அரக்கியர் அழுவது கண்ட இந்திரசித்தன் எழுதல்
‘குழுமி, கொலை வாட் கண் அரக்கியர், கூந்தல் தாழ,
தழுவித் தலைப் பெய்து, தம் கைகொடு மார்பின் எற்றி,
அழும் இத் தொழில் யாதுகொல்?’ என்று, ஓர் அயிர்ப்பும் உற்றான்,
எழிலித் தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான். 1-
இந்திரசித்து – இந்திரசித்தன்; கொலை வாட்கண் அரக்கியர் –
கொல்லும் தன்மை அமைந்த வாளினைப் போன்ற கண்களை உடைய
அரக்கியர்கள்; குழுமி – ஒன்று சேர்ந்து; கூந்தல் தாழ – கூந்தல்
விரிந்து தொங்க; தழுவித் தலைப் பெய்து – (ஒருவரை ஒருவர்)
கட்டிக்கொண்டு கூட்டமாக; தம்கை கொடு – தங்கள் கைகளைக்
கொண்டு; மார்பின் எற்றி அழும் – மார்பில் அடித்துக் கொண்டு
அழுகிற; இத்தொழில் யாது கொல் என்று – இந்தச் செயல் என்ன
காரணமாகவோ என்று; ஓர் அயிர்ப்பும் உற்றான் – ஓர் ஐயத்தை
(மனதில்) அடைந்து; எழிலித் தனி ஏறு என – மேகத்தின் இடையில்
தோன்றும் ஒப்பில்லாத ஆணிடி போல; எழுந்தான் – எழுந்து
வந்தான்.
———–
‘எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு-
பட்டான் கொல்? அது அன்று எனின், பட்டு அழிந்தான்கொல்? பண்டு
சுட்டான் இவ் அகன் பதியைத் தொடு வேலையோடும்
கட்டான் கொல்? இதற்கு ஒரு காரணம் என்கொல்?’ என்றான். 2-
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் – எட்டுத் திசைகளில்
உள்ளார் யாவரையும் வென்றவனாகிய இராவணன்; இன்றும் –
(முதல்நாள் போலவே) இன்றும் கூட, ஈடுபட்டான் கொல் – (தோற்று)
பெருமை அழியப்பெற்றான் போலும்; அது அன்று எனின் – அது
அல்ல என்றால்; பட்டு அழிந்தான் கொல் – (போர்க்களத்தில்); இறந்து
அழிந்தான் போலும், பண்டு சுட்டான் – முன்பு இந்நகரைச்
சுட்டெரித்தவனாகிய அனுமன்; இவ் அகன் பதியை – இந்த அகன்ற
இலங்கை நகரத்தை; தொடு வேலையோடும் – (நகரத்துக்கு நீர்
அரணாக உள்ள) சகரரால் தோண்டப் பட்ட கடலுடன்; கட்டான்
கொல் – பேர்த்து விட்டான் போலும்; இதற்கு ஒரு காரணம் என்
கொல் – இவ்வாறு அரக்க மகளிர் புலம்பி அழுதற்கு உரிய ஒரு
காரணம் எதுவாக இருக்குமோ? என்றான் – என்று பலபடி
ஐயங்கொண்டு கூறினான்.
————-
இந்திரசித்து-இராவணன் உரையாடல்
கேட்டான், ‘இடை உற்றது என்?’ என்று, கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர், மாற்றம் மறந்து நின்றார்.
ஓட்டா நெடுந் தேர் கடிது ஓட்டி, இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான். 3-
இடை உற்றது என் என்று கேட்டான் – (இந்திரசித்தன்)
இவ்விடத்தில் (துன்பத்துக்குரியதாக) நடந்தது என்ன என்று
கேட்டான்; யாரும் கிளத்தில் மாட்டாது நடுங்கினர் – அதற்கு யாரும்
விடை சொல்ல மாட்டாமல் நடுங்கியவர்களாய்; மாற்றம் மறந்து
நின்றார் – (எதை) விடையாகச் சொல்லுவது என்பதை மறந்து
நின்றார்கள்; ஓட்டா நெடுந்தேர் கடிது ஓட்டி – (காரணத்தை அறிய
விரும்பிய இந்திரசித்தன்) ஓட்டாமலேயே (விரைந்து செல்லும்
சிங்கங்கள் பூட்டிய) பெரிய தேரினை விரைவாகச் செலுத்தி;
இமைப்பின் உற்றான் – கண்ணிமை அளவு நேரத்தில் போய்ச்
சேர்ந்து; காட்டாதன காட்டிய தாதையை – (செயற்கு) அரிய
செயல்களை எல்லாம் செய்து காட்டிய (தன்) தந்தையாகிய
இராவணனைச்; சென்று கண்டான் – சென்று பார்த்தான்.
————-
கண்டான், இறை ஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி,
‘உண்டாயது என், இவ்வுழி?’ என்றலும், ‘உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப நிகும்பரோடும்
விண் தான் அடைந்தான், அதிகாயனும்-வீர!’ என்றான். 4-
கண்டான் – (இந்திரசித்தன் இராவணனைப்) பார்த்து; இறை ஆறிய
நெஞ்சினன் – சிறிதளவு (துன்பம்) தணிந்த மனமுடையவனாய்;
கைகள் கூப்பி – அவனைக் கைகூப்பித் தொழுது; இவ்வுழி –
இவ்விடத்து; உண்டாயது என் என்றலும் – உண்டாகிய (துயரத்துக்குக்
காரணம்) என்ன என்று கேட்டலும்; வீர – (இராவணன்
இந்திரசித்தனைப் பார்த்து) வீரனே; உம்பிமாரை -உன் தம்பியரைக்; காலனும் உயிர் கொண்டான் – காலன் உயிர்
கொண்டான்; கும்ப நிகும்பரோடும் – கும்பன் நிகும்பன் என்ற
இருவருடன்; அதிகாயனும் – அதிகாயனும்; விண்தான் அடைந்தான் –
வானுலகத்தை அடைந்தான்; என்றான் – என்று கூறினான்.
உம்பிமார் – தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்போர்.
————-
சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி, விண் மீது பார்த்தான்;
‘எல்லாரும் இறந்தனரோ!’ என ஏங்கி நைந்தான்;-
வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன். 5-
வில்லாளரை எண்ணின் – வில் வீரர்களை எண்ணினால்; முன்
விரற்கு நிற்கும் வீரன் – முன் விரலில் நிற்கும் வீரனாகிய
இந்திரசித்தன்; சொல்லாத முன்னம் – (தம்பியரின் இறப்பை
இராவணன்) சொல்லுவதற்கு முன்னமேயே; சுடரைக் சுடர் தூண்டு
கண்ணான் – தீயைக் கூட எரிக்கும் தன்மை வாய்ந்த கண்களை
உடையவனாகி; பல்லால் அதரத்தை அதுக்கி – பற்களால் உதட்டைக்
கடித்து; விண்மீது பார்த்தான் – வானத்தின் மேல் (அண்ணாந்து)
பார்த்தான்; எல்லாரும் இறந்தனரோ – எல்லோரும் இறந்து
விட்டார்களோ? என – என்று; ஏங்கி நைந்தான் – இரக்கம் கொண்டு
வருந்தினான்.
———————
‘ஆர் கொன்றவர்?’ என்றலுமே, ‘அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால்’ என, உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான். 6-
கொன்றவர் ஆர் என்றலும் – (ஏங்கி வருந்திய இந்திர சித்தன்
இராவணனைப் பார்த்துக்) கொன்றவர் யாவர் என்று கேட்க; தார்
கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் – மார்பில் கொன்றை மாலை
அணிந்த சிவபிரானுடைய (கைலாய) மலையைப் பெயர்த்துச்
சாய்த்தவானகிய இராவணன்; அதிகாயன் என்னும் பேர் கொன்றவன்
– அதிகாயன் என்னும் பெயருடைவனைக் கொன்றவன்; வென்றி
இலக்குவன் – வெற்றி பொருந்திய இலக்குவன்; பின்பு நின்றார் –
பின்பு நின்றவர்களாகிய கும்பநிகும்பர் முதலியோர்; ஊர்
கொன்றவனால் பிறரால் – (இலங்கை) ஊரைத் தீயிட்டு அழித்த
அனுமனாலும் பிறராலும் (கொல்லப் பட்டனர்); என – என்று,; உற்ற
எல்லாம் – நடந்ததை எல்லாம்; உரைத்தான் – கூறினான்.
அவர்கள் இறந்ததற்குக் காரணம் உன் பிழை தான் எனக்
கூறினான் இந்திரசித்தன் என்க. மன்னா – தந்தை என விளிக்காது
மன்னா என விளித்ததாக அமைத்த நயம் காண்க.
————–
‘கொன்றார் அவரோ? “கொலை சூழ்க!” என நீ கொடுத்தாய்;
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும், மன்னா!
என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது’ என்னா,
நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான். 7-
அக்கப் பெயரோனை – அக்க குமாரன் என்ற பெயர்
கொண்டவனை; நிலத்தொடு அரைத்துளானை – நிலத்தில் தேய்த்து
அழித்தவனாகிய அனுமனை, (நான் பிரமக் கணையால் கட்டிக்
கொண்டு வந்த போது கூட); விக்கல்பொரு – எச்சிலுக்குச் சமமான;
வெவ் உரைத்தூதுவன் என்று – எதிரியின் விருப்பமான சொற்களைச்
சொல்லுகிற தூதுவன் என்று சொல்லி; விட்டாய் – (கொல்லாது) விட்டு
விட்டாய்; புக்கத் தலைப் பெய்தல் நினைந்திலை – (அவனை
விட்டதால் நம் பக்கச் செய்திகள்) எதிர்ப் பக்கத்தில் புகுந்து
நிறைதலை நினைத்தாய் இல்லை; புந்தி இல்லாய் – அறிவு அழிந்து
போனவனே; மக்கள் துணை அற்றனை – (இப்போது நீ) மக்களின்
துணையை இழந்து விட்டாய்; உன் வாழ்க்கை இற்றது மன்னோ – உன்
வாழ்க்கை அழிந்து விட்டது.
—————-
‘அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
விக்கல் பொரு வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்;
புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி இல்லாய்!
மக்கள்-துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ! 8-
இன்று – இப்பொழுது; நினைந்தும் – (நடந்தவற்றை) நினைத்தும்;
இயம்பியும் – (உன் மீது) குறை சொல்லியும்; எண்ணியும் தான் என் –
(பலவாறு பலவற்றை) எண்ணிப் பார்த்தும் தான் என்ன பயன்? கொன்
நின்ற படைக்கலத்து எம்பியைக் – கொல்லும் தொழில் நின்ற
படைக்கலங்களை ஏந்திய என் தம்பியாகிய அதிகாயனைக்;
கொன்றுளானை – கொன்றுள்ளவனாகிய; அவன் யாக்கையை – அந்த
இலக்குவனுடைய உடம்பை; அந்நின்ற நிலத்து – அவன் நின்ற
போர்க்களத்தில்; நீக்கி அல்லால் – உயிர் பிரித்தல் இல்லாமல்; மன்
நின்ற நகர்க்கு – நிலை பெறுந்தன்மை பொருந்தி நின்றுள்ள இலங்கை
நகருக்கு; இனி வாரலென் – இனி வர மாட்டேன்; வாழ்வும்
வேண்டேன் – (அதைச் செய்யாமல் போனால் உயிர்) வாழ்வும்
விரும்பேன்.
——-
8011.
‘வெங் கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப்
பங்கம் உற நூறி, இலக்குவனைப் படேனேல்,
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செங் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை!
வெங்கண நெடுவானரத் தானையை – கொடிய கண்களை உடைய
பெரிய வானரப் படையை; வீற்று வீற்றாய் – கூட்டம் கூட்டமாக;
பங்கம் உற நூறி – துண்டு பட்டு அழியும்படியாகச் சிதைத்து;
இலக்குவனைப் படேனேல் – (எம்பியைக் கொன்ற) இலக்குவனைப்
போரில் கொல்லாது விடுவேன் எனின்; அங்கம் தர அஞ்சி – (போரில்
புறங்கொடாது) மார்பு காட்டி (நிற்பதற்கு) பயந்து; என் ஆணை
கடக்கலாத – என் ஆணையை மீற முடியாத; செங்கண் நெடுமால்
முதல் தேவர் – சிவந்த கண்களை உடைய திருமாலை முதலாகக்
கொண்ட தேவர்கள்; என்னைச் சிரிக்க – என்னைப் பார்த்து
நகைக்கட்டும்.
——————
8012.
‘மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்தன்
ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்-இரு கால், எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க’
என்றான்.–11-
மாற்றா உயிர் எம்பியை – (பிறரால்) போக்க முடியாத உயிரை
உடைய என் தம்பியாகிய (அதிகாயனை); மாற்றிய மானுடன் தன் –
உயிர் வாங்கிய மனிதனாகிய (இலக்குவன்) தன்; ஊற்று ஆர் குருதிப்
புனல் – ஊற்றுப் போல் நிறைந்து பெருகி வரும் இரத்த
வெள்ளத்தைப்; பார்மகள் உண்டிலாளேல் – நிலமாகிய பெண்
உண்ணாமல் போனால்; இகல் இந்திரன் – போராற்றல் மிக்க இந்திரன்;
எனக்கே ஏற்றான் – என்னுடன் போர் ஏற்று; தோற்றான் தனக்கு –
தோற்றவனாகிய (அவன்) தனக்கு; என் நெடுஞ் சேவகம் – என்
பெருவலிமை; ஈர் இருகால் – நான்குமுறை; தோற்க – தோற்றது
ஆகட்டும்; என்றான் – (என்று இந்திரசித்தன்) கூறினான்.
———-
8013.
‘பாம்பின் தரு வெம் படை, பாசுபதத்தினோடும்,
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி,
ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்,
சோம்பித் துறப்பென்; இனிச் சோறும் உவந்து வாழேன்.–12-
பாம்பின் தருவெம்படை – பாம்பு வடிவில் அமைந்த கொடிய
படையினையும்; பாசு பதத்தினோடும் – பாசு பதப்படையினையும்;
தேம்பல் பிறை சென்னி வைத்தான் – குறைந்த கலையுடைய பிறைச்
சந்திரனைத் தலையில் அணிந்தவனாகிய சிவபிரான்; தரு தெய்வஏதி –
தந்த தெய்வத்தன்மை பொருந்திய வாட்படையினையும்; ஓம்பித்
திரிந்தேன் எனக்கு – பாதுகாத்துத் திரிந்தவன் ஆகிய எனக்கு; இன்று
உதவாது போமேல் – (அவை) இன்று உதவாமல் போகுமானால்;
சோம்பித் துறப்பென் – (என் உயிரைச்) சோம்பல் அடைந்து விட்டு
விடுவேன்; இனிச் சோறும் உவந்து வாழேன் – இனிமேல் சோற்றையும்
விரும்பி வாழமாட்டேன்;
—————–
8014.
‘மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி,
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து, பாரின்
இருந்தேன்எனின், நான் அவ் இராவணி அல்லென்’
என்றான்.–13-
மருந்தே நிகர் எம்பிதன் – சாவா மருந்தைப் போன்ற என்
தம்பியாகிய அதிகாயன் தன்; ஆர் உயிர் வவ்வினானை – அரிய
உயிரைக் கவர்ந்தவன் ஆகிய (இலக்குவனை); அந்தகற்கு விருந்தே
என ஈகிலென் – யமனுக்கு விருந்து என்று கொடுக்காமல்; பொரும்
தேவர் குழாம் நகை செய்திட – (என்னுடன்) போரிடும்
(பகைவர்களான) தேவர்களின் கூட்டம் (எள்ளி) நகை செய்திட;
வில்லும் ஏந்தி – வில்லையும் (கையில்) ஏந்தி; நான் – நான்; பாரின்
போந்து இருந்தேன் எனின் – நிலத்தில் பொருந்தி இருந்தேன்
என்றால்; அவ் ‘இராவணி அல்லென் – அந்த இராவணனுடைய மகன்
அல்லேன்; என்றான் – என்று (இந்திரசித்தன்) கூறினான்.
————–
8015.
‘ஏகா, இது செய்து, எனது இன்னலை நீக்கிடு; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலார்மேல்
மா கால் வரி வெஞ் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி, இவ்இன்னலின் சிந்தை
செய்தேன்.’–14-
ஏகா- (இராவணன் இந்திரசித்தனைப் பார்த்து நீ) ஏகி; இது செய்து
– (இலக்குவனைக் கொல்வதாகிய) இதனைச் செய்து; எனது இன்னலை
நீக்கிடு – எனது துன்பத்தைப் போக்கி விடுக; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ – எந்தை போன்றவனாகிய (உன்னால்) செய்ய
முடியாத செயல்களும் உள்ளனவா (இல்லை என்றபடி); இவ்
இன்னலின் – (எனக்கு ஏற்பட்ட) மக்களை இழத்தலாகிய
துன்பக்காலத்தில்; எனக்கு – எனக்காக; ஆற்றலார் மேல் – (நீ)
பகைவர் மேல் சென்று; மாகால் வரி வெஞ்சிலை யோடும் – பெரிய
தண்டினை உடைய கட்டமைந்த கொடிய வில்லோடு கூட;
வளைத்தபோது – (அவர்களை) வளைத்த காலத்தில்; சேகு ஆகும் என்று எண்ணி – (அச்செயல் எனக்கு)
உறுதியை உண்டாக்கும் என்று எண்ணிப் பார்த்து; சிந்தை செய்தேன்
– (உன்னை அனுப்ப) மனதில் எண்ணினேன்.
—————
இந்திரசித்தன் போர்க்கோலம் பூண்டு, களம் புகுதல்
8016.
என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் அறா, உருவா, உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச் சிலை வாங்கினன்-வானை வென்றான்.–15-
என்றானை – என்று கூறிய இராவணனை; வானை வென்றான் –
வானுலகத்தில் உள்ளவர்களை வென்றவனாகிய இந்திரசித்தன்;
வணங்கி – வணங்கி; ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் –
ஒன்றினாலும் அறுக்கவோ (அ) ஊடுருவிச் செல்லவோ முடியாத
கவசத்தோடு; இலங்கு அயில்வாளும் ஆர்த்திட்டு – ஒளி விளங்குகிற
கூர்மையான வாளையும் (இடையில்) அணிந்து கொண்டு; பொன் தாழ்
கணையின் நெடும் புட்டில் – பொன் போல் ஒளிவீசுவதும், உள்ளே
ஆழ்ந்த வடிவம் கொண்டதுமான, பெரிய அம்பு அறாத் துணிகளை;
புறத்து வீ்க்கி – (தோள்களின்) புறத்தில் கட்டிக்கொண்டு; வன்தாள்
வயிரச்சிலை வாங்கினன் – வலிய (இரு) முனைகளை உடைய
உறுதியான வில்லை எடுத்துக் கொண்டான்.
————-
8017.
வயிரந் நெடு மால் வரை கொண்டு, மலர்க்கண் வந்தான்,
செயிர் ஒன்றும் உறா வகை, இந்திரற்கு என்று செய்த
உயர் வெஞ் சிலை; அச் சிலை பண்டு அவன் தன்னை
ஓட்டி,
துயரின் தலை வைத்து, இவன் கொண்டது; தோற்றம்ஈதால். –16-
அச்சிலை – (இந்திரசித்தன் கையில் கொண்டிருந்த) அந்த
வில்லானது; மலர்க்கண் வந்தான் – (மாலின் நாபித்) தாமரையில்
தோன்றியவன் ஆகிய பிரமன்; செயிர் ஒன்றும் உறாவகை – துன்பம்
ஒன்றும் ஒரு சிறிதும் உண்டாகாமல்; இந்திரற்கு என்று – ;இந்திரனுக்கு
என்று; வயிரந் நெடுமால் வரை கொண்டு செய்த – வலிமையான
பெரிய வச்சிரமலையைக் கொண்டு செய்த; உயர் வெஞ்சிலை – சிறந்த
கொடிய வில்லாகும்; பண்டு – முன்பு; அவன் தன்னை துயரின் தலை
வைத்து ஓட்டி – அந்த இந்திரனைத் துன்பத்துக்கு உள்ளாக்கித்
தோற்று ஓடச் செய்து; இவன் கொண்டது – இந்த இந்திரசித்தன்
(பறித்துக்) கைக்கொண்டதாகும்; தோற்றம் ஈதால் – (இவ்வில்லின்)
வரலாறு இதுவேயாகும்.
————-
8018.
தோளில் கணைப் புட்டிலும், இந்திரன் தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன; ஆழி ஏழும்
மாள, புனல் வற்றினும் வாளி அறாத; வண்கண்
கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ–17-
தோளில் கணைப்புட்டிலும் – (இந்திரசித்தன்) தோளில் கட்டியுள்ள
அம்பு அறாத்தூணிகளும்; இந்திரன் தோற்ற நாளே – இந்திரன்
தோற்றுத் தன்னிடம் சிறைப்பட்ட நாளில்; ஆளித்திறல் அன்னவன்
கொண்டன – யாளியினைப் போன்ற வலிமையுடைய
அத்தன்மையனான (இந்திரசித்தன்); கொண்டன – அவனிடம்
பறித்துக் கொண்டவை ஆகும்; ஆழி ஏழும் மாள புனல் வற்றினும் –
கடல்கள் ஏழும் இல்லை என்று கூறுமாறு (அவற்றின்) நீர் முழுதும்
வற்றிவிட்டாலும்; வாளி அறாத – (எடுக்க எடுக்க) அம்புகள் குறையாத;
வன்கண் கூளி – கொடிய கண்களை யுடைய பேய்களுக்கும்;
கொடுங்கூற்றினுக்கும் – கொடிய யமனுக்கும்; ஆவது ஓர்கூடு போல்வ
– பிணங்களையும் உயிரையும் உணவாக்கித் தருகின்ற ஒரு கூண்டைப்
போன்றுள்ளன,
—————
8019.
பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு
வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை
அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான்.–18-
பண்டு தேவர் எல்லாரும் – முற்காலத்தில் தேவர்கள் எல்லோரும்;
முனைத்தலை யாவரும் ஈந்த – போர்க்களத்தில் (இந்திர சித்தனுக்குத்
தோற்றுக்) கொடுத்தவையும்; மேருவில்லாளன் கொடுத்த –
மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபிரான் கொடுத்தவையும்;
விரிஞ்சன் அளித்த – பிரமன் கொடுத்தவையும் (ஆகிய); வெம்மை
அல்லால் புரியாதன – கொலைத் தொழில் அல்லது வேறு
புரியாதனவுமாகிய; பல்லாயிரம் கோடி படைக்கலம் – பல்லாயிரம்
கோடி என்னும் படியான (மிகப்பல) படைக்கலங்கள்; யாவையும்
ஆய்ந்து கொண்டான் – எல்லாவற்றையும் ஆராய்ந்து எடுத்துக்
கொண்டான்.
————
8020.
நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப;
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது; வானுளோரும்
தேறாதது-மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர்.–19-
அவன் ஏறிய தெய்வ மாத்தேர் – அந்த இந்திர சித்தன் ஏறிய
தெய்வத்தன்மை பொருந்திய பெரியதேர்; நூறாயிரம் யாளியின்
நோன்மை தெரிந்த – நூறாயிரம் யாளிகளின் வலிமையைத்
(தனித்தனியாகக்) கொண்ட; அன்னவை அவை ஆயிரம் ஏறாம்
சீயத்து – அப்படிப்பட்ட தொகுதியாகிய ஆயிரம் ஆண்சிங்கங்கள்;
பூண்டது என்ப – பூட்டப்பெற்றது;மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது –
வேறாகிய ஓர் இலங்கையை ஒத்துள்ளது; வானுளோரும் தேறாதது –
தேவர்களாலும் இத்தன்மையது என அறியப்படாதது.
——————-
8021.
பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும்,
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல் நாள்,
பின் சென்றது அல்லது ஒரு பெருஞ் சிறப்பு உற்ற போதும்,
முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும். –20-
பொன் சென்று அறியா – (அத்தேர் நிறத்தினால்) பொன்னும்
உவமை என்று கூறமுடியாத; உவணத் தனிப்புள்ளினுக்கும் – கருடன்
என்னும் ஒப்பற்ற பறவைக்கும்; மின்சென்று அறியா மழுவாளன்
விடைக்கும் – மின்னலும் ஒப்பாகச் சென்று அறியாத மழுப்படையைக்
(கையில்) ஏந்திய சிவபிரானது இடபத்துக்கும்; மேல்நாள் –
முற்காலத்தில்; பின் சென்றது அல்லது – (அவைகள் தோற்றுப் போய்
முன்னால் ஓடியபோது அவற்றைத் துரத்திக் கொண்டு பின்னால்
சென்றதே அல்லாமல்; ஒரு பெருஞ்சிறப்பு உற்ற போதும் – ஒப்பற்ற
(தன் வலிமை துணை வலிமை) முதலிய பெருஞ் சிறப்பைப் பெற்ற
காலத்தில் கூட; மூன்று உலகத்தினுள்ளும் – மூன்று உலகங்களிலும்;
முன் சென்று அறியாதது – தோல்வி அடைதலால் அவைகள்
பின்னால் துரத்தி வரத்தான்தோற்று முன்சென்று அறியாதது.
————
8022.
‘ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன்தன்
சாயாப் பெருஞ் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன், வந்தனன்’ என்று பூசல்
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங் கொடி பெற்றது அம்மா!–21-
ஏயாத் தனிப்போர் வலி காட்டிய இந்திரன் தன் – (அத்தேர்)
ஒப்பில்லாத சிறந்த போர் வலிமையைக் காட்டிப் (போரிட்ட) இந்திரன்
தன்னுடைய; சாயாப் பெருஞ்சாய் கெட – அழியாத பெரு வலிமை
அழியும்படியாக; தாம்புகளால் தடந்தோள் போய் ஆர்த்தவன்
-கயிறுகளால் (மாயைப் பாசத்தால்) (அந்த இந்திரனுடைய) அகன்ற
தோள்களைப் (போரில்) சென்று கட்டிய (வீரன்); வந்தனன் வந்தனன்
என்று – வந்தான் வந்தான் என்று; பூசல் பேய் ஆர்த்து எழுந்து
ஆடு – பேரொலியுடைய பேய்கள் இரைத்து எழுந்து ஆடுகிற; நெடுங்கொடி பெற்றது அம்மா – பெரிய
கொடியைப் பெற்றது.
———–
8023.
செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி-
யது;-’கைத் திசை யானையை ஓட்டியது’ என்னலாமே?-
மதுகைத் தடந் தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது
அம்மா!–22-
செதுகைப் பெருந்தானவர் – (மேலும் அந்தத் தேர்) பொருதலைச்
செய்த பெரிய அசுரர்களுடைய; ஊனொடும் தேய்த்த நேமியது –
உடம்புகளைத் (தேய்த்து) அழித்த சக்கரங்களை உடையது; மதுகைத்
தடந்தோள் வலி காட்டிய – வெற்றி பொருந்திய தன் பெருந்தோள்
வலிமையைக் காட்டிப் போர் செய்த; வானவேந்தன் முதுகைத் தழும்பு
ஆக்கியது – இந்திரனது முதுகில் தழும்பை உண்டாக்கிய; மொய் ஒளி
மொட்டது – நிறைந்து ஒளியுடைய மொட்டு என்ற (தேர் உறுப்பை)
உடையது; கைத்திசை யானையை ஓட்டியது என்னலாமோ அம்மா –
(இத்துணை சிறப்புப் பெற்றிருப்பதால்) துதிக்கைகளை உடைய
திசையானைகளை வென்று விரட்டியது என்று கூறுதல்(அதற்குச்
சிறப்போ?
———–
8024.
அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர, ‘உள்ளம் வெம் போர்ப்
பித்து ஏறினன்’ என்ன, நடந்தனன்- பின்பு அலால், மற்று
எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான். –23-
எத்தேவரையும் – எல்லாத் தேவர்களையும்; (தோற்று ஓடச்
செய்ததால்) பின்பு அலால் மற்று – (அவர்களின்) பின்புறத்தை
அல்லாமல்; முகங்கண்டு அறியாத – (எதிர்வந்த) முகத்தைக் கண்டு
அறியாத; ஈட்டான் – வலிமை உடையவன் ஆகிய இந்திரசித்தன்;
அத்தேரினை ஏறி – அந்தத் தேரின் கண் ஏறிக்கொண்டு; அது
ஒப்பன ஆயிரம் தேர் – அந்தத் தேரினைப் போன்ற ஆயிரம்
தேர்கள்; சேமமதாய் வர – பாதுகாவலாய் வர; உள்ளம் வெம்போர்ப்
பித்து ஏறினன் என்ன – மனத்தில் கொடுமையான போர்ப் பித்துக்
கொண்டவன் என்று சொல்லும்படியாக; நடந்தனன் – போர்க்களம்
நோக்கி நடந்தான்.
———-
8025.
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும், இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் ‘அது நாற்பது வெள்ளம்’ என்னச்
சொன்னான்; பிறர் யார், அஃது உணர்ந்து தொகுக்கவல்லார்.–24-
அன்னானொடு – அந்த இந்திரசித்தனோடு; போயின தானை –
(உடன்) சென்ற படைகளின் அளவை; என்னால் அளந்து கூற
அரிதேனும் – என்னால் இவ்வளவு என்று அறுதியிட்டு அளந்து கூறல்
அருமையானதென்றாலும்; இயம்பு வான்மீகன் என்னும் – (பிறரால்)
சிறப்பித்துச் சொல்லப்படுகிற வான்மீகி என்கிற; நல்நான் மறையான் –
சிறப்புடைய நான்கு வேதங்களையும் கற்றறிந்த முனிவன்; அது
நாற்பது வெள்ளம் என்னச் சொன்னான் – அச்சேனையின் அளவு
நாற்பது வெள்ளம் என்று கூறினான்; அஃது உணர்ந்து தொகுக்க
வல்லார் – அச்சேனையின் (அளவை) அறிந்து தொகுத்து உரைக்க
வல்லவர்கள்; பிறர் யார் – அவனன்றிப் பிறர் யாருளர் என்றவாறு.
இயம்பு வான்மீகன் – முதல் நூலை இயம்பிய வால்மீகி முனிவர்
எனினுமாம்.
———–
8026.
தூமக் கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும், அந் நெடுந் தேர் மணி ஆழி காக்க,
தாமக் குடை மீது உயர, பெருஞ் சங்கம் விம்ம,
நாமக் கடற் பல இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப.–25-
தூமக் கண் அரக்கனும் – புகை நிறக்கண்ணனான அரக்கனும்;
தொல் அமர் யார்க்கும் தோலா மாபக்கனும் -(முன்பு நடந்த) பழைய
போர்களில் எவருக்கும் தோல்வி அடையாத மாபக்கன் என்பவனும்;
அந்நெடுந் தேர் ஆழிகாக்க – (இந்திரசித்தன் ஏறிச்சென்ற) அந்தப்
பெரிய தேரின் அழகிய சக்கரத்தைக் காத்து நிற்க; தாமக்குடை மீது
உயர – வெண்கொற்றக்குடை மேல் பொருந்திய விளங்க; பெருஞ்
சங்கம் விமம் – பெரிய சங்குகள் முழங்க; நாமக்கடல் பல்இயம் –
அச்சத்தை உண்டாக்குகிற கடல் போல் மிகுந்த பல்வகை
வாத்தியங்கள்; நாற்கடல் மேலும் ஆர்ப்ப – நான்கு கடல்களிலும்
மிகுதியாகப் பேரொலி எழுப்பவும்; ‘சென்றனன்’ என அடுத்த
பாடலொடு தொடர்ந்து முடியும்.
———
8027.
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல,
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத;
தார் ஆர் புரவிக் கடல் பின் செல, தானை வீரப்
பேர் ஆழி முகம் செல, சென்றனன்-பேர்ச்சி இல்லான்.–26-
பேர்ச்சி இல்லான் – போரில் தளர்ச்சி இல்லாதவனாகிய
இந்திரசித்தன்; ஆயிரம் ஆயிரகோடி தேர் தன் மாடு செல்ல –
ஆயிரமாயிரம் கோடித் தேர்கள் தன் பக்கத்தில் (பாதுகாவலாய்)
நெருங்கி வரவும்; அவற்றின் இரட்டி – (அந்தத் தேர்களின்) இரு
மடங்காக; போர் ஆனைபுறத்தின் போத – போராற்றல் உள்ள
யானைகள் புறக்காவலாகச் சூழ்ந்து வரவும், தார் ஆர் புரவிக் கடல்
பின்செல – மாலையணிந்த குதிரைப் படைக்கடல் பின்னால்
வரவும்; தானை வீரப்பேர் ஆழிமுகம் செல – தரைப்படை
வீரர்களது பெருங்கடல் முன்னே செல்லுமாறு; சென்றனன் –
சென்றான்.
—————–
வருபவன் யார்’ என் இலக்குவன் வீடணனை வினவல்
8028.
நின்றனன் இலக்குவன், களத்தை நீங்கலன்-
‘பொன்றினன், இராவணன் புதல்வன்; போர்க்கு இனி,
அன்று அவன், அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன், வரும்’ என விரும்பும் சிந்தையான்.–27-
இராவணன் புதல்வன் பொன்றினன் – இராவணன் மகனாகிய
அதிகாயன்’ இறந்துவிட்டான்; இனி போர்க்கு – இனிமேல் போருக்கு;
அன்று அவன் – சினம் மிக்க இராவணன்; அல்லனேல் –
அவனல்லன் எனின்; அமரர் வேந்தனை வென்றவன் – தேவர்
தலைவனை வென்றவன் ஆகிய இந்திர சித்தன்; வரும் என – (ஆகிய
இருவரின் ஒருவர்) வருவர் என்று; விரும்பும் சிந்தையான் –
ஆசையுடன் (எதிர்பார்க்கும்) மனதுடன்; இலக்குவன் – இலக்குவன்;
களத்தை நீ்ங்கலன் – போர்க்களத்தை விட்டு நீங்காதவனாய்;
நின்றனன் – நின்றான்.
——–
வீடணன் விடை
8029.
‘யார், இவன் வருபவன்? இயம்புவாய்!’ என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,
‘ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்
போர் கடந்தவன்; இன்று வலிது போர்’ என்றான்.–28-
வீரவெந்தொழிலினான் – வீரக் கொடுந்தொழிலை உடைய
(இலக்குவன்); இவன் வருபவன் யார்? – (இதோ இங்கு) வருகின்றவன்
யார் என்று; (வீடணனைப் பார்த்து) இயம்புவாய் – சொல்லுவாய்
என்று கேட்க; வீடணன் – (அதற்கு விடையாக) வீடணன்; ஆரிய –
ஆடவரில் சிறந்தவனே; இவன் – வருகின்ற இவன்; இகல் அமரர்
வேந்தனை – போர் ஆற்றல் மிக்க தேவர் தலைவனைப்; போர் கடந்தவன் – போரில் வஞ்சியாது எதிர் நின்று
வென்றவன்; இன்று போர் வலிது என்றான் – இன்றைய போர்
கடுமையானது என்று கூறினான்.
———
8030.
‘எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று-எம்பிரான்!-
கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட,
நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது
திண்ணிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால்.–29-
எம்பிரான் – எமக்குத் தலைவனே (என்று வீடணன்) இலக்குவனை
விளித்து); எண்ணியது ஒன்று – (நான்) எண்ணியதாகிய ஒன்றை;
உணர்த்துவது உளது – உனக்குத் தெரிவிக்க வேண்டி உளது; கண்
அகன் பெரும் படைத்தலைவர் காத்திட – (அது என்னவென்றால்)
இடமகன்ற பெரிய படைக்குத் தலைவர்கள் (உனக்குத் துணையாகக்)
காத்திட; நண்ணிய துணையொடும் – பொருந்திய துணைவர்களோடு;
பொருதல் நன்று – (இந்த இந்திரசித்தனுடன்) போரிடுதல் நல்லது; இது
– இக்கருத்தை; தெளியும் சிந்தையால் – ஆய்ந்து அறியும் மனத்தால்;
திண்ணிதின் உணர்தியால் – உறுதியாக எண்ணிப் பார்ப்பாய்.
———–
8031.
‘மாருதி, சாம்பவன், வானரேந்திரன்,
தாரை சேய், நீலன் என்று இனைய தன்மையார்,
வீரர், வந்து உடன் உற,-விமல!-நீ நெடும்
போர் செயத் தகுதியால்-புகழின் பூணினாய்!–30-
விமல – குற்றம் அற்றவனே; புகழின் பூணினாய் – புகழை
அணிகலனாக அணிந்தவனே; மாருதி – அனுமனும்; சாம்பவன் –
கரடித் தலைவன் ஆகிய சாம்பவானும்; வானரேந்திரன் –
குரங்குகளின் தலைவனாகிய சுக்ரீவனும்; தாரை சேய் – தாரையின்
மகனாகிய அங்கதனும்; நீலன் – படைத்தலைவன் ஆகிய நீலனும்;
என்று இனைய தன்மையார் – என்று கூறப்பட்ட இத்தகைய தன்மை
உள்ளவர்களான; வீரர் உடன் வந்து உற – வீரர்கள் உன்னுடன் வந்து பொருந்த; நீ – நீ (இந்திரசித்தனுடன்); நெடும்
போர் செயத்தகுதியால் – பெரும் போரை விளைவித்தல் தகுதியாகும்.
———–
8032.
‘பல் பதினாயிரம் தேவர் பக்கமா,
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன், உயிர் கொண்டு உய்ந்துளான்-
மல்லல் அம் தோளினாய்!-அமுதின் வன்மையால்.–31-
மல்லல் அம் தோளினாய் – பெருமை மிகுந்த அழகிய தோள்களை
உடையவனே; பல்பதினாயிரம் தேவர் – பல பதினாயிரக்கணக்கான
தேவர்கள்; பக்கமா – பக்க பலமாக வர;எல்லையில் சேனை கொண்டு
– அளவில்லாத படைகளைக் கொண்டு; எதிர்ந்த இந்திரன் – (இந்த
இந்திரசித்தனை) எதிர்த்த இந்திரன்; அமுதின் வன்மையால் –
அமுதம் உண்டதன் காரணமாக; ஒல்லையில் உடைந்தனன் –
விரைவில் தோற்றவனாகியும் கூட; உயிர் கொண்டு உய்ந்துளான் –
உயிரை விடாமல் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளான்.
———–
8033.
‘இனி அவை மறையுமோ, இந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
அனுமனைப் பிணித்துளன் ஆனபோது, இவன்
தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ?’–32-
இந்திரன் புயப்பனிவரை உள – இந்திரனுடைய தோள்களாகிய
பனிமலையில் (இமயமலையில்) உள்ள; நெடும் பாசப் பல்தழுப்பு –
(இவன் பிணித்ததால் ஏற்பட்ட) நீண்ட (மாயைக்) கயிற்றினால்
உண்டான பல தழும்புகள்; இனி அவை மறையுமோ – இனிமேல்
மறைந்து விடுமோ? அனுமனைப் பிணித்துளன் ஆனபோது – (அது
மட்டும் அல்லாமல்) அனுமனையே பிரமனது கணையால்
கட்டியவனாக இருக்கும் போது; இவன் – இந்த இந்திரசித்தனுடைய;
தனுமறை வித்தகம் – வில்பயிற்சியின் திறமை; தடுக்கற் பாலதோ –
(பகைவரால்) தடுத்தற்கு உரியதோ.
—————–
8034.
என்று, அவன் இறைஞ்சினன்; இளைய வள்ளலும்,
‘நன்று’ என மொழிதலும், நணுகினான் அரோ-
வன் திறல் மாருதி, ‘இலங்கைக் கோ மகன்
சென்றனன் இளவல்மேல்’ என்னும் சிந்தையான்.–33-
என்று – என்று கூறி; அவன் இறைஞ்சினன் – அந்த வீடணன்
வணங்கினான்; இளைய வள்ளலும் – இளைய வள்ளலாகிய
இலக்குவனும்; நன்று என மொழிதலும் – நல்லது என்று கூறிய
உடனே; இலங்கைக் கோமகன் – இலங்கை அரசனாகிய
இராவணனுடைய மகன்; இளவல் மேல் சென்றனன் என்னும் –
இளவலாகிய இலக்குவன் மீது செல்லுகிறான் என்று எண்ணுகிற;
சிந்தையான் – மனத்தினை உடையவனான; வன்திறல் மாருதி – மிகு
வலி உடைய அனுமன்; நணுகினான் – (இலக்குவனை) நெருங்கி
வந்தான். அரோ – அசை.
———-
8035.
கூற்றமும் கட்புலம் புதைப்ப, கோத்து எழு
தோற்றமும், இராவணி துணிபும், நோக்குறா,
மேல் திசை வாயிலை விட்டு, வெங் கடுங்
காற்று என அணுகினன், கடிதின் வந்துஅரோ,–34-
கோத்து எழு – (போருக்கு உரிய படைக்கலங்களைக்) கோத்து
எடுத்துகொண்டு எழுகின்ற; இராவணி – இராவணன் மகனாகிய
இந்திரசித்தனது; தோற்றமும் துணிபும் நோக்குறா – தோற்றத்தையும்
துணிவையும் பார்த்து; கூற்றமும் கட்புலம் புதைப்ப – (அனுமன் தன்
விரைவு கண்டு) இயமனும் (அஞ்சிக்) கண்களை மூடிக்கொள்ளுமாறு;
மேல்திசை வாயிலை விட்டு – (தான் இருந்த இலங்கையின்) மேற்குத்
திசை வாயிலை விட்டு; வெங்கடுங்காற்று என – கொடிய வேகமான
காற்றுப்போல; கடிதின் வந்து அணுகினன் – விரைந்து
(இலக்குவனிடம்) வந்து சேர்ந்தான்.
—————-
8036.
அங்கதன் முன்னரே ஆண்டையான்; அயல்
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார்;
செங் கதிரோன் மகன் முன்பு சென்றனன்,
சங்க நீர்க் கடல் எனத் தழீஇய தானையே.–35-
முன்னரே – முன்பே; அங்கதன் ஆண்டையான் – அங்கதன்
(இலக்குவன் இருந்த) அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்;
துங்கவன் தோளினார் அயல் எவரும் சுற்றினார் – உயர்ந்த
வலிமையான தோள்களை உடைய பிற வானர வீரர்கள் அனைவரும்
(இலக்குவனுக்குத் துனணயாக அவனைச்) சுற்றிச் சூழ்ந்தனர்; சங்க
நீர்க்கடல் எனத் தழீஇய தானையே – சங்குகள் நிறைந்த நீரையுடைய
கடல் போல (இலக்குவனைக்) குரங்குச் சேனை சூழ்ந்து நிற்க;
செங்கதிரோன் மகன் – சிவந்த கதிர்களை உடைய கதிரவன்
மகனாகிய சுக்ரீவன்; முன்பு சென்றனன் – (இலக்குவனுக்கு முன்னால்)
போரிடச் சென்றான்.
———
இரு படைகளும் பொருதல்
8037.
இரு திரைப் பெருங் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின
வருவன போல்வன்-மனத்தினால் சினம்
திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே.–36-
மனத்தினால் சினம் திருகின – மனத்தில் சினம் முதிர்ந்தவையாகி;
எதிர் எதிர் செல்லும் தானையே – எதிர் எதிராகச் செல்லும் (அரக்கர்
படை, குரங்குப் படை என இருபக்கத்துப்) படைகளும்; பொருதொழில்
வேட்டு- போர்த் தொழிலை விரும்பி; ஆர்த்துப் பொங்கின எழுந்து –
பேரொலி செய்து பொங்கி எழுந்து; இரண்டு திக்கினும் – இரண்டு
திசைகளில் இருந்தும்; இருதிரைப் பெருங்கடல் – பெரிய அலைகள்
உடைய பெருங் கடல்கள் (இரண்டு); வருவன போல்வன –
வருவனவற்றை ஒத்தன.
———
8038.
‘கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து,
எண்ணினால் பெறு பயன் எய்தும், இன்று’ எனா,
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்-
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே. –37-
இன்று – இன்றைக்கு; கருத்தினால் தெரிந்து எண்ணினால் –
கவனமாக நினைத்து எண்ணினால்; கண்ணினால் – கண்களினாலும்;
மனத்தினால் – மனத்தாலும்; பெறு பயன் எய்தும் எனா – பெறுகின்ற
பயனை (நாம்) அடைவோம் என்று நினைத்துக் கொண்டு; இமையவர்
– தேவர்கள்; நங்கைமாரொடும் – (தங்கள்) மனைவிமார்களுடன்;
விண்ணின் நாடு உறைவிடம் – (தங்கள் வாழும் இடமாகிய) வானுலகம்
ஆகிய உறைவிடம்; வெறுமை கூர – வெற்றிடமாக மிகும்படி;
நண்ணினார் – (போர்க்களத்துக்கு மேல் வந்து) நெருங்கினார்கள்.
——–
8039.
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி,
அத்தனை வீரரும் ஆர்த்த அவ் ஒலி,
நத்து ஒலி, முரசு ஒலி, நடுக்கலால், தலை-
பொத்தினர் செவிகளை-புரந்தராதியர்.–38-
புரந்தராதியர் – (போர் காணவந்த) இந்திரன் முதலிய தேவர்கள்;
இரு தானையும் – இரு பக்கத்துப் படைகளும்; ஒத்து – ஒப்பாக; உற்ற
உற்றுழி – போர் செய்ய நெருங்கிய போது; அத்தனை வீரரும் –
அவ்விரு படைகளில் உள்ள எல்லா வீரர்களும் ஆர்த்த அவ்ஒலி –
(எழுப்பிய) பேரோசையாகிய அந்த ஒலியும்; நத்து ஒலி – சங்கு
ஒலியும்; முரசு ஒலி – முரசு ஒலியும்; தலை நடுக்கலால் – தலையை
நடுங்கச் செய்தலால்; செவிகளை பொத்தினர் – (அச்சத்தால் தங்கள்)
காதுகளைக்கைகளால் மூடிக் கொண்டார்கள்.
———-
8040.
‘எற்றுமின், பற்றுமின், எறிமின், எய்ம்மின்’ என்று,
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும்,
முற்றுறு கடை யுகத்து இடியின் மும் மடி
பெற்றன, பிறந்தன, சிலையின் பேர் ஒலி.–39-
எற்றுமின் – (இரு திறத்துப் படை வீரரும்) அடியுங்கள்; பற்றுமின்
– பிடியுங்கள்; எறிமின் – (படைக்கலங்களை) எறியுங்கள்; எய்ம்மின் –
(அம்புகளை) எய்யுங்கள்; என்று – என்று; உற்றன உற்றன – (அந்த
அந்த நேரத்திற்குப்) பொருத்தமானவற்றைப் பொருத்தமானவற்றை;
உரைக்கும் ஓதையும் – சொல்லுகிற பேரோசையும்; சிலையின்
பேரொலி – வில்நாண்களின் பேரோசையும்; முற்றுறு கடையுகத்து –
(அனைத்தும்) அழியும் ஊழிக் கடைக்காலத்து; இடியின் –
(தோன்றுகிற) இடி ஓசையிலும்; மும்மடி – மூன்று மடங்கு அதிகமாக;
பெற்றன பிறந்தன – பெற்று எழுந்தன.
———–
8041.
கல் பட, மரம் பட, கால வேல் பட,
வில் படு கணை பட, வீழும் வீரர்தம்
எல் படும் உடல் பட, இரண்டு சேனையும்
பிற்பட, நெடு நிலம் பிளந்து பேருமால்.–40-
இரண்டு சேனையும் – இருதிறத்துப் படைகளும்; பிற்பட – (ஒன்று)
பின்னிடுதற்காக; கல்பட – (எறிகிற) கற்கள் படுதலினாலும்; மரம்பட –
மரங்கள் படுதலினாலும்; கால வேல்பட – கூற்றுவன் போன்ற
வேல்கள் படுதலினாலும்; வில்படுகணைபட – வில்லில் இருந்து (புறப்)
படும் அம்புகள் படுதலினாலும்; வீழும் வீரர்தம் – இறந்து பட்டு
விழுகின்ற வீரர்களுடைய; எல்படும் உடல்பட – இரவு (அல்) பகல்
போன்ற உடம்புகள் படுவதினாலும்; நெடு நிலம் – நீண்ட நிலவுலகம்;
(அதன் பொறையையும்) வேகத்தையும் தாங்கமுடியாமல்; பிளந்து
பேருமால் – பிளவு பட்டு நிலைகுலையும்.
——–
8042.
எழுத் தொடர் மரங்களால் எற்ற முற்றிய
விழுத் தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன,
ழுத்திய பெருஞ் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள, தலை இல, களத்தின் ஆடுவ. –41-
எழுத்தொடர் மரங்களால் – (குரங்கு வீரர்கள்) இரும்புத் தூண்
போன்ற மரங்களால்; எற்ற – தாக்கியதால்; முற்றிய – உயிர்
நீங்கியனவும்; விழுத்தலை முழுவதும் – சிறந்த தலைகள் முழுவதும்;
சிதறி வீ்ழ்ந்தன – சிதறி வீழ்ந்தனவும் ஆகிய; பெருஞ்சினத்து – மிக்க
கோபத்தில்; அழுத்திய – ஆழங்காற்பட்ட; அரக்கர் ஆக்கைகள் –
அரக்கரது உடம்புகள்; கழுத்து உள – கழுத்து உள்ளனவும்; தலை இல
– தலை இல்லாதனவுமாய்க்; களத்தின் ஆடுவ – போர்க்களத்தில்
(கவந்தங்களாய்) நின்று ஆடுவன.
———-
8043.
வெட்டிய தலையன, நரம்பு வீச மேல்
முட்டிய குருதிய, குரங்கின் மொய் உடல்-
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்தபின், நெடுங்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ.–42-
வெட்டிய தலையன – (குரங்குகள் அரக்கரால்) வெட்டப்பட்ட
தலைகளை உடையனவாயும்; நரம்பு வீச – நரம்புகள் (அறுபட்டு
மேல்) வீசுவதனால்; முட்டிய குருதிய – மேலே பாய்கிற உதிரத்தை
உடையனவாயும்; குரங்கின் மொய் உடல் – (உள்ள) குரங்குகளின்
வலிமையான உடம்புகள்; சுட்டு உயர் நெடுவனம் தொலைந்தபின் –
ஓங்கி உயர்ந்த பெரிய காடு (நெருப்பால்) அழிந்த பிறகு; நெடுங்
கட்டைகள் எரிவன போன்று – பெரிய கட்டைகள் எரிவன போல;
காட்டுவ – தோன்றுவன.
———-
அரக்கர் அழிவு
8044.
பிடித்தன நிருதரை, பெரிய தோள்களை
ஒடித்தன, கால் விசைத்து உதைத்த உந்தின,
கடித்தன கழுத்து அற, கைகளால் எடுத்து
அடித்தன, அரைத்தன, ஆர்த்த-வானரம். –43-
வானரம் – குரங்குகள்; நிருதரைப் பிடித்தன – அரக்கர்களைப்
பிடித்தும்; பெரிய தோள்களை ஒடித்தன – (அவர்களுடைய) பெரிய
தோள்களை (இழுத்து) ஒடித்தும்; கால் விசைத்து உதைத்த உந்தின –
காலால் வேகமாக உதைத்துத் தள்ளியும்; கழுத்து அற கடித்தன –
கழுத்து (த் துண்டுபடும்படி) கடித்தும்; கைகளால் எடுத்து அடித்தன –
கைகளால் எடுத்துத் (தரையில்) அடித்தும்; அரைத்தன – (நிலத்தில்)
தேய்த்தும்; ஆர்த்த – பேரொலி செய்தன.
———-
8045.
வாள்களின் கவிக் குல வீரர் வார் கழல்
தாள்களைத் துணித்தனர், தலையைத் தள்ளினர்
தோள்களைத் துணித்தனர், உடலைத் துண்ட வன்
போழ்களின் புரட்டினர், நிருதர் பொங்கினார்.–44-
நிருதர் – அரக்கர்கள்;வாள்களின் – வாள்களால்;கவிக்குல வீரர் –
குரங்குக்குல வீரர்களுடைய; வார் கழல் தாள்களைத் துணித்தனர் –
நீண்ட கழலணிந்த கால்களை வெட்டியும்; தலையைத் தள்ளினர் –
தலைகளைத் துண்டு படுத்தும்; தோள்களைத் துணித்தனர் –
தோள்களை (வெட்டி) வீழ்த்தியும்; உடலைத் துண்டவன் போழ்களின்
புரட்டினர் – உடலைத் துண்டு துண்டாகும்படி பிளந்தும்; பொங்கினார்
– (மிகுசினம்) பொங்கி நின்றனர்.
———-
8046.
மரங்களின், அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களைச் சிதறின; உடலைச் சிந்தின;
கரங்களை, கழல்களை, ஒடியக் காதின-
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே.–45-
குரங்கு எனப் பெயர் கொடு திரியும் கூற்றமே – குரங்கு என்ற
பெயரைக் கொண்டு திரிகின்ற இயமன்கள்; மரங்களின் –
மரங்களினால்; அரக்கரை – அரக்கர்களது; மலைகள் போன்று உயர் –
மலைகளைப் போல உயர்ந்த; சிரங்களைச் சிதறின – தலைகளைச்
சிதறச் செய்தும்; உடலைச் சிந்தின – உடம்புகளைச் சிந்தச் செய்தும்;
கரங்களை கழல்களை – கைகளையும் கால்களையும்; ஒடியக் காதின –
ஒடியுமாறு மோதியும் போரிட்டன.
————–
8047.
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன,
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன,
உடர்த்தலை வைர வேல் உருவ, உற்றவர்
மிடற்றினைக் கடித்து, உடன் விளிந்து போவன.–46
சுடர்த்தலை நெடும் பொறி-ஒளியைத் தன்னிடம் கொண்ட பெரிய
தீப்பொறிகளை; சொரியும் கண்ணன – வெளிப்படுத்தும் கண்களை
உடையனவாகிய (சில குரங்குகள்); அடர்த்து அலை நெடு மரம் –
(அரக்கர்களை) நெருங்கி வருத்துவதற்காகக் (கைக்கொண்ட) பெரிய
மரங்கள் (தங்கிய); அற்ற கையன – கைகள் அறுபட்டு விழ;
உடர்த்தலை வைரவேல் உருவ – (தங்களது) உடம்பின் கண்
வலிமையான வேல் உருவிப் (பாய நின்று); உற்றவர் – (தங்களின்
மேல் வேல் எறிந்து போரிட) வந்தவர்களுடைய; மிடற்றினைக் கடித்து
– கழுத்தைக் கடித்து (அவர்களைக் கொன்று); உடன் விளிந்து
போவன – அவர்களோடு சேர்ந்து இறந்து ஒழிந்தன.
———–
8048.
அடர்ந்தன கிரிகளை அசனிஏறு எனத்
தொடர்ந்தன, மழை பொழி தும்பிக் கும்பங்கள்
இடந்தன, மூளைகள் இனிதின் உண்டன,
கடந்தன, பசித் தழல்-கரடி, காதுவ.–47-
கரடி அடர்ந்தன – (சாம்பவானின்) கரடிப் படைகள் போர்
செய்வனவாய்; கிரிகளை அசனி ஏறு எனத் தொடர்ந்தன –
மலைகளை அழிக்கும் இடியேறு போலத் தொடர்ந்து சென்று;
மழைபொழி தும்பிக் கும்பங்கள் இடந்தன -(மதங்களை) மழை போல்
சொரிகின்ற யானைகளின் மத்தகங்களைப் பிளந்து; மூளைகள்
இனிதின் உண்டன – (அவற்றில் இருந்த) மூளைகளை இனிமையாக
உண்டு; காதுவ பசித்தழல் கடந்தன – (தங்களை)
வருத்துகின்றவையாகிய பசியாகிய தீமை ஒழிந்தன.
———
8049.
கொலை மதக் கரியன, குதிரை மேலன,
வல மணித் தேரன, ஆளின் மேலன,
சிலைகளின் குடுமிய, சிரத்தின் மேலன,-
மலைகளின் பெரியன குரங்கு-வாவுவ.–48-
மலைகளின் பெரியன – (உருவத்திலும் வலிமையிலும்) மலைகளைக்
காட்டிலும் பெரியனவாகிய குரங்குகள்; கொலை மதக்கரியன –
கொல்லும் தன்மையமைந்த மும்மதங்களை உடைய யானைகளின்
மேலும்; குதிரை மேலன – குதிரைகளின் மேலும்; வலமணித் தேரன –
வலிமை கொண்ட மணிகள் கட்டிய தேர்களின் மேலும்; வாளின்
மேலன – (அரக்கர்கள் கையில் கொண்டிருந்த) வாட்களின் மேலும்;
சிலைகளின் குடுமிய – வில்களின் நுனிகளின் மீதும்; சிரத்தின்
மேலன – பகை அரக்கர்களின் தலைகளின் மீதும்; வாவுவ – தாவிப்
பாய்ந்து (அவற்றை அழித்தன).
——–
8050.
தண்டு கொண்டு அரக்கர் தாக்க, சாய்ந்து உகு நிலைய,
சந்தின்
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலைத் தூவி,
கொண்டு எழும் அலைகளோடும் குரக்குஇனப் பிணத்தின்
குப்பை
மண்டு வெங் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ.–49-
அரக்கர் தண்டு கொண்டு தாக்க – அரக்க வீரர்கள் கதைகளைக்
கொண்டு தாக்கியதனால்; சாய்ந்து உகு நிலைய – சாய்ந்து விழுகின்ற
தன்மையுடைய (குரக்கு வீரர்களின் உடம்புகள்); சந்தின் துண்டங்கள்
ஆக -சந்தன மரத்தின் துண்டுகளாக; வாளின் துணிந்த பேர் உடலை
– அவர்களது வாட்களால் துண்டு பட்டுச் சிதறிக் கிடந்த பெரிய
உடம்புகளை; தூவி – (பல இடங்களில்) சிதற விட்டு; கொண்டு எழும்
அலைகளோடும் – மோதி எழும் அலைகளோடு; குரக்குஇனப்
பிணத்தின் குப்பை – குரங்குக் கூட்டங்களின் பிணக் கூட்டங்களின்
மிகுதியிலிருந்து; மண்டு வெங்குருதி ஆறு – நெருங்கிப் பெருகிய
இரத்த ஆறு; அம் மறிகடல் மடுத்த மாதோ – அந்த அலைகள்
மடங்கி வரும் கடலையும் நிறைத்து விட்டன.
————
8051.
பனி வென்ற பதாகை என்றும், பல் உளைப் பரிமா என்றும்,
தனு என்றும், வாளி என்றும், தண்டு என்றும், தனி வேல்
என்றும்,
சின வென்றி மதமா என்றும், தேர் என்றும் தெரிந்தது
இல்லை-
அனுமன் கை வயிரக் குன்றால் அரைப்புண்ட அரக்கர்
தானை.–50-
அனுமன் கை வயிரக்குன்றால் – அனுமனது கைகளாகிய வலிமை
மிகு மலைகளினால்; அரைப்புண்ட அரக்கர் தானை – (தரையில்)
தேய்த்து அழிக்கப்பட்ட அரக்கர் படையில்; பனி வென்ற பதாகை
என்றும் – வெண்ணிறத்தால் பனியையும் வெற்றி பெற்ற பெருங்கொடி
என்றும்; பல் உளைப் பரிமா என்றும் – பலவாகிய பிடரி மயிர்களை
உடைய குதிரைகள் என்றும்; தனு என்றும் – விற்கள் என்றும்; வாளி
என்றும் – அம்புகள் என்றும்; தண்டு என்றும் – கதைகள் என்றும்;
தனிவேல் என்றும் – ஒப்பற்ற வேற்படைகள் என்றும்; சினவென்றி
மதமா என்றும் – சினத்தையும் வெற்றியையும் உடைய மதங்கொண்ட
யானைகள் என்றும்; தேர் என்றும் – தேர்கள் என்றும்; தெரிந்தது
இல்லை – (எவையும் தனித்தனி அடையாளம்) தெரியவில்லை.
———–
8052.
பொங்கு தேர், புரவி, யானை, பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா வண்ணம், தன் உளே தழுவி, கூற்றம்,
‘எங்கு உள, உயிர்?’ என்று எண்ணி, இணைக் கையால்
கிளைத்ததுஎன்ப-
அங்கதன் மரம் கொண்டு எற்ற, அளறுபட்டு அழிந்த தானை.–51-
அங்கதன் மரம் கொண்டு எற்ற – அங்கதன் (தன் கையினால்)
மரத்தைக் கொண்டு தாக்க; அளறு பட்டு அழிந்த தானை – சேறாகி
அழிந்த அரக்கர்களது (நால்வகைப்) படையுள்; பொங்கு தேர் –
மிகுதியான தேர்களும்; புரவி – குதிரைகளும்; யானை – யானைகளும்;
பொருகழல் நிருதர் – போர் செய்யும் வீரக்கழலை அணிந்த
அரக்கர்களும்; என்னும் – நால்வகைப் படை என்று; கூற்றம் –
இயமன்; சங்கையும் இல்லாவண்ணம் – சிறிது கூட அச்சம்
கொள்ளாமல்; தன் உளே தழுவி – அவற்றைத் தனக்குள் தழுவிப்
பொருத்திக்கொண்டு; உயிர் எங்கு உள என்று எண்ணி – (இனியும்)
உயிர்கள் எங்காகிலும் தப்பி உள்ளனவோ? என்று எண்ணி;
இணைக்கையால் கிளைத்தது என்ப – (தன்) இரண்டு கைகளாலும்
கிளறிப் பார்த்தது என்று சொல்லுவார்கள்.
—————
8053.
தாக்கிய திசைகள்தோறும் தலைத்தலை மயங்கி, தம்மில்
நூக்கிய களிறும், தேரும், புரவியும், நூழில் செய்ய,
ஆக்கிய செருவை நோக்கி, அமரரோடு அசுரர் போரைத்
தூக்கினர், முனிவர்; ‘என்னை? இதற்கு அது தோற்கும்’
என்றார்.–52-
தாக்கிய திசைகள் தோறும் – (எதிர்த்துத்) தாக்கிப் (போரிடுகிற)
(எல்லாத்) திசைகளிலும்; தலைத்தலை மயங்கி – தமக்குள்ளே
(நேரிடையாகக்) கலந்து மயங்கி; தம்மில் நூக்கிய களிறும் – தம்மை
எதிர்த்த யானைகளையும்; தேரும் – தேர்களையும்; புரவியும் –
குதிரைப் படைகளையும்; நூழில் செய்ய – (குரங்குப்படை) கொன்று
குவிக்க; ஆக்கிய செருவை நோக்கி – (அவ்வாறு) நடந்த (அப்)
போரைப் பார்த்து; முனிவர் – முனிவர்கள்; அமரரோடு அசுரர் போரைத் தூக்கினர் –
தேவர்களோடு அசுரர்கள் (முன்பு செய்த) போரை ஒப்பிட்டுப் பார்த்து;
என்னை – (இப்போரின் தன்மை) எவ்வளவு; இதற்கு அது தோற்கும்
– இப்போருக்குத் தேவாசுரப் போர் ஒப்பாகாது தோற்கும்; என்றார் –
(என்று வியந்து) கூறினார்கள்.
————
8054.
எடுத்தது நிருதர் தானை; இரிந்தது குரங்கின் ஈட்டம்;
தடுத்தனர், முகங்கள் தாங்கி, தனித் தனி தலைவர் தள்ளி;
படுத்தனர் அரக்கர், வேலை பட்டதும்; படவும், பாரார்,
கடுத்தனர்; கடுத்த பின்னும், காத்தனர் கவியின் வீரர்.–53-
நிருதர் தானை எடுத்தது – (முதலில்) அரக்கர் சேனை (வெற்றித்)
தலை எடுத்தது; குரங்கின் ஈட்டம் இரிந்தது – (அதனால்)
குரங்குகளின் கூட்டம் (முன்நிற்க முடியாமல்) புறமுதுகிட்டு ஓடியது;
தலைவர் – (அந்நிலையில்) குரங்குப்படைத் தலைவர்கள்; தனித்தனி –
தனித்தனியாக, முகங்கள் தாங்கி தடுத்தனர் – (அரக்கரின்)
முன்னணிப் படைகளைத் தாங்கித் தடுத்தவர்களாய்; தள்ளிப்
படுத்தனர் – (அவர்களை) வீழ்த்திக் கொன்றார்கள்; அரக்கர் வேலை
பட்டதும் – (தலைவர்களால்) அரக்கர் படையாகிய பெருங்கடல்
அழிந்ததும்; படவும் பாரார் கடுத்தனர் – (அவ்வாறு) அழிவதைப்
பற்றி எண்ணிப் பாராதவர்களாய் (அரக்கர் மீண்டும் சினந்து)
தாக்கினார்கள்; கடுத்தபின்னும் – (இவ்வாறு அரக்கர் சினந்து) தாக்கிய
பின்பும்; கவியின் வீரர் காத்தனர் – குரங்குத் தலைவர்கள் தங்கள்
படையைக் காத்து நின்றனர்.
———–
8055.
சூலமும் மழுவும் தாங்கித் தோள் இரு நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன,
நீலன் நின்றுழியே நின்றான்; நிரந்தரம், கணங்களோடும்
காலன் என்று ஒருவன், யாண்டும் பிரிந்திலன், பாசக்
கையான்.–54-
சூலமும் – சூலாயுதத்தையும்; மழுவும் – மழுப்படையினையும்;
தாங்கி – (கைகளில்) தாங்கி; தோள் இரு நான்கும் தோன்ற – (தன்)
எட்டுத் தோள்களும் விளங்க; மூலம் வந்து – முதற் கடவுளர்களான
மூன்று மூர்த்திகளில் ஒருவனாக வந்து; உலகை உண்ணும் உருத்திர
மூர்த்தி என்ன – உலகத்து உயிர்களை அழித்து ஒடுக்கும் அழித்தல்
கடவுளான சிவபிரான் போல்; நீலன் – நீலன்; நின்றுழியே நின்றான் –
(தான் போரிட்டுப் பகைவரை அழித்த) இடத்திலேயே (பெயராமல்)
நின்றான்; காலன் என்று ஒருவன் – (அவன் அவ்வாறு போரிட்டு
நின்றதனால்) இயமன் என்று சொல்லப்படுகின்ற ஒருவன்;
கணங்களோடும் – தன் பரிவாரக் கூட்டத்தோடு; பாசக்கையான் –
பாசம் என்னும் ஆயுதத்தைக் கையில் கொண்டவனாய்; நிரந்தரம்
யாண்டும் பிரிந்திலன் – எப்பொழுதும் எவ்விடத்தும் பிரிந்து செல்ல
இயலாதவனாய் (அவ்விடத்திலேயே) நின்றான்.
——-
8056.
காற்று அலன்; புனலோ அல்லன்; கனல் அல்லன்;
இரண்டு கையால்,
ஆற்றலன், ஆற்றுகின்ற அருஞ் சமம் இதுவே ஆகில்,
ஏற்றம் என் பலவும் சொல்லி? ‘என் பதம் இழந்தேன்’
என்னா,
கூற்றமும் குலுங்கி அஞ்ச, வெங் கதக் குமுதன் கொன்றான்.–55-
கூற்றமும் – (கொல்லும் தொழில் வல்ல) இயமனும்; என்பதம்
இழந்தேன் என்னா – எனது தொழில் பெருமையை இழந்து விட்டேன்
என்று சொல்லி; குலுங்கி அஞ்ச – (உடல்) நடுங்கி அஞ்சும் படியாக;
வெங்கதக் குமுதன் கொன்றான் – கொடிய சினத்தை உடைய குமுதன்
எனும் வானரத்தலைவன்; (பகைவர் சேனையைக்) கொன்று அழித்து
விட்டான்; காற்று அலன் – (அவன் வீசி எறிந்து முழுதும் அழிக்கும்
தன்மை உடைமையால் காற்றாய் இருப்பானோவெனில்) காற்று
அல்லன்; புனலோ அல்லன் – (அடித்துக்கொல்லும் தன்மையால் நீராய் இருப்பானோவெனில்)
நீருமல்லன்; கனல் அல்லன் – (மிகச்சினந்து எதிர்த்து அழிப்பதனால்
தீயாய் இருப்பானோவெனில்) தீயுமல்லன்; ஆற்றலன் – வலிமை
உடைய அக்குமுதன்; இரண்டு கையால் – (போர்க்கருவிகள் எதுவும்
இல்லாமல் தன்) இரண்டு கைகளினாலும்; ஆற்றுகின்ற அருஞ்சமம்
இதுவே ஆகில் – செய்கின்ற போர் இத்தன்மை உடையது என்றால்;
பலவும் சொல்லி ஏற்றம் என் – (அவனது போர்த்திறமை பற்றிப்)
பலவாறு சொல்லிச் சிறப்பு என்ன?
————–
8057.
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறி பணை மரமே நின்ற, மரங்களில்; தெரியச் செப்பும்
குறியுடை மலைகள் தம்மில் குல வரைக் குலமே-கொள்ளா,
எறிதலோடு அறைதல் வேட்ட, இடவன் அன்று இடந்திலாத.–56-
எறிதலோடு – (கையில் எடுத்து வீசி) எறிதலோடு; அறைதல் –
மோதுதலையும்; வேட்ட இடவன் – விரும்பிய இடவன் (என்னும்
குரங்குப் படைத்தலைவன்); அன்று இடந்திலாத – அன்று
(அப்போரில்) வேரோடு பிடுங்கி எடுக்காமல் விட்டவை; நின்ற
மரங்களில் – (உலகில்) உள்ள மரங்களில்; மறி கடல் புடைசூழ்
வைப்பின் – அலைகள் மறித்து வருகிற கடலால் பக்கங்களில்
சூழப்பட்ட இந்த நிலவுலகில்; மானவன் வாளி போன செறி பணை
மரமே – இராமனது அம்பு ஊடுருவிச் சென்ற நெருங்கிய பெரிய மரா
மரங்கள் மட்டுமே; தெரியச் செப்பும் – சிறப்பித்துச் சொல்லப்படுகிற;
குறியுடை மலைகள் தம்மில் – பெயர்களை உடைய
மலைகளுக்குள்ளே; கொள்ளா – (அவன்-) எடுக்காதவை; குலவரைக்
குலமே – குலமலைகளின் கூட்டமே.
மானவன் – மனு வழி வந்தவன்.விவஸ்வாந்
என்னும் பெயர் கொண்ட சூரியன் மகனாகிய மனு என்பவன் வைவஸ்வதமநு என்று கூறப்படுவான்; இவனே இராமனது குலத்து
மூலமானவன் என்பர்.
————–
8058.
‘வாம் பரி, மத மா, மான் தேர், வாள் எயிற்று
அரக்கர் மானப்,
பாம்பினும் வெய்யோர் சாலப் படுகுவர்; பயம் இன்று,
இன்றே;
தூம்பு உறழ் குருதி மண்ட, தொடர் நெடு மரங்கள் சுற்றிச்
சாம்பவன் கொல்ல, சாம்பும்’ என்று கொண்டு அமரர்
ஆர்த்தார்.–57-
வாம்பரி – தாவி ஓடிச் செல்லுகின்ற குதிரைகளையும்; மதமா –
மதங்கொண்ட விலங்காகிய யானைகளையும்; மான் தேர் – குதிரைகள்
பூட்டப்பட்ட தேர்களையும் உடையராய்; மானப் பாம்பினும்
வெய்யோர் – சினம் மிக்க பாம்பினும் கொடியவர்களாகிய; வாள்
எயிற்று அரக்கர் – ஒளி பொருந்திய பற்களை உடைய அரக்க
வீரர்கள்; சாலப்படுகுவர் – மிகுதியாக இறந்து படுவார்கள்; பயம்
இன்று இன்றே – (இனி நமக்கு அவர்களால் ஏற்படும்) பயம் இல்லை
அல்லவா?; தூம்பு உறழ் குருதி மண்ட – மதகு வாயில் நீர் விழுதல்
போல (மிகுதியான) குருதி மிகும்படியாக; தொடர் நெடு மரங்கள் சுற்றி
– வரிசையாக நீண்ட மரங்களை (எடுத்துச்) சுற்றி; சாம்பவன் கொல்ல
– சாம்பவான் என்னும் வீரன் கொல்வதனால்; சாம்பும் என்று
கொண்டு – (இந்த அரக்கர் படை முழுதும்) இறந்து அழியும் என்ற
(எண்ணம்) கொண்டு; அமரர் ஆர்த்தார் – தேவர்கள் பேரொலி
செய்தார்கள்.
——–
8059.
பொரும் குலப் புரவி ஆன திரைகளும், கலம் பொன்
தேரும்,
இருங் களி யானை ஆன மகரமும், இரியல் போக,
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த
கருங் கடல் கலக்கும் மத்தின், பனசனும் கலக்கிப் புக்கான். –58-
பொரும் குலப் புரவி ஆன திரைகளும் – போரிடுகின்ற
குதிரைகளின் கூட்டமாகிய அலைகளும்; கலம் பொன் தேரும் –
அழகிய தேர்களாகிய மரக்கலங்களும்; இருங்களி யானை ஆன
மகரமும் – பெரிய மதக்களிப்பினை உடைய யானைகளாகிய சுறா
மீன்களும்; இரியல் போக – கலங்கிப்பின்னிட; நெருங்கிய படைகள்
ஆன மீன்குலம் – பல்வகைப் படைக்கலங்களாகிய பலவகை
மீன்களின் கூட்டங்கள்; நெரிந்து சிந்த – கலங்கிச் சிதற; கருங்கடல்
கலக்கும் மத்தின் – பாற்கடலைக்கலக்கின (மந்தரம் என்னும்) மத்துப்
போல; பனசனும் கலக்கிப் புக்கான் – பனசன் என்னும் குரங்கு
வீரனும் (அரக்கரது படைகளாகிய கடலைக்) கலக்கிக் கொண்டு
புகுந்தான்.
———-
8060.
மயிந்தனும் துமிந்தன் தானும், மழைக் குலம் கிழித்து,
வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை
ஒத்தார்;
கயம் குடைந்து ஆடும் வீரக் களிறு ஒத்தான், கவயன்,
காலின்
பெயர்ந்திலன், உற்றது அல்லால், கேசரி பெரும் போர்
பெற்றான்.–59-
மயிந்தனும் துமிந்தன் தானும் – மயிந்தனும் (அவன் தம்பியாகிய)
துமிந்தன் என்பவனும்; மழைக்குலம் கிழித்து – மேகக் கூட்டங்களைக்
கிழித்துக்கொண்டு; வானத்து உயர்ந்து எழும் – வானத்தை நோக்கி
உயர்ந்து எழுகின்ற; எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் –
கழுகுகளுக்கு அரசர்களாகிய உடன் பிறந்த சம்பாதி சடாயு
ஆகியோரை ஒத்துத் தோன்றினார்கள்; கவயன் – கவயன் என்னும்
வானர வீரன்; கயங்குடைந்தாடும் வீரக் களிறொத்தான் – குளத்தில்
மூழ்கிக் கலக்கி விளையாடுகிற வீரத்தன்மை உடைய ஆண்
யானையை ஒத்து விளங்கினான்; கேசரி – கேசரி என்னும்
பெயருடைய குரங்கு வீரன்; உற்றது அல்லால் காலின் பெயர்ந்திலன்
– (ஓரிடத்து நிலைத்து இருத்தலல்லாமல்) அடி பெயர்த்துப் பின்
வாங்குதல் இல்லாமல்; பெரும் போர் பெற்றான் – (உறுதியாக நின்று)
பெரிய போரைச் செய்தான்.
———
8061.
பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர், பிணத்தின்
குப்பை
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின்
வந்துற்று,
இரிந்தன கவியும் கூடி எடுத்தன; எடுத்தலோடும்,
சரிந்தது நிருதர் தானை; தாக்கினன் அரக்கன், தானே.–60-
பெரும் படைத்தலைவர் யாரும் பெயர்ந்திலர்- (குரங்குப்) பெரும்
படைத்தலைவர்கள் எல்லாரும் சலித்துப் பின்வாங்காதவர்களாய்;
வரம்பு இல – எல்லை இல்லாத; பிணத்தின் குப்பை –
பிணக்குவியல்களை; பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் –
குவியும்படி பேரொலி செய்து போர் செய்கின்ற பொழுது; இரிந்தன
கவியும் – தோற்று ஓடிய குரங்குகளும்; வந்துற்று – (மன வலிமை
பெற்று) மீண்டும் வந்து; கூடி எடுத்தன – உடன் கூடிப் போர்
செய்யத் தொடங்கின; எடுத்தலோடும் – போர் செய்யத் தொடங்கிய
பொழுது; நிருதர் தானை சரிந்தது – அரக்கர் படை கலங்கி நிலை
தளர்ந்தது; அரக்கன் – (அதுகண்டு) அரக்கனாகிய இந்திரசித்தன்;
தானே தாக்கினன் – தான் மட்டும் (தனி ஒருவனாக நின்று) (வானரப்
படைகளைத்) தாக்கினான்.
————
இந்திரசித்தன் பெரும்போர்
எழுசீர் ஆசிரியச் சந்த விருத்தம்
8062.
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு
புடை பரந்து உயர, அடல் வலித்
தூண் எறிந்தனைய விரல்கள் கோதையொடு
சுவடு எறிந்தது ஒரு தொழில் பட,
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை,
செவிடு எறிந்து உடைய,-மிடல் வலோன்
நாண் எறிந்து, முறை முறை தொடர்ந்து, கடல்
உலகம் யாவையும் நடுக்கினான்.–61-
மிடல் வலோன் – வலிமை மிக்கவனாகிய (இந்திரசித்தன்); பூண்
எறிந்த குவடு அனைய – அணிகலங்கள் (பூட்டப்பட்டு) ஒளி
வெளிக்காலுகிற மலையை ஒத்த; தோள்கள் – (தன்) இரு தோள்களும் இருபுடை; பரந்து உயர – (போர் கண்டு பூரித்து) இரு
பக்கங்களிலும் பரவி உயரவும்; அடல் வலித் தூண் எறிந்தனைய
விரல்கள் – அழிக்கும் வலிமையுள்ள தூண்கள் பொருந்தியது போல்
அமைந்த கை விரல்கள்; கோதையொடு சுவடு எறிந்தது ஒரு
தொழில்பட – விரற்செறி (அணிந்து) தழும்பு படுதல் ஆகிய ஒரு
தொழிலைச் செய்யவும்; சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை –
நீண்ட தூரம் பரவிப் பரந்த திசைகளும் மலைகளும்; செவிடு எறிந்து
உடைய – செவிடு படும் (ஓசையை) எழுப்பித் துண்டு துண்டாக; நாண்
எறிந்து – வில்லினது நாணைக் கையால் தெறித்து; முறை முறை
தொடர்ந்து – (அந்த ஒலி) வரிசை வரிசையாகப் பரவும் படி செய்து;
கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கடலால் சூழப்பட்ட உலகம்
முழுவதையும் நடுங்கும்படி செய்தான்.
———–
8063.
சிங்கஏறு, கடல்போல் முழங்கி, ‘நிமிர்
தேர் கடாய் நெடிது செல்க’ எனா,
அங்கதாதியர் அனுங்க, வானவர்கள்
அஞ்ச, வெஞ் சின அனந்தன் மாச்
சங்கபால குளிகாதி வால் எயிறு
தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெங் கண் நாகம் என, வேகமாய், உருமு
வெள்க, வெங் கணைகள் சிந்தினான்.–62-
சிங்க ஏறு – ஆண்சிங்கம் போன்றவனாகிய இந்திரசித்தன்; கடல்
போல் முழங்கி – கடல் போலப் பேரொலி செய்து; நிமிர் தேர் –
பெரிய உயர்ந்த தேரைக்; கடாய் நெடிது செல்க எனா – செலுத்திப்
(பகைப்படையுள்) நீண்ட தூரம் செல்க என்று (தேர்ப்பாகனிடம் கூறி);
அங்கதாதியர் அனுங்க – அங்கதன் முதலிய வானவர் மனம்
வருந்தவும்; வானவர்கள் அஞ்ச – தேவர்கள் அஞ்சவும்;
உருமுவெள்க – இடிகளும் (அம்பின் கொடுமை கண்டு ஈடாகோம்
என) வெட்கம் அடையவும்; வால் எயிறு – ஒளி பொருந்திய பற்கள்;
தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – வெளிப்படுத்துகிற கொடிய
தீப்போன்ற நஞ்சைக் கக்கிக்கொண்டு வருகின்ற; வெஞ்சின அனந்தன்
– கொடிய சினத்தை உடைய அனந்தன்; மாச்சங்க பால – பெரிய
சங்க பாலன்; குளிகாதி வெங்கண் நாகம் என – குளிகன் முதலிய
கொடிய கண்களை உடைய நாகங்கள் என்று கூறும்படியாக; வேகமாய் – விரைவாக;
வெங்கணைகள் சிந்தினான் – கொடிய அம்புகளைச் செலுத்தினான்.
——–
8064.
சுற்றும் வந்து, கவி வீரர் வீசிய
சுடர்த் தடங் கல் வரை, தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன;
எழுந்து சேணிடை இழிந்தபோல்,
வெற்றி வெங் கணை படப் பட, தலைகள்
விண்ணினூடு திசைமீது போய்,
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை
அழுந்துகின்றன அனந்தமால்.–63-
வெற்றி வெங்கணைகள் படப்பட – (இந்திரசித்தன் எய்த) வெற்றி
பொருந்திய கொடிய அம்புகள் மேலும் மேலும் படுதலால்; கவி வீரர்
– வானர வீரர்கள்; சுற்றும் வந்து வீசிய – (இந்திரசித்தனைச்) சூழ்ந்து
சுற்றிக்கொண்டு (அவன் மேல்) வீசிய; சுடர்த் தடங்கல் வரை – ஒளி
உடைய கல்லால் ஆகிய மலைகளும்; தொல் மரம் – (பழைய) பெரிய
மரங்களும்; இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன – முறிந்து போய்ப்
பொடிப் பொடியாய்ச் சிந்தின; தலைகள் – (அறுபட்டு மேல் எழுந்த
வானர வீரர்களது) தலைகள்; விண்ணினூடு எழுந்து – சேணிடை
இழிந்த போல் (பறவைகள்) ஆகாயத்தில் நெடுந்தூரம் மேல் எழுந்து
(அங்கிருந்து) கீழிறங்குவன போல; திசை மீது போய் – (பல)
திசைகளிலும் சென்று; அற்று விழுந்து எழுந்தன – துண்டு பட்டு
விழுந்து சிதறி எழுந்தனவாய்; மண்ணிடை அழுந்துகின்றன –
நிலத்தில் புதைந்து போனவை; அனந்தமால் – எண்ணிக்கையில்
அடங்காதவை.
———-
8065.
சிலைத் தடம் பொழி வயக் கடும் பகழி
செல்ல, ஒல்கினர், சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்றுதொறு
உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்,
நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல, எதிர்
சென்று சென்று, உற நெருக்கலால்,
மலைத் தடங்களொடு உரத் தலம் கழல,
ஊடு சென்ற, பல வாளியே. –64-
சிலைத்தடம் பொழி வயக்கடும் பகழி செல்ல ஒல்கினர் – (சில
குரங்கு வீரர்கள், இந்திரசித்தனின்) வில்லில் இருந்து எய்யப்பட்ட
கொடிய விரைவான அம்புகள் (தங்கள்) மேல் படுதலால்
தளர்ந்தவர்களாகி; சினத்தினால் – (அவன் மீது கொண்ட)
சினத்தினால்; உலைத்து எறிந்திட – வீசி எறிந்திடுவதற்காக; எடுத்த
குன்று தொறு – (கையில்) எடுத்த மலைகள் தோறும்; உடல் பரங்கள்
கொடு ஒதுங்கினார் – தங்கள் உடம்பின் பாரத்தைச் சுருக்கிக் கொண்டு
(தளர்ச்சி நீங்க) ஒதுங்கி நின்றனர்; நிலைத்து நின்று – (அவ்வாறு
ஒதுங்கி) நிலைபெற்று நின்று; சினம் முந்து செல்ல – சினம் தங்களை
இழுத்துக்கொண்டு முன்னே செல்லுதலால்; எதிர்சென்று சென்று உற
நெருக்கலால் – எதிரில் போய்ப் போய் மிக நெருங்குவதால்; மலைத்
தடங்களொடு – (அவர்கள் கையில் ஏந்திய) மலைகளுடன்; உரத்தலம்
கழல – (அவற்றில் மறைந்து கொண்டுள்ள அவர்களது) மார்பில் பட்டு
வெளிப்படுமாறு; பல வாளியே – பல அம்புகள்; ஊடு சென்ற –
ஊடுருவிச் சென்றன.
———-
8066.
முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம்
முடிந்து மாள்வன, தடிந்து போய்,
கழுத்த, கைய, நிமிர் கால, வால, பல
கண்டமானபடி கண்டு, நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய,
எற்ற, அற்றன எழுந்து மேல்,
விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள்
வீசி வீசி, உடன் வீழுமால். –65-
முழுத்தம் ஒன்றில் – (இரண்டு நாழிகை கொண்ட) ஒரு முகூர்த்த
காலத்தில்; ஒரு வெள்ள வானரம் – ஒரு வெள்ளம் எனும் அளவு
கொண்ட வானரப் படைகள்; முடிந்து – (தங்கள்) ஆயுள் முடிந்து;
தடிந்து போய் மாள்வன – துணிபட்டுப் போய் இறந்து படுவனவாகி;
கழுத்த – கழுத்தை உடையனவும்; கைய – கைகளை உடையனவும்;
நிமிர் கால – நீண்ட கால்களை உடையனவும்; வால – வாலினை
உடையனவும்; பல கண்ட மானபடி நேர் கண்டு – (ஆகிய பல
வானரங்கள்) பல துண்டுகளாகிப் போனதை நேரிடையாகக் கண்டு;
எழுத்தொடர்ந்த படர் தோள்களால் – இரும்புத் தூண் போன்று
அகன்ற பெரிய தோள்களினால்; எறிய
எற்ற மேல் எழுந்து – (அவ்விந்திரசித்தனை) எறிவதற்கும்
மோதுவதற்கும் வானத்தில் (பாய்ந்து) எழுந்து சென்று; விழுத்த
பைந்தலைய – (அவன் செலுத்திய அம்புகளினால்) தள்ளப்பட்ட
பசுமையான தலைகளை உடையனவாய்; வேணுமால் வரைகள் வீசி
வீசி – மூங்கில்கள் வளர்ந்த பெரிய மலைகளை வீசி வீசி; அற்றன
உடன் வீழுமால் – (தலைகளும் மலைகளும்) அழியத் (தாமும்)
ஒருசேர விழுவனவாயின.
———–
8067.
அற்ற பைந் தலை அரிந்து சென்றன
அயில் கடுங் கணை, வெயில்கள் போல்,
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு
நாகலோகம் அது புக்கவால்;
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது, ஒரு
மேடு பள்ளம் வெளி இன்மையால்,
உற்ற செங் குருதி வெள்ளம், உள்ள திரை.
ஓத வேலையொடும் ஒத்ததால்.–66-
அற்ற பைந்தலை – அறுபட்ட (வானரங்களின்) பசுமையான
தலைகளை; அரிந்து சென்றன – அரிந்துகொண்டு சென்றனவாகிய;
அயில்கடுங் கணை – கூர்மையையும் வேகத்தையும் உடைய
(இந்திரசித்தனது) அம்புகள்; வெயில்கள் போல் – (சிறு தரை
வெடிப்பினுள்ளும் நுழைந்து செல்லும்) வெய்யில் போலவும்; புற்று
அடைந்த கொடு வெவ்அராவின் – புற்றினை அடைந்த மிக்க கொடிய
பாம்புகள் போலவும்; நெடு நாக லோகம் அது புக்கவால் – (ஆழமாக)
நீண்டுள்ள நாக உலகத்தைச் (சென்று) சேர்ந்தன; ஒரு மேடு பள்ளம்
வெளி இன்மையால் – ஒரு மேடும் பள்ளமும் சம நிலமும்
இல்லாதபடி; வெற்ற வெள்ளிடை விரைந்து போவது –
(செய்துகொண்டு) வெட்ட வெளியிடை விரைவாகச் செல்வதாகிய; உற்ற
செங்குருதி வெள்ளம் – (செயற்கையாய்ப்) பொருந்தித் தோன்றிய
சிவந்த குருதியாகிய வெள்ளம்; உள்ள திரை – (இயற்கையாய்) உள்ள
அலைகளையும்; ஓத வேலையொடும் ஒத்ததால் – பொங்குதலையும்
உடைய கடலோடு ஒத்துத் (தோன்றியது).
———-
8068.
விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய,
மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய
கால, வீசின் நிமிர் கைய, வாய்த்
தெழிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின்
உன்னுமேல்-சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின்மேல், அவன்
விடும் கொடும் பகழி பாயவே.–67-
சிகரம் யாவையும் – மலைகள் எல்லாவற்றையும்; பழிக்கும் மேனிய
குரங்கின் மேல் – (தமக்கு ஒப்பாக என்று) பழிக்கத்தக்க வலியும்
பெரிய தன்மையும் உடைய) உடம்புகளையும் உடைய குரங்குகளின்
மீது; அவன் விடும் கொடும் பகழி பாயவே – அந்த இந்திரசித்தன்
செலுத்திய கொடுமையான அம்புகள் பாயும் போது; விழிக்கு மேல்
விழிய – (அவ்வானரங்கள் கண்) விழித்துப் பார்த்தால் (அந்த)
விழிகளின் மீதும்; நிற்கின் மார்பிடைய – (எதிர்த்து) நின்றால்
மார்புகளின் மீதும்; மீளு மேல் முதுக – புறங்காட்டி ஓடுமானால்
முதுகுகளின் மீதும்; கழிக்குமேல் மேனிய – விலகித் தப்ப
முயலுமாயின் உடம்புகளின் மீதும்; உயர ஓடுமேல் நெடிய கால –
உயரக் (குதித்துத் தப்பி) ஓடுமானால் நீண்ட கால்களின் மீதும்; வீசின்
நிமிர்கைய – கைகளை வீசுமாயின் உயர்ந்த கைகளின் மீதும்;
வாய்த்தெழிக்கு மேல் அகவும் நாவ – வாயினால் அதட்டும் என்றால்
அசைகின்ற நாக்குகளிலும்; சிந்தையில் உன்னுமேல் – மனத்தினால்
நினைக்குமாயின் (அந்த மனத்தின் மீதும்) அந்த அம்புகள்
செல்லுகின்றனவாயின.
———–
8069.
மொய் எடுத்த கணை மாரியால், இடை
முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்;
எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது
யாதும் ஒன்று செவி உற்றிலார்;
‘மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும்
விழுந்து போன’ எனும் விம்மலால்,
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை
கண்டு,-தேவர்கள்-கலங்கினார்.–68-
தேவர்கள் – (போர் கண்டு நின்ற) தேவர்கள்; மொய் எடுத்த
கணை மாரியால் – (இந்திரசித்தன் எய்த) வலிமை மிகுந்த
அம்பு மழையினால்; இடை முடிந்தது ஒன்றும் – இடையில் நடந்த
செயல்கள் ஒன்றையும்; முறை கண்டிலார் – முறையாகக்
கண்டார்கள் இல்லை; எய்விடத்து – (அவன்) அம்பு எய்யும் பொழுது;
எறியும் நாணின் ஓசையலது – (விரல்களால்) தெறிக்கின்ற ஓசை
அல்லாது; யாதும் ஒன்று செவி உற்றிலார் – வேறு எந்த ஓசையையும்
காதினால் கேட்டு உணர்ந்தார்கள் இல்லை; மெய் எடுத்த கவி
வெள்ளம் யாவையும் – உடம்பு எடுத்த குரங்குக் கூட்டங்கள் எல்லாம்;
விழுந்து போன – இறந்து போய் விட்டன; எனும் விம்மலால் –
என்னும் துன்பத்தினால்; கை எடுத்தன குரங்கின் – கைகளை மேலும்
தூக்கியனவாகிய குரங்குகளின்; ஓடும் முறை கண்டு – ஓடுகிற
தன்மையைக் கண்டு; கலங்கினார் – கலங்கினார்கள்.
———
8070.
கண்ட வானரம் அனந்த கோடி முறை
கண்டமானபடி கண்ட அக்
கண்டன், மாறு ஒருவர் இன்மை கண்டு, கணை
மாறினான், விடுதல் இன்மையாய்;
கண்ட காலையில், விலங்கினான் இரவி
காதல், காதுவது ஓர் காதலால்,
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர்
மராமரம் சுலவு கையினான்.–69-
கண்ட அனந்த கோடி வானரம் – (தன்) (கண்ணின் முன்
எதிர்ப்பட்டுக்) கண்ட பல கோடி வானர வீரர்கள்; முறை கண்டமான
படி கண்ட – முறையே (பல) துண்டங்களானதைக் கண்ட;
அக்கண்டன் – (அந்த) முள் போன்று கொடியவனாகிய இந்திரசித்தன்;
மாறு ஒருவர் இன்மை கண்டு – தன்னை (எதிர்க்க வேறு) ஒருவரும்
இல்லாமையைப் பார்த்து; கணை மாறினான் – அம்புகளைச்
செலுத்துதலை நிறுத்தினான்; விடுதல் இன்மையாய்க் கண்ட
காலையில் – (அவன் அவ்வாறு) அம்பு விடுதல் இல்லாது நின்ற
தன்மையைக் கண்ட அளவிலே; விலங்கினான் இரவி காதல் –
(வெகு தூரத்தில்) விலகி நின்றிருந்தவனாகிய சூரியன் மகனாகிய
சுக்கிரீவன்; காதுவது ஓர் காதலால் – (அவனோடு எதிர்த்துப்)
போரிட வேண்டும் என்ற விருப்பத்தால்; கண்ட கார் சிதைய –
(வானத்தில்) காணப்படுகிற மேகங்கள் சிதையும்படி; மீது உயர்ந்து ஒளிர் மராமரம் – மேல் உயர்ந்து ஒளிவிழுங்குகிற
மராமரத்தைப் (பிடுங்கி எடுத்து); சுலவு கையினான் – சுற்றுகின்ற
கையை உடையவனாயினான்; (அடுத்த பாடலிலும் தொடரும்)
———–
8071.
உடைந்து, தன் படை உலைந்து சிந்தி, உயி்ர்
ஒல்க, வெல் செரு உடற்றலால்,
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என
மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்,
இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய
காவல் பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர,
வீசினான்; நிருதர் கூசினார்.–70-
தன் படை உடைந்து உலைந்து சிந்தி – தனது (குரங்குப்)
படைவலிமை கேட்டு வருந்திச் சிதறி; உயிர் ஒல்க – உயிர் விடும்
படியாக; வெல் செரு உடற்றலால் – (இந்திரசித்தன்) வெல்லும்
போரினைச் செய்தலால்; கடைந்து – (திருப்பாற்கடலைக்) கடைந்து;
தெள்ளமுது கொள்ளும் – தெளிந்த அமிழ்தத்தைப் பெற்ற; வள்ளல்
என – வள்ளல்தன்மை உடைய வாலி போல்; மேல் நிமிர்ந்தது ஓர்
கறுப்பினான் – மேலும் மேலும் பொங்குகின்ற ஒப்பற்ற சினத்தினை
உடையவனாய்; இடைந்து சென்றவனை எய்தி – (போரை நிறுத்தி)
விலகிச் சென்றவனாகிய இந்திர சித்தனை நெருங்கி; எய்த அரிய
காவல் பெற்று இகல் இயற்றுவான் – (மற்றவர்) நெருங்குவதற்கு
முடியாத காவலாகப் பொருந்தப் பெற்றுப் போரினை இயற்றுவதற்காக;
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர – நெருங்கி நின்ற
அரக்கர படையாகிய கடல் நிலைகுலையும் படியாக; வீசினான் –
(அந்த மராமரத்தை) வீசிப் போர் செய்தான்; நிருதர் கூசினார் –
(அது கண்டு) அரக்கர்கள் கூச்சம் அடைந்தார்கள்.
———
8072.
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட, ஒரு
மரா மரம் கொடு துகைத்துளான்
வெற்றி கண்டு, ‘வலி நன்று, நன்று!’ என
வியந்து, வெங் கணை தெரிந்து, அவன்
நெற்றியின்தலை இரண்டு, மார்பிடை
ஓர் அஞ்சு, நஞ்சு என நிறுத்தினான்;
பற்றி வந்த மரம் வேறு வேறு உற
நொறுக்கி, நுண் பொடி பரப்பினான்.–71-
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட – (தன்னைச்) சுற்றி நின்ற
(அரக்கர்) படை சிதறி ஓடும்படியாக; ஒரு மராமரம் கொடு
துகைத்துளான் – ஒரு மராமரத்தைக் (கையில்) கொண்டு தாக்கி
வருந்துபவனான சுக்கிரீவனது வெற்றியைக் கண்டு; வலி நன்று நன்று
என வியந்து – இவனுடைய வலிமை நன்று நன்று என்று
(இந்திரசித்தன்) வியந்து (புகழ்ந்து); வெங்கணை தெரிந்து – கொடிய
அம்புகளைத் தேர்ந்தெடுத்து; அவன் – அந்தச் சுக்கிரீவனது;
நெற்றியின் தலை இரண்டு – நெற்றியின் இடத்து இரண்டு
அம்புகளையும்; மார்பிடை ஓர் அஞ்சு – மார்பின் இடத்தில் ஒப்பற்ற
ஐந்து அம்புகளையும்; நஞ்சு என நிறுத்தினான் – நஞ்சு என்று
கூறுமாறு பதியும் படி எய்தான்; பற்றி வந்த மரம் – (அந்தச்
சுக்கிரீவன்) கையில் பற்றி (எடுத்து) வந்த மராமரத்தை; வேறு வேறு
உற நொறுக்கி – துண்டு துண்டாகுமாறு நொறுக்கி; நுண் பொடி
பரப்பினான் – நுண்மையான பொடியாக்கித் தூவச் செய்தான்.
————-
அனுமன் குன்று எறிதல்
8073.
அக் கணத்து, அனுமன் ஆலகாலம் என-
லாயது ஓர் வெகுளி ஆயினான்;
புக்கு, அனைத்து உலகமும் குலுங்க நிமிர்
தோள் புடைத்து உருமுபோல் உறா,
‘இக் கணத்து அவன் இறக்கும்’ என்பது ஒரு
குன்று எடுத்து, மிசை ஏவினான்;
உக்கது அக் கிரி, சொரிந்த வாளிகளின்,
ஊழ் இலாத சிறு பூழியாய்.–72-
அக்கணத்து – அப்பொழுது; அனுமன் – அனுமன்; ஆலகாலம் –
ஆலகால நஞ்சு; எனலாயது – என்று கூறும் படியாக (உள்ள); ஓர்
வெகுளி ஆயினான் – ஒப்பற்ற சினத்தைக் கொண்டவனாய்; புக்கு –
(அப்போர்க்களம்) புகுந்து; அனைத்து உலகமும் குலுங்க – எல்லா
உலகங்களும் (அஞ்சி நடுங்கிக்) குலுங்கும் படியாக; நிமிர் தோள் புடைத்து – (தனது) உயர்ந்த தோளைத்
தட்டி; உருமு போல் உறா – இடிபோல் பொருந்தி பேரொலி செய்து;
இக்கணத்து இவன் இறக்கும் என்பது – இப்பொழுதே இந்த
இந்திரசித்தன் இறந்து ஒழிவான் என்று பார்த்தவர் கூறும் படியாக;
ஒரு குன்று எடுத்து – ஒரு (பெரிய) மலையை எடுத்து; மிசை
ஏவினான் – அந்த இந்திரசித்தன் மீது வீசி எறிந்தான். சொரிந்த
வாளிகளின் – (அந்த இந்திரசித்தன்) எய்த அம்புகளினால்; அக்கிரி –
அந்த மலை; ஊழ் இலாதசிறு பூழியாய் – முறைமை இல்லாதத சிறிய
துகள்களாக; உக்கது – சிதறிவிட்டது.
———–
இந்திரசித்தன் – அனுமன் வீரஉரை
8074.
‘நில், அடா! சிறிது நில், அடா! உனை
நினைந்து வந்தனென், முனைக்கு நான்;
வில் எடாமை நினது ஆண்மை பேசி, உயி-
ரோடு நின்று விளையாடினாய்;
கல் அடா, நெடு மரங்களோ, வரு
கருத்தினேன் வலி கடக்கவோ?
சொல், அடா!’ என இயம்பினான், இகல்
அரக்கன், ஐயன், இவை சொல்லினான்;–73-
இகல் அரக்கன் – (அனுமன் எறிந்த மலையை அம்புகளால் ஊழ்
இலாத சிறு பூழியாய்ச் செய்த) போர்த்தொழில் வல்ல அரக்கனாகிய
இந்திரசித்தன்; நில் அடா! சிறிது நில் அடா – (அனுமனைப் பார்த்து)
நில் அடா சற்று நில்லடா; உனை நினைந்து நான் முனைக்கு
வந்தனென் – உன்னை எண்ணித் தான் நான் (போரிடப்)
போர்க்களத்துக்கு வந்தேன்; வில் எடாமை – (நீ்) வில்லை எடுத்துப்
போர் செய்யாமல்; நினது ஆண்மை பேசி – உனது வலிமையைப்
புகழ்ந்து சொல்லிக்கொண்டு; உயிரோடு நின்று விளையாடினாய் –
உயிரோடு இருந்து (இன்னும்) விளையாடுகிறாய்; வரு கருத்தினேன் –
(போர்க்களத்துக்கு வெல்லும்) எண்ணத்தோடு வந்துள்ள (என்னை);
வலி கடக்கவோ – வலிமையடக்க என்று இருப்பவைகள்; கல்
அடா! நெடு மரங்களோ – அடா! கல்லும் நீண்ட மரங்களுமா? அடா
சொல் என இயம்பினான் – அடா செல்லுவாயாக என்று
(இகழ்ச்சியாகக்) கூறினான்; ஐயன் இவை சொல்லினான் – அனுமன்
இச்சொற்களைச் சொல்லுபவனானான்.
————
8075.
‘வில் எடுக்க உரியார்கள், வெய்ய சில
வீரர், இங்கும் உளர்; மெல்லியோய்!
கல் எடுக்க உரியானும் நின்றனன்;
அது இன்று நாளையிடை காணலாம்;
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு
இடைந்து உயிர் கொடு ஏகுவார்;
புல் எடுத்தவர்கள் அல்லம்; வேறு சில
போர் எடுத்து, எதிர் புகுந்துளோம்.–74-
மெல்லியோய் – வலியற்ற மென்மைத்தன்மை உடையவனே;
இங்கும் – எங்கள் பக்கத்திலும்; வில் எடுக்க உரியார்கள் –
வல்லெடுத்துப் போர் செய்ய உரிய தக்கவர்களான; வெய்ய சில வீரர்
– கொடிய சில வீரர்கள்; உளர் – உள்ளனர்; கல் எடுக்க உரியானும்
நின்றனன் – கல்லை எடுத்துப் போர் செய்ய உரியவனாகிய நானும்
நிற்கின்றேன்; அது இன்று நாளையிடை காணலாம் – அவ்வாறு
இருத்தலை இன்று (அல்) நாளைக்குள் காணலாம்; எல் எடுத்த படை
இந்திராதியர் – ஒளி பொருந்திய படைக்கலங்களைக் (கையில்
தாங்கிய) இந்திரன் முதலிய தேவர்கள்; உனக்கு இடைந்து – உனக்குத்
தோற்று; உயிர் கொடு ஏகுவார் – உயிரை (உடலில் தாங்கிக்கொண்டு
செல்வார்கள்); புல் எடுத்தவர்கள் அல்லம் – (போரில் தோற்றுப்)
புல்லை வாயினால் கவ்வி எடுத்தவர்கள் (நாங்கள்) அல்லோம்; வேறு
சில போர் எடுத்து – வேறு சில போர் வகைகளைத் தொடங்கி; எதிர்
புகுந்துளோம் – (போரிட உன்) எதிரில் வந்துள்ளோம்.
———–
8076.
‘என்னொடே பொருதியோ? அது அன்று எனின்,
இலக்குவப் பெயரின் எம்பிரான்-
தன்னொடே பொருதியோ? உன் உந்தை தலை
தள்ள நின்ற தனி வள்ளலாம்
மன்னொடே பொருதியோ? உரைத்தது
மறுக்கிலோம்’ என, வழங்கினான்-
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு
பொருப் படா உயர் புயத்தினான்.–75-
என்னொடே பொருதியோ – என்னுடன் போர் செய்வாயோ? அது
அன்று எனின் – அவ்வாறு அல்லாவிட்டால்; இலக்குவப் பெயரின் –
இலக்குவன் என்ற பெயரை உடைய; எம்பிரான் தன்னொடே
பொருதியோ – எமது தலைவனுடன் போர் செய்வாயோ; (அதுவும்
அன்று என்றால்) உன் உந்தை தலை – உன் தந்தையாகிய
இராவணனது தலைகளை; தள்ள நின்ற – துண்டித்துத்
தள்ளுவதற்காகவே (தோன்றி) நின்ற; தனி வள்ளலாம் – ஒப்பற்ற
வள்ளன்மைப் பண்புடையவனாகிய; மன்னொடே பொருதியோ –
மன்ன குமாரனாகிய இராம பிரானோடு போர் செய்வாயோ? உரைத்தது
மறுக்கிலோம் – நீ சொல்வதை மறுக்க மாட்டோம்; என வழங்கினான்
– என்று கூறினான்; பொன்னொடே பொருவின் அல்லது – பொன்
மலையோடு ஒப்பாவதல்லது; ஒன்றொடு – வேறு ஒன்றொடும்;
பொருப்படா – ஒப்பாக மாட்டாத; உயர் புயத்தினான் – உயர்ந்த
தோள்களை உடைய அனுமன்.
————
8077.
‘எங்கு நின்றனன் இலக்குவப் பெயர் அவ்
ஏழை, எம்பி அதிகாயனாம்
சிங்கம் வந்தவனை வென்று, தன் உயிர்
எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான்?
அங்கு அவன்தனை மலைந்து கொன்று, முனிவு
ஆற வந்தனென்; அது அன்றியும்,
உங்கள் தன்மையின் அடங்குமோ, உலகு
ஒடுக்கும் வெங் கணை தொடக்கினே?–76-
எம்பி அதிகாயனாம் – எனது தம்பியாகிய அதிகயான் என்னும்
பெயர் கொண்ட; சிங்கம் வந்தவனை வென்று – சிங்கம் போன்றவனாகப் (போருக்கு) வந்தவனைக் (கொன்று) வென்று;
இலக்குவப் பெயர் அவ் ஏழை – இலக்குவன் என்ற பெயர் கொண்ட
அந்த அறிவிலி; எங்கு நின்றனன் – (இப்போர்க்களத்தில்) எங்கு
(உயிருடன்) நின்றுள்ளான்; தன் உயிர் – (அவன்) தனது உயிரை;
எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – (நான் கொல்வதற்கு என்று)
எனக்காகவே வைத்துள்ள சிறப்பினை உடையவன்; அங்கு அவன்
தனை மலைந்து கொன்று – அவ்விடத்திலேயே அவனைப் போரிட்டுக்
கொன்று; முனிவு ஆற வந்தனென் – சினம் தணிவதற்காகவே
வந்தேன்; அது அன்றியும் – அது மட்டுமல்லாமல்; உலகு ஒடுக்கும் –
உலகங்களையெல்லாம் அழித்து ஒடுங்கச் செய்ய வல்ல; வெங்கணை
தொடுக்கினே – கொடிய அம்புகளை (நான்) செலுத்தினால்; உங்கள்
தன்மையின் அடங்குமோ – உங்களது (வீரத்) தன்மையினால்; அவை
அடங்குமா? (அடங்கமாட்டாது அன்றே)
————-
8078.
‘யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல்
ஏக, யானும், இகல் வில்லும், ஓர்
தேரின் நின்று, உமை அடங்கலும் திரள்
சிரம் துணிப்பென்; இது திண்ணமால்;
வாரும்; உங்களுடன் வானுளோர்களையும்
மண்ணுளோரையும் வரச் சொலும்;
போரும், இன்று ஒரு பகற்கணே பொருது,
வெல்வென்; வென்று அலது போகலேன்.’–77-
என் படைஞர் யாரும் எய்தல் இன்றி – என் படை வீரர்கள்
எவரும் (எனக்குத் துணையாக) வருதல் இல்லாமல்; அயல் ஏக –
(விலகி) அப்புறம் சென்றுவிட; யானும் – (தனியனாகிய) நானும்;
இகல்வில்லும் – (என்) வலிமையுள்ள வில்லும்; ஓர் தேரின் நின்று –
(இப்பொழுது உள்ள) ஒரு தேரின் (மேல்) நின்று; உமை அடங்கலும் –
உங்கள் எல்லோரையும்; திரள் சிரம் துணிப்பென் – முழுதுமாகத்
தலை அறுத்து விடுவேன்; இது திண்ணமால் – இது நிச்சயமாக
நடக்கப்போகிறது; வாரும் – போரிட வாருங்கள்; உங்களுடன் –
உங்களோடு (உதவிக்காக); வானுளோர்களையும் – வானத்தில் உள்ள
தேவர்களையும்; மண்ணுளோரையும் – நில உலகத்தில் உள்ள
மனிதர்களையும்; வரச் சொலும் – வரும்படி சொல்லுங்கள்; போரும் –
(வந்து என்னோடு) போர் செய்யுங்கள்; இன்று ஒரு பகற்கணே – இன்றைய ஒரு பகற்பொழுதுக்குள்ளாகவே;
பொருது வெல்வென் – (நான் எல்லோரையும்) போரிட்டு வெல்வேன்;
வென்று அலது போகலேன் – (உங்களை) வென்றல்லது பெயர்ந்து
போகேன்.
————-
இந்திரசித்தன் – அனுமன் போர்
8079.
என்று, வெம் பகழி, ஏழு நூறும், இருநூறும்,
வெஞ் சிலைகொடு ஏவினான்;
குன்று நின்றனைய வீர மாருதிதன்
மேனிமேல் அவை குழுக்களாய்ச்
சென்று சென்று உருவலோடும், வாள் எயிறு
தின்று சீறி, ஒரு சேம வன்
குன்று நின்றது பயித்து எடுத்து, அவனை
எய்தி, நொய்தின் இது கூறினான்:–78-
என்று – என்று கூறி (இந்திரசித்தன்); வெஞ்சிலை கொடு – தன்
கொடுமையான வில்லைக் கொண்டு; வெம்பகழி – கொடுமையான
அம்புகள்; ஏழுநூறும் இருநூறும் – தொள்ளாயிரத்தை; ஏவினான் –
செலுத்தினான்; குன்று நின்றனைய வீரமாருதி தன் – மலை நின்றது
போன்ற தோற்றங் கொண்ட வீர அனுமன் தன்; மேனி மேல் –
உடம்பின் மீது; அவை குழுக்களாய்ச் – அந்த அம்புகள்
பெருங்கூட்டமாகச்; சென்று சென்று உருவலோடும் – மேலும் மேலும்
சென்று பட்டு உருவிய அளவில்; வாள் எயிறு தின்று – அனுமன்
(சினத்தால்தன்) ஒளிமிக்க பற்களைக் கடித்து; சீறி – (மேலும்) சினந்து;
நின்றது ஒரு சேமவன் குன்று பறித்து எடுத்து – (அருகில்)
இருந்ததாகிய ஒரு தக்க சமயத்தில் உதவ வேண்டும் என
வைத்திருந்த குன்றைப் பேர்த்து எடுத்து; அவனை எய்தி – அந்த
இந்திர சித்தன் முன் வந்து நின்று; நொய்தின் – எளிமையாக; இது
கூறினான் – இச்சொற்களைச் சொன்னான்; அதனை அடுத்த பாடலில்
காண்க.
————–
8080.
‘தும்பி என்று உலகின் உள்ள யாவை, அவை
ஏவையும் தொகுபு துள்ளு தாள்,
வெம்பு வெஞ் சின மடங்கல் ஒன்றின் வலி-
தன்னை நின்று எளிதின் வெல்லுமோ?
நம்பி தம்பி, எனது எம்பிரான், வரு
துணைத் தரிக்கிலை நலித்தியேல்,
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது;
கா, அடா! சிலை வல் ஆண்மையால்.’–79-
தும்பி என்று உலகின் உள்ள யாவை – யானை என்று உலகில்
உள்ளவை எத்தனையோ; அவை ஏவையும் – அவையாவும்; தொகுபு –
ஒன்றாகக் கூடி (திரண்டாலும்); துள்ளுதாள் – குதித்துப் பாயும்
கால்களை உடைய; வெம்பு வெஞ்சின மடங்கல் ஒன்றின் –
கொடுஞ்சினத்தினையுடைய சிங்கம் ஒன்றின்; வலி தன்னை நின்று
எளிதின் வெல்லுமோ – வலிமை தன்னை (எதிர்த்து நின்று) எளிதாக
வெல்லமுடியுமோ? முடியாதல்லவா? நம்பி தம்பி – ஆடவரில் சிறந்த
இராமனது திருத்தம்பியும்; எனது எம்பிரான் – எனக்கும் எங்கட்குத்
தலைவனும் ஆகிய (இலக்குவன்); வரு துணைத் தரிக்கிலை
நலித்தியேல் – வருமளவும் பொறுத்துக் கொள்ள முடியாது (என்னுடன்
போரிட்டு என்னை) வருத்துவாய் ஆனால்; இது – இம்மலை; அம்பின்
முந்தி – (உனது) அம்புக்கு முன்னால்; உனது ஆவி உண்ணும் –
உனது உயிரைக் குடித்து விடும்; சிலை வல் ஆண்மையால் – (உன்)
வில்தொழில் வல்ல ஆண்மையின் மூலமாக; கா அடா – காப்பாற்றிக்
கொள்ளடா! (என்று கூறி அனுமன் பெருமலையை இந்திர சித்தன்
மேல் எறிந்தான்).
————-
8081.
செருப் பயிற்றிய தடக் கை ஆளி செல
விட்ட குன்று, திசை யானையின்
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன்
மகன்தன் மார்பின், நெடு வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு எனக் கடிது
ஒடிந்து இடிந்து, திசை போயதால்;
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற,
நீறு பட்டது நிகர்த்ததால்.–80-
செருப்பயிற்றிய – போர் (செய்து) பழக்கப்பட்ட; தடக்கை ஆளி –
பெரிய கைகளை உடைய ஆளி போன்றவனாகிய அனுமன்;
செலவிட்ட குன்று – (இந்திரசித்தன் மீது) செல்லும் படியாக
(வீசிவிட்ட) குன்று; திசை யானையின் – திசை யானைகளின்;
மருப்பை உற்ற – கொம்புகளைப் பொருந்தியுள்ள; தோள் இராவணன் – (திரண்ட) தோள்களை உடைய இராவணனது;
மகன் தன் மார்பின் – மகனுடைய மார்பில்; நெடு வச்சிரப்
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என – உயர்ந்த வச்சிரத்தால்
ஆனமலை மீதுபட்ட (வேறு ஒரு) மலை போல; கடிது ஒடிந்து இடிந்து
திசை போயதால் – விரைவாக ஒடிந்து துண்டுகளாகித் திசைகளில்
சிதறிப் போயிற்று; நெருப்பை உற்றது ஓர் இரும்பு – நெருப்பில்
பொருந்திய (பழுக்கக் காய்ந்த) இரும்பானது; கூடம் உற – சம்மட்டி
(அடி) பொருந்தியதால்; நீறு பட்டது நிகர்த்ததால் – (பொடிப்)
பொடியாய்ச் சிதறியதையும் (அது) ஒத்தது.
———–
8082.
விலங்கல்மேல் வர விலங்கல் வீசிய
விலங்கல் நீறு படு வேலையில்,
சலம் கைமேல் நிமிர, வெஞ் சினம் திருகி,
வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான்,
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன்
மறிக்கும் மாருதிதன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ,
ஆயிரம் சரம் அழுத்தினான்.–81-
விலங்கல் மேல் வர – (தன்) மலை போன்ற மார்பின் மேல்
வருமாறு; விலங்கல் வீசிய விலங்கல் – மலை போன்ற அனுமன் வீசிய
மலை; நீறு படு வேலையில் – (தன் மார்பில் பட்டு) பொடியாகிப்
போன அளவில்; சலம் கை மேல் நிமிர – மாறுபாடும் (அதனால்
கறுவும்) தன்னிடம் மேலும் மேலும் மிகுதிப்பட; வெஞ்சினம் திருகி –
கொடிய சினம் மிகுந்து; வஞ்சன் – வஞ்சகப் பண்பு படைத்த (அந்த)
இந்திரசித்தன்; மேல் நிமிர் தருக்கினான் – மேல் ஓங்கிய செருக்கு
உடையவனாய்; வலம் கொள் பேருலகம் – உறுதிமிக்க (இந்தப்) பெரிய
உலகத்தையும்; மேருவோடு – மேரு மலையையும்; உடன் மறிக்கும் –
ஒன்றாகப் பேர்த்தெடுக்க வல்ல; மாருதிதன் – அனுமனது; வாசம் நாறு
அலங்கல் மார்பும் – மணம் மிக்க மாலையணிந்த மார்பும்; உயர்
தோளும் – உயர்ந்த தோள்களும்; ஊடுருவ – ஊடுருவுமாறு; ஆயிரம்
சரம் அழுத்தினான் – ஆயிரம் அம்புகளைச் செலுத்தினான்.
—————
8083.
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி
ஊடு போய் உருவ, ஆடகக்
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை
குலுங்கநின்றனைய கொள்கையான்,
மன்றல் நாறு தட மேனிமேல் உதிர
வாரி சோர வரும் மாருதி,
நின்று தேறும் அளவின்கண், வெங் கண் அடல்
நீலன் வந்து, இடை நெருக்கினான்.–82-
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி – (இந்திரசித்தன் எய்த) ஒன்றை
ஒன்று ஒத்தனவாகிய ஓராயிரம் அம்புகள்; ஊடு போய் உருவ – (தன்
மார்பின்) இடையில் புகுந்து போய் ஊடுருவ; ஆடகக் குன்று –
பொன்மயமான மேருமலை; கால்குடைய – காற்றுத் தாக்க; மேல்
உயர்ந்து -மேல் உயர்ந்து; இடை குலுங்க நின்றனைய கொள்கையான்
– உள் இடம் (கலகலத்து வலிமை இழந்தது) போன்ற
தன்மையுடையவனாகி; மன்றல் நாறு தடமேனி மேல் – மணம்
வீசுகின்ற பெரிய உடம்பின் மீது; உதிர வாரி சோர வரும் மாருதி –
இரத்தக் கடல் பெருகப் பெற்றவனாகிய அனுமன்; நின்று தேறும்
அளவின் கண் – (களைத்து) நின்று (ஏது செய்யலாம் என்று)
எண்ணும் பொழுது; வெங்கண் அடல் நீலன் – கொடிய கண்களை
உடைய கொல்லும் தன்மை உள்ள நீலன் என்பவன்; வந்து இடை
நெருக்கினான் – (எதிர்) வந்து (அந்த இந்திரசித்தனை) வருத்தத்
தொடங்கினான்.
————-
நீலன் போர்
8084.
நீலன், நின்றது ஒரு நீல மால் வரை
நெடுந் தடக் கையின் இடந்து, நேர்
மேல் எழுந்து, எரி விசும்பு செல்வது ஒரு
வெம்மையோடு வர வீசலும்,
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது
துணிந்து சிந்த, இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல், அம்பு கொடு
கல்லினான், நெடிய வில்லினான். –83-
நீலன் – (குரங்குப் படைத்தலைவனாகிய) நீலன்; நின்றது –
தன்னருகில் இருந்ததாகிய; ஒரு நீல மால் வரை – ஒரு நீல
நிறமுடைய பெரிய மலையை; நெடுந் தடக்கையின் இடந்து – (தன்)
நீண்ட (பெரிய) கைகளால் பெயர்த்து எடுத்து; நேர் மேல் எழுந்து –
நேராக மேலே (ஆகாயத்தில்) உயர்ந்து; எரி விசும்பு செல்வது ஒரு
வெம்மையோடு – நெருப்பு (நேராக) ஆகாயத்தில் செல்வது
போன்றதொரு வெப்பத்தோடு; வர வீசலும் – (இந்திரசித்தன்) மேல்
நேராக வருமாறு வீசி எறிந்தவுடன்; நெடிய வில்லினான் – பெரிய
வில்லை ஏந்தியவனாகிய இந்திரசித்தன்; அந்தகன் எறிந்தது சூலம்
அன்னது – இயமனால் எறியப்பட்ட சூலத்தைப் போன்ற அந்த மலை;
துணிந்து சிந்த – துண்டுபட்டுச் சிதறும் படியாக; இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல் – இடையில் கணக்கிட்டுச் சொல்லும்
காலம் (உண்டு என) அறியாதபடி; அம்பு கொடு கல்லினான் – (தன்)
அம்புகளால் (விரைவாக) அழித்து விட்டான்.
———
8085.
ஊகம் எங்கும் உயிரோடு நின்றனவும்
ஓட, வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும்உள ஆக, மேருவினும்
மும் மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக, வெங் குருதி
ஆறு பாய, அனல் அஞ்சு வாய்,
நாக வெங் கண் நகு, வாளி பாய்தொறும்
நடுங்கினான், மலை பிடுங்கினான்–84-
உயிரோடு நின்றனவும்- உயிரோடு உள்ளனவாகிய உயிரினங்களும்;
ஊகம் எங்கும் ஓட – குரங்குகளும் எல்லாப் பக்கங்களிலும் சிதறி
ஓடும்படியாக; தேவர்கள் உள்ளமும் – தேவர்களின் உள்ளங்களிலும்
(பிறருடை உள்ளங்களிலும்); மோகம் எங்கும் உள ஆக – திகைப்பு
எங்கும் உண்டாகும் படியாக; மேருவினும் – மேரு மலையைக்
காட்டிலும்; மும்மடங்கு வலி திண்மை சால் – மூன்று மடங்கு
வலிமையும் திண்மையும் மிக்க; ஆகம் எங்கும் – (நீலனுடைய)
உடம்பு முழுவதும்; வெளி ஆக – (அம்பினால் துளைபட்டுச்
சல்லடைக் கண்போல்) வெட்ட வெளியாக; வெங்குருதி ஆறுபாய –
கொடிய இரத்தவெள்ள ஆறு (எங்கும்) பாய; அனல் அஞ்சுவாய் –
தீயும் அஞ்சும் நுனியை உடைய; வெங்கண் நாகநகு – கொடிய கண்களை உடைய பாம்பு
(நஞ்சின் கொடுமையை எள்ளி) நகுகின்ற; வாளி பாய்தொறும் –
(இந்திரசித்தனுடைய) அம்புகள் விரைந்து பாய்ந்து வரும் தோறும்;
மலை பிடுங்கினான் – மலையைப் பெயர்த்து (அவன் மேல்
எறிந்தவனாகிய) நீலன்; நடுங்கினான் – நடுங்கி நின்றான்.
————-
அங்கதன் போர்
8086.
‘மேரு, மேரு’ என, ‘அல்ல, அல்ல’ என
வேரினொடு நெடு வெற்பு எலாம்,
மார்பின்மேலும் உற, தோளின்மேலும் உற,
வாலி காதலன் வழங்கினான்;
சேருமே அவை, தனுக் கை நிற்க? எதிர்
செல்லுமே? கடிது செல்லினும்,
பேருமே? கொடிய வாளியால் முறி
பெறுக்கலாவகை நுறுக்கினான்.–85-
மேரு மேரு என – (சிலர் இது) மேரு மலையே மேரு மலையே
(என்றும்); அல்ல அல்ல என – (வேறு சிலர் எண்ணி இது)
மேருவன்று மேருவன்று (வேறுமலை) என்றும் சொல்லும்படியாக; நெடு
வெற்பு எலாம் – உயர்ந்த மலைகளை எல்லாம்; வேரினொடு –
வேரோடு (பிடுங்கி எடுத்து); மார்பின் மேலும் – (இந்திரசித்தனது)
மார்பின் மீதும்; உயர் தோளின் மேலும் – உயர்ந்த தோள்களின்
மீதும்; உற – பொருந்தித் (தாக்கும்படியாக); வாலி காதலன்
வழங்கினான் – வாலியின் அன்பு மகனாகிய அங்கதன் வீசி
எறிந்தான்; தனுக்கை நிற்க – (இந்திரசித்தன்) கையில் வில்
இருக்கையில்; அவை சேருமே – அம்மலைகள் (அவனுடலில்) சென்று
பட்டு நி்ற்குமோ? எதிர் செல்லுமே – (அவனது) எதிரில்தான் செல்ல
முடியுமோ? கடிது செல்லினும் பேருமே – (அம்மலைகள்) விரைவாக
அவன் எதிரில் சென்றாலும் (அம்புக்கு இலக்கு ஆகாமல்) தவறுமோ?
கொடிய வாளியால் – (அந்த இந்திரசித்தன் தன்) கொடுமையான
அம்புகளால்; முறி பெறுக்கலாவகை – துண்டம் என்ற தன்மையையும்
பெறாதபடி; நுறுக்கினான் – பொடிப்பொடியாக நொறுங்கச் செய்து
விட்டான்.
———-
8087.
நெற்றிமேலும், உயர் தோளின்மேலும், நெடு
மார்பின்மேலும், நிமிர் தாளினும்,
புற்றினூடு நுழை நாகம் அன்ன, புகை
வேக வாளிகள் புகப் புக,
தெற்றி வாள் எயிறு தின்று, கைத்துணை
பிசைந்து, கண்கள் எரி தீ உக,
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற,
மயங்கினான், நிலம் முயங்கினான்.–86-
நெற்றிமேலும் – (அங்கதனது) நெற்றியின் மீதும்; உயர் தோளின்
மேலும் – உயர்ந்த தோள்களின் மீதும்; நெடு மார்பின் மேலும் –
பரந்த மார்பின் மீதும்; நிமிர் தாளினும் – நீண்ட கால்களின் மீதும்;
புற்றினூடு நுழை நாகம் அன்ன – புற்றில் நுழைகின்ற பாம்பினைப்
போன்ற; புகை வேக வாளிகள் புகப்புக – புகையொடு கூடிய
(இந்திரசித்தன்) விரைவான அம்புகள் பலவாறு பாய்தலினால்; தெற்றி
– (அங்கதன்) தடுமாறி; வாள் எயிறு தின்று – ஒளியுள்ள பற்களைக்
கடித்து; கைத்துணை பிசைந்து – இரு கைகளையும் பிசைந்து; கண்கள்
எரி தீ உக – கண்களில் இருந்து எரிகின்ற தீப்பொறி சிதற; வற்றி –
வாடி; ஓடு உதிர வாரி சோர்வுற – (உம்பில் இருந்து) வெளியே ஓடி
வருகிற குருதிக் கடல் (மிகுதியும் பெருகுதலால்); மயங்கினான் –
மயங்கியவனாகி; நிலம் முயங்கினான் – நிலத்தில் விழுந்தான்.
———-
இலக்குவன் உரை
8088.
மற்றை வீரர்கள்தம் மார்பின்மேலும், உயர்
தோளின்மேலும், மழை மாரிபோல்,
கொற்ற வெங் கணை உலக்க, எய்தவை
குளிப்ப நின்று, உடல் குலுங்கினார்;
இற்று அவிந்தன, பெரும் பதாதி; உயிர்
உள்ள எங்கணும் இரிந்த; அப்
பெற்றி கண்டு, இளைய வள்ளல், ஒள் எரி
பிறந்த கண்ணன், இவை பேசினான்:–87-
மற்றை வீரர்கள்தம் – (தண்னொடு தனிபோர் செய்த சுக்கிரீவன்,
அனுமன் நீலன் அங்கதன் தவிரப்) பிற வானர வீரர்கள் தம்;
மார்பின் மேலும் – மார்பின் மேலும்; உயர் தோளின் மேலும் – உயர்ந்த தோள்களின் மேலும்; மழை மாரி போல் –
மழைத்தாரைகள் போல; கொற்ற வெங்கணை உலக்க –
(இந்திரசித்தனால் எய்யப்பட்ட) வெற்றி பொருந்திய கொடிய அம்புகள்
(உடலில் புகுந்து) வருத்தவும்; எய்தவை குளிப்பநின்று – (அவ்வாறு)
எய்தவை (உடம்பில்) மூழ்கி நின்றதனால்; உடல் குலுங்கினார் –
குரங்கு வீரர்கள் உடல் நடுங்கினார்கள்; பெரும்பதாதி – (அதனால்)
பெரிய காலாட் படையாகிய குரங்குப்படை; இற்று அவிந்தன – உயிர்
ஒழிந்து இறந்துபட்டன; உயிர் உள்ள எங்கணும் இரிந்த – உயிர்
பிழைத்தவைகள் எல்லாப் பக்கங்களிலும் சிதறி ஓடின; அப்பெற்றி
கண்டு – அந்தத் தன்மையைக் கண்டு; இளைய வள்ளல் – இளைய
வள்ளலாகிய இலக்குவன்; ஒள் எரி பிறந்த கண்ணன் – ஒளியுடைய
தீப்பொறி பறக்கும் கண்களை உடையவனாய்; இவை பேசினான் –
இவற்றைச் சொல்லுபவன் ஆனான்; (அடுத்த பாடலில் காண்க)
—————–
8089.
‘பிழைத்தது, கொள்கை போத; பெரும் படைத் தலைவர்
யாரும்
உழைத்தனர், குருதி வெள்ளத்து; உலந்ததும் உலப்பிற்று
அன்றே,
அழைத்து இவன்தன்னை, யானே ஆர் உயிர்
கொளப்படாதே?
இழைத்தது பழுதே அன்றோ?-வீடண!’ என்னச் சொன்னான்.–88-
வீடண – இலக்குவன் (வீடணனைப் பார்த்து) வீடணனே; கொள்கை
பிழைத்தது – (நாம் கொண்டிருந்த) கொள்கை தவறி விட்டது; போத –
மிகவும்; பெரும் படைத்தலைவர் யாரும் – பெரிய படைத்தலைவர்கள்
எல்லோரும்; குருதி வெள்ளத்து உழைத்தனர் – இரத்த வெள்ளத்தில்
அழுந்தி வருந்தினார்கள்; உலந்ததும் உலப் பின்று அன்றே – இறந்த
படைவீரர்களும் அளவில்லை அல்லவா? அவன் தன்னே யானே
அழைத்து – அந்த இந்திரசித்தனை நானே (அறைகூவிப் போருக்கு
அழைத்து); ஆர் உயிர் கொளப்படாதே – (அவனது) அரிய உயிரைக்
கொண்டிருக்கக் கூடாதோ; இழைத்தது பழுதே அன்றோ – (அவ்வாறு
செய்யாமல் படைத்தலைவர்களையும் குரங்கு வீரர்களையும் இவனோடு
தனியாகப் போரிடவிட்ட) செயல் தவறுடையதல்லவா? என்னச்
சொன்னான் – என்று கூறினான் (இலக்குவன்)
——-
வீடணன் இசைதல்
8090.
‘ஐய! ஈது அன்னதேயால்; ஆயிர கோடித் தேவர்
எய்தினர்; எத்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்,
செய்திலர் இவனை ஒன்றும்; நீ இது தீர்ப்பின் அல்லால்,
உய்திறன் உண்டோ, வேறுஇவ் உலகினுக்கு உயிரோடு?’
என்றான்.–89-
(வீடணன்) ஐயா – ஐயனே; ஈது அன்னதேயால் – (நீ கூறிய) ஈது
அத்தன்மையதாகிய உண்மையேயாகும்; ஆயிர கோடித் தேவர்
எய்தினர் – (முன்பு ஒரு காலத்தில் இவனோடு போர் செய்வதற்காக)
பல கோடித் தேவர்கள் வந்தார்கள்.; எய்தினார்கள் – (அவ்வாறு)
வந்தவர்களெல்லாரும்; ஈடுபட்டு இரிந்தது அல்லால் – வலிமை கெட்டு
ஓடியது அல்லாமல்; இவனை ஒன்றும் செய்திலர் – இந்த
இந்திரசித்தனை எதுவும் செய்ய முடியாதவர்களானார்கள்; நீ இது
தீர்ப்பின் அல்லால் – நீ (இவனால் உலகுக்கு ஏற்பட்ட) துன்பத்தை
நீக்கினால் அல்லாமல்; இவ் உலகினுக்கு – இந்த உலகத்துக்கும்;
உயிரோடு – (இங்குள்ள) உயிருள்ள பொருள்களுக்கும்; உய்திறன்
வேறு உண்டோ என்றான் – உய்யும் வழிவகை வேறு (ஏதேனும்)
உண்டோ என்றான். (ஒரு வழியும் இல்லை என்றபடி)
———–
8091.
என்பது சொல்லக் கேட்ட, இந்திரவில்லினோடும்
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை,
முன்பனை, முன்பு நோக்கி, ‘இவன்கொலாம், பரதன்
முன்னோன்-
தன் பெருந் தம்பி?’ என்றான்; ‘ஆம்’ எனச் சாரன்
சொன்னான்.-90-
என்பது – என்ற சொற்களை; வீடணன் சொல்லக் கேட்ட –
சொல்லக் கேட்ட; பொன் புரை மேகம் ஒன்று – பொன்னை ஒத்த
மேகம் ஒன்று; இந்திர வில்லினோடும் – இந்திரவில்லினோடும்;
வருவது போல்கின்றானை – வருவது போல் வருகின்றவனும்;
முன்பனை – வலிமை உடையவனும் ஆகிய இலக்குவனை; முன்பு
நோக்கி – (இந்திரசித்து) தன் முன்பு பார்த்து; இவன் கொலாம் பரதன்
முன்னோன் தன் பெருந்தம்பி என்றான் – இவன் போலும் பரதனுக்கு
முன்னோன் ஆகிய இராமன்தன் துணைத்தம்பி என்று கேட்டான்;
சாரன் ஆம் எனச் சொன்னான் – (ஒற்றன் ஆகிய) சாரன் (அதற்கு)
ஆமாம் என்று சொன்னான்.
————
அரக்கர் இலக்குவனை எதிர்த்தல்
8092.
தீயவன்இளவல்தன்மேல் செல்வதன் முன்னம், ‘செல்க!’
என்று
ஏயினர் ஒருவர் இன்றி, இராக்கதத் தலைவர், ‘எங்கள்
நாயகன் மகனைக் கொன்றாய்! நண்ணினை, நாங்கள் காண;
போய் இனி உய்வது எங்கே?’ என்று, எரி விழித்துப்
புக்கார்.–91-
தீயவன் – கொடியவன் ஆகிய இந்திரசித்தன்; இளவல் தன் மேல்
– இளவலாகிய (இலக்குவன்) தன் மேல்; செல்வதன் முன்னம் –
(போரிடச்) செல்லுவதற்கு முன்பாக; செல்க என்று – (நீங்கள்
போரிடச்) செல்லுங்கள் என்று; இராக்கதத் தலைவர் – அரக்கர்
(படைத்) தலைவர்கள்; ஒருவர் இன்றி ஏயினர் – ஒரு வீரரும்
மீதியில்லாமல் (எல்லோரையும்) (இலக்குவனுடன் போர் செய்ய)
ஏவினார்கள்; எங்கள் நாயகன் மகனைக் கொன்றாய் – (அவ்ாறு
ஏவப்பட்ட அரக்க வீரர்கள்) எங்கள் தலைவனாகிய இராவணனது
மகனாகிய அதிகாயனைக் கொன்றவனே; நாங்கள் காண நண்ணினை –
(நீ) நாங்கள் (கண் எதிரில்) காணுமாறு (வந்து) நெருங்கினை; இனி
போய் உய்வது எங்கே – இனிமேல் (நீ) போய்ப் பிழைப்பது எவ்வாறு;
என்று – என்று கூறி; எரி விழித்துப் புக்கார் – நெருப்புப் போல்
(கடுமையாக) விழித்துப் போர் செய்ய நெருங்கினார்கள்.
———-
அரக்கர் படை அழிவு
8093.
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர், கொடித்
திண் தேரும்,
ஆடல் மாக் களிறும், மாவும், கடாவினர் ஆர்த்து மண்டி,
மூடினார்; மூடினாரை முறை முறை துணித்து, வாகை
சூடினான், இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி.–92-
நூறு கோடி அமைந்த கூட்டத்து இராக்கதர் – நூறு கோடியாக
அமைந்த (திரண்ட) பெரும் கூட்டமாகிய அரக்கர்கள்; கொடித்
திண்தேரும் – கொடிகள் கட்டிய வலிய தேர்களையும்; ஆடல்
மாக்களிறும் – வெற்றி பொருந்திய பெரிய யானைகளையும்; மாவும் –
குதிரைகளையும்; கடாவினர் – செலுத்தியவர்களாய்; ஆர்த்து மண்டி –
ஆரவாரம் செய்து நெருங்கி; மூடினார் – சுற்றிச் சூழ்ந்தார்கள்;
மூடினாரை – (அவ்வாறு தன்னைச்) சுற்றிச் சூழ்ந்தவர்களை; இராமன்
பாதம் சூடிய தோன்றல் தம்பி – இராமனது திருப்பாதுகைகளைத்
தனது தலையில் சூடிய பரதனது தம்பியாகிய இலக்குவன்; முறை
முறை துணித்து – முறை முறையாகத் துண்டு படுத்திக் கொன்று;
வாகை சூடினான் – வெற்றி மாலையாகிய வாகை மாலையைச்
சூடினான்.
———–
8094.
அதிர்ந்தன, உலகம் ஏழும்; அனற் பொறி, அசனி என்னப்
பிதிர்ந்தன; மலையும் பாரும் பிளந்தன; பிணத்தின் குன்றத்து
உதிர்ந்தன, தலைகள்; மண்டி ஓடின, உதிர நீத்தம்;
விதிர்ந்தன, அமரர் கைகள்; விளைந்தது, கொடிய வெம்
போர்.–93-
உலகம் ஏழும் அதிர்ந்தன – (இலக்குவன் எய்த அம்புகளினால்)
ஏழு உலகங்களும் அதிர்ச்சி அடைந்தன; அசனி என்ன அனற்பொறி
பிதிர்ந்தன – இடியேறு என்று கூறும் படியாகத் தீப்பொறிகள் சிதறின;
மலையும் பாரும் பிளந்தன – அதனால் மலைகளும் நிலமும்
பிளந்தன; பிணத்தின் தலைகள் – போரில் இறந்து பிணமாகிப் போன
வீரர்களுடைய தலைகள்; குன்றத்து உதிர்ந்தன – மலை போல்
நிலத்தில் (அறுபட்டு) உதிர்ந்தன; உதிர நீத்தம் மண்டி ஓடின – இரத்த வெள்ளம் நெருங்கி ஓடியது;
அமரர் கைகள் விதிர்ந்தன – தேவர்களுடைய கைகள் நடுங்கின;
கொடிய வெம் போர் விளைந்தது – (இவ்வாறு) மிகக் கொடிய போர்
மூண்டது.
————-
8095.
விட்டனன், விசிகம் வேகம் விடாதன, வீரன்; மார்பில்
பட்டன; உலகம் எங்கும் பரந்தன; பதாகைக் காட்டைச்
சுட்டன; துரக ராசி துணித்தன; பனைக் கைம்மாவை
அட்டன; கூற்றம் என்ன அடர்ந்தன, அனந்தம் அம்மா!–94-
வீரன் வேகம் விடாதன விசிகம் விட்டனன் – இலக்குவன்
எப்பொழுதும் வேகம் நீங்காது உள்ள அம்புகளைச் செலுத்தினான்;
மார்பில் பட்டன – (அந்த அம்புகள் அரக்க வீரர்களுடைய) மார்பில்
பதிந்தன; உலகம் எங்கும் பரந்தன – உலகம் முழுவதும் பரவின;
பதாகைக் காட்டைச் சுட்டன – கொடிகளின் தொகுதிகளை (எரித்துச்)
சுட்டு (அழித்தன); துரகராசி துணித்தன – குதிரைப் படைகளின்
கூட்டத்தைத் துண்டாக்கின; பனைக் கைம்மாவை அட்டன –
பனைமரம் போன்ற கையை உடைய யானைகளைத் கொன்றன;
அனந்தம் கூற்றம் என்ன அடர்ந்தன – எல்லையில்லாத (அந்த
அம்புகள்) இயமனைப் போல் கொலைத் தொழிலைச் செய்தன.
————–
8096.
உலக்கின்றார்; உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற
விண்ணோர்,
கலக்குறு கண்ணர் ஆகி, கடையுறக் காணல் ஆற்றார்,
விலக்க அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி,
‘இலக்குவன்சிலை கொடேகொல், எழு மழை பயின்றது!’
என்றார். –95-
உலக்கின்றார் உலக்கின்றாரை – (இலக்குவனது அம்பு பட்டு)
மிகுதியாக இறக்கின்ற அரக்கர்களை; என்ணுவான் உற்ற விண்ணோர-
எண்ணுவதற்காக வந்து பொருந்திய தேவர்கள்; கலக்குறு கண்ணர்
ஆகி – கலக்கம் மிக்க கண்பார்வை உடையவர்களாய்; கடையுறக்
காணல் ஆற்றார் – முடிவு வரையில் (எண்ணி) முடிவு காண
மாட்டாதவர் ஆயினார்; விலக்க அரும் பகழி மாரி – பிறரால்
விலக்குதற்கு அரிய (இலக்குவனது) அம்பு மழை; விளைக்கின்ற
விளைவை உன்னி – (போர்க்களத்தில்) உண்டாக்குகிற விளைவுகளை
(மனதில்) நினைத்து; எழு மழை பயின்றது – ஏழு மேகங்களும்
(இடைவிடாது பொழியும் தன்மையைக்) கற்றது, இலக்குவன் சிலை
கொடேகொல் – இலக்குவனது வில்லை (முன்மாதிரியாகக்)
கொண்டுதானோ; என்றார் – என்று வியந்து கூறினார்கள்.
எழு மழை – ஏழு மேகங்கள்; அவையாவன சம்வர்த்தம்,
ஆவர்த்தம், புஷ்கலா வர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் என்பன.
———
8097.
ஓளி ஒண் கணைகள் தோறும் உந்திய வேழம், ஒற்றை
வாளியின் தலைய, பாரில் மறிவன, மலையின் சூழ்ந்த;
ஆளியின் துப்பின் வீரர் பொரு களத்து, ஆர்த்த ஆழித்
தூளியின் தொகைய, வள்ளல் சுடு கணைத் தொகையும்
அம்மா!–96-
ஓளி ஒண் கணைகள் தோறும் – (இலக்குவன் செலுத்திய)
வரிசையான ஒளி பொருந்திய அம்புகள் (பாயும்) தோறும்; உந்திய
வேழம் – (அவற்றால்) தாக்கி வீழ்த்தப்பட்ட யானைகள்; ஒற்றை
வாளியின் தலைய – (ஒவ்வொன்றும்) ஒவ்வொரு அம்பின் முனையை
உடையவாய்; பாரில் மறிவன – நிலத்தில் விழுந்து இறப்பன;
மலையின் சூழ்ந்த – மலைகளைப் போலப் (போர்க்களம்) எங்கும்
கிடந்தன; ஆளியின் துப்பின் வீரர் – சிங்கம் போன்ற வலிமை
உடைய வீரர்கள்; பொருகளத்து – (போர் செய்கின்ற) போர்க்களத்தில்;
வள்ளல் சுடுகணைத் தொகையும் – வள்ளலாகிய இலக்குவன்
(செலுத்திய) கொடுந்தன்மை உள்ள அம்புகளின் எண்ணிக்கையும்; ஆர்த்த ஆழித் தூளியின் தொகைய அம்மா –
ஒலிக்கிற கடலின்கண் உள்ள மணல்களின் தொகையுடையன.
————
8098.
‘பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு, உழலும்
பெற்றிச்
சிறையன’ என்ன நோக்கி, தேவரும் திகைப்ப, தேற்றி,
துறைதொறும் தொடர்ந்து, வானம் வெளி அறத் துவன்றி,
வீழும்
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின் மேல் படிவ மாதோ.–97-
பிறவியில் – (இடைவிடாது வருகின்ற இலக்குவனது அம்புகள்)
பிறப்பிலேயே; பெரிய நோக்கின் – பெரிய தோற்றத்தையும்; பிசிதம்
உண்டு – ஊனினை உண்டு; உழலும் பெற்றி – திரிகின்ற
தன்மையையும் (உடைய) சிறையன – சிறகுகுகளை உடைய
பறவைகளாகும்; என்ன – என்று; தேவரும் நோக்கி திகைப்ப –
தேவர்களும் பார்த்துத் திகைப்படைய; தேற்றி – (இவை அம்புகளே
பறவைகள் அல்ல என்பதைத்) தெளிய வைத்து; துறை தொறும்
தொடர்ந்து – (அந்த அம்புகள்) எல்லா இடங்களிலும் நிறைந்து;
வானம் வெளி அற – ஆகாயத்தில் இடைவெளி இல்லாதவாறு
(நெருங்கி); துவன்றி வீழும் – (இறந்தவர்களின் உடலைத் தின்பதற்காக
அவ்வுடலங்களின் மீது) நெருங்கி விழுகின்ற; பறவையின் பெரிது
பட்டார் – பறவைகளைக் காட்டிலும் மிகுதியாக இறந்தவர்களுடைய;
பிணத்தின் மேல் படிவ – பிணங்களின் மேல் குத்துண்டு கிடப்பன.
—————–
8099.
திறம் தரு கவியின் சேனை, செறி கழல் நிருதன் சீற,
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும்,
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட,
மறைந்தன; குருதி ஓடி, மறி கடல் மடுத்திலாத.–98-
செறிகழல் நிருதன் சீற – (கட்டிச்) செறித்த வீரக்கழல் அணிந்த
அரக்கனாகிய இந்திர சித்தன் (சினந்து) சீறிப் (போர் செய்ததனால்);
இறந்தன கிடந்த – இறந்தவைகளாகிக் கிடந்த; திறம் தரு கவியின்
சேனை – வலிமை மிக்க குரங்குப் படை; வெள்ளம் எழுபதின் பாதி –
வெள்ளம் எழுபதின் பாதியாகிய முப்பத்து ஐந்து ஆகும்; மேலும் –
அதற்கு மேலும்; பறந்தலை முழுதும் பட்ட – போர்க்களம் முழுவதும்
இறந்த; வஞ்சகர் படிவம் மூட – வஞ்சனைப் பண்பு உள்ள
அரக்கர்களின் உடம்புகள் மூடுதலினால்; மறைந்தன –
மறைந்தனவாகிய (குரங்குப்படை வீரர் உடலங்கள் பலவாகும்); குருதி
ஓடி – (களத்தில்) இரத்த வெள்ளம் (பாய்ந்து) பாயந்து ஓடி; மறி கடல்
மடுத்திலாத – மறித்து வரும் அலைகளை உடைய கடலில்
அடங்காவாயின.
————
8100.
கை அற்றார்; கால்கள் அற்றார்; கழுத்து அற்றார்; கவசம்
அற்றார்;
மெய் அற்றார்; குடர்கள் சோர, விசை அற்றார்; விளிவும்
அற்றார்;
மையல் தார்க் கரியும், தேரும், வாசியும், மற்றும் அற்றார்;
உய்யச் சாய்ந்து ஓடிச் சென்றார், உயிர் உள்ளார் ஆகி
உள்ளார்.–99-
கை அற்றார் – (அசுரர்களில் பலர்) கைகள் அறுபட்டார்கள்; கால்கள்
அற்றார் – கால்கள் அறுபட்டார்கள்; கழுத்து அற்றார் – கழுத்து
அறுபட்டார்கள்; கவசம் அற்றார் – கவசம் அறுபட்டார்கள்; மெய்
அற்றார் – உடம்பு அறுபட்டார்கள்; குடர்கள் கோர விசை அற்றார்
– குடல்கள் (அறுபட்டுத்) தொங்க வேகம் அழிந்தார்கள்; விளிவும்
அற்றார் – (வலிமை அழிந்ததால்) கூப்பிடும் சக்தியும் இழந்தார்கள்;
மையல் தார்க்கரியும் – மதமயக்கம் மிக்க (படுமணி இரட்டும்)
மாலைகளை அணிந்த யானைகளும்; தேரும் – தேர்களும்; வாசியும் –
குதிரைகளும்; மற்றும் அற்றார் – மற்றும் உள்ள (துணைக்கருவிகள்)
பலவற்றையும் இழந்தார்கள்; உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – உயிர்
(தாங்கி) உள்ளவராகி உள்ளவர்கள்; உய்யச் சாய்ந்து – உயிர்
தப்புவதற்காக நிலைகெட்டு; ஓடிச்சென்றார் – ஓடிப் போனார்கள்.
———–
இலக்குவன் இந்திரசித்தன் போர்
8101.
வற்றிய கடலுள் நின்ற மலை என, மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றி, தோன்றும் தசமுகன் தோன்றல், துள்ளித்
தெற்றின புருவத்தோன், தன் மனம் எனச் செல்லும் தேரான்,
உற்றனன், இளைய கோவை; அனுமனும் உடன் வந்து
உற்றான்.–100-
வற்றிய கடலுள் நின்ற மலை என – (தண்ணீர்) வற்றிய கடலுக்கு
நடுவில் நின்ற மலை போல; மருங்கின் யாரும் சுற்றினர் இன்றி –
பக்கத்தில் எவரும் சூழ்ந்து நிற்பவர் இன்றி; தோன்றும் – (தனியனாத்)
தோன்றுகிற; தசமுகன் தோன்றல் – பத்துத் தலைகளை உடைய
இராவணனது மகனாகிய இந்திரசித்தன்; துள்ளி – மனந்துடித்து;
தெற்றின புருவத்தோன் – சினத்தால் மேல் ஏறிய புருவத்தை
உடையவனாய்; தன் மனம் எனச் செல்லும் தேரான் – தன் மனம்
போல் (வேகமாகச்) செல்லுகிற தேரின் (மேல்) ஏறியவனாகி; இளைய
கோவை உற்றனன் – இளைய தலைவனாகிய இலக்குவனை
நெருங்கினான்; அனுமனும் – (அந்த நேரத்தில்) அனுமனும்; உடன்
வந்து உற்றான் – உடனே (இலக்குவன் பக்கலில்) வந்து சேர்ந்தான்.
———-
8102.
‘தோளின்மேல் ஆதி, ஐய!’ என்று அடி தொழுது நின்றான்;
ஆளிபோல் மொய்ம்பினானும் ஏறினன்; அமரர் ஆர்த்தார்;
காளியே அனைய காலன் கொலை அன, கனலின் வெய்ய,
வாளிமேல் வாளி தூர்த்தார், மழையின்மேல் மழை
வந்தன்னார்.–101-
ஐய! தோளின் மேல் ஆதி – (இலக்குவனை நெருங்கிய அனுமன்
அவனைப் பார்த்து) தலைவனே! (நீ) என் தோளின் மீது
ஏறிக்கொள்ளுவாய்; என்று அடி தொழுது நின்றான் – (அவனது)
கால்களைத் தொழுது நின்றான்; ஆளி போல் மெய்ம்பினானும் –
சிங்கம் போன்ற வலிமை உடையவனாகிய (இலக்குவனும்);
ஏறினன் – (அதை ஏற்று அவனது தோளின்மீது) ஏறினான்; அமரர்
ஆர்த்தார் – (அதைக்கண்டு மகிழ்ந்து) தேவர்கள் பேரொலி
செய்தார்கள்; மழையின் மேல் மழை வந்தன்னார் – ஒரு மேகத்தின்
மீது மற்றொரு மேகம் (போர் செய்ய) வந்ததை ஒத்தவர்களாகிய
(இலக்குவன் இந்திரசித்தன் ஆகிய இருவரும்); காளியே அனைய
காலன் – காளி போன்ற கருநிறம் உடைய யமனது; கொலை அன –
கொலைக்கருவி போன்ற; கனலின் வெய்ய – நெருப்பைக் காட்டிலும்
கொடுமையான; வாளி மேள் வாளி தூர்த்தார் – அம்புகளின் மீது
அம்புகளாக (ஒருவர் மீது ஒருவர்) எய்தார்கள்.
———-
8103.
இடித்தன, சிலையின் நாண்கள்; இரிந்தன, திசைகள் இற்று;
வெடித்தன, மலைகள் விண்டு; பிளந்தது, விசும்பு மேன்மேல்;
பொடித்த, இவ் உலகம் எங்கும்; பொழிந்தன, பொறிகள்
பொங்கி;
கடித்தன, கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி.–102-
சிலையின் நாண்கள் இடித்தன – (இலக்குவன் இந்திர சித்தன்
ஆகியோருடைய) வில்லின் நாண்கள் இடிபோல ஒலி செய்தன;
திசைகள் இற்று இரிந்தன – (அந்த ஒலியால்) திசைகள் இற்று நிலை
கெட்டன; மலைகள் விண்டு வெடித்தன – மலைகள் பிளந்து சிதறி
வெடித்தன; மேன் மேல் விசும்பு பொடித்த – மேலுலகங்கள்
பிளவுபட்டன; இவ்வுலகம் எங்கும் பொறிகள் பொங்கி பொழிந்தன –
(மேல்கூறிய செயல்களின் காரணமாக) இந்த உலகம் முழுவதும்
தீப்பொறிகள் மிகுந்து அதிகமாக நிறைந்தன; கணைகளோடு கணைகள்
– (ஒருவர் எய்த) அம்புகள் (மற்றவர் எய்த) அம்புகளை; தம் அயில்
வாய்கவ்வி – தங்களுடைய கூரிய வாயினால் கவ்விக்; கடித்தன –
கடித்தன.
————-
8104.
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க, மற்று
அறுக்கிலாத,
வெம் பொறி கதுவ, விண்ணில் வெந்தன, கரிந்து வீழ்ந்த;
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார்; உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த; வேலைக் கலம் எனக் கலங்கிற்று,
அண்டம்.–103-
அம்பினோடு அம்பு – அம்புகளோடு அம்புகள் (அயில்வாய்
கல்வித்தாக்கும்போது); ஒன்று ஒன்றை அறுக்க – ஒன்று மற்றொன்றை
அறுக்க; மற்று அறுக்கிலாத – (அவ்வாறு) அறுக்க மாட்டாதனவாகிய
அம்புகள்; வெம்பொறிகதுவ – கொடிய தீப்பொறிகள் பற்ற; விண்ணில்
வெந்தன கரிந்து வீழ்ந்த – வானத்தில் வெந்து கருகிக் (கீழே)
விழுந்தன; உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் – (அதுகண்டு)
தேவர்களும் அறிவு கலங்கி ஒடுங்கினார்கள்; உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த – உலகங்கள் எல்லாம் நடுக்கம் கொண்டு
வருந்தின; அண்டம் – உலக உருண்டை; வேலைக்கலம் எனக்
கலங்கிற்று – கடலில் செல்லும் கப்பல் போலக் கலங்கி நடுங்கியது.
——————
8105.
அரிஇனம் பூண்ட தேரும், அனுமனும், அனந்த சாரி
புரிதலின், இலங்கை ஊரும் திரிந்தது; புலவரேயும்,
எரி கணைப் படலம் மூட, ‘இலர், உளர்’ என்னும் தன்மை
தெரிகிலர்; செவிடு செல்லக் கிழிந்தன, திசைகள் எல்லாம்.–104-
அரி இனம் பூண்ட தேரும் – சிங்கக் கூட்டங்கள் பூட்டப்பட்ட
(இந்திரசித்தனது) தேரும்; அனுமனும் – இலக்குவனது (ஊர்தியாகிய)
அனுமனும்; அனந்தசாரி புரிதலின் – பலப்பலவாகச் சாரி சுழன்று
வருதலால்; இலங்கை ஊரும் திரிந்தது – இலங்கை நகரமும் சுழலல்
உற்றது; எரிகணைப் படலம் மூட – (இருவரும் ஒருவர் மேல் ஒருவர்
எய்த) எரியும் தன்மை உள்ள அம்புகளின் கூட்டம்
மூடிக்கொண்டதனால்; இலர் உளர் என்னும் தன்மை – (இலக்குவன்,
இந்திரசித்து என்ற அவ்விருவரும்) இலரோ உளரோ என்னும்
தன்மையை; புலவரேயும் தெரிகிலர் – (அறியும் தன்மை உள்ள)
தேவர்களும் அறிய மாட்டாதவர் ஆயினர்; திசைகள் எல்லாம் செவிடு
செல்லக் கிழிந்தன – எல்லாத் திசைகளும் (திசைகளில் உள்ள உயிரினங்கள் எல்லாம்) செவிடு பட்டுப் பிளவு
பட்டன.
—————–
8106.
‘என் செய்தார்! என் செய்தார்!’ என்று இயம்புவார்;
‘இனைய தன்மை
முன் செய்தார் யாவர்?’ என்பார்; ‘முன் எது? பின் எது?’
என்பார்;
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும்
கொள்ளார்;-
பொன் செய்தார் மவுலிவிண்ணோர்-உணர்ந்திலர், புகுந்தது
ஒன்றும்.–105-
பொன் செய்தார் மவுலி விண்ணோர் – பொன் மயமான (கற்பக
மலர்) மாலையை முடியில் அணிந்த தேவர்கள்; புகுந்தது ஒன்றும்
உணர்ந்திலர் – (செய்தொழில் விரைவின் காரணமாக அங்கு)
நிகழ்ந்தது ஒன்றையும் அறிய மாட்டாதவர்களாய்; என் செய்தார் என்
செய்தார் என்று இயம்புவார் – (இவ்வீரர்கள்) யாது செய்தார்கள்?
யாது செய்தார்கள் என்று (அறிய வியப்புத்) தோன்றக் கூறி;
இனையதன்மை முன் செய்தார் யாவர்? – இத்தகைய செயலை இதற்கு
முன்பு யாவர் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள்; முன் எது
பின் எது என்பார் – (இப்போர் போல்) முன்பும் எதுவுமில்லை
பின்பும் எதுவுமில்லை என்பார்கள்; கொன்செய் தார் வீரர் – அச்சம்
உண்டாகும் மாலையை அணிந்த வீரர்கள்; இன்ன திசையினார்
என்றும் கொள்ளார் – இன்ன திசையில் உள்ளார்கள் என்றும் அறிய
மாட்டாதவர் ஆயினார்.
———–
8107.
‘நாண் பொரு வரி வில் செங் கை, நாம நூல் நவின்ற கல்வி
மாண்பு ஒரு வகையிற்று அன்று; வலிக்கு இலை அவதி;
வானம்
சேண் பெரிது’ என்று, சென்ற தேவரும், ‘இருவர் செய்கை
காண்பு அரிது’ என்று, காட்சிக்கு ஐயுறவு எய்திற்று
அன்னோ!–106-
நாண் பொரு வரிவில் – நாண் பொருந்திய கட்டமைந்த வில்லினது;
நாம நூல் நவின்ற செங்கை கல்வி – புகழ் பொருந்திய நூலை (வில்
ஆற்றலை)த் தமது சிவந்த கைகளால் (இவ்விருவரும் கற்ற) கல்வியின்;
மாண்பு ஒரு வகையிற்று அன்று – பெருமை ஒருவகைப் பட்டது
அன்று; வலிக்குஇலை அவதி – (இவர்களது உடல்) வலிமைக்கும் ஓர்
எல்லை இல்லை; வானம் சேண் பெரிது என்று சென்ற தேவரும் –
(இவர்கள் விளைக்கும் வலிய போர்) வானத்தினும் பெரிது எனவே
(இவர்களுடைய போரைக் காண வேண்டும் என்று நினைத்து)
வானத்துப் போர் காண வந்த தேவர்களும்; இருவர் செய்கை காண்பு
அரிது என்று – இருவரது (போர்ச்) செய்கை காண்பதற்கு
அருமையானது என்று கூறி விட்டதால்; காட்சிக்கு ஐயுறவு எய்திற்று –
கண்ணால் காணும் காட்சிப் பிரமாணத்துக்கும் ஐயம் வந்து விட்டது.
———-
8108.
ஆயிர கோடி பல்லம், அயில் எயிற்று அரக்கன், எய்தான்;
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான், ஐயன்;
ஆயிர கோடி நாகக் கணை தொடுத்து, அரக்கன் எய்தான்;
ஆயிர கோடி நாகக் கணைகளால் அறுத்தான், அண்ணல்.–107-
அயில் எயிற்று அரக்கன் – கூர்மையான பற்களை உடைய
அரக்கனாகிய இந்திரசித்தன்; ஆயிர கோடி பல்லம் எய்தான் –
ஆயிரங்கோடி பல்லம் எனும் ஒருவகை அம்புகளை எய்தான்; ஐயன் –
தலைவனாகிய (இலக்குவன்); அவை ஆயிர கோடி பல்லத்து
துணித்து அறுத்தான் – அந்த அம்புகளை (வேறு) ஆயிரம் கோடி
பல்லங்களால் துண்டித்து ஒழித்தான்; அரக்கன் – அரக்கனாகிய
இந்திரசித்தன்; ஆயிர கோடி நாகக் கணைதொடுத்து எய்தான் –
ஆயிரங் கோடி நாகக் கணைகளை (வில்லில்) தொடுத்து எய்தான்;
அண்ணல் – தலைமைத் தன்மை உடைய இலக்குவன்; ஆயிர கோடி
நாகக் கணைகளால் அறுத்தான் – ஆயிரம் கோடி நாகக் கணைகளால்
(அவற்றை) அறுத்து நீக்கினான்
————-
8109.
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன்
கோத்தான்;
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான்,
கொண்டல்;
மீட்டு, ஒரு கோடி கோடி வெஞ் சினத்து அரக்கன் விட்டான்;
மீட்டு, ஒரு கோடி கோடி கொண்டு, அவை தடுத்தான், வீரன்.–108-
அரக்கன் – அரக்கனாகிய இந்திரசித்தன்; கோட்டியின் தலைய –
துன்பம் செய்யும் இயல்பினைக் கொண்ட நுனியினை உடைய; கோடி
கோடி அம்பு கோத்தான் – பல கோடி அம்புகளை (வில்லில்)
கோத்துச் செலுத்தினான்; கொண்டல் – மேகத்தைப் பண்பால் ஒத்த
இலக்குவன்; கோட்டியின் தலைய – (அதே போல்) துன்பம் செய்யும்
இயல்பினைக் கொண்ட நுனியினை உடைய; கோடி கோடியால்
குறைத்தான் – பல கோடி அம்புகளால் (அவற்றைத்) துண்டாக்கினான்;
வெஞ்சினத்து அரக்கன் – கொடிய சினத்தை உடைய அரக்கனாகிய
இந்திரசித்தன்; மீட்டு ஒரு கோடி கோடி விட்டான் – மீண்டும் ஒரு
கோடி அம்புகளை எய்தான்; வீரன் – வீரனாகிய இலக்குவன்; அவை –
அவற்றை; மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு தடுத்தான் – மீண்டும்
ஒரு கோடி அம்புகளைச் (செலுத்தித்) தடுத்தான்.
—————-
8110.
கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து, அரக்கன் எய்தான்;
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து, இளவல்
காத்தான்.
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்;
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன்
தீர்த்தான்.–109-
அரக்கன் – இந்திரசித்தன்; கங்க பத்திரம் – கழுகின் சிறகுகள்
கட்டப் பெற்ற அம்புகள்; ஓர் கோடி – ஒரு கோடியினை; கை
விசைத்து எய்தான் – கையில் வேகம் கொண்டு செலுத்தினான்:
இளவல் – இளவலாகிய இலக்குவன்; ஓர் கோடி கங்க பத்திரம் கணை
தொடுத்து – ஒரு கோடி (அதே) கங்கபத்திரக் கணைகளைத் தொடுத்து;
காத்தான் – (அவை தன் மீது படாமல்) காத்தான்; இலக்குவன் –
இலக்குவன்; திங்களின் பாதி – அர்த்த சந்திர வடிவுடைய; கோடி
தெரிந்து விட்டான் – கோடி அம்புகளைத் தேர்ந்தெடுத்துச்
செலுத்தினான்; அரக்கன் – இந்திரசித்தன்; அவை – அவற்றை;
திங்களின் பாதி – அர்த்த சந்திர வடிவுடைய; கோடி தொடுத்து –
கோடி அம்புகளைத் தொடுத்து; தீர்த்தான் – நீக்கினான்.
————
8111.
கோரையின் தலைய கோடி கொடுங் கணை
அரக்கன் கோத்தான்;
கோரையின் தலைய கோடி தொடுத்து, அவை இளவல்
கொய்தான்;
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல், பல் கால்;
பாரையின் தலைய கோடி, அரக்கனும், பதைக்க எய்தான்.–110-
அரக்கன் – இந்திரசித்தன்; கோரையின் தலைய – கோரைப்புல்
போன்ற நுனியை உடையனவாகிய; கொடுங்கணை – கொடிய
அம்புகள்; கோடி கோத்தான் – கோடியை (வில்லில்) கோத்து
எய்தான்; இளவல் – இளையவனாகிய இலக்குவன்; அவை –
அவற்றை; கோரையின் தலைய – கோரைப்புல் போன்ற நுனியை
உடைய அம்புகள்; கோடி தொடுத்து – கோடியைத் தொடுத்து;
காத்தான் – (தன்னைக்) காத்துக் கொண்டான்; இளவல் – இலக்குவன்;
பல்கால் – பலமுறை; பாரையின் தலைய – பாரை மீன் போன்ற
நுனியை உடைய அம்புகள்; கோடி பரப்பினான் – கோடியை
(எங்ஙணும்) தூவினான்; அரக்கனும் – இந்திரசித்தனும்; பாரையின்
தலைய – பாரை மீன் போன்ற நுனியை உடைய; கோடி – கோடி
அம்புகளை; பதைக்க எய்தான் – (அவற்றிற்கு எதிராக) துடிக்க
எய்தான்.
—————
8112.
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் துரந்து, முந்தி, தசமுகன் தனயன் ஆர்த்தான்;
தாமரைத் தலைய வாளி, தாமரைக் கணக்கின் சார்ந்த,
தாம் வரத் தடுத்து வீழ்த்தான், தாமரைக்கண்ணன் தம்பி.-111-
தசமுகன் தனயன் – பத்துத் தலையை உடைய இராவணனது
மகனாகிய இந்திரசித்தன்; தாமரைத் தலைய – தாமரை அரும்பு
போன்ற முனையை உடைய; வாளி – அம்புகள்; தாமரைக் கணக்கின்
– பதுமம் என்னும் பேரெண்; சார்ந்த – அளவு உள்ளனவற்றை; தாம்
வர முந்தி துரந்து – தாம் (தன் வில்லில் இருந்து) முந்தி வருமாறு
செலுத்தி; ஆர்த்தான் – பேரொலி செய்தான்; தாமரைக் கண்ணன்
தம்பி – தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடைய இராமனது
தம்பியாகிய இலக்குவன்;தாமரைத் தலைய வாளி – தாமரை அரும்பு போன்ற முனையை
உடைய அம்புகள்; தாம் தாமரைக் கணக்கின் சார்ந்த – தாம் பதுமம்
என்னும் பேரெண் அளவு உள்ளனவற்றை; வர – (தன் வில்லில்
இருந்து) வருமாறு செய்து; தடுத்து வீழ்த்தான் – (அவன் செலுத்திய
அம்புகளைத்) தடுத்து அறுத்து அழித்தான்.
—————
8113.
வச்சிரப் பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்;
வச்சிரப் பகழி கோடி துரந்து, அவை அனகன் மாய்த்தான்;
முச் சிரப் பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான்;
முச் சிரப் பகழி கோடி தொடுத்து, அவை தடுத்தான்
முன்பன்.–112-
வளை எயிற்று அரக்கன் – வளைந்த பற்களை உடைய
அரக்கனாகிய இந்திரசித்தன்; வச்சிரப் பகழி கோடி – பல தலைகளை
உடைய வச்சிரத்தின் வடிவமானதோர் அம்புகள் கோடியை; எய்தான் –
செலுத்தினான்; அனகன் – குற்றம் அற்றவனாகிய இலக்குவன்;
வச்சிரப் பகழி கோடி துரந்து – பல தலைகளை உடைய வச்சிரப்
படையின் வடிவமான அம்புகள் கோடியைச் செலுத்தி; அவை
மாய்த்தான் – (அவற்றைத்) தடுத்து அழித்தான்; இலக்குவன் –
இலக்குவன்; கோடி – கோடி அளவு உள்ள; முச்சிரப் பகழி – மூன்று
முனைகளை உடைய அம்புகளை; முடுக விட்டான் – விரைவாகச்
செல்ல விட்டான்; முன்பன் -வலிமை உடையவனாகிய இந்திரசித்தன்;
முச்சிரப் பகழி கோடி தொடுத்து – மூன்று முனைகளை உடைய
அம்புகள் கோடியைத் தொடுத்து; அவை தடுத்தான் – அந்த
அம்புகளைத் தடுத்தான்.
———
8114.
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து, அவை அறுத்தான், ஐயன்
குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான்;
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து, அவை அரக்கன்
கொய்தான்.–113-
இகல் அரக்கன் – போர் வலிமை உடைய இந்திரசித்தன்;
அஞ்சுகோடி அஞ்சலி தொடுத்து – ஐந்து கோடியளவான. கை கூப்பிய
வடிவம் போன்ற வடிவம் உள்ள அம்புகளை; தொடுத்து எய்தான் –
தன் வில்லில் தொடுத்து எய்தான்; ஐயன்- தலைவனாகிய இலக்குவன்;
அஞ்சுகோடி அஞ்சலி தொடுத்து – ஐந்து கோடியளவான கை கூப்பிய
வடிவம் போன்று வடிவம் உள்ள அம்புகளைத் தொடுத்து; அவை –
அவற்றை; அறுத்தான் – அழித்தான்; இலக்குவன் – இலக்குவன்;
சிலையில் – தன் வில்லில்; குஞ்சரக் கன்னம் கோடி – யானையின்
காது போன்ற தோற்றம் உடைய அம்புகள் கோடியை; கோத்தான் –
தொடுத்து எய்தான்; அரக்கன் – இந்திரசித்தன்; குஞ்சரக் கன்னம்
கோடி தொடுத்து – யானையின் காது போன்ற தோற்றம் உடைய
அம்புகள் கோடியைத் தொடுத்து; அவை கொய்தான் – அவற்றைக்
கொய்தான்.
———
8115.
எய்யவும், எய்த வாளி விலக்கவும், உலகம் எங்கும்
மொய் கணைக் கானம் ஆகி முடிந்தது; முழங்கு வேலை
பெய் கணைப் பொதிகளாலே வளர்ந்தது; பிறந்த கோபம்
கைம்மிகக் கனன்றது அல்லால், தளர்ந்திலர், காளை வீரர்.–114-
எய்யவும் – (இலக்குவனும் இந்திரசித்தனும் ஒருவர் மேல் ஒருவர்)
அம்பு எய்யவும்; எய்த வாளி விலக்கவும் – (ஒருவர்) எய்த
அம்புகளை மற்றவர் விலக்கவும் (செய்தலினால்); உலகம் எங்கும் –
உலகம் முழுவதும்; மொய்கணைக் கானம் ஆகி முடிந்தது –
நெருங்கிய அம்புக் கூட்டங்களை உடைய காடு போலாகி முடிந்தது;
முழங்கு வேலை – ஒலிக்கிற கடல்; பெய் கணைப் பொதிகளாலே
வளர்ந்தது – பொழிகின்ற அம்புகளின் கூட்டத்தால் வளர்ச்சி உற்றது;
காளை வீரர் – (அங்ஙனமாகவும்) இளம் காளை போன்ற (இரு)
வீரர்களும்; பிறந்த கோபம் – மனத்தில் தோன்றிய சினம்; கைம் மிகக் கனன்றது அல்லால் – மேலும் மேலும்
அதிகமாகத் தோன்றிக் கனன்றது அல்லது; தளர்ந்திலர் – (இருவரும்
சிறிதும்) தளர்ச்சி உற்றார்களில்லை.
————-
8116.
வீழியின் கனிபோல் மேனி கிழிபட, அனுமன் வீரச்
சூழ் எழு அனைய தோள்மேல் ஆயிரம் பகழி தூவி,
ஊழியின் நிமிர்ந்த செந் தீ உருமினை உமிழ்வது என்ன,
ஏழ்-இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான்.–115-
வீழியின் கனி போல் – (இந்திர சித்தன்) வீழிச் செடியினது சிவந்த
நிறமுடைய பழம் போல; அனுமன் மேனி கிழிபட – (அனுமனது)
உடம்பு கிழிபடும் படியாக; வீரச் சூழ் எழு அனைய தோள் மேல் –
வீரத்தை உடைய திரண்ட இரும்புத் தூண் போன்ற தோள்களின்
மேல்; ஆயிரம் பகழி தூவி – ஆயிரம் அம்புகளைச் செலுத்தி;
ஊழியின் நிமிர்ந்த செந்தீ – ஊழிக் காலத்தில் (கடலில் முற்படத்
தோன்றிய) செந்தீயான (வடவாமுகாக்கினி); உருமினை உமிழ்வது
என்ன – இடியை வெளிப்படுத்துவதுபோல; ஏழ் இருநூறு வாளி –
ஆயிரத்து நானூறு அம்புகளை; இலக்குவன் கவசத்து எய்தான் –
இலக்குவனுடைய கவசத்தில் எய்தான்.
———
8117.
‘முற்கொண்டான், அரக்கன்’ என்னா, முளரி வாள்
முகங்கள், தேவர்,
பின் கொண்டார்; இளைய கோவைப் பியல்
கொண்டான் பெருந் தோள்நின்றும்
கல்கொண்டு ஆர்கிரியின் நாலும் அருவிபோல், குருதி
கண்டார்,
‘வில் கொண்டான், இவனே!’ என்னா, வெருக் கொண்டார்,
முனிவர்எல்லாம்.–116-
தேவர் – (போர் காண) வந்த தேவர்கள்; அரக்கன் – அரக்கனாகிய
இந்திரசித்தன்; முற்கொண்டான் என்னா – (போரில்) முந்தினான்
என்று எண்ணி; முளரி வாள் முகங்கள் பின் கொண்டார் –
(தங்களது) தாமரை போன்ற ஒளி பொருந்திய முகங்களைப் பின்னால்
திருப்பிக் கொண்டார்கள்; இளைய கோவை – இளைய தலைவனாகிய
இலக்குவனை; பியல் கொண்டான் – பிடரியின் மீது ஏற வைத்துக்
கொண்டுள்ளவனாகிய அனுமனது; பெருந் தோள் நின்றும் – பெரிய தோள்களில்
இருந்து; கல் கொண்டு ஆர் கிரியின் – கற்கள் பொருந்தி நிறைந்துள்ள
மலையில் இருந்து; நாலும் அருவி போல் – பெருகி வருகின்ற
அருவியைப் போல்; குருதி கண்டார் – இரத்தத்தைக்
கண்டவர்களாகிய; முனிவர் எல்லாம் – முனிவர்கள் எல்லாம்; “வில்
கொண்டான் இவனே” என்னா – வில்லைக் கையில் கொண்ட
(வீரர்களில் சிறந்தவன்) இவ்வரக்கனே என்று சொல்லி; வெருக்
கொண்டார் – அச்சம் கொண்டார்கள்.
—————
8118.
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன், சிலைக் கை வாளி
நூறு நூறு ஏவி, வெய்தின், நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி, வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி,
ஆறு நூறு அம்பு செம் பொன் கவசம் புக்கு அழுந்த
எய்தான்.–117-
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் – சினந்து செய்யும்
போர்த் தொழிலைப் பற்றிய சாத்திரத்தை (ஐயந்திரிபற) அறிந்த
இலக்குவன்; கைசிலை வாளி – (தன்) கையிலுள்ள வில்லில் இருந்து
அம்புகளை; நூறு நூறு ஏவி – பல நூற்றுக்கணக்கான அளவில்
செலுத்தி; வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – வலிமையாக
வளைந்துள்ள பிடரி மயிரை உடைய சிங்கங்களையும்; வேறு வேறு
இயற்றி – வேறு வேறு துண்டுகளாகச் செய்து; வீரக் கொடிகயையும்
அறுத்து வீழ்த்தி – வீரத்துக்குக் குறியான கொடியையும் அறுத்து
வீழ்த்தி; செம்பொன் கவசம் புக்கு – இந்திரசித்தன் அணிந்துள்ள
சிவந்த பொன் போன்ற கவசத்தில் புகுந்து; அழுந்த ஆறு நூறு அம்பு
எய்தான் – அழுந்துமாறு அறுநூறு அம்புகளை எய்தான்.
————
8119.
காளமேகத்தைச் சார்ந்த கதிரவன் என்னக் காந்தி,
தோளின்மேல் மார்பின்மேலும், சுடர் விடு கவசம் சூழ,
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன,
வாளிவாய்தோறும் வந்து பொடித்தன, குருதி வாரி.–118-
காள மேகத்தைச் சார்ந்த – கரிய மேகத்தைப் பொருந்திய;
கதிரவன் என்னக் காந்தி – கதிரவன் என்னுமாறு ஒளிவிட்டு;
தோளின் மேல் – தோளின் மீதும்; மார்பின் மேலும் – மார்பின்
மீதும்; சுடர் விடு கவசம் சூழ – ஒளிவிடுகிற கவசத்தைச் சுற்றிலும்;
நீளநீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – நீளமாக
நீண்டுள்ள பவளக் கொடிகளின் வரிசைகள் ஒளியோடு தோன்றுவது
போல்; குருதி வாரி – இரத்தக் கடல்கள்; வாளிவாய் தோறும் வந்து
பொடிந்தன – அம்புகள் தைத்த இடந்தோறும் வந்து வெளிப்பட்டன.
———–
8120.
பொன்உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மாப்புரண்ட
போதும்,
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்,
தன் நிறத்து உருவ, வாளி தடுப்பு இல சார்ந்த போதும்,
இன்னது என்று அறியான், அன்னான், இனையது ஓர்
மாற்றம்சொன்னான்.–119-
பொன் உறு தடந் தேர் பூண்ட மடங்கல் மா – பொன் மயமான
பெரிய (தனது) தேரில் பூட்டப்பட்ட சிங்கங்கள் (இலக்குவனது அம்பு
பட்டு); புரண்ட போதும் – கீழ் விழுந்து புரண்டு இறந்த காலத்திலும்;
மின் உறு பதாகையோடு – ஒளி பொருந்திய கொடியுடன்; சாரதி
வீழ்ந்த போதும் – தேர்ப்பாகன் இறந்து விழுந்த காலத்திலும்; தன்
நிறத்து உருவ – தன் மார்பில் ஊடுருவும் படியாக; தடுப்பு இல வாளி
சார்ந்த போதும் – தடுக்க முடியாதனவாகிய அம்புகள் நெருங்கிய
காலத்திலும்; அன்னான் – அந்த இந்திரசித்தன்; இன்னது என்று
அறியான் – (நடப்பது) இன்னது என்று ஒன்றும் உணராதவனாகி;
இனையது – இத்தன்மையதாகிய; ஓர் மாற்றம் சொன்னான் – ஒரு
சொல்லைச் சொல்லுபவனாயினான்.
—————-
8121.
‘அந் நரன்; அல்லன் ஆகின், நாரணன் அனையன்;
அன்றேல்
பின், அரன், பிரமன் என்பார்ப் பேசுக; பிறந்து வாழும்
மன்னர், நம் பதியின் வந்து, வரி சிலை பிடித்த கல்வி
இந் நரன்தன்னோடு ஒப்பார் யார் உளர், ஒருவர்?’
என்றான்.–120-
அந்நரன் – (அந்த இலக்குவன்) அந்த நரனோயாவான்; அல்லன்
ஆகின் – அவன் அல்லாவிட்டால்; நாரணன் அனையன் –
நாராயணனை ஒப்பவன்; அன்றேல் – அவன் அல்லனாயின்; பின்
அரன் பிரமன் என்பார்ப் பேசுக – பின்பு சிவன் பிரமன் என்ற
தேவர்களை (உவமையாகக் கொண்டு) பேசுக; வரிசிலை பிடித்த கல்வி
– கட்டமைந்த வில்லைப் பிடித்த வில்கல்வியில்; இந்நரன் தன்னோடு
ஒப்பார் – இந்த மனிதனோடு ஒப்பவர்; நம் பதியின் வந்து – நம்
பூமியில் வந்து; பிறந்து வாழும் மன்னர் – பிறந்து வாழும்
மன்னர்களில்; யார் உளர் – எவர் உள்ளார்கள்; என்றான் – என்று
(இந்திரசித்தன் இலக்குவனது வீரத்தைப் புகழ்ந்து) கூறினான்.
————-
இந்திரசித்தன் தேர் அழிதல்
8122.
வாயிடை நெருப்புக் கால, உடல் நெடுங் குருதி வார,
தீயிடை நெய் வார்த்தன்ன வெகுளியான்,-உயிர் தீர்ந்தாலும்,
ஓய்விடம் இல்லான்-வல்லை, ஓர் இமை ஒடுங்காமுன்னம்,
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான்.–121-
உயிர் தீர்ந்தாலும் – (தன்) உயிர் போவதாய் இருந்தாலும்;
ஓய்விடம் இல்லான் – போர்த் தொழிலை ஒழியாதவனாகிய இந்திர
சித்தன்; வாயிடை நெருப்புக்கால – வாயில் இருந்து நெருப்பு
வெளிப்படவும்; உடல் நெடுங்குருதி வார – உடலில் இருந்து
மிகுதியான இரத்தம் ஒழுகவும்; தீயிடை நெய் வார்த்தன்ன
வெகுளியான் – தீயில் நெய்யை வார்த்தது போன்ற (மிக்க) சினத்தை
உடையவனாய்; வல்லை – விரைவாக; ஓர் இமை ஒடுங்கா முன்னம் –
அரை மாத்திரை அளவு காலத்தில்; ஆயிரம் புரவி பூண்ட – ஆயிரம் குதிரகள் பூண்டதும்; ஆழி அம் தேரன் ஆனான் –
சக்கரங்களை உடையதும் ஆகிய அழகிய வேறு ஒரு தேரின் மேல்
ஏறிக்கொண்டான்.
————
8123.
ஆசை எங்கணும் அம்பு உக, வெம்பு போர்
ஓசை விம்ம, உருத்திரரும் உடல்
கூச, ஆயிர கோடி கொலைக் கணை
வீசி, விண்ணை வெளி இலது ஆக்கினான்.–122-
ஆசை எங்கணும் அம்பு உக – (இந்திரசித்தன் எல்லாத்)
திசைகளிலும் அம்புகள் சிந்தவும்; வெம்பு போர் ஓசை விம்ம –
கொடிய போரினது பேரொலி (எங்கும்) பரவவும்; உருத்திரரும் உடல்
கூச – சிவபிரானும் (போரின் கொடுமையைத் தாங்கமுடியாது) உடம்பு
நடுங்கவும்; கொலைக்கணை ஆயிர கோடி வீசி – கொல்லும் தன்மை
உள்ள அம்புகள் ஆயிரம் கோடியை எய்து; விண்ணை வெளி இலது
ஆக்கினான் – ஆகாயத்தை வெற்றிடம் இல்லை யாகும்படி செய்தான்.
———–
8124.
அத் திறத்தினில், அனகனும், ஆயிரம்
பத்தி பத்தியன் எய்குவ பல் கணை
சித்திரத்தினில் சிந்தி, இராவணன்
புத்திரற்கும், ஓர் ஆயிரம் போக்கினான்.–123-
அனகனும் – பாவச் செயல் இல்லாதவனாகிய (இலக்குவனும்);
அத்திறத்தினில் – அப்பொழுது; பத்திபத்தியின் – வரிசை வரிசையாக;
எய்குவ ஆயிரம் பல்கணை – எய்வனவாகிய (பல) ஆயிரம்
அம்புகளை; சித்திரத்தினில் சிந்தி – (கண்டோர்) வியப்பு அடையுமாறு
செலுத்தி; இராவணன் புத்திரற்கும் – இராவணன் மகனாகிய
இந்திரசித்தன் மீதும்; ஓர் ஆயிரம் போக்கினான் – ஓர் ஆயிரம்
அம்புகளைச் செலுத்தினான்.
————
8125.
ஆயிரம் கணை பாய்தலும், ஆற்ற அருங்
காய் எரித்தலை நெய் எனக் காந்தினான்;
தீயவன் பெருஞ் சேவகன் சென்னிமேல்
தூய வெங் கணை நூறு உடன் தூண்டினான்.–124-
ஆயிரம் கணை பாய்தலும் – (இந்திரசித்தன் மேல்
இலக்குவனுடைய) ஆயிரம் அம்புகள் பாய்ந்த உடனே; ஆற்ற
அருங்காய் எரித்தலை நெய் எனக் காந்தினான் – (அதனால்)
பொறுக்க முடியாத காயும் நெருப்பின் இடத்து (விழுந்த) நெய்யால்
(அந்த நெருப்பு) மூண்டு எழுமாறு போலக் கொதித்து; தூய பெருஞ்
சேவகன் சென்னிமேல் – சிறப்புடைய தூய வீரனாகிய இலக்குவனது
நெற்றியின் மீது; தீயவன் – கொடிய தீயவனாகிய இந்திரசித்தன்;
வெங்கணை நூறு உடன் தூண்டினான் – கொடிய அம்புகள் நூறை
உடன் எய்தான்.
———
8126.
நெற்றிமேல் ஒரு நூறு நெடுங் கணை
உற்ற போதினும், யாதும் ஒன்று உற்றிலன்,
மற்று அவ் வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற, வெங் கணை நூறு முடுக்கினான்.–125-
நெற்றி மேல் – தன் நெற்றியின் மீது; ஒரு நூறு நெடுங்கணை –
ஒரு நூறு பெரிய அம்புகள்; உற்ற போதினும் – ஊடு உருவிய
போதிலும்; யாதும் ஒன்று உற்றிலன் – (இலக்குவன்) எந்த வகையிலும்
சிறிதும் வருந்தாதவனாகி; மற்று அவ்வன் தொழிலோன் மணி
மார்பிடை – அந்த வலிமையான தொழிலை உடைய (இந்திரசித்தனது)
அழகிய மார்பின் கண்; முற்ற வெங்கணை நூறு முடுக்கினான் – ஊடு
உருவுமாறு கொடிய அம்புகள் நூறினைச் செலுத்தினான்;
————
8127.
நூறு வெங் கணை மார்பின் நுழைதலின்,
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர,
தேறல் ஆம் துணையும், சிலை ஊன்றியே
ஆறி நின்றனன்-ஆற்றலில் தோற்றிலான்.–126-
ஆற்றலில் தோற்றிலான் – (போர்) வலிமையில் இதுவரை
தோற்றிலாதவனாகிய (இந்திரசித்தன்); நூறு வெங்கணை மார்பின்
நுழைதலின் – (இலக்குவனது) நூறு கொடிய அம்புகள் (தன்) மார்பில்
(பட்டு ஊடுருவி) நுழைந்ததனால்; ஊறு சோரியோடு – (பொங்கி)
ஊறுகிற குருதியோடு; உள்ளமும் சோர்தர – மனமும்
———-
8128.
புதையும் நல் மணி, பொன் உருள், அச்சொடும்
சிதைய, ஆயிரம் பாய் பரி சிந்திட-
வதையின் மற்றொரு கூற்று என மாருதி-
உதையினால் அவன் தேரை உருட்டினான்.–127-
வதையின் – கொலைத் தொழிலில்; மற்றொரு கூற்று என – பிறிது
ஓர் இயமன் என்று கூறத்தக்க; மாருதி – அனுமன்; நல் மணி
புதையும் – நல்ல மணிகள் புதைக்கப்பட்ட; பொன் உருள் – (அழகிய)
பொன்மயமான சக்கரங்கள்; அச்சொடும் சிதைய – அச்சுடன்
அழிபடவும்; பாய்பரி ஆயிரம் சிந்திட – தாவிச் செல்லும் குதிரைகள்
ஆயிரமும் விழுந்து இறக்கவும்; அவன் தேரை – அந்த இந்திரசித்தன்
ஏறி வந்த தேரை; உதையினால் உருட்டினான் – உதைத்து உருட்டித்
தள்ளினான்.
————-
8129.
பேய் ஓர் ஆயிரம் புண்டது, பெய்ம் மணி
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான்;
தூயவன் சுடர்த் தோள்இணைமேல் சுடர்த்
தீய வெங் கணை ஐம்பது சிந்தினான்.–128-
பேய் ஓர் ஆயிரம் பூண்டது – (இந்திரசித்தன்) பேய்கள் ஓராயிரம்
பூட்டப்பட்டதும்; மணிபெய் ஏயதேர் – மணிகள் பெய்து
பொருத்தப்பட்டதுமான தேரின் மீது; இமைப்பின்னிடை ஏறினான் –
இமைப்பொழுதில் ஏறியவனாய்; தூயவன் – தூய்மை உடையனவாகிய
அனுமனின்; சுடர்த்தோள் இணை மேல் – ஒளி விடுகிற இரண்டு
தோள்களின் மீது; சுடர்த் தீயவெங்கணை – ஒளி விளங்குகிற
கொடுமையான அம்புகள்; ஐம்பது சிந்தினான் – ஐம்பதைச்
செலுத்தினான்.
———–
8130.
ஏறி ஏறி இழிந்தது அல்லால், இகல்
வேறு செய்திலன், வெய்யவன்; வீரனும்,
ஆறு கோடி பகழியின் ஐ-இரு
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான். –129-
வெய்யவன் – (அனுமன் தோளிணை மேல் ஐம்பது வெங்கணை
எய்த) கொடியவனாகிய இந்திரசித்தன்; ஏறி ஏறி இழிந்தது அல்லால்-
(இலக்குவன் தானேறும் தேர்களை எல்லாம் அம்பு கொண்டு
அழித்தலால்) (பல தேர்களில்) ஏறி ஏறி இறங்குவது அல்லாது;
வேறு இகல் செய்திலன் – வேறு எந்த வகையான போரும்
செய்யவில்லை; வீரனும் – வீரன் ஆகிய இலக்குவனும்; ஆறு கோடி
பகழியின் – ஆறு கோடி அம்புகளால்; ஒரு நாழிகை – ஒரு நாழிகை
அளவுக்குள்; ஐ இருநூறு தேர் – ஆயிரம் தேர்களை; நூறினான் –
அழித்தான்.
————–
8131.
ஆசி கூறினர்; ஆர்த்தனர்; ஆய் மலர்
வீசி வீசி, வணங்கினர்;-விண்ணவர்-
ஊசல் நீங்கினர்; உத்தரிகத்தொடு
தூசு வீசினர்;-நல் நெறி துன்னினார்.–130-
விண்ணவர் – இந்திரசித்தன் ஏறிய தேர்களை எல்லாம் இலக்குவன்
அழிப்பது கண்டு (போர் காண வந்த) தேவர்கள்; ஆர்த்தனர் –
மகிழ்ச்சிப் பேரொலி செய்தனர்; ஆசி கூறினர் – (அந்த
இலக்குவனுக்கு) ஆசி கூறினார்கள்; ஆய்மலர் வீசி வீசி
வணங்கினர் – (அவன் மீது) ஆய்ந்து திரட்டிய மலர்களை
வீசி வீசி வணங்கினார்கள்; ஊசல் நீங்கினர் – மனத் தடுமாற்றம்
நீங்கப் பெற்றனர்; உத்தரிகத்தொடு – மேலாடையுடன்; தூசு வீசினர்-
அரையாடையையும் வீசினார்கள்; நல்நெறி துன்னினார் –
இச்செயல்களால் அவர்கள் நன்னடக்கையோடு நெருங்கியவர்கள்
என்பதைக் காட்டினார்கள்.
———–
8132.
அக் கணத்தின், ஓர் ஆயிரம் ஆயிரம்
மிக்க வெங் கண் அரக்கர், அவ் வீரனோடு
ஒக்க வந்துற்று ஒருவழி நண்ணினார்,
புக்கு முந்தினர், போரிடைப் பொன்றுவான்.–131-
அக்கணத்தின் – அப்பொழுதில்; அவ்வீரனோடு ஒக்க – அந்த
இந்திரசித்தனோடு ஒத்த; ஓர் ஆயிரம் ஆயிரம் – ஓர் பத்து இலட்சம்;
மிக்கவெங்கண் அரக்கர் – மிக்ககொடிய கண்களை உடைய
அரக்கர்கள்; வந்துற்று – வந்து; ஒரு வழி நண்ணினார் -ஓரிடத்தில் திரண்டவர்களாய்ப்; போரிடைப் பொன்றுவான் –
போர்க்களத்தில் அழிவதற்காக; புக்கு முந்தினர் – புகுந்து
(இலக்குவனை) அழித்தனர்.
———
8133.
தேரர், தேரின் இவுளியர், செம் முகக்
காரர்,-காரின் இடிப்பினர், கண்டையின்
தாரர், தாரணியும் விசும்பும் தவழ்
பேரர், பேரி முழக்கு அன்ன பேச்சினார்.–132-
தேரர் – (இலக்குவனை எதிர்க்க வந்த அரக்கவீரர்களில்) தேர்
வீரர்களும்; தேரின் இவுளியர் – தேர்ந்து எண்ணிய குதிரை
வீரர்களும்; செம்முகக்காரர் – சிவந்த புள்ளிகள் பொருந்திய மேகம்
போன்ற கருநிறத்தை உடைய யானை வீரர்களும்; காரின் இடிப்பினர்-
மேகம் போல் அதட்டுகிறவர்களும்; கண்டையின் தாரர் – கண்டை
மாலை அணிந்தவர்களும்; தாரணியும் – உலகிலும்; விசும்பும் –
ஆகாயத்திலும்; தவழ் பேரர் – பரவிய புகழை உடையவர்களும்;
பேரிமுழக்கு அன்ன பேச்சினார் – பேரிகையின் முழக்கம் போன்ற
பேச்சினை உடையவர்களாயும் இருந்தார்கள்.
————
8134.
பார்த்த பார்த்த திசைதொறும், பல் மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ,
ஆர்த்த ஓதையும், அம்பொடு வெம் படை
தூர்த்த ஓதையும், விண்ணினைத் தூர்த்தவால்–133-
பார்த்த பார்த்த திசை தொறும் – பார்த்த பார்த்த திக்குகள்
எல்லாம்; பல் மழை – பல மேகங்கள்; போர்த்த வானம் என –
சூழ்ந்து மூடிய வானம் போல; இடி போர்த்து எழ – இடியோசை
பரந்து உண்டாகும்படி; ஆர்த்த ஓதையும் – (வீரர்) பேரொலி செய்த
ஓசையும்; அம்பொடு – அம்புகளும்; வெம்படை – பிற கொடிய
படைக்கலங்களையும்; தூர்த்த ஓதையும் – செலுத்தியதால் உண்டாகும்
ஓசையும்; விண்ணினைத் தூர்த்தவால் – ஆகாயத்தை நிறைத்தன.
——————-
8135.
ஆளி ஆர்த்தன; வாள் அரி ஆர்த்தன;
கூளி ஆர்த்தன; குஞ்சரம் ஆர்த்தன;
வாளி ஆர்த்தன; தேர், இவர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால், பிணம் துன்னலால்.
இவர் தேர் – இந்த அரக்கர்களுடைய தேர்கள்; ஆளி ஆர்த்தன –
யாளிகள் பூட்டப் பெற்றனவாயும்; வாள் அரி ஆர்த்தன – ஒளி
விளங்கும் சிங்கங்கள் பூட்டப் பெற்றனவாயும்; கூளி ஆர்த்தன –
பேய்கள் பூட்டப்பெற்றனவாயும்; குஞ்சரம் ஆர்த்தன – யானைகள்
பூட்டப்பெற்றனவாயும்; வாளி ஆர்த்தன – யாளிகள்
பூட்டப்பெற்றனவாயும்; (ஆகிய அவை) பிணம் துன்னலால் –
போர்க்களத்தில் பிணங்கள் நெருங்கிக் கிடத்தலால்; மண் தலம் தூளி
ஆர்த்திலதால் – மண்ணில் தூசு எழப் பெறாததாய் இருந்தன.
————–
8136.
வந்து அணைந்தது ஓர், வாள் அரி வாயு தேர்,
இந்திரன்தனை வென்றவன் ஏறினான்;
சிந்தினன் சர மாரி, திசை திசை;
அந்திவண்ணனும் அம்பின் அகற்றினான்.
இந்திரன் தனை வென்றவன் – இந்திரனை வென்றவனாகிய
இந்திரசித்தன்; வந்து அணைந்தது ஓர் – தன்னருகில் வந்து சேர்ந்த
ஒரு; வாவு வாள் அரி தேர் – தாவுகின்ற சிங்கங்கள் பூட்டப் பெற்ற
தேரில்; ஏறினான் – ஏறி; திசை திசை – திசைகளில் எல்லாம்; சரமாரி
சிந்தினன் – அம்பு மழை பொழிந்தான்; அந்தி வண்ணனும் – சந்திக்
காலத்தில் விளங்கும் செவ்வானத்தின் நிறமுடையவனாகிய
இலக்குவன்; அம்பின் அகற்றினான் – அவற்றை எல்லாம் (தன்)
அம்புகளால் நீக்கி விட்டான்.
——————
8137.
சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்தவர்
எற்றுகின்றன, எய்த, எறிந்தன,
அற்று உதிர்ந்தன; ஆயிரம் வன் தலை,
ஒற்றை வெங் கணையோடும் உருண்டவால்.–136-
அவர் சுற்றும் வந்து படர்ந்து தொடர்ந்து – அந்த அரக்கர்கள்
(இலக்குவனைச்) சுற்றி வந்து நெருங்கிப் பரவித் தொடர்ந்து;
எற்றுகின்றன – மோதுகின்றவையும்; எய்த – எய்தவையும்; எறிந்தன –
எறிந்தவையுமாகிய (அரக்கர் படைக்கலங்கள்); அற்று உதிர்ந்தன –
அறுபட்டுப் பொடியாய் உதிர்ந்தன; ஆயிரம் வன்தலை – அவர்களுடைய ஆயிரம் வலிய தலைகள்; ஒற்றை
வெங்கணையோடும் – (இலக்குவன் எய்த) ஒரு கொடிய அம்பினால்;
உருண்டவால் – அறுபட்டுக் கீழ் உருண்டு விழுந்தன.
—————–
8138.
குடர் கிடந்தன, பாம்பு என; கோள் மதத்
திடர் கிடந்தன; சிந்தின, தேர்த் திரள்;
படர் கிடந்தனர், பல் படைக் கையினர்-
கடர் கிடந்தன போன்ற களத்தினே.
கடர் கிடந்தன போன்ற களத்தினே – கடல் கிடந்தது போன்ற
போர்க்களத்தின் கண்ணே; பாம்பு குடர் கிடந்தன – பாம்புகள்
போலக் குடல்கள் கிடந்தன; கோள் மதத்திடர் கிடந்தன – கொள்ளும்
தன்மை உள்ள மத யானைகள் மேடுகள் போல விழுந்து கிடந்தன;
தேர்த்திரள் சிந்தின – தேர்க்கூட்டங்கள் சிதறிக் கிடந்தன; பல்படைக்
கையினர் – பல படைக்கலங்களைக் கையில் ஏந்திய படைவீரர்கள்;
படர் கிடந்தனர் – (அம்புகளால் புண்பட்டுத்) துன்பத்தில் அழுந்திக்
கிடந்தார்கள்
———-
8139.
குண்டலங்களும், ஆரமும், கோவையும்,
கண்டநாணும், கழலும், கவசமும்,
சண்ட மாருதம் வீச, தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என, வீழ்ந்தவால்.–138-
குண்டலங்களும் – (அரக்கர்கள் காதில் அணிந்திருந்த)
குண்டலங்களும்; ஆரமும் – முத்து மாலைகளும்; கோவையும் –
(பிறமணிக்) கோவைமாலைகளும்; கண்டநாணும் – கண்ட சரங்களும்;
கழலும் – வீரக் கழல்களும்; கவசமும் – ;மார்புக் கவசங்களும்; சண்ட
மாருதம் வீச – கொடிய சூறைக்காற்று விசுதலால்; தலத்து உகும் –
நிலத்தில் (சிதறி) விழுகிற; விண் தலத்தினின் – ஆகாயத்தில் உள்ள;
மீன் என வீழ்ந்தவால் – மீன்போலக் (கீழே) விழுந்தன
———–
8140.
அரக்கன் மைந்தனை, ஆரியன் அம்பினால்,
கரக்க நூறி, எதிர் பொரு கண்டகர்
சிரக் கொடுங் குவைக் குன்று திரட்டினான்-
இரக்கம் எய்தி, வெங் காலனும் எஞ்சவே.–139-
ஆரியன் – (பெருமைக்கு உரியவன் ஆகிய) இலக்குவன்;
அம்பினால் – தன் அம்புகளினால்; அரக்கன் மைந்தனை –
அரக்கனாகிய இராவணனது மகனாகிய இந்திரசித்தனை; கரக்க நூறி –
அம்புகளினால் உருவம் மறையும் படியாக எய்து; வெங்காலனும் –
கொடிய இயமனும்; இரக்கம் எய்தி – (போரில் இறக்கும் அரக்க வீரர்
நிலை கண்டு) மனமிரங்கி; எஞ்சவே – பின்னடையும்படியாக;
எதிர்பொரு கண்டகர் – (தன்னை) எதிர்த்துப் போர் செய்த
வஞ்சகர்களான அரக்கர்களின்; கொடுசிரக் குவைக்குன்று – கொடிய
தலைகளின் குவியல்களாகிய மலைகளைத்; திரட்டினான் – குவித்தான்.
—————-
8141.
சுற்றும் வால்கொடு; தூவும்; துவைக்கும்; விட்டு
எற்றும்; வானின் எடுத்து எறியும்; எதிர்
உற்று மோதும்; உதைக்கும்; உறுக்குமால்-
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே.
அன்று – அப்பொழுது; கொற்ற வில்லி – வெற்றி பொருந்திய
வில்வீரனாகிய இலக்குவன்; ஏறிய கூற்றமே – ஏறிச் செலுத்திய
அனுமனாகிய இயமன்; வால்கொடு சுற்றும் தூவும் – (அரக்க
வீரர்களைத் தன்) வாலைக்கொண்டு சுற்றிவளைத்து (எடுத்துத்)
தூவுவான்; துவைக்கும் – தன் கால்களால் மிதிப்பான்; விட்டு எற்றும் –
நெட்டித் தள்ளி உதைப்பான்; வானின் எடுத்து எறியும் – வானத்தில்
எடுத்து எறிவான்; எதிர் உற்று மோதும் – எதிரே பொருந்தி
மோதுவான்; உதைக்கும் – (தன்) கால்களால் உதைப்பான்; உறுக்கும் –
சினந்து பார்ப்பான்.
—————-
8142.
பார்க்கும் அஞ்ச; உறுக்கும்; பகட்டினால்
தூர்க்கும், வேலையை; தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும்; ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
ஈர்க்கும்-ஐயன் அன்று ஏறிய யானையே.–141-
அன்று – அப்பொழுது; ஐயன் – தலைவனாகிய இலக்குவன்; ஏறிய
யானையே – ஏறியிருந்த யானை போன்றவனாகிய அனுமன்; அஞ்ச
பார்க்கும் – (அரக்கர்கள்) அஞ்சும்படியாகப் பார்ப்பான்;
உறுக்கும் – சினந்து அதட்டுவான்; பகட்டினால் வேலையைத்
தூர்க்கும் – யானைகளை எடுத்து வீசி எறிந்து கடலைத் தூர்ப்பான்;
தோள்புடை கொட்டி நின்று ஆர்க்கும் – தோளின் பக்கங்களில்
கொட்டி நின்று பேரொலி செய்வான்; ஆயிரம் தேர் பிடித்து –
ஆயிரம் தேர்களைப் பிடித்து; அம் கையால் ஈர்க்கும் – (தன்)
அழகிய கைகளால் இழுப்பான்.
——————
8143.
மாவும் யானையும் வாளுடைத் தானையும்,
பூவும் நீரும் புனை தளிரும் என,
தூவும்; அள்ளி் பிசையும்; துகைக்குமால்-
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே.–142-
சேவகன் – வீரனாகிய இலக்குவன்; தெரிந்து – தேர்ந்தெடுத்து;
ஏறிய சீயமே – ஏறியிருந்த சிங்கம் போன்ற அனுமன்; மாவும் -;
குதிரைகளையும் யானையும் – யானைகளையும்; நீரும் – தண்ணீர்
போலவும்; புனைதளிரும் என – அழகிய தளிர்கள் போலவும்; தூவும்
– தூவுவான்; அள்ளிப்பிசையும் – கையால் அள்ளிப் பிசைவான்;
துகைக்கு மால் – காலால் துவைப்பான்.
—————
8144.
உரகம் பூண்ட உருளை பொருந்தின
இரதம் ஆயிரம், ‘ஏ’ எனும் மாத்திரை,
சரதம் ஆகத் தரைப் படச் சாடுமால்-
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே.–143-
அன்று – அப்பொழுது; வரதன் – வரந்தரும் வலிமை உள்ள
இலக்குவன்; உவந்து ஏறிய வாசியே – மகிழ்ந்து ஏறிய வாகனமாகிய
குதிரை போன்ற அனுமன்; உரகம் பூண்ட – பாம்புகள் பூட்டப்
பெற்றனவும்; உருளை பொருந்தின – சக்கரங்கள் பொருந்தியனவும்
ஆகிய; ஆயிரம் இரதம் – ஆயிரம் தேர்களை; “ஏ” எனும் மாத்திரை
– மிகமிக விரைவான கால அளவில்; சரதம் ஆக – தவறாமல்;
தரைப்படச் சாடுமால் – தரையில்பட்டு அழியுமாறு மோதி
அழிப்பான்.
————–
8145.
அவ் இடத்தினில், ஆய் ம்ருந்தால், அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டென,
எவ் இடத்தினும் வீழ்ந்த இனத்தலைத்
தெவ் அடக்கும் அவ் வலியவர் தேறினார்.–144-
அவ் இடத்தினில் – (அனுமன் அரக்கர் படையை அழித்துக்
கொண்டிருந்த) அந்த நேரத்தில்; அழல் வெவ்விடத்தினை உண்டவர்
– தீப் போன்ற கொடிய நஞ்சினை உண்டவர்கள்; ஆய் மருந்தால் –
சிறந்த மருந்தினால்; மீண்டென – உயிர் பிழைத்து எழுந்தது போல;
எவ் இடத்தினும் – போர்க்களத்தின் எல்லா இடங்களிலும்; வீழ்ந்த –
(இந்திரசித்தனின் அம்பு பட்டுக்) களைத்து மூர்ச்சையாகிக் கிடந்த;
இனத்தலை – (அனுமானின்) கூட்டத்தில் உள்ளவர்களான; தெவ்
அடக்கும் – பகைவரை அடக்கும்; அவ்வலியவர் – அந்த வலிமை
உடையவர்களாகிய குரங்குப் படை வீரர்கள்; தேறினார் – களைப்பு
நீங்கி எழுந்தார்கள்;
—————–
8146.
தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்;
ஊறினார் வந்து, இளவலை ஒன்றினார்;
மாறு மாறு, மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார்.–145-
தேறினார் – (மயக்கம்) தெளிந்து எழுந்த (அந்த வானர வீரர்கள்);
கண் நெருப்பு உக – கண்களில் தீ வெளிப்படுமாறு; சீறினார் –
சீறியவர்களாகி; வந்து ஒன்றினார் – இளவலாகிய இலக்குவனைச்
சூழ்ந்தார்கள்; மாறுமாறு – (பகைவனாகிய இந்திர சித்தனுக்கு எதிராக)
மாற்றி மாற்றி; மலையும் – மலைகளையும்; மரங்களும் –
மரங்களையும்; நூறும் ஆயிரமும் கொடு – நூற்றுக்கணக்கிலும்,
ஆயிரக்கணக்கிலும் (கைகளில்) (ஏந்திக்) கொண்டு; நூறினார் –
(பகைவர்களை) அழித்தார்கள்.
——————-
8147.
விகடம் உற்ற மரனொடு வெற்புஇனம்
புகட, உற்ற பொறுத்தன, போவன,
துகள் தவத் தொழில் செய் துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன, தார் அணி தேர் எலாம்.–146-
விகடம் உற்ற – வேறுபாடு பொருந்திய (பலவகையாக அமைந்த);
மரனொடு – மரங்களையும்; வெற்பு இனம் – மலைக் கூட்டங்களையும்
(குரங்குப்படையினர்); புகட – வீச; உற்ற பொறுத்தன – உளவாகிய
ஊறுபாடுகளைக் கொண்டவையாய்;
போவன – அழிந்து போவனவாகிய; தார் அணி தேர் எலாம் –
ஒலிக்கும் கிண்கிணியைக் கட்டி அழகுபடுத்தப்பட்ட தேர்கள் எல்லாம்;
துகள் தவத்தொழில் செய் – குற்றம் இல்லாமல் மிகுதியான
தொழிலைச் செய்கிற; துறைக்கம்மியர் – தன் துறையில் சிறந்த
மரத்தச்சர்கள் (முடிக்காமல் அரைகுறையாகச் செய்து கொண்டிருக்கிற);
சகடம் ஒத்தன – தேர்களை ஒத்து விளங்கின.
—————————
8148.
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்,
காலின் வந்த அரக்கனை; ‘கா; இது
போலும் உன் உயிர் உண்பது, புக்கு’ எனா,
மேல் நிமிர்ந்து, நெருப்பு உக, வீசினான்.–147-
வாலி மைந்தன் – வாலியின் மகனாகிய அங்கதன்; ஓர் மால்
வரை வாங்கினான் – ஒரு பெரிய மலையைக் (கையில்) பெயர்த்து
எடுத்துக்கொண்டு; காலின் வந்த அரக்கனை – காற்றுப் போல தேரில்
விரைந்து வந்த அரக்கனாகிய இந்திரசித்தனை (நோக்கி); உயிர்
உண்பது இது போலும் – உன்னுடைய உயிரைக் குடிப்பது இது
போலும்; புக்கு காஎனா – புகுந்து (உன் உயிரைக்) காத்துக் கொள்
என்று சொல்லி; மேல் நிமிர்ந்து – உயரக் குதித்து எழுந்து; நெருப்பு
உக வீசினான் – நெருப்பு வெளிப்படும் படியாக வீசினா;.
———————————-
8149.
‘ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம்’ என, தேவர்கள்
ஊர் அழித்த உயர் வலித் தோளவன்
தேர் அழித்து, ஓர் இமைப்பிடைச் சென்றதால்.–148-
செய்தவன் – தவம் செய்தவனாகிய இராவணனது; ஈண்டு எழில்-
நெருங்கிய (வலிமையின்) சிறப்பை; அழித்தவன் ஆம் என –
அழித்தவன் (இந்த அங்கதனே) ஆகும் என்று (பார்த்தவர் வியந்து
பாராட்டும் படியாக); தேவர்கள் ஊர் அழித்த – தேவர்களின் ஊராகிய
தேவர் உலகத்தை அழித்த; வலி உயர் தோளவன் – வலிமை மிகுந்த
தோளை உடையவனான (இந்திரசித்தனது); தேர் ஏர் அழித்தது –
தேரின் அழகு கெட்டது; அழித்து – (அவ்வாறு அதை) அழித்து; ஓர் இமைப்பிடைச் சென்றதால் – (அங்கதன்
வீசிய மால்வரை) ஒரு நொடிப்பொழுதில் சென்றது.
————
8150.
அந்த வேலையின், ஆர்த்து எழுந்து ஆடினார்,
சிந்தை சால உவந்தனர், தேவர்கள்-
‘தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன்’ என்பது ஓர் ஏம்பலால்.–149-
அந்த வேலையின் – அப்பொழுது; தந்தை தந்தை – அங்கதனது
தந்தையாகிய வாலியின் தந்தையாகிய இந்திரன்; பண்டு உற்ற சழக்கு
எலாம் – முன்பு அடைந்த அவமானத்தை எல்லாம்; எந்தை – எமது
ஐயனாகிய அங்கதன்; தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – தீர்த்து
விட்டான் என்பதொரு களிப்பினால்; தேவர்கள் – தேவர்கள்; சிந்தை
சால உவந்தனர் – மனம் மிக மகிழ்ந்தவர்களாய்; ஆர்த்து –
மகிழ்ச்சிப் பேரொலி செய்து; எழுந்து ஆடினார் – எழுந்து
கூத்தாடினார்கள்.
———————-
8151.
அழிந்த தேரின்நின்று, அந்தரத்து, அக் கணத்து,
எழுந்து, மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்,-
‘கழிந்து போகலை, நில்!’ என, கைக் கணை
பொழிந்து சென்றனன்-தீ எனப் பொங்கினான்.–150-
அக்கணத்து – அப்பொழுதே; அழிந்த தேரின் நின்று – அழிந்த
தேரில் நின்று; அந்தரத்து எழுந்து – மேலே எழுந்து; மற்று ஓர்
இரதம் உற்று ஏறினான் – வேறு ஒரு தேரினை நெருங்கி ஏறி;
தீ எனப் பொங்கினான் – தீயினைப் போலப் பொங்கிச் சினந்து;
கழிந்து போகலை நில் என – (அங்கதனை நோக்கி) விலகிப்
போகாதே நிற்பாயாக என்று சொல்லி; கைக்கணை பொழிந்து
சென்றனன் – கையில் உள்ள வில்லில் இருந்து அம்புகளைப்
பொழிந்துகொண்டு சென்றான்.
——————-
8152.
இந்திரன் மகன் மைந்தனை, ‘இன் உயிர்
தந்து போக!’ எனச் சாற்றலுற்றான்தனை,
வந்து, மற்றைய வானர வீரரும்,
முந்து போர்க்கு முறை முறை முற்றினார்.–151-
இந்திரன் மகன் மைந்தனை – இந்திரன் மகனாகிய வாலியினுடைய
மகனாகிய அங்கதனைப் பார்த்து); இன் உயிர் தந்து போக – உனது
இனிய உயிரை எனக்கு இரையாகக் கொடுத்துச் செல்வாய்; எனச்
சாற்றலுற்றான் தனை – என்று கூறியவனாகிய இந்திரசித்தனை; வந்து
– நெருங்கி வந்து; மற்றைய வானர வீரரும் – மற்றும் உள்ள வானர
வீரர்கள் எல்லாம்; முந்து போர்க்கு – முந்திச் செல்லும் போருக்கு;
முறை முறை முற்றினார் – வரிசை வரிசையாகச் சூழ்ந்து
கொண்டார்கள்.
——————–
8153.
மரமும், குன்றும், மடிந்த அரக்கர்தம்
சிரமும், தேரும், புரவியும், திண் கரிக்
கரமும், ஆளியும் வாரிக் கடியவன்
சரமும் தாழ்தர, வீசினர், தாங்கினார்.–152-
மரமும் – (அவ்வாறு சூழ்ந்துகொண்ட வானர வீரர்கள்)
மரங்களையும்; குன்றும் – மலைகளையும்; மடிந்த அரக்கர்தம் சிரமும்
– இறந்து போன அரக்கர்களுடைய தலைகளையும்; தேரும் –
தேர்களையும்; புரவியும் – குதிரைகளையும்; திண்கரிக் கரமும் – வலிய
யானைகளின் கைகளையும்; ஆளியும் – சிங்கங்களையும்; வாரி –
(கைகளால்) வாரி எடுத்து; கடியவன் – கொடியவனாகிய
இந்திரசித்தனது; சரமும் தாழ்தர – அம்புகளின் வேகமும் பின்னால்
இருக்கும்படி; வீசினர் தாங்கினார் – வீசித் தாக்கினார்கள்.
———————-
8154.
அனைய காலையில், ஆயிரம் ஆயிரம்
வினைய வெங் கண் அரக்கரை, விண்ணவர்
நினையும் மாத்திரத்து, ஆர் உயிர் நீக்கினான்-
மனையும், வாழ்வும், உறக்கமும் மாற்றினான்.–153-
மனையும் – தன் மனைவியாகிய ஊர்மிளையையும்; வாழ்வும் –
அரச போக மாளிகை வாழ்வினையும்; உறக்கமும் – தூக்கத்தையும்;
மாற்றினான் – நீக்கி உள்ளவனாகிய இலக்குவன்; அனைய காலையில்
– அந்தச் சமயத்தில்; ஆயிரம் ஆயிரம் – பல்லாயிரம் (இலட்சம்);
வினைய வெங்கண் அரக்கரை – போர்த் தொழில் வல்ல
கொடுமையான கண்களை உடைய அரக்கர்களை; விண்ணவர்
நினையும் மாத்திரத்து – தேவர்கள் நினைக்கும் கால அளவுக்குள்; ஆர் உயிர் நீக்கினான் –
அருமையான உயிரைப் போக்கிக் கொன்றான்.
———–
8155.
ஆனையும், தடந் தேரும், தன் ஆர் உயித்
தானையும், பரியும், படும் தன்மையை
மான வெங் கண் அரக்கன் மனக் கொளா,
போன வென்றியன், தீ எனப் பொங்கினான்.–154-
மானவெங்கண் அரக்கன் – மான உணர்வையும் கொடுமையான
கண்களையும் உடைய அரக்கனாகிய இந்திரசித்தன்; ஆனையும் –
யானைகளும்; தடந்தேரும் – பெரிய தேர்களும்; தன் ஆர்
உயிர்த்தானையும் – தனது அரிய உயிர் போன்ற படை வீரர்களும்;
பரியும் – குதிரைகளும்; படும் தன்மையை – இறந்து படும் பாட்டை;
மனக் கொளா – மனத்தில் கொண்டு; போன வென்றியன் – வெற்றி
இல்லாதவனாகி; தீ எனப் பொங்கினான் – தீயினைப் போலச்
சினந்தான்.
——————-
8156.
சீர்த் தடம் பெருஞ் சில்லி அம் தேரினைக்
காத்து நின்ற இருவரைக் கண்டனன்-
ஆர்த்த தம் பெருஞ் சேனை கொண்டு, அண்டமேல்
ஈர்த்த சோரிப் பரவை நின்று ஈர்த்தலால்.–155-
ஆர்த்த தம் பெருஞ்சேனை கொண்டு – பேரொலி செய்த (தம்
பக்கத்து) அரக்கரது இறந்த பெரிய படையை வாரிக் கொண்டு;
அண்டமேல் ஈர்த்த சோரிப்பரவை – அண்டத்தளவு (உயர்ந்த)
இரத்தக்கடல்; நின்று ஈர்த்தலால் – நின்று தங்களையும் இழத்தலால்;
சீர்த்தடம் பெருஞ் சில்லி – (அவ்வாறு இழுக்க விடாமல்) சிறப்புப்
பொருந்திய சக்கரங்களை உடைய; அம் தேரினை – அழகிய
தேரினைப் பற்றிக்கொண்டு; காத்து நின்ற – தங்களைக்
காத்துக்கொண்டு நின்ற; இருவரைக் கண்டனன் –
(தூமிராட்சன் மாபக்கன் ஆகிய) இருவரை மட்டுமே இந்திரசித்தன்
கண்டான்.
——————-
8157.
நேர் செலாது, இடை நின்றனர்-நீள் நெடுங்
கார் செலா; இருள் கீறிய கண் அகல்
தேர் செலாது; விசும்பிடைச் செல்வது ஓர்
பேர் செலாது;-பிணத்தின் பிறக்கமே. –156-
பிணத்தின் பிறக்கமே – அக்களத்தில் பிணங்கள் மிகுந்து
குவிந்திருத்தலால்; நீள் நெடுங்கார் செலா – (அதற்கு மேல் நேராகச்
செல்லுகிற) நீண்ட பெரிய மேகங்கள் செல்ல மாட்டா; இருள் கீறிய
கண் அகல் தேர் செலாது – இருளை நீக்குகிற கதிரவனுடைய
இடமகன்ற பெரிய தேரும் செல்ல மாட்டாது; விசும்பிடைச் செல்வது
ஓர் பேர் செலாது – ஆகாயத்தில் செல்லும் தன்மை உள்ள ஓர்
உயிரும் செல்ல மாட்டாது; நேர் செலாது – (இவ்வாறு பிணங்கள்
நெருங்கி இருத்தலால் புகை நிறக் கண்ணன், மாபக்கன்) என்ற இரு
வீரர்களும் நேராகச் செல்லாது; இடை நின்றனர் – இருந்த
இடத்திலேயே நின்றிருந்தனர்.
———————-
8158.
அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள் முகம் நோக்கி, ‘ஒரு விலான்
நன்று நம் படை நாற்பது வெள்ளமும்
கொன்று நின்றபடி!’ எனக் கூறினான்.–157-
அன்று – அப்பொழுது; தன் அயல் நின்ற அரக்கரை –
இந்திரசித்து தன் அருகில் தேரினைப் பற்றி நின்ற அரக்கர்களின்;
வாள் ஒன்று முகம் நோக்கி – ஒளி பொருந்திய முகத்தைப் பார்த்து;
ஒருவிலான் – ஒப்பற்ற வில் வீரனாகிய இலக்குவன்; நம் படை நாற்பது
வெள்ளமும் – நமது படை நாற்பது வெள்ளத்தையும்; கொன்று
நின்றபடி – கொன்று நின்ற தன்மை; நன்று எனக் கூறினான் –
நன்றாய் இருக்கிறது என்று கூறினான்.
————————
8159.
ஆய வீரரும், ‘ஐய! அமர்த்தலை,
நீயும், நாற்பது வெள்ள நெடும் படை
மாய, வெங் கணை மாரி வழங்கினை:
ஓய்வு இல் வெஞ் செரு ஒக்கும்’ என்று ஓதினார்.–158-
ஆய வீரரும் – (இந்திரசித்தன் கூறக் கேட்ட) அத்தன்மை உடைய
வீரர்கள் இருவரும்; ஐய – ஐயனே; அமர்த்தலை நீயும் –
போர்க்களத்தில் நீயும்; நாற்பது வெள்ள நெடும் படை மாய –
எதிரிகளின் நாற்பது வெள்ள அளவுள்ள பெரும்படை அழியும்
படியாக; வெங்கணை மாரி வழங்கினை – கொடிய அம்பு மழை
பொழிந்தாய் (அதனால்); ஓய்வு இல் வெஞ்செரு – இடைவிடாது
(இருவரும் செய்த) கொடிய போர்; ஒக்கும் – ஒத்தது ஆகும்; என்று
ஓதினார் – என்று கூறினார்கள்.
————————
8160.
வந்து நேர்ந்தனர்; மாருதிமேல் வரும்
அந்திவண்ணனும், ஆயிரம் ஆயிரம்
சிந்தினான், கணை; தேவரை வென்றவன்
நுந்த நுந்த, முறை முறை நூறினான்.–159-
வந்து நேர்ந்தனர் – (இலக்குவனும் இந்திரசித்தனும் மீண்டும்
போரிட) வந்த எதிர்த்தனர்; மாருதி மேல் வரும் அந்தி வண்ணனும்
– அனுமன் மீது ஏறி வருகிற செவ்வானம் போன்ற நிறம் உடைய
இலக்குவனும்; ஆயிரம் ஆயிரம் கணை சிந்தினான் –
ஆயிரக்கணக்கான அம்புகளைச் செலுத்தினான்; தேவரை வென்றவன்-
தேவர்களை வென்றவனாகிய இந்திரசித்தன்; நுந்த நுந்த –
(இலக்குவன்) எய்யும் தோறும் எய்யும் தோறும்; முறை முறை
நூறினான் – அவற்றை முறை முறையே அழித்தான்.
————————–
8161.
ஆறும், ஏழும், அறுபதும் ஐம்பதும்,
நூறும், ஆயிரமும், கணை நூக்கி, வந்து
ஊறினாரை உணர்வு தொலைத்து, உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான்.–160-
(இந்திரசித்தன்) ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் நூறும்
ஆயிரமும் – ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் நூறும் ஆயிரமும்
ஆகிய; கணை நூக்கி – அம்புகளைச் செலுத்தி; வந்து ஊறினாரை –
(எதிர்) வந்து ஊன்றியவர்களை; உணர்வு தொலைத்து – மயக்கம்
அடையும்படி செய்து; உயிர் தேறினாரை – (முன்பு மயங்கிப் பின்பு
மயக்கம் நீங்கி) உயிர் தேறியவர்களை; நெடு நிலம் சேர்த்தினான் –
பெரிய நிலத்தில் (உயிரற்று) விழச் செய்தான்.
————
8162.
கதிரின் மைந்தன் முதலினர், காவலார்,
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும்,
எதிரில் நின்ற இராவணி ஈடுற,
வெதிரின் காட்டு எரிபோல், சரம் வீசினான்.–161-
கதிரின் மைந்தன் முதலினர் காவலார் – கதிரவன் மகனை
முதலாகக் கொண்ட வானரப் படைக்காவல் வீரர்கள்; உதிர
வெள்ளத்தின் – (தங்களது உடலில் இருந்து பெருகிய)
இரத்தவெள்ளத்தால்; ஒல்கி ஒதுங்கலும் – தளர்ந்து ஒதுங்கிய உடனே;
எதிரில் நின்ற – தனக்கு எதிரில் நின்ற; இராவணி – இராவணன்
மகனாகிய இந்திரசித்தன்; ஈடுற – தளர்ச்சி அடையுமாறு (இலக்குவன்);
வெதிரில் காட்டு எரிபோல் – மூங்கில் காட்டில் பற்றிய தீயினைப்
போல்; சரம் வீசினான் – அம்புகளைக் கடுமையாக எய்தான்.
————————-
உளைவு தோன்ற, இராவணி ஒல்கினான்;
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும்,
அளவு இல் சேனை அவிதர, ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான்.–162-
இராவணி – இராவணன் மகனாகிய இந்திரசித்தன்; உளைவு
தோன்ற ஒல்கினான் – (வெதிரின் காட்டு எரிபோல் சரம் வீசிய
இலக்குவனின் அம்புகளால்) வருத்தம் உண்டாகித் தளர்ச்சி
அடைந்தான்; கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும் – (அவனுக்கு
இருபக்கங்களிலும் மரத்தின்) கிளைபோல (அத்தேரினைக் காத்து)
நின்றவர்களாகிய புகை நிறக்கண்ணன், மாபக்கன் என்னும் இருவரும்
மனக்கிளர்ச்சி உற்றுப் போருக்கு எழுந்த உடனே; ஆரியற்கு
இளையவன் – இராமனுக்கு இளையவனாகிய இலக்குவன்; அளவு
இல்சேனை அவிதர – அளவு இல்லாத அரக்கர் படை அழியும்
படியாக; சுடுசரம் ஏவினான் – கொல்லும் தன்மை பொருந்திய
அம்புகளைச் செலுத்தினான்.
————-
8164.
தெரி கணை மாரி பெய்ய, தேர்களும், சிலைக் கைம்மாவும்,
பரிகளும், தாமும், அன்று பட்டன கிடக்கக் கண்டார்.
இருவரும் நின்றார்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
ஒருவரும் நின்றார் இல்லை; உள்ளவர் ஓடிப் போனார்.–163-
தெரிகணை மாரி பெய்ய – (இலக்குவன்) தேர்ந்தெடுத்த அம்புகளை
மழைபோலச் செலுத்த; தேர்களும் – தேர்களும்; சிலைக் கைம்மாவும்
– சிலிர்க்கின்ற கையை உடைய யானைகளும்; பரிகளும் –
குதிரைகளும்; அன்று பட்டன தாமும் கிடக்கக் கண்டார் –
அப்பொழுது இறந்து விழுந்து கிடப்பதைக் கண்டார்கள் ஆகிய;
இருவரும் நின்றார் – அந்த இருவர் மாத்திரமே போர்க்களத்தில்
நின்றார்கள்; மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் ஒருவரும்
நின்றாரில்லை – பிற அரக்கர்கள் என்னும் பெயருடையவர்கள்
ஒருவரும் நிற்கவில்லை; உள்ளவர் ஓடிப் போனார் – உயிர் உளராக
நின்ற அனைவரும் (களத்தை விட்டு) ஓடிப்போனார்கள்.
————-
8165.
ஓடினர் அரக்கர், தண்ணீர் உண் நச உலர்ந்த நாவர்,
தேடின, தேலிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி,
பாடு உறு புண்கள்தோறும் பசும் புனல் பாயப் பாய,
வீடினர் சிலவர்; சில்லோர், பெற்றிலர்; விளிந்து வீழ்ந்தார்.–164-
ஓடினர் அரக்கர் – போர்க்களத்தில் நிற்காது உயிர் பிழைத்து
ஓடினவர்களாகிய அரக்கர்கள்; உலர்ந்த நாவர் – வறண்ட நாவினை
உடையவர்களாய்; உண்நசை தண்ணீர் தேடினர் – உன்ணும்
விருப்பத்தால் தண்ணீரைத் தேடினார்கள் (அவ்வாறு தேடியவர்கள்);
தெரிந்து – தேர்ந்து எடுத்து; கையால் முகிலினை முகந்து தேக்கி –
தங்கள் கைகளால் மேகங்களை (மேகநீரை) வாரிக் குடித்துச்; சிலவர்
வீடினர் – சிலர் இறந்து ஒழிந்தார்கள்; சில்லோர் – வேறு சிலர்;
பெற்றிலர் – (அவ்வாறு) (தண்ணீர்) கிடைக்கப் பெறாமையால்; பாடுறு
புண்கள் தோறும் – (அம்பு பட்டுத் தோன்றிய புண்களில் இருந்து;
பசும் புனல் பாயப் பாய – பசிய (குருதிப்) புனல் மேலும் மேலும் பாய்தலால்; விளிந்து வீழ்ந்தார் –
இறந்து விழுந்தார்கள்.
—————–
8166.
வெங் கணை திறந்த மெய்யர், விளிந்திலர், விரைந்து
சென்றார்,
செங் குழல் கற்றை சோரத் தெரிவையர் ஆற்ற, தெய்வப்
பொங்கு பூம் பள்ளி புக்கார், அவர் உடல் பொருந்தப்
புல்லி,
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார்.–165-
வெங்கணை திறந்த மெய்யர் – கொடிய அம்புகளால் பிளக்கப்பட்ட
உடலினை உடைய சில அரக்கர்கள்; ஆற்ற விரைந்து சென்றார் – மிக
விரைந்து சென்று; தெரிவையர் செங்குழல் கற்றை சோர -தங்கள்
மனைவியருடைய சிவந்த கூந்தல் தொகுதி அவிழ்ந்து விழும்படியாக;
அவர் உடல் பொருந்தப் புல்லி – அவர்களுடைய உடம்பை
நெருக்கித் தழுவி; அங்கு – அந்த இடத்திலேயே; அவர் ஆவியோடும்
தம் உயிர் போக்கி அற்றார் – அவர்களுடைய உயிருடன் தங்களது
உயிரையும் விட்டு இறந்து; தெய்வப் பொங்கு பூம்பள்ளி புக்கார் –
தெய்வத்தன்மை பொங்குகிற அழகிய பெரிய படுக்கை ஆகிய
வீரசுவர்க்கம் புகுந்தார்கள்.
——————-
8167.
பொறிக் கொடும் பகழி மார்பர், போயினர், இடங்கள்
புக்கார்,
மறிக் கொளும் சிறுவர் தம்மை, மற்று உள சுற்றம் தம்மைக்
‘குறிக்கொளும்’ என்று கூறி, அவர் முகம் குழைய நோக்கி,
நெறிக் கொளும் கூற்றை நோக்கி, ஆர் உயிர் நெடிது
நீத்தார்.–166-
கொடும் பொறி பகழி மார்பர் – கொடுமையான நெருப்புப் பொறி
பறக்கும் அம்புகள் தைத்த மார்பினை உடையவர்களான சில
அரக்கர்கள்; போயினர் – போர்க்களத்தை விட்டுப்போய்;
இடங்கள் புக்கார் – தங்களது இருப்பிடம் புகுந்து; மறிக் கொளும்
சிறுவர் தம்மை – மான் மறிபோல் துள்ளி விளையாடும் புதல்வர்
தம்மையும்; மற்று உள சுற்றம் தம்மை – மற்றும் உள்ள பிற
சுற்றத்தார் தம்மையும்; குழைய நோக்கி – பரிவோடு பார்த்து; அவர்
முகம் நோக்கி – அந்த மக்களின் முகங்களைப் பார்த்து;
குறிக்கொளும் என்று கூறி – (நீ்ங்கள் இம்மக்களைக்) கருத்துடன்
கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு; நெறிக்கொளும்
கூற்றை நோக்கி – தங்கள் உயிரைக் காப்பாற்ற முறையாகக் கொள்ள
வந்த (இயமனைச் சினந்து) பார்த்து; ஆர்உயிர் நெடிது நீத்தார் –
தங்களுடைய அருமையான உயிரை (விட முடியாமல்) நீண்ட நேரம்
(போராடி) விட்டார்கள்,
————-
8168.
‘தாமரைக்கண்ணன் தம்பி தன்மை ஈதுஆகின், மெய்யே
வேம், அரக் கணத்தின் இவ் ஊர்; இராவணி விளிதல்
முன்னம்,
மா மரக் கானில், குன்றில், மறைந்திரும்; மறைய, வல்லே
போம்’ எனத் தமரைச் சொல்லி, சிலர் உடல் துறந்து
போனார்.–167-
சிலர் – சில அரக்கர்கள்; தாமரைக் கண்ணன் தம்பி – தாமரை
போன்ற திருக்கண்களை உடைய இராமனது தம்பியாகிய
இலக்குவனுடைய; தம்மை ஈது ஆகின் – போரிடும் தம்மை
இதுவானால்; இவ்ஊர் – இந்த இலங்கை ஊர்; மெய்யே
அரைக்கணத்தின் வேம் – உறுதியாக அரை நொடிப்பொழுதில் வெந்து
அழிந்துவிடும்; இராவணி விளிதல் முன்னம் – (ஆகவே) இராவணன்
மகனாகிய இந்திரசித்தன் இறப்பதற்கு முன்பே; மாமரக் கானில் –
பெரிய மரங்களை உடைய காடுகளிலும்; குன்றில் – குன்றுகளிலும்;
மறைந்திரும் – மறைந்து (இலக்குவனின் அம்புக்கு அகப்படாமல்)
இருங்கள்; மறைய வல்லே போம் – (அவ்வாறு) மறைவதற்காக
விரைவாகப் போங்கள்; எனத் தமரைச் சொல்லி – என்று
உறவினர்களைப் (பார்த்துச்) சொல்லி; உடல் துறந்து போனார் –
(தங்கள்) உடம்பைத் துறந்து விட்டு வீரசுவர்க்கம் போனார்கள்.
—————
8169.
வரை உண்ட மதுகை மேனி மருமத்து, வள்ளல் வாளி
இரை உண்டு துயில, சென்றார், ‘வாங்கிடின், இறப்பம்’
என்பார்,
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற, பிறர் முன் சொல்லா
உரையுண்ட நல்லோர் என்ன, உயிர்த்து உயிர்த்து,
உழைப்பதானார்.–168-
வள்ளல் வாளி – வள்ளன்மைப் பண்பு உடைய இலக்குவனது
அம்புகள்; வரை உண்ட மதுகை மேனி மருமத்து – (அரக்கர்களின்)
மலை போன்ற வலிமை உடைய உடம்பின் மார்பில்; இரை உண்டு
துயில – (பாய்ந்து) தசையைக் கிழித்து (அங்கேயே) தங்கி இருக்க;
சென்றார் – (அவ்வம்பைத் தாங்கிச் சென்ற சில) அரக்க வீரர்கள்;
வாங்கிடின் இறப்பம் என்பார் – (இந்த அம்புகளை மார்பில் இருந்து)
பிடுங்கினால் இறந்து விடுவோம் என்று எண்ணி; பிரை உண்டபாலின்
உள்ளம் பிறிதுற – பிரை ஊற்றிய பால் (வேறுபடுவது) போல மனம்
வேறுபட்டு மயங்க; பிறர் முன் சொல்லா – மற்றவர்க்கு முன் சொல்லத்
தகாத; உரையுண்ட நல்லோர் என்ன – பழிச்சொற்களை (வாய் விட்டுப்
பேசாது மனத்தில்) உண்டு வைத்து அடக்கிய பெரியவர்கள் போல;
உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – பெருமூச்சை மிகுதியாக விட்டு
வருந்துபவர்கள் ஆனார்கள்.
—————
8170.
தேரிடைச் செல்லார், மானப் புரவியில் செல்லார், செங் கண்
காரிடைச் செல்லார், காலின் கால் எனச் செல்லார், காவல்
ஊரிடைச் செல்லார், நாணால் உயிரின்மேல் உடைய
அன்பால்
போரிடைச் செல்லார், நின்று நடுங்கினர், புறத்தும் போகார்.–169-
தேரிடைச் செல்லார் – (அரக்கர்கள்) தேரின் மீது ஏறிச்
செல்லாதும்; மானப்புரவியில் செல்லார் – பெருமை உள்ள
குதிரைகளின் மீது ஏறிச் செல்லாதும்; செங்கண் காரிடைச் செல்லார் –
சிவந்த கண்களை உடைய கரிய மேகத்தை ஒத்த
யானைகளின் மீது ஏறிச் செல்லாதும்; கால் எனக்காலின் செல்லார்
– காற்றுப் போலக் கால்களினால் ஓடித் (தப்பிச்) செல்லாதும்; நாணால்
காவல் ஊரிடைச் செல்லார் – நாணத்தினால் காவலை உடைய
இலங்கை ஊருக்குத் திரும்பிச் செல்லாதும்; உயிரின் மேல் உடைய
அன்பால் – தங்களது உயிரின் மீது உள்ள அன்பினால்; போரிடைச்
செல்லார் – போர்க்களத்துக்குச் செல்லாதும்; புறத்தும் போகார் –
போர்க்களத்தை விட்டுத் தப்பி ஓடிச் செல்லாதும்; நின்று நடுங்கினர் –
(அங்கேயே ஓரிடத்தில்) நின்று நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
———————-
இந்திரசித்தன் கவசத்தை இலக்குவன் பிளத்தல்
8171.
நொய்தினின் சென்று கூடி, இராவணி உளைவை நோக்கி,
‘வெய்தினின் கொன்று வீழ்ப்பல்’ என்பது ஓர் வெகுளி
வீங்கி,-
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன்-பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால், கவசத்தைக் கழித்து வீழ்த்தான்.–170-
பெய்துழிப் பெய்யும் மாரி அனையவன் – பெய்த இடத்தில்
பெய்யும் மழையை ஒத்தவன் ஆகிய இலக்குவன்; நொய்தினின்
சென்று கூடி – விரைவாகச் சென்று நெருங்கி; இராவணி – இராவணன்
மகனாகிய இந்திரசித்தன்; உளைவை நோக்கி – தளர்ச்சியடைந்த
தன்மை கண்டு; வெய்தினின் கொன்று வீழ்ப்பல் – (இவனை யான்)
விரைவாகக் கொன்று வீழ்த்துவேன்; என்பது ஓர் வெகுளி வீக்கி –
என்று ஒப்பற்ற சினம் மிகுந்து; பிணங்கு கூற்றின் – மாறுபாடு
கொண்ட இயமனைப் போன்ற (தனது); கையினின் பெரிய அம்பால் –
கையில் உள்ள (வில்லில் பூட்டிய) பெரிய அம்புகளால்; கவசத்தைக்
கழித்து வீழ்த்தான் – (அவனது) கவசத்தை அறுத்து வீழ்த்தினான்.
————————
8172.
கவசத்தைக் கழித்து வீழ்ப்ப, காப்புறு கடன் இன்று ஆகி,
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீரத்
‘துவசத்தின் புரவித் திண் தேர் கடிதுறத் தூண்டி, யாம் இத்,
திவசத்தின் முடித்தும், வெம் போர்’ எனச் சினம்
திருகிச் சென்றார்.–171-
கவசத்தைக் கழித்து வீ்ழ்ப்ப – (இலக்குவன் இந்திரசித்தனின்)
கவசத்தை அறுத்து வீழ்த்த; காப்புறு கடன் இன்று ஆகி – (தன்னை
அம்புபடாது) காக்கிற கடமையுள்ள பொருள் வேறு ஒன்றும்
இல்லாமல் போனதால்; அவசத்தை அடைந்த வீரன் – தன்னை
இழந்த நிலை (மயக்கமடைந்த) அடைந்த வீரனாகிய இந்திரசித்தன்;
அறிவுறும் துணையின் – (மயக்கம் தெளிந்து) உணர்வு பெற்று
எழுவதற்கு முன்னுள்ள கால அளவில்; வீரத்துவசத்தின் – வீரத்தின்
அடையாளமாகக் கொடியை உடையதும்; புரவித்திண் தேர் –
குதிரைகள் பூட்டப்பெற்றதுமான வலிய தேரினை; கடிதுறத் தூண்டி –
விரைவு பொருந்தச் செலுத்தி; யாம் வெம்போர் – நாங்கள் (இந்தக்)
கொடிய போரினை; இத்திவசத்தின் முடித்தும் – இந்த நாளிலேயே
முடிப்போம்; என – என்று கூறிச்; சினம் திருகிச் சென்றார் – சினம்
மிக்கவர்களாய் (புகை நிறக் கண்ணனும் மாபக்கனும்) (இலக்குவன்
மீது) சென்றார்கள்.
——————-
8173.
மாருதிமேலும், ஐயன் மார்பினும் தோளின்மேலும்,
தேரினார் இருவர் சென்றார், செந் தழல் பகழி சிந்தி,
ஆரியன், வாகை வில்லும், அச்சுடைத் தேரும், அத் தேர்
ஊர்குவார் உயிரும், கொண்டான்; புரவியின் உயிரும்
உண்டான்.–172-
தேரினர் இருவர் – தேரில் ஏறிய தேர் வீரர்களாகிய (அந்த)
இருவரும்; மாருதி மேலும் – அனுமன் மீதும்; ஐயன் – இலக்குவனது;
மார்பினும் தோளின் மேலும் – மார்பிலும் தோளின் மீதும்; செந்தழல்
பகழி சிந்தி – சிவந்த நெருப்புப்போன்ற அம்புகளைத் தூவிச்;
சென்றார் – சென்றார்கள்; ஆரியன் – வலிமையுள்ளவனாகிய
இலக்குவன்; வாகை வில்லும் – (அவர்களுடைய) முன்பு வெற்றியையே
தனக்கு உரிமையாகக் கொண்டிருந்த வில்லினையும்; அத்தேர்
ஊர்குவார் உயிரும் கொண்டான் – அந்தத் தேரினைச் செலுத்துகிற
பாகர்களின் உயிரையும் கவர்ந்து கொண்டான்; புரவியின் உயிரும் உண்டான் – (அதோடு அத்தேரில்
பூட்டப்பட்டிருந்த) குதிரைகளின் உயிரையும் கவர்ந்து கொண்டான்.
————–
8174.
இருவரும் இழந்த வில்லார், எழு முனை வயிரத் தண்டார்,
உரும் எனக் கடிதின் ஓடி, அனுமனை இமைப்பின் உற்றார்,
பொரு கனல் பொறிகள் சிந்தப் புடைத்தனர்;
புடைத்தலோடும்,
பரு வலிக் கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்துக்
கொண்டான்.–173-
இழந்த வில்லார் இருவரும் – இழந்த வில்களையுடையவர்களான
(அந்த) இருவரும்; எழுமுனை வயிரத்தண்டார் – எஃகினால் செய்த
பூண்களை உடைய வலிமையான தண்டு கைக்கொண்டு; உரும் எனக்
கடிதின் ஓடி – இடி போல முழங்கிக் கொண்டு விரைவாக
ஓடிச்சென்று; அனுமனை இமைப்பின் உற்றார் – அனுமனை
இமைப்பொழுதில் நெருங்கி; பொருகனல் பொறிகள் சிந்தப்
புடைத்தனர் – மாறுபட்டு நெருப்புப் பொறிகள் சிதறும்படியாகப்
புடைத்தார்கள்; புடைத்தலோடும் – (அவர்கள் அவ்வாறு) அடித்த
உடனே; பருவலிக் கரத்தால் – (அனுமன் தனது) பருத்த வலிமையான
கைகளால்; தண்டு இரண்டையும் பறித்துக்கொண்டான் – (அவர்கள்
கையில் இருந்த) தண்டு இரண்டினையும் பிடுங்கிக்கொண்டான்.
————————
புகை நிறக்கண்ணனும் மாபக்கனும் ஓடி ஒளிதல்
8175.
தண்டு அவன் கையது ஆன தன்மையைத் தறுகணாளர்,
கண்டனர்; கண்டு, செய்யலாவது ஒன்றானும் காணார்;
‘கொண்டனன் எறிந்து நம்மைக் கொல்லும்’ என்று,
அச்சம் கொண்டார்,
உண்ட செஞ்சோறும் நோக்கார், உயிருக்கே உதவி செய்தார்.–174-
தறுகணாளர் – அஞ்சாமைப் பண்பு உடைய அரக்கர் இருவரும்;
அவன் கையது – (தங்கள் தண்டு) அந்த அனுமனுடைய கையின்கண்;
ஆன தன்மையைக் கண்டனர் – போய்விட்ட தன்மையைக்
கண்டார்கள்; கண்டு செய்யலாவது ஒன்றும் காணார் – (அவ்வாறு)
கண்டு செய்யத்தக்க செயல் ஒன்றையும் காணாதவர்களாகி;
கொண்டனன் – (நம் தண்டைப் பறித்துக்) கொண்டவனாகிய அனுமன்;
எறிந்து கொல்லும் – அத்தண்டாலடித்து நம்மைக் கொல்லவான்; என்று
அச்சம் கொண்டார் – என்று அச்சம் கொண்டவர்களாகி; உண்ட
செஞ்சோறும் நோக்கார் – (இராவணனிடம்) உண்ட செஞ்சோற்றுக்
கடனையும் எண்ணாது; உயிருக்கே உதவி செய்தார் – (தம்) உயிருக்கு
உதவி செய்பவர்களாய்ப் புறமுதுகு காட்டி ஓடி ஒளிந்தார்கள்.
—————————–
இந்திரசித்தன் வானரப்படையை அழித்தல்
8176.
காற்று வந்து அசைத்தலாலும், காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரைக் கொள்ளும் குறி இன்மை
குறித்தலாலும்,
தேற்றம் வந்து எய்தி, நின்ற மயக்கமும். நோவும் தீர்ந்தார்,
ஏற்றமும் வலியும் பெற்றார்; எழுந்தனர்-வீரர் எல்லாம்.–175-
வீரர் எல்லாம் காற்று வந்து அசைத்தலாலும் –
(இந்திரசித்தனிடம் போர் செய்து மயக்கம் அடைந்து இருந்த)
வானர வீரர்கள் எல்லோரும் காற்று வந்து மென்மையாக
வீசுவதாலும்; காலம் அல்லாமையாலும் – (தாங்கள் இறந்து போவதற்கு
உரிய) காலம் அது அல்லாமையாலும்; கூற்று வந்து – இயமன்
வந்து; உயிரைக் கொள்ளும் – (தங்கள்) உயிரைக் கொள்ளுகின்ற;
குறி இன்மை குறித்தலாலும் – அடையாளம் (எதுவும்) இன்மை
தெரிதலாலும்; நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – (தங்களுடன்)
வந்து பொருந்தி நின்ற மயக்கமும் வருத்தமும் தீர்ந்தவர்களாகி;
தேற்றம் வந்து எய்தி – தெளியும் தன்மை வந்து பொருந்தி;
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் – ஊக்கமும் வலிமையும் பெற்று
எழுந்தார்கள்.
————
8177.
அங்கதன், குமுதன், நீலன், சாம்பவன், அருக்கன்
மைந்தன்
பங்கம் இல் மயிந்தன், தம்பி, சதவலி, பனசன் முன்னாச்
சிங்க ஏறு அனைய வீரர் யாவரும், சிகரம் ஏந்தி,
மங்கலம் வானோர் சொல்ல, மழை என ஆர்த்து, வந்தார்.–176-
அங்கதன் – (வாலி மகனாகிய) அங்கதன்; குமுதன் – குமுதன்;
நீலன் – (படைத்தலைவனாகிய) நீலன்; சாம்பவன் – (எண்கின்
வேந்தனாகிய) சாம்பவன்; அருக்கன் மைந்தன் – சூரியன் மகனாகிய
சுக்ரீவன்; பங்கம் இல் மயிந்தன் – குற்றம் இல்லாத மயிந்தன்; தம்பி
– (அவன்) தம்பியாகிய துமிந்தன்; சதவலி – சதவலி; பனசன் –
பனசன்; முன்னா – ஆகிய வானர வீரர்கள் முதலாக; சிங்க ஏறு
அனைய வீரர் யாவரும் – ஆண் சிங்கத்தைப் போன்ற வானர
வீரர்கள் எல்லோரும்; வானோர் மங்கலம் சொல்ல – தேவர்கள்
(மகிழ்ந்து) மங்கல மொழி கூற; சிகரம் ஏந்தி – மலைகளைக்
(கைகளால்) ஏந்திக்கொண்டு; மழை என ஆர்த்து வந்தார் – மேகம்
என்னும்படி பேரொலி செய்து கொண்டு வந்தார்கள்;
—————
8178.
அத்தனையோரும், குன்றம் அளப்பு இல, அசனி ஏற்றோடு
ஒத்தன, நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
‘இத்தனை போலும் செய்யும் இகல்’ எனா, முறுவல் எய்தி,
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான்.–177-
அத்தனையோரும் – அத்தனை வானர வீரர்களும்; அசனி
ஏற்றோடு ஒத்தன – இடியேற்றோடு ஒத்தனவாகிய; அளப்பு இல
குன்றம் – அளவில்லாத குன்றுகளை; நெருப்பு வீசும் உரும் என –
நெருப்பை வெளிப்படுத்தி வீசும் இடி போல; ஒருங்க உய்த்தார்-
ஒன்றாக வீசி எறிந்தார்கள்; சித்திர வில்வலோனும் – (அவசத்தை
அடைந்த) விசித்திர வில்லாற்றல் உடையவன் ஆகிய
இந்திரசித்தனும்; இத்தனை போலும் செய்யும் இகல் எனா – (இந்த
வீரர்கள்) செய்யும் போர்த்திறம் இவ்வளவுதான் போலும் என்று
எண்ணி; முறுவல் எய்தி – புன்சிரிப்பைச் சிந்தி; சின்ன பின்னங்கள்
செய்தான் – அம்மலைகளைப் பொடிப்பொடி ஆக்கினான்.
———————-
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி, வந்து
நெருங்கினார்; நெருங்கக் கண்டும்; ஒரு தனி நெஞ்சும்,
வில்லும்,
சரங்களும், துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன, மேல்பால் குன்று புக்கு, இரவி
நின்றான்.–178-
மரங்களும் – (வானரப்படை வீரர்கள்) மரங்களையும்; மலையும் –
மலைகளையும்; கல்லும் – கற்களையும்; மழை என வழங்கி – மழை
போல வீசி அடித்துக்கொண்டு; வந்து நெருங்கினார் – வந்து
நெருங்கினார்கள்; நெருங்கக் கண்டும் – (அவர்கள் அவ்வாறு)
நெருங்கி வருவதைப் பார்த்தும், (அச்சமோ) மன மயக்கமோ
கொள்ளாது); ஒரு தனி வில்லும் – ஒப்பற்ற தனித்தன்மை உடைய
(தன்) வில்லினையும்; சரங்களும் – அம்பினையும்; துணையாய் நின்ற
நிசாசரன் – (மட்டும்) துணையாகக் கொண்டு நின்ற இரவில்
சஞ்சரிக்கும் தன்மை உள்ள இந்திரசித்தனின்; தனிமை நோக்கி –
தனிமையைப் பார்த்து; இரங்கினன் என்ன – மன இரக்கம்
கொண்டவன் போல்; மேல் பால் குன்று புக்கு – மேற்கில் உள்ள
அந்த கிரிக் குன்றில் புகுந்து; இரவி நின்றான் – கதிரவன் (மறைந்து)
நின்றான்.
————-
8180.
‘வாழிய வேதம் நான்கும், மனு முதல் வந்த நூலும்,
வேள்வியும், மெய்யும், தெய்வ வேதியர் விழைவும் அஃதே,
ஆழி அம் கமலக் கையான் ஆதிஅம் பரமன்’ என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன-திசைகள் எல்லாம்.–179-
வாழிய வேதம் நான்கும் – வாழ்வனவாகிய வேதங்கள் நான்கும்;
மனு முதல் வந்த நூலும் – மனு நூலை முதலாகக் கொண்டு தோன்றிய
தரும நூல்களும்; வேள்விகளும் – வேள்விகளும்; மெய்யும் –
சத்தியமும்; தெய்வ வேதியர் விழைவும் – தெய்வத்தை (ப் போற்றி
வணங்குகிற) அந்தணர்கள் விரும்பும்; அஃதே – அந்தப் பெரும்
பேறும் (ஆகிய) அனைத்தும்; ஆழி அம் கமலக்கையான் – சுதர்சனம்
என்னும் சக்கரப் படையை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளை
உடையவனாகிய; ஆதி அம் பரமன் – முதற் பொருளான அழகிய
நாராயண சொரூபமே; என்னா – என்று உணராத; ஏழையர் உள்ளம்
என்ன – அறிவற்றவர்களின் மனம் போல; திசைகள் எல்லாம் –
எல்லாத் திசைகளும்; இருண்டன – இருளடைந்தன.
—————-
வீடணன் தூண்டுதலால் இலக்குவன் இந்திரசித்தைக் கொல்ல முயல்தல்
8181.
‘நாகமே அனைய நம்ப! நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆகப் படுத்தியேல், பட்டான்; அன்றேல்,
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது, விசும்பின் வஞ்சன்
ஏகுமேல், வெல்வன்’ என்பது, இராவணற்கு இளவல்
சொன்னான்.–180-
நாகமே அனைய நம்ப – யானையை ஒத்த வலிமை உள்ள
சிறந்தவனே; நாழிகை ஒன்று நான்கு பாகமே காலம் ஆகப் –
நாழிகை ஒன்றில் நான்கில் ஒரு பாகம் ஆகிய கால் நாழிகைக்
காலத்தையே (கொல்லற்கு உரிய) காலமாகக் கொண்டு; படுத்தியேல்
பட்டான் – கொன்றாய் ஆனால் இவ்விந்திரசித்து இறப்பான்;
அன்றேல் – அவ்வாறு செய்யாவிட்டால்; வேகவாள் அரக்கர் காலம்
விளைந்தது – விரைவாகச் செயல்படும் கொடிய அரக்கர்க்கு
(மாயையைச் செய்தற்கு உரிய) இராக்காலம் வந்துவிடும்; வஞ்சன்
விசும்பில் ஏகுமேல் – வஞ்சனைப் பண்புள்ள இந்த இந்திரசித்தன்,
ஆகாயத்தில் (மாயை விளைக்கச்) செல்வானாயின்; வெல்வன் –
வெற்றி பெறுவான்; என்பது – என்ற செய்தியை; இராவணற்கு இளவல்
சொன்னான் – இராவணனுக்குத் தம்பியாகிய வீடணன்
(இலக்குவனுக்குச்) சொன்னான்.
——-
8182
அத்தனை வீரர்மேலும், ஆண் தகை அனுமன்மேலும்,
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
வித்தக வில்லினானைக் கொல்வது விரும்பி, வீரன்
சித்திரத் தேரைத் தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்த்தான்.–181-
அத்தனை வீரர் மேலும் – (போர்க்களத்தில் எதிர் வந்த)
அத்தனை வானர வீரர் மீதும்; ஆண் தகை அனுமன் மேலும் –
;ஆண்மைப் பண்புடைய அனுமன் மீதும்; எத்தனை கோடி வாளி –
எத்தனையோ கோடிக்கணக்கான அம்புகளை; மழை என எய்யா
நின்ற – மழை போல எய்து நின்ற; வித்தக வில்லினானைக் –
விசித்திரமான வில்லாற்றலை உடைய இந்திரசித்தனைக்; கொல்வது
விரும்பி – கொல்வதற்கு விரும்பி; வீரன் – வீரனாகிய இலக்குவன்;
சித்திரத் தேரை – அவ்வரக்கனது (அழகிய) சித்திர வேலைப்பாடு
உடைய தேரினைத் (தன்); தெய்வப் பகழியால் சிதைத்து வீழ்த்தான்
– தெய்வத் தன்மை உள்ள அம்புகளால் அழித்து வீழ்த்தினான்.
————-
8183.
அழித்த தேர் அழுந்தாமுன்னம், ‘அம்பொடு கிடந்து
வெம்பி,
உழைத்து உயிர் விடுவது அல்லால், உறு செரு வென்றேம்
என்று
பிழைத்து இவர் போவர் அல்லர்; பாசத்தால் பிணிப்பன்’
என்னா,
விழி்த்து இமையாத முன்னம், வில்லொடும் விசும்பில்
சென்றான்.–182-
அழிந்த தேர் அழுந்தா முன்னம் – (இலக்குவன் அம்பினால்)
அழித்த தேர் நிலத்தில் விழுந்து அழுந்துவதற்கு முன்பே
(இந்திரசித்தன்); பாசத்தால் பிணிப்பன் என்னா – (யான் இவர்களை)
நாக பாசத்தால் பிணித்துவிட்டால்; அம்பொடு கிடந்து வெம்பி –
அம்பினால் கட்டப்பட்டுத் தவித்து; உழைத்து உயிர் விடுவது
அல்லால் – வருந்தி உயிரை இழந்து விடுவது அல்லாமல்; உறு செரு
வென்றேம் என்று – பெரிய போரில் வெற்றி பெற்றோம் என்று
எண்ணிக்கொண்டு; இவர் பிழைத்து போவர் அல்லர் – இவர்கள்
(உயிர்) தப்பிப் பிழைத்துச் செல்ல மாட்டார்கள்; என்னா – என்று
எண்ணி; விழித்து இமையாத முன்னம் – கண் விழித்து
இமையாததற்கு முன்பே (கண் மூடித் திறப்பதற்குள்); வில்லொடும்
விசும்பில் சென்றான் – தன் வில்லோடு ஆகாயத்துக்குச் சென்றான்.
——————
8184.
‘பொன் குலாம் மேனி மைந்தன் தன்னொடும் புகழ்தற்கு
ஒத்த,
வன் கலாம் இயற்றி நின்றான், மற்றொரு மனத்தன் ஆகி,
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த
தன்மை
என்கொலாம்!’ என்ன அஞ்சி, வானவர் இரியல்போனார்.–183-
பொன் குலாம் மேனி மைந்தன் – பொன்னை ஒத்த மேனி
நிறமுடைய இலக்குவன்; தன்னொடும் – தன்னுடன்; புகழ்வதற்கு ஒத்த
– புகழ்ந்து கூறுவதற்கு உரிய; வன் கலாம் இயற்றி நின்றான் – வலிய
போரினைச் செய்து நின்ற; மின்குலாம் கழல் கால் வீரன் – ஒளி விளங்குகிற வீரக்கழலை அணிந்த கால்களை உடைய
வீரனாகிய (இந்திரசித்தன்); மற்றொரு மனத்தன் ஆகி – வேறு ஒரு
மனத்தை உடையவனாகி; விண்ணிடை விரைந்த தன்மை –
ஆகாயத்துக்கு விரைவாகச் சென்ற தன்மை; என் கொலாம் – என்ன
காரணத்துக்காகவோ; என்ன அஞ்சி – என்று அச்சம் கொண்டு;
வானவர் இரியல் போனார் – தேவர்கள் சிதறி ஓடிப் போனார்கள்.
——–
8185.
தாங்கு வில் கரத்தன், தூணி தழுவிய புறத்தன், தன்னுள்
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன், உயிர்ப்பன், தீயன்,
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன், மாயச் செல்வன்,
வீங்கு இருட் பிழம்பின், உம்பர் மேகத்தின் மீதின் ஆனான்.–184-
வில்தாங்கு கரத்தன் – வில்லைத் தாங்கிய கைகளை உடையவனும்;
தூணி தழுவிய புறத்தன் – அம்பு அறாத் தூணியைக் கட்டிய
முதுகினை உடையவனும்; தன்னுள் ஓங்கி உற்று எரியா நின்ற
வெகுளியன் – இயல்பாகவே தன் மனத்தினுள் பொங்கி எரிகின்ற
சினத்தை உடையவனும்; உயிர்ப்பன் – பெரு மூச்சு விடுபவனும்;
தீயன் – கொடியவனும்; தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன்-
தீங்கு செய்பவர்களில் எல்லாம் தலை சிறந்தவனும்; மாயச் செல்வன்
– மாயத்தைச் செல்வமாகவே கொண்டவனும் ஆகிய இந்திரசித்தன்;
வீங்கு இருட் பிழம்பின் – நெருங்கிய இருட்டின் திரட்சியில்;
(மறைந்து சென்று) உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் –
ஆகாயத்தில் உள்ள மேகத்தின் மேல் செல்பவன் ஆனான்.
—————-
8186.
தணிவு அறப் பண்டு செய்த தவத்தினும், தருமத்தாலும்
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,-
மணி நிறத்து அரக்கன்-செய்த மாய மந்திரத்தினானும்,
அணு எனச் சிறியது, ஆங்கு, ஓர் ஆக்கையும் உடையன்
ஆனான்.–185-
மணி நிறத்து அரக்கன் – நீலமணி போன்ற கருநிறத்தை உடைய
அரக்கனாகிய இந்திரசித்தன்; பண்டு – முன்பு; தணிவு அற – குறைவு
இல்லாமல்; செய்த தவத்தினும் – செய்த தவத்தினாலும்; தருமத்தானும்
– (முன்பு செய்த) அறத்தினாலும்; பிணி அறுப்பவரில் பெற்ற
வரத்தினும் – பாசப் பிணிப்பை ஒழிப்பவர்களாகிய பிரமன்
முதலியோர் இடத்தி்ல் பெற்ற வரத்தினாலும்; பிறப்பினானும் – (தன்
அரக்க குலத்துக்கு உரிய) பிறவிப் பண்பினாலும்; செய்த
மந்திரத்தினாலும் – ஓதிய மாய மந்திரங்களின் வலிமையினாலும்;
ஆங்கு – அப்பொழுது; அணு எனச் சிறியது – அணு என்று கூறுமாறு
சிறியதாகிய; ஓர் ஆக்கையும் – ஓர் உடம்பினை; உடையன் ஆனான்
– உடையவனானான்.
———–
8187.
வாங்கினான்-மலரின் மேலான், வானக மணி நீர்க் கங்கை
தாங்கினான், உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்
வீங்கு வான் தோளை வீ்க்கி வீழ்த்து அலால் மீள்கிலாத
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனிப் படையை உன்னி.–186-
மலரின் மேலான் – மாலின் திருஉந்தி வந்த பிரமனும்; வானக
மணி நீர்க் கங்கை தாங்கினான் – வானத்தில் உள்ள நீலமணி
போன்ற நீரினை உடைய ஆகாய கங்கையைத் தன் சடை முடியில்
அணிந்த சிவனும்; உலகம் தாங்கும் சக்கரத்தவன் – உலகத்தைக்
காக்கும் கடவுளாகிய சக்கரப் படையை ஏந்திய திருமாலும்;
என்றாலும் – ஆகிய இவர்கள் என்றாலும்; வீ்ங்கு வான் தோளை
வீ்க்கி வீழ்த்து அலால் – பருத்த பெரிய தோள்களைக் கட்டி வீ்ழ்த்தி
அல்லது; மீள்கிலாத – வெறுமனே, மீண்டு வராத; ஓங்கு வாள்
அரவின் நாமத்து – சிறந்த ஒளியுடைய பாம்பின் பெயரைக் கொண்ட;
ஒரு தனிப்படையை உன்னி – ஒப்பற்ற கணையைச் சிந்தித்து;
வாங்கினான் – அதற்கு உரிய மந்திரம் சொல்லி எடுத்தான்.
உலகம் தாங்கும் சக்கரத்தவன் – ஆதி கூர்ம ரூபியாய்க் கீழிருந்து
உலகங்களைத் தாங்குகிற திருமால் எனக் கொள்ளலாம் என்பர்
வை.மு.கோ.
—————
8188.
ஆயின காலத்து, ஆர்த்தார், ‘அமர்த்தொழில்
அஞ்சி, அப்பால்
போயினன்’ என்பது உன்னி, வானர வீரர் போல்வார்;
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து, நக்கான்;
மாயையைத் தெரிய உன்னார், போர்த் தொழில் மாற்றி
நின்றார்.-187-
ஆயின காலத்து – அவ்வாறு ஆன அக்காலத்தில்; வானர வீரர்
போல்வார் – வானர வீரர்களைப் போன்றவர்கள்; அமர்த்தொழில்
அஞ்சி அப்பால் போயினன் என்பது உன்னி – (இந்திரசித்தன்)
போர்த்தொழில் செய்வதற்கு அஞ்சி அப்பால் மறைந்து போய்
விட்டான் என்று நினைத்து; ஆர்த்தார் – மகிழ்ச்சிப் பேரொலி
செய்தார்கள்; நாயகற்கு இளைய கோவும் – தலைவனாகிய இராமனுக்கு
இளையவனாகிய இலக்குவனும்; அன்னதே நினைந்து நக்கான் –
அவ்வாறே நினைத்துச் சிரித்தான்; மாயையைத் தெரிய உன்னார் –
(அவர்கள் இந்திரசித்தனது) மாயச் செயலைத் தெளிவாக எண்ணிப்
பாராதவர்களாய்; போர்த் தொழில் மாற்றி நின்றார் – போர் செய்யும்
தொழிலை மாற்றி நின்றார்கள்.
——————
8189.
அது கணத்து, அனுமன் தோள்நின்று ஐயனும்
இழிந்து, வெய்ய
கது வலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி,
முதுகு உறச் சென்று நின்ற கணை எலாம் முறையின்
வாங்கி,
விதுவிதுப்பு ஆற்றலுற்றான், விளைகின்றது
உணர்ந்திலாதான்.–188-
அதுகணத்து – அந்தப் பொழுதில்; ஐயனும் – தலைவனாகிய
இலக்குவனும்; விளைகின்றது உணர்ந்திலாதான் – நடக்க விருப்பவை
எவற்றையும் உணராதவனாய்; அனுமன் தோள் நின்று இழிந்து –
அனுமனது தோளில் இருந்து இறங்கி; வெய்ய வலிகது சிலையை –
கொடுமையான வலிமை பொருந்திய வில்லினை; வென்றி அங்கதன்
கையது ஆக்கி – வெற்றி பொருந்திய அங்கதன் கையில் உள்ளதாக
ஆக்கி; முதுகு உறச் சென்று நின்ற – மார்பில் பட்டு முதுகு வழியாகப்
பாய்ந்து (ஊடுருவாது) நின்ற; கணை எலாம் – (பகைவர்களுடைய)
அம்புகளை எல்லாம்; முறையின் வாங்கி – முறைப்படி பறித்து
(எடுத்துவிட்டு); விதுவிதுப்பு ஆற்றலுற்றான் – போரினால் ஏற்பட்ட
களைப்பைப் போக்க இளைப்பாறத் தொடங்கினான்.
——–
8190.
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை; விடுத்தலோடும்,
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி,
கட்டினது என்ப மன்னோ, காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய
வாங்கி.–189-
அரக்கன் – அரக்கனாகிய இந்திரசித்தன்; வெய்ய படையினை
விட்டனன் – கொடிய நாகப் படையைச் செலுத்தினான்;
விடுத்தலோடும் – (அவ்வாறு அவன் அதைச்) செலுத்திய அளவில்;
எட்டினோடு இரண்டு திக்கும் – பத்துத் திசைகளிலும்; இருள்திரிந்து
– இருள் பரவவும்; இரிய – (பகைவர்) நிலை கெட்டு ஓடவும்; ஓடி –
விரைவாகச் சென்று; காகுத்தற்கு இளைய காளை – இராமனுக்கு
இளையவனாகிய காளை போன்ற இலக்குவனின்;
வட்டவான் வயிரத்திண் தோள் மலைகளை – திரண்ட ஒளியுடைய
உறுதியான தோள்களாகிய மலைகளை; உளைய வாங்கி – வருந்தும்
படி வளைத்துக்; கட்டினது என்ப – கட்டியது என்று சொல்லுவார்கள்.
காகுத்தன் – காகுத்தன் என்ற அரச மரபில் பிறந்தவன். புரஞ்சயன்
என்ற அரசன் தன் வேண்டுகோளின்படி எருது வடிவம் கொண்டு
வந்த இந்திரனின் மீது ஏறிப் பகைவரை வென்று அழித்து ககுஸ்தன்
என்று பெயர் பெற்றதை. வை.மு.கோ. விளக்கி உள்ளார். இலக்குவனை
நாகபாசம் கட்டியது என்று கூறாமல் “கட்டினது என்ப” என்று
கூறியுள்ள கம்பரின் இராம பக்தி நுட்பத்தை அறிந்து உணர்க.
மன்னோ – இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் வந்தது.
————
8191.
இறுகுறப் பிணித்தலோடும், யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுறக் கடவான் அல்லன்; மாயம் என்று
உணர்வான்அல்லன்;
உறு குறைத் துன்பம் இல்லான்; ஒடுங்கினன்; செய்வது ஓரான்,
அறுகுறைக் களத்தை நோக்கி, அந்தரம் அதனை நோக்கும்.–190-
யாவையும் எதிர்ந்த போதும் – எல்லா உலகங்களும் உயிர்களும்
ஒருங்கு திரண்டு (தன்னை) எதிர்த்த காலத்திலும்; மறுகுறக் கடவான்
அல்லன் – மனக் கலக்கம் அடையத் தக்கவன் அல்லவனும்; உறு
குறைத்துன்பம் இல்லான் – மனத்தில் மிக்க குறையாகிய துன்பம்
இல்லாதவனுமாகிய இலக்குவன்; இறுகுறப் பிணித்தலோடும் –
இந்திரசித்தன் செலுத்திய நாகக்கணை (தன்னை) இறுக்கமாகக் கட்டிய
அளவில்; மாயம் என்று உணர்வான் அல்லன் – (இது
இந்திரசித்தனது) மாயச்செயல் என்று உணராதவனாய்; செய்வது
ஓரான் – இன்னது செய்வது என்று தெரியாமல்; ஒடுங்கினன் – வலி
குன்றியவனாகி; அறு குறைக்களத்தை நோக்கி – அறுபட்ட உடல்
குறைகள் சிதறிக் கிடக்கும் போர்க்களத்தைப் பார்த்து; அந்தரம்
அதனை நோக்கும் – அதற்குப் பின்பு ஆகாயத்தையும்
பார்ப்பானாயினன்,
——–
அனுமன் முதலிய ஏனையோரையும் நாகபாசம் பிணித்தல்
8192.
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றின; வயிரத் தூணின், மலையினின், பெரிய தோள்கள்,
‘இற்றன, இற்ற’ என்ன, இறுக்கின; இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர், செய்வது ஓரார்.-191-
வாள் எயிற்று அரவம் – (அந்த நாகக் கணையில் இருந்து
வெளிப்பட்ட) ஒளி பொருந்திய பற்களை உடைய பாம்புகள்;
மற்றையோர் தமையும் எல்லாம் – மற்றைய வானர வீரர்கள் எல்லோர்
தம்மையும்; வந்து சுற்றின – வந்து சுற்றிச் சூழ்ந்து; வயிரத்தூணின் –
வலிய தூண் போலவும்; மலையினின் – மலைகளைப் போலவும்;
பெரிய தோள்கள் – (உள்ள) (அவர்களது வலிய) பெரிய தோள்கள்;
இற்றன இற்ற என்ன – நொறுங்கிப் போயின; என்று அவர்கள்
வாய் விட்டுக் கதறும்படியாக; இறுக்கின – அழுத்தி நொறுக்கின;
இளகா உள்ளம் தென்றென உடைய வீரர் – (வலி) குறையாத
மனத்தைத் தெளிவுடன் பெற்றுடைய (அந்த) வீரர்கள் எல்லோரும்;
செய்வது ஓரார் இருந்தனர் – செயத்தக்கது இதுவே என
அறியாதவர்களாய் இருந்தனர்.
———————–
8193.
காலுடைச் சிறுவன், ‘மாயக் கள்வனைக் கணத்தின்காலை
மேல் விசைத்து எழுந்து நாடிப் பிடிப்பென்’
என்று உறுக்கும்வேலை,
ஏல்புடைப் பாசம், மேல்நாள், இராவணன் புயத்தை வாலி
வால் பிணித்தென்ன, சுற்றிப் பிணித்தது, வயிரத் தோளை. –192-
காலுடைச் சிறுவன் – காற்றின் வேந்தற்கு (அஞ்சனை வயிற்றின்
வந்த) மகனாகிய அனுமன்; மாயக் கள்ளனை – (இப்படி) மாயைச்
செயல் செய்த கள்ளத்தன்மை உடையவனை; கணத்தின் –
கணப்பொழுதில்; காலை மேல் விசைத்து எழுந்து – காலினை
மேலுன்றி வானத்தில் வேகமாக எழுந்து; நாடிப் பிடிப்பென் என்று –
தேடிப்பிடிப்பேன் என்று; உறுக்கும் வேலை – சினங்கொள்ளும்
வேளையில்; ஏல்புடைப் பாசம் – எதிர்த்துத் தாக்கும் தன்மை உள்ள
(அந்த) நாகக் கணை; மேல்நாள் – முன்னொரு காலத்தில்; இராவணன்
புயத்தை – இராவணனது தோள்களை; வாலி வால் பிணித்தென்ன –
வாலியினது வால் சுற்றிப் பிணித்தது போல்; வயிரத்தோளை –
அனுமனது உறுதியான தோள்களைச்; சுற்றிப் பிணித்தது – சுற்றிக்
கட்டியது.
———–
நாக பாசத்தால் கட்டுண்டவர் நிலை
8194.
மலை என எழுவர்; வீழ்வர்; மண்ணிடைப் புரள்வர்; வானில்
தலைகளை எடுத்து நோக்கி, தழல் எழ விழிப்பர்; தாவி
அலைகிளர் வாலால் பாரின் அடிப்பர்; வாய் மடிப்பர்;
ஆண்மைச்
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர்; உள்ளம் தீவர்;–193-
மலை என எழுவர் வீழ்வர் – (நாகக் கணையால் கட்டப்பட்ட
வானரவீரர்கள்) மலைகள் மேல் எழுந்தது போல் எழுந்து கீழே
விழுவர்; மண்ணிடைப் புரள்வர் – நிலத்திடைப் புரளுவார்கள்;
வானில் தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் –
வானத்தை நோக்கித் தலை எடுத்துப் பார்த்து நெருப்புப் பொறி
வெளிப்பட விழிப்பார்கள்; தாவி அலைகிளர் வாலால் பாரின்
அடிப்பர் – பாய்ந்து அலையும் தன்மை உள்ள எழுச்சியை உடைய
வாலினால் தரையில் அடிப்பார்கள்; வாய் மடிப்பர் – வாயை
மடித்து உதடுகளைக் கடிப்பார்கள்; ஆண்மைச் சிலையவற்கு இளைய
கோவை நோக்குவர் – ஆண்மைத் தன்மை உள்ள வில்லேந்திய
இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவனைப் பார்த்து; உள்ளம் தீவர்
– மனம் கொதிப்பு அடைவார்கள்.
———–
8195.
வீடணன் முகத்தை நோக்கி, ‘வினை உண்டே,
இதனுக்கு?’ என்பர்;
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர்; ‘மொய்ம்பின்
ஈடுறக் தக்க போலாம் நம் எதிர்’ என்னா, ஏந்தல்
ஆடகத் தோளை நோக்கி, நகை செய்வர்; விழுவர்;
அஞ்சார்.–194-
வீடணன் முகத்தை நோக்கி – (மேலும் அந்த வீரர்கள்)
வீடணனுடைய முகத்தைப் பார்த்து; இதனுக்கு – இதற்கு; வினை
உண்டோ என்பர் – ஏதாவது பரிகாரச் செயல் உள்ளதோ? என்று
கேட்பார்கள்; மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் – (தாங்கள்
நாகக் கணையால் கட்டப்பட்டு வருந்தக் காரணமாக இருந்த)
நெருங்கிய திரட்சியான தன்மை உடைய இருளைச் சினப்பார்கள்;
ஏந்தல் ஆடகத் தோளை நோக்கி – இலக்குவனது பொன் போன்ற
தோளைப் பார்த்து; நம் எதிர் – நம் கண் எதிரில்; ஈடுறத் தக்க
போலாம் – (இத்தோள்கள்) வலிய பெருமை குறையத்
தக்கனவாயினவே; என்னா – என்று வருந்திக் கூறி; நகைசெய்வர் –
சிரிப்பார்கள்; விழுவர் – (நிலத்தில்) விழுவார்கள்; அஞ்சார் – (அந்த
நேரத்திலும்) அச்சம் கொள்ளாதிருப்பார்கள்.
————
8196.
‘ஆர், இது தீர்க்க வல்லார்? அஞ்சனை பயந்த வள்ளல்,
மாருதி, பிழைத்தான் கொல்லோ?’ என்றனர், மறுகி நோக்கி,
வீரனைக் கண்டு, ‘பட்டது இதுகொலாம்!’ என்று விம்மி,
‘வார் கழல் தம்பி தன்மை காணுமோ, வள்ளல்?’ என்பார்.–195-
இது தீர்க்க வல்லார் ஆர் – (அந்த வானர வீரர்கள்) இந்தத்
துன்பத்தை நீக்கும் வலிமை உடையவர் யாவர்? (என எண்ணி
உடனே); அஞ்சனை பயந்த வள்ளல் மாருதி – அஞ்சனை வயிற்றில்
வந்தவன் வள்ளன்மைப் பணபுடைய அனுமன்; பிழைத்தான்
கொல்லோ? என்றனர் – (இப்பொழுது) உயிர் தப்பிப் பிழைத்துள்ளான்
கொல்லோ என்று கூறியவர்களாய்; மறுகி நோக்கி – (கட்டுண்டு கிடந்த
இலக்குவனை) மனம் கலங்கிப் பார்த்து; வீரனைக் கண்டு “பட்டது
இது கொலாம்” என்று விம்மி – இலக்குவனைக் கண்டு நடந்த
செயல் இதுவோ என்று கூறிப் புலம்பி; வள்ளல் – (வள்ளல்
பண்புடைய) இராமன்; வார் கழல் தம்பி தன்மை காணுமோ – நீண்ட
வீரக்கழல் அணிந்த (தன்) தம்பியாகிய இலக்குவனுக்கு ஏற்பட்ட
இந்நிலையைக் கண்டு (மனம்) பொறுப்பானோ?; என்பார் – என்று
கூறினார்கள்.
———–
8197.
என், சென்ற தன்மை சொல்லி? எறுழ் வலி அரக்கன்
எய்தான்
மின் சென்றது அன்ன; வானத்து உரும்இனம் வீ்ழ்வ என்ன,
பொன் சென்ற வடிம்பின் வாளி, புகையொடு பொறியும்
சிந்தி,
முன் சென்ற முதுகில் பாய, பின் சென்ற மார்பம் உற்ற.–196-
சென்ற தன்மை சொல்லி என் – (அம்பு எய்த காலத்தில்) நிகழ்ந்த
செயல்களை விரிவாகச் சொல்லி என்ன பயன்?; எறுழ் வலி அரக்கன்
– மிக்க வலிமை உடைய இந்திரசித்தன்; வானத்து மின் சென்றது
என்ன – வானத்தில் மின்னல் மின்னுவது போன்றனவும்; உரும்
இனம் வீ்ழ்வ என்ன – இடியின் கூட்டங்கள் (ஒருங்கே) கீழே விழுவது போலவும்; பொன் சென்ற வடிம்பின்
வாளி எய்தான் – கரும் பொன்னால் ஆகிய நுனியை உடைய
அம்புகளைச் செலுத்தினான்; புகையொடு பொறியும் சிந்தி –
(அந்அம்புகள்) புகையையும் தீப்பொறிகளையும் சிந்திக்கொண்டு; முன்
சென்ற முதுகில் பாய – மார்பில் தைத்தவை முதுகில் ஊடுருவ; பின்
சென்ற மார்பம் உற்ற – முதுகில் பாய்ந்தவை மார்பில் ஊடுருவின.
———-
8198.
மலைத்தலைக் கால மாரி; மறித்து எறி வாடை மோத,
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும்;
கொலைத்தலை வாளி பாயக் குன்று அன குவவுத் தோளார்
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார்; நிமிர்ந்தது, குருதி நீத்தம்.–197-
மறுத்து எறி வாடை மோத – மடக்கி வீசுகின்ற வாடைக் காற்று
மோதுதலினால்; மலைத்தலைக் காலமாரி – மலையில் உள்ள கரிய
மேகங்கள்; தலைத்தலை மயங்கி வீழும் – இடந்தோறும் இடந்தோறும்
ஒன்றோடு ஒன்று மோதிச் சிந்தி விழும் தன்மை போல; தலைகள்
சிந்தும் கொலைத்தலை வாளி பாய – தலைகளை அறுத்துச் சிந்தச்
செய்யும் கொல்லும் தன்மை உள்ள அம்புகள் பாய்வதால்; குன்று
அன குவவுத் தோளார் – குன்றினை ஒத்த திரண்ட தோள்களை
உடைய வானர வீரர்கள்; நிலைத்திலர் – (ஓரிடத்தில்) நிலைத்து
இருக்க மாட்டாது; உலைந்து சாய்ந்தார் – வருந்திக் கீழே
விழுந்தார்கள்; குருதி நீத்தம் நிமிர்ந்தது – (எங்கும்) இரத்த வெள்ளம்
பரவிப் பெருகியது.
———-
8199.
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும், ஒன்றும் துடித்திலன், பொடித்து, மானத்
தீ எரி சிதறும் செங் கண் அஞ்சனை சிங்கம், தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட, நடுங்குகின்றான்.–198-
பொடித்து மானத் தீ எரி சிதறும் செங்கண் அஞ்சனை சிங்கம்
– மான உணர்வினால் தீப்பொறி சிதறுகின்ற சிவந்த கண்களை உடைய
அஞ்சனை பெற்ற சிங்கம் போன்றவனாகிய அனுமன்; ஆயிர கோடி
மேலும் அம்பு – ஆயிரம் கோடிக்கு மேல் அம்புகள்; தன் ஆகத்தூடு
போயின போதும் – தன் மார்பினுள் ஊடுருவிப் போன போதிலும்;
ஒன்றும் துடித்திலன் – ஒரு சிறிதும் வருத்தம் அடையவில்லை;
தெய்வ நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட – (ஆனால் அவன்)
தெய்வத்தலைவனாம் இராமன் தம்பிக்கு நேர்ந்த துன்பம் (தன்
நெஞ்சைச் சுட); நடுங்குகின்றான் – மன நடுக்கம் கொள்பவன் ஆனான்.
————-
8200.
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர், உருமின் வெய்ய
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய, சோரி
ஆறுபோல் ஒழுக, அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும், இருந்தனன், இடைந்திலாதான்.–199-
வேறு உள வீரர் எல்லாம் – மற்றுள்ள பிற வானரவீரர்கள்
எல்லாம்; உருமின் வெய்ய – இடியைக் காட்டிலும்
கொடுமையானதாகிய; வாளி நூறும் ஆயிரமும் உடலிடை நுழைய –
அம்புகள் நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும் உடம்புகளில்
நுழைந்ததனால்; சோரி ஆறு போல் ஒழுக வீழ்ந்தனர் – குருதி
ஆற்றினைப் போல் ஒழுகி வெளிப்பட (நிலத்திடை) விழுந்தனர்;
அண்ணல் அங்கதன் – பெருமை சிறந்த அங்கதன்; அனந்த வாளி –
அளவற்ற அம்புகள்; ஏறிய மெய்யனேனும் – தைத்த உடம்பினை
உடையவனாய் இருந்தும்; இடைந்திலாதான் இருந்தனன் – சோர்வு
அடையாதவனாய் இருந்தான்.
————
8201.
கதிரவன் காதல் மைந்தன், கழல் இளம் பசுங் காய் அன்ன,
எதிர் எதிர் பகழி தைத்த, யாக்கையன்; எரியும் கண்ணன்;
வெதிர் நெடுங் கானம் என்ன வேகின்ற மனத்தன்,
மெய்யன்;
உதிர வெங் கடலுள், தாதை உதிக்கின்றான் தனையும்
ஒத்தான்.–200-
கதிரவன் காதல் மைந்தன் – கதிரவனின் அன்பு மகனாகிய
சுக்கிரீவன்; எதிர் எதிர் பகழி தைத்த – எதிர் எதிராக அம்புகள்
தைத்ததனால்; இளம் கழல் பசுங்காய் அன்ன யாக்கையன் –
இளமையான கழலின் பசுங்காயை ஒத்த உடம்பினை உடையவனாகி;
எரியும் கண்ணன் – (சினத்தால்) தீ எரியும் கண்களையும்; வெதிர்
நெடுங் கானம் என்ன – மூங்கில்கள் நிறைந்த பெரிய காடு எரிவது
போல; வேகின்ற மனத்தன் மெய்யன் – பற்றி எரிகிற மனமும்
உடம்பும் கொண்டவனாகி; வெம் உதிர கடலுள் – கொடிய குருதிக்
கடலுள்; உதிக்கின்றான் – உதயமாகிற; தாதை தனையும் ஒத்தான் –
(தன்) தந்தையாகிய கதிரவனையும் போன்று விளங்கினான்.
————–
8202.
வெப்பு ஆரும் பாசம் வீக்கி, வெங் கணை
துளைக்கும் மெய்யன்-
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி-உணர்ந்திருந்து இன்னல்
உய்ப்பான்,
‘இப் பாசம் மாய்க்கும் மாயம், யான் வல்லென்’ என்பது
ஓர்ந்தும்,
அப் பாசம் வீச ஆற்றாது, அழிந்த நல் அறிவு போன்றான்.–201-
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி – தனக்கு உவமையில்லாத
இராமனுடைய தம்பியாகிய இலக்குவன்; வெப்பு ஆரும் நாக பாசம்
வீக்கி – கொடுமை பொருந்திய நாகக்கணையால் கட்டுப்பட்டு;
வெங்கணை துளைக்கும் மெய்யன் – கொடிய அம்புகள் துளைக்கிற
உடம்பை உடையவனாய்; உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் –
(அதனை நீக்கும் வழியை) உணர்ந்து (அதற்கு உரிய வல்லமை
பெற்று இருந்தும்) துன்பத்தில் (தன்னைச்) செலுத்திக்
கொள்ளுபவனாய்; இப்பாசம் மாய்க்கும் மாயம் – இந்த உலக
பாசத்தை அழிக்கும் மாய சக்தியில்; யான் வல்லென் என்பது
ஓர்ந்தும் – யான் வல்லவன் என்பதை எண்ணி உணர்ந்திருந்தும்;
அப்பாசம் வீச – அந்த உலக பாசம் (தன்னைத் தாக்க); ஆற்றாது
– (அதற்கு) ஈடாக முடியாது; அழிந்த நல் அறிவு போன்றான் –
அழிந்து போன நல்ல ஞானத்தை ஒத்திருந்தான்
———
8203.
அம்பு எலாம் கதிர்கள் ஆக, அழிந்து அழிந்து
இழியும் ஆகச்
செம் புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறிப்
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும்,
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான்.–202-
அம்பு எலாம் கதிர்கள் ஆக – (இலக்குவன் உடம்பில் குத்தி
நின்றுள்ள) அம்புகள் எல்லாம் கிரணங்கள் ஆகவும்; ஆக அழிந்து
அழிந்து இழியும் செம்புனல் – மார்பில் இருந்து சிறிது சிறிதாகப்
பெருகுகிற இரத்தம்; வெயிலின் தோன்ற – வெய்யில் போலத் தோன்ற;
திசை ருள் இரிய – திசைகளில் எல்லாம் இருள் நிலை கெட்டு ஓட;
சீறிப் பம்பு பேர் ஒளிய நாகம் – சீறி நிறைந்த பெரிய ஒளியை
உடைய பாம்பினால்; பற்றிய படிவத்தோடும் – பற்றப்பட்ட
உருவத்தோடு தவறிக்கீழே விழுந்த; ஒளியவனேயும் ஒத்தான் –
சூரியனையும் ஒத்து இருந்தான்.
————–
இந்திரசித்தன் இராவணன் அரண்மனை சேறல்
8204.
மயங்கினான் வள்ளல் தம்பி; மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார்; மேனி எல்லாம் மூடினான், அரக்கன் மூரித்
தயங்கு பேர் ஆற்றலானும், தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான், உளைந்தான், வாயால் உதிர நீர்
உமிழாநின்றான்.–203-
வள்ளல் தம்பி மயங்கினான் – வள்ளலாகிய இராமன் தம்பியாகிய
இலக்குவன் மயங்கி விட்டான்; மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார் – மற்றையவர்கள் எல்லோரும் நிலத்தைத் தழுவினார்கள்;
மேனி எல்லாம் மூடினான் – (அவர்களின்) உடம்புகளை எல்லாம்
(தன் கை அம்புகளால்) மறைத்தவனாகிய; மூரித் தயங்கு பேர்
ஆற்றலானும் அரக்கன் – வலிமை விளங்குகிற பெரிய ஆற்றலை
உடைய அரக்கனாகிய இந்திரசித்தனும்; தன் உடல் தைத்த வாளிக்கு
– தன் உடலினிடத்தில் போரின் போது தைத்துள்ள (இலக்குவனது)
அம்புகளுக்கு; உயங்கினான் உளைந்தான் – தளர்ந்து வருந்தினான்;
வாயால் உதிரநீர் உமிழா நின்றான் – வாயினால் இரத்தமாகிய நீரைக்
கக்கிக்கொண்டு நின்றான்.
———————-
8205.
‘சொற்றது முடித்தேன்; நாளை, என் உடற் சோர்வை நீக்கி,
மற்றது முடிப்பென்’ என்னா, எண்ணினான், ‘மனிசன்
வாழ்க்கை
இற்றது; குரங்கின் தானை இறந்தது’ என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப, இராவணன் கோயில் புக்கான்.–204-
சொற்றது முடித்தோன் – (நான்) சொன்னதைச் செய்து முடித்து
விட்டேன்; என் உடற் சோர்வை நீக்கி – எனது உடல் தளர்ச்சியை
நீக்கிக் கொண்டு; நாளை மற்றது முடிப்பென் என்னா எண்ணினான்
– நாளைக்கு மற்றதையும் செய்து முடிப்பேன் என்று எண்ணினான்;
மனிசன் வாழ்க்கை இற்றது – மனிதனது வாழ்க்கை முடிந்துவிட்டது; குரங்கின் தானை இறந்தது – வானரப் படைகள்
இறந்து ஒழிந்தன; என்று இரண்டு பாலும் – என்று இரண்டு
பக்கங்களிலும்; கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப – வெற்றிக்கு
அறிகுறியாக மங்கல ஒலி முழங்க; இராவணண் கோயில் புக்கான் –
இராவணனது அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.
—————–
8206.
ஈர்க்கு அடைப் பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற
நீர்க் கடை மேகம்தன்னை நீங்கியும், செருவின் நீங்கான்,
வார்க் கடை மதுகைக் கொங்கை, மணிக் குறு முறுவல்,
மாதர்
போர்க் கடைக் கருங் கண் வாளி புயத்தொடு பொழியப்
புக்கான்.–205-
ஈர்க்கு அடைப் பகழிமாரி – இறகுகளை உடைய அம்பாகிய
மழையினால்; இலக்குவன் என்ன நின்ற – இலக்குவன் என்று பெயர்
கொண்டு நின்ற; நீர்க்கடை மேகம் தன்னை நீக்கியும் –
நற்குணங்களை உடைய மேகம் போன்றவனாகிய இலக்குவன் தன்னை
அழித்தும்; செருவின் நீங்கான் – போர் செய்தலில் இருந்து
நீங்காதவனாய் (திரும்பி வந்த இந்திரசித்தன்); வார்க் கடை மதுகைக்
கொங்கை – கச்சையைக் கடந்து நிற்றலை உடைய வலிமையைக்
கொண்ட கொங்கைகளையும்; மணிக்குறு முறுவல் மாதர் – அழகிய
புன்சிரிப்பையும் உடைய பெண்களின்; போர்க் கடைக்கருங்கண் –
போர்த் தொழிலைச் செய்கிற கடைக் கருங்கண்களாகிய; வாளி –
அம்புகள்; புயத்தொடும் பொழியப் புக்கான் – (தன்) தோள்களில்
பொழிந்து கொண்டிருக்கப் புக்கான்.
—————————————-
8207.
ஐ-இரு கோடி செம் பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி,
மை அறு வான நாட்டு மாதரும், மற்றை நாட்டுப்
பை அரவு அல்குலாரும், பலாண்டு இசை பரவ, தங்கள்
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ, சார்ந்தான்.–206-
ஐ – இரு கோடி செம்பொன் மணி விளக்கு – பத்துக்
கோடியளவினதான செம்பொன்னால் செய்யப்பட்ட அழகிய
விளக்குகளை; அம் கை ஏந்தி – (தங்கள்) அழகிய கைகளில்
ஏந்திக் கொண்டு; மை – அறு வானநாட்டு மாதரும் – குற்றமற்ற தேவ
உலக மகளிரும்; மற்றை நாட்டுப் பைஅரவு அல்குலாரும் – மற்றை
உலகத்தும் (நில உலகத்து) அரவின் பையை ஒத்த அல்குலை உடைய
மாதரும்; இசை பலாண்டு பரவ – இசையோடு பல்லாண்டு பாட;
தங்கள் தையலார் – தங்களுக்குரிய அரக்கப் பெண்டிர்; அறுகு தூவி
வாழ்த்தினார் தழுவ – அறுகைத் தூவி வாழ்த்தி நெருங்கி வரச்;
சார்ந்தான் – (இராவணன் அரண்மனை) சேர்ந்தான்.
——————–
8208.
தந்தையை எய்தி, அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணரக் கூறி, ‘தீருதி, இடர் நீ; எந்தாய்!
நொந்தனென் ஆக்கை; நொய்தின் ஆற்றி, மேல்
நுவல்வென்’ என்னா,
புந்தியில் அனுக்கம் தீர்வான், தன்னுடைக் கோயில்
புக்கான்.–207-
தந்தையை எய்தி – (இந்திரசித்தன் தன்) தந்தையாகிய
இராவணனை அடைந்து; அன்று அங்கு – அன்றைய நாளில்
அப்போர்க்களத்தில்; உற்றுள தன்மை எல்லாம் – நடந்துள்ள
செய்திகளை எல்லாம்; சிந்தையின் உணரக் கூறி – (அவன்) மனத்தில்
பதியும்படி தெளிவாக எடுத்துச் சொல்லி; எந்தாய் – என் தந்தையே;
நீ இடர் தீருதி – நீ துன்பம் நீங்குவாயாக (என்று சொல்லி); ஆக்கை
நொந்தனென் – யான் உடல் வருந்தினேன்; நொய்தின் ஆற்றி –
விரைவாக இளைப்பாறி; மேல் நுவல்வென் என்னா – (இனி) மேல்
(செய்யவேண்டியவை பற்றிச்) சொல்லுவேன் என்று கூறி; புந்தியில்
அனுக்கம் தீர்வான் – மனத்துன்பம் நீங்குவதற்காகத்; தன்னுடைக்
கோயில் புக்கான் – தனது அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்.
——————–
இலக்குவன் மற்றும் பிறர் நிலைகண்டு வீடணன் புலம்பல்
8209.
இத் தலை, இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான்,
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன், மயங்குகின்றான்,
‘அத் தலைக் கொடியன் என்னை அட்டிலன்; அளியத்தேன்
நான்;
செத்திலென்; வலியென் நின்றேன்’ என்று போய்,
வையம் சேர்ந்தான்.–208-
இத்தலை – (இந்திரசித்தன் கோயில் புக்க நேரத்தில் இராமன்
பக்கலில்) இந்தப் பக்கத்தில்; இன்னல் உற்ற வீடணன் – துன்பம்
அடைந்த வீடணன்; இழைப்பது ஓரான் – செய்வது என்ன என்று
தெரியாதவனாகி; மத்து உறு தயிரின் – மத்தினால் கடையப்பட்ட
தயிரினைப்போல; உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – மனம்
கலங்கித் தெளிவு குலைபவனாகி; அத்தலை – அத்தன்மையுள்ள;
கொடியன் என்னை அட்டிலன் – கொடிய இந்திரசித்து இவர்களைக்
கொன்றது போல் என்னையும் கொன்றானில்லை; நான் அளியத்தேன்
– நான் இரங்கத்தக்கவனானேன்; செத்திலென் – (நான்) இறந்தேனு
மில்லை; வலியென் நின்றேன் – வலிமை உள்ளவனாய்
நின்றிருக்கிறேன்; என்று போய் வையம் சேர்ந்தான் – என்று
சொல்லிக் கொண்டு (துயரம் கரை கடந்து) போய் நிலத்தில்
விழுந்தான்.
———–
8210.
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்டபடியைக் கண்டு
‘நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார்; யான் ஒரு தமியென்
நின்றேன்;
தேசத்தார், என்னை என் என் சிந்திப்பார்!’ என்று தீயும்,
வாசத் தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான்;–209-
ஐயன் தம்பி – தலைவனாகிய இராமன் தம்பி இலக்குவன்;
பாசத்தால் பிணிப்புண்ட படியைக் கண்டு – நாகக் கணையால்
கட்டுப்பட்ட தன்மையைக் கண்டு; நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் –
(அவனிடத்து) அன்பு கொண்டவர்கள் எல்லோரும் இறந்து விழுந்து
விட்டார்கள்; யான் ஒரு தமியென் நின்றேன் – நான் மட்டும் இறவாது
ஒரு தனியனாய் நின்றுகொண்டு இருக்கிறேன்; தேசத்தார் என்னை
என் என் சிந்திப்பார் – உலகத்தவர் என்னைப் பற்றி என்ன என்று
சிந்திப்பார்கள்; என்று – என்று சொல்லி; தீயும் வாசத்தார் மாலை
மார்பன் – வாடுகிற மணம் மிக்க மாலை
அணிந்த மார்பினை உடைய வீடணன்; வாய் திறந்து
அரற்றலுற்றான் – வாய் திறந்து கதறி அழத் தொடங்கினான்.
—————–
8211.
‘ “கொல்வித்தான், உடனே நின்று அங்கு” என்பரோ.
“கொண்டு போனான்
வெல்வித்தான், மகனை” என்று பகர்வரோ? “விளைவிற்கு
எல்லாம்
நல் வித்தாய் நடந்தான், முன்னே” என்பரோ? நயந்தோர்
தம்தம்
கல்வித்து ஆம் வார்த்தை’ என்று கரைவித்தான்
உயிரைக் கண்போல்.–210-
உடனே நின்று அங்கு கொல்வித்தான் என்பரோ – (என்னைப்
பற்றி மற்றவர்கள்) (இந்த வீடணன்) கூடவே இருந்து அவ்விடத்தில்
இலக்குவனை இந்திரசித்தன் மூலம் கொல்லுவித்தான் என்று
கூறுவார்களா?; கொண்டு போனான் வெல்வித்தான் மகனை என்று
பகர்வரோ – (இந்திரசித்தனிடம்) அழைத்துச் சென்று மகனாகிய
அவனை வெற்றி பெறும்படிச் செய்து விட்டான் என்று (பழி)
கூறுவார்களா?; விளைவிற்கு எல்லாம் நல்வித்தாய் நடந்தான்
முன்னே என்பரோ – விளைந்த தீமைகளுக்கு எல்லாம் நல்ல
விதை போல முன்பே (நல்லவன் போல) (இராமனிடம் வந்து) சேர்ந்து
கொண்டான என்று குறை கூறுவார்களோ?; நயந்தோர் தம் தம்
கல்வித்து ஆம் வார்த்தை – (இராமனை) விரும்பும் (உலகத்தவர்)
தம் கல்வியின் அளவினை உடையதாய் (அவர்கள் கூறும்)
பழிமொழியும் பலவகைப்பட்டு நிற்கும்; என்று – என்று (பலவாறு கூறி);
கண் போல் உயிரைக் கரைவித்தான் – கண்களைப் போலவே
உயிரையும் கரைந்து உருகச் செய்தான்.
————-
8212.
‘போர் அவன் புரிந்த போதே, பொரு அரு வயிரத்
தண்டால்,
தேரொடும் புரண்டு வீழச் சிந்தி, என் சிந்தை செப்பும்
வீரம் முன் தெரித்தேன் அல்லேன்; விளிந்திலேன்;
மெலிந்தேன்;இஞ்ஞான்று
ஆர் உறவு ஆகத் தக்கேன்? அளியத்தேன்
அழுந்துகின்றேன்!–211-
அவன் போர் புரிந்த போதே – அந்த இந்திரசித்தன் போர்
செய்த பொழுதே; பொரு அருவயிரத் தண்டால் – (என்) ஒப்புமை
இல்லாத உறுதியான தண்டினால்; தேரொடும் புரண்டு வீழச்
சிந்தி – (அவனைத்) தேரோடு புரண்டு விழும் படியாகச் சிதறச்
செய்து; என் சிந்தை செப்பும் – என் மனம் (என்னிடம்) கூறுகிற;
வீரம் முன் தெரித்தேன் அல்லேன் – வீரச் செயலை முன்பு
(செய்து) வெளிக்காட்டினேன் அல்லேன்; விளிந்திலேன் –
(அது செய்யவில்லையாயினும் அந்த இந்திரசித்தனால்) இறந்து
பட்டேனும் இல்லை; மெலிந்தேன் – (உடலும் உள்ளமும்) தளர்ந்து
போனேன்; அளியத்தேன் அழுந்துகின்றேன் – (இப்போது நான்)
எளிமை உடையவனாகித் (துன்பத்தில்) மூழ்கியுள்ளேன்; இஞ்ஞான்று
– இப்பொழுது; ஆர் உறவு ஆகத் தக்கேன் – நான் யாருக்கு
உறவாகத் தக்கவன்?
————–
‘ஒத்து அலைத்து, ஒக்க வீடி, உய்வினும் உய்வித்து, உள்ளம்
கைத்தலை நெல்லி போலக் காட்டிலேன்; கழிந்தும்
இல்லேன்;
அத் தலைக்கு அல்லேன்; யான், ஈண்டு, “அபயம்!” என்று
அடைந்து நின்ற
இத் தலைக்கு அல்லேன்; அல்லேன்! இரு தலைச் சூலம்
போல்வேன்!”–212-
ஒத்து அலைத்து – (வானர வீரர்களுடன்) ஒப்பாகப் (பகைவர்களை)
வருத்தி; ஒக்க வீடி – (அவர்கள் இறக்கும் நிலை வரின் நானும்
அவர்களுக்கு) ஒப்பாக இறந்து; உய்வினும் உய்வித்து – (வாழ்ந்து) உய்யும் நெறிகள் (இருப்பின்) யானும்
பிழைத்து (அவர்களையும்) பிழைப்பித்து; உள்ளம் – (என்
பக்தியுள்ள) மனத்தின் (தன்மையை); கைத்தலை நெல்லி போலக்
காட்டிலேன் – உள்ளங்கையிடத்தில் உள்ள நெல்லிக்கனி போல
விளக்கிக் காட்டினேன் அல்லன்; கழிந்தும் இல்லேன் – (யான்) இறந்து
போகவுமில்லை; யான் அத்தலைக்க அல்லேன் – நான்
அவ்விடத்துக்கு (இராவணன் பக்கத்துக்கு) வேண்டாதவனானேன்;
ஈண்டு அபயம் என்று அடைந்து நின்று – இங்கு (வந்து) சரண்
என்று சேர்ந்து நின்ற; இத்தலைக்கு அல்லேன் அல்லேன் –
இந்தப் பக்கத்துக்கும் (இராமன் பக்கத்துக்கும்) வேண்டாதவனானேன்;
இருதலைச் சூலம் போல்வேன் – இரண்டு பிரிவாக உள்ள சூலத்தைப்
போன்றவனானேன்.
———–
நிகழ்ந்தவை இராமன் அறிந்து வருந்துதல்
8214.
அனையன பலவும் பன்னி, ஆகுலித்து அரற்றுவானை
‘வினை உள பலவும் செய்யத்தக்கன;-வீர!-நீயும்
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ? நீத்தி! என்னா,
இனையன சொல்லித் தேற்றி, அனலன் மற்று இனைய
செய்தான்;–213-
அனையன பலவும் பன்னி – (இவை போன்ற) பல சொற்களைப்
பலமுறை சொல்லி; ஆகுலித்து – (மனத்) துன்பம் கொண்டு;
அரற்றுவானை – கதறி அழுகின்றவனாகிய வீடணனனை நோக்கி; வீர
– வீரனே; பலவும் வினை உள செய்யத் தக்கன – (இப்போது)
செய்யக்கூடிய பல (பரிகாரச்) செயல்கள் உள்ளன; நீயும் நினைவு
இலார் போல நின்று நெகிழ்தியோ? – (அச்செயல்களைச்
செய்யாமல்) நீ கூட அறிவிலார் போல மனந்தளர்ந்து வருந்துவாயோ?
நீத்தி என்னா – (அந்த மனத்தளர்ச்சியை) விட்டுவிடுவாயாக என்று;
அனலன் – அனலன் என்பவன்; இனையன சொல்லித் தேற்றி –
இத்தகைய சொற்களைச் சொல்லி (வீடணனைத்) தேற்றி; மற்று
இனைய செய்தான் – பின்பு இச்செயல்களைச் செய்தான் (செய்தவை
அடுத்த பாடலில்).
———–
8215.
‘நீ இவண் இருத்தி; யான் போய் நெடியவற்கு
உரைப்பெண்’ என்னா,
போயினன், அனலன்; போய், அப் புண்ணியன்
பொலன் கொள் பாதம்
மேயினன் வணங்கி, உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்;
ஆயிரம் பெயரினானும், அருந் துயர்க் கடலுள் ஆழ்ந்தான்.–214-
நீ இவண் இருத்தி – நீ இங்கே இருப்பாயாக; யான் போய் –
நான் போய்; நெடியவற்கு உரைப்பென் என்னா – நெடியவனாகிய
இராமனுக்கு (நிகழ்ந்தது) கூறுவேன் என்று சொல்லி; அனலன்
போயினன் – அனலன் (இராமனிடம்) சென்றான்; போய் – சென்று;
அப்புண்ணியன் பொலன்கொள் பாதம் மேயினன் வணங்கி –
அப்புண்ணிய உருவினன் ஆகிய இராமனது திருப்பாதத்தில் சேர்ந்து
(விழுந்து) வணங்கி; உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் –
நடந்த செயல்களை எல்லாம் சொல்லி நின்றான்; ஆயிரம்
பெயரினானும் – ஆயிரம் நாமத்து ஐயனாகிய இராமனும் (அது கேட்டு);
அருந்துயர்க் கடலுள் ஆழ்ந்தான் – கடத்தற்கு அரிய துன்பக் கடலுள்
முழுகினான்.
—————-
8216.
உரைத்திலன் ஒன்றும்; தன்னை உணர்ந்திலன்; உயிரும்
ஓடக்
கரைத்திலன் கண்ணின் நீரை; கண்டிலன் யாதும் கண்ணால்;
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால்; பொங்கிப்
பொங்கி
இரைத்திலன்; ‘உளன்’ என்று எண்ண இருந்தனன், விம்மி
ஏங்கி.–215-
தன்னை உணர்ந்திலன் – (அனலன் கூறியதைக் கேட்ட இராமன்)
தன்னை உணர்ந்திலனாய் (உணர்வு ஒழிந்து); உயிரும் ஓட – உயிர்
(தன்னை விட்டு) நீங்கியது போல (மயக்கம் அடைந்ததனால்); ஒன்றும்
உரைத்திலன் – ஒன்றையும் (வாயைத் திறந்து) சொல்லாமலும்;
கண்ணின் நீரை கரைத்திலன் – கண்களில் இருந்து கண்ணீரை
வெளிப்படுத்தாமலும்; யாதும் கண்ணால் கண்டிலன் – யாது ஒன்றையும் கண்ணைத் திறந்து நோக்காமலும்;
பொங்கிப் பொங்கி அம் கையால் உலகம் எல்லாம்
அரைத்திலன் – மிக்க சினம் கொண்டு (தன்) அழகிய கைகளால்
உலகங்களை எல்லாம் அழிக்காமலும்; உளன் என்று எண்ண –
கண்டோர் (அவன்) உயிரோடு தான் இருக்கிறான் என்று
எண்ணுவதற்காக; விம்மி ஏங்கி இருந்தனன் – விம்மிக் கதறிக்
கொண்டு இருந்தான்.
——–
8217. விம்மினன், வெதும்பி வெய்துற்று ஏங்கினன், இருந்த வீரன்,
‘இம் முறை இருந்து செய்வது யாவதும் இல்’ என்று எண்ணி,
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின்
போனான்,
தெவ் முறை துறந்து, வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான்.–216-
விம்மினன் – விம்மி; வெதும்பி – (நினைத்து நினைத்து மனம்)
கன்றி; வெய்துற்று – பெருமூச்சு விட்டு; ஏங்கினன் – ஏக்கம்
உடையவனாய்; இருந்த வீரன் – இருந்த வீரனாகிய இராமன்;
இம்முறை இருந்து செய்வது யாவதும் இல் – இவ்வகையில் (புலம்பிக்
கொண்டு இருந்து) செய்யத்தக்க செயல் எதுவும் இல்லை; என்று
எண்ணி – என்று நினைத்து; பொம்மென – விரைவாக; விம்மலோடும்
பொருக்கென விசையின் போனான் – விம்மிக்கொண்டு மிக
விரைவாகப் போய்; தெவ் முறை துறந்து வென்ற – பகைவன்
(இந்திரசித்தன்) அறமுறை தவறி வெற்றி பெற்ற; செங்கன மருங்கில்
சேர்ந்தான் – (குருதியால்) சிவந்த போர்க் களத்திடத்தில் (சென்று)
சேர்ந்தான்,
————–
இராமன் போர்க்களம் காணல்
8218. இழிந்து எழும் காளமேகம், எறி கடல், அனைய மற்றும்
ஒழிந்தன, நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்கப்
பிழிந்து அது காலம் ஆகக் காளிமைப் பிழம்பு போதப்
பொழிந்தது போன்றது அன்றே-பொங்கு இருட்
கங்குற் போர்வை.–217-
பொங்கு இருட் கங்குற் போர்வை – மிகுதியாகப் பொங்கும்
இரவாகிய போர்வை; இழிந்து எழுகாள மேகம் – (நீர் முகக்க) இறங்கி
மேல் எழுகிற கரு மேகங்களையும்; எறி கடல் அனைய – (அலைகள்)
வீசும் கடல்களையும் அவை போல்வன பிறவற்றையும்; மற்றும்
ஒழிந்தன நீலவண்ணம் உள்ளன எல்லாம் – மற்றும் விடுபட்டுப்
போன நீலவண்ணம் உள்ளனவாகிய பொருள்கள் எல்லாவற்றையும்;
ஒக்கப் பிழிந்து – ஒன்று சேர்த்துப் பிழிந்து; அது – (அவ்வாறு
பிழிந்த) அப்பொருள்; காலம் ஆகக் – பொழிவதற்கு உரிய காலமாக;
காளிமைப் பிழம்பு போதப் – கருமையின் உருவத்தை மிகுதியாக
வெளிப்படுமாறு; பொழிந்தது போன்றது அன்றே – பொழிந்தது
போன்றது.
———–
8219. ஆர் இருள் அன்னது ஆக, ஆயிர நாமத்து அண்ணல்,
சீரிய அனலித் தெய்வப் படைக்கலம் தெரிந்து வாங்கி,
பாரிய விடுத்தலோடு, பகை இருள் இரிந்து பாற,
சூரியன் உச்சி உற்றாலொத்தது, அவ் உலகின் சூழல்.–218-
ஆர் இருள் அன்னது ஆக – உலகம் முழுதும் நிறைந்து மூடிய
இருள் அவ்வாறு அமைய; ஆயிர நாமத்து அண்ணல் – ஆயிரம்
திருப்பெயர்களை உடைய தலைவனாகிய இராமன்; சீரிய அனலித்
தெய்வப்படைக்கலம் – சிறப்புடைய அங்கியின் தெய்வத்தன்மை
உள்ள அம்பினை; வாங்கி – தேர்ந்து எடுத்து; பாரிய விடுத்தலோடும்
– (இருள்) அழியும்படியாகச் செலுத்திய உடனே; பகை இருள் இரிந்து
பாற – (இதுவரை) பகையாக இருந்த இருட்டு அழிந்து கெட; அவ்
உலகின் சூழல் – அந்தப் போர்க்களத்தின் சுற்றுப் புறம்; சூரியன்
உச்சி உற்றாலொத்தது – சூரியன் (வானத்து) உச்சியை அடைந்தது
போல் விளங்கியது.
—————–
8220. படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி, பல்வேறு
இடை உறு குருதி வெள்ளத்து, எறி கடல் எழு நீர் பொங்கி,
உடை, உறு தலைக் கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க
உண்ணும்
கடை உறு காலத்து, ஆழி உலகு அன்ன, களத்தைக்
கண்டான்.–219-
படை உறு பிணத்தின் – படைக்கலங்கள் தைத்த பிணங்களின்;
பம்மல் பருப்பதம் துவன்றி – மிகுதி மலைகள் போல நிறைந்து;
பல்வேறு இடை உறு குருதி வெள்ளத்து – பல்வேறு விதமாக
இடை இடையே மிக்க குருதியாகிய வெள்ளம்; எறி கடல் எழுநீர்
பொங்கி – அலைகள் எறியும் கடலின் நீர் போலப் பொங்கி எழுகிற
காரணத்தால்; உடை உறு தலைக்கை அண்ணல் – உடைதல்
பொருந்திய தலையைக் கையில் ஏந்திய தலைவன் ஆகிய
சிவபெருமான்; உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – உயிர்களை எல்லாம்
ஒரு சேர உண்ணுகிற; கடை உறு காலத்து – இறுதி பொருந்திய
காலத்தில்; ஆழி உலகு அன்ன – கடலினால் (அழிக்கப்பட்ட)
உலகத்தை ஒத்த; களத்தைக் கண்டான் – போர்க்களத்தை (இராமன்)
கண்டான்.
————
இலக்குவனைக் கண்ட இராமன் துயரம்
8221. பிணப் பெருங் குன்றினூடும், குருதி நீர்ப் பெருக்கினூடும்,
நிணப் பெருஞ் சேற்றினூடும், படைக்கல நெருக்கினூடும்,
மணப் பெருங் களத்தில், மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்,
கணத்தினும் பாதிப் போதில், தம்பியைச் சென்று கண்டான்.–220-
மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – துர்க்கை மங்கலமாக
வாழ்க்கை (நடத்துதற்கு உரிய) இடமாகிய; மணப் பெரும் களத்தில் –
புலால் நாற்றம் வீசுகிற பெரிய போர்க்களத்தில்; பிணப் பெருங்
குன்றினூடும் – பிணக் குவியல்களாகிய பெரிய மலைகளுக்கு
நடுவிலும்; குருதி நீர்ப் பெருக்கினூடும் – இரத்த வெள்ளப் பெருக்கின்
இடையிலும்; நிணப் பெருஞ் சேற்றினூடும் – கொழுப்புகள் (விழுந்து
ஆகிய) பெரிய சேற்றுப் (பகுதிக்கு) இடையிலும்; படைக்கல
நெருக்கினூடும் – (கீழே விழுந்து கிடக்கிற) படைக்கலங்களின்
இடையிலும்; கணத்தினும் பாதிப் போதில் – (இராமன்)
அரைக்கணத்தில்; தம்பியைச் சென்று கண்டான் – தம்பியைச் சென்று
பார்த்தான்.
————
8222. அய் அவன் ஆக்கைதன்மேல் விழுந்து மார்பு
அழுந்தப் புல்லி,
‘உய்யலன்’ என்று, ஆவி உயிர்த்து உயிர்த்து,
உருகுகின்றான்;
பெய் இரு தாரைக் கண்ணீர்ப் பெருந் துளி பிறங்க, வானின்
வெய்யவன் தன்னைச் சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான்.–221-
அய் – தலைவனாகிய இராமன்; அவன் ஆக்கை தன் மேல்
விழுந்து – அந்த இலக்குவனுடைய உடம்பின் மேல் விழுந்து; மார்பு
அழுந்தப் புல்லி – மார்பு (அவனுடலில்) அழுந்தும் படியாகத் தழுவிக்
கொண்டு; உய்யலன் என்று – (இனிமேல் இவன்) பிழைக்க மாட்டான்
என்று (கண்டவர் எண்ணும் படியாக); ஆவி உயிர்த்து உயிர்த்து
உருகுகின்றான் – பெருமூச்சை மிகுதியும் விட்டுக் கொண்டு உருகுகின்றவனாகி; பெய் இரு தாரைக் கண்ணீர்ப்
பெருந்துளி பிறங்க – இரு வரிசையாகக் கண்களில் இருந்து பெரிய
நீர்த்துளிகள் வெளிப்பட; வானின் வெய்யவன் தன்னைச் சேர்ந்த –
வானத்தில் கதிரவன் தன்னைச் சேர்ந்து (விளங்குகிற); நீல் நிற மேகம்
ஒத்தான் – நீல நிறமுள்ள மேகத்தை ஒத்து விளங்கினான்.
———–
8223. உழைக்கும்; வெய்து உயிர்க்கும்; ஆவி உருகும்;
போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான், ‘இலக்குவா! இலக்குவா!’
என்று
அழைக்கும்; தன் கையை வாயின், மூக்கின் வைத்து
அயர்க்கும்; ‘ஐயா!
பிழைத்தியோ!’ என்னும்-மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்-222-
மெய்யே – உண்மையாக; பிறந்தேயும் பிறந்திலாதான் –
பிறந்திருந்தும் வினை வசத்தால் பிறவாதவனாகிய இராமன்;
உழைக்கும் – வருத்தப்படுவான்; வெய்து உயிர்க்கும் – பெரு மூச்சு
விடுவான்; ஆவி உருகும் – உயிர் உருகுவான்; உணர்வு போய்
சோரும் – அறிவு நீங்கிச் சோர்வான்; இழைக்குவது அறிதல்
தேற்றான் – செய்வது இன்னது என்று அறிந்து தெளியாதவனாய்;
இலக்குவா, இலக்குவா என்று அழைக்கும் – இலக்குவனே,
இலக்குவனே என்று பலமுறை அழைப்பான்; தன் கையை மூக்கின்
வைத்து – (தனது) கையை (இலக்குவனது) மூக்கின் மேல் வைத்து (மூச்சு
உளதா) (என்று பார்த்து); அயர்க்கும் – வருந்துவான்; ஐயா – ஐயா;
பிழைத்தியோ என்னும் – (நீ) பிழைப்பாயோ என்று கூறுவான்.
————-
8224. தாமரைக் கையால் தாளைத் தைவரும்; குறங்கைத் தட்டும்;
தூ மலர்க் கண்ணை நோக்கும்; ‘மார்பிடைத் துடிப்பு
உண்டு’ என்னா,
ஏமுறும்; விசும்பை நோக்கும்; எடுக்கும்; தன் மார்பின்
எற்றும்;
பூமியில் வளர்த்தும்; ‘கள்வன் போய் அகன்றானோ?’
என்னும்.–223-
தாமரைக் கையால் தாளைத்தைவரும் – (மேலும் இராமன் தன்)
தாமரை போன்ற கைகளினால் (இலக்குவனுடைய) கால்களைத்
தடவுவான்; குறங்கைத் தட்டும் – தொடையைத் தட்டுவான்; தூமலர்க்
கண்ணை நோக்கும் – (அவனுடைய) தூய தாமரை மலர் போன்ற
கண்ணின் (இமைகளைப் பிரித்துப்) பார்ப்பான்; மார்பிடைத் துடிப்பு
உண்டு என்னா ஏமுறும் – மார்பில் துடிப்பு உள்ளது என்று சொல்லி
மகிழ்வான்; விசும்பை நோக்கும் – விண்ணைப் பார்ப்பான்; எடுக்கும்
தன் மார்பில் எற்றும் – (அவனைத் தூக்கி) எடுத்துத் தனது மார்பில்
அணைத்துக் கொள்ளும்; பூமியில் வளர்த்தும் – நிலத்தில் படுக்கச்
செய்யும்; கள்வன் போய் அகன்றானோ என்னும் – (மாயக்)
கள்ளனாகிய இந்திரசித்தன் (தப்பிப்) போய் விட்டானோ? என்பான்;
————
8225. வில்லினை நோக்கும்; பாச வீக்கினை நோக்கும்; வீயா
அல்லினை நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; ‘பாரைக்
கல்லுவென், வேரோடு’ என்னும்; பவள வாய் கறிக்கும்;
கற்றோர்
சொல்லினை நோக்கும்; தன் போல் புகழினை நோக்கும்-
தோளான்.–224-
தன் போல் புகழினை நோக்கும் தோளான் – தனக்குத் தானே
ஒத்துப் (பிறிதொன்றும் ஒவ்வாது) புகழை விரும்பும் தோள்களை
உடையவன் ஆகிய (இராமன்); வில்லினை நோக்கும் – (தன்
கோதண்டம் என்ற பெயருடைய) வில்லினைப் பார்ப்பான்; பாச
வீக்கினை நோக்கும் – நாகக் கணையின் கட்டுகளைக் காண்பான்;
வீயா அல்லினை நோக்கும் – விடியாத இரவினைப் பார்ப்பான்;
வானத்து அமரரை நோக்கும் – ஆகாயத்தில் உள்ள தேவர்களைப்
பார்ப்பான்; பாரை வேரோடு கல்லுவென் என்னும் – நிலவுலகத்தை
வேருடன் பெயர்த்து விடுவேன் என்று சொல்லுவான்; பவள வாய்
கறிக்கும் – பவளம் போன்ற வாய் உதடுகளைக் கடிப்பான்; கற்றோர்
சொல்லினை நோக்கும் – கற்று அறிந்த பெரியோர்கள் கூறியுள்ள
(அறம் வெல்லும் பாவம் தோற்கும்) சொற்களை எண்ணிப் பார்ப்பான்.
———-
8226. வீரரை எல்லாம் நோக்கும்; விதியினைப் பார்க்கும்; வீரப்
பார வெஞ் சிலையை நோக்கும்; பகழியை நோக்கும்; ‘பாரில்
யார் இது பட்டார், என்போல் எளி வந்த வண்ணம்?’
என்னும்;
‘நேரிது, பெரிது’ என்று ஓதும்-அளவையின் நிமிர நின்றான்.–225-
அளவையின் நிமிர நின்றான் – பிரமாணங்களைக் கடந்து
நின்றவனாகிய இராமன்; வீரரை எல்லாம் நோக்கும் – (தனக்காகப்
போரிட்டு மடிந்து கிடக்கும்) வானர வீரர்களை எல்லாம் பார்ப்பான்;
விதியினைப் பார்க்கும் – (தாரத்தையும் தம்பியையும் இழக்கச் செய்த)
விதியினைப் பற்றி எண்ணிப் பார்ப்பான்; வீரப் பார வெஞ்சிலையை
நோக்கும் – (தக்க தருணத்தில் தனக்கு உதவாத) வீரமுடைய வலிய
வில்லினைப் பார்ப்பான்; பகழியை நோக்கும் – (பயன்படாது அம்பு
அறாத்தூணியில் உள்ள) அம்புகளைப் பார்ப்பான்; பாரில் என்போல்
எளிவந்த வண்ணம் இது பட்டார் யார்? என்னும் – நிலவுலகத்தில்
என்னைப் போல எளி வந்த தன்மையாகிய (பெருந்துன்பத்தை)
அடைந்தவர் யார்? என்று கூறுவான்; நேரிது பெரிது என்று ஓதும் –
என துன்பம் மிக நேரிது பெரியது என்று கூறுவான்.
———–
இராமன் வீடணனை நோதல்
8227. ‘”எடுத்த போர், இலங்கை வேந்தன் மைந்தனோடு
இளைய கோவுக்கு
அடுத்தது” என்று, என்னை வல்லை அழித்திலை,
அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து, உயிர் குடிக்க;
என்னைக்
கெடுத்தனை; வீடணா!’ என்றான்-கேடு இலாதான்.–226-
கேடு இலாதான் – எக்காலத்திலும் அழியாதவனாகிய (அவதார)
இராமன்; இலங்கை வேந்தன் மைந்தனோடு – இலங்கை வேந்தனாகிய
இராவணனின் மகனாகிய இந்திரசித்தனுடன்; இளைய கோவுக்கு –
இளைய தலைவனாகிய இலக்குவனுக்கு; எடுத்த போர் அடுத்தது
என்று – பெரும் போர் ஏற்பட்டது என்று கூறி; வீடணா நீ –
வீடணனே நீ; என்னை வல்லை அழைத்திலை – என்னை விரைவாக
அழைக்காமல் போனாய் (அதனால்); அரவின் பாசம் தொடுத்த கை –
நாகக் கணை தொடுத்த (இந்திரசித்தனது) கைகளையும்;
தலையினோடும் துணித்து – (அவனது) தலையையும் கொய்து
களைந்து; உயிர் குடிக்க – உயிரைக் குடிப்பதற்கு (இல்லாமல்);
என்னைக் கெடுத்தனை என்றனன் – என்னைக் கெடுத்து விட்டாய்
என்றான்.
—————————–
வீடணன் நிகழ்ந்தது கூறல்
8228. அவ் உரை அருளக் கேட்டான், அழுகின்ற அரக்கன் தம்பி,
‘இவ் வழி, அவன் வந்து ஏற்பது அறிந்திலம்; எதிர்ந்
தபோதும்,
“வெவ் வழியவனே தோற்கும்” என்பது விரும்பி நின்றேன்.
தெய்வ வன் பாசம் செய்த செயல், இந்த மாயச் செய்கை.–227-
அவ் உரை – (இராமன்) அந்தச் சொற்களை; அருளக்
கேட்டான் – சொல்லக்கேட்டு; அழுகின்ற அரக்கன் தம்பி -அழுகின்ற இராவணனது தம்பியாகிய வீடணன்; இவ்வழி – இந்தப்
போர்க்களத்துக்கு; அவன் வந்து ஏற்பது அறிந்திலம் – அந்த
இந்திரசித்தனே வந்து போர் ஏற்பான் என்பதை (நாங்கள்) முன்பே
அறிந்திலோம்; எதிர்ந்த போதும் – (அவ்வாறு அவனே வந்து போர்)
எதிர்த்த போதும்; வெவ்வழியவனே தோற்கும் என்பது – தீய வழியில்
செல்லும் (இந்திரசித்தனே) தோற்பான் என்று (எண்ணி); விரும்பி
நின்றேன் – விருப்பத்தோடு (போர்க்களத்தில்) நின்றிருந்தேன்;
(அதனால் வல்லை உன்னை அழைக்கவில்லை) இந்த மாயச் செய்கை
– இந்த மாமாயச் செயல்; தெய்வ வன் பாசம் செய்த செயல் –
தெய்வத்தன்மை பொருந்திய வலிமையான நாகக் கணையின் செயலால்
விளைந்தது (என்று இராமனை நோக்கிக் கூறினான்).
————–
8229. ‘அற்று அதிகாயன் ஆக்கை, தலை இலது ஆக்கி ஆண்ட
வெற்றியின் ஆய வீரன் மீண்டிலன், “இலங்கை மேல்நாள்
பெற்றவன் எய்தும்” என்னும் பெற்றியை உன்னி; பிற்போது
உற்றனன், மைந்தன், தானை நாற்பது வெள்ளத்தோடும்.–228-
அதிகாயன் ஆக்கை அற்று – அதிகாயனது உடம்பு அறுபட்டு;
தலை இலது ஆக்கி – தலை இல்லாததாகச் செய்து; ஆண்ட
வெற்றியன் – பெற்ற வெற்றியை உடையவன்; ஆய வீரன் – ஆகிய
வீரனாகிய இலக்குவன்; மேல் நாள் இலங்கை – முற்காலத்தில்
இலங்கையை; பெற்றவன் எய்தும் – (குபேரனிடத்தில் இருந்து)
பெற்றவன் ஆகிய இந்திரசித்தன்; எய்தும் என்னும் பெற்றியை உன்னி
– போருக்கு வருவான் என்னும் தன்மையை எண்ணி; மீண்டிலன் –
(போர்க்களத்தை விட்டு) நீங்காது நின்றான்; பிற்போது – பின்பு;
மைந்தன் – இராவணன் மகனாகிய இந்திர சித்தன்; தானை நாற்பது
வெள்ளத்தோடும் – சேனை நாற்பது வெள்ளத்தோடு; உற்றனன் –
போர்க்களம் வந்தான்.
—————-
8230.
ஈண்டு, நம் சேனை வெள்ளம் இருபதிற்று-இரட்டி மாள,
தூண்டினன், பகழி மாரி; தலைவர்கள் தொலைந்து சோர,
மூண்டு எழு போரில், பாரில் முறை முறை முடித்தான்;
பின்னர்
ஆண்தகையோடும் ஏற்றான், ஆயிரம் மடங்கல்-தேரான்.–229-
ஆயிரம் மடங்கல் தேரான் – ஆயிரம் சிங்கங்கள் பூட்டப்பட்ட
தேரை உடையவன் ஆகிய (இந்திரசித்தன்); மூண்டு எழு போரில் –
மிக வலிமையுடன் நடந்த போரில்; ஈண்டு நம்சேனை – நெருங்கிய
நமது படைகளில்; இரு பதிற்று இரட்டி வெள்ளம் மாள – நாற்பது
வெள்ளம் உயிர்விடவும்; தலைவர்கள் தொலைந்து சோர – வானரப்
படைத் தலைவர்கள் வலி தொலைந்து சோர்வு அடையவும்; பாரில் –
போர்க்களத்தில்; பகழி மாரி தூண்டினன் – அம்பு மழை பெய்து;
முறை முறை முடித்தான் – முறை முறையாக அழித்து விட்டான்;
பின்னர் – பின்பு; ஆண் தகையோடும் ஏற்றான் – ஆண்மைத்
தன்மை உள்ள இலக்குவனுடன் போர் ஏற்றான்.
——————
8231. ‘அனுமன்மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய,
தனு வலம் காட்டி, பின்னை, நாற்பது வெள்ளத் தானை
பனி எனப்படுவித்து, அன்னான் பலத்தையும்
தொலைத்து, “பட்டான்
இனி’” என, வயிர வாளி, எண் இல, நிறத்தின் எய்தான்–230-
அனுமன் மேல் நின்ற ஐயன் – அனுமனது தோளின் மீது ஏறி
நின்று (போர் செய்த) தலைவனாகிய இலக்குவன்; ஆயிரம் தேரும்
மாய – (இந்திரசித்தன் அப்பொழுது ஏறிக்கொண்டு போர் செய்த)
ஆயிரம் தேர்களும் அழிந்து சிந்தும் படியாக; தனுவலம் காட்டி
– வில்லாற்றலைக் காட்டி; பின்னை – பின்பு; நாற்பது வெள்ளத்தானை
– நாற்பது வெள்ளம் (அரக்கர்) படையைப்; பனி எனப் படுவித்து
– (கதிரவன் முன் உள்ள) பனியைப் போல அழியச் செய்து;
அன்னான் – அந்த இந்திரசித்தனுடைய; பலத்தையும் தொலைத்து –
வலிமையையும் கெடுத்து; இனி பட்டான் என – இனி (இந்திரசித்தன்)
இறந்து விடுவான் என்று (கண்டவர்கள் கூறும்படி); எண் இல வயிர
வாளி – எண்ணிக்கை இல்லாத வலிய அம்புகளை; நிறத்தின் எய்தான்
– (அவனுடைய) மார்பில் செலுத்தினான்.
———–
8232. ‘ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்,
தூவுண்ட தானை முற்றும் பட, ஒரு தமியன் சோர்வான்;
“போவுண்டது என்னின், ஐய! புணர்க்குவன் மாயம்” என்று,
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென்; பரிதி பட்டான்.–231
ஏ உண்ட பகுவாயோடும் – அம்புபட்டுப் பிளந்த இடந்தோறும்;
குருதிநீர் இழிய நின்றான் – குருதி நீர் ஒழுக நின்றவனாகிய
(இந்திரசித்தன்); தூவுண்ட தானை முற்றும் பட – அம்புகளால்
தூவப்பட்ட (அரக்கர்) படை முழுவதும் அழிய; ஒரு தமியன்
சோர்வான் – ஒரு தன்மையானவனாய் (நின்று)
வருந்துகின்றவனானான்; ஐய – (அப்பொழுது நான் இலக்குவனைப்
பார்த்து) ஐயனே; போவுண்டது என்னின் – (இப்போது இவன்) தப்பிப்
போக நேர்ந்தால்; மாயம் புணர்க்குவன் என்று – மாயச் செயல்
செய்வான் என்று; பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் –
பரவுதல் பொருந்திய மிகு புகழைக் கொண்ட இலக்குவனுக்கு
உணர்த்தினேன்; பருதி பட்டான் – (இந்நிலையில்) கதிரவன்
மறைந்தான்; (இரவுக் காலம் வந்தது)
—————–
8233. ‘மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம்; வஞ்சன்,
வானில்
போய், அத் தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து,
பொய்யின்
ஆயத்தார்ப் பாசம் வீசி அயர்வித்தான், அம்பின் வெம்பும்
காயத்தான்’ என்னச் சொல்லி, வணங்கினான், கலுழும்
கண்ணான்.–232-
ஆழி உலகு எலாம் இருண்டது – கடலால் சூழப்பட்ட நில உலகம்
எல்லாம் இருண்டு போனது; வஞ்சன் – வஞ்சனைப் பண்புள்ள
(அந்த) இந்திரசித்தன்; மாயத்தால் வானில் போய் – மாயச்
செய்கையால் வானத்திற்குப் போய்; அத் தானுடைய வஞ்ச
வரத்தினால் ஒளித்து – அந்தத் தான் பெற்றுள்ள வஞ்சனைச் செயல்
செய்ய உரிய வரத்தின் வலிமையால் மறைந்து (நின்று); பொய்யின்
ஆய – பொய்மையால் ஆகிய; தார்ப்பாசம் வீசி – நாகக் கணையை எய்து; அயர்வித்தான் – தளரச் செய்தான்; அம்பின்
வெம்பும் காயத்தான் – (இலக்குவனுடைய) அம்புகளால் வெதும்பிய
உடலை உடைய அந்த இந்திரசித்தன்; என்னச் சொல்லி – என்று
(வீடணன் இராமனிடம்) கூறி; கலுழும் கண்ணான் வணங்கினான் –
நீர் வடியும் கண்களை உடையவனாய் வணங்கி நின்றான்.
————
வீடணன் “யாரும் இறந்திலர்” என்னல்
8234. பின்னரும் எழுந்து, பேர்த்தும் வணங்கி, ‘எம் பெரும!
யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை; இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல்; வெல்லாது, அறத்தினைப் பாவம்’
என்றான்.–233-
பின்னரும் எழுந்து – மீண்டும் எழுந்து நின்று; பேர்த்தும்
வணங்கி – மறுமுறையும் வணங்கி; எம்பெரும – எங்கள் தலைவனே!
யாரும் இன் உயிர் துறந்தார் இல்லை – இவர்களில் எவரும் தங்கள்
இனிய உயிரை விட்டுவிடவில்லை; இறுக்கிய பாசம் இற்றால் – (இவர்
ளை) இறுகப் பிணைத்துள்ள நாகபாசம் நீங்கினால் (உயிருடன்
எழுவர்); புல்நுனைப் பகழிக்கு ஓயும் தரத்தரோ? – இவர்கள்
புன்மையான முனையினையுடைய அம்புகளுக்கு வலிகெடும்
தன்மையுடையவர்களா? (எனவே) புலம்பி உள்ளம் இன்னலுற்று
அயரல் – புலம்பி மனத்துன்பம் கொண்டு வருந்தாதே; அறத்தினை
பாவம் வெல்லாது என்றான் – அறத்தினைப் பாவம் (எக்காலத்திலும்)
வெற்றி கொள்ளாது என்றான் (வீடணன்).
————–
நாகபாச வரலாறு
8235. ‘யார், இது கொடுத்த தேவன்? என்னை ஈது?
இதனைத் தீர்க்கும்
காரணம் யாது? நின்னால் உணர்ந்தது கழறிக் காண்’ என்று,
ஆரியன் வினவ, அண்ணல் வீடணன், ‘அமல! சாலச்
சீரிது’ என்று, அதனை, உள்ள பரிசு எலாம், தெரியச்
சொன்னான்:-234
இது – இந்த நாகக் கணையை (இந்திரசித்தனுக்குக்); கொடுத்த
தேவன் யார் – கொடுத்த தேவன் யாவன்; என்னை ஈது – என்ன
தன்மை உடையது இது; இதனைத் தீர்க்கும் காரணம் யாது –
இதனைப் போக்கும் உபாயம் யாது? நின்னால் உணர்ந்து – நீ (இது
பற்றி) அறிந்துள்ளதை; கழறிக்காண் – சொல்லுவாயாக; என்று
ஆரியன் வினவ – என்று இராமன் கேட்க; அண்ணல் வீடணன் –
தலைமைப் பெருமை உள்ள வீடணன்; அமல – (இராமனைப் பார்த்து)
குற்றமற்றவனே; சாலச் சீரிது என்று – மிக நல்லது என்று சொல்லி;
அதனை உள்ள பரிசு எலாம் – அதற்கு உள்ள தன்மைகளைத்;
தெரியச் சொன்னான் – தெளிவாகச் சொன்னான்.
————–
8236. ‘ஆழி அம் செல்வ! பண்டு இவ் அகலிடம் அளித்த
அண்ணல்
வேள்வியில் படைத்தது; ஈசன் வேண்டினன் பெற்று,
வெற்றித்
தாழ்வு உறு சிந்தையோற்குத் தவத்தினால் அளித்தது;
ஆணை!
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது; ஊற்றம் ஈதால்;–235-
ஆழி அம் செல்வ! – சக்கரப்படையை ஏந்திய அழகிய செல்வனே!
பண்டு இவ் அகலிடம் அளித்த அண்ணல் – முற்காலத்தில் இந்த
அகன்ற உலகத்தைப் படைத்த பிரமன்; வேள்வியில் படைத்தது –
வேள்வி செய்து உருவாக்கியது; ஈசன் வேண்டினன் பெற்று –
அவனிடம் இருந்து சிவபிரான் (அதை) வேண்டிப் பெற்று; வெற்றித்
தாழ்வு உறு சிந்தையோற்குத் – வெற்றியை உடைய தாழ்வில்லாத
மனத்தை உடைய இந்திரசித்தனுக்கு; தவத்தினால் அளித்தது –
(அவன் செய்த) தவத்துக்காகக் கொடுத்தது; ஆணை – (இது
முற்றிலும்) உண்மை; ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது – ஊழி
முடிவுக் காலத்து இடி போன்றது; ஊற்றம் ஈதால் – (இதன்) வலிமை இப்படி
உள்ளதாகும்.
————-
8237. ‘அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானைப்
பின்உற வயிரத் திண்தோள் பிணித்தது;-பெயர்த்து ஒன்று
எண்ணி
என், இனி?-அனுமன் தோளை இறுக்கியது; இதனால்
ஆண்டும்
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது, புலவர் எல்லாம்.–236-
ஆயிரம் கண்ணினானை – ஆயிரம் கண்களை உடைய இந்திரன்;
பின்உற – புறமுதுகு காட்ட; வயிரத் திண்தோள் பிணித்தது –
வலிமை மிக்க (அவனது) தோள்களைக் கட்டியது; அன்னதன்
ஆற்றல் அன்றே – அந்த நாக பாசத்தினது ஆற்றல் அல்லவா?
அனுமன் தோளை இறுக்கியது – தேவியைத் தேடிச் சென்ற
அனுமனது தோள்களைக் கட்டியதும் (இந்நாகக் கணையல்லவா) புலவர்
எல்லாம் – தேவர்கள் எல்லாம்; யாண்டும் – எப்பொழுதும்;
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது இதனால் – தேவ உலகத்தை
ஆளும் செல்வத்தை விட்டு நீங்கியதும் இந்த நாகக் கணையால்தான்;
பெயர்த்து ஒன்று எண்ணி என் இனி – வேறு ஒன்றை எண்ணி
என்ன பயன்இனி.
———-
8238. தான் விடின் விடும், இது ஒன்றே; சதுமுகன் முதல்வர் ஆய
வான் விடின், விடாது; மற்று, இம் மண்ணினை எண்ணி
என்னே!
ஊன் விட, உயிர் போய் நீங்க, நீங்கும்; வேறு உய்தி
இல்லை;
தேன் விடு துளவத் தாராய்! இது இதன் செய்கை’ என்றான்.–237-
தேன் விடு துளவத் தாராய் – தேன் பிலிற்றுகிற துளசி மாலையை
அணிந்தவனே; ஒன்றே இது – ஒப்பற்ற நாகக் கணையாகிய இது; தான்
விடின் விடும் – தானே விட்டால் தான் விடும்; சதுமுகன் முதல்வர்
ஆய வான்விடின் விடாது – பிரமனை முதல்வனாகக் கொண்ட தேவர்கள் விடுவித்தால் கூட விடாது; மற்று
இம்மண்ணினை எண்ணி என்னே – அதனால் இந்நில உலகத்தவர்
(விடுவிப்பர் என்று) எண்ண என்ன உள்ளது; ஊன்விட உயிர் போய்
நீங்க நீங்கும் – உடல் அழிந்து உயிர் போன உடன் தான் (விட்டு)
நீங்கும்; வேறு உய்தி இல்லை – வேறு பிழைக்கும் வழி இல்லை. இது
இதன் செய்கை என்றான் – இது இந்நாகக் கணையின் செயல் என்று
(வீடணன் இராமனிடம்) கூறினான்.
————-
8239. ‘ஈந்துள தேவர்மேலே எழுகெனோ? உலகம் யாவும்
தீந்து உக நூறி, யானும் தீர்கெனோ? இலங்கை சிந்தப்
பாய்ந்து, அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ? இயன்ற
பண்போடு
ஏய்ந்தது பகர்தி’ என்றான், இமையவர் இடுக்கண் தீர்ப்பான்.–238-
இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – (ஐ இருதலையினோன் அனுசர்
ஆதிய மெய்வலி அரக்கரால்) தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைத்
தீர்ப்பதற்காக அவதாரம் செய்த இராமன் (வீடணனைப் பார்த்து)
ஈந்துள தேவர்மேலே எழுகெனோ – (இந்நாக பாசத்தை
இந்திரசித்தனுக்குக்) கொடுத்த தேவர்களின் மீது போருக்கு
எழுவேனோ? உலகம் யாவும் தீந்து உக நூறி யானும் தீர்கெனோ
– உலகம் முழுவதும் சாம்பலாய்ப் போகும்படி அழித்து விட்டு நானும்
அழிவேனோ? இலங்கை சிந்தப் பாய்ந்து – இலங்கை நகரம் அழிந்து
கெட (அதன் மீது) பாய்ந்து; அவர் சுற்றும் முற்றும் படுப்பெனோ –
அந்த அரக்கர்களுடைய சுற்றத்தோர் அனைவரையும் கொல்வேனோ?
பண்போடு இயன்ற ஏயந்தது பகர்தி என்றான் – பண்போடு ஏற்றுப்
பொருத்த மானதைக் கூறுவாயாக என்றான் இராமன்.
——————–
8240. ‘வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே
நேர் வந்து
இரங்கிடத் தக்கது உண்டேல், இகழ்கிலென்; இல்லை
என்னின்
உரம் கெடுத்து, உலகம் மூன்றும், ஒருவன் ஓர் அம்பின்
சுட்ட
புரங்களின் தீய்த்து, காண்பென் பொடி, ஒரு கடிகைப்
போழ்தின்.–239-
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் – இந்திர
சித்தனுக்கு வரத்தைக் கொடுத்து இத்தகைய நாகக் கணையையும்
கொடுத்தவனாகிய (சிவன்); தானே நேர் வந்து – தானே நேரில் வந்து;
இரங்கிடத் தக்கது உண்டேல் – மனம் இரங்கி அருள் செய்வது
உண்டானால்; இகழ்கிலென் – இகழாமல் விரும்பி ஏற்றுக்
கொள்ளுவேன்; இல்லை என்னின் – அவ்வாறு இல்லாமல் போனால்;
உலக மூன்றும் உரம் கெடுத்து – உலகம் மூன்றையும் வலிமை
கெடுத்து; ஒருவன் ஓர் அம்பின் சுட்ட புரங்களின் தீய்த்து –
சிவபிரான் ஒப்பற்ற ஓர் அம்பினால் சுட்டு அழித்த முப்புரங்களைப்
போல் தீய்த்து; ஒரு கடிகைப் போழ்தின் பொடி காண்பென் – ஒரு
நாழிகைப் பொழுதில் நீறாக்கிக் காண்பேன் (என்று இராமன்
கூறினான்)
————
8241. ‘எம்பியே இறக்கும் என்னில், எனக்கு இனி,
இலங்கை வேந்தன்
தம்பியே! புகழ்தான் என்னை? பழி என்னை?
அறம்தான் என்னை?
நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே,
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும், உதவி பார்த்தால்?’–240-
இலங்கை வேந்தன் தம்பியே – இலங்கை வேந்தனாகிய
இராவணனது தம்பியாக வீடணனே; எம்பியே இறக்கும் என்னில் –
எனது தம்பியாகிய இலக்குவனே இறந்து விடுவான் என்றால்;
புகழ்தான் என்னை – புகழுடைய (செயல் இது என்று எண்ண) என்ன
இருக்கிறது? பழி என்னை – பழி உடைய செயல் (என்று நாணப்பட)
என்ன இருக்கிறது; அறம் தான் என்னை – (இது) தருமத்தோடு
இயைந்தது (என்று எண்ணிப் பார்க்க என்ன உள்ளது); உதவி
பார்த்தால் – (இவர்கள் எனக்குச் செய்துள்ள) உதவியை (எண்ணிப்)
பார்த்தால்; உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் – தேவர்களும்
உலகத்தில் உள்ள உயிர்களும்; என்னை நம்பியே சேர்ந்த நண்பரின்
நல்ல ஆமே – என்னை நம்பிச் சேர்ந்து எனக்கு உதவிய) நண்பர்களைக் காட்டிலும்; (அவையெல்லாம்)
நல்லன (எனச் சொல்ல) ஆகுமோ? என்றபடி.
————-
8242. என்று கொண்டு இயம்பி, ‘ஈண்டு இங்கு ஒருவன்
ஓர் இடுக்கண் செய்ய,
வென்று, இவண் உலகை மாய்த்தல்விதி அன்றால்’ என்று
விம்மி,
நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து
அலக்கணுற்றான்,-
தன் துணைத் தம்பிதன்மேல், துணைவர்மேல்,
தாழ்ந்தஅன்பான்.–241-
தன் துணைத் தம்பி தன் மேல் – தனக்குத் துணைத் தம்பியாகிய
இலக்குவன் தன் மேலும்; துணைவர் மேல் தாழ்ந்த அன்பான் –
நண்பர்களின் மீதும் மிக்க அன்பு உடையவனாகிய இராமன்; ஈண்டு
இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – இப்பொழுது இங்கு ஒருவன்
ஒப்பற்ற துன்பத்தை (எனக்குச்) செய்ய (அதனைக் காரணமாகக்
கொண்டு); வென்று இவன் உலகை மாய்த்தல் விதி அன்றால் –
வென்று இந்த உலகத்தை அழித்தல் முறை அன்று; என்று கொண்டு
இயம்பி – என்று (மனத்தில்) கொண்டு (வாயால்) சொல்லி; என்று
விம்மி – (இது எவ்வாறு ஆகும்) என்று விம்மி; நின்று நின்று உன்னி
உன்னி – நின்று நின்று நினைத்து நினைத்து; நெடிது உயிர்த்து
அலக்கணுற்றான் – நீண்ட பெருமூச்சு விட்டுத் துன்பம் கொண்டான்.
———-
8243. மீட்டும் வந்து, இளைய வீரன் வெற்பு அன்ன
விசயத் தோளைப்
பூட்டுறு பாசம்தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி,
‘வீட்டியதுஎன்னின், பின்னை வீவென்’ என்று எண்ணும்-
வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானை
அன்னான்.-242-
வேதத் தோட்டியின் தொடக்கில் நிற்கும் – வேதமாகிய
அங்குசத்தின் கட்டுப்பாட்டில் நிற்கிற; துணைக் கைம்மால் யானை
அன்னான் – இரண்டு கைகளை உடைய மயக்கம் கொண்ட—
————
கலங்கி; இதுதீர – (இராமன் கொண்ட) இத்துயரம் நீங்குவதற்காக;
மெல்ல இருளூடு வந்து தெரிவான் – மெதுவாக இருட்டில் வந்து
தோன்றி விளங்கினான். (தொடர்ச்சி அடுத்த பாடலில்)
————-
8245. அசையாத சிந்தை அரவால் அனுங்க,
அழியாத உள்ளம் அழிவான்,-
இசையா இலங்கை அரசோடும் அண்ணல்
அருள் இன்மை கண்டு நயவான்,-
விசையால் அனுங்க வட மேரு, வையம்
ஒளியால் விளங்க, இமையாத்
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க,
நிறை கால் வழங்கு சிறையான்,—244-
அசையாத சிந்தை – (இராமனது) எதற்கும் கலங்காத மனம்;
அரவால் அனுங்க – (தம்பியையும் துணைவரையும் கட்டித்
துன்புறுத்துகிற) நாகக் கணையைக் கண்டு கலங்கியதால்; அழியாத
உள்ளம் அழிவான் – (அதைக் கண்டு தன்) வருந்தாத உள்ளம்
வருந்துபவனாயும்; இசையா இலங்கை அரசோடும் – (நல்வழியில்)
பொருந்தாத இலங்கை அரசனாகிய இராவணனோடு; அண்ணல் அருள்
இன்மை கண்டு நயவான் – (பிற உலக உயிர்கள் இடத்திலும்)
இராமனது அருள் இல்லாத தன்மையைக் கண்டு விரும்பாதவனாயும்;
வடமேரு விசையால் அனுங்க – தனது வேகத்தினால் வடக்கின் கண்
உள்ள மேரு மலை நிலைகுலையவும்; ஒளியால் வையம் விளங்க –
(தனது) மேனி ஒளியினால் உலகங்கள் எல்லாம் விளங்கித்
தோன்றவும்; இமையாத் திசை யானை – கண்ணிமைத்தல் இல்லாத
திசை யானைகள்; கண்கள் முகிழா ஒடுங்க – கண்களை
ஒடுங்கியிருக்கவும்; நிறைகால் வழங்கு சிறையான் – மிக்க காற்றை
வீசுகிற சிறகுகளை உடையவனாயும்; (தொடர்ச்சி அடுத்த பாடலில்)
————
8246. காதங்கள் கோடி கடை சென்று காணும்
நயனங்கள் வாரி கலுழ,
கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல்
திரு மேனி கண்டு, கிளர்வான்,-
சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம்
இருள் சிந்த, வந்த சிறையான்,
வேதங்கள் பாட; உலகங்கள் யாவும்
வினை சிந்த; நாகம் மெலிய:–245-
கேதங்கள் கூர – துன்பங்கள் மிக; அயர்கின்ற வள்ளல் –
மனச்சோர்வு அடைகின்ற வள்ளலாகிய இராமனது; திருமேனி கண்டு –
திருமேனியின் தன்மையைப் பார்த்து; கோடி காதங்கள் கடைசென்று
காணும் நயனங்கள் – கோடிக்காத தூர அளவு உள்ளவற்றைப்
பார்வையால் சென்று காணும் ஆற்றல் கொண்ட கண்களில் இருந்து;
கிளர்வான் – நாகக் கணையை ஒழிக்கும் ஊக்கம் மிக்கவனும்; சீதம்
கொள்வேலை அலைசிந்த – குளிர்ச்சி மிக்க கடல் அலைகளைச்
சிந்தவும்; ஞாலம் இருள் சிந்த – உலகங்களில் உள்ள இருள் சிதறி
விலகிப் போகவும்; வந்த சிறையான் – (இருசிறைகளையும்
அடித்துக்கொண்டு) வந்த சிறகுகளால்; வேதங்கள் பாட – வேத
மந்திரம் போல் ஒலி உண்டாகவும்; உலகங்கள் யாவும் வினை
சிந்த – உலகங்கள் எல்லாவற்றிலும் பாவங்கள் நீங்கவும்; நாகம்
மெலிய – பாம்புகள் தளர்ச்சி அடையவும் (தொடர்ச்சி அடுத்த
பாடலில்)
————
8247. அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி,
அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி, நிலவைத் திரட்டி,
விரிகின்ற சோதி மிளிர;
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி,
இடைநின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு
சுடரோனின் மும்மை சுடர;–246-
அகல் ஆசை எங்கும் – அகலமாகப் பரந்துள்ள திசைகளில்
எல்லாம்; அழியா வில்லைச் செலுத்தி – அழியாத ஒளியைப் பரப்பி;
அல்லைச் சுருட்டி – (அதனால் அங்கு உள்ள) இருளைச் சுருங்கச்
செய்து; வெயிலைப் பரப்பி – (சூரியனது) ஒளியைப் பரவும் படியாகச்
செய்து (தன் திருமேனியின் செந்நிற ஒளி விளங்கவும்); விரிகின்ற
சோதி – (தன் கருத்து வெண்மையில் இருந்து) விரிந்து வெளிப்படுகிற
ஒளி; நிலவைத் திரட்டி – நிலவு ஒளியை ஒன்றாக்கி; எல்லைக்
குயிற்றி – பகலைத் தோற்றுவித்து; மிளிர – விளங்கவும்; எரிகின்ற
மோலி – (தலையில்) ஒளி வெளிப்படுத்துகிற முடி; இடை நின்ற மேரு
எனும் – பூமிக்கு இடையில் உள்ள மேருமலை என்று
கூறப்படுகிற; அத்தொல்லைப் பொருப்பின் – அந்தப்
பழமையான மலையின்; மிசையே விளங்கு சுடரோனின் – மேலே
விளங்குகிற கதிரவனின் ஒளியைக் காட்டிலும்; மும்மை சுடர –
மும்மடங்கு மிகுந்து ஒளி வீச.
————-
8248. நான் பால் விளங்கு மணி கோடியோடு,
நளிர் போது, செம் பொன், முதலாத்
தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த
தழுவாது வந்து தழுவ;
மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின்
மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து,
வருகின்ற செய்கை தெரிய;–247-
நன்பால் விளங்கு – (தன்) அழகிய (கழுத்தின்) இடத்தில்
விளங்குகின்ற; கோடி மணியோடு – கோடிக்கணக்கான மணி பதித்த
மாலைகளோடு; நளிர் போது – குளிர்ச்சி பொருந்திய பூ மாலைகளும்;
செம்பொன் முதலாத் – சிவந்த பொன்னாலான மாலைகளும்
முதலானவையாக; தன்பால் இயைந்த – தன்னிடத்தில் பொருந்திய;
நிழல் கொண்டு அமைந்த – ஒளி கொண்டு பொருந்திய அணிகலன்கள்
எல்லாம்; தழுவாது வந்து தழுவ – (சிறகடித்து விரைவாகப் பறந்து
வருவதால் மார்பில்) படாதும் பட்டும் பொருந்தி இருக்கவும்; மின்பால்
இயன்றது ஒரு குன்றம் – மின்னலால் உண்டாக்கப்பட்ட ஒரு மலை;
வானின் மிளிர்கின்றது என்ன – வானத்தில் தோன்றி விளங்குகின்றது
என்று சொல்லும்படியாக; வெயிலோன் – கதிரவன்; தென்பால் எழுந்துதெற்குத் திசையில் உதித்து; வடபால்நிமிர்ந்து – வடக்கே நிமிர்ந்து
உயர்ந்து; வருகின்ற செய்கை தெரிய – வருகின்ற தன்மை விளங்கவும்
(தொடர்ச்சி அடுத்த பாடலில்)
————
8249. பல் நாகர் சென்னி மணி கோடி கோடி
பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு
மிளிர் பூண் வயங்க; வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க;
வன மாலை மார்பு புரள;
தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல்
திரு மேனி கண்டு, தொழுவான்,—248-
பல்நாகர் சென்னி கோடி கோடி மணி – பலவாய நாகங்களின்
தலையில் உள்ள கோடிக்கணக்கான மாணிக்கங்கள்; பல கொண்டு
செய்த வகையால் – பலவற்றைக் கொண்டு செய்துள்ள தன்மையால்;
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு – மின்னலினால்
செய்யப்பட்டுள்ளது என்று கூறும்படி விளங்குகின்ற; மிளிர் பூண்
வயங்க – ஒளி வெளியிடும் அணிகலன்கள் விளங்கவும்; வெயில்கால் –
(செவ்விய) ஒளியை வெளிப்படுத்துகிற; பொன்னால் இயன்ற –
பொன்னால் ஆகிய; நகை ஓடை பொங்க – பொலிவு உடைய
நெற்றிப்பட்டம் ஒளி வெளியிடவும்; வனமாலை மார்பு புரள –
(பல்வகை இலைகளால் தொடுக்கப்பட்ட) வனமாலை மார்பில்
அசையவும்; தொல் நாள் பிரிந்த துயர்தீர – நீண்டநாள் பிரிந்து
இருந்த துன்பம் நீங்கவும்; அண்ணல் – தலைவன் ஆகிய இராமனது;
திருமேனி கண்டு தொழுவான் – திருமேனியைக் கண்டு
தொழுபவனாயினன்.
—————-
8250. முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன்,
முகில்மேல் நிமிர்ந்து ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற
நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு
தொழ நின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து,
பல கால் நினைந்து, பணிவான்,- –249
முடி மேல் நிமிர்ந்து முகிழ் ஏறுகையன் – தலையின் மீது
உயர்ந்து குவிதல் பொருந்திய கைகளை உடையவனாய்; முகில் மேல்
நிமிர்ந்த ஒளியான் – கருமேகத்தினும் மிக்க நீல நிறம் உடைய
(இராமனது); அடிமேல் விழுந்து பணியாமல் – திருவடிகளில்
விழுந்து (வெகுநாட்களாக) விழுந்து வணங்காமல்; நின்ற நிலை
உன்னி உன்னி அழிவான் – (அந்த இராமன் துன்ப வடிவமாய்)
நின்ற நிலையை எண்ணி எண்ணி வருந்துபவனாய்; கொடி மேல்
இருந்து – (அவ்வவதார மூலத்தின்) கொடியின் மீது இருந்து;
இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற – இந்தப் பதினான்கு
உலகங்களும் தன்னை வணங்கும் படி நின்ற; கோளும்
இலனாய் – பெருமையும் இல்லாதவனாய்; படி மேல்
எழுந்து வருவான் – பூமியின் மேல் எழுந்து வருபவனாகிய
கருடன்; விரைந்து – வேகமாக (இராமன் இருக்கும் இடம்) வந்து;
நினைந்து – (அவனது திருக்கல்யாண குணங்களை) நினைத்து;
பலகால் பணிவான் – பலமுறை வணங்கி (அடுத்த பாடலில் முடியும்.)
————
கருடன் துதி
8251. ‘வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும்,
மலர்மேல் அயன்தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து
விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து
துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்! வருந்தல்; உடையாய்! வருந்தல்’
என, இன்னி பன்னி மொழிவான்:–250-
மறைந்து வந்தாய் – (நீ நின் திவ்யமங்கள சொரூபத்தை)
மறைத்துக்கொண்டு; (சங்கற்ப மாத்திரையாய் மானிடச் சட்டை தாங்கி)
வந்தாய்; பிரிவால் வருந்து – உன் பிரிவினால் வருந்துகிற; மலர் மேல்
அயன் தன் முதலோர் தம் – மலரின் மேல் தாங்கி உள்ள அயன்
முதலியோருக்குக் காரணன் ஆன; தாதை தாதை – பிதா மகனே;
இறைவா – எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய்த் தங்கி
உள்ளவனே; பிறந்து விளையாடுகின்ற தனியோய் – (வினை வயத்தால்
அன்றிச் சங்கல்பத்தால்) பிறந்து (மனித உருவத்துக்கு ஏற்ப நடித்து
விளையாடுகின்ற ஒப்பற்ற தலைவனை! சிந்தா குலங்கள் களைவாய் – சரணாகதி அடைந்தவர்களின் மனத்
துன்பங்களைப் போக்குபவனே; தளர்ந்து துயர் கூரல் என்ன
செயலோ – நீயே மனம் தளர்ந்து துன்பம் மிகப்படுதல் என்ன
செயலோ? எந்தாய் வருந்தல் – எனது தலைவனே வருந்தாதே;
உடையாய் வருந்தல் – எப்பொருளையும் சரீரமாக உடையவனே
வருந்தாதே; என இன்ன – என்று இத்தன்மையான சொற்கள் பலவற்றை;
பன்னி மொழிவான் – திரும்பத் திரும்பக் கூறுபவனாயினான்,
கருடன் உண்மையை இராமனுக்குத் தெரிவித்துத் தேற்றுவது போல்
பாடல்கள் அமைந்துள்ள தன்மையை உணர்ந்து கொள்க. இறைவன்
மானிட உருத்தாங்கி வந்து மானுட இன்பதுன்பங்களை அனுபவித்து
மானிட வெற்றியின் கொடுமுடியாய் உயர்வதை விளக்க வந்த கம்பர்
இவ்வாறு தானே பாடமுடியும்.
————
8252. ‘தேவாதிதேவர் பலராலும் முந்து
திருநாமம் ஓது செயலோய்
மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும்
அரசாளும் மேன்மை முதல்வா!
மேவாத இன்பம் அவை மேவி, மேவ
நெடு வீடு காட்டு அம் முடியாய்!
ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–251-
தேவாதி தேவர் – தேவர், பிரமன், உருத்திரன் முதலிய தலைமைத்
தேவர்கள் போன்ற பலரும்; முந்து – ஒருவரை ஒருவர்
முந்திக்கொண்டு; திருநாமம் ஓது செயலோய் – நின் திருநாமத்தைச்
சொல்லித் துதிக்கும் படியாக உள்ளவனே! மூவாது – மூப்படையாது;
(இளமையுடன் இருந்து) எந்நாளும் – எப்பொழுதும்; உலகு ஏழொடு
ஏழும் – பதினான்கு உலகங்களையும்; அரசாளும் மேன்மை முதல்வா
– (பாதுகாத்து) அரசு செலுத்துகிற மேன்மை பொருந்திய தலைவனே;
மேவாத இன்பம் அவை மேவி – (உன்னைச் சரண் புக்கவர்கள்)
பிறரால் அடையமுடியாத பேரின்பங்களை அடைந்து; மேவ நெடு வீடு
காட்டு அம் முடியாய் – (இறுதியில்) (உன்னை) அடைய முக்தி
உலகத்தைக் காட்டும் (அழகிய முதல் தலைவனாய்); ஆவாய் –
ஆனவனே; வருந்தி அழிவாய் கொல் – (இத்தகைய நீ) வருத்தம் கொண்டு அழிவாய் போலும் இவ் அதிரேக மாயை – இந்த
(உன்னுடைய) மிகுதியான மாயச்செயலை; அறிவார் யார் –
அறியத்தக்கவர் யார்?
———–
8253. ‘எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு
இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை;
அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை
உருவாய் மறைந்து, துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–252-
எவர்க்கும் – எல்லா உலகங்களுக்கும்; முதல் ஆகி – படைக்கும்
முதல் காரணனாகியும்; ஈறொடு – அழிக்கும் காரணன் ஆகியும்; இடை
ஆகி – காக்கும் காரணன் ஆகியும்; எழுவாய் – (சங்கர்ஷண
பிரத்தியும்ன, அநிருத்தர்களாய்த்) திருப்பாற்கடலில் தோன்றுவாய்;
எங்கும் உளையாய் – எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய்
வியாபித்து நின்று; வழுவாது – தவறாமல்; எவர்க்கும் – உபாசிக்கும்
எல்லோருக்கும்; வரம் ஈயவல்லை – (வேண்டிய) வரங்களைக்
கொடுக்கும் வல்லமை உடையவனே; உணர்ச்சி தொடராத தன்மை
உருவாய் மறைந்து – இத்தகு (ஆற்றலை உடைய நீ) முற்றுணர்வு
உண்டாகாத தன்மை உடைய மனித உருவில் மறைந்து நின்று;
தொழுவாய் – (உன்னைத் தொழும் தேவர்களைத்) தொழுது நிற்பாய்;
அவரால் வரங்கள் பெறுவாய் – அத்தேவர்களால் (வேண்டிய)
வரங்களைப் பெற்று நிற்பாய்; துயரால் அழுவாய் – துன்பத்தால்
(வருந்தி) அழுவாய்; ஒருத்தன் உளை போலும் – (இத்தகைய
வியத்தகு நிலை உடைய) நீ ஒருவன் இருக்கின்றாய் போலும்; இவ்
அதிரேக மாயை – இந்த (உன்னுடைய) மிகுதியான மாயச்
செய்கையை; அறிவார் யார் – அறிபவர் யாவர்.
———–
8254. ‘உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி;
ஒருவர்க்கும் உண்மை உரையாய்;
முன் ஒக்க நிற்றி; உலகு ஒக்க ஒத்தி;
முடிவு ஒக்கின், என்றும் முடியாய்;
“என் ஒக்கும், இன்ன செயலோ இது?” என்னில்,
இருள் ஒக்கும் என்று விடியாய்;
அந் நொப்பமேகொல்? பிறிதேகொல்?-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–253-
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி – (காத்தல் தொழிலைச்
செய்யும்) உன்னுடன் ஒருங்கு வைத்துப் பேசப்படுகிற (அழித்தல்
படைத்தல் என்ற தொழில்களைச் செய்கிற உருத்திரன் பிரமன்)
ஆகிய இருமூர்த்திகளுடன் ஒத்து (அரி அரன் அயன் என
மூவராய்ப்) பொருந்தி உள்ளாய்; ஒருவர்க்கும் உண்மை உரையாய் –
(ஆனால் அவர்கள் ஒருவருக்கும்) உன் உண்மைத் தன்மையை
உரைக்கின்றாயல்லை; முன் ஒக்க நிற்றி – (அவர்களில் நீயே) முதல்
மூர்த்தியாய் நிற்கிறாய்; உலகு ஒக்க ஒத்தி – உலகில் உள்ள
அனைத்துப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் ஒத்து நிற்கின்றாய்;
முடிவு ஒக்கின் – (இப்பிரபஞ்சத்தை அழிக்க நீ திருவுள்ளம்
கொண்டால் அவற்றிற்கு) அவ்வழிவு சங்கற்ப மாத்திரையானே
பொருந்தும்; என்றும் முடியாய் – (நீ) எப்பொழுதும் அழியாமல்
இருப்பாய்; இன்ன செயலோ இது என் ஒக்கும் என்னின் – (உனது)
இத்தன்மையான இச்செயலாகிய இது எத்தன்மைத்து என்று ஒருவர்
எண்ணிப் பார்த்தால்; இருள் ஒக்கும் என்று விடியாய் -(அவ்வாறு எண்ணுபவர் மனம்) இருள் உடையது என்று
(அவர்களுக்கு) விளக்கம் தராமல் நிற்பாய்; அந்நொப்பமே கொல் –
(இவ்வாறு உன் செய்கை அறியப்படாமல் இருப்பதற்குக் காரணம்)
அந்தப் புத்தியின் சிறுமையோ? பிறிதே கொல் – (அல்லது) வேறு
ஏதாகிலும் உளதோ? இவ் அதிரேக மாயை – இந்த மிக்க மாயச்
செயலை; அறிவார் ஆர் – அறிபவர் யாவர்?
———-
8255. ‘வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி
வழுவாமல் நிற்றி;-மறையோய்!
பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று;
பெறுவான் அருத்தி பிழையாய்;
ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி;
உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,
ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–254-
மறையோய் – வேத வடிவானவனே; வாணாள் அளித்தி – உலகில்
உள்ள உயிர்களுக்கு எல்லாம் (வினைக்குத்தக) வாழும் நாளைக்
கொடுக்கின்றாய்; முடியாமல் – எக்காலத்திலும் அழியாமல்; நீதி
வழுவாமல் நிற்றி – அறநெறி தவறாமல் நிற்கிறாய்; உனக்கு ஒரு
பொருள் வேண்டும் என்று பேணாய் – (குறைவிலா நிறைவாக நீ
இருப்பதால்) உனக்கு (வேறு ஒரு) பொருள் வேண்டும் என்று (நீ)
விரும்புவதில்லை; பெறுவான் அருத்தி பிழையாய் – (உன்னடியார்)
பெறுவதற்கு விரும்பும் பொருள்களைத் தவறாமல் கொடுப்பாய்; ஊண்
ஆய் – நுகர் பொருளாகவும்; உயிர்க்கு உயிர் ஆகி – உயிருக்கு
உயிராகவும்; உணர்வு ஆய – ஐம்புல உணர்வுகளுக்கும் அரிய ஆய;
பெண்ணின் உரு ஆய் – பெண்ணின் உருவாகியும்; ஆண் ஆகி –
ஆணின் வடிவம் ஆகியும்; மற்றும் – அவையல்லாமல்; அலி ஆதி –
அலியின் வடிவமாகியும்; நிற்றி – நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை –
இந்த மிக்க மாயச் செயலை; அறிவார் யார் – அறிபவர் யாவர்?
————-
8256. ‘”தான் அந்தம் இல்லை; பல” என்னும், ஒன்று;
“தனி” என்னும், ஒன்று; “தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர்” என்னும், ஒன்று;
“நயனம் தொடர்ந்த ஒளியால்,
வானம் தொடர்ந்த பதம்” என்னும், ஒன்று; மறை
நாலும் அந்தம் அறியாது,
“ஆனந்தம்” என்னும்; “அயல்” என்னும்!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–255-
மறைநாலும் – வேதங்கள் நான்கும்; அந்தம் அறியாது – உண்மை
முடிவு தெரியாத காரணத்தால்; ஒன்று – (அவற்றில்) ஒரு மறை; தான்
அந்தம் இல்லை பல என்னும் – உன் சொரூபம் எல்லையில்லாத பல
படித்தானது என்று கூறும்; ஒன்று – பிறிதொரு மறை; தனி என்னும் –
ஒரே மூர்த்தம் என்று கூறும்; ஒன்று – பிறிதொரு மறை; தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் – நீங்காத ஞானம் பொருந்திய
ஒளி என்று கூறும்; ஒன்று – மற்றொரு மறை; நயனம் தொடர்ந்த
ஒளியால் வானம் தொடர்ந்த பதம் என்னும் – புறக்கண்ணால் காணக்
கூடிய ஒளி வடிவாகி ஆகாயத்தை இடமாகக் கொண்டு பொருந்தி
உள்ளது என்று கூறும்; மறை நாலும் – இவ்வாறு வேதங்கள்
நான்கும்; அந்தம் அறியாது – உண்மைத் தன்மையை அறிய
முடியாமல்; ஆனந்தம் என்னும் – பேரானந்த மயமானது என்னும்;
அயல் என்னும் – வாக்கு காயங்களுக்குக் கோசரமாகாதது என்றும்
கூறித் தடுமாறும் ஆகவே; இவ் அதிரேகமாயை – இந்த மிக்கமாயச்
செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.
————
8257. ‘மீளாத வேதம், முடிவின்கண், நின்னை
மெய்யாக மெய்யின் நினையும்;
“கேளாத” என்று “பிற” என்று, சொன்ன
கெடுவார்கள் சொன்ன கடவான்,
மாளாத நீதி இகழாமை நின்கண்
அபிமானம் இல்லை, வறியோர்;
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–256-
மீளாத வேதம் – (மெய்யில் இருந்து விலகி) மீளுதல் இல்லாத
வேதங்களின்; முடிவின் கண் – முடிபொருளாய் உள்ள (வேத
சிகையாய் விளங்கும்) உபநிடதங்கள்; நின்னை – உன்னை (பற்றிக்
கூறும் இடத்து); மெய்யாக – உண்மைப் பொருளாகக் கொண்டு (உள்
பொருள் என்று); மெய்யின் நினையும் – உண்மை மெய்யுணர்வாகிய
பதிஞானத்தால் ஆய்ந்து கூறும்; கேளாத என்று – (அவ்வாறு
இருக்கும் போது) (நான் கடவுளைக் கண்ணால் கண்டுள்ளேன் என்று
ஒருவர் கூறும்கூற்றுக்) கேள்விப் படாத (கூற்று) என்றும்; பிற என்று
சொன்ன – எனவே இக்கூற்று வேறு காரணத்தால் கூறப்பட்டது
(கடவுள் உண்மையில் இல்லை) என்றும் கூறுகிற கூற்று; கெடுவார்கள்
சொன்ன – அறிவில்லாத நாத்திகர்கள் சொன்னதாகும்; கடவார் –
தாங்கள் கூறிய கூற்றினைக் கடவாது அவர்கள்; மாளாத நீதி
இகழாமை நின்கண் அபிமானம் இல்லை – (ஒரு பொழுதும்)
பழுதுபடாத (சாத்திர) நீதி முறை பிறழாமலும், உன்னிடம் பக்தி
செலுத்தாமலும் கெட்டு அழிவார்கள்; வறியோர் ஆளாயும் வாழ்தி –
(ஆனால் நீயோ) பத்துடை அடியவர்க்கு எளிய ஏவல் ஆளாகவும்
வாழ்கிறாய்; அரசாள்தி – (அனைத்து உலகங்களையும்) அரசாளலும்
செய்கிறாய்; இவ் அதிரேக மாயை – இந்த மிகுதியான மாயச்
செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.–
பத்துடை அடியவர்க்கு
எளியனாய்ப் பிறர்க்கு அரிய வித்தகனாய் விளங்கும் தன்மையின்
விளக்கம் இங்குக் கூறப்படுகிறது.
———–
8258. ‘சொல் ஒன்று உரைத்தி; பொருள் ஆதி; தூய
மறையும் துறந்து, திரிவாய்;
வில் ஒன்று எடுத்தி; சரம் ஒன்று எடுத்தி;
மிளிர் சங்கம் அங்கை உடையாய்;
“கொல்” என்று உரைத்தி; கொலையுண்டு நிற்றி;
கொடியாய்! உன் மாயை அறியேன்;
அல் என்று, நிற்றி; பகல் ஆதி!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–257-
ஒன்று சொல் உரைத்தி – ஒப்பற்ற நாதவடிவினன் என்று
சொல்லப்படுகிறாய்; பொருள் ஆதி – சொற்களின் பொருளும்
ஆகிறாய்; தூய மறையும் துறந்து திரிவாய் – தூய்மையான
வேதங்களையும் கடந்து விளங்குகிறாய்; வில் ஒன்று எடுத்தி சரம்
ஒன்று எடுத்தி – (அறம் தலை நிறுத்துதற்காகக் கையில்) வில் ஒன்றை
ஏந்தியுள்ளாய்; (அதில் வைத்துத் தொடுப்பதற்காக) ஒப்பற்ற
அம்புகளையும் கைக்கொண்டு இருக்கிறாய்; அங்கை மிளிர் சங்கம்
உடையாய் – அழகிய கைகளில் ஒளி பொருந்திய (பாஞ்ச சன்னியம்
என்ற) சங்கினைக் கையில் ஏந்தியுள்ளாய்; கொல் என்று உரைத்தி –
(தீயவர்க்குப் பகைவனாய் இருந்து) கொல்லுக என்று சொல்லுகிறாய்;
கொலையுண்டு நிற்றி – (நீயே பகைவராய் இருந்து) கொல்லப்பட்டுக்
கிடக்கிறாய்; கொடியாய் – (இவ்வாறு) முரண் பல கொண்டவனே;
உன்மாயை அறியேன் – உனது மாயச் செயல்களை எவ்வகையிலும்
என்னால் அறியமுடியவில்லை; அல் என்று நிற்றி – (நீ) இரவு என்று
கூறும்படியும் நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை – இந்த மிக்க
மாயச்செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.
———-
8259. ‘மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி;
மயல், ஆகும் யானும் அறியேம்;
துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி;
ஒரு தன்மை சொல்ல அரியாய்;
பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி,
பிறவாமல் நல்கு பெரியோய்!
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–258-
பிறவாமல் நல்கு பெரியோய் – (பத்துடை அடியவர்கள்) மற்றீண்டு
வாராப் பிறவாத பெருநெறி தருகின்ற பெரியவனே! மறந்தாயும் ஒத்தி –
(நீ) (உன் உண்மைத் தன்மையை) மறந்தவன் போலவும் காட்சி
தருகிறாய்; மறவாயும் ஒத்தி – (அவதார நோக்கமாகிய பாவத்தை
அழிக்க எண்ணியிருப்பதால்) உன் உண்மை நிலையை மறவாதவன்
போலவும் இருக்கிறாய்; மயல் – (இத்தன்மையான உனது) மாயைச்
செயலை; ஆரும் – (உலகத்தவர்) யாவரும்; யானும் – நானும்;
அறியோம் – அறிய முடியாதவர்களாய் உள்ளோம்; துறந்தாயும் ஒத்தி
– (பற்றற்று இருத்தலால்) துறந்தவன் போலவும் இருக்கிறாய்; துறவாயும்
ஒத்தி – (தம்பி கட்டுண்டமை கண்டு வருந்தி அழுதலால்) துறவாதவன்
போலவும் இருக்கிறாய்; ஒரு தன்மை சொல்ல அறியாய் – (இவ்வாறு
இருத்தலினால்) ஒரு தன்மை உடையவன் என்று சொல்ல அரியவனாக
விளங்குகிறாய்; பிறந்தாயும் ஒத்தி – (தசரதன் மதலையாய்த் தாரணி
வந்ததால்) பிறந்தவன் போலவும் இருக்கிறாய்; பிறவாயும் ஒத்தி –
(வினை வசத்தால் பிறவாமையின்) பிறவாதவன் போலவும்
விளங்குகிறாய்; அறம் தான் நிறுத்தல் அரிது ஆக – அறத்தை
இவ்வுலகில் நிலை நிறுத்தல் அருமை ஆக இருப்பதால் (அதனை
நிலை நிறுத்த மானிடச் சட்டை தாங்கி வந்தவனே); இவ் அதிரேக
மாயை – இந்த மிகுதியான மாயச் செயலை; ஆர் அறிவார் – யார்
அறிவார்கள்.
————–
8260. ‘வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி;
அவை எய்தி, என்றும் விளையா,
நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி,
அறியாமை நிற்றி, மனமா;
முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி,
முழு மூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–259-
வினைவர்க்கம் முற்றும் – (உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய)
இருவினைகளின் தொகுதிகளுக்கு உரியபடி; உடனே படைத்தி –
(அந்த உயிர்களை உடனே தக்க) உடல் எடுக்கச் செய்து
படைக்கின்றாய்; அவை எய்தி – அந்த உடம்புகளை அடைந்து;
நினைவர்க்கு – (உன் திருவடியையே) நினைக்கும் பக்தர்களுக்கு;
என்றும் – எப்பொழுதும்; நெஞ்சின் உறுகாமம் முற்றி – (அவர்கள்)
மனத்தில் உள்ள (எவ்வகை) விருப்பத்தையும் நிறைவேற்றி;
அறியாமை நிற்றி – (அவர்கள்) அறியாமல் நிற்கின்றாய்; மனமா –
மனமாகவும் (மறைந்துள்ளாய்); முனைவர்க்கும் ஒத்தி –
முனிவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய்; அமரர்க்கும் ஒத்தி –
தேவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய்; முழுமூடர் என்னும் முதலோர்
அனைவர்க்கும் – முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறராகிய
அனைவருக்கும்; அறியாமை ஒத்தி – அறிய முடியாத தன்மையால்
ஒத்து விளங்குகிறாய்; இவ் அதிரேக மாயை – இந்த மிகுதியான மாயச்
செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.
———-
8261. ‘எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன
பொருள் கண்டு இரங்குபவரும்,
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை
தெரிகின்றது, உன்னது இடையே;
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி;
பிறியாது நிற்றி; பெரியோய்!
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?–260-
பெரியோய் – பெரியவனே; எறிந்தாரும் – (படைக்கலங்களை)
எறிபவர்களும்; ஏறு படுவாரும் – (அந்தப் படைக்கலங்களால்) காயம்
படுபவர்களும்; இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் -இத்தகைய செயலைக் கண்டு இரங்குபவர்களும்; செறிந்தாரின் –
(இங்கு இவ்வுலகில்) நெருங்கி (இருந்து) வாழ்பவர்கள் இடத்திலும்;
உண்மை எனல் ஆயதன்மை – (நீ) ஒருங்கு கலந்திருப்பது உண்மை
என்ற செய்தி; உன்னது இடையே தெரிகின்றது – உன்னிடத்தில்
தெரிகின்றது; பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி – அறிவில்
இருந்து பிரிந்தவர்கள் நீக்கியுள்ள ஞானமாகிய பொருளுடன் நீயும்
(அவர்களிடம் இருந்து) பிரிந்து போகின்றாய்; பிறியாது நிற்றி –
அவ்வாறு பிரிந்து இருந்தாலும் கூட அவர்கள் இடத்திலும்
அந்தர்யாமியாகப் பிரியாமல் நிற்கிறாய்; அறிந்தார் அறிந்த பொருள்
ஆதி – தத்துவ ஞானமுடையவர்கள் (உண்மை உணர்வால்) ஆய்ந்து
அறிந்த மெய்ப்பொருளாகவும் விளங்குகிறாய்; இவ் அதிரேகமாயை –
இந்த மிகுதியான மாயையை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.
——
8262. ‘பேர் ஆயிரங்கள் உடையாய்; பிறந்த
பொருள்தோறும் நிற்றி; பிரியாய்;
தீராய்; பிரிந்து திரிவாய்; திறம்தொறும்
அவை தோறும் என்று தெளியாய்;
கூர் ஆழி அம் கை உடையாய்; திரண்டு ஓர்
உரு ஆதி; கோடல் உரிபோல்,
ஆராயின், ஏதும் இலையாதி-ஆர், இவ்
அதிரேக மாயை அறிவார்?’–261-
பேர் ஆயிரங்கள் உடையாய் – ஆயிரம் திருப்பெயர்களை
உடையவனே; பிறந்த பொருள் தோறும் – தோன்றிய பொருள்கள்
இடத்தில் எல்லாம்; பிரியாய் நிற்றி – பிரியாமல் கலந்து நிற்கின்றாய்;
தீராய் – அழிவு அற்றவனே; பிரிந்து திரிவாய் – பல்வேறு
அவதாரங்களால் உன் உண்மை சொரூபத்தில் இருந்து பிரிந்து வந்து
திரிகின்றாய்; திறம் தொறு அவை தோறும் என்று தெளியாய் –
அந்த அவதாரங்களில் எல்லாம் அப்பொருள்கள் உன்னைத் தம்
இனம் என்று மயங்கி நிற்றல் அன்றி உன் உண்மை நிலையை அறியும் படி தெளியப்படாத நிலையில் உள்ளாய்;
அம்கை கூர் ஆழி உடையாய் – அழகிய கைகளில் கூர்மையான
சுதர்சனம் என்னும் சக்கரப் படையைக் கைக்கொண்டு உள்ளாய்;
திரண்டு ஓர் உரு ஆதி – அனைத்துப் பொருள்களும் திரண்டு ஓர்
உருவம் ஆகிறாய்; ஆராயின் – எண்ணிப் பார்த்தால்; கோடல்
உரிபோல் ஏதும் இலையாதி – வெண் காந்தள் கிழங்கை உரிப்பதைப்
போல ஒன்றும் இல்லாதவன் ஆகிறாய்; இவ் அதிரேகமாயை – இந்த
மிகுதியான மாயச்செயலை; ஆர் அறிவார் – யார் அறிவார்கள்.
————-
நாக பாசம் நீங்குதல்
8263. என்று, இன்ன பன்னி அழிவான், எறிந்த
எரி சோதி கீற, இருள் போய்,
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற
பொருள் கண்டு, நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி, ‘இவன் யாவன்?’
என்று நினைகின்ற எல்லை, நிமிரச்
சென்று, உன்னும்முன்னர், உடன் ஆயினான், இவ்
உலகு ஏழும் மூடு சிறையான்.–262-
என்று இன்ன பண்ணி – என்று இவ்வாறான சொற்களைப் பல
முறை கூறித் (துதித்து); அழிவான் – மனமழிபவனாகிய கருடன்;
எறிந்த எரி சோதிகீற – (வந்ததனால்) வீசிய உடம்பின் ஒளி
கிழித்ததனால்; இருள்போய் – இருட்டு நீங்கி; பொன் துன்னி அன்ன
– பொன்னின் ஒளி நெருங்கியது போல; ஒளி வீசுகின்ற பொருள்
கண்டு – (எங்கும் சிவந்த) ஒளி பரவி வீசுகின்ற தன்மையைக் கண்டு;
நின்ற புகழோன் – (மாறாது நிலை பெற்று) நிற்கும் புகழுக்கு உரியவன்
ஆகிய இராமன்; நின்று உன்னி உன்னி – (அதைப் பார்த்துக்கொண்டு)
நின்று எண்ணி எண்ணி; இவன் யாவன் என்று நினைக்கின்ற எல்லை
– இவன் யார்? என்று நினைத்து நிற்கின்ற பொழுது; இவ் உலகு
ஏழும் மூடு சிறையான் – இந்த உலகங்கள் ஏழினையும் மூடும் படியாக
மிக விரித்த சிறகுகளை உடைய அந்தக் கருடன்; நிமிரச் சென்று – நேராகச்
சென்று; உன்னும் முன்னம் உடன் ஆயினான் – நினைப்பதற்கு
முன்பே இராமனிடம் சென்று சேர்ந்தான்.
————
8264. வாசம் கலந்த மரை நாள நூலின்
வகை என்பது என்னை?-மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல்
சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல்
அறிவாளர், என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற-
பதகன் துரந்த உரகம்.–263-
பதகன் துரந்த உரகம் – பாதகனாகிய இந்திரசித்தன் (இலக்குவன்
மீது வானரப் படைமீதும்) செலுத்திய பாம்புக்கணை; மழை என்று
ஆசங்கை கொண்ட – மேகங்கள் என்று ஐயம் கொள்ளுவதற்கு
இடமாக உரிய; கொடை மீளி அண்ணல் – கொடை கொடுப்பதில்
வலிமை மிக்க பெரியோன் ஆகிய; சரராமன் – சடையப்ப வள்ளலுக்கு
உரிய; வெண்ணை அணுகும் – திருநெல்வெண்ணெய் எனும் ஊரை
நெருங்கிச் சேர்ந்த; தேசம் கலந்த மறை வாணர் – தேசஸ் ஆகிய
ஒளி பொருந்திய அந்தணர்களும்; செஞ்சொல் அறிவாளர் – செவ்விய
கூரிய சீரிய செஞ்சொல் புலவர்களும்; என்று இம்முதலோர் – என்று
இவர்களை முதலாகக் கொண்ட சுற்றத்தார்கள்; பாசம் கலந்த பசி
போல் – அடைந்துள்ள பசிபோல்; அகன்ற – இருந்த இடம் தெரியாது
மறைந்து விட்டது; (அவ்வாறு துண்டுபட்டு அழிந்து மறைந்த
நாகங்களை) வாசம் கலந்தமரை – மணம் பொருந்திய தாமரை
மலரினது; நாள நூலின் வகை – தண்டின் உள்ளே உள்ள மெல்லிய
நூலின் தன்மையை அடைந்து விட்டது; என்பது என்னை – என்று
சொல்லுவது என்ன சிறப்பு உள்ளது.
———–
8265. பல்லாயிரத்தின் முடியாத பக்கம்
அவை வீச, வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள்ஆதல் செல்ல,
உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி
அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த
வடு ஆன, மேனி வடுவும்.–264-
பல்லாயிரத்தின் முடியாத – பல ஆயிரக்கணக்கிலும் அடங்கி
முடியாத; பக்கம் அவை வீச – இறகுகளை உடைய இரண்டு
சிறகுகளும் அடித்துக் கொள்வதால்; வந்து படர் கால் – வந்து
பரவுகின்ற காற்றானது; செல்லா நிலத்தின் – (நாகக் கணையால்
கட்டுண்டு விழுந்து கிடப்பவர்களின் பெரும் குவியலால்) செல்ல
முடியாமல் உள்ள நிலத்தில் நெருங்கி உள்ள; இருள் ஆதல் செல்ல –
இருட்டு நீங்கிப் போகும்படி வீசுதலினால்; உடல் நின்ற வாளி
சிதறுற்று – (இலக்குவன் முதலிய வானர வீரர்களுடைய) உடலில்
குத்தி நின்ற அம்புகள் சிதறிப் போயின; மேனி வடுவும் –
(அவர்களின் உடலங்களில் ஏற்பட்ட பழியாகப் பொருந்திய உடல்
தழும்புகளும்); எல்லா விதத்தும் – எல்லா வகையிலும்; உணர்வோடு
நண்ணி – அறிவோடு பொருந்தி; அறனே இழைக்கும் உரவோன் –
அறத்தையே செய்யும் மன வலிமை மிக்க; வல்லான் – வல்லமை
உடைய; ஒருத்தன் இடையே படுத்த – ஒரு ஞானியின் பால் இடையில்
தோன்றிய; வடுவான – பாவத்தைப் போல் நீங்கின.
———-
அனைவரும் உயிர் பெற்று எழுதல்
8266. தருமத்தின் ஒன்று ஒழுகாத செய்கை
தழுவிப் புணர்ந்த தகையால்,
உரும் ஒத்த வெங் கண், வினை தீய, வஞ்சர்
உடல் உய்ந்தது இல்லை; உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம்,
மலர்மேல் அவ் வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன, உயிரோடு எழுந்து
நிலை நின்ற, தெய்வ நெறியால்.–265-
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை – அறவழியில்
எப்பொழுதும் சிறிதுகூட நடக்காத தன்மை; தழுவிப் புணர்ந்த
தகையால் – பொருந்தி உள்ள காரணத்தினால்; உரும் ஒத்த வெங்கண்
– இடியைப் போன்ற கொடிய கண்களையும்; வினை –
வஞ்சனையையும்; தீய – தீய செயல்களையும் கொண்ட; வஞ்சர் உடல்
உய்ந்தது இல்லை – வஞ்சகர்களாகிய (அரக்கர்களின்) உடம்புகள்
உயிர் பெற்று எழவில்லை; மலர் மேல் அவ்வள்ளல் – தாமரை
மலரின் மேல் தங்கியுள்ள அந்தப் பிரமதேவன்; கடை நாள் நிருமித்த
என்னை – ஊழி முடிவான பிற்காலத்தில் படைத்த (உயிர்களைப்)
போல; உலகின் கருமத்தின் நின்ற – உலகத்தில் (பாவத்தைப் போக்கி
அறத்தைத் தலை நிறுத்தும்) காரியத்தில் ஈடுபட்டு நின்ற; கவிசேனை
வெள்ளம் – வானரப்படை வெள்ளங்கள்; தெய்வ நெறியால் –
இறைவனின் சங்கற்பத்தால்; உயிரோடு எழுந்து நிலை நின்ற – உயிர்
பெற்று எழுந்து ஊக்கத்தோடு களத்தில் நிலையாக நின்றன.
————
இராமன் மகிழ்தல்
8267. இளையான் எழுந்து தொழுவானை, அன்பின்
இணை ஆர மார்பின் அணையா,
‘விளையாத துன்பம் விளைவித்த தெய்வம்
வெளி வந்தது’ என்ன வியவா,
கிளையார்கள் அன்ன துணையோரை, ஆவி
கெழுவா, எழுந்து தழுவா,
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து,
முறை நின்ற வீரன் மொழிவான்;–266-
முறை நின்ற வீரன் – அறமுறையில் நின்ற வீரனாகிய இராமன்;
எழுந்து இளையான் தொழுவானை – மயக்கம் நீங்கி எழுந்து
வணங்குபவனான இளையவனாகிய இலக்குவனை; அன்பின் – அன்பு
மிகுதியால்; இணை ஆர மார்பின் அணையா – இணைந்த மாலைகள்
பொருந்தி உள்ள மார்பில் இறுகத் தழுவி; விளையாத துன்பம்
விளைவித்த தெய்வம் – வரக்கூடாத பெருந் துன்பத்தை உண்டாக்கிய
தெய்வம்; வெளி வந்தது என்ன – கருடன் வடிவில் வெளி வந்தது
என்று கூறி; வியவா – வியந்து; கிளையார்கள் அன்ன – உறவினர்கள்
போன்ற; துணையோரை – துணைவர்களாகிய வானர வீரர்களை; ஆவி
கெழுவா எழுந்து தழுவா – உயிர் ஒன்றாகுமாறு நெருக்கமாக எழுந்து
தழுவி; முளையாத திங்கள் உகிரான் முன்வந்து – பிறைச் சந்திரன்
போன்ற நகங்களை உடைய கருடனுக்கு முன்னால் வந்து; மொழிவான்
– (இவற்றைக்) கூறினான்.
————-
இராமன் கருடனிடம் பேசுதல்
8268. ‘ஐய! நீ யாரை? எங்கள் அருந் தவப் பயத்தின் வந்து,
இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை; எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை; மீட்சி
செய் திறம் இலையால்’ என்றான்-தேவர்க்கும் தெரிக்க
ஒணாதான்.–267-
தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – தேவர்களும் கூட(த் தன்
சொரூபத்தை) அறிய முடியாது உள்ளவனாகிய இராமன்; ஐய –
(கருடனைப் பார்த்து) ஐயா; நீ யாரை – நீ யார்; எங்கள் அருந்தவப்
பயத்தின் – நாங்கள் செய்த மிக்க தவத்தின் பயனால்; இங்கு வந்து
எய்தினை – இங்கு வந்து அடைந்தாய்; உயிரும் வாழ்வும் ஈந்தனை –
(நாகக் கணையால் இறந்தவர்களுக்கு) உயிரையும் வாழ்வையும்
தந்தாய்; எம்மனோரால் – எங்களைப் போன்றவர்களால்; கையுறை
கோடற்கு ஒத்த காட்சியை அல்லை – காணிக்கைப் பொருள் கொள்ளுவதற்கு உரிய தோற்றம் உடையவனாயும் இல்லை; மீட்சி
செய்திறம் இலையால் என்றான் – (எனவே நீ செய்த உதவிக்குக்)
கைம்மாறு செய்ய வழி இல்லை என்றான்.
—————
8269. ‘பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ,
புந்தித்
தெருளினை உடையர் ஆயின்? செயல் அருங் கருணைச்
செல்வ!
மருளினில் வரவே, வந்த வாழ்க்கை ஈது ஆகின், வாயால்
அருளினைஎன்னின், எய்த அரியன உளவோ?-ஐய!–268-
ஐய! – ஐயனே; செயல் அருங் கருணைச் செல்வ – செய்தற்கு
அரிய அருட் செயல் செயத் செல்வனே! மருளினின் வரவே வந்த
வாழ்க்கை ஈது ஆகின் – மயங்கி வருந்தவதற்கு இடமாக வந்ததே
இந்த வாழ்க்கை என்றால்; வாயால் அருளினை என்னின் – (நீ)
வாயினால் அருள்கொண்டு வரம் தருவாய் என்றால்; எய்த அரியன
உளவோ – (எங்களால்) எய்த முடியாத அரியபேறுகள் எவையேனும்
உள்ளதா? புந்தித் தெருளினை உடையர் ஆயின் – அறிவுத் தெளிவு
உடையவர்களாய் இருந்தால்; பொருளினை உணர வேறு புறத்தும்
ஒன்று உண்டோ? – (நீ செய்த இந்த உதவியின்) பொருளினை
உணர்ந்து கொள்ள வேறு பொருள் புறத்தில் ஒன்றும் இல்லை. (நீ
செய்த உதவிக்குக் கைம்மாறாகக் கொடுக்கப் புறத்தில் எப்பொருளும்
இல்லை என்றபடி)
———-
8270. ‘கண்டிலை, முன்பு; சொல்லக் கேட்டிலை; கடன்
ஒன்று எம்பால்
கொண்டிலை; கொடுப்பது அல்லால், குறை இலை; இது
நின் கொள்கை;
“உண்டு, இலை” என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே!
பண்டு இலை நண்பு; நாங்கள் செய்வது என்? பகர்தி!’
என்றான்.–269-
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே –
உண்டோ இல்லையோ என்று ஐயங் கொள்ளும்படியாக நின்றிருந்த
இலக்குவன் உயிரை (மீட்டும்) தந்த உதவியோனே!பண்டு நண்பு இலை – (உனக்கும் எங்களுக்கும்) முன்பு (எந்த
விதமான) நட்பும் இல்லை; முன்பு கண்டிலை – முன்னால் (நீ
எங்களைக்) கண்டதுமில்லை; சொல்லக் கேட்டிலை – (எங்களைப் பற்றி
மற்றவர்) சொல்லக் கேட்டதும் இல்லை; எம்பால் – எங்களிடம்; கடன்
ஒன்று கொண்டிலை – கடனாக எந்த ஒன்றையும் பெற்றுக்
கொண்டதும் இல்லை; கொடுப்பது அல்லால் – எங்களுக்குச்
கொடுப்பது அல்லாமல்; குறை இலை – இதுவே உனது கோட்பாடாக
இருக்கிறது; நாங்கள் செய்வது என் பகர்தி – நாங்கள் (உனக்குச்)
செய்யும் கைம்மாறு என்ன சொல்; என்றான் – என்று (இராமன்)
கேட்டான்.
———–
கருடன் மறுமொழி கூறி விடை பெறல்
8271. பறவையின் குலங்கள் காக்கும் பாவகன், ‘பழைய நின்னோடு
உறவு உள தன்மைஎல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு
அம்
மற வினை முடித்த பின்னர், வருவென்’ என்று உணர்த்தி,
‘மாயப்
பிறவியின் பகைஞ! நல்கு, விடை’ எனப் பெயர்ந்து
போனான்.–270-
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் – பறவைக்
கூட்டங்களைப் பாதுகாக்கின்ற தூயவனாகிய கருடன்; மாயப் பிறவியின்
பகைஞ – (இராமனைப் பார்த்து) மாயப்பிறப்பறுக்கும் பிறவியின்
பகைவனே; நின்னோடு பழைய உறவு உள தன்மை எல்லாம் –
உன்னோடு (எனக்குப்) பழைய உறவு உள்ள தன்மைகளை எல்லாம்;
அரக்கனோடு – அரக்கனாகிய இராவணனோடு; அம்மறவினை முடித்த பின்னர் வருவென்
உணர்த்துவென் – அந்தப் போர்த்தொழிலை (நீ) முடித்த பின்பு வந்து
உணர்த்துவேன்; என்று உணர்த்தி – என்று கூறி; நல்கு விடை –
இப்போது நீ எனக்கு விடை கொடு; எனப் பெயர்ந்து போனான் –
என்று திரும்பிப் போனான்.
——-
இராமன் புகழ்ச்சியும் அனுமன் பேரொலியும்
8272. ஆரியன் அவனை நோக்கி, ‘ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை ஊதியம் பிடித்தும்” என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்?
என்றான்.–271-
ஆரியன் – இராமன்; அவனை நோக்கி – அந்தக் கருடனைப்
பார்த்து; ஆர் உயிர் உதவி – (நாகக் கணையால் விழுந்து
இறந்தவர்களுக்கு) அருமையான உயிரைத் தந்துதவி; யாதும் காரியம்
இல்லாமல் போனான் – (நம்மிடத்தில்) எந்தக் காரியத்தையும்
(கைம்மாறாகப்) பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் –
அருளுடையவர்களுடைய செய்கை இதுதான் (போலும்); பேர்
இயலாளர் – பெருந்தன்மையுடையவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும்
என்னார் – செய்யும் செயலுக்குப் பயன் பெறுவோம் என்று எண்ண
மாட்டார்கள்; (இஃது எவ்வாறு எனின்) வையம் – இவ்வுலகில்
வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ – மழை
(தங்களுக்கு) உதவுதலை நோக்கி அதற்குக் கைம்மாறு செய்ய
வல்லமை உடையவர்கள் ஆள்வார்களோ? என்றான் – என்று
கூறினான்.
————
8273. ‘“இறந்தனன், இளவல்” என்னா, இறைவியும் இடுக்கண்
எய்தும்;
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, “மீளப்
பிறந்தனர்” என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர்
அன்றே;
அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும்’ என்று அனுமன்
சென்னான்.–272-
அனுமன் – அனுமன்; அறம் தரு சிந்தை ஐய – (இராமனை
நோக்கி) அறம் நிறைந்த மனத்தை உடைய ஐயனே! இளவல்
இறந்தனன் என்னா – நாம் இப்பொழுது மகிழ்ச்சிக்குரிய செயல்
செய்யவில்லை எனில் இளவலாகிய இலக்குவன் இறந்து விட்டான்
என்று; இறைவியும் இடுக்கண் எய்தும் – சீதையும் துன்பம்
அடைவாள்; மறந்தனர் உறங்குகின்ற வஞ்சமும் மறுகி –
(பேராரவாரம் செய்தால்) (கவலையை) மறந்து உறங்குகின்ற (பகை
முடித்தோம் என்று) வஞ்சனைப் பண்புள்ள அரக்கர்களும் (மனம்
கலங்கி); மீளப் பிறந்தனர் என்று கொண்டு – மீளவும் (நாம்) உயிர்
பெற்று எழுந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டு; ஓர் பெரும்
பயம் பிடிப்பர் அன்றே – ஒப்பற்ற மிக்க அச்சம் கொள்வார்கள்
அல்லவா? ஆர்த்தும் என்று – (இச்செயல்களுக்காக நாம்) ஆரவாரம்
செய்வோம் என்று; சொன்னான் – கூறினான்.
————–
8274. ‘அழகிது’ என்று அண்ணல் கூற, ஆர்த்தனர்-
கடல்கள் அஞ்சிக்
குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்
எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ.–273-
அண்ணல் – தலைமைப் பெருமை உள்ள இராமன்; அழகிது என்று
கூற – (இதுவே) தகுதி உடையது என்று கூற; கடல்கள் அஞ்சிக்
குழைவுற – (வானரப் படைவீரர்கள்) கடல்கள் எல்லாம் அஞ்சிக்
கலக்கமுறவும்; அனந்தன் குன்றின் உச்சி நின்று – ஆதிசேடனது
மலைபோன்ற தலையின் உச்சியில் இருந்து; அண்ட கோளம் மிசை
எழ – உலக உருண்டை மேல் நோக்கி எழவும்; உலகம் மேல் மேல்
ஏங்கிட – உலகத்து உயிர்கள் மேலும் மேலும் ஏக்கம் கொள்ளவும்;
மழை இரிந்து சிந்திவிழ – மேகங்கள் நிலை கெட்டுச் சிதறி விழவும்;
மலைகள் கீற – மலைகள் பிளவுபடவும்; மாதிரம் பிளக்க – திசைகள்
பிளவுபடவும்; ஆர்த்தனர் மாதோ – பேரொலி செய்தனர்.
————
இராவணன் ஆர்ப்பொலி கேட்டல்
8275. பழிப்பு அறு மேனியாள்பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிரிப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன்
கேட்டான்.–274-
பழிப்பு அறு மேனியாள் பால் – பழிப்பதற்கு அருமையான
திருமேனி அழகுடைய சீதையின் இடத்தில்; சிந்தனை படர – மனம்
சென்று பரவியதனால்; கண்கள் விழிப்பு இலன் – கண்களை விழித்துப்
பார்த்தலும் இல்லாதவனாய்; மேனி சால வெதும்பினன் – உடம்பு
விரகவேதனையால் மிக வெதும்பப்பெற்று; ஈசன் வேலும் –
சிவபிரானது சூலவேலும்; குழிப்பு அரிது ஆய மார்பை –
துளைப்பதற்கு அருமையான (மிக்க வலிமைஉடையதன்) மார்பை;
மன்மதன் கொற்ற வாளி கிழிப்புற – மன்மதனது வெற்றி பொருந்திய
அம்புகள் ஊடுருவிப் புறம் போக; உயிர்ப்பு வீங்கி – பெருமூச்சு
மிகுதியாக; கிடந்த – விட்டுக்கொண்டு கிடந்த; வாள் அரக்கன் – வாள்
படையை உடைய அரக்கனாகிய இராவணன்; கேட்டான் – (வானரப்
படையினர் எழுப்பிய பேரொலியைக்) கேட்டான்.
————–
8276. தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்?–275-
தாதை சொல் தலை மேல் கொண்ட – தந்தையாகிய (தசரதனது)
சொல்லைத் தலைமேற்கொண்டு செயல் செய்த; தாபதன் –
தவவேடத்தை உடையவனும்; தரும மூர்த்தி – அறந்தலை நிறுத்த
வந்தவனும்; ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை –
ஓதியவர்களுடைய துன்பங்களை நீக்கும் திருப்பெயரை உடையவனும்
ஆய இராமனை; எண்ணி ஏங்கும் சீதையும் – எண்ணி எண்ணி
வருந்துகிற சீதையும்; அவளை உன்னி – அவளை நினைத்து;
சிந்தனை தீர்ந்தும் தீராப் பேதையும் – (அவள் தன்னை விரும்பாள்
எனத்) தெரிந்தும் (அவளிடத்தில் கொண்ட) மோகம் நீங்காத
அறிவிலியாகிய இராவணனும்; அன்றி – ஆகிய அவர்களைத் தவிர;
அவ் ஊர் – அந்த இலங்கையில்; துயில் பெறாதார் யார் உளர் –
தூங்காதவர்கள் யார்? ஒருவரும் இல்லை என்றபடி.
———–
8277. சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், ‘சீற்றச் சேனை
பொங்கியது’ என்ன, மன்னன் பொருக்கென எழுந்து,
‘ “போரில்
மங்கினர் பகைஞர்” என்ற வார்த்தையே வலியது!’ என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க
நக்கான்.–276-
சிங்க ஏறு மன்னன் – ஆண் சிங்கம் போன்றவனாகிய இராவணன்;
அசனி ஏறு கேட்டலும் – ஆணிடி போன்ற (வானரப் படையின்)
பேரொலி கேட்ட உடனே; சீற்றச் சேனை பொங்கியது
என்ன – சினம் மிக்க வானரப்படை போருக்கு எழுந்தது என்று
எண்ணி; பொருக்கென எழுந்து – விரைவாக எழுந்து; போரில்
மங்கினர் பகைஞர் என்ற – போரில் பகைவர்கள் இறந்து ஒழிந்தனர்
என்று (இந்திரசித்தன் கூறிய); வார்த்தையே வலியது என்னா –
சொற்கள் (மிக)வலிமை உடையனவாய் உள்ளன என்று இகழ்ந்து கூறி;
அங்கையோடு அங்கை கொட்டி – உள்ளங் கையோடு
உள்ளங்கையைச் சேர்த்துத் தட்டி; அலங்கல் தோள் குலுங்க நக்கான்
– மாலை அணிந்த (தன்) தோள்கள் குலுங்குமாறு சிரித்தான்.
————
8278. ‘இடிக்கினற் அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போல்
வில்;
வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன்
ஆர்ப்பு;
பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின்
பெற்றி,–277-
இராமன் போர் வில் – இராமனுடைய போர் செய்தற்குரிய
வில்லானது; இடிக்கின்ற அசனி உன்ன இரைக்கின்றது – இடிக்கின்ற
இடி போலப் பேரொலி செய்கின்றது; தம்பி வில் நாண் – தம்பியாகிய
இலக்குவனது வில் நாணொலி; அண்டம் வெடிக்கின்றது என்ன
படுவது – இந்த அண்டகோளம் வெடிபடுகிறேதா என்று
எண்ணும்படி ஒலிக்கின்றது; அனுமன் ஆர்ப்பு – அனுமனுடைய
பேரொலி; என்னை – என்னுடைய; செவிதொறும் வந்து அடிக்கின்றது
– செவிகள் தோறும் வந்து தாக்குகின்றது; பருதி சேய் ஆர்ப்பின்
பெற்றி – கதிரவன் மகனாகிய சுக்கிரீவனின் பேரொலியின் தன்மை;
உலகம் எங்கும் பிடிக்கின்றது – உலகம் முழுதும் பரவி ஒலிக்கின்றது.
————-
8279. ‘அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க.–278-
அவனும் அங்கதன் ஆர்த்தான் – அந்த அங்கதனும் பேரொலி
செய்கின்றான்; வெங்கத நீலன் – கொடும் சினம் உடைய நீலனும்;
அந்தரம் ஆர்க்கின்றானும் – விண்ணில் ஓசை எழுமாறு
ஒலிக்கின்றான்; மற்றை வீரரும் – பிற வானர வீரர்களும்; வேறு வேறு
– தனித்தனியாகப்; பொங்கினர் ஆர்த்த ஓசை – மன மகிழ்ச்சி
கொண்டு ஒலித்த பேரொலி; அண்டத்தும் புறத்தும் போன – இந்த
அண்டத்திலும் அதற்கு அப்பாலும் பரவின; தருமம் நல்க – அறம்
துணை நின்றதனால்; பாசத்தை – நாகக் கணையில் இருந்து; சங்கை
ஒன்று இன்றித் தீர்ந்தார் – ஐயம் எதுவும் இல்லாமல் நீங்கினார்கள்;
(வானரப் படையினரும் இலக்குவனும் என்க.)
———-
இராவணன் இந்திரசித்தன் மாளிகைக்கு எழுதல்
8280. என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில்நின்றும் மகன் தனிக் கோயில்
சார்ந்தான்.–279-
வேந்தன் – அரசனாகிய இராவணன்; என்பது சொல்லி – என்பது
பலவற்றைத் (தனக்குள்) சொல்லிக்கொண்டு; பள்ளிச் சேக்கை நின்று
இழிந்து – படுக்கையில் இருந்து இறங்கி; வாட்கை ஒன்பது கோடி
அரக்கர் – வாளைக் கையில் ஏந்திய ஒன்பது கோடி அரக்க வீரர்கள்;
வந்து உழையின் சுற்ற – திரண்டு வந்து பக்கங்களில் சூழ்ந்து உடன்
வரவும்; பூங்குழை மகளிர் கோடி – அழகிய காதணியை அணிந்த
மகளிர் கோடியளவினர்; பொன் பொதி விளக்கம் ஏந்த – பொன்னால்
செய்யப்பட்ட விளக்குகளை ஏந்தி உடன் வரவும்; தன் பெருங்கோயில்
நின்றும் – தன் பெரிய அரண்மனையில் இருந்து; மகன் தனிக்கோயில்
சார்ந்தான் -மகனாகிய இந்திரசித்தனது சிறப்புடைய அரண்மனைக்குச் (சென்று)
சேர்ந்தான்.
———–
8281. தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார் தாங்கி
வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார்,
மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி
வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார்.–280-
வல்லி வாங்கிய மருங்குல் மாதர் – பூங்கொடியையும் பின்னிடச்
செய்த இடையினை உடைய பெண்கள்; தாங்கிய துகிலார் – (கையில்
தூக்கித்) தாங்கிய சேலையை உடையவராயும்; மெள்ளச் சரிந்து வீழ்
குழலார் – (கூட்டி முடிக்கப் பெறாமையால்) மெல்லச் சோர்ந்து
தொங்குகிற கூந்தலை உடையவராயும்; தாங்கி வீங்கிய உயிர்ப்பார் –
தடைப்பட்டுப் பின்பு மிகுதியாக வெளிப்படுகிற பெருமூச்சினை
உடையவராயும்; விண்ணை விழுங்கிய முலையார் – ஆகாயத்தை
இடமின்றி விழுங்கிய (பருத்த) மார்பகங்களை உடையவராயும்;
மெல்லத் தூங்கிய விழியார் – அரை குறையாகத் தூங்கிய கண்களை
உடையவராயும்; தள்ளித் துளங்கிய நடையார் – தடுமாறி நடுங்கும்
நடையினை உடையவராயும்; அனந்தரால் மயங்கி வந்தார் – தூக்க
மயக்கத்தால் மயங்கி (இராவணனோடு) வந்தார்கள்.
———-
8282. பானமும், துயிலும், கண்ட கனவும், பண் கனிந்த பாடல்
கானமும், தள்ளத் தள்ள, களியொடும் கள்ளம் கற்ற,
மீனினும் பெரிய, வாட் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக,
வானவர் மகளிர் போனார், மழலை அம் சதங்கை மாழ்க–281-
வானவர் மகளிர் – தேவமாதர்கள்; பானமும் – மதுபானமும்;
துயிலும் – தூக்கமும்; கண்ட கனவும் – (தாங்கள் கண்ட) கனவுகளும்;
பண் கனிந்த பாடல் கானமும் – (இராவணனைப் புகழ்ந்து பாடப்பட்ட) இசைகனிந்த இனிய பாடல்களும்; தள்ளத்
தள்ள – (தம்மைச்) சூழ்ந்து சுற்றித்தள்ளத் தள்ள; களியொடும்
கள்ளம் கற்ற மீனினும் – மதச் செருக்குடன் வஞ்சனையைக்
கற்றுள்ள மீனைக்காட்டிலும்; பெரிய வாட்கண் – பெரிய ஒளி
பொருந்திய (தங்கள்) கண்கள்; விழிப்பது முகிழ்ப்பது ஆக –
திறப்பதும் மூடுவதுமாக (இருக்க); அம் சதங்கை மழலை மாழ்க –
அழகிய சதங்கைகள் மென்மையாக ஒலிக்கப்; போனார் –
(இராவணனுடன்) சென்றார்கள்.
———–
8283. மழையினை நீலம் ஊட்டி, வாசமும் புகையும் ஆட்டி,
உழை உழை சுருட்டி, மென் பூக் குவித்து, இடைக்கு
இடையூறு என்னா,
பிழையுடை விதியார் செய்த பெருங் குழல்,
கருங் கண், செவ் வாய்,
இழை அணி, மகளிர் சூழ்ந்தார், அனந்தரால்,
இடங்கள்தோறும்.–282-
மழையினை நீலம் ஊட்டி – மேகத்திற்கு நீல நிறத்தை ஏற்றி;
வாசமும் புகையும் ஆட்டி – (அதற்கு) மணத்தையும் (அகில்)
புகையையும் ஊட்டிச்; சுருட்டி – சுருளச் செய்து; உழை உழைமென்
பூக்குவித்து – இடை இடையே மென்னைமயான மலர்களைச்
சேர்த்துச் சொருகி; இடைக்கு இடையூறு என்னா – நூலிடைக்குத்
துன்பம் உண்டாகும் என்று கருதாமல்; பிழையுடை விதியார் செய்த –
பிழையை உடைய விதி உண்டாக்கிய; பெருங்குழல் – நீண்ட
கூந்தலையும்; கருங்கண் – கருமையான கண்களையும்; செவ்வாய் –
சிவந்த வாயினையும் உடைய; இழை அணி மகளிர் –
அணிகலன்களை அணிந்த பெண்கள்; அனந்தரால் – தூக்கக்
கலக்கத்தோடு; இடங்கள் தோறும் சூழ்ந்தார் – பக்கங்களில் எல்லாம்
(இராவணனைச்) சூழ்ந்தார்கள்.
————-
8284. தேனிடை, கரும்பில், பாலில் அமுதினில், கிளவி தேடி,
மானிடை, கயலில், வாளில், மலரிடை, நயனம் வாங்கி,
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி,
வானுடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார்.–283-
வானுடை அண்ணல் – சத்தியலோகத்தைத் தனக்கு உரிமையாக
உடைய பிரமதேவன்; தேனிடை – தேன் இடத்திலும்; கரும்பில் –
கரும்பின் இடத்திலும்; பாலில் – பாலின் இடத்திலும்; அமுதினில் –
தேவர்களின் அமுதத்தின் இடத்திலும்; கிளவி தேடி – (உள்ள இனிய
பகுதிகளைப்) பேச்சினை (உருவாக்கத்) தேடி அமைத்து; மானிடை –
மானின் இடத்திலும்; கயலில் – கயல் மீனிடத்திலும்; வாளில் –
வாளின் இடத்திலும்; மலரிடை – மலர்களின் இடத்திலும்; நயனம்
வாங்கி – (உள்ள சிறப்புப் பகுதிகளைச் சேர்த்துக்) கண்களாகச்
சமைத்து; மற்றும் அனைய மேல் நடை – மற்றும் அவை போன்ற
சிறப்புடையவைகளான; நல்வழி நல்கவேண்டி – நல்ல வகைகளைக்
கொண்டு படைக்க விரும்பி; செய்த மங்கையர் – படைத்த மகளிர்;
மருங்கு சென்றார் – (இராவணன் உடைய) பக்கங்களில் சென்றார்கள்.
————
8285. தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும்,
இடங்கரின் வயப் போத்து அன்ன எறுழ் வலி அரக்கர்
யாரும்,
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார்; மாதர்
அடங்கலும், அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார்.–284-
தொடங்கிய – (வானரப் படையினர்) தொடங்கிச் (செய்த);
ஆர்ப்பின் ஓசை – பேரொலி; செவிப்புலம் தொடர்தலோடும் –
காதுகளாகிய புலத்தில் நுழைந்த உடனே; இடங்கரின் வயப் போத்து
அன்ன – வலிய ஆண் முதலையை ஒத்துள்ள; எறுழ் வலி அரக்கர்
யாரும் – மிக்க வலிமை உடைய அரக்கர்கள் எல்லோரும்; மடங்கலின்
முழக்கம் கேட்ட – சிங்கத்தின் முழக்கத்தைக் கேட்ட; வான் கரி
ஒத்தார் – பெரிய யானைகளை ஒத்து விளங்கினார்கள்; மாதர்
அடங்கலும் – அரக்கப் பெண்டிர் எல்லோரும்; அசனி கேட்ட – இடி
முழக்கம் கேட்ட; அளை உறை அரவம் – புற்றில் வாழும்
பாம்புகளை; ஒத்தார் – ஒத்தார்கள்.
———–
இந்திரசித்தனை இராவணன் காணல்
8286. அரக்கனும், மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்த மாடம்
பொருக்கெனச் சென்று புக்கான், புண்ணினில் குமிழி
பொங்கத்
தரிக்கிலன், மடங்கல்ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து
போன,
கருக் கிளர் மேகம் அன்ன, களிறு அனையானைக் கண்டான்.–285-
அரக்கனும் – அரக்கனாகிய இராவணனும்; மைந்தன் வைகும் –
தன் மகனாகிய (இந்திரசித்தன்) தங்கி உள்ள; ஆடகத்து அமைந்த
மாடம் – பொன்னால் செய்யப்பட்ட மாளிகைக்குள்; பொருக்கெனச்
சென்று புக்கான் – விரைவாகச் சென்று சேர்ந்தான்; புண்ணினில்
குமிழி பொங்கத் – (இலக்குவனது அம்புகள் துளைத்த) புண்களில்
(இருந்து) இரத்தக்குமிழி பொங்கி வெளிப்படத்; தரிக்கிலன் – பொறுக்க
மாட்டாதவனாகி; மடங்கல் ஏற்றால் – ஆண் சிங்கத்தினால்;
தொலைப்புண்டு சாய்ந்து போன – வலிமை கெட்டு ஒழிந்து போன;
கருக்கிளர் மேகம் அன்ன – கருமையான நீர் பொருந்திய மேகத்தைப்
போன்ற; களிறு அனையானைக் கண்டான் – ஆண் யானையைப்
போன்றவனாக உள்ள இந்திர சித்தனைக் கண்டான்.
————-
8287. எழுந்து அடி வணங்கல் ஆற்றான், இரு கையும்
அரிதின் ஏற்றித்
தொழும் தொழிலானை நோக்கித் துணுக்குற்ற மனத்தன்,
‘தோன்றல்!
அழுங்கினை; வந்தது என்னை அடுத்தது?’ என்று எடுத்துக்
கேட்டான்;
புழுங்கிய புண்ணினானும், இனையன புகலலுற்றான்;–286-
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் – எழுந்து (தந்தையின்) அடி
வணங்குவதற்குக் கூட முடியாதவனாய்; இருகையும் அரிதின் ஏற்றித் –
(தன் இரண்டு) கைகளையும் (பெருமுயற்சி செய்து)
அருமைப்பாட்டோடு (தலைக்கு) மேல் தூக்கி; தொழும் தொழிலானை
நோக்கித் – தொழுகின்ற தொழிலை உடையவனான இந்திரசித்தன் பார்த்து; துணுக்குற்ற மனத்தன் – நடுக்கம் கொண்ட
மனத்தை உடையவனாய்; தோன்றல் – தோன்றலே; அழுங்கினை –
(நீ) மிக வருத்தம் கொண்டு உள்ளாய்; அடுத்தது – அண்மையில்;
என்னை வந்தது – உனக்கு என்ன தீங்கு வந்தது; என்று எடுத்துக்
கேட்டான் – என்று பல தடவை கேட்டான்; புழுங்கிய புண்ணினானும்
– துன்பம் உற்று வருந்துவதற்குக் காரணமாகிய புண்களை
உடையனாகிய இந்திரசித்தனும்; இனையன புகலலுற்றான் – இத்தகைய
சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.
———
இந்திரசித்தன் மறுமொழி
8288. ‘உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்றப்
பருகின அளப்பிலாத பகழிகள்; கவசம் பற்று அற்று
அருகின; பின்னை, சால அலசினென்; ஐய! கண்கள்
செருகின அன்றே, யானும் மாயையின் தீர்ந்திலேனேல்?–287-
ஐய! – ஐயனே; அளப்பில்லாத பகழிகள் – (இலக்குவன் என் மீது
தொடுத்த) மிகப்பலவாகிய அம்புகள்; உரத்தை முற்றும் உருவின –
என் மார்பு முழுவதும் பாய்ந்து ஊடுருவின்; உலப்பு இல உதிரம்
வற்றப் பருகின – குறைந்து அழிதல் இல்லாத (என் உடம்பில் உள்ள)
குருதியை வற்றிப் போகுமாறு பருகி விட்டன; கவசம் பற்று அற்று
அருகின – (என் மார்புக்) கவசங்கள் நெக்கு விட்டுப் பிளந்தன;
பின்னை சால அலசினென் – பின்பு மிகவும் தளர்ந்து போனேன்;
கண்கள் செருகின அன்றே – (என்) கண்கள் சொருகிவிட்டன
அல்லவா? யானும் – நானும்; மாயையின் தீர்ந்திலேனேல் –
மாயையினால் மறையாமல் இருந்து இருப்பேன் என்றால்; (இறந்தே
போய் இருப்பேன் என்றவாறு)
———-
8289. இந்திரன், விடையின் பாகன், எறுழ் வலிக் கலுழன் ஏறும்
சுந்தரன், அருக்கன் என்று இத் தொடக்கத்தார் தொடர்ந்த
போரில்,
நொந்திலென்; இனையதுஒன்றும் நுவன்றிலென்; மனிதன்
நோன்மை,
மந்தரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று
மன்னோ.–288-
மந்தரம் அனைய தோளாய் – மந்தரப் பெருங்கிரியை ஒத்த
தோள்களை உடையவனே; இந்திரன் – தேவர் தலைவன் ஆகிய
இந்திரனும்; விடையின் பாகன் – வெள்ளேற்றை வாகனமாகக் கொண்ட
சிவபிரானும்; எறுழ் வலிக்கருடன் ஏறும் சுந்தரன் – மிக்க வலிமை
உடைய கருடனை ஊர்தியாகக் கொண்ட அழகிய திருமாலும்;
அருக்கன் – கதிரவனும்; என்று – என்று கூறும்; இத்தொடக்கத்தார் –
இத்தன்மை உடையவர்கள்; தொடர்ந்த போரில் – (என்மீது)
தொடங்கிய போரினால்; நொந்திலென் – (நான் சிறிது கூட) வருத்தம்
அடையவில்லை; இனையது ஒன்று நுவன்றிலேன் – இத்தகைய
சொற்கள் ஒன்றையும் (நான்) சொல்லியதும் இல்லை; மனிதன்
நோன்மை – மனிதனாகிய இலக்குவனுடைய வலிமை; வரம்பு
உடைத்து அன்று – ஓர் எல்லைக்கு உட்பட்டது அன்று.
———–
8290. ‘இளைவன் தன்மை ஈதால்; இராமனது ஆற்றல் எண்ணின்,
தளை அவிழ் அலங்கல் மார்ப! நம்வயின் தங்கிற்று
அன்றால்
விளைவு கண்டு உணர்தல் அல்லால், வென்றி மேல்
விளையும் என்ன
உளை;அது அன்று’ என்னச் சொன்னான், உற்றுளது
உணர்ந்திலாதான்.–289-
தளை அவிழ் அலங்கல் மார்ப – கட்டு அவிழ்ந்த மலர்களால்
ஆகிய மாலை அணிந்த மார்பினை உடையவனே!; இளையவன்
தன்மை ஈதால் – இளையவனாகிய இலக்குவன் (வலிமையின்) தன்மை
இதுவாகும்; இராமனது ஆற்றல் எண்ணின் – இராமனது வலிமையைப்
பற்றி எண்ணிப் பார்த்தால்; நம் வயின் தங்கிற்று அன்றால் – நம்
இடத்தில் (எண்ணிப் பார்க்கும்படி) பொருந்தியது ஆகாது; விளைவு
கண்டு உணர்தல் அல்லால் – இனிமேல் எங்ஙனம் நடக்குமோ என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுமே
தவிர; வென்றிமேல் விளையும் என்ன உளை – வெற்றி (இனி) மேல்
நமக்கு உண்டாகும் என்று எண்ணியுள்ளாய்; அது அன்று – அவ்வாறு
எண்ணுவது சரி அன்று; என்ன சொன்னான் – என்று சொன்னான்;
உற்றுளது உணர்ந்திலாதான் – (இலக்குவனும் வானரப் படைவீரரும்
கருடனால் நாகக்கணை நீங்கி எழுந்ததை) அறிந்திலாதவனாகிய
இந்திரசித்தன்.
———–
8291. ‘வென்றது, பாசத்தாலும், மாயையின் விளைவினாலும்;
கொன்றது, குரக்க வீரர்தம்மொடு அக் கொற்றத்தோனை;
நின்றனன், இராமன் இன்னும்; நிகழ்ந்தவா நிகழ்க,
மேன்மேல்’
என்றனன்; என்னக் கேட்ட இராவணன் இதனைச்
சொன்னான்;–290-
குரக்கு வீரர் தம்மொடு – வானர வீரர்கள் தம்முடன்;
அக்கொற்றத்தோனை – அந்த வெற்றியை உடைய இலக்குவனை;
கொன்றது – கொன்றதும்; வென்றது – (அவர்களை) வென்றதும்;
பாசத்தாலும் – நாகக்கணையாலும்; மாயையின் விளைவினாலும் –
மாயை (யைச் செய்த) செயலின் விளைவினாலும் ஆகும்; இன்னும்
இராமன் நின்றனன் – இன்னும் இராமன் (உயிருடன்) நின்றுள்ளான்;
மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க – (இனிமேல்) நடக்கிறபடி நடக்கட்டும்;
என்றனன் – என்று (இந்திரசித்தன்) கூறினான்; என்னக் கேட்ட
இராவணன் – என்று (அவன் கூறியதைக்) கேட்ட இராவணன்;
இதனைச் சொன்னான் – இச்சொற்களைக் கூறினான்.
————
இராவணன் உரை
8292. ‘வார் கழல் கால! மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் விண்ணைப் பிளந்திட, குரங்கு பேர்ந்த,
கார் ஒலி மடங்க, வேலை கம்பிக்க, களத்தின் ஆர்த்த
போர் ஒலி ஒன்றும், ஐய! அறிந்திலை போலும்! என்றான்.–291-
ஐய! – ஐயனே; வார்கழல் கால! – நீண்ட கழல் அணிந்த காலை
உடைய (இந்திரசித்தனே); மற்று அவ் இலக்குவன் வயிர வில்லின்
பேர் ஒலி அரவம் – அந்த இலக்குவனுடைய வலிமையான வில்லினது
மிகப்பெரிய ஒலி; விண்ணைப் பிளந்திட – ஆகாயத்தைப் பிளக்க;
குரங்கு பேர்த்த – குரங்குகளில் இருந்து எழுந்த பேரொலி; கார் ஒலி
மடங்க – மேகங்களின் இடியொலி கூடக் கீ்ழ்ப்படும்படி ஒலிக்க;
வேலை கம்பிக்க – கடல்கள் நடுங்கி நிற்க; களத்தின் ஆர்த்த –
போர்க்களத்தில் (இருந்து) ஆரவாரம் செய்த; பேர் ஒலி – மிகப்பெரிய
ஓசையை; அறிந்திலை போலும் என்றான் – (நீ) அறியவில்லை
போலும் என்று (இராவணன்) கேட்டான்.
————-
இந்திரசித்தன் வினா
8293. ‘ஐய! வெம் பாசம்தன்னால் ஆர்ப்புண்டார்; அசனி என்னப்
பெய்யும் வெஞ் சரத்தால் மேனி பிளப்புண்டார்; உணர்வு
பேர்ந்தார்;
“உய்யுநர்” என்ற உரைத்தது உண்மையோ? ஒழிக்க
ஒன்றோ?
“செய்யும்” என்று எண்ண, தெய்வம் சிறிது அன்றோ
தெரியின் அம்மா,’–292-
ஐய! – ஐயனே; வெம்பாசம் தன்னால் ஆர்ப்புண்டார் –
(இலக்குவனும் வானரப்படை வீரர்களும்) கொடிய நாகக்கணையினால்
கட்டுப்பட்டார்கள்; அசனி என்னப் பெய்யும் வெஞ்சரத்தால் –
(அதற்கு மேல்) இடியைப் போல் சொரிந்த (என்னுடைய) கொடிய அம்புகளால்; மேனி பிளப்புண்டார் –
உடல்கள் பிளக்கப்பட்டார்கள்; உணர்வு பேர்ந்தார் – உணர்வு
கெட்டார்கள்; உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ? –
(அத்தகைய நிலை அடைந்தவர்கள்) பிழைத்து உள்ளார்கள் (என்று
நீ கூறுவது) உண்மைதானா?; ஒழிக்க ஒன்றோ – (அவர்களை
நான் கட்டிய நாகக்கணை) ஒழித்து நீக்குவதற்கு உரிய ஒன்றா?;
செய்யும் என்று எண்ண – (வேறு ஒன்று அக்கணையை வலி
இழக்கச்) செய்யும் என்று; தெரியின் – எண்ணிப் பார்த்தால்; தெய்வம்
சிறிது அன்றோ அம்மா – இக்கணையை எனக்குக் கொடுத்த
தெய்வம் சிறுமை அடைந்து விடுமல்லவா?
————
களத்தில் நிகழ்ந்ததைத் தூதுவர் கூறல்
8294. இது உரை நிகழும் வேலை, எய்தியது அறியப் போன
தூதுவர், விரைவின் வந்தார், புகுந்து, அடி தொழுதலோடும்,
‘யாது அவண் நிகழ்ந்தது?’ என்ன இராவணன் இயம்ப,
ஈறு இன்று,
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார்:–293-
ஈது உரை நிகழும் வேலை – இவ்வாறு (இராவணனுக்கும்
இந்திரசித்தனுக்கும் இடையே) உரையாடல் நடந்து வந்த நேரத்தில்;
எய்தியது அறியப்போன தூதுவர் – நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து
வரப்போன தூதுவர்கள்; விரைவின் வந்தார் – (போர்க்களத்தில்
இருந்து) விரைவாக (இராவணன் இருக்கும் இடம்) வந்து; புகுந்து –
சேர்ந்து; அடி தொழுதலோடும் – இராவணனுடைய அடிகளில் விழுந்து
வணங்கிய உடனே; அவண் நிகழ்ந்தது யாது என்ன இயம்ப –
போர்க்களத்தில் நடந்தது என்ன. என்று (இராவணன்) கேட்க; ஈறு
இன்றி ஓதிய கல்வியாளர் – எல்லை இல்லாது படித்துத் தேர்ந்த கல்வி
அறிவுடைய தூதர்கள்; புகுந்துளது – (அங்கு) நடந்த நிகழ்ச்சிகளை;
உரைக்கலுற்றார் – சொல்லத் தொடங்கினார்கள்.
—————-
8295. ‘பாசத்தால் பிணிப்புண்டாரை, பகழியால் களப்பட்டாரை,
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே,
ஏசத் தான் இரங்கி, ஏங்கி, “உலகு எலாம் எரிப்பென்”
என்றான்;-
வாசத் தார் மாலை மார்ப!-வான் உறை கலுழன் வந்தான்;–294-
வாசத்தார் மாலை மார்ப! – மணம் மிக்க மாலையை அணிந்த
மார்பினை உடையவனே! பாசத்தால் பிணிப்புண்டாரை – நாகக்
கணையால் கட்டுண்டு; பகழியால் களப்பட்டாரை – அம்புகளினால்
போர்க்களத்தில் மயங்கிப்பட்டவர்களை; தேசத்தார் அரசன் மைந்தன்
– கோசலநாட்டுப் பேரரசனாகிய தசரதனது மகனாகிய (இராமன்);
இடை இருள் சேர்ந்து நின்று – நள்ளிரவில் சேர்ந்து இருந்து; இரங்கி
ஏங்கி ஏசத்தான் – முதலில் பரிதவித்து அழுது ஏசிப்பேசி; உலகு
எலாம் எரிப்பென் என்றான் – பின்பு சினம் கொண்டு (எல்லா)
உலகங்களையும் எரித்து விடுவேன் என்றான்; வான் உறை கலுழன்
வந்தான் – அந்த நேரத்தில் ஆகாயத்தில் வாழுகிற கருடன் (அங்கு)
வந்தான்.
———–
8296. ‘அன்னவன் வரவு காணா, அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்னபின்னங்கள் ஆன; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்;
முன்னையின் வலியர் ஆகி, மொய்க் களம் நெருங்கி,
மொய்த்தார்;
இன்னது நிகழ்ந்தது’ என்றார். அரக்கன் ஈது எடுத்துச்
சொன்னான்;–295-
அன்னவன் வரவு காணா – அந்தக் கருடனது வரவைக் கண்டு;
அயில் எயிற்று அரவம் எல்லாம் – கூர்மையான பற்களை உடைய
பாம்புக்கணைகள் எல்லாம்; சின்ன பின்னங்கள் ஆன – சிறிய
துண்டுகளாய்ச் சிதறிப்போயின; புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் –
(அதனால் நாகக்கணையால் கட்டப்பட்டிருந்த இலக்குவனும் வானர
வீரர்களும்) தங்களுடைய புண்களும் தளர்ச்சியும் நீங்கப் பெற்று;
முன்னையின் வலியர் ஆகி – முன்பை விட வலிமை மிக்கவர்களாகி;
மொய்க்களம் நெருங்கி மொய்த்தார் – போர்க்களத்தை நெருங்கிச்
சூழ்ந்தார்கள்; இன்னது நிகழ்ந்தது என்றார் – இத்தகு செயல் (அங்கு) நடந்தது என்று (தூதுவர்கள்)
கூறினார்கள்; அரக்கன் ஈது எடுத்துச் சொன்னான் – அதற்கு
அரக்கனாகிய இராவணன் இவற்றை எடுத்துச் சொல்லத்
தொடங்கினான்.
———-
இராவணன் கூற்று
8297. “ஏத்த அருந் தடந் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடைக் கழித்துத் தீர்த்தான், கலுழனாம்; காண்மின்,
காண்மின்!
வார்த்தை ஈதுஆயின், நன்றால், இராவணன் வாழ்ந்த
வாழ்க்கை!
மூத்தது, கொள்கை போலாம்! என்னுடை முயற்சி எல்லாம்?–296-
ஏத்த அருந்தடந்தோள் ஆற்றல் – புகழ்ச்சிக்கு அடங்காத பரந்த
தோள் ஆற்றல் உடைய; என் மகன் – எனக்கு மகனாகிய
(இந்திரசித்தன்); எய்தபாசம் – செலுத்திய நாகக் கணையைக்;
கலுழனாம் காற்றிடைக் கழித்துத் தீர்த்தான் – கருடனென்பவன் (தன்
சிறகுக்) காற்றினால் நீக்கி அழித்து விட்டானாம்; காண்மின் காண்மின்
– (இந்த அதிசயத்தைக்) காணுங்கள் காணுங்கள்; வார்த்தை ஈது
ஆயின் – இந்த சொல் இவ்வாறு ஆயின்; இராவணன் வாழ்ந்த
வாழ்க்கை நன்றால் – இராவணன் (இதுவரை) வாழ்ந்த (வீர) வாழ்க்கை
அழகிதாய் இருக்கிறது; என்னுடை முயற்சி எல்லாம் – (பகைவர்களை
வென்று அழிக்க இதுவரை); நான் செய்த என்னுடைய முயற்சிகள்
முழுவதும்; கொள்கை மூத்தது போலாம் – கருத்து வகையால் முதுமை
அடைந்து விட்டது போலும்.
————–
8298. ‘உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன், என்னோடு ஏற்ற செருவினில், மறுக்கம்
கொண்டான்;
மண்டலம் திரிந்த போதும், மறி கடல் மறைந்த போதும்,
கண்டிலன்போலும், சொற்ற கலுழன், அன்று, என்னைக்
கண்ணால்?–297-
ஏழும் ஏழும் உலகு உண்டு உமிழ்ந்தவன் – பதினான்கு
உலகங்களையும் (அழிவுக்காலத்துத்) தன்னுள் அடக்கி (படைப்புக்
காலத்தில்) வெளிப்படுத்தியவன்; என்னும் ஊற்றம் கொண்டவன் –
என்னும் வலிமைச் சிறப்புக் கொண்டவனாகிய திருமால்; என்னோடு
ஏற்ற செருவினில் – (முன்பு) என்னுடன் எதிரிட்ட போரில்; மறுக்கம்
கொண்டான் – மனக்கலக்கம் கொண்டவனாய்; மண்டலம் திரிந்த
போதும் – (தோல்வி அடைந்து) சுற்றித் திரிந்த போதும்; மறிகடல்
மறைந்த போதும் – (அலைகள்) மடங்கி மேல் எழுகிற கடலினுள்
சென்று மறைந்த காலத்திலும்; சொற்ற கலுழன் – (அத்திருமாலின்
ஊர்தி என்று சொல்லப்படுகிற கருடன்); அன்று என்னைக் கண்ணால்
கண்டிலன் போலும் – அன்று என்னைக் கணணால் காணவில்லை
போலும்.
———-
8299. ‘கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழியப் போன பொழுதில், என் சிலையின்
பொங்கி,
உரங்களில், முதுகில், தோளில் உறையுறு சிறையில், உற்ற
சரங்களும் நிற்கவேகொல், வந்தது, அவ் அருணன் தம்பி?–298-
கரங்களில் – தன் திருக்கைகளில்; நேமி – (தீயவர்களை அழிக்கும்
சுதர்சனம் என்னும்) சக்கரப் படையினையும்; சங்கம் –
(பகைவரைத்தன் பேரொலியால் குலையச் செய்யும்; பாஞ்ச சன்னியம்
என்ற) சங்கினையும் தாங்கிய கரியோன் – தாங்கிய கருநிறம்
உடையவனாகிய திருமால்; காக்கும் புரங்களும் – பாதுகாத்துக்
கொண்டிருக்கின்ற (வானுலகில் உள்ள அமராவதி முதலிய)
நகரங்களும்; அழியப் போன பொழுதில் – அழிந்து சிந்தும் படியாக
(நான் அங்கு போருக்குச்) சென்ற காலத்தில்; என் சிலையின் பொங்கி
– எனது வில்லில் இருந்து மிகுதியாக வெளிப்பட்டு (வந்த அம்புகள்);
உரங்களில் – (தன்னுடைய)மார்பிலும்; முதுகில் – முதுகிலும்; தோளில் – தோளிலும்; உறை
உறுசிறையில் – போர்வையாகப் பொருந்திய இறகுகளிலும்; உற்ற
சரங்களும் நிற்கவே கொல் – தைத்த அம்புகளும் இன்னும்
நிலைத்துத் தைத்திருக்கும் நிலையில் கூடவா?; அவ் அருணன் தம்பி
வந்தது – அந்த அருணனுடைய தம்பியாகிய கருடன் (பகைவருக்கு
உதவ) வந்தது.
———–
இராவணன் இந்திரசித்தனைப் போரிடக் கூறல்
8300. ‘ஈண்டு அது கிடக்க; மேன்மேல் இயைந்தவாறு இயைக!
எஞ்சி
மீண்டவர்தம்மைக் கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே;
ஆண்தகை! நீயே இன்னும் ஆற்றுதி, அருமைப் போர்கள்;
காண்டலும், நாணும்’ என்றான்; மைந்தனும் கருத்தைச்
சொன்னான்;–299-
ஈண்டு அது கிடக்க – இப்பொழுது அது கிடக்கட்டும்; மேன் மேல்
இயைந்தவாறு இயைக – இனிமேல் நடப்பது நடக்கட்டும்; எஞ்சி
மீண்டவர் – (இப்போது) (நாகக் கணைக்குத்) தப்பி (உயிர்)
பிழைத்தவர்கள்; தம்மைக் கொல்லும் – தம்மைக் கொல்லுகிற;
வேட்கையே வேட்கும் அன்றே – விருப்பத்தையே விரும்புவோம்
அல்லவா? ஆண்தகை – (அதனால்) ஆண்மைப் பண்புகள்
நிறைந்தவனே; அருமைப் போர்கள் – அருமையான போர்களை;
இன்னும் நீயே ஆற்றுதி – மேலும் நீயே சென்று செய்க; காண்டலும்
நாணும் என்றான் – (அவ்வாறு போர் செய்து நீ அவர்களை
அழிப்பதைக்) கண்டபொழுது (அவர்கள் தப்பிப் பிழைக்க உதவிய
கருடன்) நாணங்கொள்ளுவான் என்று (இராவணன்) கூறினான்.
மைந்தனும் – அதற்கு மகனாகிய (இந்திரசித்தனும்); கருத்தைச்
சொன்னான் – (தன்) மனக் கருத்தை (இராவணனிடம்) சொன்னான்.
————
இந்திரசித்தன் மொழி
8301. ‘இன்று ஒருபொழுது தாழ்த்து, என் இகல் பெருஞ்
சிரமம் நீங்கி,
சென்று, ஒரு கணத்தில், நாளை, நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால், உன் மனத் துயர் மீட்பென்’
என்றான்;
‘நன்று’ என, அரக்கன் போய், தன் நளிமலர்க் கோயில்
புக்கான்.
(இந்திரசித்தன் இராவணனைப் பார்த்து) இன்று ஒரு பொழுது
தாழ்த்து – இன்று ஒரு நாள் காலம் தாழ்த்தி; என் இகல் பெரும்
சிரமம் நீக்கி – எனக்குப் போரினால் ஏற்பட்ட பெரு வருத்தத்தை
நீக்கிக்கொண்டு; நாளை – நாளைக்கு; ஒரு கணத்தில் சென்று – ஒரு
கண நேரத்தில் (போர்க்களம்) சென்று; நான்முகன் படைத்த – பிரமன்
உருவாக்கிப் படைத்த; தெய்வ – தெய்வத்தன்மை பொருந்திய;
வென்றி வெம் படையினால் – வெற்றிக்கு உரிய கொடிய கணையால்;
உன் மனத்துயர் மீட்பென் என்றான் – (பகைவர்களைக் கொன்று)
உன் மனத்தில் ஏற்பட்டுள்ள துன்பத்தைப் போக்குவேன் என்று
கூறினான்; நன்று என அரக்கன் போய் – நல்லது என்று கூறிவிட்டு
அரக்கனாகிய (இராவணன்) போய்த்; தன் நளிமலர்க் கோயில்
புக்கான் – தன்னுடைய சிறந்த மலர் மாலைகளால் அழகு
படுத்தப்பட்டிருந்த அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.
————
மிகைப் பாடல்கள்
எரி முகப் பகழி மாரி தொடுத்து, இகல் அரக்கன் எய்தான்;
எரி முகப் பகழி மாரி தொடுத்து, அவை இறுத்தான், எந்தை,
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, அரக்கன் ஆர்த்தான்;
உரும் இனப் பகழி மாரி உருத்து விட்டு, இளவல் கொன்றான். 106-1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை அரக்கன் கோத்தான்;
நெருக்கி மற்று அனந்த கோடி நெடுங் கணை நிமலன் மாய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை அரக்கன் மொய்த்தான்;
முருக்கின் உற்று அனந்த கோடி முகைக் கணை முடித்தான், மொய்ம்பன் 106-2
சிந்து வாளி செறிதலும், சேவகன் ஐந்து நூறு கடுங்
கணையால்; அவன் உந்து தேரை ஒறுத்தனன்;
வெய்யவன் வந்து தேர் ஒன்றின் வல்லையில் ஏறினான். 128-1
அழித்தனன் தடந் தேர் என்று அழன்று, தீ விழித்தனன்;
கடு நெஞ்சம் வெகுண்டு எழத் தெழித்தனன்;
சிலையால் திறல் வாளிகள் கொழித்தனள்;
இமையோர் மெய் குலுங்கினார். 148-1
அங்கதன் தடந் தோளினும் மார்பினும்
புங்க வாளி புகப் புக, தேர் எதிர்,
சிங்க ஏறு அனையான் திரள் தோள்வரை
மங்க, வேறொர் மராமரம் வீசினான். 148-2
மல் திண் தோளின் அடித்த மராமரம்
இற்று நூறு திறத்தது, இமைப்பிலோர்
பொன் திண் தேர்மிசைத் தாவினன்
பொங்கெலி முற்று நாளில் முயற்சி முரஞ்சவே. 148-3
கண்ட வாலிதன் காதலனும், கனல்
விண்டதாம் என வெஞ் சினம் உற்றவன்
மண்டு தேர்மிசையில், குதியா வலி
கொண்டு, வான் இடி ஏறு எனக் குத்தினான். 148-4
குத்தி, மற்று அவன் கொய் உளை மாப் பரி
பத்தி பத்தியின் வீழ, பரிந்து எதிர்
தத்தி, வல் வில் தடக் கையினால், சரம்
வித்துராமுனம் வீழ்த்தினன், தேர் அரோ. 148-5
மாறு ஓர் தேரின் மடங்கல் என, கனன்று
ஏறினான், சரம் எண்-இரண்டு ஏவினான்;
ஊறு சோரி சொரிய, உயக்கம் உற்று,
ஆறினான் கடிது, அங்கதன் ஆண்மையான். 148-6
கோல் கொள் ஆளும் பரியும் குழம்பதாய்,
காலின் நூறி, கரங்களின் மற்று அவன்
தாலு மூலத்து அடிப்ப, தனு வலான்,
மால் உழந்தவர் போல மயங்கினான். 148-7
பல் ஆயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்த படர்
கால் செல்லா நிலத்தின் அருளோடு செல்ல, உடல் நின்ற வாளி சிதறுற்று,
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி, அறனே விளைக்கும் உரவோன்,
வல்லான் ஒருத்தன், இடையே படுத்த வடுஆன, மேனி வடுவும். 264-1
பறவை நாயகன் தான் ஏக, படர் உறு துயரம் நீங்கி,
கறவையும் கன்றும் போலக் களிக்கின்ற மனத்தர் ஆகி,
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்;
மறை ஒரு நான்கும், மண்ணும், வானமும், மகிழ்ந்த மாதோ. 270-1
இரு நிலம் கிழிய, பாயும் எறி கடல் இரைப்புத் தீர, பரவும் எண் திசையைத்
தாங்கும் பகட்டினம் இரியல் போக, கரு வயிறு உடைந்து சிந்தி
அரக்கியர் கலங்கி வீழ, அரு வரை அண்ட கோளம்
பிளக்க, நின்று, அனுமன் ஆர்த்தவன். 273-1
——————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply