அக்கணை அழிந்தது.
————–
ஆறு-இரண்டு வெங் கடுங் கணை அனுமன்மேல் அழுத்தி,
ஏறு வெஞ் சரம் இரண்டு இளங் குமரன்மேல் ஏற்றி,
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து, ஒரு நொடியில்,
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன், கொடியோன். 241-
வெங்கடுங்கணை- கொடிய வேகமான அம்புகள்; ஆறு
இரண்டு- பன்னிரண்டினை; அனுமன் மேல் அழுத்தி –
அனுமன் மேல் பதியுமாறு செலுத்தி;ஏறு வெஞ்சரம் இரண்டு-
பாய்கிற கொடிய அம்புகள் இரண்டினை; இளங்குமரன் மேல்
ஏற்றி – இலக்குவன் மீது செலுத்தி; ஒரு தொடை நூறும்
ஐம்பதும் தொடுத்து- ஒரு தொடுப்பினில் நூறும் ஐம்பதுமாக
அம்புகளைத் தொடுத்து; கொடியோன்- கொடிய கும்பகருணன்;
ஒரு நொடியில்- ஒரு நொடிப் பொழுதில்; கூறுதிக்கையும்
– கூறாகப்பட்டுள்ள திசைகளையும்; விசும்பையும் மறைத்தனன்-
ஆகாயத்தையும் மறைத்தான்.
—————–
மறைத்த வாளிகள் எவற்றையும், அவற்றினால் மாற்றி,
துறைத் தலம்தொறும் தலம்தொறும் நின்று தேர் சுமக்கும்
பொறைக்கு அமைந்த வெங் கரி, பரி, யாளி, மாப் பூதம்,
திறத் திறம் படத் துணித்து, அவன் தேரையும் சிதைத்தான். 242-
மறைத்த வாளிகள் எவற்றையும் – இலக்குவன் திசை,
மற்றும் விசும்பு ஆகியவற்றை மறைத்த அம்புகள்
எல்லாவற்றையும்; அவற்றினால் மாற்றி – அவ்வவற்றை
அழிக்கும் திறனுள்ள அம்புகளால் போக்கி; துறைத்தலந்
தொறும் தலந்தொறும் நின்று- பூட்டுவதற்கு உரிய இடங்கள்
தோறும் இடங்கள் தோறும் நின்று; தேர் சுமக்கும் பொறைக்கு
அமைந்த- தேரைச் சுமக்கிற சுமத்தல் தொழிலுக்கு உரிய;
வெங்கரி- கொடிய யானை; பரி- குதிரை; யாளி- யாளி;
மாப்பூதம் – பெரிய பூதம்; திறத்திறம் படத் துணிந்து-
ஆகியவற்றை திரள் திரளாக அழித்து; அவன் தேரையும்
சிதைத்தான்- அக்கும்பகருணனது தேரையும் அழித்தான்.
————–
தேர் அழிந்தது, செங் கதிர்ச் செல்வனைச் சூழ்ந்த
ஊர் அழிந்ததுபோல்; துரந்து ஊர்பவர் உலந்தார்;
நீர் அழிந்திடா நெடு மழைக் குழாத்திடை நிமிர்ந்த
பார வெஞ் சிலை அழிந்தெனத் துமிந்தது, அப் பரு வில் 243-
செங்கதிர்ச் செல்வனைச் – சிவந்த கிரணங்களை உடைய
சூரியனைச்; சூழ்ந்த ஊர் அழிந்தது போல் – சூழ்ந்திருந்த
பரிவேடம் அழிந்ததுபோல; தேர் அழிந்தது- கும்பகருணனது
தேர் அழிந்தது; துரந்து ஊர்பவர் உலந்தார் – தேரைச்
செலுத்தி நடத்தும் பாகர் அழிந்தனர்; நீர் அழிந்திடா நெடு
மழைக் குழாத்திடை- நீர் நீங்கப் பெறாத மிகுதியான மேகக்
கூட்டத்தின் இடையே; நிமிர்ந்த பார வெஞ்சிலை
அழிந்தென- உயர்ந்து தோன்றிய பெருமை மிக்க விரும்பத்தகு
வானவில் அழிந்தது போல; அப்பருவில் துமிந்தது-
கும்பகருணனுடைய அந்தப் பெரிய வில் துண்டுபட்டது.
———-
செய்த போரினை நோக்கி, இத் தேரிடைச் சேர்ந்த
கொய் உளைக் கடுங் கோள் அரி முதலிய குழுவை
எய்து கொன்றனனோ? நெடு மந்திரம் இயம்பி,
வைது கொன்றனனோ? என, வானவர் மயர்ந்தார். 244-
செய்த போரினை நோக்கி – இலக்குவன் செய்த
போரினைப் பார்த்து; இத்தேரிடைச் சேர்ந்த-
க்கும்பகருணனது தேரில் பூட்டப் பெற்ற; கொய் உளை-
வெட்டப்பட்ட பிடரி மயிரை உடைய குதிரை; கடுங்கோள் அரி
– மற்றும் கொடிய சிங்கம்; முதலிய குழுவை- முதலியவற்றின்
கூட்டத்தை; எய்து கொன்றனனோ- அம்பு எய்து கொன்றானோ; நெடு மந்திரம்
இயம்பி – சிறந்த மந்திரத்தைச் சொல்லி; வைது
கொன்றனனோ- சாபமிட்டுக் கொன்றனனோ; என- என்று;
வானவர் மயர்ந்தார் – தேவர்கள் மயங்கி நின்றார்கள்.
———-
இருவரும் தரையில் நின்று பொருதல்
ஊன்று தேரொடு சிலை இலன், கடல் கிளர்ந்து ஒப்பான்,
‘ஏன்று, மற்று இவன் இன் உயிர் குடிப்பென்’ என்று, உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன முச் சிகைத்தாய்த்
தோன்றும் வெஞ் சுடர்ச் சூல வெங் கூற்றினைத் தொட்டான். 245-
ஊன்று தேரொடு சிலை இலன் – ஏறிய தேரையும்
வில்லையும் இழந்தவனான கும்பகருணன்; கடல் கிளர்ந்து
ஒப்பான் – கடல் பொங்கினாற்போலச் சினந்து; அவன்
இன்னுயிர் குடிப்பென் என்று மற்று என்று- அந்த
இலக்குவன் உடைய இனிய உயிரைக் குடிப்பேன் எதிர்த்து நின்று
என்று எண்ணி; உலகம் மூன்றும் வென்றமைக்கு- மூன்று
உலகங்களையும் வென்றதற்கு; இடுகுறி என்ன – இட்ட
அடையாளம் என்னுமாறு அமைந்த; முச்சிகைத்தாய்த்
தோன்றும் – மூன்று கிளையை உடையதாய்த் தோன்றும்;
வெஞ்சுடர்ச் சூல வெங்கூற்றினைத் தொட்டான்- கொடிய
ஒளியுடைய சூலப் படையாகிய கொடிய கூற்றுவனைக் கையில்
கொண்டான்.
——————-
இழியப் பாய்ந்தனன், இரு நிலம் பிளந்து இரு கூறா,-
கிழியப் பாய் புனல் கிளர்ந்தெனக் கிளர் சினத்து அரக்கன்;
‘பழி அப்பால்; இவன் பதாதி’ என்று, அனுமன் தன் படர் தோள்
ஒழியப் பார்மிசை இழிந்து சென்று, இளவலும் உற்றான். 246-
கிளர் சினத்து அரக்கன் – பொங்கி எழுகின்ற சினத்தை
உடைய கும்பகருணன்;இருநிலம் பிளந்து இரு கூறா கிழியப்
பாய்புனல் கிளர்ந்தென – பெரிய நிலம் பிளந்து இரு
பகுதியாகும்படி பாயுந்தன்மையுள்ள கடல் பொங்கியெழுந்தது
போல்; இழியப் பாய்ந்தனன் – நிலத்தில் குதித்தான்; இவன்
பதாதி- இவன் ஊர்தியின்றித் தரையில் நிற்பவன்; அப்பால் பழி
என்று – ஆகையால் பின்பு பழி வரும் என்று; இளவலும்-
இலக்குவனும்; அனுமன் தன் படர் தோள் ஒழிய-
அனுமனுடைய பரவிய தோளைவிட்டு; பார்மிசை இழந்து
சென்று உற்றான் – நிலத்தின் மீது இறங்கிப் போய்ப் போர்
செய்யப் பொருந்தினான்.
——–
உற்ற காலையின், இராவணன், தம்பி மாடு உதவ,
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ,
முற்றி அன்னது, முழங்கு முந்நீர் என முடுகிச்
சுற்றி ஆர்த்தது, சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து. 247-
உற்ற காலையின் – இலக்குவன் கும்பகருணனுடன் தரையில்
போரிடப் பொருந்திய பொழுது; இராவணன் தம்பி மாடு உதவ-
இராவணன், தன் தம்பி பக்கம் உதவுவதற்காக; இற்றதானையின்
இருமடி- அழிந்த சேனையினும் இருமடங்கு; இகல்படை ஏவ-
போரிடும் படையை ஏவ; அன்னது- அந்தப் படை; முழங்கு
முந்நீர் என முடுகி- ஒலிக்கின்ற கடல் போல் ஒலித்து;
சுமித்திரை சிங்கத்தைத் தொடர்ந்து-சுமித்திரை பெற்ற சிங்கம்
போன்ற இலக்குவனைத் தொடர்ந்து சென்று; முற்றி சுற்றி
ஆர்த்தது- முற்றுகை இட்டுச் சுற்றி பேரொலி செய்தது.
————-
இரிந்து வானவர் இரியலின், மயங்கினர் எவரும்;
சொரிந்த வெம் படை துணிந்திட, தடுப்ப அருந் தொழிலால்
பரிந்த அண்ணலும், பரிவிலன் ஒரு புடை படர,
புரிந்த அந் நெடுஞ் சேனை அம் கருங் கடல் புக்கான். 248-
இரிந்து- நிலை கெட்டு; வானவர் இரியலின்- தேவர்கள்
ஓடுதலினால்; எவரும் மயங்கினர் – எல்லோரும்
தடுமாறினார்கள்; சொரிந்த வெம்படை துணிந்திட- மேலும்
மேலும் வந்த படைகள் அற்று விழும்படி; தடுப்ப
அருந்தொழிலால் – தடுப்பதற்கு அரிய போர்த் தொழிலால்;
பரிந்த அண்ணலும் – விரைந்து சென்ற பெருமைக்கு உரிய
இலக்குவனும்; பரிவிலன் – மன இரக்கம் இல்லாதவனாய்;ஒரு
புடை படர- ஒரு பக்கமாய்ச் செல்ல; புரிந்த- போர் செய்ய
விரும்பிய; அந்நெடுஞ்சேனை-அந்த பெரிய படையாகிய; அம்
கருங்கடல் புக்கான் – அழகிய கருங்கடலுட் புகுந்தான்.
——————-
முருக்கின் நாள்மலர் முகை விரிந்தாலன முரண் கண்
அரக்கர் செம் மயிர்க் கருந் தலை அடுக்கலின் அணைகள்
பெருக்கினான் பெருங் கனலிடைப் பெய்து பெய்து,
எருவை உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட. 249-
முருக்கின் நாள் மலர் – முள் முருங்கையின் அன்று விரியும்
தன்மை கொண்ட மலர்; முகை விரிந்தாலன- மொட்டு விரிந்தாற்
போன்று; முரண் கண் அரக்கர் – மாறுபாடு கொண்ட கண்களை
உடைய அரக்கரது; செம்மயிர்க் கருந்தலை- சிவந்த மயிரைக்
கொண்ட கருந்தலையால் கட்டப்பட்ட; அடுக்கலின் அணைகள்-
மலைகள் ஆகிய அணைகள் மூலமாக; பெருக்கினான் – வெள்ளப்
பெருக்கினால்; எருவை – செம்பினைப்; பெருங் கனலிடைப்
பெய்து பெய்து – மிகுதியான நெருப்பு இடையே பெய்து;
உருக்கினால் அன்ன-உருக்கியது போன்ற; குருதி நீர் ஆறுகள்
ஓட- இரத்த நீராலாகிய ஆறுகள் ஓட.
———-
கரியின் கைகளும், புரவியின் கால்களும், காலின்
திரியும் தேர்களின் சில்லியும், அரக்கர்தம் சிரமும்,
சொரியும் சோரியின் துறைதொறும் துறைதொறும் கழிப்ப,
நெரியும் பல் பிணப் பெருங் கரை கடந்தில, நீத்தம். 250-
கரியின் கைகளும் – யானைகளின் கைகளும்; புரவியின்
கால்களும் – குதிரைகளின் கால்களும்; காலின் திரியும்
தேர்களின் சில்லியும்- காற்றுப் போல் இயங்கும் தேர்களின்
சக்கரங்களும்; அரக்கர்தம் சிரமும் – அரக்கர்களின்
தலைகளும்; சொரியும் சோரியின்- அறுபட்ட உறுப்புக்களில்
இருந்து பெருகுகின்ற குருதிகளும்; துறைதொறும்
துறைதொறும் சுழிப்ப- இடந்தோறும் இடந்தோறும் சுழித்துக்
கொண்டிருக்க; நெரியும் பல்பிணப் பெருங்கரை- நெருங்கிக்
கிடக்கிற பல்பிணங்களால் ஆகிய பெருங்கரையைக்; கடந்தில
நீத்தம் – கடந்து அப்பால் செல்லவில்லை வெள்ளம்.
———–
கொற்ற வாள், எழு, தண்டு, வேல், கோல், மழு, குலிசம்,
மற்றும் வேறு உள படைக்கலம், இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட, தொகையாய்
அற்ற துண்டங்கள் படப் பட, துணிந்தன அனந்தம். 251-
கொற்றவாள் – வெற்றி பொருந்திய வாள்; எழு-
இரும்புலக்கை; தண்டு- கதை; வேல்- வேல்; கோல் – அம்பு;
மழு- கோடரி; குலிசம்- வச்சிரப் படை; மற்றும் வேறு உள
படைக்கலம் – மற்றும் வேறு உள்ள படைக்கருவிகளும்
ஆயவற்றை; இலக்குவன் வாளி- இலக்குவனது அம்புகள்;
சுற்றும் ஓடுவ தொடர்ந்து- சுற்றி ஓடிச் சென்று தொடர்ந்து;
இடை துணித்திட- இடையே துண்டித்ததனால்; தொகையாய்
அற்ற துண்டங்கள் – பெருந்தொகையாக முறிந்த துண்டுகள்;
படப்பட துணிந்தன அனந்தம் – மேலே படுந்தோறும்
துண்டமானவை மிகப்பல.
—————–
குண்டலங்களும், மவுலியும், ஆரமும், கோவை,
தண்டை, தோள்வளை, கடகம் என்று இனையன, தறுகண்
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன, கதிர் சூழ்
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன, வானில். 252-
குண்டலங்களும்- குண்டலங்களும்; மவுலியும்- திருமுடியும்;
ஆரமும் – முத்தாரங்களும்; கோவை-மணிச்சரங்களும்; தண்டை
– தண்டைகளும்; தோள் வளை- தோள் வளைகளும்; கடகம்-
கடகங்களும்; என்று இனையன- என்ற இவ்வாறான
அணிகலன்களை; தறுகண் கணை- இலக்குவன் எய்த வலிய
அம்புகள்; கண்ட கண்டங்களோடும் துரந்தன- துண்டு
துண்டுகள் ஆக்கி வேகமாகச் செலுத்தின அவை; கதிர்சூழ்-
ஒளி சூழ்ந்த; மண்டலங்களை- சூரிய சந்திர நட்சத்திர
மண்டலங்களோடு; மாறு கொண்டு இமைந்தன வானில்-
மாறுபாடு கொண்டு ஒளியோடு வானில் விளங்கின.
——————
பரந்த வெண்குடை, சாமரை, நெடுங் கொடி, பதாகை,
சரம் தரும் சிலை, கேடகம், பிச்சம், மொய் சரங்கள்
துரந்து செல்வன, குருதி நீர் ஆறுகள் தோறும்
நிரந்த பேய்க்கணம் கரைதொறும் குவித்தன, நீந்தி. 253-
பரந்த வெண்குடை- பெரிய வெள்ளிய குடையும்; சாமரை-
வெண் சாமரையும்; நெடுங்கொடி- நீண்ட கொடியும்; பதாகை-
பெருங்கொடியும்; சரம்தரும் சிலை- அம்புகளைச் செலுத்தும்
வில்லும்; கேடகம் – கேடயமும்; பிச்சம் – பீலிக்குடையும்;
மொய்சரங்கள் – நெருங்கிய அம்புகளும்; குருதிநீர் ஆறுகள்
தோறும் – இரத்த ஆறுகள் தோறும்; துரந்து செல்வன-
செலுத்தப்பட்டுச் செல்பவற்றை; நிரந்த பேய்க்கணம்- திரளான
பேய்க் கூட்டங்கள்; நீந்தி கரை தொறும் குவித்தன- நீந்திக்
கரையெங்கும் குவித்தன.
———————
கும்பகருணன்-சுக்கிரீவன் போர்
ஈண்டு வெஞ் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்,
நீண்ட வெள் எயிற்று அரக்கன், மற்றொரு திசை நின்றான்,
பூண்ட வெஞ் செரு இரவி கான்முளையொடு பொருதான்;
‘காண்தகும்’ என, இமையவர் குழுக்கொண்டு, கண்டார். 254-
ஈண்டு வெஞ்செரு எவர்க்கும் இனையன நிகழ்வுழி-
இவ்வாறு இங்குக் கொடிய போர் யாவருக்கும் இத்தன்மைத்தாக
நிகழுமிடத்து; நீண்ட வெள் எயிற்று அரக்கன்- நீண்ட
வெள்ளிய பற்களை உடைய அரக்கனான கும்பகருணன்;
மற்றொரு திசை நின்றான்- வேறு ஒரு திக்கில் போய் நின்று;
இரவி கான் முளையொடு-சூரியன் மகனாகிய சுக்கிரீவனோடு;
பூண்ட வெஞ்செரு பொருதான்-கொடிய போரைச் செய்தான்;
காண்தகும் என – இப்போர் காணத்தக்கதாகும் என்று கருதி;
இமையவர் குழுக்கொண்டு கண்டார்-தேவர்கள் கூட்டமாகக்
கூடிக் கண்டார்கள்.
————-
பொறிந்து எழு கண்ணினன், புகையும் வாயினன்,-
செறிந்து எழு கதிரவன் சிறுவன்-சீறினான்,
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள்’ என,
எறிந்தனன், விசும்பில், மா மலை ஒன்று ஏந்தியே. 255-
செறிந்து எழுகதிரவன் சிறுவன்- நெருங்கி எழுகின்ற
கதிர்களையுடைய சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; பொறிந்து
எழு கண்ணினன் – தீப்பொறி வெளிப்படுகின்ற கண்களையும்;
புகையும் வாயினன் – புகை வெளிவருகிற வாயினையும்
உடையவனாய்ச்; சீறினான்- சினந்து; அரக்கன்
-கும்பகருணனது; மாமுரண் திண் தோள்- பெரிய மாறுபடுகிற
வலிய தோள்கள்; முறிந்தன என-முறிந்தன என்று கண்டோர் எண்ணும்படி; மாமலை ஒன்று
ஏந்தியே – பெரிய மலை ஒன்றை எடுத்து; விசும்பில்
– வானத்தில் இருந்து; எறிந்தனன் – எறிந்தான்.
———-
அம் மலை நின்று வந்து அவனி எய்திய
செம் மலை அனைய வெங் களிறும், சேனையின்
வெம் மலை வேழமும், பொருத; வேறு இனி
எம் மலை உள, அவற்கு எடுக்க ஒணாதன? 256-
அம்மலை நின்று வந்து- அந்த மலையினின்று வந்து;
அவனி எய்திய- நிலத்தை அடைந்த; செம்மலை அனைய
வெங்களிறும்- சிவந்த மலை போன்ற கொடிய யானையும்;
சேனையின் – அரக்கர் சேனையில் இருந்த; வெம்மலை
வேழமும் பொருத- கொடிய மலை போன்ற வேழமும் போர்
செய்யலாயின; வேறு இனி எம்மலை உள- இனி வேறு எந்த
மலையுள்ளது; அவற்கு எடுக்க ஒணாதன – அந்தச்
சுக்கிரீவனுக்கு எடுக்க முடியாதன.
————–
இவ்வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய, நிருதர்தம் களிறும் கட்டு அற;
அவ் வகை மலையினை ஏற்று, ஓர் அங்கையால்
வவ்வினன், அரக்கன், வாள் அவுணர் வாழ்த்தினார். 257-
இவ்வகை- சுக்கிரீவன் இந்த வகையாக எறிந்த; நெடுமலை
இழிந்த மாசுணம் -பெரிய மலையில் இருந்த வெளிவந்த மலைப்
பாம்புகள்; நிருதர் தம் களிறும்- அரக்கர் தம் யானைகளும்;
கட்டு அற கவ்விய – வலிமை நீங்கும்படி கவ்வின; ஓர்
அங்கையால்- ஒப்பற்ற தன் உள்ளங் கையால்; அவ்வகை
மலையினை ஏற்று – அந்த வகைப்பட்ட மலையினை ஏற்று;
அரக்கன் வவ்வினான் – கும்பகருணன் பற்றினான்; வாள்
அவுணர் வாழ்த்தினார் -கொடிய அவுணர்கள் வாழ்த்தினார்கள்.
————-
ஏற்று ஒரு கையினால், ‘இதுகொல், நீ அடா!
ஆற்றிய குன்றம்?’ என்று, அளவு இல் ஆற்றலான்,
நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து, ‘நீங்கு’ எனா,
தூற்றினன்; இமையவர் துணுக்கம் எய்தினார். 258-
அளவு இல் ஆற்றலான்- அளவற்ற வலிமை உடைய
கும்பகருணன்; ஒரு கையினால் ஏற்று- சுக்கிரீவன் வீசிய
மலையினை ஒரு கையால் ஏற்று; அடா நீ-அடா நீ; ஆற்றிய
குன்றம் இது கொல்-வலிமை கொண்டு வீசிய மலை இதுதானா?;
என்று- என்று சொல்லி; நீற்று இயல் நுணுகுறப் பிசைந்து
– நீற்றின் தன்மையதாய் ஆகுமாறு பொடியாகப் பிசைந்து; நீங்கு
எனா தூற்றினன் – போ என்று சொல்லித் தூற்றி விட்டான்;
இமையவர் துணுக்கம் எய்தினார் – அப்பேராற்றல் கண்ட
தேவர்கள் அச்சம் கொண்டனர்.
———————-
சுக்கிரீவன் மேல் கும்பகருணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்தல்
‘செல்வெனோ, நெடுங் கிரி இன்னும் தேர்ந்து?’ எனா,
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில், ‘கொல்!’ என
எறிந்தனன், குறைவு இல் நோன்பினோர் சொல்
எனப் பிழைப்பு இலாச் சூலம், சோர்வு இலான். 259-
எல்லவன் கான்முனை- சூரியன் மகனாகிய சுக்கிரீவன்;
நெடுங்கிரி இன்னும் தேர்ந்து – பெரிய மலையை இன்னும்
தேடிச்; செல்வனோ எனா- செல்வேனோ என்று; உணரும்
எல்வையில் – எண்ணம் கொண்ட அளவில்; சோர்வு இலான்-
சோர்வு அற்றவனாகிய கும்பகருணன்; கொல் என- கொல்
என்று சொல்லிக்; குறைவு இல் நோன்பினோர் – குறைவு
இல்லாத தவத்தவரது; சொல் எனப் பிழைப்பு இலாச்- சாபச்
சொல் போல் தவறுதல் இல்லாத; சூலம் எறிந்தனன்-
சூலத்தை எறிந்தான்.
————
‘பட்டனன் பட்டனன்’ என்று, பார்த்தவர்
விட்டு உலம்பிட, நெடு விசும்பில் சேறலும்,
எட்டினன் அது பிடித்து, இறுத்து நீக்கினான்;
ஒட்டுமோ, மாருதி, அறத்தை ஓம்புவான்? 260-
பார்த்தவர் – சூலம் வருதலைப் பார்த்தவர்கள்; பட்டனன்
பட்டனன் என்று- சுக்கிரீவன் இறந்தான் இறந்தான் என்று;
விட்டு உலம்பிட- வாய்விட்டுக் கதறுமாறு; நெடு விசும்பில் சேறலும்
– பரந்த ஆகாயத்தில் அச்சூலம் வருதலும்: அது எட்டினன்
பிடித்து – அனுமன் அச்சூலத்தை எட்டிப் பிடித்து; இறுத்து
நீக்கினான் – முறித்து அழித்தான்; அறத்தை ஓம்புவான்
மாருதி – அறத்தைப் பாதுகாப்பவனாகிய மாருதி; ஓட்டுமோ-
இச்செயல் நடக்க விடுவானோ என்றவாறு.
————
சித்திர வன முலைச் சீதை செவ்வியால்
முத்தனார், மிதிலை ஊர், அறிவு முற்றிய
பித்தன் வெஞ் சிலையினை இறுத்த பேர் ஒலி
ஒத்தது, சூலம் அன்று இற்ற ஓசையே. 261-
அன்று சூலம் இற்ற ஓசையே- என்று சூலப்படை
அனுமனால் முறிக்கப்பட்ட போது தோன்றிய ஓசை; சித்திர
வனமுலைச் சீதை- தொய்யிற் கோலம் எழுதிய அழகிய
முலைகளையுடைய சீதையினது; செவ்வியால் – அழகால்;
மிதிலை ஊர் – மிதிலையில்; முத்தனார் – முத்தி உலகுக்கு
உரிய மாலின் திருவவதாரமான இராமபிரான்; அறிவு முற்றிய
பித்தன் – அறிவு நிரம்பிய பித்தனென்ற பேர் கொண்ட
சிவபிரானது; வெஞ்சிலையினை இறுத்த பேர் ஒலி ஒத்தது-
கொடிய வில்லினை முறித்தபோது தோன்றிய பேரோசையை
ஒத்து இருந்தது.
————
கும்பகருணன் அனுமனைப் போருக்கு அறைகூவ, அவன் மறுத்தல்
நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே,
‘கருதவும் இயம்பவும் அரிது, உன் கை வலி;
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை; இதற்கு உவமை யாது?’ என்றான். 262-
நிருதனும் – அரக்கனாகிய கும்பகருணனும்; அனையவன்-
அந்த அனுமனது; நிலைமை நோக்கியே-தன்மையைப் பார்த்து;
உன் கை வலி கருதவும் இயம்பவும் அரிது- உன் கை
வலிமை எண்ணுதற்கும்சொல்லுதற்கும் அருமையானது; அரியன
முடிப்பதற்கு- அருஞ்செயல்களைச் செய்து முடிப்பதற்கு;
அனைத்து நாட்டினும் – எல்லா நாட்டினுள்ளும்; ஒரு தனி
உளை – ஒரு தனிப்பட்டவனாக இருக்கிறாய்; இதற்கு உவமை யாது-
உன் திறமைத் தன்மைக்கு ஒப்புக் கூற உரியது யாது?; என்றான்
– என்று கூறினான்.
—————–
‘என்னொடு பொருதியேல், இன்னும், யான் அமர்
சொன்னன புரிவல்’ என்று, அரக்கன் சொல்லலும்,
‘முன் “இனி எதிர்க்கிலேன்” என்று முற்றிய
பின், இகல் பழுது’ என, பெயர்ந்து போயினான். 263-
இன்னும் – இடையில் நிறுத்திய போரை மேலும்; என்னொடு
பொருதியேல் – தொடர்ந்து என்னோடு செய்வாய் ஆனால்;
யான் அமர் சொன்னன புரிவெல்- யான் போரை நீ சொன்ன
முறைப்படியே புரிவேன்; என்று- என்று; அரக்கன் சொல்லலும்
– கும்பகருணன் சொன்ன அளவிலே; முன் இனி எதிர்க்கிலேன்
என்று- முன்பு இனி உன்னோடு எதிர்க்க மாட்டேன் என்று;
முற்றிய பின் – போரை முடித்த பிறகு; இகல் பழுது- மீண்டும்
போரிடுவது சொன்ன சொல் தவறுவது ஆகும்; என பெயர்ந்து
போயினான் – என்று கூறிய இடத்தை விட்டு அப்பால் போயினன்.
————–
மீண்டும் சுக்கிரீவன் கும்பகருணன் போர்
அற்றது காலையில், அரக்கன், ஆயுதம்
பெற்றிலன், பெயர்ந்திலன்; அனைய பெற்றியில்,
பற்றினன், பாய்ந்து எதிர், பருதி கான்முளை
எற்றினன், குத்தினன், எறுழ் வெங் கைகளால். 264-
அற்றது காலையில்- அந்தச் சூலப்படை அழிந்த காலத்தில்;
அரக்கன் – கும்பகருணன்; ஆயுதம் பெற்றிலன்- வேறு
ஆயுதத்தைப் பெறாதவனாய் இருந்தும்; பெயர்ந்திலன்- இடத்தை
விட்டு நிலை பெயராது இருந்தான்; அனைய பெற்றியில்- அந்த
வேளையில்;பருதி கான்முளை- கதிரவன் மகனாகிய சுக்கிரீவன்; எதிர்
பாய்ந்து- கும்பகருணனுக்கு எதிரே பாய்ந்து; பற்றினன்-
பற்றி; எறுழ் வெங்கைகளால் – தன் வலிய கொடிய கைகளால்;
எற்றினன் குத்தினன் – மோதிக் குத்தினான்.
—————
அரக்கனும்,-‘நன்று, நின் ஆண்மை; ஆயினும்,
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான்’ எனா,
நெருக்கினன், பற்றினன், நீங்கொணாவகை,-
உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான். 265-
உருக்கிய செம்பு அன உதிரக் கண்ணினான் – சினத்தால்
உருக்கிய செம்பு போன்று குருதி குழம்பிய கண்களை உடைய;
அரக்கனும் – கும்பகருணனும்; நின் ஆண்மை நன்று- நினது
வீரம் நன்று; ஆயினும்- ஆனாலும்; இனி இன்றொடும் தருக்கு
சமையும் தான்- இனிமேல் இன்றுடன் உன் செருக்கு
அடங்கிவிடும் தான் ; எனா – என்று சொல்லி; நீங்கொணா
வகை- தப்பமுடியாதவாறு; நெருக்கினன் பற்றினன்- நெருக்கிப்
பற்றினன்;
—————–
திரிந்தனர் சாரிகை; தேவர் கண்டிலர்;
புரிந்தனர், நெடுஞ் செரு; புகையும் போர்த்து எழ
எரிந்தன, உரும் எலாம்; இருவர் வாய்களும்
சொரிந்தன, குருதி; தாம் இறையும் சோர்ந்திலார். 266-
சாரிகை திரிந்தனர்- சுக்கிரீவன் கும்பகருணனைப் பற்றிய
அளவிலே இருவரும் சாரிகை திரிந்தனர்; தேவர் கண்டிலர் –
அப்போது இன்னார் இங்கு உள்ளார் என்று தேவர்களும் காண
முடியாதவர் ஆயினர்; நெடுஞ் செரு புரிந்தனர் – இருவரும்
பெரும் போரைத் தொடங்கினர்; உரும் எலாம் எரிந்தன-
போரின் வேகத்தால் இடிகள் எல்லாம் எரிந்தன; புகையும்
போர்த்து எழ – அதனால் புகை திசைகளை மூடிக்கொண்டு
மேல் எழுந்தன; இருவர் வாய்களும் சொரிந்தன குருதி-
இருவர் வாய்களில் இருந்தும் குருதி வெளிப்பட்டன; தாம்
இறையும் சோர்ந்திலார் – தாங்கள் ஒரு சிறிதும் சோர்வு
அடைந்திலர்.
—————-
உறுக்கினர், ஒருவரை ஒருவர்; உற்று இகல்
முறுக்கினர், முறை முறை; அரக்கன் மொய்ம்பினால்
பொறுக்கிலாவகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான். 267-
ஒருவரை ஒருவர் உறுக்கினர் – அவ்விருவரும் ஒருவரை
ஒருவர் பொருந்தி நின்று அதட்டினார்கள்; முறை முறை உற்று
இகல் முறுக்கினர் – முறை முறையாகப் பொருந்திப் போரைச்
சினத்துடன் செய்தனர்; அரக்கன் – கும்பகருணன்;
மொய்ம்பினால் – வலிமையால்; பொறுக்கிலா வகை-
பொறுக்க முடியாதபடி; நெடும் புயங்களால் பிணித்து- தன்
பெரிய கைகளினால் சுக்கிரீவனைப் பிடித்து; இறுக்கினான் –
அழுத்தினான்; இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – இந்தச்
சுக்கிரீவன் சிறிது உணர்வு குறையப் பெற்றான் (மூர்ச்சை
அடைந்தான்)
—————-
உணர்வு இழந்த சுக்கிரீவனைக் கும்பகருணன் எடுத்துச் செல்லுதல்
‘மண்டு அமர் இன்றொடு மடங்கும்; மன் இலாத்
தண்டல் இல் பெரும் படை சிந்தும்; தக்கது ஓர்
எண் தரு கருமம் மற்று இதனின் இல்’ என,
கொண்டனன் போயினன், நிருதர்கோ நகர். 268-
நிருதர் கோ- அரக்கர் தலைவனாகிய கும்பகருணன்; மண்டு
அமர் இன்றொடு மடங்கும்- இவனைத் தூக்கிப் போய்விட்டால்,
நெருங்கிய போர் இன்றோடு முற்றுப் பெறும்; மன் இலாத்
தண்டல் இல் பெரும்படை சிந்தும் – அரசன் இல்லாத
கெடுதலில்லாத பெரிய வானரப் பெரும்படை சிதறிவிடும்; இதனின்
தக்கது ஓர் – இதனைக் காட்டிலும் தக்கதாகிய; எண் தரு
கருமம் மற்று இல் – எண்ணிச் செய்யத்தக்க தொழில் இல்லை;
என- என்று எண்ணி; நகர் கொண்டனன் போயினன் –
நகருக்குச் சுக்கிரீவனைத் தூக்கிக் கொண்டு போனான்.
———–
உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ,
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட, விரல்
துறு கைத்தலத்து அடித்து, வெய்துயிர்த்து,
அரற்றின, கவிக் குலம்; அரக்கர் ஆர்த்தனர், 269-
உரற்றின பறவையை- கூவிக் கொண்டிருந்த தாய்ப் பறவையை;
ஊறு கொண்டு எழ- வல்லூறு பற்றிக் கொண்டு போக; சிரற்றின பார்ப்பினின்- துன்பத்தால் அரற்றிய குஞ்சுகள்
போல; சிந்தை சிந்திட- (சுக்கிரீவனைக் கும்பகருணன் தூக்கிச்
சென்ற போது) மனம் முறிந்திட; விரல் துறு கைத்தலத்து
அடித்து- விரல்கள் நெருங்கிய கையினால் அடித்துக்கொண்டு;
வெய்துயிர்த்து- பெருமூச்சு விட்டுக்கொண்டு; கவிக்குலம்
அரற்றின – வானரக் கூட்டங்கள் வாய் விட்டுக் கதறின;
அரக்கர் ஆர்த்தனர் – அரக்கர்கள் மகிழ்ச்சிப் பேரொலி
செய்தனர்.
————
நடுங்கினர் அமரரும்; நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர், வானரத் தலைவர்-உள் முகிழ்த்து,
இடுங்கின கண்ணினர், எரிந்த நெஞ்சினர்,
‘மடங்கினவாம் உயிர்ப்பு’ என்னும் அன்பினார். 270-
அமரரும் நடுங்கினர்- தேவர்களும் நடுங்கினார்கள்;
வானரத் தலைவர்கள் – வானரத் தலைவர்கள்; உள் முகிழ்த்து
இடுங்கிய கண்ணினர் – உள் அடங்கி இடுங்கிய கண்களைக்
கொண்டு; எரிந்த நெஞ்சினர் – எரிந்த நெஞ்சத்தை
உடையவராகி; உயிர்ப்பு மடங்கினவாம் என்னும் – அவர்களது
உயிர்ப்பும் நின்றிட்டதோ என்று கண்டோர் கருதுமாறு;
அன்பினார் – தம்மரசன் பால் அன்பு சிறந்தவராய்; நா
உலர்ந்து- நாவுலர்ந்து;வேர்த்து- உடல் வியர்த்து; ஒடுங்கினர் –
மனமகிழ்வு குன்றினர்.
————–
புழுங்கிய வெஞ் சினத்து அரக்கன் போகுவான்,
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான்;
எழும் கதிர் இரவிதன் புதல்வன், எண்ணுற
விழுங்கிய மதி என, மெலிந்து தோன்றினான். 271-
புழுங்கிய- மனம் புழுங்குவதற்குக் காரணமான; வெஞ்சினத்து
அரக்கன் – கொடிய சினத்தை உடைய கும்பகருணன்; போகுவான்-
சுக்கிரீவனைத் தூக்கிப் போபவன்; அழுங்கலில்- வருந்துதல்
இல்லாத; கோள் முகத்து அரவம் ஆயினான் – கிரகத் தன்மை
உடைய இராகு என்னும் பாம்பு போல் ஆயினான்; கதிர் எழும் இரவிதன் புதல்வன் -கதிர்
விடுகின்ற சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; எண்ணுற-
கண்டார் எண்ணுமாறு; விழுங்கிய மதி என- இராகுவால்
விழுங்கப்பட்ட மதிபோல; மெலிந்து தோன்றினான் –
மெலிவுற்றுத் தோன்றினான்.
————
திக்கு உற விளக்குவான் சிறுவன்,
தீயவன் மைக் கரு நிறத்திடை மறைந்த
தன் உரு மிக்கதும் குறைந்ததும் ஆக,
மேகத்துப் புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன். 272-
திக்கு உற விளங்குவான் சிறுவன்- திக்கெல்லாம் மிக்கு
ஒளி விளங்கும் கதிரவன் சிறுவனாகிய சுக்கிரீவன்; தீயவன்
– கும்பகருணனது; மைக்கரு நிறத்திடை மறைந்த தன் உரு-
மேகம் போன்ற கரிய நிறத்தில் மறைந்த தன்னுடைய நிறம்;
மிக்கதும் குறைந்ததும் ஆக- ஒரு கால் மிக்கும், ஒருகால்
குறைந்தும் தோன்றுவது; மேகத்துப் புக்கதும் புறத்தும்
ஆம்- மேகத்தின் இடையில் புக்கதும் வெளிப்பட்டதும் ஆகிற;
மதியும் போன்றனன்- சந்திரனையும் போன்றனன்.
————–
அனுமன் செய்வதறியாது கும்பகருணன் பின்போதல்
‘ஒருங்கு அமர் புரிகிலேன், உன்னொடு யான்’ என,
நெருங்கிய உரையினை நினைந்து, நேர்கிலன்,
கருங் கடல் கடந்த அக் காலன், காலன் வாழ்
பெருங் கரம் பிசைந்து, அவன் பின்பு சென்றனன். 273-
கருங்கடல் கடந்த அக்காலன் – கரிய கடலைக் கடந்த
அக்காலை உடையவனாகிய அனுமன்; உன்னொடு யான்
ஒருங்கு அமர் புரிகிலேன் – யான் உன்னோடு பொருந்த
இனிப் போர் புரிய மாட்டேன்; என- என்று; நெருங்கிய
உரையினை நேர்ந்து நேர்கிலன் – அண்மையில் கூறிய
உரையினை நினைத்து எதிர்க்காதவனாய்; காலன் வாழ்
பெருங்கரம் பிசைந்து – யமன் வாழ்கின்ற தன்
பெருங்கையைப் பிசைந்து கொண்டு; அவன் பின்பு
சென்றனன்- அக்கும்பகருணனுக்குப் பின்பு சென்றான்.
———–
ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர்,
‘நாயகர் எமக்கு இனி யாவர்’ நாட்டினில்?
காய் கதிர்ப் புதல்வனைப் பிணித்த கையினன்,
போயினன், அரக்கன்’ என்று இசைத்த பூசலார். 274-
வானரர்கள் இராமனிடம் ஓடிச் சென்று, காய் கதிர்ப்
புதல்வனைப் பிணித்தகையினன்- எரிக்கின்ற கதிர்களை
உடைய சூரியன் மகனைக் கையினால் கட்டி எடுத்துக்கொண்டு;
அரக்கன் போயினன் என்று- கும்பகருணன் போயினான்;
நாட்டினில் நாயகர் எமக்கு இனி யாவர் என்று- நாட்டில்
எமக்குத் தலைவர் யாவர் என்று; இசைத்த பூசலார் – பேரொலி
செய்தவர்களாய்; ஆயிரம் பெயரவன் -ஆயிரம் திருநாமங்களை
உடைய இராமனது; அடியில் வீழ்ந்தனர் – திருவடியில்
விழுந்தனர்.
————–
இராமன் கும்பகருணன் செல்லும் வாயிலை அடைத்தல்
தீயினும் முதிர்வுரச் சிவந்த கண்ணினான்,
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான்,
‘ஏ’ எனும் அளவினில், இலங்கை மா நகர்
வாயில் சென்று எய்தினான்-மழையின் மேனியான். 275-
மழையின் மேனியான்- மேகம் போன்ற மேனியை உடைய
இராமன்; தீயினும் முதிர்வுறச் சிவந்த கண்ணினான் –
தீயைக்காட்டிலும் முற்றிச் சிவந்த கண்ணினை உடையவன்
ஆகவும்; காய்கணை சிலையொடும் கவர்ந்த கையினான்-
எரிக்கக் கூடிய அம்புகளை வில்லுடன் கொண்ட கையினன்
ஆகவும்; ஏ எனும் அளவினில்- ஏ எனும் ஒரு நொடிப் பொழுதில்; இலங்கை
மாநகர் வாயில் சென்று எய்தினான் – இலங்கையாகிய பெரிய
நகரின் வாயிலுக்குச் சென்று சேர்ந்தான்.
————
‘உடைப் பெருந் துணைவனை உயிரின் கொண்டு போய்,
கிடைப்ப அருங் கொடி நகர் அடையின், கேடு’ என,
‘தொடைப் பெரும் பகழியின் மாரி தூர்த்து, உற
அடைப்பென்’ என்று, அடைத்தனன், விசும்பின் ஆறு எலாம். 276-
உடைப் பெருந் துணைவனை- என்னுடைய பெருந்துணைவன்
ஆகிய சுக்கிரீவனை; உயிரின் கொண்டு போய் – என் உயிரைக்
கொண்டு போவது போல் கொண்டு போய்; கிடைப்ப அருங்
கொடிநகர் – நெருங்குவதற்கு அரிய கொடியோடு விளங்குகின்ற
இலங்கை மாநகரை; அடையின் கேடு என- அடைந்தால் கேடு
என்று சொல்லி; தொடைப் பெரும் பகழியின் – தொடுத்தல்
பொருந்திய பெரிய அம்புகளின்; மாரி தூர்த்து – மழையினால்
நிரப்பி; உற அடைப்பென் – முழுதுமாக அடைப்பேன் என்று;
விசும்பின் ஆறு எலாம்- ஆகாய வழியை எல்லாம்; அடைத்தனன்
– அடைத்தான்.
————–
மாதிரம் மறைந்தன; வயங்கு வெய்யவன்
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின;
யாதும் விண் படர்கில; இயங்கு கார் மழை
மீது நின்று அகன்றன-விசும்பு தூர்த்தலால். 277-
விசும்பு தூர்த்தலால் மாதிரம் மறைந்தன- இராமன் அம்புகள்
ஆகாயம் எங்கும் நிரம்பியதால் திசைகள் எல்லாம் மறைந்தன;
வயங்கு வெய்யவன்- ஒளி விளங்குகின்ற சூரியனது; சோதியின்
கிளர்நிலை- ஒளிக்கதிர்களின் விளங்கும் நிலையும்; தொடர்தல்
ஓவின- தொடர்ந்து நிலத்தில் படுதலை நீங்கின; யாதும் விண்
படர்கில- எதுவும் வானத்தில் செல்ல மாட்டாது ஒழிந்தன;
இயங்கு கார் மழை மீது நின்று அகன்றன- அசைகிற கருநிற
மேகங்கள் மேல் பகுதியில் இருந்து அகன்றன.
————
கும்பகருணன் இராமனைக் காணுதல்
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான்,
இனக் கொடும் பகழியின் மதிலை எய்தினான்;
‘நினைந்து அவை நீக்குதல் அருமை, இன்று’ என,
சினக் கொடுந் திறலவன் திரிந்து நோக்கினான். 278-
மனத்தினும் கடியது ஓர் விசையின் – மனத்தைக்
காட்டிலும் விரைவான வேகத்தில்; வான் செல்வான் – வானத்து
வழியாகச் செல்பவன் ஆன; சினக் கொடுந்திறலவன் –
சினத்தொடு கொடிய வலிமை உள்ள கும்பகருணன்; இனக்கொடும்
பகழியின் மதிலை எய்தினான் – திரளாக உள்ள இராமனது
கொடிய பகழியால் ஆன மதிலை அடைந்து; நினைத்து- ஆய்ந்து;
அவை இன்று நீக்குதல் அருமை என- அவற்றை இப்போது
போக்குதல் இயலாது என்று கருதி;திரிந்து நோக்கினான் –
திரும்பிப் பார்த்தான்.
————-
கண்டனன்-வதனம், வாய், கண், கை, கால் எனப்
புண்டரீகத் தடம் பூத்து, பொன் சிலை
மண்டலம் தொடர்ந்து, மண் வயங்க வந்தது ஓர்
கொண்டலின் பொலிதரு கோலத்தான் தனை. 279-
பொன்சிலை மண்டலம் தொடர்ந்து- அழகிய வில்
வட்டம் தொடர்ந்து; மண் வயங்க வந்தது- நிலத்தில் விளங்க
வந்த; ஓர் கொண்டலின் – ஒப்பற்ற கருமேகம்;
புண்டரீகத்தடம் – தாமரைத் தடாகம் போல்; வதனம், வாய்,
கண், கை, கால்,எனப் பூத்து- முகம், வாய், கண், கை,
கால் எனத் தாமரை மலர்கள் பூக்கப் பெற்று; பொலிதரு கோலத்தான் தனை கண்டனன்- அழகாக
விளங்குகிற திருமேனிக் கோலமுடைய இராமனைக் கண்டனன்.
———
கும்பகருணன் இராமனை இடித்துரைத்தல்
மடித்த வாய் கொழும் புகை வழங்க, மாறு இதழ்
துடித்தன; புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட,
பொடித்த தீ, நயனங்கள்; பொறுக்கலாமையால்,
இடித்த வான் தெழிப்பினால், இடிந்த, குன்று எலாம். 280-
மடித்த வாய் கொழும்புகை வழங்க- கும்பகருணனது
மடித்த வாய் மிகுதியான புகையை வெளிப்படுத்த; மாறு இதழ்
துடித்தன- ஒன்றற்கொன்று மாறுபட்டுடன் வாய் இதழ்கள்
துடித்தன; புருவங்கள் சுறுக் கொண்டு ஏறிட- புருவங்கள்
கோபக் குறியாக நெரித்து ஏற; நயனங்கள் தீ பொடித்த-
கண்கள் சினத் தீப்பொறியைக் கக்கின; வான் தெழிப்பினால்
இடித்த- வானம் அவனது பேரொலியால் இடிந்தது; குன்று
எலாம் இடிந்த- அதுபோலவே குன்றுகளும் ஒலியால்
இடிந்தன.
————-
‘”மாக் கவந்தனும், வலி தொலைந்த வாலி ஆம்
பூக் கவர்ந்து உண்ணியும், போலும்” என்று, எனைத்
தாக்க வந்தனை; இவன் தன்னை இன் உயிர்
காக்க வந்தனை; இது காணத் தக்கதால். 281-
மாக்கவந்தனும் – வயிறே வாயாகக் கொண்ட பெரிய
கவந்தனும்; வலி தொலைந்த வாலி ஆம் பூக்கவர்ந்து
உண்ணியும் போலும் – வலி நீங்கிய வாலியாகிய பூவைப்
பறித்து உண்ணும் குரங்கும் போல என்று கருதி; எனைத் தாக்க
வந்தனை- என்னைத் தாக்குவதற்காக வந்தாய்; இவன் தன்னை
இன் உயிர் காக்க வந்தனை- இந்தச் சுக்கிரீவனுடைய, இனிய
உயிரைக் காக்க வந்தாய்; இது காணத்தக்கதால்- இச்செயலைக்
காண்போம்.
————-
‘உம்பியை முனிந்திலேன், அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன், தொடர்ந்த வாலிதன்
தம்பியை முனிந்திலேன், சமரம் தன்னில் யான்-
அம்பு இயல் சிலையினாய்!-புகழ் அன்று ஆதலால். 282–
அம்பு இயல் சிலையினாய்- அம்பு தொடுக்கப் பட்ட
வில்லினை உடையவனே; யான் சமரம் தன்னில்- நான் போர்
தன்னில்; உம்பியை முனிந்திலேன் – உன் தம்பியைச்
சினந்தேன் இல்லை; அவனுக்கு ஊர்தியாம் தும்பியை
முனிந்திலேன் – அவனுக்கு ஊர்தியாக அமைந்த யானை
போன்றவனான அனுமனைச் சினந்தேனில்லை;. தொடர்ந்த
வாலி த ன் தம்பியை முனிந்திலேன் – என்னைத் தொடர்ந்து
வந்த வாலியின் தம்பியாகிய சுக்கிரீவனைச் சினந்தேனில்லை;
புகழ் அன்று ஆதலால்- (எனக்குச் சமம் ஆனவர்கள் அல்ல)
அவர்களை வெல்வது எனக்குப் புகழ் தருவதன்று ஆகையால்.
—————
‘தேடினென் திரிந்தனென் நின்னை; திக்கு இறந்து
ஓடியது உன் படை; உம்பி ஓய்ந்து, ஒரு பாடு உற
நடந்தனன்; அனுமன் பாறினன்;
ஈடுறும் இவனைக் கொண்டு, எளிதின் எய்தினேன். 283-
நின்னைத் தேடினென் திரிந்தனென் – உன்னைத் தேடித்
திரிந்தேன்; உன் படை திக்கு இறந்து ஓடியது- உனது படை
திக்கைக் கடந்து ஓடியது; உம்பி ஓய்ந்து ஒருபாடு உற
நடந்தனன் – உன் தம்பி வலி ஓய்ந்து ஒரு பக்கம் பொருந்த
நடந்தான்; அனுமன் பாறினான் – அனுமன் வலி கெட்டு
ஓடிவிட்டான்; ஈடுறும் – போர் செய்ய வந்த; இவனை-
இச்சுக்கிரீவனை; கொண்டு எளிதின் எய்தினேன் – எடுத்துக்
கொண்டு எளிதாக அடைந்தேன்.
————-
‘காக்கிய வந்தனை என்னின், கண்ட என்
பாக்கியம் தந்தது, நின்னை; பல் முறை
ஆக்கிய செரு எலாம் ஆக்கி, எம்முனைப்
போக்குவென், மனத்துறு காதல் புன்கண் நோய். 284-
காக்கிய வந்தனை என்னின் – இச்சுக்கிரீவனைக்
காப்பாற்றுவதற்காக வந்தாய் என்னின்; நின்னைக் கண்ட
என் பாக்கியம் தந்தது- நின்னை, என்னிடம் விளைந்த என்
பாக்கியம் தந்துள்ளது; பல்முறை ஆக்கிய செரு எலாம்
ஆக்கி – முன்பு பலமுறை செய்துள்ள வீரப்போரை எல்லாம்
இன்று இப்பொழுது செய்து;எம்முனை- என் அண்ணணுடைய;
மனத்துறு காதல் புன்கண் நோய் போக்குவென- மனத்தில்
பொருந்திய காதல் ஆகிய வருத்தம் தரும் நோயைப்
போக்குவேன்.
——–
‘ஏதி வெந் திறலினோய்! இமைப்பிலோர் எதிர்,
பேது உறு குரங்கை யான் பிணித்த கைப் பிணி,
கோதை வெஞ் சிலையினால், கோடி வீடு எனின்,
சீதையும் பெயர்ந்தனள், சிறை நின்றாம்’ என்றான். 285-
ஏதி வெந்திறலினோய்- படைக்கலத்தால் செய்யும் போரில
கொடிய திறமை வாய்ந்தவனே; இமைப்பிலோர் எதிர்
– தேவர்கள் முன்னிலையில்; பேது உறு குரங்கை-
மனங்கலங்கிய குரங்காகிய சுக்கிரீவனை; யான் பிணித்த
கைப்பிணி- யான் கட்டிய கைப்பிணிப்பை; கோதை வெஞ்
சிலையினால் – கட்டமைந்த கொடிய வில்லினால்; வீடு கோடி
எனின்- விடுவித்து விட்டாய் ஆனால்; சீதையும் சிறை
நின்று பெயர்ந்தனள் ஆம் – சீதையும் சிறையில் இருந்து
விடுபட்டவள் ஆவாள்; என்றான் – என்று கும்பகருணன்
கூறினான்.
————–
இராமனின் வஞ்சினம்
என்றலும், முறுவலித்து, இராமன், ‘யானுடை
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்,
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்,
பின்றினென் உனக்கு; வில் பிடிக்கிலேன்’ என்றான். 286-
என்றலும்- என்று கும்பகருணன் கூறியவுடன்; இராமன்
முறுவலித்து- இராமன் புன்சிரிப்புச் சிரித்து; யானுடை –
என்னுடைய; இன்துணை ஒருவனை – இனிய துணையாகிய
சுக்கிரீவனை; எடுத்த தோள் எனும் குன்றினை- தூக்கிச் சென்ற
தோள் என்கிற குன்றை; யான் அரிந்து குறைக்கிலேன் எனின்-
நான் வெட்டி வீழ்த்திலேன் எனின்; உனக்குப் பின்றினென் –
உனக்குத் தோற்றவன் ஆவேன்; வில் பிடிக்கிலேன் என்றான்
– வில்லைப் பிடிப்பதில்லை என்று சபதம் இட்டான்.
—————
மீட்டு அவன், சரங்களால் விலங்கலானையே
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்,
வாள் தலை பிடர்த்தலை வயங்க, வாளிகள்,
சேட்டு அகல் நெற்றியின், இரண்டு சேர்த்தினான். 287-
அவன் மீட்டு – இராமன் மீண்டும்; சரங்களால்
விலங்கலானையே- அம்புகளால் மலை போலும் சுக்கிரீவனை;
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில் –
தடையில்லாமல் நீக்குவதற்கு முயல்கின்ற காலத்தில்; பிடர்த்தலை
வயங்க வாள் தலை வாளிகள் – பிடர்த் தலையருகிலிருந்த
அம்பறாத் தூணியில் இருந்து விளங்குகின்ற வாளின் தலை போன்ற
கூரிய அம்புகள்; இரண்டு- இரண்டை; சேட்டு அகல் நெற்றியின்
சேர்த்தினான் – கும்பகருணனது உயர்ந்து அகன்ற நெற்றியில்
பாய்ச்சினான்.
———–
கும்பகருணன் குருதியால் சுக்கிரீவன் மயக்கம் தெளிதல்
சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ,
நெற்றியின் நெடுங் கணை ஒளிர நின்றவன்,
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து,
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன். 288-
சுற்றிய குருதியின் – அம்பு பட்டதனால் எழுந்து சூழ்ந்த
குருதியால்;செக்கர் சூழ்ந்து எழ – செவ்வானம் சுற்றிலும்
தோன்ற; நெற்றியின் நெடுங்கணை ஒளிர நின்றவன்-
நெற்றியில் நீண்ட இரண்டு கணைகள் விளங்க நின்ற
கும்பகருணன்; முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து – பல
கதிர்களை உடைய சூரியன் தோன்றுவதற்கு முன்பு; வந்து உற்று
எழும் – வந்து பொருந்தித் தோன்றுகின்ற; அருணனது உதயம்
போன்றனன் – அருணனது உதயத்தையொத்தான்.
————
குன்றின் வீழ் அருவியின் குதித்துக் கோத்து இழி
புன் தலைக் குருதி நீர் முகத்தைப் போர்த்தலும்,
இன் துயில் உணர்ந்தென, உணர்ச்சி, எய்தினான்;
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான். 289-
குன்றின் வீழ் அருவியின் – மலையில் இருந்து விழுகின்ற
அருவி போல; குதித்துக் கோத்து இழி – கும்பகருணனது
நெற்றியில் இருந்து குதித்துக் கொண்டு ஒன்று சேர்ந்து
விழுகின்ற; குருதி நீர் – இரத்தமாகிய நீர்; புன்தலை
முகத்தைப் போர்த்தலும் – புல்லிய நிலையோடு கூடிய
சுக்கிரீவனது முகத்தை நிறைத்தலும்; இன்துயில் உணர்ந்து என
– இனிய தூக்கத்தில் இருந்து எழுந்தமை ஒப்ப; உணர்ச்சி
எய்தினான் – நினைவு உணர்ச்சியை அடைந்தான்; வன்திறல்
தோற்றிலான்- (அப்போது) இதுவரை யாரிடத்தும் வலிய
திறல் தோலாதவனாகிய கும்பகருணன்; மயக்கம் எய்தினான் –
மயக்கம் அடைந்தான்.
———–
சுக்கிரீவன், கும்பகருணன் மூக்கையும் காதையும் கடித்துச் செல்லுதல்
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் எனக் குறிப்பின் உன்னினான்;
சுற்றுற நோக்கினன், தொழுது வாழ்த்தினான்-
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான் தனை. 290-
நெற்றியில் நின்று – கும்பகருணனது நெற்றியில் ஊன்றி
நின்று; ஒளி நெடிது இமைப்பன- ஒளி கொண்டு விளங்குவன;
கொற்றவன் சரம் என- வெற்றிக்குரிய இராமனது அம்பு என்று;
குறிப்பின் உன்னினான் – குறிப்பால் உணர்ந்தான்; சுற்றுற
நோக்கினான் – சுற்றுறப் பார்த்து; முற்றிய பொருட்கு
எலாம் முடிவுளான் தனை- உலகத்தில் நிரம்பிய பொருள்கள்
எல்லாம் முடிவாக அடைதற்கு உரிய அவதார அம்சமான
இராமனை; தொழுது வாழ்த்தினான் – கையால் தொழுது
வாழ்த்தினான்.
—————
கண்டனன் நாயகன் தன்னை, கண்ணுறா,
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான்,
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த் தமரைக் கூடினான். 291-
நாயகன் தன்னைக் கண்டனன் – (சுக்கிரீவன்) தலைவனாகிய
இராமனைக் கண்டான்; கண்ணுறா- பார்த்து; தண்டல் இயல்
மானமும் – குறைதல் இல்லாத மானத்தையும்; நாணும்
தாங்கினான் – நாணத்தையும் தாங்கினவன் ஆகி; விண்டவன் –
பகைவனான கும்பகர்ணனது; நாசியும் செவியும் – மூக்கையும்
காதையும்; வேரொடும் கொண்டனன் – வேரோடு கொண்டு;
எழுந்து போய் தமரைக் கூடினான் – புறப்பட்டுச் சென்று
தம்மவருடன் கூடினான்.
————–
சுக்கிரீவனைக் கண்டு யாவரும் மகிழ்தல்
வானரம் ஆர்த்தன; மறையும் ஆர்த்தன;
தான் அர மகளிரும் தமரும் ஆர்த்தனர்;
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன;
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே. 292-
வானரம் ஆர்த்தன- சுக்கிரீவன் திரும்பி வந்தது கண்டு
குரங்குகள் ஆரவாரித்தன; மறையும் ஆர்த்தன- வேதங்களும்
ஆரவாரித்தன; தான் அர மகளிரும் – தேவ மகளிரும்; தமரும்
ஆர்த்தனர் – உறவினர்களும் பேரொலி செய்தனர்; மீன்
நரல் வேலையும் – மீன்கள் ஒலிக்கும் கடலும்; வெற்பும்
ஆர்த்தன- மலையும் ஒலி செய்தன; வானவரோடு நின்று
அறமும் ஆர்த்ததே – தேவர்களுடன் சேர்ந்து நின்று
அறக்கடவுளும் ஆரவாரம் செய்தது.
————-
காந்து இகல் அரக்கன் வெங் கரத்துள்
நீங்கிய ஏந்தலை அகம் மகிழ்ந்து, எய்த நோக்கிய
வேந்தனும், சானகி இலங்கை வெஞ் சிறைப்
போந்தனளாம் என, பொருமல் நீங்கினான். 293-
காந்து இகல் அரக்கன்- சினங்கொள்ளும் தன்மை உள்ள
வலிமை பெற்ற கும்பகருணனுடைய; வெங்கரத்துள் நீங்கிய
ஏந்தலை- கொடிய கைகளில் இருந்து தப்பி வெளிப்பட்ட
சுக்கிரீவனை; அகம் மகிழ்ந்து- மனம் மகிழ்வுற்று; எய்த
நோக்கிய வேந்தனும் – முழுமையாகப் பார்த்த இராமனும்;
சானகி இலங்கை வெஞ்சிறைப் போந்தனளாம் என-
சானகி இலங்கையின் கொடிய சிறையில் இருந்து மீண்டும்
திரும்பி வந்து சேர்ந்தனளாம் என; பொருமல் நீங்கினான் –
துன்பம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தான்.
————–
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ,
வித்தகன் சரம் தொட, மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின், செவியும் மூக்கும் கொண்டு
அத் திசைப் போயினன் அல்லது, ஒண்ணுமோ? 294-
மத்தகம் பிளந்து – நெற்றி பிளந்து; பாய் உதிரம்
வார்ந்து எழ – பாய்கின்ற குருதி மிகுதியாக வெளிப்பட;
வித்தகன் சரம் தொட – இராமன் அம்புகளைத் தொடுத்து விட்டதனால்; மெலிவு
தோன்றிய – மெலிவை அடைந்த; சித்திரம் பெறுதலின் –
தக்க சமயம் கிடைத்ததனால்; செவியும் மூக்கும் கொண்டு-
காதையும் மூக்கையும் கடித்துக்கொண்டு; அத்திசைப் போயினன்
– தமர் இருந்த அந்த இடத்தைப் போய்ச் சேர்ந்தான்;
அல்லது ஒண்ணுமோ- அவ்வாறில்லா விட்டால் முடியுமோ?
————-
உணர்வு பெற்ற கும்பகருணன் வாட் போர் புரிதல்
அக் கணத்து அறிவு வந்து அணுக, அங்கைநின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்,
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும், உணர்ந்தனன்-உதிரப் போர்வையான். 295-
உதிரப் போர்வையான் – குருதியே போர்வையாகப்
போர்க்கப்பட்ட கும்பகருணன்; அக்கணத்து- மூக்கும் செவியும்
பறிக்கப்பட்ட அந்தக் கணத்தில்; அறிவு வந்து அணுக- மயக்க
நிலை நீங்கி அறிவு வந்து விளங்க; கவி அரசு – குரங்குகளுக்குத்
தலைவனாகிய சுக்கிரீவன்; அங்கை நின்று உக்கனன் என்னும்
உண்மையும் – தன் அகங்கையில் இருந்து அப்பால் சென்று
விட்டான் என்ற உண்மையையும்; மிக்கு உயர் நாசியும் – மிக
உயர்ந்து தோன்றுகிற மூக்கும்; செவியும்- காதுகளும்; வேறு
இடம் புக்கதும் உணர்ந்தனன் – வேறு இடத்திற்குப் போய்
விட்டதையும் உணர்ந்தான்
———-
தாது ராகத் தடங் குன்றம், தாரை சால்
கூதிர் கால் நெடு மழை சொரிய, கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன்-
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான். 296-
மீது உறு குருதியாறு ஒழுகும் மேனியான்- நெற்றி மேல்
பெருகிய ஆறு போன்ற இரத்தம் ஒழுகப் பெற்ற உடம்பினை
உடையவனான கும்பகருணன்; தாதுராகத் தடங் குன்றம் –
காவிக்கல்லால் ஆகிய சிவந்த நிறத்தைக் கொண்ட பெரிய
மலையானது; தாரை சால் கூதிர் கால் நெடுமழை சொரிய-
தாரையாக மிகுதியும் குளிர்ச்சியை வெளியிடுகின்ற
கூதிர்ப்பருவ பெருமழை பொழிய; கோத்து இழி அருவிகள்-
வெள்ளம் ஒன்று சேர்ந்து ஓடிவருகிற அருவிகளை;ஊதையோடு-
வாடைக் காற்றோடு; உமிழ்வது ஒத்தனன்- வெளியிடுவதை
ஒத்தனன்.
—————-
எண்ணுடைத் தன்மையன், இனைய எண் இலாப்
பெண்ணுடைத் தன்மையன் ஆய பீடையால்,
புண்ணுடைச் செவியொடு மூக்கும் பொன்றலால்,
கண்ணுடைச் சுழிகளும் குருதி கால்வன. 297-
எண்ணுடைத் தன்மையன்- ஆராய்தல் தன்மை உடைய
இராவணன்; இனைய- இவ்வாறான நிலையினை எண்ணாது; எண்
இலாப் பெண்ணுடைத் தன்மையன் – ஆய்தல் இல்லாத
சூர்ப்பனகையின் சொல் கேட்ட தன்மையன் ஆனதால்; ஆய
பீடையால்- ஏற்பட்ட போரில்; புண்ணுடைச் செவியொடு
மூக்கும் பொன்றலால் – கும்பகருணனுடைய புண்ணையுடைய
காதுகளுடன் மூக்கும் அழிதலால்; கண்ணுடைச் சுழிகளும்
குருதி கால்வன- அவனுடைய கண்ணுடைய வட்டங்களும்
குருதியை வெளிப்படுத்துவனவாயின.
————–
ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும்; தன்
நாசியைப் பார்க்கும்; முன் நடந்த நாளுடை
வாசியைப் பார்க்கும்; இம் மண்ணைப் பார்க்குமால்-
‘சீ சீ உற்றது!’ எனத் தீயும் நெஞ்சினான். 298-
உற்றது – தனக்கு நேர்ந்தது; சீசீ எனத் தீயும்
நெஞ்சினான் – சீசீ என்று சொல்லி வேகின்ற நெஞ்சை உடைய
கும்பகருணன்; ஏசியுற்று எழும் விசும்பினரைப் பார்க்கும்-
தன்னை ஏசிக்கொண்டு எழுகின்ற தேவர்களைப் பார்ப்பான்;
தன் நாசியைப் பார்க்கும் – தன் மூக்கைப் பார்ப்பான்;
முன் நடந்த நாளுடை வாசியைப் பார்க்கும் – முன் வெற்றி
பெற்று நடந்த நாளுக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை
எண்ணிப் பார்ப்பான்; இம்மண்ணைப் பார்க்குமால்- இந்த
நிலத்தைப் பார்ப்பான்.
——–
‘என்முகம் காண்பதன் முன்னம், யான் அவன்-
தன் முகம் காண்பது சரதம் தான்’ என,
பொன் முகம் காண்பது ஓர் தோலும், போரிடை
வல் முகம் காண்பது ஓர் வாளும், வாங்கினான். 299-
என்முகம் காண்பதன் முன்னம் – என்னுடைய முகத்தைக்
காண்பதற்கு முன்பு; யான் அவன் தன் முகம் காண்பது சரதம்
தான் என- யான் அந்த இராமன் தன் முகத்தைப் பார்ப்பது
நல்லது என்று கருதி; பொன்முகம் காண்பது ஓர் தோலும் –
ஒளி பொருந்திய முகப் பகுதியைக் கொண்ட ஒரு கேடயத்தையும்;
போரிடை வல்முகம் காண்பது ஓர்வாளும் – போரில் வலிய
வாய் கொண்டு பொருவதான ஒப்பற்ற வாளையும்; வாங்கினான் –
எடுத்தான்.
———-
விதிர்த்தனன்; வீசினன், விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன்; உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன்; ஆர்த்தனன்-ஆயிரம் பெருங்
கதிர்த் தலம் சூழ் வடவரையின் காட்சியான். 300-
ஆயிரம் பெருங் கதிர்த்தலம் சூழ் – ஆயிரத்தினும் மிக்க
கதிர்களைக் கொண்ட சூரிய மண்டலம் சுற்றி வருகின்ற;
வடவரையின் காட்சியான் – வடமேரு என்று கூறத்தக்க
தோற்றத்தை உடையவனான கும்பகருணன்; விதிர்த்தனன்
வீசினன் – கேடயத்தை அசைத்து வீசி; விசும்பின் மீன்
எலாம் உதிர்த்தனன் – வானத்தில் உள்ள மீன்கள் எல்லாம்
உதிர்த்தான்; உலகினை அனந்தன் உச்சியோடு அதிர்த்தனன் ஆர்த்தனன்-
ஆதிசேடனுடைய உச்சியில் உள்ள உலகினை அதிரச் செய்து
பேரொலி செய்தான்.
—————-
வீசினன் கேடகம்; முகத்து வீங்கு கால்,
கூசின குரக்கு வெங் குழுவைக் கொண்டு எழுந்து,
ஆசைகள் தோறும் விட்டு எறிய, ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால். 301-
வீசினன்- கும்பகருணன் வீசி எறிந்த; கேடகம் முகத்து
வீங்குகால்- கேடயத்தின் முகத்தில் இருந்து மிகுதியாகத்
தோன்றிய காற்றானது; கூசின குரங்கு வெங்குழுவைக் கொண்டு-
அச்சம் கொண்ட குரங்குகளின் கொடிய கூட்டத்தைக் கொண்டு;
எழுந்து ஆசைகள் தோறும் விட்டு எறிய- சென்று திக்குகள்
தோறும் விட்டு எறிய; ஆர்த்து எழும் ஓசை ஒண்கடலையும்
திடர் செய்தது- அக்குரங்குக் கூட்டங்கள் ஆர்த்து எழுகின்ற
ஓசையைக் கொண்ட ஒள்ளிய கடலையும்; திடர் செய்து
ஓடுமால் – மேடாகச் செய்த வண்ணம் ஓடிற்று என்க.
——————
தோல் இடைத் துரக்கவும், துகைக்கவும் சுடர்
வேலுடைக் கூற்றினால் துணிய வீசவும்,
காலிடைக் கடல் எனச் சிந்தி, கை கெட,
வாலுடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால். 302-
தோல் இடைத் துரக்கவும்- கும்பகருணன் கேடயத்தை
இடைய விரையச் செலுத்துவதாலும்; துகைக்கவும் – தன்
காலினால் துகைத்தலாலும்; சுடர் வேலுடைக் கூற்றினால்
துணிய வீசவும் – ஒளி பொருந்திய வேலாகிய யமனால்
துண்டுபட வீசுவதாலும்; காலிடைக் கடல் என- பெருங்காற்று
வீசுவதனால் உடைதலைக் கொண்ட கடலைப் போல; சிந்தி-
சிதற; கைகெட- செயலறவு கெட்டு; வாலுடை நெடும்படை-
வாலையுடைய பெரிய குரங்குப் படை; இரிந்து மாய்ந்ததால்-
நிலை கெட்டு அழிந்தது.
————
ஏறுபட்டதும், இடை எதிர்ந்துளோர் எலாம்
கூறுபட்டதும், கொழுங் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும், நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும், ஒரு கணத்தில் தீர்ந்தவால். 303-
இடை எதிர்ந்துளோர் எலாம் – கும்பகருணனைப்
போர்க்களத்தில் எதிர்த்தவர் எல்லாம் (படைக்கலங்களால்);
ஏறுபட்டதும் – வடுப்பட்டதும்; கூறுபட்டதும்- துண்டம்
துண்டமாகியதும்; கொழுங் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும் – மிகுதியாக குருதி வெள்ளமாகக் கோத்துத்
திரண்டு பெருகி ஆறாக ஓடியதும்; நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் – நிலமும் அதனைத் தாங்கியுள்ள ஆதிசேடனது
உச்சியும் சேறாக ஆனதும்; ஒரு கணத்தில் தீர்ந்தவால்-
ஆகிய செயல்கள் ஒரு கணத்தில் நடந்து முடிந்தன.
—————-
இராமன்-கும்பகருணன் போர்
‘இடுக்கு இலை; எதிர் இனி இவனை இவ் வழித்
தடுக்கிலையாம் எனின், குரங்கின் தானையை
ஒடுக்கினை, அரக்கரை உயர்த்தினாய்’ எனா
முடுக்கினன், இராமனைச் சாம்பன் முன்னியே. 304-
இடுக்கு இலை – இனிமேல் இப்படிப்பட்ட நெருக்கடியான
நேரம் ஏற்படப் போவதில்லை; எதிர் இனி இவனை இவ்வழித்
தடுக்கிலையாம் எனின் – எதிர் நின்று இப்போது இவனை
இவ்விடத்தில் தடுக்காமல் போவாய் ஆனால்; குரங்கின்
தானையை ஒடுக்கினை- குரங்குப் படையை ஒடுக்கி; அரக்கரை
உயர்த்தினாய் என- அரக்கர் வலிமை கொள்ள உயர்த்தியவன்
ஆவாய் என்று;இராமனைச் சாம்பன் முண்னியே முடுக்கினன்
– இராமனைச் சாம்பவான் நெருங்கிப் போரிடத் தூண்டினான்.
————
அண்ணலும் தானையின் அழிவும், ஆங்கு அவன்
திண் நெடுங் கொற்றமும், வலியும், சிந்தியா,
நண்ணினன்-நடந்து எதிர், ‘நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென்’ என்னும் கற்பினான். 305-
அண்ணலும் – தலைமைத் தன்மை உள்ள இராமனும்;
தானையின் அழிவும்- குரங்குச் சேனையின் அழிவையும்;
ஆங்கு அவன் திண் நெடுங் கொற்றமும் – அப்போது
அக்கும்பகருணனுடைய உறுதியான பெரிய வெற்றியையும்;
வலியும் சிந்தியா- வலிமையையும் சிந்தித்து; நமனை இன்று
இவன் கண்ணிடை நிறுத்துவென்- யமனை இப்போது இவன்
கண்ணுக்கு எதிர் நிறுத்துவேன்; என்னும் கற்பினான் – என்னும்
மனத்திண்மையோடு; நடந்து எதிர் நண்ணினன்-
கும்பகருணனுக்கு எதிராக நடந்து நெருங்கினான்.
————–
ஆறினோடு ஏழு கோல், அசனி ஏறு என,
ஈறு இலா விசையன இராமன் எய்தனன்;
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால், நுணங்கு கல்வியான். 306-
ஆறினோடு ஏழுகோல் – பதின்மூன்று அம்புகளை; அசனி
ஏறு என- இடியேறு போல; ஈறு இலா விசையன- எல்லை இல்லா
விரைவுடையனவாய்; இராமன் எய்தனன்- இராமன் கும்பகருணன்
மேல் எய்தான் (அவற்றை); நுணங்கு கல்வியான்- நுட்பமான
போர்க்கல்வி அறிந்த கும்பகருணன்; விசும்பில்- ஆகாயத்தில்;
பாறு உகு சிறை என பாறிட- பருந்து உகுக்கின்ற இறகுகள்
போல சிதறி விழும்படி; வாளியால் நூறினான் – தன் அம்புகளால்
பொடியாக்கி அழித்தான்.
———————
ஆடவர்க்கு அரசனும், தொடர, அவ் வழி,
கோடையின் கதிர் எனக் கொடிய கூர்ங் கணை
ஈடு உறத் துரந்தனன்; அவையும் இற்று உக,
கேடகப் புறத்தினால் கிழிய வீசினான். 307-
ஆடவர்க்கு அரசனும்- ஆடவர்க்குத் தலைவன் ஆகிய
இராமனும்; தொடர – தொடர்ச்சியாக; அவ்வழி- அப்போது;
கோடையின் கதிர் எனக் – கோடைக்காலத்துக் கதிரவனின்
கதிர்கள் போல உள்ள; கொடிய கூர்ங்கணை- கொடுமையுள்ள
கூர்மையான அம்புகளை; ஈடு உறத் துரந்தனன்- வலிமை
பொருந்தச் செலுத்தினான்; அவையும் இற்று உக கிழிய-
அவ்வம்புகள் முறிந்து விழவும், கிழியவும்; கேடகப்
புறத்தினால் வீசினான் – கும்பகருணன் கேடயத்தின்
பின்புறத்தால் வீசினான்.
————
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய, செங் கணான்,
மறித்து ஒரு வடிக் கணை தொடுக்க, மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின், அமரர் ஆர்க்கவே. 308-
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய- சிறிதாகிய ஒப்பற்ற
புன்முறுவல் தோன்ற; செங்கணான் – சிவந்த தாமரைக்
கண்ணனாகிய இராமன்; மறித்து ஒரு வடிக்கணை தொடுக்க-
மீண்டும் ஒரு கூர்மையான அம்பைச் செலுத்த; மற்று அவன்-
(அது) அவனுடைய; ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு
நாகத்தை- பகைவரை வெட்டி ஒளிவிடுகின்ற வாள் என்னும்
வலிய நாகத்தை; அமரர் ஆர்க்கவே- தேவர்கள் பேரொலி
செய்ய; கலுழனின் அறுத்தது- கருடனைப் போல் அறுத்து
வீழ்த்தியது.
——————
‘அற்றது தடக் கை வாள் அற்றது இல்’ என,
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்,
‘முற்றினென் முற்றினென்’ என்று, முன்பு வந்து,
உற்றனன்-ஊழித் தீ அவிய ஊதுவான். 309-
ஊழித்தீ அவிய ஊதுவான்- ஊழிக்காலத்துத் தீயும்
அவியும்படி பெருமூச்சு விடுபவனாகிய அக்கும்பக்கருணன்;
தடக்கை வாள் அற்றது- பெரிய கையில் உள்ள வாள்
அழிந்தது; அற்றது இல் என- அழிய வில்லை என்று
கண்டோர் எண்ணும்படி; மற்று ஒரு வயிர வாள் கடிதின்
வாங்கினான் – வேறு ஒரு வலிமையான வாளை விரைவாகக்
கையில் எடுத்துக்கொண்டு; முற்றினென் முற்றினென் என்று
– யாவரையும் முடித்து விட்டேன்; முடித்து விட்டேன் என்று
சொல்லிக் கொண்டு; முன்பு வந்து உற்றனன் – இராமன்
முன்னே வந்து நின்றான்.
————-
அந் நெடு வாளையும் துணித்த ஆண்தகை,
பொன் நெடுங் கேடகம் புரட்டி, போர்த்தது ஓர்
நல் நெடுங் கவசத்து, நாம வெங் கணை
மின்னொடு நிகர்ப்பன, பலவும் வீசினான். 310-
அந்நெடு வாளையும்- அந்தப் பெரிய வாளையும்; துணித்த-
அம்புகளால் துண்டித்த; ஆண்தகை- ஆண்மைப் பண்புள்ள
இராமன்; பொன் நெடுங் கேடகம் புரட்டி-
அக்கும்பகருணனுடைய அழகிய நெடிய கேடயத்தை வீழ்த்தி;
போர்த்தது ஓர் நல் நெடுங் கவசத்து- அவன் உடலைப்
போர்த்துக் கொண்டிருந்த நல்ல நெடிய கவசத்தில்; மின்னொடு
நிகர்ப்பன- மின்னலை ஒப்பவையான; நாம வெங்கணை-
அச்சத்தைத் தரும் கொடிய கணைகள்; பலவும் வீசினான்-
பலவற்றைப் பாய்ச்சினான்.
———–
இராவணன் அனுப்பிய பெரும் படை உதவிக்கு வருதல்
அந்தரம் அன்னது நிகழும் அவ் வழி,
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட,
சிந்துவும் தன் நிலை குலைய, சேண் உற
வந்தது, தசமுகன் விடுத்த மாப் படை. 311-
அந்தரம் அன்னது நிகழும் அவ்வழி- அப்படிப்பட்ட
கேடு நிகழ்கின்ற அந்த நேரத்தில்; இந்திரன் தமரொடும்
இரியல் எய்திட – தேவர் தலைவன் தன் உறவினர்களோடு
நிலை கெட்டு ஓட;சிந்துவும் தன் நிலை குலைய- கடல்கள்
தம் நிலை குலைந்து போக; தசமுகன் விடுத்த மாப்படை-
இராவணன் அனுப்பிய பெரிய படை; சேண் உற வந்தது- வெகு
தொலைவில் இருந்து நெருங்கி வந்தது.
————–
வில் வினை ஒருவனும், ‘இவனை வீட்டுதற்கு
ஒல் வினை இது’ எனக் கருதி, ஊன்றினான்;
பல் வினை தீயன பரந்த போது ஒரு
நல்வினை ஒத்தது, நடந்த தானையே. 312-
வில்வினை ஒருவனும் – வில் தொழிலில் ஒப்பற்ற
இராமனும்; இவனை வீட்டுதற்கு – இக்கும்பகருணனை
அழிப்பதற்கு; ஒல்வினை இது – ஏற்ற போர்த்தொழில்
செய்யத்தக்க காலம் இது; எனக் கருதி- என்று எண்ணி;
ஊன்றினான் – அவன் எதிர் ஊன்றினான்; தீயன பல்வினை
பரந்தபோது- தீயவினைகள் பலவாக வந்தபோது; ஒரு
நல்வினை ஒத்தது நடந்த தானையே- அவற்றைத் தடுக்கத்
தக்க ஒப்பற்ற நல்வினையை ஒத்தது நடந்து வந்து சேர்ந்த
படைகள் என்றவாறு;
————-
வந்த சேனையை இராமன் எதிர்த்தல்
கோத்தது புடைதொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மதமலை மிடைந்த போர்ப் படை
காத்தது கருணனை; கண்டு, மாய மாக்
கூத்தனும், ‘வருக!’ எனக் கடிது கூவினான். 313-
குதிரை தேரொடு ஆள்- குதிரையும் தேரும் காலாட்படையும்;
பூத்து இழி மதமலை- தோன்றிப் பெருகுகின்ற மதநீரைக் கொண்ட
யானையும்; மிடைந்த போர்ப்படை- நெருங்கிய போர் செய்ய
வல்ல படைகள்; புடை தொறும் கோத்தது- பக்கங்களில் சூழ்ந்து;
கருணனைக் காத்தது கண்டு – கும்பகருணனைக் காக்கத்
தொடங்கியது கண்டு; மாயமாக் கூத்தனும் – மாயக் கூத்தனாகிய
அவதார இராமனும்; கடிது வருக எனக் கூவினான் – விரைவாக
வருக என அப்படையை அழைத்தான்.
—————-
சூழி வெங் கட கரி, புரவி தூண்டு தேர்,
ஆழி வெம் பெரும் படை, மிடைந்த ஆர்கலி
ஏழ்-இரு கோடி வந்து எய்திற்று என்பரால்;
ஊழியின் ஒருவனும், எதிர் சென்று, ஊன்றினான். 314-
சூழி வெங்கடகரி- முகபடாம் அணிந்த கொடிய மதநீர்
ஒழுகும் யானையும்; புரவி- குதிரையும்; தூண்டு ஆழி தேர் –
செலுத்தப்படுகிற பெரிய சக்கரங்களை உடைய தேரும்;
வெம்பெரும் படை – கொடிய பெரிய காலாட்படையும்;
மிடைந்த – நெருங்கிய; ஏழ் இரு கோடி ஆர்கலி வந்து
எய்திற்று – பதினான்கு கோடி பெரும் படைக்கடல் வந்து
சேர்ந்தது; ஊழியின் ஒருவனும் – ஊழிக்காலத்திலும் அழியாது
நிற்பவனாகிய திருமாலின் அவதாரமாகிய இராமனும்;
எதிர்சென்று ஊன்றினான் என்பரால்- எதிரே போய் தடுத்து
நின்றான் என்பர்.
————–
காலமும், காலனும், கணக்கு இல் தீமையும்,
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய,
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்,
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கித் தோன்றினான். 315-
காலமும்- ஆயுள் கால எல்லையும்; காலனும்- யமனும்;
கணக்கு இல் தீமையும் – கணக்கற்ற தீமையும்; மூலம் – என்ற
மூலகாரணம் மூன்றும்; மூன்று இணை என வகுத்து முற்றிய-
மூன்று இலையாக அமைக்கப் பெற்றுப் படையுருவம் முற்றுப்பெற்ற;
ஞாலமும்- மண்ணுலகும்; நரகமும் – பாதாள உலகும்; விசும்பும்
– ஆகாயமும்; நக்குறும் – என்ற மூன்றையும் அழிக்கும் வல்லமை
பொருந்திய; சூலம் ஒன்று- சூலம் ஒன்றை; அரக்கனும்
வாங்கித் தோன்றினான் – கும்பகருணன் கையில் கொண்டு
தோன்றினான்.
————-
‘அரங்கு இடந்தன, அறு குறை நடிப்பன அல்ல’ என்று இமையோரும்,
‘மரம் கிடந்தன, மலைக் குவை கிடந்தன வாம்’ என மாறாடி,
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன, கறை படும்படி கவ்விச்
சிரம் கிடந்தன, கண்டனர்; கண்டிலர், உயிர்கொடு திரிவாரை. 316-
இமையோரும் – தேவர்களும்; அரங்கு இடந்தன-
போர்க்களத்தில் (இராமனது அம்பால்) அறுத்து வீழ்த்தப்பட்ட;
அறுகுறை நடிப்பன அல்ல என்று- தலையற்ற உடற்குறைகள்
நடிப்பன அல்ல என்றும்; மரங்கிடந்தன- மரத்துண்டங்கள்
கிடக்கின்றன; மலைக்குவை கிடந்தவாம் – மலைக் குவியல்கள்
கிடக்கின்றனவாம்; என மாறாடி- என்று மாறுபட்டுக் கூறுமாறு;
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன-கைகளோடு கூடியனவாய
வீரர்களின் உடல்கள் கிடந்தன; கறை படும்படி கவ்வி சிரம்
கிடந்தன-குருதிக் கறை படும்படி மண்ணைக் கவ்விக் கொண்டு
வீரர்களின் தலைகள் கிடந்தன; கண்டனர் – ஆகியவற்றைக்
கண்டனர்; உயிர் கொடு திரிவாரைக் கண்டிலர் – உயிர்
கொண்டு உலவுபவர்களைக் கண்டிலராயினர்.
————-
இற்ற அல்லவும், ஈர்ப்புண்ட அல்லவும், இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும், துணிபட்ட அல்லவும், சுடு பொறித் தொகை தூவி
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும், வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும், கண்டிலர் படைக்கலம்-அடு களம் திடர் ஆக. 317-
அடுகளம் திடர் ஆக- போர்க்களம் மேடாகுமாறு; இற்ற
அல்லவும் – முறிந்து போனவையல்லனவும்; ஈர்ப்புண்ட
அல்லவும் – குருதிப் பெருக்கால் இழுத்துக்கொண்டு
போகப்பட்டவை யல்லனவும்; இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும் – இடை இடையே முறிந்து எல்லாவிடங்களையும்
தூர்த்தன அல்லாதனவும்; துணிபட்ட அல்லவும் – துண்டு
பட்டவை யல்லனவும்; சுடு பொறித் தொகை தூவி- சுடுகின்ற
தீப்பொறிச் சுடர்களைச் சிந்தி; வெற்ற வெம்பொடி ஆயின
அல்லவும் – வீணாக வெவ்விய பொடியாகிப் போயின வல்லவும்;
வேறு ஒன்று நூறு ஆகி அற்ற அல்லவும்- வெவ்வேறாக நூறு
துண்டாகி இல்லாமல் போயின அல்லவும்;படைக்கலம் கண்டிலர்
– (ஆகியவற்றைக் கண்டனரல்லது) செவ்வனே உள்ள
படைக்கலங்களைக் காண மாட்டாதாராயினர் பிறர்.
——————
படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள் பாகரைப் பறிந்து ஓடி,
குடைந்து, வையகம் புக்குறத் தேக்கிய குருதியால் குடர் சோரத்
தொடர்ந்து, நோயொடும் துணை மருப்பு இழந்து, தம் காத்திரம் துணி ஆகிக்
கிடந்த அல்லது, நடந்தன கண்டிலர்-கிளர் மதகிரி எங்கும். 318-
கிளர் மதகிரி- மிக்க மதநீர் ஒழுகும் மலை போன்ற
யானைகள்; படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள்-
பரந்த தலைமீது பாய்ந்தனவாகிய அம்புகள்; குடைந்து-
குடைவதனால்; பாகரைப் பறிந்து ஓடி- பாகர்களின் சொல்லைக்
கடந்து ஓடி; வையகம் புக்குறத்தேக்கிய குருதியால் – பூமியில்
மிகுதியாகப் புகுந்து தேங்கும் அளவு பெருகிய இரத்தத்தால்;குடர
சோர நோயொடும் தொடர்ந்து- குடல் வெளிப்பட மரண
நோயோடு தொடர்ந்து சென்று; துணை மருப்பு இழந்து- இரு
தந்தங்களையும் இழந்து; தம் காத்திரம் துணி ஆகி- தங்கள்
உடல்களும் துணிபட்டுக்; கிடந்த அல்லது- கிடந்தவை அல்லது;
எங்கும் நடந்தன கண்டிலர் – உயிருடன் நடப்பனவற்றை
எங்கும் எவரும் கண்டிலர்.
——————
வீழ்ந்த வாளன, விளிவுற்ற பதாகைய, வெயில் உமிழ் அயில் அம்பு
போழ்ந்த பல் நெடும் புரவிய, முறை முறை அச்சொடும் பொறி அற்று,
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெங் குழம்பிடைத் தலைத்தலை மாறாடி,
ஆழ்ந்த அல்லது, பெயர்ந்தன கண்டிலர்-அதிர் குரல் மணித் தேர்கள். 319-
அதிர் குரல் மணித் தேர்கள் – ஒலிக்கின்ற குரலை உடைய
மணிகள் கட்டப்பெற்ற தேர்கள்; வீழ்ந்த வாளன – வீழ்ந்த
ஒளியினையுடையனவும்; விளிவுற்ற பதாகைய – அழிவுற்ற
கொடிகளையுடையனவும்; வெயில் உமிழ் அயில் அம்பு- ஒளி
விடுகிற கூர்மையான அம்புகள்; போழ்ந்த பல்நெடும் புரவிய-
பிளந்த பலவாகிய பெரிய குதிரைகளை உடையனவுமாய்; முறை
முறை – முறை முறையே; அச்சொடும் பொறி அற்று- அச்சுடன்
இயந்திரமும் அழிந்து; தாழ்ந்த வெண் நிணம்- இழிவான
வெள்ளிய கொழுப்புடன்; தயங்கு வெங்குழம்பிடை- விளங்குகிற
குருதிக் குழம்பின் இடையில்; தலைத்தலை மாறாடி-
இடந்தோறும் இடந்தோறும் மாறுபட்டு; ஆழ்ந்த அல்லது-
ஆழ்ந்துவிட்டன அல்லது; பெயர்ந்தன கண்டிலர் –
நல்லநிலையில் ஓடுவன கண்டிலர்.
————–
ஆடல் தீர்ந்தன, வளை கழுத்து அற்றன, அதிர் பெருங் குரல் நீத்த, தாள் துணிந்தன,
தறுகண் வெங் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் கோடு அமைந்த வெங் குருதி நீர்
ஆறுகள் சுழிதொறும் கொணர்ந்து உந்தி, ஓடல் அன்றி,
நின்று உகள்வன கண்டிலர்-உரு கெழு பரி எல்லாம். 320-
உருகெழு பரி எல்லாம்- நிறம் விளங்குகின்ற குதிரைகள்
எல்லாம்; ஆடல் தீர்ந்தன – வலிமை குறைந்தனவாய்; வளை
கழுத்து அற்றன- வளைந்த கழுத்து இல்லாதனவாய்; அதிர்
பெருங்குரல் நீத்த- ஒலிக்கின்ற பெருங்குரலை விட்டனவுமாய்;
தாள் துணிந்தன- தாள் துண்டுபட்டனவுமாய்; தறுகண்
வெங்கரி நிரை- அஞ்சாமை உடைய கொடிய யானைக்
கூட்டங்களால்; தாங்கிய பிணத்து ஓங்கல் – தோன்றிய
பிணமலையின்; கோடு அமைந்த- கரை அமைந்த; வெங்குருதி
நீர் ஆறுகள் – வெப்பமான குருதிநீர் ஆறுகளின்; சுழி தொறும்
கொணர்ந்து உந்தி ஓடல் அன்றி- சுழிகள் தோறும் கொண்டு
தள்ளப் பெற்று ஓடுவன அன்றி; நின்று உகள்வன கண்டிலர்-
உயிரோடு நின்று நடப்பனவற்றைக் கண்டிலர்.
——————
வேதநாயகன் வெங் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என்? உம்பரும், அரக்கர் வெங் களத்து வந்து உற்றாரைக் காதல்
விண்ணிடைக் கண்டனர்; அல்லது, கணவர்தம் உடல் நாடும் மாதர் வெள்ளமே
கண்டனர்; கண்டிலர், மலையினும் பெரியாரை. 321-
வேதநாயகன் – வேதங்களுக்கெல்லாம் தலைவனான இராமன்;
வெங்கணை வழக்கத்தின் மிகுதியை- கொடிய அம்புகளை எய்த முறையின் மிகுதியை; வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என்?- வெவ்வேறாக வகுத்துப் பிரித்துச் சொல்ல
வேண்டுவது எதற்கு?; உம்பரும்- தேவர்களும்; வெங்களத்து
வந்து உற்றாரை அரக்கர் – கொடிய போர்க் களத்திற்குப்
போரிட வந்து உற்றவர்களான அரக்கர்களை; காதல்
விண்ணிடைக் கண்டனர் அல்லது- விரும்பும் தன்மை உடைய
வானுலகத்தில் கண்டனரே அல்லாமல்; மலையினும் பெரியாரை-
மலையினும் மாணப் பெருந்தோற்றம் உடைய அந்த அரக்கர்களை;
கண்டிலர் – (உயிரோடு போர்க்களத்தில் கண்டிலர்); கணவர்
தம் உடல் நாடும்- போர்க்களத்தில் கணவரது உடலைத்
தேடிப் பார்க்கின்ற; மாதர் வெள்ளமே கண்டனர் – அரக்க
மாதர்களுடைய வெள்ளத்தையே கண்டனர்.
—————
பனிப் பட்டாலெனக் கதிர் வரப் படுவது பட்டது, அப் படை; பற்றார்
துனிப்பட்டார் எனத் துளங்கினர் இமையவர்; ‘யாவர்க்கும் தோலாதான்
இனிப் பட்டான்’ என, வீங்கின அரக்கரும் ஏங்கினர்; ‘இவன், அந்தோ,
தனிப் பட்டான்!’ என, அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன், தனி நாதன்: 322-
கதிர்வரப் பனிப்பட்டாலென- கதிரவன் வருகையால் பனி
இல்லாமல் ஒழிந்தது போல; அப்படை படுவது பட்டது- அந்த
அரக்கர் பெரும்படை இல்லாமல் பட்டு அழிந்தது; இமையவர் –
தேவர்கள்; பற்றார் துனிப்பட்டார் எனத் துளங்கினர் –
பகைவர்கள் வெறுப்படைந்தார்கள் என மகிழ்ச்சியால்
விளக்கம் பெற்றார்கள்; யாவர்க்கும் தோலாதான் –
எவருக்கும் தோலாதவனான கும்பகருணன்;இனிப் பட்டான் என-
இனி இறந்து படுவான் என; வீங்கின அரக்கரும் ஏங்கினர் –
மகிழ்ந்த அரக்கர்களும் ஏக்கமுற்றார்கள்; தனிநாதன் –
ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; இவன் அந்தோ தனிப்பட்டான்
என- இந்தக் கும்பகருணன் ஐயோ தனிமையாக ஆகிவிட்டான் என்ற இரக்கத்தால்; அவன் முகம்
நோக்கி ஒன்று உரைத்தனன்- அவனுடைய முகத்தைப் பார்த்து
ஒன்று கூறத் தொடங்கினான்.
———-
இராமன் கும்பகருணன் உரையாடல்
‘ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை; எதிர் ஒரு தனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவென்;
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின், போர் புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து, அம்மா! 323
ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை-
படைக்கலங்களுடன் எதிர்க்க வல்ல பெருந்துணையான படைகளை
இழந்தாய்;ஒரு தனி எதிர்நின்றாய் – தன்னந் தனியனாய் எதிரே
நின்றாய்; நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் – நீதிநெறி
தவறாத வீடணனுடன் பிறந்தனை ஆதலின்; நின் உயிர் நினக்கு
ஈவென் – உன் உயிரை உனக்குத் தருவேன்; போதியோ-
இப்போது இலங்கைக்குத் திரும்பிப் போய் விடுகிறாயா?; பின்றை
வருதியோ- பின்பு மீண்டும் வருகிறாயா?; அன்று எனின்
போர் புரிந்து இப்போதே சாதியோ?- அல்ல எனின் போர்
செய்து இப்போதே இறந்து படுகிறாயோ?; உனக்கு உறுவது
சமைவுறத் தெரிந்து சொல்லுதி- உனக்குப் பொருந்தியதை
அமைவுடன் ஆய்ந்து சொல்லுக.
——–
‘இழைத்த தீவினை இற்றிலது ஆகலின், யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை, அந்தகன் ஆணையின் வழி நின்றாய்;
பிழைத்ததால் உனக்கு அருந் திரு, நாளொடு; பெருந் துயில் நெடுங் காலம்
உழைத்து வீடுவது ஆயினை; என் உனக்கு உறுவது ஒன்று? உரை’ என்றான். 324-
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் – நீ முன்பு
செய்துள்ள தீவினை நீங்கவில்லை ஆதலால்; யான் உனை
இளையோனால் அழைத்த போதினும் வந்திலை- நான்
உன்னை இளையவனாகிய வீடணன் மூலம் அழைத்த போதும்
வந்திடாமல்; அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – யமனது
ஆணைக்கு உட்பட்டு நின்றாய்; உனக்கு அருந்திரு நாளொடு
பிழைத்ததால் – நீ யான் அழைத்து வாராமையால்
பெருஞ்செல்வத்தையும்வாழ்நாளையும் தவற விட்டனை;
பெருந்துயில் நெடுங்காலம் உழைத்து வீடுவது ஆயினை-
பெருந்துயிலை நெடுங்காலம் செய்து இறப்பதற்கு ஒருப்பட்டு
நின்றாய்; என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் –
உன் மனத்தில் உறுவது எதுவோ அதனைச் சொல் என்றான்
இராமன்.
—————
‘மற்று எலாம் நிற்க; வாசியும், மானமும் மறத்துறை வழுவாத
கொற்ற நீதியும், குலமுதல் தருமமும் என்று இவை குடியாகப்
பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து, தன் பெருஞ் செவி மூக்கோடும்
அற்ற எங்கைபோல், என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா! 325-
(அது கேட்ட கும்பகருணன்) மற்று எலாம் நிற்க- நீ கூறிய
மற்றவைகள் எல்லாம் இருக்கட்டும்; வாசியும் – மிக்குத்
தோன்றுகின்ற சிறப்பும்; மானமும் – மானமும்;மறத்துறை
வழுவாத கொற்ற நீதியும் – வீரத்துறையில் இருந்து தவறாத
வெற்றியோடு பொருந்திய நீதியும்; குலமுதல் தருமமும் –
குலத்துக்கு முதன்மையாக உள்ள அறங்களும்; என்று இவை
குடியாகப் பெற்ற நுங்களால்- என்னும் இவை குடியிருக்கும்
இடமாக உள்ள உங்களால்; எங்களைப் பிரிந்து- எங்களை
விட்டுப் பிரிந்து போய்; தன் பெருஞ்செவி மூக்கோடும் அற்ற
எங்கை போல் – தன்னுடைய பெரிய காதுகளையும் மூக்கையும்
இழந்த எமது தங்கையைப் போல; என் முகம் காட்டி நின்று
ஆற்றலென் உயிர் – என் முகத்தைக் காட்டிக்கொண்டு
உயிரோடு இருக்கப் பொறுக்கேன்.
—————-
‘நோக்கு இழந்தனர் வானவர், எங்களால்; அவ் வகை நிலை நோக்கி,
“தாக்கு அணங்கு அனையவள், பிறர் மனை” எனத் தடுத்தனென்;
“தக்கோர் முன் வாக்கு இழந்தது” என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்தபின் மீளல் என்றால், அது முடியுமோ?-முடியாதாய்! 326-
முடியாதாய் – அழிவு இல்லாதவனே; எங்களால் வானவர்
நோக்கு இழந்தனர் – எங்களால் தேவர்கள் பெருமை
இழந்தார்கள்; அவ்வகை நிலை நோக்கி – அந்த வகையான
நிலைமையினைப் பார்த்ததால்; தாக்கு அணங்கு அனையவள்
பிறர் மனை எனத் தடுத்தனென் – தீண்டி வருத்தும்
அணங்கை ஒத்த சீதை பிறர் மனைவி ஆகவே கைப்பற்றலாகாது
எனத் தடுத்தேன்; தக்கோர் முன் வாக்கு இழந்தது என்று
அயர்வுறுவேன் – அது ஏற்றுக் கொள்ளப் படாமையால்
தக்கவர்களுக்கு முன் பேசுவதற்கு உரிய வாக்குப் போய்விட்டது
என்று வருந்துகிறேன்; மாற்றாரால் – அப்படிப்பட்ட நான்
பகைவரால்; செவி தன்னோடு மூக்கு இழந்தபின் –
காதுகளையும் மூக்கையும் இழந்தபிறகு; மீளல் என்றால் அது
முடியுமோ – திரும்பி நகருக்குத் திரும்புவதென்றால் அது
முடியுமோ என்றவாறு.
————-
‘உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து, உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான், வானவர் நகை செய்ய,
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி,
எங்கை போல் எடுத்து அழைத்து, நான் வீழ்வெனோ, இராவணன் எதிர் அம்மா? 327-
உங்கள் தோள் தலை வாள் கொடு துணித்து- உங்களது
தோளையும் தலையையும் வாளைக் கொண்டு துணித்துஉயிர்
குடித்து- உயிரைக் குடித்து; எம்முன் உவந்து எய்த- எமக்கு
முன்னவனாகிய இராவணன் மகிழ்ந்து அடையுமாறு; நங்கை
நல்நலம் கொடுக்கிய வந்த நான் – சீதையின் அழகு நலத்தை
அவனுக்குக் கொடுப்பதற்காகப் போருக்கு வந்த நான்;
வானவர் நகை செய்ய – தேவர்கள் சிரிக்குமாறு; செங்கை
தாங்கிய சிரத்தொடும் – குருதிபட்டுச் சிவந்த கையால்
தலையைத் தாங்கிக்கொண்டு; கண்ணின் நீர் குருதியினொடு
தேக்கி- கண்ணீரைக் குருதியுடன் கலந்து தேங்கச் செய்து;
எங்கை போல் எடுத்து அழைத்து- எனது தங்கையைப் போல்
குரலெடுத்து அழைத்துக் கொண்டு; நான் இராவணன் எதிர்
வீழ்வெனோ- நான் இராவணன் எதிரில் சென்று வீழ்வதற்கு
உரியனோ (அல்லன்).
———–
‘ஒருத்தன், நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும், பழி ஓரும்
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ? சேவகர் கடன் ஓராய்?
செருத் திண் வாளினால் திறத் திறன் உங்களை அமர்த் துறைச் சிரம் கொய்து
பொருத்தினால், அது பொருந்துமோ? தக்கது புகன்றிலைபோல்’ என்றான். 328-
நீ ஒரு தனி உலகு மூன்றிற்கும்- நீ ஒப்பற்ற சிறந்த மூன்று
உலகிற்கும்; ஒருத்தன்- ஒப்பற்ற தனி முதல்வன்; ஆயினும் –
—————
கும்பகருணன்-இராமன் பெரும்போர்
என்று, தன் நெடுஞ் சூலத்தை இடக்கையின் மாற்றினன்; வலக் கையால்
குன்று நின்றது பேர்த்து எடுத்து, இரு நிலக் குடர் கவர்ந்தெனக் கொண்டான்,
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல, சேவகன் செனி நேரே,
‘வென்று தீர்க!’ என விட்டனன்; அது வந்து பட்டது மேல் என்ன, 329-
ஆனாலும்; பழி ஒரும் கருத்தினால் வரும் சேவகன்
அல்லையோ- பிறர்க்கு வரும் பழியை ஆராய்ந்து அறியும்
மனக்கருத்து உள்ள வீரனல்லையோ?;சேவகர் கடன் ஓராய்-
எனினும் வீரர் தம் கடமையை எண்ணிப் பாராதவனாய்
உள்ளாயே; உங்களை செருத்திண் வாளினால் – உங்களைப்
போர்க்களத்தில் வலிய வாளினால்; திறத்திறன் அமர்த்துறை
சிரம் கொய்து- துண்டம் துண்டமாகப் போரில் தலையை
அறுத்து; பொருத்தினால் அது பொருந்துமோ-பொருத்தினால்
அது பொருந்துமோ?; தக்கது புகன்றிலை போல் என்றான் –
நீ தகுதியானதைச் சொல்லவில்லை என்றான் கும்பகருணன்.
————–
அனைய குன்று எனும் அசனியை, யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை,
தினையும் மாத்திரை துணிபட, முறை முறை சிந்தினன், சரம் சிந்தி. 330-
என்று – என்று சொல்லித்; தன் நெடுஞ்சூலத்தை
இடக்கையின் மாற்றினன் – தனது வலக்கையில் இருந்த
நெடுஞ்சூலத்தை இடக்கைக்கு மாற்றிக் கொண்டு;
வலக்கையால் – வலது கையினால்; இருநிலக் குடர்
கவர்ந்தென – பெரிய நிலத்தின் குடலைக் கவர்ந்தாற்போல்;
குன்று நின்றது பேர்த்து எடுத்து – அருகில் இருந்த
குன்றினைப் பெயர்த்து எடுத்து; கொண்டான் – கையில்
கொண்டவனாய்; விண்ணொடும் பொறியொடும் தீச்செல சென்று – வானத்தில் சென்று தீப்பொறியும் தீயும்
வெளிப்பட; சேவகன் செனி நேரே வென்று தீர்க என
விட்டனன் – வீரனாகிய இராமனுடைய தலைக்கு நேராக
வெற்றி கொண்டு தீர்க என்று வீசி விட்டான்; அது வந்து
பட்டது மேல் என்ன -அது வந்து இராமன் மேல் பட்டது
என்று எண்ணுமாறு நெருங்க; (தொடரும். குளகம்).
————–
அண்ணல் வில் கொடுங் கால் விசைத்து உகைத்தன, அலை கடல் வறளாக
உண்ணகிற்பன, உருமையும் சுடுவன, மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன, பிழைப்பு இலா மெய்யன, மேல் சேர்ந்த
கண்ணுதல் பெருங் கடவுள்தன் கவசத்தைக் கடந்தில கதிர் வாளி. 331-
அண்ணல் – பெருமையில் சிறந்த இராமனுடைய; வில்
கொடுங்கால் விசைத்து உகைத்தன- வில்லினது வளைந்த
காலிடத்தில் இருந்து வேகமாகச் செல்லுமாறு விடுத்த; கதிர்
வாளி- ஒளி பொருந்திய அம்புகள்; அலை கடல் வறளாக
உண்ணகிற்பன- அலையையுடைய கடல் வறண்டு போகுமாறு
நீரைப் பருகும் தன்மை பெற்றனவும்; உருமையும் சுடுவன
– இடியையும் சுட வல்லனவும்; மேருவை உருவிப் போய்
விண்ணகத்தையும் கடப்பன – மேரு மலையை ஊடுருவிச்
சென்று வானிடத்தையும் கடப்பனவும்; பிழைப்பு இலா மெய்யன-
தவறில்லாமல் பயனை உண்மையில் விளைவிப்பனவும்; மேல்
சேர்ந்த – ஆக இருப்பினும் கும்பகருணனது உடல்மீது
பொருந்தியுள்ள; கண்ணுதல் பெருங் கடவுள் தன் கவசத்தைக்
கடந்தில – நெற்றிக் கண்ணனாகிய சிவபிரான் ஈந்த கவசத்தைத்
துளைக்க மாட்டாவாயின.
—————
தாக்குகின்றன நுழைகில; தலையது, தாமரைத் தடங் கண்ணான்
நோக்கி, ‘இங்கு இது சங்கரன் கவசம்’ என்று உணர்வுற நுனித்து உன்னி,
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன்; அது சிந்தி
வீக்கு இழந்தது வீழ்ந்தது, வரை சுழல் விரி சுடர் வீழ்ந்தென்ன. 332-
தாக்குகின்றன – தான் விடுத்த அம்புகள் கவசத்தின் மீது
மோதுகின்றன எனினும்; தலையது நுழைகில – நுனிகள்
கவசத்தினுள் நுழைய மாட்டாதனவான தன்மையை; தாமரைத்
தடங்கண்ணான் நோக்கி – தாமரைத் தடங்கண்ணன் ஆன
இராமன் பார்த்து; இங்கு இது சங்கரன் கவசம் என்று-
இக்கவசம் சிவன் அளித்தது என்று; உணர்வுற நுனித்து
உன்னி- உணர்வு தோன்ற அதை நுணுகி எண்ணிப் பார்த்து;
அங்கு அவன் அடு படை ஆக்கி – அப்போது சிவனது
கொல்லும் தன்மையுள்ள அம்பினை வில்லில் பூட்டி; தொடுத்து
விட்டு அறுத்தனன் – தொடுத்துவிட்டு அழித்தனன்; அது
சிந்தி வீக்கு இழந்தது – அச்சிவ கவசம் கட்டுக்
குலைந்ததாகி; வரைசூழ் விரிசுடர் வீழ்ந்தென்ன வீழ்ந்தது
– மேருமலையை வலமாக வரும் கதிரவன் வீழ்ந்தது போல்
ஒளியுடன் பூமியில் விழுந்தது.
————–
காந்து வெஞ் சுடர்க் கவசம் அற்று உகுதலும், கண்தொறும் கனல் சிந்தி,
ஏந்து வல் நெடுந் தோள் புடைத்து ஆர்த்து, அங்கு ஓர் எழு முனை வயிரப் போர்
வாய்ந்த வல் நெடுந் தண்டு கைப்பற்றினன்; ‘வானரப் படை முற்றும்
சாந்து செய்குவனாம்’ என முறை முறை அரைத்தனன், தரையொடும். 333-
வெஞ்சுடர் காந்து கவசம் – வெப்பமான ஒளியை
வெளியிடுகிற கவசம்; அற்று உகுதலும் – அறுபட்டுச் சிந்திய
அளவில்; கண் தொறும் கனல் சிந்தி – தன் இரு
கண்களிலும் நெருப்புப் பொறியைச் சிந்தி; ஏந்து வல்நெடுந்
தோள் புடைத்து ஆர்த்து- ஓங்கிய வலிய நெடிய தோளைத
தட்டிப் பேரொலி செய்து; அங்கு – அப்போது; எழுமுனை
வயிரப் போர் வாய்ந்த ஓர் வல்நெடுந் தண்டு
கைப்பற்றினன் – இரும்பு முனை உடையதும் உறுதியுடையதும்,
போர்க்கு வாய்த்ததும் ஒப்பற்றதுமான வலிய நெடிய தண்டாயுதத்தைக் கையில் கொண்டவனாய்; வானரர்
படை முற்றும் சாந்து செய்குவனாம் என- குரங்குப்படை
முழுவதையும் சாந்து போல் ஆக்கி விடுவான் என்று கண்டோர்
கருதுமாறு; முறை முறை தரையோடும் அரைத்தனன் – முறை
முறையாகத் தரையோடும் அரைக்கலானான்.
——-
பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம், பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம், சென்று புக்கு உருவாது மறைப்ப ஆயிரம்,
வருவன ஆயிரம், வடிக் கணை என்றாலும், பிறப்ப ஆயிடைத்
தெழித்துறத் திரிந்தனன், கறங்கு எனப் பெருஞ் சாரி. 334-
பறப்ப ஆயிரம் – வானத்தில் பறப்பவை ஆயிரம்; படுவன
ஆயிரம் – பகைவர் மேல் படுவன ஆயிரம்; பகட்டு எழில்
அகல் மார்பம் திறப்ப ஆயிரம் – பெருமையும் அழகும்
பெற்று அகன்ற மார்பைப் பிளப்பன ஆயிரம்; திரிவன ஆயிரம்
– பறந்து திரிவன ஆயிரம்; சென்று புக்கு உருவாது மறைப்ப
ஆயிரம் – பகைவர் உடம்பில் போய் உள் புகுந்து
தொளைத்திடாமல் மறைந்தன ஆயிரம்; வருவன ஆயிரம் –
இராமன் வில்லில் இருந்து வெளிப்பட்டு வருவன ஆயிரம்;
வடிக்கணை என்றாலும் – கூரிய அம்புகள் என்றாலும்;
பிறப்ப – வாயிடைப் பேரொலி தோன்ற; ஆயிடை- அங்கே;
தெழித்து – அதட்டிக்கொண்டு; கறங்கு எனப் பெருஞ்சாரி
உறத் திரிந்தனன் – காற்றாடி போல் பெருஞ்சாரி மிகத்
திரிந்தனன் என்க.
———————-
‘தண்டு கைத்தலத்து உளது எனின், உளதன்று தானை’ என்று, அது சாயக்
கொண்டல் ஒத்தவன், கொடுங் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்;
கண்டம் உற்றது மற்று அது; கருங் கழல் அரக்கனும், கனன்று, ஆங்கு ஓர்
மண்டலச் சுடராம் எனக் கேடகம் வாங்கினன், வாளோடும். 335-
தண்டு கைத்தலத்து உனது எனின்- தண்டாயுதம் இவனது
கையில் உள்ளதானால்; தானை உளதன்று என்று- குரங்குச்
சேனை உயிரோடு இருத்தல் முடியாது என்று எண்ணி; அது
சாய – அந்தத் தண்டு அ ழியுமாறு; கொண்டல் ஒத்தவன் –
கருமேகத்தை ஒத்த நிறத்தவன் ஆகிய இராமன்; ஒரு
தொடையினில் – ஒரு தொடுப்பினில்; கொடுங்கணை பத்துக்
கோத்து எய்தான்- கொடிய அம்புகள் பத்தினை வில்லில்
கோத்து எய்தான்; மற்று அது கண்டம் உற்றது- அதனால்
அந்தத் தண்டாயுதம் துண்டாகி விட்டது; கருங்கழல்
அரக்கனும் – அதனால் கரிய கழலை அணிந்த அரக்கன்
ஆகிய கும்பகருணனும்; கனன்று – சினம் கொண்டு;
ஆங்கு – அப்போது; ஓர் மண்டலச் சுடராம் என
வாளோடும் கேடகம் வாங்கினன் – ஒப்பற்ற பூமியில்
விளங்கும் கதிரவன் என்னுமாறு ஒளியுடை வாளும் கேடகமும்
கைக்கொண்டான்.
————-
வாள் எடுத்தலும், வானர வீரர்கள் மறுகினர், வழிதோறும்
தாள் எடுத்தனர், சமழ்த்தனர்; வானவர் தலை எடுத்திலர், தாழ்ந்தார்;
‘கோள் எடுத்தது, மீள’ என்று உரைத்தலும், கொற்றவன், ‘குன்று ஒத்த
தோள் எடுத்தது துணித்தி’ என்று, ஒரு சரம் துரந்தனன், சுரர் வாழ்த்த. 336-
வாள் எடுத்தலும்- கும்பகருணன் வாள் படையை எடுத்த
உடனே; வானர வீரர்கள் மறுகினர் – குரங்குப் படை வீரர்கள்
மனம் கலங்கி; வழி தோறும் தாள் எடுத்தனர் – வழி தோறும்
கால் விசைத்து ஓடினர்; வானவர் சமழ்த்தனர் தலை
எடுத்திலர் தாழ்ந்தார் – தேவர்கள் போர்க்களத்தினராய்த்
தலை தூக்க முடியாது தலையைத் தொங்கவிட்டனர்; கோள்
எடுத்தது மீள – உயிர்க் கொள்ளை தொடங்கியது மீளவும்;
என்று உரைத்தலும் – என்று துணைவர்கள் சொல்லலும்;
கொற்றவன்- வெற்றி பொருந்திய இராமன்; எடுத்தது- வாளை
எடுத்ததான; குன்று ஒத்த தோள் துணித்தி என்று- குன்று
ஒத்த தோளைத் துணிப்பாயாக என்று சொல்லி; ஒருசரம் சுரர் வாழ்த்த துரந்தனன்- ஒப்பற்ற
அம்பினைத் தேவர்கள் வாழ்த்தச் செலுத்தினான்.
————–
கும்பகருணன் கை அறுபடல்
அலக்கணுற்றது தீ வினை; நல்வினை ஆர்த்து எழுந்தது; வேர்த்துக்
கலக்கமுற்றனர், இராக்கதர்-‘கால வெங் கருங் கடல் திரை போலும்
வலக் கை அற்றது, வாளொடும்; கோளுடை வான மா மதி போலும்;
இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும்’ என்று எழுந்து ஓடி. 337-
தீவினை அலக்க ணுற்றது- தனக்கு உதவும் கும்பகருணன்
கை அறப் போவதால் தீவினை துன்பமடைந்தது; நல்வினை
ஆர்த்து எழுந்தது – நல்வினை மகிழ்ச்சியால் பேரொலி
யெழுப்பியது; கால வெங்கருங்கடல் திரை போலும்
– உகமுடிவுக்காலத்தில் பொங்கி எழுகின்ற கருங்கடலின்
அலையைப் போன்ற; வலக்கை – வலக்கையானது; கோளுடை
வானமாமதி போலும் வாளொடும் அற்றது- இராகுவினால்
பற்றப்பட்டுக் குறைபடுதலை உடைய வானத்து நில போன்ற
வாளோடு அறுபட்டு வீழ்ந்தது; அவ் இலங்கைக்கும்
இராவணன் தனக்கும் – அதனால் இலங்கைப் பெருநகருக்கும்
இராவணனுக்கும்; இலக்கை அற்றது – பாதுகாவல் நீங்கியது;
என்று எழுந்து ஓடி- என்று சொல்லிக்கொண்டு எழுந்து ஓடி;
இராக்கதர் வேர்த்துக் கலக்கமுற்றனர் – அரக்கர்கள் உடல்
வியர்த்து மனம் கலங்கினர்.
—————
மற்றும், வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ, மறத்தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது-பேர் எழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெங் கையினால் எடுத்து, அவன் ஆர்த்து ஓடி
எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்து ஓடின வானரக் குலம் எல்லாம்? 338-
பேர் எழில் தோளோடும் – மிக்கு எழுந்து வளர்ந்த
அழகிய தோளுடன்; அற்று வீழ்ந்த கை- அறுபட்ட வீழ்ந்த
வலக்கையை; அறாத வெங்கையினால் எடுத்து- அறுபடாது
உள்ள கொடுமையான இடக்கையினால் எடுத்துக்கொண்டு;
அவன் ஆர்த்து ஓடி- அக்கும்பகருணன் பேரொலி எழுப்பிக்
கொண்டு ஓடி; எற்ற எயிறு இளித்து ஓடின- அடித்ததனால்
பல்லை இளித்துக் கொண்டு ஓடின; வானரக் குலமெல்லாம்
– குரங்குக் கூட்டங்கள் எல்லாம்; வீழ்ந்தன- உயிரொழிந்து
வீழ்ந்தன; மறத்தொழில் இவன் மாடு பெற்று நீங்கினர்
ஆம்- இவ்வாறு வீரப் போரிட்ட இவனிடத்து வீரத்தை இரந்து
பெற்றவர்கள் ஆம்;எனின் அல்லது- தவிரப் பிறர்; மற்றும்
வீரர்கள் உளர் எனற்கு எளிதரோ- வீரர்களாக வேறு
பிறந்தவர் உளர் என்று சொல்லுதல் எளிமையானதோ அன்று.
——————-
வள்ளல் காத்து உடன் நிற்கவும், வானரத் தானையை மறக் கூற்றம்
கொள்ளை கொண்டிட, பண்டையின் மும்மடி குமைகின்ற படி நோக்கி,
‘வெள்ளம் இன்றொடும் வீந்துறும்’ என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப,
உள்ள கையினும் அற்ற வெங் கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம். 339-
வள்ளல் காத்து உடன் நிற்கவும்- வள்ளல் தன்மை உள்ள
இராமன் சேனையைக் காத்து உடன் இருக்கவும்; வானரத்
தானையை – குரங்குச் சேனையை; மறக்கூற்றம் கொள்ளை
கொண்டிட- வலிமை உடைய யமன் கொள்ளை கொள்ளும்படி;
பண்டையின் மும்மடி குமைக்கின்ற படி நோக்கி- முன்பு
அழித்ததை விட மூன்று மடங்கு அழிக்கின்ற தன்மையைப் பார்த்து;உலகு
எல்லாம் – உலகோர் எல்லாம்; வெள்ளம் இன்றொடும்
வீந்துறும் என்பதோர் விம்மலுற்று- குரங்கு வெள்ளமானது
இன்றே அழிந்து போய்விடும் என்று கருதுவதால் துன்பத்தைக்
கொண்டு; உயிர் வெம்ப – உயிர் துடிக்க; உள்ள கையிலும்
அற்ற வெங்கரத்தையே அஞ்சின- அற்றுப் போகாமல் உள்ள
கையினும், அற்றுப் போன கொடிய கரத்தைக் கண்டே
பயந்தனர்.
————–
மாறு வானரப் பெருங் கடல் ஓட, தன் தோள் நின்று வார் சோரி
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட், மேல் அமரரும் இரிந்து ஓட,
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட,
ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன், மழைக் குலம் இரிந்து ஓட. 340-
மாறு வானரப் பெருங்கடல் ஓட- பகையாக உள்ள வானரப்
பெரும் படையாகிய கடல் நிலை கெட்டு ஓட; தன் தோள் நின்று
வார் சோரி ஆறு- தன் தோளில் இருந்து வடிகின்ற
குருதியாகிய ஆறு; விண்தொடும் பிணம் சுமந்து ஓட
– விண்ணைத் தொடுமளவு போர்க்களத்தில் குவிந்துள்ள
பிணங்களைச் சுமந்து கொண்டு ஓட; மேல் அமரரும் இரிந்து
ஓட- வானத்தில் உள்ள தேவர்களும் நிலை கெட்டு ஓட;
இலங்கையும் விலங்கலும் பறவையும் கூறு கூறுபட்டு குலைந்து
ஓட- இலங்கை நகரும் அங்குள்ள மலைகளும் பறவை முதலிய
உயிரினங்களும் குருதி ஆற்றின் வேகத்தால் பலவகையாகப் பிரிந்து
நிலைகுலைந்து ஓட; மழைக்குலம் இரிந்தோட- மேகக் கூட்டம்
நிலை கெட்டு ஓட; ஏறு சேவகன் மேல் எழுந்து ஓடினன் –
சிங்கவேறு போன்ற இராமன் மேல் எழுந்தோடினன் கும்பகருணன்
என்க.
——————
‘ஈற்றுக் கையையும் இக் கணத்து அரிதி’ என்று இமையவர் தொழுது ஏத்த,
தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும், தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட, நெடுங் கொற்றவன் கொலை அம்பால்
வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன், வேறும் ஓர் அணை மான். 341-
ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி என்று- மற்றொரு
கையையும் இப்பொழுதே அரிந்திடுவாய் என்று; இமையவர்
தொழுது ஏத்த- தேவர்கள் கைதொழுது துதிக்க; தோற்றுக்
கையகன்று ஒழிந்தவன் – இராமனுக்கு முன் வலி தோற்று
வலக்கை நீங்கி ஒழிந்தவனாகிய கும்பகருணனுடைய;நாள் அவை
தொலையவும் – வாழ்நாள்கள் கெடுமாறும்; தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட – இதுவரை அரக்கர்
கண்முன் தோன்றியிராத யமனுக்கு ஐயமும் அதனால் வரும்
அச்சமும் நீங்குமாறும்; நெடுங்கொற்றவன் – மிக்க வெற்றிக்குரிய
இராமன்; கொலை அம்பால்- கொல்லும் தன்மை உள்ள தன்
அம்பால்; வேற்றுக் கையையும்- மற்றொரு கையையும்; வேறும்
ஓர் அணை மான வேலையில் இட்டனன் – வேறு
அணையென்று தோன்றுமாறு கடலில் இட்டனன்.
—————
சந்திரப் பெருந் தூணொடுஞ் சார்த்தியது, அதில் ஒன்றும் தவறு ஆகாது,
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழக் கடைவுறும் அந் நாளில்,
சுந்தரத் தடந் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட,
மந்தரத்தையும் கடுத்தது,-மற்று அவன் மணி அணி வயிரத் தோள். 342-
சுந்தரத் தடந் தோள்வளை- அழகிய பெரிய தோளில்
அணிந்த வளையானது; மாசுணம் சுற்றிய தொழில் காட்ட-
பாம்பு சுற்றிய தன்மையைத் தோற்றுவிக்க; மற்று அவன் மணி
அணி வயிரத் தோள்- அந்தக் கும்பகருணனுடைய மணி பதித்த
அணிகலன்களை அணிந்த வயிரத் தோள்கள்; சந்திரப் பெருந்
தூணொடுஞ் சார்த்தியது – சந்திரனாகிய பெரிய தூணோடு
சார்த்தியதாய்; அதில் ஒன்றும் தவறு ஆகாது- கடைகின்ற
அந்த மத்தின் தன்மையில் குறைவு படாததாய்; அந்தரத்தவர்
அலைகடல் அமுது எழக் – தேவர்கள் அலைகளை உடைய
பாற்கடலில் அமுது தோன்றுமாறு; கடைவுறும் அந்நாளில்-
கிடைகின்ற அந்நாளில்; மந்தரத்தையும் கடுத்தது- மந்தர
மலையையும் ஒத்தது.
————–
சிவண வண்ண வான் கருங் கடல் கொடு வந்த செயலினும், செறி தாரை
சுவண வண்ண வெஞ் சிறையுடைக் கடு விசை முடுகிய தொழிலானும்,
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும், அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது; மந்தரம் ஒத்தது, அவ் உயர் பொன் தோள். 343-
சிவண வண்ண வான் கருங்கடல் கொடு வந்த செயலினும் –
தனக்குத்தானே ஒத்த நிறமுடைய அழகிய பெரிய கடலில்
கொண்டு சேர்த்த செயலாலும்; செறி தாரை சுவண வண்ண
வெஞ்சிறை உடைக் கடுவிசை முடுகிய தொழிலானும்-
நெருங்கிய ஒளித்தொகுதியாகிய பொன்னிறத்தைக் கொண்ட
விரும்பத்தக்க சிறகுடன் மிக்க விரைவுடன் விரைந்து சென்ற
செயலாலும்; அவண அண்ணலது ஏவலின் இயற்றிய
அமைவினும் – அவ்விடத்து இராமபிரானது கட்டளைப்படி
தொழில் செய்த தன்மையினாலும்; அயில்வாளி உவண
அண்ணலை ஒத்தது- இராமபிரானது கூர்மையான அம்பு
கருடனை ஒத்தது; அவ் உயர் பொன் தோள் மந்தரம்
ஒத்தது- அக்கும்பகருணனுடைய உயர்ந்த அழகிய தோள்
மந்தர மலையை ஒத்தது.
—————-
கும்பகருணன் கால்களை இழத்தல்
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுறத் தொளைத்து, ஒரு பணை ஆக்கி,
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி,
முழக்கினாலென, முழங்கு பேர் ஆர்ப்பினான், வானர முந்நீரை
உழக்கினான், தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக. 344-
பழக்க நாள் வரும் மேருவை- வழக்கமாகச் சூரியன் வலமாக
வரும் மேருமலையை; உள்ளுறத் தொளைத்து ஒரு பணை ஆக்கி-
உள்ளே பொருத்தமாக துளைத்து ஒருமுரசம் செய்து; வழக்கினால்
உலகு அளந்தவன் – முறைமையினால் உலகை அளந்தவனான
திரிவிக்கிரம அவதாரமாகிய கடவுள்; அமைத்தது ஓர்வான்
குணில் வலத்து ஏந்தி- அமைத்ததாகிய பெரிய குறுந்தடி ஒன்றை
வலக்கையில் ஏந்தி; முழக்கினாலென முழங்கு பேர்
ஆர்ப்பினான் – அடித்து முழக்கியதை ஒத்த பேர் ஒலியைச்
செய்தவன் ஆகிய கும்பகருணன்; தசை, தோல், எலும்பு எனும்
இவை குருதியொடு ஒன்றாக – தசை, தோல் எலும்பு என்னும்
இவை குருதியோடு சேர்ந்து ஒன்றுபடும்படி; வானர முந்நீரை
உழக்கினான் – வானரப் படையாகிய கடலைக் கலக்கினான்.
—————
நிலத்த கால், கனல், புனல், விசும்பு, இவை முற்றும் நிருதனது உரு ஆகி,
கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென உயிர்களைக் குடிப்பானை,
சலத்த காலனை, தறுகணர்க்கு அரசனை, தருக்கினின் பெரியானை,
வலத்த காலையும், வடித்த வெங் கணையினால் தடிந்தனன்-தனு வல்லான். 345-
நிலத்த கால், கனல், புனல் விசும்பு இவை முற்றும் –
நிலத்தொடு காற்று, நெருப்பு, நீர் ஆகாயம் என்கிற இவை
முழுவதும்; நிருதனது உரு ஆகி- அரக்கனது வடிவம் பெற்று;
கொலத் தகாதது ஓர் வடிவு கொண்டாலென- கொல்ல முடியாத
ஒரு உருவைக் கொண்டது போலத் தோன்றி; உயிர்களைக்
குடிப்பானை – உயிர்களை அழிப்பவனும்; சலத்த காலனை- சினம்
கொண்ட யமன் போன்றவனும்; தறுகணர்க்கு அரசனை-
அஞ்சாமையுடையோர்க்கு அரசன் போன்றவனும்; தருக்கினில்
பெரியானை- செருக்கினில் மிக்கவனும் ஆகிய கும்பகருணனது,
வலத்த காலையும்-வலது காலையும்; வடித்த வெங்கணையினால் –
கூரிய கொடிய அம்பினால்; தனுவல்லான் தடிந்தனன்
– வில்லாளியான இராமன் அறுத்து வீழ்த்தினான்.
——————
பந்தி பந்தியின் பற் குலம் மீன் குலம் பாகுபாடு உற, பாகத்து
இந்து வெள் எயிறு இமைத்திட, குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர்
அந்தி வந்தென, அகல் நெடு வாய் விரித்து, அடி ஒன்று கடிது ஓட்டி,
குந்தி வந்தனன், நெடு நிலம் குழி பட, குரை கடல் கோத்து ஏற. 346-
பந்தி பந்தியின் பற்குலம் மீன்குலம் பாகுபாடு உற-
வரிசை வரிசையாக உள்ள பற்களின் கூட்டம் நட்சத்திரக்
கூட்டம் போல் பாகுபாடு உற்று விளங்க; பாகத்து இந்து வெள்
எயிறு இமைத்திட – அதனிடையே பிறைச் சந்திரன் போல்
நீண்ட கோரைப் பல் விளங்கித் தோன்ற; குருதியாறு
ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் அந்தி வந்தென-
குருதியாற்று ஒழுக்கினால் எழுகின்ற செம்மை செவ்வானத்தை
உடைய அந்திப் பொழுது வந்தது போல் தோன்ற அகல் நெடு
வாய் விரித்து- தன் அகன்ற பெரிய வாயை விரித்துக்கொண்டு;
நெடுநிலம் குழிபட – நெடிய நிலம் குழிபட; குரை கடல்
கோத்து ஏற – அதனால் ஒலிக்கின்ற கடல் நீர் நிலத்தின் மீது
பரவ; அடி ஒன்று கடிது ஒட்டி குந்தி வந்தனன் – ஒற்றைக்
காலடி மேல் எழுந்து வலிமையாகப் பூமியில் பொருந்துமாறு
நொண்டிக் கொண்டு போரிட வந்தான்.
—————
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து, மாடு உள எலாம் வளைத்து ஏந்தி,
சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து, மேல் தொடர்கின்ற தொழிலானை,
ஏறு சேவகன், எரி முகப் பகழியால், இரு நிலம் பொறை நீங்க,
வேறு காலையும் துணித்தனன், அறத்தொடு வேதங்கள் கூத்தாட. 347-
மாறுகால் இன்றி- மற்றொரு கால் இல்லாமல்; வானுற
நிமிர்ந்து – வானத்தைப் பொருந்துமாறு ஓங்கி; மாடு உள
எலாம் – பக்கத்தில் உள்ளவைகளை எல்லாம்; வளைத்து ஏந்தி
– நாவால் வளைத்துக் கடித்து ஏந்திய வண்ணம்; சூறை மாருதம்
ஆம் என- கடுங்காற்று ஆகும் என்று கண்டோர் கூறுமாறு;
சுழித்து மேல் – வட்டமிட்டு மேல்; தொடர்கின்ற
தொழிலானை – கொல்லும் தொழிலைத் தொடர்கின்ற
கும்பகருணனை; ஏறு சேவகன்- ஆண் சிங்கம் போன்றவனாகிய
இராமன்; எரிமுகப் பகழியால் – நெருப்பை நுனியில் கொண்ட
அம்பால்; இருநிலம் பொறை நீங்க- பெரிய நிலத்தின்
பாரம் குறையும்படி; அறத்தொடு வேதங்கள் கூத்தாட – அறக்கடவுளும் வேதங்களும் கூத்தாட; வேறு
காலையும் துணித்தனன்- மற்றொரு காலையும் துணித்தனன்.
————-
கை இரண்டொடு கால்களும் துணிந்தன; கரு வரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறாயிரம் பகழியால் வெரிந் உறத் தொளை போய;
செய்ய கண் பொழி தீச் சிகை இரு மடி சிறந்தன; தெழிப்போடும்,
வய்யம் வானிடை மழையினும் பெருத்தது, வளர்ந்தது, பெருஞ் சீற்றம். 348-
கை இரண்டொடு கால்களும் துணிந்தன- கை இரண்டுடனே
கால்கள் இரண்டும் துண்டுபட்டன; கருவரை பொருவும் தன் மெய்
– தன்னுடைய பெரிய மலையை ஒத்த உடல்; – இரண்டு நூறாயிரம்
பகழியால் – இருநூறு ஆயிரம் அம்புகளால்; வெரிந் உறத்
தொளை போய- முதுகுவரை மிகுதியாகத் துளையாக்கியது; செய்ய
கண்பொழி தீச்சிகை- சிவந்த கண்களில் இருந்து நெருப்பு
அனல்; இருமடி சிறந்தன – இரண்டு மடங்கு மிக்கது; பெருஞ்
சீற்றம் – மிக்க சினம்; தெழிப்போடும் – பேரொலியோடு;
வய்யம் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது – நில
உலகில் வானத்திடையில் தோன்றும் இடியொலி போல் மிக்கு
வளர்ந்தது.
—————-
கும்பகருணன் மலைகளைக் கவ்வி வானரங்களை அழித்தல்
பாதம் கைகளோடு இழந்தனன், படியிடை இருந்து, தன் பகு வாயால்,
காதம் நீளிய மலைகளைக் கடித்து இறுத்து எடுத்து, வெங் கனல் பொங்கி,
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசைகொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம், உருமின் வீழ் உயிர் என்ன, 349-
பாதம் கைகளோடு இழந்தனன்- கால்களையும் கைகளையும்
இழந்தவனாகிய கும்பகருணன்; வெங்கனல் பொங்கி- கொடுஞ்
சீற்றம் மிக்கு; படியிடை இருந்து – நிலத்திடத்திருந்து;
தன் பகுவாயால் – தன் பிளந்த பெரிய வாயினால்; காதம்
நீளிய மலைகளை- காதத்தளவு நீண்டு கிடக்கும் மலைகளை;
கடித்து இறுத்து எடுத்து- கடித்து ஒடித்து எடுத்து; மீது மீது தன்
அகத்து எழு காற்றினால் – மேலும் மேலும் தன் உள்ளிருந்து
எழும் பெருமூச்சாகிய காற்றினால்; விசை கொடு திசை செல்ல
– விரைவு கொண்டு திசைகளில் செல்லுமாறு; ஊத ஊதப்பட்டு-
ஊதுந்தொறும் ஊதுந்தொறும் அக்காற்றினால்; வானரம் உருமின்
வீழ் உயிர் என்ன உலந்தன – குரங்குப்படை இடியினால்
உயிரொழியும் உயிரினம் போல உயிரொழிந்தன.
——————
தீயினால் செய்த கண்ணுடையான், நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி,
பேயின் ஆர்ப்புடைப் பெருங் களம் எரிந்து எழ, பிலம் திறந்தது போலும்
வாயினால் செல, வீசினன்; வள்ளலும் மலர்க் கரம் விதிர்ப்புற்றான். 350-
தீயினால் செய்த கண்ணுடையான் – தீயினால்
செய்யப்பட்டாற் போன்ற சினத்தால் சிவந்த கண்களை
உடையவனான கும்பகருணன்; நெடுஞ் சிகையினால் திசை தீய-
தன்னிடம் இருந்து எவும் நெடிய நெருப்பு அனலால் திசைகள்
எல்லாம் கருக; வேயினால் திணி வெற்பு ஒன்று-
மூங்கில்களால் நெருங்கிய மலை ஒன்றினை; நாவினால்
விசும்புற வளைத்து ஏந்தி- நாவினால் வானத்தைப் பொருந்த
வளைத்து எடுத்து; பேயின் ஆர்ப்புடை பெருங்களம் எரிந்து
எழ – பேய்களின் பேரொலி கொண்ட பெரிய போர்க்களம்
எரிந்து விழுமாறு; பிலம் திறந்தது போலும் வாயினால்- குகை
திறந்தது போல் உள்ள வாயினால்; செல வீசினான்-
பெருந்தொலைவு வீசி எறிந்தான்; வள்ளலும் மலர்க்கரம்
விதிர்ப்புற்றான் – அதுகண்ட வள்ளலாம் இராமனும் தாமரை
மலர் போன்ற கை வியப்பால் அசையப் பெற்றான்.
——————-
உள் உணர்வு தோன்றிய கும்பகருணன் உரை
‘அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர்; அந்தோ! யான்
கையும் கால்களும் இழந்தனென்; வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்;
மையல் நோய்கொடு முடிந்தவன் நாள் என்று, வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது’ என்று, தன் உள்ளத்தின் உணர்ந்து, ஒரு துயருற்றான். 351-
அய்யன் வில் தொழிற்கு- பெருமையில் சிறந்த இராமனது
வில் தொழில் ஆற்றலுக்கு; ஆயிரம் இராவணர் அமைவிலர்-
ஆயிரம் இராவணர் இருந்தாலும் எதிர்க்கும் வலிமை
அமையாதவர் ஆவர்; அந்தோ யான் கய்யும் கால்களும்
இழந்தனென்- ஐயோ நான் கையையும் காலையும் இழந்து
விட்டேன்; வேறு இனி உதவ லாம் துணை காணேன்- இனி
வேறு உதவக்கூடிய வகையையும் காண்கிலேன்; மய்யல் நோய்
கொடு முடிந்தவன் – ஆசையாகிய நோயினால் இராவணன்
முடிந்தனன்; நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு-
வாழ்நாள் என்று எல்லையில்லாமல் வாழ்ந்த அவன்; உய்யுமாறு
அரிது- இனிமேல் உயிர் பிழைத்து இருத்தல் இல்லை; என்று
தன் உள்ளத்தின் உணர்ந்து- என்று தன் உள்ளத்தில் அறிந்து;
ஒரு துயருற்றான்- ஒப்பற்ற மனத்துன்பம் அடைந்தான்.
———-
சிந்துரச் செம் பசுங் குருதி திசைகள் தொறும் திரை ஆறா,
எந்திரத் தேர், கரி, பரி, ஆள், ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
சுந்தரப் பொன்-கிரி ஆண்மைக் களிறு அனையான், கண் நின்ற
சுந்தரப் பொன்-தோளானை முகம் நோக்கி, இவை சொன்னான்: 352-
சிந்துரச் செம் பசுங்குருதி- சிந்துரப் பொடி போன்ற
புதிய பசிய குருதி; திசைகள் தொறும் திரை ஆறா- திசைகள்
தோறும் அலைகளை உடைய ஆறாக ஓடி; எந்திரத் தேர் கரி பரி
ஆள்- பொறிகள் அமைந்த தேர்களையும் யானைகளையும்,
குதிரைகளையும் வீரர்களையும்; ஈர்த்து ஓடப் பார்த்திருந்த
– இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்த;
கந்தரம் பொன்கிரி – தலையை உடைய பொன்கிரியையும்;
ஆண்மைக் களிறு அனையான்- வீரம் பொருந்திய களிற்றையும்
ஒத்தவனான கும்பகருணன்; கண் நின்ற- தன் கண் எதிரில்
நின்ற; சுந்தரப் பொன் தோளானை- மிக அழகிய தோளினை
உடைய இராமனது; முகம் நோக்கி இவை சொன்னான்
– முகத்தைப் பார்த்து இச்சொற்களைக் கூறினான்.
—————
‘புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை
புக்க மைக் கடங் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர்!
இக் கடன்கள் உடையீர்! நீர் எம் வினை தீர்த்து, உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர் காக்கக் கடவீர், என் கடைக்கூட்டால். 353-
புக்கு அடைந்த புறவு ஒன்றின் பொருட்டாக- தன்னைச்
சரணாகதி அடைந்த புறா ஒன்றின் பொருட்டாக; துலை புக்க-
தராசுத் தட்டில் ஏறிய; மைக்கடங்கார் மதயானை வாள்
வேந்தன் வழிவந்தீர்- கருமையான மதநீரை மேகம் போல்
பொழிகின்ற வாள் படையுடைய சிபி மன்னனது கால்வழி வந்தவரே!;
இக்கடன்கள் உடையீர் – நீங்கள் அச்சிபி போல் அன்புக்
கடன்களும் உடையீர்; நீர் எம்வினை தீர்த்து – நீர்
எங்களது உறவினால் உண்டான தீவினைகளைத் தீர்த்து;
உம்முடைய கைக்கு அடைந்தான்- உம்முடைய கையில்
அடைக்கலம் அடைந்தவனாகிய வீடணனது; உயிர் காக்கக்
கடவீர் – உயிரைப் பாதுகாக்கக் கடவீர்; என்
கடைக்கூட்டால்- இது என் கடைசி விருப்பமாகும்.
————–
‘நீதியால் வந்தது ஒரு நெடுந் தரும நெறி அல்லால்,
சாதியால் வந்த சிறு நெறி அறியான், என் தம்பி;
ஆதியாய்! உனை அடைந்தான்; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா! இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன். 354-
ஆதியாய்- முழுமுதலே!; அரசர் உருக்கொண்டு அமைந்த
வேதியா – உலகில் அரசர் வடிவு கொண்டு வந்து வேதங்களால்
புகழப்படுகின்றவனே; நீதியால் வந்தது ஒரு நெடுந்தரும நெறி
அல்லால்- நீதிமுறைப்படி அமைந்து வந்த சிறந்த அற நெறி
அல்லாது; சாதியால் வந்த சிறுநெறி அறியான் – சாதிப்
பிறப்பினால் உண்டான அறமற்ற நெறியை அறியாதவனாகிய;என்
தம்பி- எனக்குத் தம்பியாகிய வீடணன்; உனை அடைந்தான்-
உன்னை அடைக்கலமாக அடைந்தான்; இன்னம் உனக்கு
அடைக்கலம் யான் வேண்டினேன்- மீண்டும் அவனை உனக்கு
அடைக்கலப் பொருளாகக் கொண்டு காத்தலை யான்
வேண்டினேன்.
———————-
‘வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன், வேரோடும்
கல்லுமா முயல்கின்றான், இவன்” என்னும் கறுவுடையான்;
ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, கோடாதாய்! 355-
கோடாதாய்- நீதிநெறி தவறாதவனே; வெல்லுமா நினைக்கின்ற
வேல் அரக்கன் – வெல்லுமாறு எண்ணுகின்ற வேல்
படையை உடையவனாகிய இராவணன்; இவன் வேரோடும் கல்லுமா
முயல்கின்றான் என்னும் – இவ்வீடணன் தன்னை அடியோடு
அழிக்க முயல்கின்றான் என்னும்; கறுவுடையான் – உள்ளடங்கிய
வஞ்சம் உடையான்; ஒல்லுமாறு இயலுமேல் – வாய்ப்பு
நேருமானால்; அவன் இவனை- அந்த இராவணன் இந்த வீடணனை;
உடன் பிறப்பின் பயன் ஓரான் கொல்லுமால் – உடன்
பிறப்புப் பாசத்தின் பயனை உணராதவனாய்க் கொல்லுவான்;
குறிக்கோடி- இதனை மனதில் கொள்.
———————–
‘தம்பி என நினைந்து, இரங்கித் தவிரான், அத் தகவு இல்லான்;
நம்பி! இவன் தனைக் காணின் கொல்லும்; இறை நல்கானால்;
உம்பியைத் தான், உன்னைத்தான், அனுமனைத்தான், ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதி; யான் வேண்டினேன். 356-
நம்பி- ஆடவரில் சிறந்தவனே!; அத்தகவு இல்லான்- அந்த
நற்குணமில்லாதவனாகிய இராவணன்; தம்பி என நினைந்து
இரங்கித் தவிரான்- வீடணன் தம்பி ஆயிற்றே என்று எண்ணி
இரக்கம் கொண்டு உயிரோடு விட்டிடான்; இவன்தனைக் காணின்
கொல்லும்- இவனைக் கண் எதிரே கண்டால் கொல்லுவான்;
இறை நல்கானால்- சிறிது கூட அருள் செய்ய மாட்டான்;
உம்பியைத்தான்- ஆகவே உன் தம்பியையும்; உன்னைத்தான்-
உன்னையும்; அனுமனைத்தான்- அனுமனையும்; ஒரு பொழுதும்-
ஒரு கணப் பொழுதும்; எம்பி பிரியானாக அருளுதி- என் தம்பி
பிரியாதிருக்குமாறு திருவருள் செய்க; யான் வேண்டினேன்-
இதனை யான் வேண்டிக் கொள்ளுகிறேன்.
————-
தலையைக் கடலில் இடுமாறு வேண்ட, இராமனும் உடன்படல்
‘”மூக்கு இலா முகம்” என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்; நீக்கியபின், நெடுந் தலையைக் கருங் கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள்’ என்றான். 357-
முனிவர்களும் அமரர்களும்- முனிவர்களும் தேவர்களும்;
மூக்கு இலாமுகம் என்று நோக்குவார்- என் முகத்தை மூக்கு
இல்லாத முகம் என்று சொல்லிக் காண்பார்கள்; நோக்காமை –
அவர்கள் அவ்வாறு நோக்காமல்; நுன் கணையால்- உன
அம்பினால்; என் கழுத்தை நீக்குவாய்- என் கழுத்தை அறுத்து
நீக்குவாய்; நீக்கிய பின் – அறுத்து நீக்கிய பிறகு
நெடுந்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்-என் கழுத்தோடு
கூடிய நெடிய தலையை கரிய கடலுக்குள்ளே மூழ்கச் செய்வாய்;
இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான்-இதுவும் நான்
உன்னை வேண்டிக் கொள்ளுகின்ற பொருள் என்றான்
கும்பகருணன்.
———————
‘வரம் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று’ என்று, ஒரு வாளி
உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா,
சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால்,
அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள் அழுத்தினான். 358-
வரம் கொண்டான் – கும்பகருணன் வரமாகக் கேட்டுக்
கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்று- ஆகையால் இனி
மறுத்தல் முறைமையன்று; என்று ஒருவாளி- என்று கருதி
ஓரம்பினை; உரம் கொண்ட தடஞ்சிலையின் உயர் நெடுநாண்
உல் கொளுவா- வலிமை கொண்ட பெரிய வில்லின் சிறந்த
நெடிய நாணைப் பூட்டி உள்ளே வைத்து; சிரம் கொண்டான்-
எய்து கும்பகருணனது தலையை அறுத்தான்; கொண்டதனை-
அறுத்த அந்தத் தலையை; திண் காற்றின் கடும் படையால்-
வலிய காற்றின் கடிய அம்பினால்; அரம் கொண்ட கருங்கடலின
அழுவத்துள் அழுத்தினான்- ஒலி கொண்ட கரிய கடலின்
நடுவில் உள்ளே விழச் செய்தான்.
———————
கும்பகருணன் தலை கடலில் மூழ்குதல்
மாக் கூடு படர் வேலை மறி மகரத் திரை வாங்கி,
மேக்கூடு, கிழக்கூடு, மிக்கு இரண்டு திக்கூடு,
போக்கூடு கவித்து, இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது, அம் முகக் குன்றம். 359-
மாக்கூடு படர்வேலை- கருமை நிறம் மிகக் கூடியுள்ள பரந்த
கடலில்; மறி மகரத்திரை வாங்கி- மடங்குகின்ற அலைகளை
அப்பால் தள்ளி; மேக்கூடு, கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு
– மேற்கிலும், கிழக்கிலும் மிக்குள்ள இரண்டு திசைகளிலும்;
போக்கூடு கவித்து – இடையே போதல் தவிர்த்து; இருகண்
செவியூடும்- இரு கண்களிலும்; புகை உயிர்க்கும்- புகையை
வெளிப்படுத்தும்; அம்முகக் குன்றம் – அந்த முகமாகிய
சிறுமலை; மூக்கூடும் புகப் புக்கு மூழ்கியது- மூக்கு
வழியாகவும் நீர் உள்புகுதலால் மூழ்கியது.
————
ஆடினார் வானவர்கள்; அரமகளிர் அமுத இசை
பாடினார்; மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்;
கூடினார் படைத்தலைவர், கொற்றவனை; குடர் கலங்கி
ஓடினார், அடல் அரக்கர், இராவணனுக்கு உணர்த்துவான். 360-
வானவர்கள் ஆடினார்- வானவர்கள் ஆடினார்; அரமகளிர்
அமுத இசை பாடினார்- தேவமகளிர் அமுதம் போன்ற இசைப்
பாடலைப் பாடினார்; மாதவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்-
தவமுனிவர்களும் அந்தணர்களும் அச்சம் நீங்கினார்கள்;
கொற்றவனைப் படைத்தலைவர் கூடினார்- வானரப் படைத்
தலைவர் வெற்றி பெற்ற இராமனைக் கூடினார்; அடல் அரக்கர்
குடர் கலங்கி- கொல்லும் தன்மையுள்ள அரக்கர்கள் குடர்
கலங்கி; இராவணனுக்கு உணர்த்துவான் ஓடினார் –
இராவணனுக்கு உணர்த்துவதற்காக ஓடினார்கள்.
————–
மிகைப் பாடல்கள்
என்று எடுத்து உரைத்தோன், பின்னும் உளம் கனன்று, இனைய சொல்வான்:
‘வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும்,
பொன்றுதல் இல்லா என்னைப் போர் வெலற்கு எளிதோ? காலம்
ஒன்று அல; உகங்கள் கோடி உடற்றினும், ஒழிவது உண்டோ ? 31-1
‘மானிடன் என்றே நாணி, கடவுள் மாப் படைகள் யாதும் யான் எடுத்து ஏகல் விட்டேன்;
இன்றை வெஞ் சமரம் போக, தான் அமர் அழிந்தேன்
என்னத் தக்கதோ?’ என்றான், அந்த மானம் இல் அரக்கன்;
பின்னர், மாலியவானும் சொல்வான்: 31-2
‘”முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்தாமும்,
தப்பு அற உணர்தற்கு எட்டாத் தருமமே, கை வில் ஏந்தி,
இப் பிறப்பு இராமன் என்றே, எம்மனோர் கிளையை எல்லாம்
துப்பு அற, முருக்க வந்தான்” என்ற சொல் பிழைப்பது உண்டோ ? 31-3
‘ஆதலின் இறைவ! கேட்டி; அவன் பெருந் தேவி ஆன
மாதினை விடுத்து, வானோர் முனிவரர் வருந்தச் செய்யும்
தீதினை வெறுத்து, தேவர் தேவனாம் சிலை இராமன்
பாதமே பணியின், நம்பால் பகை விடுத்து, அவன் போம்’ என்றான். 33-1
‘என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம்
சென்று தீய, நும் முனோன் தெரிந்து தீமை தேடினான்;
இன்று இறத்தல் திண்ணமாக, இன்னும் உன் உறக்கமே?’
அன்று அலைத்த செங் கையால் அலைத்து அலைத்து, உணர்த்தினார். 45-1
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார,
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு
ஏற்றது ஒத்து, அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க, மல்லர், கூற்றமும் குலைய, நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார். 51-1
அன்னவர் உரைப்பக் கேளா, அரசன் மோதரனை நோக்கி,
‘மின் எனும் எயிற்று வீர எம்பியைக் கொணர்தி!’ என்ன,
‘இன்னதே செய்வென்’ என்னா, எழுந்து அடி வணங்கிப் போவான்,
பொன் என விளங்குவான் போய்த் தன் பெருங் கோயில் புக்கான். 54-1
இனைய கும்பகருணன், இராக்கதர் தனை முனிந்து இடிஏறு
எனச் சாற்றினான்; ‘எனை நெடுந் துயில் போக்கியது
என்?’ என, மனம் நடுங்கினர், வாய் புதைத்து ஓதினார். 69-1
வட்ட விண்ணையும் மாதிரம் எட்டையும்
கட்டி, வீரம் கணிப்பு அரும் காவலான்
தொட்ட பல் கலனும் சுடர் மௌலியும்
தெட்ட சோதி திளைப்ப நின்றான் அரோ. 76-1
என்ற போதில் எறுழ் வலிச் செம் மணிக்
குன்றம் ஐ-இரண்டு ஏந்திக் குல வரை
சென்றது என்னத் திரிந்து உலகு யாவையும்
வென்ற வீரன் இனைய விளம்பினான். 77-1
அக் கணத்து அரக்கர் கோன், ‘அளப்பு இல் யானை, தேர்
மிக்க வான் புரவி, கால் வயவர் வெள்ளமோடு,
ஒக்க வான் படைப் பெருந் தலைவர் ஒன்று அறப்
புக்குமின், இளவலைப் புறத்துச் சூழ்ந்து’ என்றான். 99-1
வெள்ளம் நூறு இரதம்; மற்று இரட்டி வெங் கரி;
துள்ளு வான் பரி அதற்கு இரட்டி; தொக்குறும்
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி; மேம்படும்
கொள்ளை வான் படைப் பெருந் தலைவர் கோடியால். 102-1
அன்ன போது இராவணற்கு இளவல் ஆகிய
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன்,
துன்னு போர் அணிகலம் யாவும் சூடியே,
தன் ஒரு தேரினைத் தொழுது தாவினான். 103-1
தொண்டகம், துடி, கன பேரி, துந்துமி,
திண்டிமம், படகம், மா முரசு, திண் மணிக்
கண்டைகள், கடையுகத்து இடிக்கும் ஓதையின்
எண் திசை செவிடு எறிதரச் சென்று உற்றதால். 106-1
எழு கருங் கடல் கரை எறிந்திட்டு, ஊழி நாள்,
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என, தசமுகன் தன் ஆணையால்,
கிளர் பெரும் படைக் கடல் கெழுமிப் போந்ததால், 106-2
இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின்,
நெருக்கமும், நெடுங் கொடித் தொகையின் தேர்க் குலப்
பெருக்கமும், புரவிகள் பிறங்கும் ஈட்டமும்
அரக்கர்தம் பெருக்கமும், ஆயது எங்குமே. 106-3
நாற்படை வகை தொகை நடக்க, தூளிகள்
மேற்பட, விசும்பகம் மறைந்த; வெண் திரைப்
பாற்கடல் எனப் பொலி கவிப் பெரும் படை
காற் படு கதியினின் கரந்தது, ஓடியே. 108-1
குரக்கினப் பெரும் படை குலை குலைந்து போய்
வெருக் கொள, விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்கொலாம்?
நினது உருக் கொடே கரிய குன்று உற்றவேகொலாம்? 111-1
ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான்;
சூழி வெங் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான்;
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே
வீழ் பெருந் துயிலும் பெற்றான்-வெங் கடுங் கூற்றின் வெய்யோன். 114-1
சிலை பொழி பகழி, வேல், வாள், செறி சுடர்க்
குலிசம், ஈட்டி, பல வகைப் படைகள் வாங்கி, நிருதர்கள் பல் போர் செய்தார்;
மலையொடு மரங்கள் ஓச்சி, வயிரத் தோள் கொண்டு, மாறாக்
கொலை அமர் எடுத்து, வாகை குரங்குகள் மலைந்த அம்மா. 172-1
பற்றினன் வசந்தன் தன்னை, பனைத் தடங் கைகளாலே;
எற்றினன், ‘இவனை மீள விடவொண்ணாது’ என்று சொல்லி,
‘கொற்றமும் உடையன்’ என்னா, குழம்பு எழப் பிசைந்து கொண்டு
நெற்றியில் திலதமாக இட்டனன்-நிகர் இலாதான். 177-1
அளப்பு இல் வெங் கரிகள், பூதம், ஆளி, வெம் பரிகள் பூண்டு, ஆங்கு
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு, இரு நிலத்து
இழிந்து, வெம் போர்க் களப் படக் கவியின் சேனைக் கடல் வறந்து உலைய,
‘கையால் குளப் படுக’ என்று வெய்யோன் குறித்து, உளம் கனன்று புக்கான். 177-2
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட,
சிலவர் தம்மைத் துகள் எழக் கயக்கி ஊதும்; சிலவரைத் துகைக்கும்,
காலின்; தகர் படச் சிலவர் தம்மைத் தாக்கிடும், தடக் கைதன்னால்;
புகவிடும் சிலவர்தம்மை, விசும்பிடைப் போக, வெய்யோன். 177-3
வலிதினின், சிலவர் தம்மை வன் கையால் பற்றிப் பற்றி,
தலையொடு தலையைத் தாக்கும்; சிலவரைத் தனது தாளால்
நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும்; சிலவர் நெஞ்சைக்
கொலை நகப் படையின் கீறி, குருதி வாய்மடுத்துக் கொள்ளும். 177-4
கடும் பிணக் குவையினூடே சிலவரைப் புதைக்கும்; கண்ணைப்
பிடுங்குறும் சிலவர்தம்மை; சிலவரைப் பிடித்து, வெய்தின்
கொடுங் கொலை மறலி ஊரில் போய் விழக் குறித்து வீசும்;
நெடும் பெரு வாலின் பற்றிச் சிலவரைச் சுழற்றி நீக்கும். 177-5
பருதி மண்டலத்தில் போகச் சிலவரைப் பற்றி வீசும்;
குருதி வாய் பொழியக் குத்திச் சிலவரைக் குமைக்கும்; கூவித்
திரிதரத் தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்தம்மை;
நெரிதரச் சிலவர்தம்மைக் கொடுங் கையின் நெருக்கும் அன்றே. 177-6
ஆயிர கோடி மேலும் அடல் குரங்கு அதனை வாரி,
வாயிடைப் பெய்து மூட, வயிற்றிடைப் புகுந்து, வல்லே கூய் உளம்
திகைத்து, பின்னும் கொடியவன் செவியினூடே, போயது
வெளியில் மீண்டும், புற்றிடைப் பறவை என்றே. 179-1
அவ் வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான்
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான்;
எவ் வழி? பெயர்ந்து போவது எங்கு? என இரு குன்று ஏந்தி,
வெவ் வழி இசை அக் கும்பகருணன்மேல் செல்ல விட்டான். 180-1
விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல் செல்ல,
இசைந்திடு தோளின் ஏற்றான், இற்று நீறு ஆகிப் போக;
வசந்தனைச் சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால்
பிசைந்து சிந்தூரமாகப் பெரு நுதற்கு அணிந்து கொண்டான். 180-2
நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழியத் தள்ளி,
சூலம் அங்கு ஒரு கை சுற்றி, ‘தொடர்ந்திடும் பகைஞர் ஆவி
காலன் ஊர்தன்னில் ஏற்றி, கடிதில் என் தமையன் நெஞ்சில்
கோலிய துயரும் தீர்ப்பென்’ எனக் கொதித்து, அமரின் ஏற்றான். 186-1
செய்துறு பகையை வெல்வார், நின்னைப் போல் அம்மை செய்து,
வைதுறு வந்து போது, வலுமுகம் காட்டி, யாங்கள் கைதுறு வினையை
வென்று கடன் கொள்வார் மார்க்கமுள்ளார்; எய்துறும்
இதற்கு என் போல் உன் தகை சிலை உதவி என்றான். 193-1
மாருதி போதலோடும், வயப் படைத் தலைவர், மற்று ஓர்
மாருதம் என்னப் பொங்கி, வரையொடு மரங்கள் வாரி, போர் எதிர்
புகக் கண்டு, அன்னோர் அனைவரும் புரண்டு போரில் சோர் தர
படைகள் வாரிச் சொரிந்து, அடல் அரக்கன் ஆர்த்தான். 203-1
மழுவொடு கணிச்சி, சூலம், வாள், மணிக் குலிசம், ஈட்டி,
எழு, அயில், எஃகம் என்று இப் படை முதல் எவையும் வாரி,
மழை எனப் பொழிந்து, நூறு யோசனை வரைப்பில் மேவும்
அளவு அறு கவியின் சேனை அறுத்து, ஒரு கணத்தில் வந்தான். 203-2
இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி
கலக்கம் அற்றிடும் அரக்கர்தம் கரங்களைக் கடிந்தே,
முலைக்குவட்டு, அவர் கன்னியர், முன்றிலின் எறிய,
விலக்க அரும் விறலாளி கண்டு, அவர் உயிர் விளிந்தார். 226-1
வடி சுடர்ப் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து
அடல் அரக்கரும் சிலர் உளர்; அவர் தலை அறுத்து,
ஆங்கு உடன் எடுத்து, அவர் மனையினுக்கு உரிய கன்னியர்பால் இட,
உவப்பொடும் புழுக்கினர், ஊன் இவை அறியார். 226-2
குஞ்சரத் தொகை, தேர்த் தொகை, குதிரையின் தொகை, மேல்
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்தம் தொகை எனும் வெள்ளம்
பஞ்சினில் படும் எரி என, இலக்குவன் பகழி
அஞ்செனப் படு கணத்து, அவை அனைத்தையும் அழித்த. 227-1
வந்து அம் மாப் படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய,
அந்தி வான் எனச் சிவந்தது, அங்கு அடு களம்; அமரில்
சிந்தி ஓடிய அரக்கரில் சிலர், ‘தசமுகனுக்கு
இந்த அற்புதம் உரைத்தும்’ என்று ஓடினர், இப்பால். 227-2
உரைத்து, நெஞ்சு அழன்று, ‘ஒரு கணத்து இவன் உயிர் குடித்து,
என் கருத்து முற்றுவென்’ எனச் சினம் கதுவிட, கடுந் தேர் பரித்த
திண் திறல் பாகரை, ‘பகைவனுக்கு எதிரே பொருத்தும்’ என்று
அடல் கும்பகன் பொருக்கெனப் புகன்றான். 228-1
நாண் தெறித்தனன், பகிரண்டப் பரப்பொடு நவை போய்
மாண்ட விண்ணவர் மணித் தலை துளங்கிட, வயப் போர்
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய, தூண்டி,
மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான்: 233-1
அது கண்டார் அடல் வானவர், ஆசிகள் கூறித் துதி கொண்டார்;
அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு, ‘இது கண்டேன்;
இனிக் கழிந்தது, உன் உயிர்’ எனக் கனன்றே கொதி கொண்டான்,
அடல் சிலையினைக் குழைவுற வளைத்தான். 240-1
புக்க போதில், அங்கு இலக்குவன் பொருக்கெனத் துயர் தீர்ந்து,
அக் கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய, மிக்க வார்
சிலை வளைத்து, உரும் ஏறொடு விசும்பும் உட்க,
நாண் எறிந்து, உக முடிவு என, சரம் பொழிந்தான். 248-1
‘காய் கதிர்ச் சிறுவனைப் பிணித்த கையினன்,
போயினன் அரக்கன்’ என்று உரைத்த போழ்தின் வாய்,
நாயகன் பொருக்கென எழுந்து, நஞ்சு உமிழ் தீ அன
வெகுளியன், இனைய செய்தனன். 272-1
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது, ஆங்கு ஒரு மா
இருங் கேடகம் இடத்து வாங்கினான்; பேய்
இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர் காய் ஒளி
வயிர வாள் பிடித்த கையினான். 299-1
வீசினன் கேடகம்; விசும்பின் மீன் எலாம்
கூசின; அமரரும் குடர் குழம்பினார்;
காய் சின அரக்கனும் கனன்ற போது, அவன்
நாசியும் செவியும் வெங் குருதி நான்றவே. 299-2
கும்பகன் கொடுமையும், குலைகுலைந்து போம்
வெம்பு வெஞ் சேனையின் மெலிவும், நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும் செம் பொனின்
கேடகம் சிதைத்து வீழ்த்தினான். 301-1
ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுறப் போயின கேடகம்
புரிந்து நோக்கினான்; பேய் இரண்டாயிரம் சுமக்கப்
பெற்றுடை மா இருங் கேடகம் கடிதின் வாங்கினான். 301-2
போயின கேடகம் போக நோக்கினன், ஆயிரம் பெயரவன்,
அறியும் முன்பு; அவன் பேய் இரண்டு ஆயிரம் பேணும்
கேடகம் ‘ஏ’ எனும் அளவினில் எய்தச் சென்றதால். 301-3
ஆலம் உண்டவன் முதல் அளித்தது, அன்னவன்
சூலம் உண்டு; அளப்பு இல கோடி பேய் சுமந்து,
ஓலம் இட்டு அமரர்கள் ஓட, ஊழியில்
காலன் ஒத்தவன் கரத்து அளித்தது, அக் கணம். 310-1
பிடித்தனன் வலக் கையில் சூலம், பெட்பொடு;
முடித்தனன், பூசனை மனத்தின் முன்னியே;
விடுத்தனன், ‘பகைவனை வென்று மீள்க’ எனா;
தடுப்ப அரிது எனத் தளர்ந்து, அமரர் ஓடினார். 315-1
சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே,
ஞால நாயகன், அரிக் கடவுள் ஏந்திய கால் வெங்
கனல் படை கடிதின் ஏவி, அச் சூலம் அற்று
இரண்டு எனத் துணித்து வீழ்த்தினான். 315-2
அழிந்தது சூலம்; அங்கு அமரர் யாவரும் தொழும் தகை
அமலனைப் புகழ்ந்து துள்ளியே, ‘கழிந்தது, எம் மனத் துயர்’
என்று கண்ணன்மேல் பொழிந்தனர், அவன் பெயர் புகன்று, பூமழை. 315-3
வந்த வெஞ் சேனைகள் வளைந்த எல்லையில்
இந்திரன் முதலினர் ஏத்த, வள்ளலும் சுந்தர நெடுங்
கணை மாரி தூவினான்; சிந்தியது, அப் பெருஞ் சேனை வெள்ளமே. 315-4
இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு
முடிவு எய்திப் புரண்டு தத்துறப் பொழிந்தனர், இருவர் தம் பொரு சிலைக்
கணை மாரி; இருண்டது எத்திசை மருங்கினும், பறவையின் இனம் பல படி மூடி;
திரண்ட வச்சிரக் கதை கரத்து எடுத்தனன், கும்பகன் சினம் மூள. 321-1
என்ற போதில், அரக்கனும் நோக்கினன், ‘எம்பிரான் நுவல் மாற்றம்
நன்று, நன்று!’ எனா, சிரம் துளக்கினன், நகைத்து, இவை இவை நவில்கின்றான்:
‘வென்றி தந்து, தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில் பொன்றுமாறு இளைத்து,
இன்று போய் வருவேனேல், புகழுடைத்தது போலாம்’. 324-1
இனைய திண் திறல் அரக்கனுக்கு அவ் வழி இதயத்தில் பெரு ஞான
நினைவு எழுந்தது; ‘இங்கு இவன் பெருங் கடவுள்; மற்று இவன் பத நிழல்
காண வினை அறுந்தது; வேறு இனிப் பிறப்பு இலை’ என்று, தன் மன வேகம்-
தனை மறந்தனன்; மறந்து அவன் தன்மையை நினைந்தனன், கருத்தோடும். 350-1
——————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply