அதிகாயனது இறப்பைக் கூறும் படலம் இது. இராவணன் மக்கள்
மூவர். அக்ககுமாரன், அதிகாயன் இந்திரசித்தன் என்பவர் அவர்கள்.
அதிகாயன் – இராவணனுக்கும் தானிய மாலிக்கும் பிறந்த மகன்.
அதிகாயன் என்ற சொல்லுக்குப் பெருந்தோற்றம் உள்ள உடல்
படைத்தவன் என்ற பொருள். காயம் – உடம்பு. அதி – மிகப்பெரிய
என்க.
இராவணன் அமைச்சரைக் கடிதல்
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற,
எழுந்து எரி வெகுளியான், இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா,
மொழிந்தனன், இடியொடு முகிலும் சிந்தவே: 1-
கொழுத்து விட்டு அழன்று எரி – கொழுத்து விட்டு வெப்பத்தோடு
எரிகின்ற; மடங்கல் கூட்டு அற – ஊழித்தீயையும் ஒப்பென்று
சொல்லா அளவு; எழுந்து எரி வெகுளியான் – மேன் மேலும் எழுந்து
எரிகின்ற சினத்தை உடையவன் ஆகிய இராவணன்; இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரை – (தன்) இரு பக்கத்திலும் இருந்து
தொழுகின்ற தன்மை உள்ள அமைச்சர்களை; சுளித்து நோக்குறா –
மிக்க சினத்தோடு பார்த்து; இடியொடு முகிலும் சிந்த மொழிந்தனன் –
இடியோடு மேகங்களும் சிதறிக் கீழே விழுமாறு பெருங்குரல் படப்
பேசலானான்.
————
‘ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை
யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச்
சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர்
வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால். 2-
என்னுடை யோக வெஞ்சேனையும் – என்னுடைய சூழ்ச்சித் திறம்
மிக்க கொடிய படையும்; உம்முடைச் சாகரத்தானையும் –
உங்களுடைய கடல் போல் பரந்த பெருஞ்சேனையும்; தழுவச் சார்ந்து
– ஒன்றாகச் சேர்ந்து; அவர் உடற்றும் – அப்பகைவர்கள் மாறுபட்டுச்
செய்யும்; வேக வெஞ்சிலைத்தொழில் விலக்கி வீட்டிரால் – மிகு
வேகத்தோடு கூடிய கொடுமையான வில்லின் தொழிலை விலக்கி
மீளத்தக்கவர் அல்லர் ஆயினீர்; எவரும் எம் முகத்து ஏகுதிர் –
(அதனால்) யாவரும் என் முகத்து எதிரில் நிற்காமல் (அப்பால்)
சென்று விடுங்கள்.
————–
‘”எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும்
படுத்து, இவண் மீடும்” என்று உரைத்த பண்பினீர்!
தடுத்தலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்;
கொடுத்தலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர். 3-
எடுத்தவர் இருந்துழி எய்தி – நம்மேல் போர் எடுத்தவரான
(இராமலக்குவர்) இருக்கும் இடம் சென்று; யாரையும் – எல்லோரையும்;
படுத்து இவண் மீடும் – அழித்து இங்கு மீண்டு வருவோம்; என்று
உரைத்த பண்பினீர் – என்று கூறிய பெரு வீரப் பண்பு
உடையவர்களே; எம்பியைத் தடுத்திலீர் – என் தம்பியை இறப்பில்
இருந்து தடுத்தீர்களில்லை; தாங்ககிற்றிலீர் – அவனுக்குத் தீங்கு
நேராமல் காப்பாற்றினீருமல்லீர்; உம் உயிர் கொடுத்திலீர் –
அவனுக்காக உங்கள் உயிரைக் கொடுத்தீர்களுமில்லை; வீரக்
கோட்டியீர் – (அப்படியிருந்தும் நீர்) வீரர் வரிசையில் உள்ளீர்
என்றபடி.
————
‘உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால்
இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச்
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால். 4-
உம்மையின் நின்று – நெடுங்காலத்துக்கு முன்னிருந்து; நான்
உலகம் மூன்றும் ஆண்டது – நான் மூன்று உலகங்களையும் வென்று
அடிப்படுத்தி ஆண்டது; என் வெம்மையின் – எனது பெரு
வலிமையால் (ஆகும்); நீர் என் வென்றியால் – நீங்கள் எனது வெற்றி
காரணமாக; இம்மையில் நெடுந்திரு எய்தினீர் – இப்பிறவியில் மிக்க
செல்வத்தைப் பெற்றீர்; இனிச் செம்மையின் இன் உயிர் தீர்ந்து
தீர்திரால் – இனிமேல் ஆவது செம்மையான (வீரப் பண்பு கொண்டு)
உங்கள் இனிமையான உயிரைக் கொடுத்து கடமையைத்
தீர்த்தவராமின்.
————–
7731. ‘”ஆற்றலம்” என்றிரேல் என்மின்; யான், அவர்
தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங்
கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால்.–5-
ஆற்றலம் என்றிரேல் என்மின் – யாம் பகைவர் முன் சென்று
போரிட வல்லமையில்லோம் என்று கூறுவீ்ர்களாயின் அதையும்
சொல்லுங்கள்; அவர் தோற்று அலம் வந்து உகத் – அப்பகைவர்
தோற்று வலி கெட்டு வருந்துதல் அடையுமாறு; யான் தொல்
நெடுங்கூற்று அலது உயிர் அது குடிக்கும்- நான் பழைய நெடிய
இயமன் அல்லாது பிறர் உயிரைக் குடிக்கும் வலிமை உள்ள; கூர்த்த
என் வேல்தலை மானுடர் வெரிநில் உகத்துரந்து – கூர்மையான என்
வேலின் நுனி மானிடர் இருவரின் முதுகில் வெளிப்படுமாறு செலுத்திக்;
காண்பெனால் – காண்பேன்.
————–
7732. ‘அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: “ஆர் அமர்
வெல்லுதும்” என்றிரேல், மேல் செல்வீர்; இனி,
வல்லது மடிதலே என்னின், மாறுதிர்,
சொல்லும், நும் கருத்து’ என முனிந்து சொல்லினான்.–6-
அல்லதும் உமக்கு உரைப்பது உண்டு – இவையே அல்லாமல்
உமக்கு உரைப்பது வேறு ஒன்றும் உண்டு; ஆர் அமர் வெல்லுதும்
என்றிரேல் மேல் செல்வீர் – கொடிய போரில் வெற்றி பெறுவோம்
என்றீராயின் (போர்) மேல் செல்லுங்கள்; இனிவல்லது மடிதலே
என்னின் – இனி இயல்வது (போரில்) இறத்தலே என்றால்; மாறுதிர் –
மீள்வீராக; நும் கருத்து சொல்லும் – நுமது கருத்து யாது எனச்
சொல்லுங்கள்; என முனிந்து சொல்லினான் – எனச் சினந்து
கூறினான்.
———–
அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறுதல்
கலி விருத்தம் (வேறு)
7733. நதி காய் நெடு மானமும் நாணும் உறா,
மதி காய் குடை மன்னனை வைது உரையா,
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்.–7-
விதிகாயினும் வீரம் வெலற்கு அரியான் – விதியே சினந்தாலும்
வெல்லமுடியாத வீரத்தை உடைய; அதிகாயன் எனும் பெயரான் –
அதிகாயன் என்னும்; பெயரை உடையவன்; நதி காய் நெடுமானமும்
நாணும் உறா – ஆற்று நீரும் சுடுமாறு பெரிய அவமானத்தால்
தோன்றிய கடுஞ்சினமும் நாணமும் அடைந்து. மதி காய் குடை
மன்னனை – மதியை வெல்லும் வெண் கொற்றக் குடையை உடைய
இராவணனை; வைது உரையா அறைவான் – பழித்துக் கூறிக் கூறத்
தொடங்கினான்.
———-
7734. ‘வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா-
லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக; “மேல்
நான் அஞ்சினேன்” என்று, உனை நாணுக; போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ?–8-
வான் அஞ்சுக – வானத்தில் உள்ள தேவர்கள அஞசட்டும்;
வையகம் அஞ்சுக – மண்ணுலக மாந்தர் அஞ்சட்டும்; மாலான் –
திருமாலும்; அஞ்சு முகத்தவன் அஞ்சுக – ஐந்து முகத்தை உடைய
சிவபிரானும் அஞ்சுக; மேல் நான் அஞ்சினென் என்று – மேலும்
நான் போருக்கு அஞ்சினேன் என்று உன்னைப் பற்றி நீயே
நாணப்படுக; போர்யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ –
போருக்கு நான் அஞ்சினேன் என்று கூறுவது தகுதியுடையதா?
———–
7735. வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ?–9-
வெம்மைப் பொருதானவர் மேல் வலியோர் – கொடுமையாகப்
போர் செய்கின்ற தானவரை விட வலிமையுடையவர்; தம்மைத்
தளையில் கொடு தந்திலனோ – தம்மைத் தளையிட்டுப் பிணித்து
வந்து (உன்னிடம்) கொடுத்திலனோ? உம்மைக் குலையப் பொரும்
உம்பரையும் – உம்மையும் நடுங்குமாறு போர் செய்யும் (வலி
படைத்த) தேவர்களையும்; கொம்மைக்குய வட்டணை – திரட்சியான
வாளால் இடம் வலமாகச் சாரிதிரிந்து; கொண்டிலனோ – பொருது
வெற்றி கொண்டிலனோ.
———
7736. ‘காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத்
தேய்ப்புண்டவனும், சில சில் கணையால்
ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால்
ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ?–10-
காய்ப்புண்ட நெடும் படைகை உளதாத் – காய்ச்சிக் கூர்மையாக
அடிக்கப் பெற்ற நெடிய படைக்கலங்கள் தன் கையில் உள்ளதாக;
தேய்ப்புண்டவனும் – தரையில் தேய்க்கப் பட்டு இறந்த
அக்ககுமாரனும்; சில சில் கணையால் ஆய்ப்புண்டவனும் – சில
வலியற்ற அம்புகளால் உயிரொடுங்கியவனான கும்பகருணனும்; அவர்
சொல் வலதால் ஏய்ப்புண்டவனும் – இராம இலக்குவரது புகழின்
வல்லமையால் ஏய்க்கப்பட்டவனான வீடணனும்; என எண்ணினையோ
– என்று (என்னை) எண்ணினாயோ.
————–
அதிகாயன் வஞ்சினம் கூறி, போருக்குச் செல்லல்
7737.
‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக்
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்?–11-
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் – உன் தம்பியின் உயிருக்கு இறுதி
செய்தவனான; ஒருவன் தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து – ஒருவனாகிய
(இராமனின்) தம்பியின் உயிருக்கு அழிவு செய்து; அவனைக்
கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல் – அவனுக்கு நடுக்கம் தரும்
ஒப்பற்ற துன்பத்தைச் செய்யாமல் போவேன் ஆயின்; இனி நான்
நம்பிக்கு ஒரு நன்மகனோ – இனி நான் ஆடவரிற் சிறந்த உனக்கு
ஒப்பற்ற நல்ல மகனாவேனோ?
————
7738. ‘கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம்
மட்டித்து, உயர் வானரர் வன் தலையை
வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக்
கட்டித் தருவென்; இது காணுதியால்.–12-
கிட்டிப் பொருது – நெருங்கிப் போர் செய்து; அக்கிளர் சேனை
எலாம் மட்டித்து – அந்த (கும்பகருணன் மரணத்தால்) கிளர்ச்சி
கொண்டுள்ள குரங்குப் படையை எல்லாம் அழித்து; உயர் வானரர்
வன் தலையை வெட்டித் தரை இட்டு – சிறந்த வானரத்
தலைவர்களின் வலிய தலைகளை எல்லாம் வெட்டித் தரையில்
போட்டு; இரு வில்லினரைக் கட்டித் தருவென் – இரு
வில்லேந்திகளான இராம லக்குவரைக் கட்டிக்கொண்டு வந்து
தருவேன்; இது காணுதியால் – இது நடைபெறப் போகிற செயல்
இதனை நீ காண்பாயாக.
————
7739.
‘”சேனைக் கடலோடு இடை செல்க” எனினும்,
யான் இப்பொழுதே, “தனி ஏகு” எனினும்
தான் ஒத்தது சொல்லுதி; தா விடை’ என்-
றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான்,–13-
சேனைக் கடலோடு இடை செல்க எனினும் – படைக் கடல் சூழ
இடையில் (போருக்குச்) செல்க என்று கட்டளை இட்டாலும் தனி ஏகு
எனினும் – அவ்வாறன்றித் தனியாகவே (போருக்குச்) செல் என்று
கட்டளை இட்டாலும்; யான் இப்பொழுதே – நான் இக்கணத்தே
(அதுசெய்வேன்); தான் ஒத்தது சொல்லுதி – இரண்டனுள்
பொருத்தமானதைச் சொல்வாய்; விடை தா என்றான் – விடை தருக
(என்று அதிகாயன்) கூறினான்; இத்திறம் உன்னி அரக்கர் பிரான் –
இவ்வாறு தன் மகன் கூறிய தன்மையை எண்ணி அரக்கர்
தலைவனாகிய இராவணன் ஏவினனால் (15) என்பதோடு முடியும்.
————-
7740. ‘சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான்,
பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்-
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால்.–14-
நீ துணிந்தனை நன்று இது சொன்னாய் – நீ மனத்தில்
துணிந்தனையாகி நல்ல சொற்களாகிய இவற்றைச் சொன்னாய்;
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் – அந்த இலக்குவனுடைய
உயிரை வாங்கித் தந்தாய் என்றால்; யான் பின்நாள் – நான் பின்
வருநாளில்; அவ் இராமன் எனும் பெயரான் – அந்த இராமன்
என்னும் பெயர் கொண்டவனுடைய; தன் ஆர் உயிர் கொண்டு
சமைக்குவெனால் – அருமையான உயிரைக் கொண்டு (என்பகை)
முடிப்பேன்.
————-
7741. ‘போவாய் இதுபோது-பொலங் கழலோய்!-
மூவாயிர கோடியரோடு, முரண்
கா ஆர் கரி, பரி காவலின்’ என்று,
ஏவாதன யாவையும் ஏவினனால்–15-
பொலங்கழலோய் – பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்
அணிந்தவனே; முரண் மூவாயிர கோடியரோடு – வலிமை உள்ள
முவாயிரங்கோடி காலாட்படை; கா ஆர் கரி – காத்தலைப் பொருந்திய
யானைப்படை; தேர் – தேர்ப்படை; பரி – குதிரைப் படை; காவலின்
போவாய் இது போது – (ஆகியவை) காவல் செய்யப் (போர்க்களம்)
போவாய் இப்போது; என்று ஏவாதன யாவையும் ஏவினனால் – என்று
கூறி (இதுவரை) போருக்கு அனுப்பாத பெரும் படையை
(அதிகாயனுடன் செல்க என) ஏவினான்.
———-
7742. கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,- உன்
செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்.–16-
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – தேவர்களாலும்
வெல்லுவதற்கு முடியாத அருமையானவராகிய பெருவலி படைத்த;
கும்பக் கொடியோனும் – கும்பன் என்ற பெயர் படைத்த
கொடியவனும்; நிகும்பனும் – நிகும்பன் என்பவனும்; வேறு
அம்பொன் கழல் வீரன் அகம்பனும் – (இவர்களில் இருந்து)
வேறுபட்ட அழகிய பொன்னால் ஆகிய கழலணிந்த வீரனாகிய
அகம்பனும்; உன் செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால் –
உன்னுடைய சிவந்த பொன் போல் அழகு பொலிகிற தேருக்கு
அருகில் (பாதுகாப்பவர்) ஆகச் செல்வார்கள்.
கும்பன், நிகும்பன் இருவரும் கும்பகருணனின் மகக்ள். அகம்பன்
– இவன் சுமாலி என்ற அரக்கனுடைய மகன்.
———-
7743. ‘ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன்
போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண்
தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்!–17-
வெந்திறலோய் – கொடிய வலிமை படைத்தவனே! போர் ஏறிட
ஏறுவ – போர்க்களத்தில் மேன்மேற் செல்வன; சிவற்கு உளது
ஓர் ஏறு ஒப்பு உளவாம் – சிவபிரானுக்கு உளதாகிய ஒப்பற்ற
இடபத்தை ஒப்பாக உள்ளனவாகிய; வார் ஏறுவன் வயப்பரி – வார்
பூண்ட வலிய குதிரைகள்; ஆயிரம் பூணுறு திண்தேர் ஏறுதி –
ஆயிரம் பூட்டப்பட்ட வலிய தேரில் ஏறுக, தந்தனென் – அதனை
உனக்குத் தந்தேன்.
———
7744. ‘ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர்
சேமத்தன பின் புடை செல்ல, அடும்
கோ மத்த நெடுங் கரி கோடியோடும்,
போம், அத்தனை வெம் புரவிக் கடலே,’–18-
ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர் – பொருந்திய
அத்தனை (ஆயிரம்) குதிரைகள் பூண்ட அத்தனை தேர்களும்;
சேமத்தன பின்புடை செல்ல – பாதுகாவலாகப் பின்னும்
பக்கங்களிலும் செல்ல; அடும் கோ மத்த நெடுங்கரி – கொல்லும்
தன்மை உள்ள தலைமைத் தன்மை வாய்ந்த மதம் பொருந்திய
நெடிய யானைகள்; கோடியொடும் – கோடியோடு; அத்தனை
வெம்புரவிக் கடலே போம் – அத்தனை கொடிய புரவிக் கடலும் (உன்
உடன்) வரும்.
———–
7745. என்றே விடை நல்க, இறைஞ்சி எழா
வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள்
பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின்
நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால்.–19-
என்றே விடை நல்க – என்று (இராவணன் கூறி) விடை தர;
இறைஞ்சி எழா – (அதிகாயன்) வணங்கி எழுந்து; வன்தாள் வயிரச்
சிலை கைக்கொடு – வலிய முனையை உடைய உறுதியான
வில்லைக் கையில் கொண்டு; வாள் பொன் தாள் கவசம் புகுதா –
ஒளி பொருந்திய பொன்னால் செய்யப்பட்ட கவசத்தினுட்புகுந்து,
முகிலின் நின்றான் – கருமுகில் போல் நின்றான்; இமையோர்கள்
நெளிந்தனரால் – (அத்தோற்றத்தைப் பார்த்து) தேவர்கள் நடுங்கி
உடல் தளர்ந்தனர்.
———-
7746. பல் வேறு படைக்கலம், வெம் பகலோன்
எல் வேறு தெரிப்ப, கொடு ஏகினனால்,
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற,-மா –
வில் வேறு தெரிப்புறும் மேனியினான்.–20-
மாவில் வேறு தெரிப்புறும் மேனியினான் – யானையினும்
(வேறாக) பெரிதாகத் தோன்றும் உடலை உடையவனான அதிகாயன்;
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற – கொடுஞ் சொற்களால் அதட்டுகிற
வீரர் (தன்னைச்) சூழ்ந்துவர; பல்வேறு படைக்கலம் – பலவகையான
வேறுபட்ட படைக்கலங்கள்; வெம்பகலோன் எல்வேறு தெரிப்ப –
கடுமையான கதிரவன் ஒலியைக் காட்டிலும் வேறாக ஒளி
வீசுபவைகளைக்; கொடு ஏகினனால் – (கையில்) கொண்டு சென்றான்.
———-
அதிகாயனுடன் சென்ற படைகள்
7747. இழை, அஞ்சன, மால் களிறு, எண் இல் அரி
முழை அஞ்ச முழங்கின; மும் முறை நீர்
குழை அஞ்ச முழங்கின, நாண் ஒலி; கோள்
மழை அஞ்ச முழங்கின, மா அரசே.–21-
இழை அஞ்சன மால் களிறு – முகபடாம் பூண்ட மைக்கரு
நிறமுடை மதம் மிக்க யானைகள்; முழை அஞ்ச முழங்கின எண்
இல் அரி – குகையில் வாழ்ந்து (கேட்போர்) அஞ்சுமாறு கர்ச்சனை
செய்யும் எண்ணிலா அளவுடைச் சிங்கங்கள்,நாண் ஒலி, மும்முறை
நீர் குழை அச்ச முழங்கின – (ஆகியவற்றோடு) வில்லின் நாணைத்
தெரிக்கும் ஓசை கடல் நீரும் குழைந்து அஞ்சுமாறு முழங்கின;
மாமுரசு கோள் மழை அஞ்ச முழங்கின – பெரிய முரசங்கள் (நீரைக்)
கொள்ளுதல் உடைய மேகங்களும் அஞ்சும்படி முழங்கின.
———
7748. ஆர்த்தார், நெடு வானம் நடுங்க; அடிப்
பேர்த்தார், நிலமாமகள் பேர்வள் என;
தூர்த்தார் நெடு வேலைகள், தூளியினால்;
வேர்த்தார், அது கண்டு விசும்பு உறைவோர்.–22-
நெடுவானம் நடுங்க ஆர்த்தார் – (அதிகாயன் உடன் சென்ற
வீரர்கள் நெடிய வானமும் நடுங்குமாறு பேரொலி செய்தனர்; நிலமா
மகள் பேர்வள் என அடிப் பேர்த்தார் – பெரிய நிலமாகிய பெண்
இடம் பெயர்வள் என்னுமாறு காலை மாறி மாறி வைத்தனர்; நெடு
வேலைகள் தூளியினால் தூர்த்தார் – பெரிய கடல்களை (காலடித்)
தூசியினால் தூர்த்து நிரப்பினர்; அது கண்டு – அச்செயல்களைக்
கண்டு; விசும்பு உறைவோர் வேர்த்தார் – ஆகாயத்தில் வாழ்பவரான
தேவர்கள், உடல் வியர்த்தார்.
————
7749. அடியோடு மதக் களி யானைகளின்
படியோடு நிகர்த்தன, பின் புறம், முன்-
தடியோடு துடக்கிய தாரைய, வெண்
கொடியோடு துடக்கிய, கொண்மு எலாம்.–23-
தடியோடு துடக்கிய தாரைய – தடித்து (மின்னும்) மின்னலோடு
பொருந்திய ஒழுங்கை உடைய; வெண் கொடியோடு துடக்கியகொணமு
எலாம் – வெண்ணிறக் கொடியோடு துடக்குண்டு செல்லும் மேகங்கள்
எல்லாம்; முன் அடியோடு மதக்களி யானைகளின் – முன்னே
விரைவாக அடியிட்டு ஓடுகிற மதக் களிப்பு மிக்க ஆண் யானைகளின், பின்புறம் பிடியோடு
நிகர்த்தன – பின்புறம் செல்லும் பெண் யானைகளை ஒத்தன;
————
7750. தாறு ஆடின மால் கரியின்புடை தாழ்
மாறாடின மா மதம் மண்டுதலால்,
ஆறு ஆடின, பாய் பரி, யானைகளும்;
சேறு ஆடின, சேண் நெறி சென்ற எலாம்.-24-
தாறு ஆடின மால்கரியின் – அங்குசத்தால் பலமுறை குத்தப்பட்ட
மத மயக்கம் கொண்ட யானைகளின்; புடை தாழ் மாமதம்
மண்டுதலால் – பக்கங்களில் (இரு கன்னங்களில்) இருந்து பெருகி
வருகின்ற மதநீர் ஒன்றின் ஒன்று மிக்குப் பெருகி நிறைதலால்;
பாய்பரி யானைகளும் ஆறு ஆடின – பாய்ந்து செல்லும்
தன்மையுள்ள குதிரைகளும் யானைகளும் (அந்த மதநீர் ஆற்றில்)
குளித்தன; சேண் நெறி சென்ற எலாம் சேறு ஆடின – (அதனால்)
(அவை) சென்ற நெடு வழி எல்லாம் சேறாகி விட்டன.
————–
7751. தேர் சென்றன, செங் கதிரோனொடு சேர்
ஊர் சென்றனபோல்; ஒளி ஓடைகளின்
கார் சென்றன, கார் நிரை சென்றனபோல்;
பார் சென்றில, சென்றன பாய் பரியே.–25-
செங்கதிரோனொடு சேர் ஊர் சென்றன போல் – சிவந்த
கதிர்களை உடைய கதிரவனொடு சேர்ந்து ஊர்கோள் சென்றன
போல; தேர் சென்றன – (அதிகாயனுடைய) தேரைச் சூழ்ந்து பல
தேர்கள் சென்றன, கார் நிரை சென்றன போல் – (மின்னலுடன்) கரிய
மேகக் கூட்டங்கள் சென்றன போல்; ஒளி ஓடைகளின் கார் சென்றன
– ஒளி பொருந்தி முகபடாம் அணிந்த யானைகள் சென்றன; பாய்
பரியே பார் சென்றில சென்றன – பாயும் தன்மை உள்ள குதிரைகள்
பூமியில் கால் பதித்துச் செல்லாமல் தாவிச் சென்றன.
——–
கும்பகருணன் உடல் கண்டு அதிகாயன் வருந்துதல்
7752. மேருத்தனை வெற்புஇனம் மொய்த்து, நெடும்
பாரில் செலுமாறு படப் படரும்
தேர் சுற்றிடவே, கொடு சென்று முரண்
போர் முற்று களத்திடைப் புக்கனனால்.–26-
மேருத்தனை வெற்பு இனம் மொய்த்து – மேரு மலையின்
அளிவுள்ள மலைகளின் கூட்டம் நெருங்கி; நெடும் பாரில் செலுமாறு
படப் – பெரிய நிலவுலகில் செல்லும் தன்மை போல; படரும் தேர்
சுற்றிடவே – செல்லுகின்ற தேர்கள் சுற்றி நிற்க; கொடு சென்று – (தன்
படைகளைச் செலுத்திக்) கொண்டு சென்று; முரண் போர் முற்று
களத்திடைப் புக்கனனால் – (மாறுபாடு முற்றுகிற) போர்க் களத்திற்கு
(அதிகாயன்) போய்ச் சேர்ந்தான்.
———
7753. கண்டான், அவ் இராமன் எனும் களி மா
உண்டாடிய வெங் களன் ஊடுருவ;
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன், வந்த சினத் திறலோன்.–27-
அவ் இராமன் எனும் களிமா – அந்த இராமன் என்கின்ற மதங்
கொண்ட யானை; உண்டாடிய வெங்களன் ஊடுருவ கண்டான் –
(உயிர்களை) விழுங்கி விளையாடிய கொடிய போர்க்களத்தை முற்றும்
ஊடுருவிக் கண்டான்; புண்தாள் உறு நெஞ்சு புழுக்கம் உறத் –
(கண்டகாட்சியால்) புண்பட்ட (தன்) மனம் புழுங்கி அவலிக்க; வந்த
சினத்திறலோன் திண்டாடினன் – (போருக்கு வந்த) பெருஞ்சினமும்
வலியும் உடைய அதிகாயன் வருந்தினான்;
———
7754. மலை கண்டனபோல் வரு தோளோடு தாள்
கலை கண்ட கருங் கடல் கண்டு, உளவாம்,
நிலை கண்டன கண்டு, ஒரு தாதை நெடுந்
தலை கண்டிலன், நின்று சலித்தனனால்.–28-
மலை கண்டன போல் வரு தோளொடு – மலையைக் கண்டாற்
போன்று (விளங்கி) வருகின்ற தோள்களுடன்; தாள் கலை கண்ட
கருங்கடல் கண்டு – தாள்களும் கலைதல் பொருந்திய கருமையான
கடலைக் கண்டு; (கும்பகருணன் உடல்) உளவாம் நிலை கண்டன
கண்டு – (அவனுக்கு) நேர்ந்துள்ள நிலைமைகளை (மனத்தில்)
எணணிக் கண்டு; (வருந்திய அதிகாயன்) ஒரு தாதை நெடுந் தலை
கண்டிலென் – ஒப்பற்ற தந்தையாகிய (கும்பகருணனது) பெரிய
தலையைக் கண்டிலேன் என்று; நின்று சலித்தனனால் – (எண்ணி)
நின்று வருந்தினான்.
———–
7755. ‘மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று; திசைக் களிறு அன்று; ஒரு திண்
கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான்
உடல்’ என்று, உயிரோடும் உருத்தனனால்.–29-
இதுமிடல் ஒன்று சரத்தொடு – (இது) வலிமை பொருந்திய
அம்புகளோடு; மீது உயர் வான்திடல் அன்று – மேலே மேடாக
உயர்ந்திருக்கிற திட்டு அன்று; திசைக்களிறு அன்று – திசை
யானைகளின் (உடலும்) அன்று; ஒரு திண் கடல் அன்று – ஒப்பற்ற
வலிமையான கடலும் அன்று; எந்தை கடக் கரியான் உடல் என்று –
என் தந்தையாகிய போரில் கடத்தற்கு அரியவனான கும்பகருணின்
உடல் என்று (உணர்ந்து); உயிரோடும் உருத்தனனால் – (அதிகாயன்)
பெரு மூச்சு விட்டுச் சினப்பட்டான்.
———–
7756. ‘எல்லே! இவை காணிய எய்தினனோ!
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில்
செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ?’–30-
எல்லே – அந்தோ; இவை காணிய எய்தினெனோ – இவற்றைக்
காண்பதற்காகவா (இங்கு) வந்தேன்; ஒருநான் – ஒருவனாகிய நான்;
வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன் – விரைவாக உயிருடன்
உளராகிய மனிதர்களைக் கொல்லாதவனும்; உயிர் கோள் நெறியில்
செல்லேன் எனின் – அவர்களது உயிரைக் கொள்ளுவதற்குரிய
வழியில் செல்லாதவனும் (ஆனேன்) எனின்; இவ் இடர் தீர்குவெனோ
– இந்தத் துன்பத்தை விட்டு நீங்குவேனோ?
எல்லே – அந்தோ, இரக்கக் குறிப்பிடைச் சொல். “எல்லே
இளங்கிளியே இன்னம் உறங்குதியோ” என்று திருப்பாவைப் பாடல்
———
அதிகாயன், இலக்குவன்பால் தூது அனுப்புதல்
7757. என்னா, முனியா, ‘இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படிச் செய்து பெயர்ந்து,
அன்னான் இடர் கண்டு, இடர் ஆறுவென்’ என்று
உன்னா, ஒருவற்கு இது உணர்த்தினனால்:–31-
என்னா முனியா – என்று கூறிச் சினந்து; இது இழைத்துளவன்
பின்னானையும் – இச்செயலைச் செய்தவனாகிய (இராமன்) பின்
பிறந்த (இலக்குவனையும்); இப்படிச் செய்து பெயர்த்து –
இத்தன்மையன் (ஆகும்படி) செய்து போய்; அன்னான் இடர் கண்டு –
அந்த இராமனுடைய துன்பத்தைக் கண்டு; இடர் ஆறுவென் என்று
உன்னா – (என்) துனபம் தணிவேன் என்று நினைத்து; ஒருவற்கு –
ஒரு தூதுவனுக்கு; இது உணர்த்தினனால் – இதனை உணர்த்தல்
ஆனான்.
———-
7758. ‘வா நீ, மயிடன்! ஒரு வல் விசையில்
போ! நீ அவ் இலக்குவனில் புகல்வாய்;
நான் ஈது துணிந்தனென், நண்ணினெனால்;
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய்.–32-
மயிடன் நீ வா – மயிடனே நீ வா; ஒருவல் விசையில் நீ போ –
ஒப்பற்ற மிக்க வேகத்தோடு (புறப்பட்டு) நீ போய்; அவ் இலக்குவனில்
புகல்வாய் – அந்த இலக்குவனிடத்தில் சொல்லுவாய்; நான் ஈது
துணிந்தனென் நண்ணினெனால் – நான் (இலக்குவனை முண்டமாகச்
செய்யும்) இச்செயலை ஆராய்ந்து துணிந்துள்ளேன்; மேல் நீதியை
உன்னி விளம்பிடுவாய் – சிறந்த நீதியை உணர்ந்து சொல்லுவாய்.
———–
7759. ‘”அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்,
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான்” என, முன் சொல் வழங்குதியால்.–33-
உந்து ஆர் துயரோடும் – மேலுந்தி எழுகின்ற மிக்க துயரத்தோடும்;
உருத்து எரிவான் – சினந்து எரிபவன் ஆகிய (அதிகாயன் என்பவன்);
அம்தார் இளவற்கு – அழகிய மாலை அணிந்த தம்பியாகிய
(கும்பகருணன்) இறந்ததன் காரணமாக; அயர்வு எய்தி அழும் –
மனத்துன்பம் அடைந்து அழுகின்ற; தம் தாதை மனத்து இடர்
தள்ளிடுவான் – தம் தந்தையின் மனத் துன்பத்தைப் போக்கும்
பொருட்டு; வந்தான் என – வந்துள்ளான் என; முன் சொல்
வழங்குதியால் – முதற்சொல்லைச் சொல்லுவாய்.
———–
7760. ‘கோளுற்றவன், நெஞ்சு சுடக் குழைவான்,
நாள் உற்ற இருக்கையில், யான், ஒருதன்
தாள் அற்று உருளக் கணை தள்ளிடுவான்,
சூளுற்றதும் உண்டு; அது சொல்லுதியால்;–34-
கோளுற்றவன் – (துன்பம்) கொள்ளுதலைப் பொருந்தியவனாகி;
நெஞ்சு சுடக் குழைவான் – மனம் கொதித்து வருந்துபவனாகிய
இராவணனுடைய; நாள் உற்ற இருக்கையில் – நாளோலக்கமாகிய
அவையில்; ஒரு தன் தாள் அற்று உருளக்கணை தள்ளிடுவான் –
ஒப்பற்ற (இலக்குவன்) தன் கால்கள் அற்று உருளுமாறு அம்புகளைச்
செலுத்துவதாக; யான் சூளுற்றதும் உண்டு – நான் (அதிகாயன்) சபதம்
செய்ததும் உண்டு; அது சொல்லுதியால் – அதனைச் சொல்லுவாய்.
——–
7761. ‘தீது என்று அது சிந்தனை செய்திலெனால்;
ஈது என்று அறம் மன் நெறி ஆம்’ என, ‘நீ
தூது என்று இகழாது, உன சொல் வலியால்,
“போது” என்று, உடனே கொடு, போதுதியால்.–35-
அது தீது என்று சிந்தனை செய்திலெனால் – அவ்வாறு (செய்யக்
கருதிய செயல்) தீமை பயப்பது என்று சிந்தனை செய்ய மாட்டேன்;
ஈது என்று மன் அறம் நெறி ஆம் என – இதுவே எப்பொழுதும்
மன்னர்களுக்கு உரிய அறவழி ஆகும் என்று; நீ தூது என்று இகழாது
– நீ தூதுவன் தானே என்று (அவ்விலக்குவன்) இகழாதவாறு; உன
சொல் வலியால் – உன் சொல்லாற்றலால்; உடனே போது என்று
கொடு போதுதியால் – உடனே உடன் வருவாய் என்ற (அவனை
இங்கு) அழைத்துக் கொண்டு வருவாய்.
———
7762. ‘செரு ஆசையினார், புகழ் தேடுறுவார்,
இருவோரையும், நீ வலி உற்று, “எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்;
வருவோரை எலாம் வருக!” என்னுதியால்.–36-
செரு ஆசையினார் – போரிடுதலில் விருப்பமுள்ளவர்கள்; புகழ்
தேடுறுவார் – புகழைத் தேடுவோர்; இருவோரையும் – ஆகிய இராம
இலக்குவர் இருவரையும்; நீ வலி உற்று – நீ வலிய (எதிரே சென்று)
பொருந்தி; எதிரே பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் –
(என்) எதிரே போரிட வருபவர்கள் இயமபுரியில் புக்கு வாழப்
போகிறவர்கள் (என்று கூறி); வருவோரை எலாம் வருக என்னுதியால்
– (போரிட) வருகின்றவர்களையெல்லாம் வருக என்று கூறிடுவாய்.
——–
7763. ‘சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்,
“வந்தான்” என என் எதிரே, மதியோய்!
தந்தாய்எனின், யான் அலது, யார் தருவார்,
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம்?–37-
மதியோய் – நுண் மதியுடையவனே; எந்தை சிந்தா குலம்
திரித்திடுவான் – என் தந்தையின் மனத் துயரத்தை மாற்றும்
பொருட்டு; வந்தான் என என் எதிரே தந்தாய் எனின் – (அதிகாயன்)
வந்துள்ளான் என்று சொல்லி (இலக்குவனை) எனக்கு எதிரில்
(அழைத்து) வருவாய் என்றால்; உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் –
உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான) உயர்ந்த பொருள்களை எல்லாம்; யான் அலது யார் தருவார் – என்னைத்
தவிர யார் தருவார்கள்?
———
7764.
‘வேறே அவ் இலக்குவன் என்ன விளம்பு
ஏறே வருமேல், இமையோர் எதிரே,
கூறே பல செய்து, உயிர் கொண்டு, உனையும்
மாறே, ஒரு மன் என வைக்குவெனால்.–38-
அவ் இலக்குவன் என்ன வேறே விளம்பு – அந்த இலக்குவன்
என்று வேறாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற; ஏறே வருமேல் –
ஆண் சிங்கமே (போருக்கு) வருவானானால்; இமையோர் எதிரே –
தேவர்களுக்கு எதிரில்; கூறே பல செய்து உயிர் கொண்டு – (அவன்
உடலைப்) பல துண்டுகளாகச் செய்து உயிரைக் கொண்டு; உனையும்
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – உன்னையும் (செய்த
உதவிக்குக்) கைம்மாறாக ஒரு மன்னனாகச் செய்வேன்.
——–
7765. ‘விண் நாடியர், விஞ்சையர், அம் சொலினார்
பெண், ஆர் அமுது அன்னவர், பெய்து, எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு
எண்ணாயிரம் ஆயினும், ஈகுவெனால்.–39-
விண் நாடியர் விஞ்சையர் – (நீ இலக்குவனை என்னிடம்
அழைத்து வந்தால்) வான நாட்டவரும், வித்தியாதரரும் ஆகிய, அம்
சொலினார் – அழகிய சொற்களை உடைய; பெண் ஆர் அமுது
அன்னவர் – பெண்களில் அருமையான அமிழ்தம் போன்றவர்கள்;
பெய்து எவரும் உண்ணாதன – ஊற்றித்தர (வேறு) எவரும்
உண்ணாதனவாகிய; கூர் நறவு உண்ட குடம் – மிகுதியான கள்ளைக்
கொண்ட குடங்கள்; எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் –
எண்ணாயிரம் வேண்டினும் தருவேன்.குறித்து வந்தது. கூர் – மிகுதி உரிச்சொல். தசும்பு – குடம். தசும்பு
துளங்கு இருக்கை என்றார் (பதிற். 42) பதிற்றுப்பத்தில்.
——–
7766. ‘உறைதந்தன செங் கதிரோன் உருவின்
பொறை தந்தன, காசு ஒளிர் பூண், இமையோர்
திறை தந்தன, தெய்வ நிதிக் கிழவன்
முறை தந்தன, தந்து முடிக்குவெனால்,–40-
செங்கதிரோன் உருவின் உறை தந்தன பொறை தந்தன- சிவந்த
கதிர்களை உடைய கதிரவன் நிறத்தோடு பொருந்தியனவும்
பாரமுள்ளனவும்; இமையோர் திறை தந்தன – தேவர்களை திறைப்
பொருளாகத் தந்தனவும்; தெய்வ நிதிக் கிழவன் – தெய்வ நிதிகளுக்கு
எல்லாம் தலைவனான குபேரன்; முறை தந்தன – முறைமை பற்றித்
தந்தன வுமான; காசு ஒளிர்பூண் – மணிகள் ஒளிவிடுகிற
அணிகலன்களை; தந்து முடிக்குவெனால் – தருவேன் (தந்து
முடிப்பேன்).
——–
7767. ‘மாறா மத வாரிய, வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன, பல் பகலும்
தேறாதன, செங் கண வெங் களி மா
நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால்,–41-
வாரிய மதமாறா – வடிகிற மதப்பெருக்கு மாறாதனவும்;
வண்டினொடும் பாறு ஆடுமுகத்தன – வண்டுகளோடு பருந்துகளும்
பறந்து ஆடும் முன்புறத்தை உடையனவும்; பல் பகலும் தேறாதன –
பலநாளும் (மதவெறியில் இருந்து) நீங்காதனவும்; செங்கண்
வெங்களிமா – ஆகிய சிவந்த கண்களை உடைய கொடிய மதம் மிக்க
யானைகள்; நூறாயிரம் ஆயினும் நுந்துவெனால் – நூறாயிரம்
வேண்டுமானாலும் தருவேன்.
———–
7768. ‘செம் பொன்னின் அமைந்து சமைந்தன தேர்
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழாப்
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா,
இம்பர் நடவாதன, ஈகுவெனால்.–42-
செம்பொன்னின் அமைந்து சமைந்தன தேர் – செம்பொன்னால்
செய்யப்பட்டு உறுதி பொருந்திய தேர்களும்; உம்பர் நெடுவானினும்
ஒப்பு உறழாப் – மேல் உள்ள வானுலகத்திலும் ஒப்பும் மாறுபாடும்
இல்லாத; பம்பும் மணிதார் அணி – நிறைந்த மணிகளால் ஆன
மாலைகளை அணிந்து; இம்பர் நடவாதன – இவ்வுலகத்தில்
நடக்காதனவாகி; பாய்பரிமா – பாய்ந்து செல்லும் குதிரைகளை;
ஈகுவெனால் – தருவேன்.
——–
7769. ‘நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்,
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும்,
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்,
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால்.–43-
நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும் – நிதிகளின் வரிசை
மிகுதியாக நிறைந்து வைத்தனவும்; பொதியின் மிளிர் காசு
பொறுத்தனவும் – மூட்டையாக ஒளிவிடுகிற மணிகள் தாங்கியனவும்;
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும் – நிலவு போல் ஒளிவிடுகிற
பட்டாடைகள் வகை வகையாக வைக்கப்பட்டனவும்; சகடு ஆயிரம்
அதிகம் ஈகுவெனால் – ஆகிய வண்டிகள் ஆயிரத்திற்கும்
அதிகமாகத் தருவேன்.
———–
7770. ‘மற்றும், ஒரு தீது இல் மணிப் பணி தந்து,
உற்று உன் நினைவு யாவையும் உந்துவெனால்;
பொன் திண் கழலாய்! நனி போ’ எனலோடு,
எற்றும் திரள் தோளவன் ஏகினனால்.–44-
மற்றும் – மேலும்; ஒரு தீது இல் மணிப் பணி தந்து – ஒரு
குற்றமும் இல்லாத மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்களைக்
கொடுத்து; உன் நினைவு யாவையும் உற்று உந்துவெனால் – நீ
வேண்டி நினைக்கும் (பொருள்கள்) எல்லாவற்றையும் பொருந்தக்
கொடுப்போன்; பொன் திண் கழலாய் – பொன்னில் ஆகிய வலிய
வீரக்கழல் அணிந்தவனே (மயிடனே); நனிபோ எனலோடு – விரைந்து
போ என்று அதிகாயன் கூறியவுடன்; எற்றும் திரள் தோளவன்
ஏகினனால் – (பகைவரைத்) தாக்கும் திரண்ட
தோள்களையுடையவனான மயிடன் செல்லலானான்.
———
மயிடன் வானரரால் பற்றப் படல்
7771.
ஏகி, தனி சென்று, எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின்வாய்,
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்,
‘ஓகைப் பொருள் உண்டு’ என, ஓதினனால்.–45-
தனி சென்று ஏகி – (மயிடன்) தனியே சென்று போய்; எதிர்
எய்தலுறும் காகுத்தனை – தன் முன்பு சேர்ந்த இராமனை; எய்திய
காலையின் வாய் – அடைந்த அப்பொழுதில்; வீரர் வேகத்தொடு
விசைத்து எழலும் – (வானர) வீரர்கள் சினம் கொண்டு வேகமாக
(அவனைப் பற்ற) எழுந்தபோது; ஓகைப் பொருள் உண்டு என
ஓதினனால் – (அந்த மயிடன்) (உங்களுக்கு) மகிழ்ச்சிச் செய்தி ஒன்று
உண்டு எனக் கூறினான்.
——–
இராமன் வானரரை விலக்கி மயிடனை வினவல்
7772. போதம் முதல், ‘வாய்மொழியே புகல்வான்;
ஏதும் அறியான்; வறிது ஏகினனால்;
தூதன்; இவனைச் சுளியன்மின்’ எனா,
வேதம் முதல் நாதன் விலக்கினனால்.–46-
போதம் முதல் – மெய்யுணர்வுக்கு முதலாய் இருப்பவனும்; வேதம்
முதல் நாதன் – வேதங்கள் விளக்கும் சிறப்புப் பொருளாய்
உள்ளவனும் ஆகிய இராமபிரான்; வாய் மொழியே புகல்வான் –
(பற்றிய வானர வீரர்களைப் பார்த்து) இவன் தலைவன் கூறிய
சொற்களைச் சொல்லுபவன்; ஏதும் அறியான் – வேறு எதுவும்
அறியாதவன்; வறிது ஏகினனால் – படைக்கலம் இன்றி வெறுமனே
வந்துள்ளான்; தூதன் – (ஆகவே இவன்) தூதுவனாக இருக்கலாம்;
இவனைச் சுளியன் மின் எனா – (எனவே) இவனை வெகுளாதீர்கள்
என்று; விலக்கினனால் – (அந்த வானர வீரர்களை) விலக்கினான்;
———–
7773. ‘என், வந்த குறிப்பு? அது இயம்பு’ எனலும்,
மின் வந்த எயிற்றவன், ‘வில் வல! உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால்,
மன் வந்த கருத்து’ என, ‘மன்னர்பிரான்!’–47-
என் வந்த கருத்து அது இயம்பு எனலும் – (வானரரை விலக்கிய
இராமன்) நீ வந்த காரணம் எது பற்றியது அதைச் சொல் எனக்
கேட்ட அளவில்; மின் வந்த எயிற்றவன் – ஒளி பொருந்திய பற்களை
உடைய (அந்த மயிடன்); வில்வல, மன்னர் பிரான் – வில் தொழில்
வல்லவனே மன்னர் பெருமானே; மன் வந்த கருத்து – எம் மரசன்
கொண்டுள்ள கருத்தை; உன் பின் வந்தவனே அறி பெற்றியதால்
என – உன் பின் பிறந்தவனாகிய இலக்குவனே அறியும் தன்மையது என;
(அடுத்த பாடலில் தொடர் முடியும்.)
———
இலக்குவன் வினவ, தூதன் தான் வந்த செய்தி உரைத்தல்
7774. ‘சொல்லாய்; அது சொல்லிடு, சொல்லிடு’ எனா,
வில்லாளன் இளங்கிளையோன் விவை,
பல் ஆயிர கோடி படைக் கடல் முன்
நில்லாய்’ என, நின்று நிகழ்த்தினனால்.–48-
வில்லாளன் இளங்கிளையோன் – வில்லாளனாகிய இராம
பிரானுக்குத் தம்பியாகிய இலக்குவன்; அது சொல்லாய் – (நீ வந்த
காரணத்தைச்) சொல்வாய்; சொல்லிடு சொல்லிடு எனா வினவ –
சொல்லிடு என்று வினவ; பல் ஆயிர கோடி படைக் கடல் முன் –
(அதிகாயனுடைய) பல ஆயிரம் கோடிப் படையாகிய கடலுக்கு முன்;
நில்லாய் என – எதிர்த்து நிற்பாய் என்று; நின்று நிகழ்த்தினனால் –
நின்று கொண்டு மேலும் கூறத் தொடங்கினான்.
———
7775. ‘உன்மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன்; நாடி அவன்-
தன்மேல் எதிரும் வலி தக்குளையேல்,
பொன் மேனிய! என்னொடு போதுதியால்.–49-
பொன் மேனிய – பொன் போன்ற மேனிய; உன் மேல்
அதிகாயன் உருத்துளனாய் – உன் மீது அதிகாயன் சினம்
கொண்டவனாகி; நாடி நல்மேருவின் நின்றனன் – (உன்னை) எதிர்
பார்த்து நல்ல மேருமலை போல் நின்றுள்ளான்; அவன் தன் மேல்
எதிரும் வலி தக்குளையேல் – அவன் தன் மேல் எதிர்ப்பதற்கு
உரிய வலிமை பெற்றுள்ளாயானால்; என்னோடு போதுதி – என்னோடு
வருவாய்.
———–
7776. ‘சையப் படிவத்து ஒரு தந்தையை முன்
மெய் எப்படிச் செய்தனன் நும் முன், விரைந்து,
ஐயப்படல், அப்படி இப் படியில்
செய்யப்படுகிற்றி; தெரித்தனெனால்.–50-
சையப் படிவத்து ஒரு தந்தையை – மலை போன்ற வடிவுடைய
தந்தையின் (கும்பகருணனது); மெய் எப்படி நும்முன் செய்தனன் –
உடம்பை எப்படி உன் தமையன் முன்பு செய்தானோ; விரைந்து அப்படி இப்படியில் செய்யப்படு கிற்றி –
அப்படி விரைந்து இந் நிலத்தில் (நீ) செய்யப்படுவாய்; ஐயப்படல்
தெரிந்தனெனால் – (அது பற்றி) சந்தேகப்படாதே (அதை நான்)
தெரிவித்து விட்டேன்
———
7777. ‘”கொன்றான் ஒழிய, கொலை கோள் அறியா
நின்றானொடு நின்றது என், தேடி?” எனின்,
தன் தாதை படும் துயர், தந்தையை முன்
வென்றானை இயற்றுறும் வேட்கையினால்.–51-
கொன்றான் ஒழிய – (கும்பகருணனைக்) கொன்றவனாகிய
(இராமனை) விட்டு; கொலை கோள் அறியா நின்றானொடு –
அக்கொலைச் செயலைச் செய்து அறியாது நின்றவனாகிய
(இலக்குவனை); தேடி நின்றது என் எனின் – (இந்த அதிகாயன்)
தேடிப் (போரிட) நிற்பது எற்றுக்கு எனின்; தன் தாதை படும் துயர் –
(அதிகாயனாகிய) தன்னைப் பெற்ற இராவணன் படும் துன்பத்தை;
தந்தையை முன் வென்றானை – (சிறிய) தந்தையாகிய கும்பகருணனை
முன்பு வென்றவனாகிய இராமனுக்கு; இயற்றுறும் வேட்கையினால் –
உண்டாக்கும் ஆசையினால்;
————
7778.
வானோர்களும், மண்ணினுளோர்களும், மற்று
ஏனோர்களும், இவ் உரை கேண்மின; இவன்-
தானே பொருவான்; அயலே தமர் வந்து
ஆனோரும் உடன் பொருவான், அமைவான்.–52-
வானோர்களும் – வானில் உள்ள தேவர்களும்;
மண்ணினுளோர்களும் – நிலவுலகில் உள்ளவர்களும்; மற்று
ஏனோர்களும் – மற்றும் உள்ள பிறரும்; இவ் உரை கேண்மின் –
இந்தச் சொல்லைக் கேளுங்கள்; இவன் தானே பொருவான் – இந்த
அதிகாயன் தானே (இலக்குவனுடன்) போரிடுவான்; அயலே தமர்
வந்து ஆனோரும் உடன் பொருவான் – பக்கத்தில் துணையாக உறவினர்களாய்ச்
சேர்ந்து வந்தவர்களுடன் போரிடுவதற்கு; அமைவான் –
சம்மதிப்பான்.
———–
இராமன் இலக்குவனை அனுப்பல்
7779. ‘எழுவாய், இனி என்னுடன்’ என்று, எரியும்
மழு வாய் நிகர் வெஞ் சொல் வழங்குதலும்,
தழுவா, ‘உடன் ஏகுதி; தாழல்!’ எனத்
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும்.–53-
இனி என்னுடன் எழுவாய் என்று – இப்போது என்னுடன்
(வருவதற்கு) எழுவாய் என்று; எரியும் மழுவாய் நிகர் வெஞ்சொல்
வழங்குதலும் – எரிகின்ற மழுவின் வாயை ஒத்த கொடுமையான
சொல்லை (மயிடன்) சொல்லுதலும்; தொழுவார் தொழு தாள் அரி –
தொழுபவர்கள் தொழத்தக்க திருப்பாதங்களையுடைய திருமாலின்
அவதாரமாகிய இராமபிரான்; தழுவா – (இலக்குவனைத்)
தழுவிக்கொண்டு; உடன் ஏகுதி தாழல் எனச் சொல்லுதலும் – உடனே
போ, கால தாமதம் செய்யற்க என்று சொன்னபோது.
————–
வீடணன் அதிகாயனது திறம் குறித்தல்
7780. ‘எல்லாம் உடன் எய்திய பின், இவனே
வில்லானொடு போர் செய வேண்டும்’ எனா,
நல்லாறுடை வீடணன், நாரணன்முன்
சொல்லாடினன்; அன்னவை சொல்லுதுமால்.–54-
நல்லாறுடை வீடணன் – நல்லற வழியில் செல்லும் தன்மையுள்ள
வீடணன்; எல்லாம் உடன் எய்திய பின் – நாம் எல்லாம்
(இலக்குவனுக்குத்) துணையாக உடன் போய்ப் (போர்க்களம்) சேர்ந்த
பின்; இவனே வில்லானொடு போர் செய வேண்டும் எனா – இந்த இல்ககுவனே வில்லாளியான (அதிகாயனுடன்) போர் செய்ய
வேண்டும் என்று,; நாரணன் முன் சொல்லாடினன் – நாராயணனின்
அவதாரமாகிய இராமபிரானிடம் (அந்த அதிகாயனைப் பற்றிய)
செய்திகளைத் கூறினான்; அன்னவை சொல்லுதுமால் – அவற்றைச்
சொல்லுவோம்.
——-
7781. ‘வார் ஏறு கழற் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா,
தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண்
கார் ஏறு என வந்த கதத் தொழிலோன்.–55-
வார் ஏறு கழற்சின வாள் அரி – (இவ்வதிகாயன்) கச்சினால்
கட்டப்பட்ட வீரக் கழல் அணிந்த சினங்கொண்ட கொடிய ஆண்
சிங்கம் போன்றவனாகிய; எம் போர் ஏறொடு போர் புரிவான்
அமையா – போரில் வல்ல எம் இலக்குவனோடு போர் புரிவதற்கு
உடன்பட்டுத்; தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண் – தேரில் ஏறி வந்த
சினமும் கொடிய அஞ்சாமையும் கொண்ட; கார் ஏறு என வந்த கதத்
தொழிலோன் – கரிய மேகம் என்னுமாறு வந்த சினம் மிக்க தொழிலை
உடையவன்.
———-
7782. ‘ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்,
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்,
சாவான் இறையும், சலியா வலியான்,
மூவா முதல் நான்முகனார் மொழியால்.-56-
ஓவா நெடு மாதவம் ஒன்று உடையான் – நீங்காத மிகப்
பெருந்தவம் ஒன்று உடையவன்; மூவா முதல் நான்முகனார்
மொழியால் – கெடாத முதற்பொருளாகிய பிரமன் தந்த வரத்தால்;
தேவாசுரர் ஆதியர் செய் செருவில் – தேவாசுரர் முதலியோர் செய்த
போரில்;சாவான் – சாவாமல்; இறையும் சலியா வலியான் – சிறிது கூட
சலிப்படையாத வலி பெற்றவன்.
———
7783. ‘கடம் ஏய் கயிலைக் கிரி, கண்ணுதலோடு
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை,
திடமே உலகில் பல தேவரொடும்,
வட மேரு எடுக்க, வளர்த்தனனால்.–57-
கடம் ஏய் கயிலைக் கிரி – காடுகள் பொருந்திய கயிலை மலையை;
கண்ணுதலோடு இடம் ஏற எடுத்தனம் என்று – நெற்றிக்
கண்ணையுடைய சிவபிரானோடு அடியோடு (நாம்) பெயர்த்து
எடுத்தனம் என்பதற்காக; இவனைப் பல தேவரோடும் உலகில்
திடமே வடமேரு எடுக்க – இவ்வதிகாயனைப் பல தேவர்களோடு
உலகில் வலிமை மிக்க வடமேரு மலையை எடுக்க; வளர்த்தனன் –
வளர்த்தான்.
——-
7784. ‘மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா,
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய,
காலால் நெடு வேலை கலக்கிடுமால்;–58-
மாலாரொடு மந்தரம் மாசுணமும் – (இவன்) திருமாலும் மந்தர
மலையும் வாசுகி என்ற பாம்பும்; மேலாகிய தேவரும் வேண்டும்
எனாது – சிறப்புடைத் தேவர்களும் (கடைவதற்கு உதவ) வேண்டும்
என்னாது; ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய – ஆலகால நஞ்சும்,
அருமையான அமிழ்தமும் வெளிப்பட்டுத் தோன்றுமாறு; காலால்
நெடுவேலை கலக்கிடும் – தன் காலாலேயே பெரிய பாற்கடலைக்
கலக்க வல்லவன்.
———-
7785. ‘ஊழிக்கும் உயர்ந்து, ஒரு நாள் ஒருவாப்
பாழித் திசை நின்று சுமந்த, பணைச்
சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ?
ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்;–59-
ஊழிக்கும் ஒருவா உயர்ந்து – ஊழிக்காலத்திலும் அழியாமல்
மேம்பட்டு உயர்ந்து; ஒருநாள் பாழித் திசை நின்று சுமந்த –
ஒருநாளும் (நீங்காமல்) வலிய திசைகளில் நின்று சுமந்த; பணைச்
சூழிக்கரி தள்ளுதல் தோள் வலியோ – பருத்த முகபடாம் அணிந்த
திசை யானைகளைத் தள்ளுதல் தோள் வலிமையாகுமா? ஓர்
அங்கையினால் ஆழிக்கிரி தள்ளும் – (இவ்வதிகாயன்) ஒப்பற்ற தன்
உள்ளங்கையினால் சக்கரவாள மலையையும் தள்ளி விடுவான்.
———
7786. ‘காலங்கள் கணக்கு இற, கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய, கொடு, ‘விட்டது நீள்
சூலம்கொல்?’ எனப் பகர் சொல் உடையான்;–60-
கணக்கு இற காலங்கள்கண் இமையா – கணக்கற்ற காலங்கள் கண்
இமைத்தல் இல்லாத; ஆலம்கொள் மிடற்றவன் – ஆலகால நஞ்சைக்
கழுத்தில் கொண்ட (நீலகண்டனாகிய) சிலபிரான்; ஆர் அழல் வாய்
வேல் அங்கு எறிய – நிறைந்த நெருப்பு பொருந்திய வேலினை
(போரில் இவ்வதிகாயன் மீது) எறிந்த பொழுது; கொடு விட்டது நீள்
சூலம் கொல் என – (அதனைக் கையில் பற்றிக்) கொண்டு (நீ) விட்டது
(இந்த) நீண்ட சூலம் போலும் என்று; பகர் சொல் உடையான் –
செல்லுகின்ற சொல்லை உடையவன்.
ஆலம் கொள்மிடற்றவன் – சிவபிரான். பாற்கடலைக் கடைந்த
போது தோன்றிய நஞ்சினை உண்டு அமரர்களைக் காத்தவன்,
“விண்ணோர் அமுதுண்டும் சாவ நீ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டும்
இருந்தருள் செய்குவாய்” என்பர் இளங்கோவடிகள்.
———–
7787. பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
புகை ஆடிய நாள், புனை வாகையினான்,
“மிகை ஆர் உயிர் உண்” என வீசிய வெந்
தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்;–61-
பகை ஆடிய வானவர் பல்வகை ஊர் – (இவ்வதிகாயனோடு)
பகைமை கொண்ட தேவர்களின் பல பகுப்புகள் கொண்ட ஊர்களை;
புகை ஆடிய நாள் – (இவன்) சுட்டு எரிக்கத் தொடங்கிய காலத்தில்;
புனை வாகையினான் – வெற்றிக்குறியாகிய வாகை மாலை அணிந்த
திருமால்; மிகை ஆர் உயிர் உண் என வீசிய – (இவனது)
தேவையற்ற குற்றமுள்ள இனிய உயிரை அழிப்பாய் என்று வீசிய;
வெந்தகை ஆழி தகைந்த தனுத் தொழிலோன் – கொடிய தன்மை
பொருந்திய சக்கரப் படையைத் தடுத்த வில்லாற்றல் தொழில் உடையவன்
———–
7788. ‘உயிர் ஒப்பறு பல் படை உள்ள எலாம்,
செயிர் ஒப்புறும் இந்திரர், சிந்திய நாள்,
அயிர் ஒப்பன நுண் துகள்செய்து, அவர்தம்
வயிரப் படை தள்ளிய வாளியினான்;–62-
செயிர் ஒப்புறும் இந்திரர் – சினம் மிகக் கொண்ட இந்திரன்; உயிர்
ஒப்புறும் உள்ள எலாம் பல் படை – தன் உயிருக்கு ஒப்பாகக்
கூறத்தக்க தன்னிடம் உள்ள பலவகையான படைக்கலங்களை; சிந்திய
நாள் – (இவ்வதிகாயன் மீது) செலுத்திய காலத்தில்; அயிர் ஒப்பன
நுண்துகள் செய்து – (இவன் அப்படைக்கலங்களை) மணலுக்கு
ஒப்பான நுண்ணிய பொடியாகச் செய்து; அவர் தம் வயிரப்படை
தள்ளிய வாளியினான் – அந்த இந்திரனின் வச்சிராயு தத்தை
வலியிலதாக்கிய அம்புகளை உடையவன்.
————
7789. ‘கறற்ான், மறை நூலொடு கண்ணுதல்பால்;
முற்றாதன தேவர் முரண் படைதாம்,
மற்று ஆரும் வழங்க வலார் இலவும்,
பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான்;–63-
கண்ணுதல் பால் – நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் இடத்தில்;
மறை நூலோடு கற்றான் – வேதங்களையும் போர் நூல்களையும்
கற்றவன்; தேவர் முற்றாதன முரண் படைதாம் – தேவர் (செலுத்திப்)
பழகாதனவாகிய வலிய படைக்கருவிகளை; மற்று ஆரும் வழங்கவலார்
இலவும் பெற்றான் – பிறர் யாரும் செலுத்த வல்லவர்
இல்லாதனவுமாகிய கருவிகளைப் பெற்றான்; நெடிது ஆண்மை
பிறந்துடையான் – (அதனால்) மிகக் ஆண்மை தோன்றப்
பெற்றுள்ளான்.
———
7790. ‘அறன் அல்லது நல்லது மாறு அறியான்;
மறன் அல்லது பல் பணி மாறு அணியான்;
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான்;
“உறல் நல்லது, பேர் இசை” என்று உணர்வான்;–64-
நல்லது அறன் அல்லது மாறு அறியான் – (இவ்வதிகாயன்)
நன்மை பயக்கும் அறன் இல்லாதது தவிர வேறு ஒன்று அறிய மாட்டான்;
பல் பணி மறன் அல்லது மாறு அணியான் – பல அணிகலன்களாக
வீரத்தைத் தவிர வேறு ஒன்றை அணிய மாட்டான்; திறன் அல்லது
ஓர் ஆர் உயிரும் சிதையான் – வலிமை இல்லாததாகிய (எந்த ஒரு)
ஒப்பற்ற அருமையான உயிரையும் அழிக்க மாட்டான்; பேரிசை உறல்
நல்லது என்று உணர்வான் – பெரும் புகழே அடைதற்கு உரிய நல்லது
என்று உணர்வான்.
———–
7791. காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்,
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்,
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்.–65-
காயத்து உயிரே விடு காலையினும் – (இந்த அதிகாயன்
போர்க்களத்தில்) உடலின் உள்ள உயிரையே விட வேண்டிய காலம்
வந்தாலும்; மாயத்தவர் கூடி மலைந்திடினும் – (தன்னோடு)
வஞ்சனைத் தொழில் செய்வார் பலர் கூடிப் போரிட்டாலும்;
தேயத்தவர் செய்குதல் செய்திடினும் – உலகில் உள்ளவர்கள் எல்லாம்
(தனக்கு) எதிராக ஏமாற்றுப் (போரைச்) செய்தாலும்; மாயத் தொழில்
செய்ய மதித்திலனால் – மாயத் தொழிலைச் செய்ய (எப்போதும்)
மதித்துக் கருத மாட்டான்.
————
அதிகாயன் வரலாறு
7792. ‘மது கைடவர் என்பவர், வானவர்தம்
பதி கைகொடு கட்டவர், பண்டு ஒரு நாள்,
அதி கைதவர், ஆழி அனந்தனையும்,
விதி கைம்மிக, முட்டிய வெம்மையினார்.–66-
அதி கைதவர் – மிக்க வஞ்சனை உடையவரான; மது, கைடவர்
என்பவர் – மது கைடவர் என்ற பெயருடைய தானவர்கள்; வானவர்
தம் பதிகைகொடு கட்டவர் – தேவர்களுடைய ஊரைக் கைப்பற்றிச்
கொண்டு அழித்தவராவர்; பண்டு ஒருநாள் விதி கைம்மிக – முன்பு
ஒரு காலத்தில் விதியானது மிகுதியாகத் தூண்ட; ஆழி
அனந்தனையும் முட்டிய வெம்மையினார் – பாற்கடலில் திருப்பள்ளி
கொண்டுள்ள (கடவுளாகிய) திருமாலையும் எதிர்த்த கொடுமை
உடையோராவர்.
———–
7793. ‘நீர் ஆழி இழிந்து, நெடுந்தகையை,
“தாராய் அமர்” என்றனர், தாம் ஒரு நாள்;
ஆர் ஆழிய அண்ணலும், அஃது இசையா,
“வாரா, அமர் செய்க!” என வந்தனனால்,–67-
தாம் ஒருநாள் – (அவர்கள்) தாம் ஒருநாள்; நீர் ஆழி இழிந்து –
பாற்கடலில் இறங்கி; நெடுந்தகையை – பெருந்தன்மையுள்ள
திருமாலைப் பார்த்து; அமர் தாராய் என்றனர் – போர் தருவாய்
என்றனர்; ஆர் ஆழிய அண்ணலும் – வெலற்கரிய சக்கரப் படையை
ஏந்திய தலைவனான (திருமாலும்); அஃது இசையா – அதனை
ஏற்றுக்கொண்டு; வாராஅமர் செய்க என்று வந்தனனால் – இது
வரையில் நிகழ்ந்திராத (கொடிய) போரைச் செய்க என்று சொல்லி
வந்தான்.
———-
7794. ‘வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும்,
நல்லார் முறை வீசி, நகும் திறலார்
மல்லால் இளகாது, மலைந்தனன் மால்;
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால்.–68-
வல்லார் உரு ஆயிரம் ஆய்வரினும் – வல்லமை உடையவர் உரு
ஆயிரம் கொண்டு வந்தாலும்; நல்வார் முறை வீசி நகும் திறலார் –
நன்மை மிகுந்த போர் முறையால் வீசிச் சிரிக்கும்
வலிமையுடையவரான (அந்த மதுகைடபருடன்); மால் மல்லால்
இளகாது மலைந்தனன் – திருமால் மற்போரினால் பின் வாங்காது
போரிட்டனன்; அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – அங்ஙனம்
போர் புரிகை நாள்கள் ஆயிரம் கழிந்து போயின.
———–
7795. ‘தன் போல்பவர் தானும் இலாத தனிப்
பொன்போல் ஒளிர் மேனியனை, “புகழோய்!
என் போல்பவர் சொல்லுவது, எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர்?” என்று உரையா,–69-
தன் போல்பவர் தானும் இலாத – தன்னை ஒத்தவர் யாவர் தானும்
இல்லாத; தனிப்பொன் போல் ஒளிர் மேனியனை – சிறப்புடைய
பொன்போல் ஒளி விடுகிற திருமேனியை உடைய (திருமாலை);
புகழோய் – (அந்த மதுகைடபர்கள்) பார்த்துப் புகழுடையவனே; என்
போல்பவர் சொல்லுவது – எங்களைப் போன்றவர் சொல்லுவதற்கு
உரித்தானது (யாதெனில்); எண் உடையார் உன் போல்பவர் யார்
உளர் – எண்ணி மதிக்கத்தக்க வலிமை உடையார் உன்னைப்
போன்றவர் யாவர் உளர்; என உரையா – என்று கூறி; இவ்
“என உரையா” என்பது 71 ஆம் பாடலில் உள்ள “சொல்லுதலும்”
என்றதனோடு இயையும்.
————
7796. ‘”ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்;
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்!
தருவோம் நின் மனத்தது தந்தனமால்;–70-
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – (நாங்கள்)
ஒருவராகவே ஏழு உலகத்தையும் உண்டு உமிழக் கூடிய வலிமை
உடையவராவோம்; இருவோமொடு – (அப்படிப்பட்ட தனித்தனி
வலிமை வாய்ந்த எங்கள்) இருவருடனும்; இத்தனை நாள் நீ தனி
பொருவோமொடு நேர் பொருதாய் – இவ்வளவு காலமும் நீ தனியாகப்
பொருகின்ற (எங்களோடு) நேர் நின்று போர் செய்தாய்; புகழோய் –
புகழுக்கு உரியவனே; நின் மனத்தது தருவோம் தந்தனமால் – (நீ)
உன் மனத்தினால் வேண்டும் வேண்டுதலைத் தருவோம்; தந்தோ
விட்டோம்.
————
7797.
‘”ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச்
சொல்லும்படி” என்று, அவர் சொல்லுதலும்,
“வெல்லம்படி நும்மை விளம்பும்” எனக்
கொல்லும்படியால் அரி கூறுதலும்.–71-
நல்லது உனக்கு ஒல்லும்படி உதவச் – நன்மை உனக்கு ஏற்படும்
படி உதவுவதற்காகச்; சொல்லும் படி என்று அவர் சொல்லுதலும் –
சொல்லுக என்று அவர் சொல்லுதலும்; நும்மை வெல்லும் படி
விளம்பும் என – உங்களை வெல்வதற்கான வழியைச் சொல்லுங்கள்
என்று; கொல்லும்படியால் அரி கூறதலும் – (அவர்களைக்)
கொல்லுவதற்காகத் திருமால் கூறிய உடனே.
——-
7798. ‘”இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின்
தொடையில் படுகிற்றும்” எனத் துணியா,
“அடையச் செயகிற்றி; அது ஆணை” எனா,
நடையில் படு நீதியர் நல்குதலும்,–72-
நடையில் படு நீதியர் – ஒழுக்கம் தவறாத நீதி வழிப்
பட்டவர்களாகிய (அந்த மதுகைடவர்); யாம் ஒரு நின் தொடையில்
படுகிற்றும் – நாங்கள் ஒப்பற்ற உன்னுடைய தொடையில் இறக்க
வல்லோம்; இடையில் படுகிற்கிலம் எனத் துணியா – வேறு இடத்தில்
இறக்க மாட்டோம் என்று துணிந்து (சொல்லி); அடையச் செய்கிற்றி
அது ஆணை எனா – (நீ எங்களை உன் தொடைக்குள்ளே)
அடையும்படி செய்வாய், அது (நீ செய்யவேண்டிய) எங்களுடைய
ஆணை என்று; நல்குதலும் – (மேலும்) கூறுதலும் (தொடர் அடுத்த
பாடலில் முடியும்.)
———–
7799. ‘விட்டான், உலகு யாவையும், மேலொடு கீழ்,
எட்டா ஒருவன் தன் இடந் தொடையை;
ஒட்டாதவர் ஒன்றினர், ஊழ்வலியால்
பட்டார்; இது பட்டது பண்டு ஒருநாள்.–73-
எட்டா ஒருவன் – மன வாக்குகளுக்குத் கோசரமாகாது கடந்து
நின்ற திருமால்; உலகு யாவையும் மேலொடு கீழ் – மேலும் கீழும்
உள்ள எல்லா உலகங்களையும் (பொருந்தி நீண்டு செல்லுமாறு); தன்
இடந்தொடையை விட்டான் – தனது இடத்தொடையை (நீள)
விட்டான்; ஊழ் வலியால் – ஊழின் வலிமை காரணமாக,; ஒட்டாதவர் ஒன்றினர் பட்டார் – பகைவர்களான மது
கைடபர்கள் அத்தொடையில் அகப்பட்டுக் கொண்டார்கள்; இது
பட்டது பண்டு ஒருநாள் – இது நிகழ்ந்தது முன் ஒரு காலத்தில்.
———–
7800. ‘தனி நாயகன், வன் கதை தன் கை கொளா,
நனி சாட, விழுந்தனர், நாள் உலவா;
பனியா மது மேதை படப் படர் மே-
தினி ஆனது, பூவுலகு எங்கணுமே.–74-
தனி நாயகன் – ஒப்பறு தலைவனாகிய (திருமால்); வன் கதை தன்
கை கொளா – வலிய கதையைத் தன் கையில் கொண்டு; நனி சாட –
நன்றாக மோதி அடிக்க; நாள் உலவா விழுந்தனர் – வாழ்நாள் உலந்து
இறந்தனர்; பூவுலகு எங்கணுமே – (இந்த) பூமி முழுவதும்; பனியா
மதுமேதை படப் – நடுக்கம் இல்லாத மதுவினுடைய கொழுப்புப்
பட்டதால்; படர் மேதினி ஆனது – பரந்த மேதினி என்ற பெயரைப்
பெறலாயிற்று.
———
7801. ‘விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்;
கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல்
அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால்.’–75-
இவ் உகம் தனில் – இந்த யுகத்தில்; மெய் வலியால் மது
ஆனவன் எம்முன் – உடல் வலி மிக்க மது என்பவன் ஆகிய என்
அண்ணன் (கும்பகருணன்); விதியால் மடிந்தனனால் – ஊழ் வினையின்
வலிமையால் இறந்து பட்டான்; கதிர்தான் நிகர் கைடவன் –
கதிரவனை ஒத்துச் (சுட்டு எரிக்கும்) ஆற்றல் உள்ள கைடவன்;
இக்கதிர் வேல் அதிகாயன் – இந்த ஒளி பொருந்திய வேல் ஏந்திய
அதிகாயனாவன்; இது ஆக அறைந்தனெனால் – இச்செய்தியை
மனத்தில் படுமாறு கூறினேன்.
மது, கைடபர் ஒரு கற்பத்தில் திருமாலின் காதில் இருந்து
தோன்றியவர்கள் என்பர். திருமாலின் மூச்சில் பிறந்தவர்கள் என்று
கூறுவதும் உண்டு. இவர்கள் திருமாலுடன் போரிட்டு அவர்
தொடையில் அகப்பட்டுக் கதையால் கொல்லப்பட்டனர். அவர்களுள்
மது கும்பகர்ணன் ஆகவும், கைடபன் அதிகாயன் ஆகவும் இந்த
யுகத்தில் பிறந்தனர் என்க.
———–
இராமன் இலக்குவன் வலிமை கூறல்
7802. என்றான், அவ் இராவணனுக்கு இளையான்;
‘நன்று ஆகுக!’ என்று, ஒரு நாயகனும்,
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா-
நின்றான், இது கூறி நிகழ்த்தினனால்:–76-
அவ் இராவணனுக்கு இளையான் என்றான் – என்று அந்த
இராவணனுக்கு தம்பியாகிய – (வீடணன்) கூறினான்; நன்று ஆகுக
என்று – நன்று ஆகட்டும் என்று; ஒரு நாயகனும் – ஒப்பற்ற
தலைவன் ஆகிய இராமனும்; மின் தான் உமிழ் வெண் நகை வேறு
செயா – மின்னலை ஒத்து வெளிப்படும் வெள்ளிய பற்கள் தெரியுமாறு
சிரிப்பை வேறாக வெளிப்படுத்தி; நின்றான் இது கூறி நிகழ்த்தினனால்
– நின்று இதனைக் கூறத் தொடங்கினான்.
———
7803. ‘எண்ணாயிர கோடி இராவணரும்
விண் நாடரும், வேறு உலகத்து எவரும்
நண்ணா ஒரு மூவரும், நண்ணிடினும்,
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால்;–77-
எண்ணாயிர கோடி இராவணரும் – எண்ணாயிரங்கோடி
இராவணர்களும்; விண் நாடரும் – விண்ணுலகத்தவரும்; வேறு
உலகத்து எவரும் – வேறு உலகங்களில் உள்ள எவரும்; நண்ணா ஒரு
மூவரும் – நெருங்குதற்குரிய வலி படைத்த ஒப்பற்ற
மூவரும்; நண்ணிடினும் – நெங்கிப் (போரிட எதிர் வரினும்); இவன்
வில் தொழில் கண்ணால் காணுதியால் – (அவர்களை எல்லாம்
எதிர்க்க வல்ல) இந்த இலக்குவனுடைய வில் தொழில் ஆற்றலைக்
கண்ணால் (நேரிடையாகக்) காண்பாய்.நண்ணா – நெருங்குதற்கரிய, நண்ணுதல் – நெருங்குதல். ஆல் –
அசை.
———
7804. ‘வான் என்பது என்? வையகம் என்பது என் மால்-
தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர்,
யான் என்பது என்? ஈசன் என இமையோர்
கோன் என்பது என்?-எம்பி கொதித்திடுமேல்!–78-
எம்பி கொதித்திடுமேல் – என் தம்பியாகிய (இலக்குவன்) சினம்
கொள்வான் ஆனால்; வான் என்பது என் – வானத்துத் தேவர்கள்
என்று கூறுவது என்ன? வையகம் என்பது என் – நிலவுலகத்தவர்
என்பது என்ன? மால்தான் என்பது என் – திருமால் என்று கூறுவது
தான் என்ன? வேறு தனிச்சிலையோர் தான் என்பது என் –
(பிறரிடம் இருந்து) வேறுபட்ட சிறப்பான வில்லாளிகள் தான் என்ன?;
ஈசன் என் இமையோர் கோன் என்பது என் – சிவபெருமான்
என்பது என்ன? தேவர் தலைவனான இந்திரன் என்பது என்ன?
—————
7805. ‘தெய்வப் படையும், சினமும், திறலும்
மய் அற்று ஒழி மா தவம், மற்றும் எலாம்,
எய்தற்கு உளவோ-இவன் இச் சிலையில்
கய் வைப்பு அளவே? இறல் காணுதியால்.–79-
தெய்வப் படையும் – தெய்வத் தன்மை உள்ள படைக்கலங்களும்;
சினமும் திறலும் – சினமும் வலிமையும்; மய் அற்று ஒழி மாதவம் –
குற்றம் முழுதும் நீங்கிய பெருந்தவமும்; மற்றும் எலாம் – மற்றும்
உள்ள பிற எல்லாமும்; எய்தற்கு உளவோ – வந்து அடைதற்கு
உரியனவோ? இவன் – இந்த இலக்குவன்; இச்சிலையில் – இந்த
வில்லில்; கய் வைப்பு அளவே – கையை வைத்த அளவிலே; இறல்
காணுதியால் – (அவை) அழிந்து ஒழிதலைக் காண்பாய்.
———–
7806. ‘என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான்; இவன், “அன்னவள் சொல்
குன்றேன்” என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி;-நெடுந் தகையாய்!–80-
நெடுந்தகையாய் – பெருமைப் பண்புள்ளவனே! என் தேவியை
வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான் – என் தேவியை
வஞ்சனை செய்து எடுத்துச் சென்ற இராவணன் அன்றே
இறந்திருப்பான்; இவன் – இந்த இலக்குவன்; அன்னவள் சொல்
குன்றேன் என ஏகிய கொள்கையினால் – அந்தச் சீதையினுடைய
சொல்லை மீற மாட்டேன் என்று (பாதுகாத்த இடத்தை விட்டு)
வெளியேறியதனால்; உளன் ஆகி நின்றான் – (அந்த இராவணன்
இதுவரையில்) உயிர் உள்ளவன் ஆகி வாழ்ந்து நின்றான்; (இல்லை
எனின் இறந்திருப்பான் என்றவாறு.)
———
வீடணனை உடன் சென்று போரைக் காண இராமன் ஏவுதல்
7807. ‘ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம்
மாகாயன் நெடுந் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால்.–81-
உடன் நீயும் ஏகாய் – இந்த இலக்குவனுடன் போர்க் களத்துக்கு
நீயும் போவாய்; எதிர்த்துள்ளனாம் மாகாயன் நெடுந்தலை – இவனை
எதிர்த்துள்ளவன் ஆகிய அதிகாயனுடைய பெரிய தலை; வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனை – (எய்யப்பட்ட) அம்போடு
ஆகாயத்தை அளந்து (பூமியில்) விழுவதனை; காகாதிகள் நுங்குதல்
காணுதியால் – காகம் முதலிய பறவைகள் கொத்தி உண்பதனைக்
காண்பாய்.
—————
7808. ‘நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே?
தீரக் கொடியாரொடு தேவர் பொரும்
போரைக் கொடு வந்து புகுந்தது நாம்
ஆரைக் கொடு வந்தது? அயர்த்தனையோ?–82-
நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமோ – நீரைத் துணையெனக்
கொண்டு நீரை எதிர்த்து நிற்க முடியுமா? தீரக் கொடியாரொடு – மிகக்
கொடியவரான அரக்கர்களுடன்; தேவர் பொரும் போரைக் கொடு
வந்து நாம் புகுந்தது – தேவர்களுக்காகச் செய்கிற போரைக்
கைக்கொண்டு வந்து நாம் போர்க்களம் புகுந்தது; ஆரைக்கொடு
வந்தது – யாரைக் துணையாகக் கொண்டு அமைந்தது;
அயர்த்தனையோ – மனம் சலித்தனையோ?
————
7809. சிவன்; அல்லன்எனில், திருவின் பெருமான்;
அவன் அல்லன்எனில், புவி தந்தருளும்
தவன்; அல்லன்எனில், தனியே வலியோன்
இவன்; அல்லன்எனில், பிறர் யார் உளரோ?–83-
சிவன் அல்லன் எனில் – (இந்த அதிகாயனைக் கொல்வதற்கு
உரியவர்) சிவபிரான் அல்லன் என்றால்; திருவின் பெருமான் அவன்
அல்லன் எனின் – திருமகள் தலைவனாகிய திருமால் அல்லன்
என்றால்; புவி தந்தருளும் தவன் அல்லன் எனில் – நிலவுலகைப்
படைத்தவன் ஆகிய தவச் சிறப்புடைய பிரமதேவன் அல்லன்
என்றால்; தனியே வலியோன் இவன் அல்லன் எனில் –
தனிச்சிறப்புடைய வலிமை படைத்த இந்த இலக்குவன் அல்லன்
என்றால்; பிறர் யார் உளர் – மற்றவர் எவர் தாம் உளர்.
———
7810. ‘ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானையர் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது, கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ?–84-
ஒருங்கு உள ஆம் – (கும்பகருணன் உடன்) ஒருங்கு சேர்ந்து
வந்து; ஒன்றாயிர வெள்ளம் வன் தானையர் வந்து விளைந்த எலாம்
– ஒன்றாயிரம் வெள்ளம் வலிய படை வீரர்கள் (தன்னை) வளைத்துக்
கொண்டபோது (அவர்கள்) எல்லாரையும்; கொன்றான் இவன் அல்லது
– கொன்றவன் ஆகிய இந்த இலக்குவன் அல்லது; கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – (எதிர்த்து) இவனுக்குத்
துணையெனக் கொண்டு நின்றவர் பிறர் எவரும் இல்லை என்பதனை
எண்ணினாயோ?
———-
7811. ‘கொல்வானும் இவன்; கொடியோரை எலாம்
வெல்வானும் இவன்; அடல் விண்டு என
ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ
செல்வாய்’ என ஏவுதல் செய்தனனால்.–85-
கொடியோரை எலாம் – கொடிய அரக்கர்களை
எல்லாம்; கொல்வானும் இவன் – கொல்லப் போகின்றவன் இந்த
இலக்குவன்; வெல்வானும் இவன் – (அவ்வாறு கொன்று) வெற்றி
பெறப் போகின்றவன் இந்த இலக்குவன்; அடல் விண்டு என
ஒல்வானும் இவன் – வலிமை பொருந்திக் கொல்லும் தன்மை உள்ள
திருமால் போல எதிர்த்துப் போர் செய்பவனும் இந்த
இலக்குவன்; உடனே ஒரு நீ செல்வாய் என – எனவே விரைவாக
ஒப்பற்ற நீ இவனுடனே செல்வாய் என்று; ஏவுதல் செய்தனனால் –
இராமன் வீடணனை ஏவினான்.
——–
இலக்குவன் வீடணனுடன் போர்க்களம் புகுதல்
7812. அக் காலை இலக்குவன் ஆரியனை
முக் காலும் வலம் கொடு, மூதுணர்வின்
மிக்கான், அடல் வீடணன் மெய் தொடரப்
புக்கான், அவன் வந்து புகுந்த களம்.–86-
அக்காலை – அப்பொழுது; இலக்குவன் ஆரியனை முக்காலும்
வலம் கொடு – இலக்குவன் இராமபிரானை மும்முறை வலம்
வந்து; மூதுணர்வின் மிக்கான் அடல் வீடணன் – அற உணர்வு
மிக்கவன் ஆகிய வலிய வீடணன்; மெய் தொடர – தன்னைத்
தொடர்ந்து வர; புக்கான் அவன் வந்து புகுந்த களம் – அந்த
அதிகாயன் வந்து புகுந்த போர்க் களத்துக்குட் புகுந்தான்.
———-
இரு பக்கத்துச் சேனைகளும் நெருங்கிப் பொருதல்
7813. சேனைக் கடல் சென்றது, தென் கடல்மேல்
ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா;
ஆனைக் கடல், தேர், பரி, ஆள், மிடையும்
தானைக் கடலோடு தலைப்படலும்.–87-
தென் கடல் மேல் ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா –
தென் கடலின் மீது பிற கடல்கள் வந்து போருக்கு எழுந்தது என்று
கூறும்படி; ஆனைக் கடல், தேர் பரி ஆள் மிடையும் தானைக்
கடலோடு – யானைக் கடலும் தேரும் குதிரையும் காலாட்படையும்
கலந்த அரக்கரின் சேனைக் கடலோடு; சென்றது சேனைக் கடல்
தலைப்படலும் – இலக்குவன் உடன் சென்ற (வானர) சேனைக் கடல்
போரைத் தொடங்குதலும் அடுத்த பாட்டில் பொருள் முடியும்.
———
7814. பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு,
அசும்பு உற உருகிய, உலகம் ஆர்த்து எழ,
குசும்பையின் நறு மலர்ச் சுண்ணக் குப்பையின்
விசும்பையும் கடந்தது, விரிந்த தூளியே.–88-
பண்டு – முன்பு; பசும்படு குருதியின் – பச்சை
இரத்தத்தின்; அசும்பு உற சேறுபட்டு – நீர்க்கசிவு பொருந்தியதனால்
சேறு ஆகி; உருகிய உலகம் – குழைந்த போர்க்களம்; ஆர்த்து எழ –
ஆரவாரத்துடன் (சேனைகள் போரிட) எழுந்ததனால்; விரிந்த தூளியே
– பரவி எழுந்த தூசி; குசும்பையின் நறுமலர்ச் – செந்துருக்கம்
என்னும் மணம் மிக்க மலரின்; சுண்ணக் குப்பையின் – மகரந்தப்
பொடிகளின் தொகுதி போல; விசும்பையும் கடந்தது –
ஆகாயத்தையும் கடந்த போயது.
———–
7815. தாம் இடித்து எழும் பணை முழக்கும், சங்கு இனம்
ஆம் இடிக் குமுறலும், ஆர்ப்பின் ஓதையும்,
ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும், அஞ்சி, தம்
வாய் மடித்து ஒடுங்கின-மகர வேலையே.–89-
தாம் இடித்து எழும் பணை முழக்கும் – தாம் அடிக்கப் படுவதால்
எழுந்த போர் முரசின் ஒலியும்; சங்கு இனம் ஆம் இடிக் குமுறலும் –
சங்குகளின் தொகுதிகளில் இருந்து தோன்றுகின்ற இடிபோன்ற
குமுறலும்; ஆர்ப்பின் ஓதையும் – (வீரர்கள்) ஆர்த்தலால் தோன்றிய
ஓசையும் ஏமுடைக் கொடுஞ் சிலை இடிப்பும் – பாதுகாவல் உடைய
கொடிய வில்லின் (நாணைத் தெறித்தலால்) உண்டான
ஓசையும்; அஞ்சி – (ஆகிய பேரொலிகளுக்கு) அஞ்சி; மகர
வேலையே தம் வாய் மடித்து ஒடுங்கின – மகர மீன்களைக்
கொண்டுள்ள கடல் தம் வாயை மடித்துக் கொண்டு ஒடுங்கின.
———
7816. உலைதொறும் குருதி நீர் அருவி ஒத்து உக,
இலை துறு மரம் எனக் கொடிகள் இற்று உக,
மலைதொறும் பாய்ந்தென, மான யானையின்
தலைதொறும் பாய்ந்தன, குரங்கு தாவியே.–90-
உலைதொறும் – (யானைகளுக்குப் பாகர்களாய் வந்த அரக்கர்கள்)
அழியும் போதெல்லாம்; குருதி நீர் அருவி ஒத்து உக – (அவர்கள்
உடம்பில் இருந்து வெளிப்பட்ட) இரத்தநீர் செந்நிற நீர் அருவியை
ஒத்து வெளிப்பட; இலைதுறு மரம் எனக் கொடிகள் இற்று உக –
இலைகள் நெருங்கிய (மலை மீதுள்ள) மரத்தில் இருந்து (இலைகள்
விழுவது போல) கொடிகள் அற்று விழ; குரங்கு தாவியே மலை
தொறும் பாய்ந்தென – குரங்குகள் தாவி மலை தோறும் பாய்ந்தாற்
போல: மானயானையின் தலைதொறும் பாய்ந்தன – பெருமை மிக்க
யானைகளின் தலைகள் மீது பாய்ந்தன.
——–
7817. கிட்டின கிளை நெடுங் கோட்ட, கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த, வானரம்
விட்டன நெடு வரை, வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன, முகத்தின் வீழ்வன.–91-
வானரம் – குரங்குக் கூட்டங்கள்: கிட்டின கிளை நெடுங்கோட்ட –
பொருந்திய மரக் கிளைகள் ஆகிய பெரிய கொம்புகளையும்: கீழ்
உகு மட்டின அருவியின் மதத்த – கீழே சிந்துகின்ற
தேனையுடையனவாகிய அருவியாகிய மதநீரையும்: நெடுவரை விட்டன
– (உடையனவாகி) நீண்ட மலைகளை எறிந்தன: முகத்தில் வீழ்வன –
அம் மலைகள் போர் முகத்தில் வீழ்வனவாயின; வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன – (அக்காட்சி) யானை யானையொடு மோதியதை
ஒத்து விளங்கின.
————
7818. இடித்தன; உறுக்கின; இறுக்கி ஏய்ந்தன;
தடித்தன; எயிற்றினால் தலைகள் சந்து அறக்
கடித்தன;-கவிக் குலம், கால்கள் மேற்படத்
துடித்தன குருதியில், துரக ராசியே.–92-
கவிக்குலம் – குரங்குக் கூட்டங்கள்; இடித்தன – (அரக்கரின்
குதிரைப் படையில் உள்ள குதிரைகளை) கைகளால்
இடித்தன; உறுக்கின – சினந்து முறுக்கின; இறுக்கி ஏய்ந்தன –
வலிமையுடன் பற்றின; தடித்தன – வெட்டின; எயிற்றினால் தலைகள்
சந்து அறக் கடித்தன – பற்களினால் தலைகளின் சந்திகள்
அறும்படியாகக் கடித்தன; துரகராசியே – (இவ்வாறு பலவகையிலும்
துன்புறுத்தியதனால்) குதிரைக் கூட்டங்கள்; குருதியில் – இரத்த
வெள்ளத்தில்; கால்கள் மேற்படத் துடித்தன – கால்களை மேலே
தூக்கிய வண்ணம் துடித்தன.
———-
7819. அடைந்தன கவிக் குலம் எற்ற, அற்றன,
குடைந்து எறி கால் பொர, பூட்கைக் குப்பைகள்;
இடைந்தன முகிற் குலம் இரிந்து சாய்ந்தென
உடைந்தன; குல மருப்பு உகுத்த, முத்தமே.–93-
கவிக்குலம் அடைந்தன எற்ற – வானரக் கூட்டங்கள்
போர்க்களத்தை அடைந்தனவாய் மோத; பூட்கைக் குப்பைகள்
அற்றன – (போர்க்ளத்துக்கு) குறிக்கோள் மிகுதியொடு வந்த யானைக்
கூட்டங்கள் வலிமை அழிந்தன; குடைந்து எறிகால் பொர –
பெருங்காற்று மோதுவதனால்; முகிற்குலம் இடைந்தன இரிந்து
சாய்ந்தன உடைந்தன – மேகக் கூட்டங்கள் இடைந்து நிலை கெட்டுச்
சாய்ந்தது போல் (அவை) அழிந்தன; குல மருப்பு உகுத்த முத்தமே –
அவற்றின் தந்தங்கள் முத்துக்களைச் சிந்தின.
————
7820. தோல் படத் துதைந்து எழு வயிரத் தூண் நிகர்
கால் பட, கை பட, கால பாசம்போல்
வால் பட, புரண்டனர் நிருதர்; மற்று அவர்
வேல் படப் புரண்டனர், கவியின் வீரரே.–94-
தோல் படத் துகைந்து எழு – யானைகள் அழியும்படி விரைவாக
எழுந்த; வயிரத் தூண் நிகர் கால்பட – வயிரத் தூணைப் போன்ற
(வானரர்களின்) கால்படுவதாலும்; கைபட – (வலிய) கை
படுவதாலும்; கால பாசம் போல் வால்பட – இயமனது பாசம் போன்ற
வால் படுவதாலும்; நிருதர் புரண்டனர் – அரக்கர்கள் பூமியில்
புரண்டனர்; மற்று அவர் வேல் படப் – அந்த அரக்கர்களுடைய
வேல் படைகள் பட்டதனால்; கவியின் வீரரே புரண்டனர் – வானர வீரர்கள் (அடிபட்டுப்) (பூமியில் விழுந்து)
புரண்டனர்.
————-
7821.
மரவமும், சிலையொடு மலையும், வாள் எயிற்று
அரவமும், கரிகளும், பரியும், அல்லவும்,
விரவின கவிக் குலம் வீச, விம்மலால்,
உர வரும் கான் எனப் பொலிந்தது, உம்பரே.–95-
விரவின கவிக்குலம் – கலந்து தொக்க குரங்குக்
கூட்டங்கள்; மரவமும் – மரங்களையும்; சிலையொடு மலையும் –
கற்களோடு மலைகளையும்; வாள் எயிற்று அரவமும் – கூர்மையான
பற்களை உடைய பாம்புகளையும்; கரிகளும் –
யானைகளையும்; பரியும் – குதிரைகளையும்; அல்லவும் –
இவைகளல்லாத பிறவற்றையும்; விம்மலால் வீச – மிகுதியாக வீசி
எறிய; உம்பரே – மேலிடமாகிய ஆகாயமானது; உரவரும் கான்
எனப் பொலிந்தது – வலிமை மிக்க காடு போல் விளங்கியது.
——–
7822. தட வரை, கவிக் குலத் தலைவர், தாங்கின.
அடல் வலி நிருதர்தம் அனிக ராசிமேல்
விட விட, விசும்பிடை மிடைந்து வீழ்வன
படர் கடல் இன மழை படிவ போன்றவே.–96-
கவிக்குலத் தலைவர் தாங்கின – குரங்குக் கூட்டத் தலைவர்
தாங்கியனவாகிய; தடவரை – பெரிய மலைகளை; அடல் வலி நிருதர்
– கொல்லும் வலிமை உடைய அரக்கர்; தம் அனிக ராசிமேல் –
தம்முடைய சேனைத் தொகுதியின் மீது; விடவிட – விடுந்தோறும்
விடுந்தோறும்; விசும்பிடை மிடைந்து வீழ்வன – (அவை) ஆகாயத்தில்
நெருங்கிக் கடலில் வீழ்வனவாகி; படர் கடல் இனமழை படிவ
போன்றவே – பரந்த கடலில் தொகுதியாக மேகக் கூட்டங்கள்
படிந்திருப்பன போன்றன.
———–
7823.
இழுக்கினர் அடிகளின், இங்கும் அங்குமா,
மழுக்களும், அயில்களும், வாளும், தோள்களும்
முழுக்கினர், உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை, உதிர ஆற்றினே.–97-
அங்கும் இங்குமா – அங்கும் இங்கும் (ஓடி); அடிகளின்
இழுக்கினர் நிருதரை – கால் வழுக்கியவர்களான அரக்கர்களை; உதிர
ஆற்றினே – குருதி ஆற்றில்; மழுக்களும் அயில்களும், வாளும்,
தோள்களும் முழுக்கினர் – (அவர்களுடைய மழுப்படைகளும்
வேல்களும், வாளும்; (அவற்றைத் தாங்கிய) தோள்களும் (எனும்
இவற்றை) முழுகுமாறு செய்தனர்; மூரி யாக்கையை உழக்கினர் –
(அவர்களுடைய) வலிய உடம்பைக் கலக்கியவர்களாகி; ஒழுக்கினர் –
(குருதியாற்றில்) செலுத்தினர்.
————
7824.
மிடலுடைக் கவிக் குலம், குருதி வெள்ள நீர்
இடை இடை நீந்தின, இயைந்த யானையின்
திடரிடைச் சென்று, அவை ஒழுக்கச் சேர்ந்தன,
கடலிடைப் புக்கன, கரையும் காண்கில.–98-
மிடலுடைக் கவிக்குலம் – வலிமை உள்ள குரங்குக்
கூட்டங்கள்; குருதி வெள்ள நீர் – குருதி நீர் வெள்ளத்தில்; இடை
இடை நீந்தின – இடை இடையே நீ்ந்தி; இயைந்த யானையின்
திடரிடைச் சென்று – (அங்கு விழுந்துள்ள) யானைகளின் உடம்பாகிய
மேட்டில் சென்று; (ஏறித் தப்ப முயன்று முடியாமல்) அவை ஒழுக்கச்
சேர்ந்தன – அவை வெள்ளத்தில் சேர்ந்தனவாகிக்; கடலிடைப் புக்கன
– கடலுக்குள் புகுந்தன; கரையும் காண்கில – கரை காண மாட்டாதவை
ஆயின.
———–
7825.
கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக் கண்ண, கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில், திண் நெடுங்
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்போல்,
வால் பிடித்து ஒழுகின-கவியின் மாலையே.–99-
கவியின் மாலையே – குரங்குக் கூட்டத் தொகுதி; கால் பிடித்து
ஈர்த்து இழி குருதிக் கண்ண – காலைப்பிடித்து இழுத்துக் கொண்டு
ஓடுகிற குருதி (வெள்ளத்தின் இடையில்) உள்ளனவாகி; கண் சேல்
பிடித்து எழுதிரை ஆற்றில் – கண்ணை ஒத்த சேல் மீன்களை
இழுந்துக் கொண்டு எழுகிற அலைகளை உடைய ஆற்றில்; திண்
நெடுங் கோல் பிடித்து – வலிய நீண்ட கோலைப் பிடித்துக்
கொண்டு; ஒழுகுறு குருடர் கூட்டம் போல் வால் பிடித்து ஒழுகின –
செல்லுகின்ற குருடர்களின் கூட்டத்தைப் போல ஒன்றன் வாலை
ஒன்று பிடித்துக் கொண்டு சென்றன.
———-
7826.
பாய்ந்தது நிருதர்தம் பரவை; பல் முறை
காய்ந்தது, கடும் படை கலக்கி; கைதொறும்
தேய்ந்தது, சிதைந்தது, சிந்திச் சேண் உறச்
சாய்ந்தது-தகைப் பெருங் கவியின் தானையே.–100-
நிருதர் தம் பரவை – அரக்கவீரர்கள் தம் படைக்கடல்; பல்முறை
பாய்ந்தது – (குரங்குப் படைகளின் மீது) பலமுறை பாய்ந்து; கடும்
படை கலக்கிக் காய்ந்தது – அக்கொடிய குரங்குப் படையைக் கலக்கிச்
சினந்தது; தகைப் பெருங் கவியின் தானையே – (அவ்வளவில்)
தகுதியுள்ள அப்பெரிய குரங்குப்படை; கைதொறும் தேய்ந்து சிந்திச்
சிதைந்தது – அணி தோறும் (வலிமை) கெட்டுச் சிதறியது; சேண் உறச்
சாய்ந்தது – நீண்ட தூரம் (வலிகெட்டு) ஓடியது.
——
இலக்குவன் வானரரைத் தேற்றிப் போரிடல்
7827.
அத் துணை, இலக்குவன், ‘அஞ்சல், அஞ்சல்!’ என்று,
எத் துணை மொழிகளும் இயம்பி, ஏற்றினன்,
கைத்துணை வில்லினை, காலன் வாழ்வினை,
மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான்.-101-
அத்துணை – அந்த நேரத்தில்; இலக்குவன் அஞ்சல் அஞ்சல்
என்று – இலக்குவன் அஞ்சாதீர் அஞ்சாதீ்ர் என்று,; எத்துணை
மொழிகளும் இயம்பி – பல (தேறுதல்) சொற்களைச்
சொல்லித்; கைத்துணை வில்லினை – தன் கைக்குத் துணையாக உள்ள
வில்லாகிய; காலன் வாழ்வினை – இயமன் வாழ்வு பெறுதற்குத் துணையாய் உள்ளதை; ஏற்றினன் – நாண் ஏற்றி; மொய்த்து எழு
நாண் ஒலி முழங்கத் தாக்கினான் – நெருங்கி எழும் நாண்களின் ஒலி
முழங்குமாறு தெறித்தான்.
————-
7828.
நூல் மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள்
மேல் மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும்,
கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின், கண் அகல்
நான்மறை ஆர்ப்பென நடந்தது, அவ் ஒலி. –102-
நூல் மறைந்து ஒளிப்பினும் – சாத்திர நூல்கள் எல்லாம் மறைந்து
போய் ஒளிந்து கொண்டாலும்; நுவன்ற பூதங்கள் மேல் மறைந்து
ஒளிப்பினும் – (விவரித்துச்) சொல்லப்படுகிற ஐம்பெரும் பூதங்களும்
(தமது) முதற்காரணமாகிய மூலப்பிரகிருதியில் இலயித்துப் புலனாகாது
இருப்பினும்; விரிஞ்சன் வீயினும் – (படைப்புத் தொழில் செய்யும்)
பிரமதேவன் அழிந்திட்டாலும்; கால் மறைந்து ஒளிப்பு இலாக்
கடையின் – கால தத்துவம் (மட்டும்) மறைந்து ஒடுங்காது உள்ள ஊழி
முடிவில்; கண்ணகல் நான்மறை ஆர்ப்பென நடந்தது அவ்ஒலி –
இடமகன்ற நான்மறைகளின் ஆரவாரம் போல் (இலக்குவன் வில்நாண்)
ஒலி தோன்றி விளங்கியது.
————–
7829.
துரந்தன சுடு சரம்; துரந்த, தோன்றல
கரந்தன, நிருதர்தம் கரை இல் யாக்கையின்;
நிரந்தன நெடும் பிணம், விசும்பின் நெஞ்சு உற;
பரந்தன குருதி, அப் பள்ள வெள்ளத்தின்.–103-
சுடு சரம் துரந்தன – (இலக்குவனால்) கொடிய அம்புகள்
செலுத்தப்பட்டன; துரந்த – (அவ்வாறு) செலுத்தப்பட்டன் வாகிய
(அம்புகள்); நிருதர் தம் கரைஇல் யாக்கையின் – அரக்கர்களுடைய
எண்ணற்ற உடம்புகளில்; தோன்றல கரந்தன – வெளிப்பட்டுத்
தெரியாமல் மறைந்தன; விசும்பின் நெஞ்சு உற நெடும் பிணம்
நிரந்தன- (அதனால்) ஆகாயத்தின் நடுவிடத்தில் பொருந்துமாறு
பிணக்குவியல் வரிசைகள் அமைந்தன; குருதி – (அவ்வரக்கர்
உடல்களில் இருந்து) வெளிப்பட்ட குருதி; அப்பள்ள வெள்ளத்தின்
பரந்தன – அந்தப் பள்ளமாகிய கடல் நீரோடு கலந்து பரந்தன.
——–
7830.
யானையின் கரம் துரந்த, இரத வீ்ரர்தம்
வான் உயிர் முடித் தலை தடிந்து, வாசியின்
கால் நிரை அறுத்து, வெங் கறைக்கண் மொய்ம்பரை
ஊனுடை உடல் பிளந்து, ஓடும்-அம்புகள்;–104-
அம்புகள் – (இலக்குவன் எய்த) அம்புகள்; யானையின் கரம்
துரந்த – யானைகளின் துதிக்கைகளை அறுத்தம்; இரத வீரர் தம்
வான் உயர் முடித்தலை தடிந்து – தேர் வீரர்களின் மிக உயர்ந்த
முடியொடு கூடிய தலைகளை வெட்டியும்; வாசியின் கால் நிரை
அறுத்து – குதிரைகளின் கால் வரிசைகளை அறுத்தம்; வெங்கறைக்
கண் மொய்ம்பரை – கொடிய குருதிக் கண்கொண்ட வலிய
அரக்கரின்; ஊனுடை உடல் பிளந்து ஓடும் – தசையைக் கொண்ட
உடல்களைப் பிளந்து ஓடின.
——–
7831.
வில் இடை அறுத்த, வேல் துணித்து, வீரர்தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து, எறி
கல் இடை அறுத்து, மாக் கடிந்து, தேர் அழீஇ,
கொல் இயல் யானையைக் கொல்லும், கூற்றினே.–105-
(இதற்கு மேல் இலக்குவனுடைய அம்புகள்) வில் இடை அறுத்து
(வீரர்களின் கைகளில் உள்ள) விற்களை இடையே அறுத்து, வேல்
துணித்து – வேல்களைத் துண்டு படச் செய்தும்; வீரர் தம் எல்லிடு
கவசமும் மார்பும் ஈர்ந்து – அந்த வீரர்கள் அணிந்திருந்த ஒளி
விடுகிற கவசங்களையும் அவர்களது மார்புகளையும் பிளந்தும்; எறிகல்
இடை அறுத்து – எறியப்பட்ட மலைகளை இடையில் அழித்தும்; மாக் கடிந்து – குதிரைகளைக்
கொன்றும்; தேர் அழீ இ – தேர்களை அழித்தும்; கொல் இயல்
யானையைக் கூற்றினே கொல்லும் – கொல்லும் தன்மை உள்ள
யானைகளைக் கூற்றுவனைப் போலக் கொல்லுவன ஆயின.
————
இலக்குவன் அம்பினால் அழிந்துபட்ட படுகளத்தின் நிலை
வெற்றி வெங் கரிகளின் வளைந்த வெண் மருப்பு,
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின,
முற்று அரு முப் பகல் திங்கள் வெண் முளை
உற்றன விசும்பிடைப் பலவும் ஒத்தன.–106-
வெற்றி வெங்கரிகளின் வளைந்த வெண் மருப்பு – வெற்றி
பொருந்திய கொடிய யானைகளின் வளைந்த வெண்ணிறத்
தந்தங்கள்; அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின் – (அம்பு
பட்டு) அற்று எழுந்த வேகத்தால் வானத்தைச் சேர்ந்தனவாய்; முற்று
அரு முப்பகல் திங்கள் வெண்முளை – முழுமையாதல் இல்லாத
திருதியை நாளில் தோன்றும் சந்திரனது வெள்ளிய பிறைகள்; பலவும்
விசும்பிடை உற்றன ஒத்தன – பலவும் வானத்தில் தோன்றியதை
ஒத்தன.
————
7833.
கண்டகர் நெடுந் தலை, கனலும் கண்ணன,-
துண்ட வெண் பிறைத் துணை கல்வி, தூக்கிய
குண்டல மீன் குலம் தழுவி, கோள் மதி
மண்டலடம் விழுந்தன போன்ற மண்ணினே.–107-
கனலும் கண்ணன கண்டகர் நெடுந்தலை- (இலக்குவனால் அறுத்து
வீழ்த்தப்பட்ட) நெருப்பை வெளிக்காலும் கண்களை உடையனவாகிய
கொடிய அரக்கர்களின் பெரிய தலைகள்; துண்ட துணை வெண்பிறை
கவ்வி – துண்டுபட்ட இரண்டு வெண்பிறை மதியைக்
கவ்விக்கொண்டு; தூக்கிய குண்டல மீன்குலம் தழுவி – (காதில்)
தொங்குகிற குண்டலங்களாகிய விண்மீன் கூட்டங்களை உடன்
சேர்த்துக் கொண்டு; கோள் மதி மண்டலம் மண்ணினே விழுந்தன போன்றன – கோள்களோடு கூடிய
சிறப்புடைய மண்டலம் நிலத்தில் விழுந்தன போன்றன.
————
7834.
கூர் மருப்பு இணையன, குறைந்த கையன,
கார் மதக் கன வரை கவிழ்ந்து வீழ்வன-
போர்முகக் குருதியின் புணரி புக்கன,
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன.–108-
கூர் மருப்பு இணையன – கூரிய கொம்புகள் இரண்டு
உடையவைாய்; குறைந்த கையன – குறைவு பட்ட துதிக்கையை
உடையனவாய்; கார்மதக் கனவரை கவிழ்ந்து வீழ்வன – கரிய
மதங்கொண்ட பெரிய மலை போன்ற யானைகள் கவிழ்ந்து
வீழ்பவை; போர்முகக் குருதியின் புணரி புக்கன – போரில் பெருகிய
குருதியாகிய கடலில் வீழ்ந்தனவாய்; பார் எடுக்குறு நெடும் பன்றி
போன்றன – (அக்காட்சி) (ஊழிக்கடல் வெள்ளத்து முழுகிய) பூமியை
மீள எடுக்கும் பெரு வராகத்தின் தன்மையை ஒத்தன.
—————
7835.
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற,
கண் அகன் தேர்க் குலம், மறிந்த காட்சிய-
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட
மண் உற, விண்ணின் வீழ் மானம் போன்றன.–109-
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – (அம்புகள் பட்ட) புண்
நிறைந்ததால் உயிரை விட்ட குதிரைகள் (தேர்களில்) பூட்டிய
நிலையில் இருந்து நீங்க; கண்அகன் தேர்க்குலம் மறிந்த காட்சிய –
இடம் அகன்ற தேர்க் கூட்டங்கள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்த
காட்சியானது; எண் உறு பெரும் பதம் எஞ்சிட – மதிக்கத்தக்க பெரிய
(துறக்கப்) பதவி தீர்ந்தொழிய; வினையின் விண்ணின் மண் உற வீழ்
மானம் போன்றன – வினைப் பயனால் விண்ணினின்று மண்ணில்
பொருந்துமாறு விழும் விமானங்களை ஒத்தன.
————
7836.
அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன-
விடற்கு அரும் வினை அறச் சிந்தி, மெய் உயிர்
கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் என,
உடற் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன.–110-
அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன – (இலக்குவன் எய்த
அம்புகள்) அட்டதனால் கரிய நிறமுள்ள உடல் குறைகள்
நின்றாடுகின்றன; விடற்கு அரும் வினை அறச் சிந்தி – விடுவதற்கு
முடியாத இரு வினைகளை முழுமையாக ஒழித்து; மெய் உயிர் கடக்க
அருந் துறக்கமே கலந்தவாம் என – உடம்பில் இருந்து உயிர்
செல்லுவதற்கு அரிய துறக்கத்தைச் சேர்ந்து விட்டன்
என்னுமாறு; உடற்பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – உடல்
பொறைகள் மகிழ்ச்சியால் கூத்தாடுவதை ஒத்தன.
—————
7837.
‘ஆடுவ கவந்தம் ஒன்று, ஆறு எண்ணாயிரம்
வீடிய பொழுது’ எனும் பனுவல் மெய்யதேல்,
கோடியின் மேல் உள, குனித்த; கொற்றவன்
பாடு இனி ஒருவரால் பகரற்பாலதோ? –111-
ஆறு எண்ணாயிரம் வீடிய பொழுது – பதினாலாயிரம் பேர்
இறந்தபொழுது; ஒன்று கவந்தம் ஆடுவ எனும் – ஒரு கவந்தம் ஆடும்
என்ற; பனுவல் மெய்யதேல் – நூல் கொள்கை உண்மையாக இருக்கும்
ஆனால்; குனித்த கோடியின் மேல் உள – (அப்போரில்) ஆடிய
(கவந்தங்கள்) கோடிக்கு மேல் உள்ளன (என்றால்); கொற்றவன் பாடு
இனி ஒருவரால் பகரற் பாலதோ – வெற்றியுடைய இலக்குவனுடைய
பெருமையை இனி ஒருவரால் சொல்ல முடியுமே.
————
7838.
ஆனையின் குருதியும், அரக்கர் சோரியும்,
ஏனை வெம் புரவியின் உதிரத்து ஈட்டமும்,
கானினும் மலையினும் பரந்த கால் புனல்
வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே. –112-
ஆனையின் குருதியும் – யானைகளின் இரத்தமும்; அரக்கர்
சோரியும் – அரக்கர்களின் இரத்தமும்; ஏனை வெம் புரவியின்
உதிரத்து ஈட்டமும் – மற்றும் உள்ள விரைந்து செல்லும் குதிரைகளின்
இரத்தப் பெருக்கும்; கானினும் மலையினும் பரந்த கால் புனல் –
காட்டிலும் மலையிலும் (மழை பெய்ததனால்) காலாக ஓடிவரும்
நீ்ர்; வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே – வானயாறு என்று
சொல்லும்படி (ஓடிக்) கடலில் சேர்ந்தன.
———–
7839.
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய, புரசையோடு அணைந்த தாளன,
மேக்கு உயர் அங்குசக் கைய, வெங் கரி
நூக்குவ, கணிப்பு இல-அரக்கர் நோன் பிணம்.-113-
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய ஆக்கைய – (தங்களைத்)
தாக்கிய (இலக்குவனது) அம்புகளால் தலைகள் நீங்கிய உடல்களை
உடைய; அரக்கர் நோன் பிணம் – அரக்கர்களின் வலிமை உள்ள
பிணங்கள்; புரசையோடு அணைந்த தாளன – யானையின் கழுத்தில்
கட்டிய கயிற்றொடு சேர்ந்த கால்களை உடையனவாய்; மேக்கு உயர்
அங்குசக்கைய – மேலே உயர்ந்த அங்குசத்தைக் கொண்ட கைகளை
உடையனவாய்; வெங்கரி நூக்குவ கணிப்பு இல – கொடிய
யானைகளைச் செலுத்தவன எண்ணில்லாதன.
———-
7840.
கோளுடைக் கனண பட, புரவி கூத்தன,
தோளுடை நெடுந் தலை துமிந்தும், தீர்கில
ஆளுடைக் குறைத்தலை அதிர ஆடுவ-
வாளுடைத் தடக் கைய, வாசி மேலன.–114-
கோளுடைக் கணைபட – (இலக்குவனது) கொல்லும் தன்மை உள்ள
அம்புகள் பட்டதனால்; தோளுடை நெடுந்தலை துமிந்தும் –
தோளுக்கு மேல் உள்ள நெடிய தலைகள்
வெட்டப்பட்டும்; வாளுடைத் தடக்கைய – வாளை ஏந்திய பெரிய
கைகளை உடையனவான; வாசி மேலன ஆளுடைக் குறைத்தலை –
குதிரைகளின் மேல் உள்ள வீரர்களின் தலையற்ற உடற்குறைகள்;
புரவி கூத்தன – குதிரைகள் ஆடிய ஆட்டத்திற்கு ஏற்ப; தீர்கில
அதிர ஆடுவ – நீங்காது அதிர்ந்து ஆடுவன ஆயின.
————-
7841.
வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம்,
கய் வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா
எய்வன எனைப் பல, இரத மேலன.–115-
வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள்- (இலக்குவன் எய்த)
சாபம் தரும் முனிவர்களின் சாபச் சொற்களைப் போன்று (தவறாது
பயன் விளைக்கும்) அம்புகள்; தலைகள் தோள் கொய்வன –
வீரர்களின் தலைகளையும் தோள்களையும் (அறுத்துக்)
கொள்வனவாயின; இரத மேலன குறைத்தலைக் குழாம் – (அவ்வாறு
பட்ட) இரதங்களின் மேல் இருந்த வீரர்களின் உடற்குறைத்
தொகுதிகள்; கய்வளை வரிசிலைக் கடுப்பின் கைவிடா – கையினால்
வளைக்கப்படுகின்ற கட்டமைந்த வில்லில் (முன் எய்த) வேகம்
குறையாமல்; எய்வன எனைப்பல – எய்பவை மிகப் பலவாம்.
—————-
7842.
தாதையை, தம்முனை, தம்பியை, தனிக்
காதலை, பேரனை, மருகனை, களத்து
ஊதையின் ஒரு கணை உருவ, மாண்டனர்-
சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார்.–116-
சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார்-சீதை என்று பெயர்
கொண்ட ஒரு கொடிய யமனைத் தேடியவர்களான (அரக்கர்கள்);
தாதையை தம்முனை, தம்பியை – தந்தையையும், தமயனையும்,
தம்பியையும்; தனிக்காதலை – சிறந்த அன்புக்குரிய மகனையும்;
பேரனை மருகனை – பேரனையும் மருமகனையும்; களத்து –
போர்க்களத்து; ஊதையின் ஒருகணை உருவ மாண்டனர் –
(இலக்குவனது) பெருங்காற்றுப் போன்ற ஒரு கணை ஊடுருவிச் செல்ல
(இழந்து) தாமும் மாண்டனர்.
————
7843.
தூண்டு அருங் கணை படத் துமிந்து, துள்ளிய
தீண்ட அரு நெடுந் தலை தழுவிச் சேர்ந்தன,
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன
ஆண்டலை நிகர்த்தன, எருவை ஆடுவ.–117-
தூண்டு அருங்கணை பட- தூண்டுதல் இல்லாமல் மேலும் மேலும்
பாயும் தன்மை உள்ள அம்புகள் பட்டதால்; துமிந்து துள்ளிய –
வெட்டுண்டு துள்ளிய; தீண்ட அரு நெடுந்தலை – (கைகளால்)
தீண்டுதற்கு அரிய (அரக்கரது) பெரிய தலைகளைத்; தழுவிச்
சேர்ந்தன எருவை – நெருங்கிச் சேர்ந்தனவாகிய எருவைகள்; பூண்டு
எழு கரதலம் பொறுக்கலாதன – தாம் மேல் (பறந்து) எழுவதற்குரிய
கரங்களை (சிறகுகளைப்) பெற்றிராதவையான; ஆண்டலை நிகர்த்தன
ஆடுவ – ஆண்டலை என்னும் பறவையை ஒத்து ஆடுவனவாயின.
———–
7844.
ஆயிர ஆயிர கோடியாய் வரும்
தீ உமிழ் நெடுங் கணை மனத்தின் செல்வன்,
பாயவன, புகுவன; நிருதர் பல் உயிர்
ஓய்வன, நமன் தமர் கால்கள் ஓயவே.–118-
ஆயிர ஆயிர கோடியாய் வரும் – பல ஆயிரம் கோடியாய்
வருகின்றனவான; தீ உமிழ் நெடுங்கணை – தீயைக் கக்குகின்ற நீண்ட
அம்புகள்; மனத்தின் செல்வன பாய்வன – மனம் போல விரைந்து
சென்று பாய்வனவாய்; புகுவன – (பகைவர் உடலில்) புக; நிருதர் பல்
உயிர் – (அதனால்) அரக்கர்களின் பல உயிர்கள்; நமன்
தமர் கால்கள் ஓயவே ஓய்வன – யமனுடைய உறவினர்களின் கால்கள்
ஓயுமாறு ஒழிவனவாயின.
————-
7845.
விளக்கு வான் கணைகளால் விளிந்து, மேருவைத்
துளக்குவார் உடற் பொறை துணிந்து, துள்ளுவார்;
இளக்குவார், அமரர் தம் சிரத்தை; ஏன்? முதுகு
உளுக்குவாள் நிலமகள், பிணத்தின் ஓங்கலால். –119-
மேருவைத் துளக்குவார் – மேரு மலையையும் அசைக்கும்
பேராற்றல் படைத்த அரக்கர்; விளக்கு வான் கணைகளால் விளிந்து –
ஒளி விடுகிற சிறந்த (இலக்குவனுடைய) அம்புகளால் இறந்து; உடற்
பொறை துணித்து துள்ளுவார் – உடல் ஆகிய பெருஞ்சுமை
துண்டாகித் துடித்தனர்; அமரர் தம் சிரத்தை இளக்குவார் –
(அப்பெருஞ் செயல் கண்டு) தேவர்கள் தங்கள் தலையை
அசைப்பாராயினர்; ஏன் – அதற்கு மேலும் என்ன; பிணத்தின்
ஓங்கலால் நிலமகள் முதுகு உளுக்குவாள்- பிணத்தின் மலை போன்ற
குவியலின் பாரம் தாங்காது நில மடந்தை முதுகு நெளிந்தாள்.
———
தாருகன் இலக்குவனுடன் பொருது இறத்தல்
7846.
தாருகன் என்று உளன் ஒருவன்-தான் நெடு
மேருவின் பெருமையான், எரியின் வெம்மையான்,
போர் உவந்து, உழக்குவான், புகுந்து தாங்கினான்-
தேரினன், சிலையினன், உமிழும் தீயினன்.–120-
தான் நெடு மேருவின் பெருமையான் – தான் நெடிய
மேருமலையின் பெருமையினையும்; எரியின் வெம்மையான் –
நெருப்புப் போன்ற (சின) வெம்மையினையும் (உடைய); தாருகன்
என்று உளன் ஒருவன் – தாருகன் என்று பெயருள்ள
ஒப்பற்றவன்; போர் உவந்து உழக்குவான் புகுந்து – போரை மகிழ்ந்து
செய்வான் புகுந்து; தேரினன், சிலையினன் – தேரின் மீது
(ஏறியவனாயும்) (கையில்) வில்லையேந்தியவனாயும்; உமிழும்
தீயினான் – (கண்களில்) நெருப்புப் பொறி சிந்துபவனாயும்; தாங்கினன்
– (இலக்குவனை எதிர்த்து நின்று) தாக்கினான்.
————-
7847.
துரந்தனன் நெடுஞ் சரம், நெருப்பின் தோற்றத்த;
பரந்தன, விசும்பிடை ஒடுங்க; பண்டுடை
வரம்தனின் வளர்வன அவற்றை, வள்ளலும்,
கரந்தனன் கணைகளால், முனிவு காந்துவான்.–121-
பண்டுடை வரந்தனின் வளர்வன- தான் முன்னே பெற்றுள்ள வர
பலத்தால் மிகுந்து வளர்வனவாகிய; நெருப்பனின் தோற்றத்த
நெடுஞ்சரம் துரந்தனன் – நெருப்புப் போன்ற வெப்பத்
தோற்றத்தினை உடைய நெடிய அம்பைுகளைத் (தாருகன்)
செலுத்தினன்; விசும்பிடை ஒடுங்க பரந்தன – (அவ்வம்புகள்)
ஆகாயத்தின் இடமும் குறையும் படி எங்கும் பரந்தன; வள்ளலும்
அவற்றை – இலக்குவனும் அந்த அம்புகளை; முனிவு காந்துவான்
கணைகளால் கரந்தனன் – சினத்தால் கொதித்தவனாய் (தன்)
அம்புகளால் மறையுமாறு செய்தான்.
——–
7848.
அண்ணல் தன் வடிக் கணை துணிப்ப, அற்று அவன்
கண் அகல் நெடுந் தலை, விசையின் கார் என,
விண்ணிடை ஆர்த்தது, விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெங் கூற்றும் உட்கவே.–122-
அண்ணல் தன் வடிக்கணை துணிப்ப – பெருமை மிக்க
இலக்குவனது கூர்மையான அம்புகள் அறுக்க; அவன் கண் அகல்
நெடுந்தலை அற்று – (அந்தத் தாருகனுடைய) இடமகன்ற நீண்ட
பெரிய தலை அறுபட்டு; விரைவில் மெய் உயிர் உண்ணிய வந்த
வெங்கூற்றும் உட்கவே – விரைவாக உடம்பில் இருந்து உயிரைப்
(பிரித்து) உண்ண வந்த வலிய யமனும் அஞ்சும்படி; விசையின்
விண்ணிடை கார் என ஆர்த்தது – வேகமாக ஆகாயத்தில் எழுந்து
மேகம் போல் பேரொலி செய்தது.
———–
இலக்குவன் காலன் முதலிய ஐவரைக் கொல்லுதல்
7849.
காலனும், குலிசனும், காலசங்கனும்,
மாலியும், மருத்தனும் மருவும் ஐவரும்
சூலமம் கணிச்சியும் கடிது சுற்றினார்;
பாலமும், பாசமும், அயிலும் பற்றுவார்.–123-
சூலமும் – சூலாயுதப் படையும்; கணிச்சியும் –
மழுப்படையும்; பாலமும் – பிண்டி பாலம் எனும் படையும்; பாசமும் –
கயிற்றினால் ஆன படையும்; அயிலும் – வேற்படையும்; பற்றுவார் –
கையில் ஏந்தியவராய்; காலனும் குலிசனும் கால சங்கனும், மாலியும்
மருந்தனும் மருவும் ஐவரும் – காலன், குலிசன், கால சங்கன், மாலி,
மருத்தன் என்று பெயர் பொருந்திய ஐவரும்; கடிது சுற்றினார் –
விரைவாக வந்து (இலக்குவனைச்) சூழ்ந்து கொண்டார்கள்.
————
7850.
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம்
துன்ன அரும் படைக்கலம் துணித்து, தூவினன்,
நல் நெடுந் தலைகளைத் துணித்து; நால் வகைப்
பல் நெடுந் தானையைப் பாற நூறினான்.–124-
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் – அவர்கள் எய்தனவும்
எறிந்தனவும் ஆன ஆயிரக்கணக்கான; துன்ன அரும் படைக்கலம் –
நெருங்குதற்கு அருமையான படைக் கலங்களை; தூவினன் துணிந்து –
(இலக்குவன் அம்புகளைத்) தூவித் துணித்து; நல் நெடுந்தலைகளைத்
துணித்து – (அந்த ஐவருடைய) வலிமையான நெடிய தலைகளைத்
துண்டித்து; நால்வகைப் பல் நெடுந் தானையைப் பாற நூறினான் –
பலவாக அமைந்த நான்கு வகையாக அமைந்த பெருஞ்சேனையைச்
சிதறச் செய்தான்.
————-
இலக்குவன் அதிகாயன் படை போர் செய்தல்
7851.
ஆண்டு அதிகாயன்தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ்-எண்ணாயிரம்
தூண்டினர், மருங்கு உறச் சுற்றினார், தொகை
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார்.–125-
ஆண்டு அதிகாயன் தன் சேனை ஆடவர் – அப்போது
அதிகாயனுடைய படை வீரர்கள்; ஈண்டின மதகிரி ஏழ் –
எண்ணாயிரம் தூண்டினர் – நெருங்கிய மதமலை போன்ற களிறுகள்
ஐம்பத்தாறாயிரத்தைத் தூண்டி; மருங்கு உறச் சுற்றினார் –
(இலக்குவனைப்) பக்கங்களில் பொருந்த வளைத்துக்கொண்டு; தொகை
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார் – தொகையாக விரும்பிய
படைக்கருவிகளை மழை போல (மிகுதியாக) வீசுவாராயினர்.
————
7852.
போக்கு இலா வகை புறம் வளைத்துப் பொங்கினார்,
தாக்கினார் திசைதொறும், தடக் கை மால் வரை;
நூக்கினார் படைகளால் நுறுக்கினார்; குழம்பு
ஆக்கினார், கவிகள்தம் குழுவை; ஆர்ப்பினார்.–126-
போக்கு இலா வகை புறம் வளைத்துப்பொங்கினார்-(அரக்கர்கள்)
(குரங்குப் படை வீரர்கள்) தப்பிப் போக முடியாதபடி பக்கங்களை
எல்லாம் வளைத்துக் கொண்டு சினம் மிக்கவராய்; திசை தொறும்
தாக்கினார் – (எல்லாத்) திசைகளிலும் தாக்கினார்கள்; தடக்கை மால்
வரை நூக்கினார் – (அந்த வானரப் படைகளின் மீது) பெரிய
கைகளை உடைய மயக்கம் கொண்ட மலை போன்ற யானைப்
படையைச் செலுத்தினார்கள்; கவிகள் தம் குழுவை படைகளால்
நுறுக்கினார் – (மேலும்) வானரக் குழுவைத் தங்கள் படைகளால்
துண்டாக்கினார்; குழம்பு ஆக்கினார் ஆர்ப்பினார் – (அதற்கு மேல்
அவற்றைக்) குழம்பாக்கி ஆரவாரம் செய்தனர்.
———
7853.
எறிந்தன, எய்தன, எய்தி, ஒன்றொடு ஒன்று
அறைந்தன, அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன, மழை என நெருக்கி நிற்றலால்,
மறைந்தன, உலகொடு திசையும் வானமும்.–127-
எறிந்தன – (வானரர்கள்) எறிந்தனவாகிய (மலைகளும்); எய்தன –
(அரக்கர்கள்) எய்தனவாகிய பல்வகைப் படைக் கலங்களும்; எய்தி
ஒன்றோடு ஒன்று அறைந்தன – நெருங்கி ஒன்றோடு ஒன்று மோதிக்
கொண்டன; அசனியின் விசையின் ஆசைகள் நிறைந்தன –
(அதனால்) இடி போன்ற வேகமான முழக்கம் திசைகள் தோறும்
நிறைந்தன; மழை என நெருங்கி நிற்றலால் – (அந்த எறிந்தனவும்
எய்தனவும்) மேகக் கூட்டம் போல நெருங்கி (வானத்தில்) நிற்றலால்;
உலகொடு திசையும் வானமும் மறைந்தன – உலகமும் திசைகளும்
வானமும் மறைந்தன.
———-
7854.
அப் படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து, அவர்
துப்புடைத் தடக் கைகள் துணித்து, சுற்றிய
முப் புடை மதமலைக் குலத்தை முட்டினான்-
எப் புடை மருங்கினும் எரியும் வாளியான். –128-
எப்புடை மருங்கினும் எரியும் வாளியான்- எல்லாப் பக்கங்களிலும்
எரிகின்ற அம்புகளைச் (செலுத்த வல்ல இலக்குவன்); அப்படை
அனைத்தையும் அறுத்து வீழ்த்து – (அரக்கர் எறிந்த) அந்தப்
படைக்கலங்கள் முழுவதையும் அறுத்து வீழ்த்தி; அவர் துப்புடைத்
தடக்கைகள் துணித்து – அந்த அரக்க வீரர்களுடைய வலிமையுடைய
நீண்ட கைகளைத் துண்டித்து; சுற்றிய முப்புடை மதமலைக் குலத்தை
முட்டினான் – (தன்னைச்) சுற்றிய மூன்று மதங்களை உடைய மலை
போன்ற யானைக் கூட்டத்தைத் தாக்கினான்.
————
7855.
குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற,
வன் தலை துமிதர, மஞ்சு என மறிவன
ஒன்று அல; ஒருபதும் ஒன்பதும்,-ஒரு கணை
சென்று அரிதர,-மழை சிந்துவ மதமலை.–129-
ஒருகணை சென்று அரிதர – (இலக்குவன் உடைய) ஒரு கணை
(விரைந்து) சென்று அறுப்பதனால்; குன்று அன மதகரி – மலையைப்
போன்ற மதங்கொண்ட களிறுகள்; ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் –
ஒன்று மட்டும் அல்லாது ஒருபதும் ஒன்பதுமாக; கொம்பொடு கரம்
அற – கொம்புகளும் துதிக்கைகளும் அறுபட; வன்தலை துமிதர –
வலிய தலைகள் துண்டிக்கப்பட; மஞ்சு என மறிவன – மேகம் போல்
விழுந்து கிடப்பன; மதமலை மழை சிந்துவ – மதத்தை உடைய
மலையை ஒத்த (அக்) களிறுகள் மழை போல மதநீரைச் சிந்துவன
வாயின.
————
7856.
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட,
இரு தொடை புரசையொடு இறுபவர், எறி படை
விருதுடை நிருதர்கள், மலை என விழுவர்கள்;
பொருது உடைவன, மத மழையன புகர் மலை. –130-
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணைபட-(இலக்குவன்) ஒரு
தொடுப்பினில் விடுவனவாகிய இடியோடு மாறுபட்ட அம்புகள்
படுவதனால்; எறிபடை விருதுடை நிருதர்கள் மலை எனவிழுவர்கள்-
எறிகின்ற படைக்கலங்களையும், விருதுகளையுமுடைய அரக்கர்கள்
மலை போன்று விழுந்து இறந்தனர்; இரு தொடை புரசையோடு
இறுபவர் – (இலக்குவன்) இரு தொடுப்பினில் விட்ட அம்புகளால்
யானையின் கழுத்திடு கயிற்றோடு (யானை வீரர்) துண்டிக்கப்பட்டனர்;
மத மழையன புகர் மலை பொருது உடைவன- மதம் மழை போல்
பொழிகின்ற புள்ளிகளை முகத்தில் கொண்ட யானைகள் பொருது
உயிர் உடைந்தன.
———-
7857.
பருமமும், முதுகு இடு படிகையும், வலி படர்
மருமமும், அழிபட, நுழைவன வடி கணை,
உருமினும் வலியன, உருள்வன திசை திசை,
கரு மலை நிகர்வன;-கதமலை கனல்வன.–131-
கதமலை கனல்வன – சீற்றத்தை மலை போல் கொண்டனவாகிய
யானைகள்; உருமினும் வலியன வடிகணை – இடியைக் காட்டிலும்
வலிமை உடைய கூர்மையான கணைகள்; நுழைவன – நுழையப்
பெற்றவை ஆகி; பருமமும் – யானையின் கழுத்தில் இடப்படும்
கயிறும்; முதுகு இடு படிகையும் – முதுகில் இடப்படும் தவிசும்
(அம்பாரி); வலிபடர் மருமமும் அழிபட – வலிமை பொருந்திய
மருமத்தானமும் அழிந்து பட; திசை திசை உருள்வன – திக்குகளில்
எல்லாம் உருண்டு,; கருமலை நிகர்வன – கருநிறம் உள்ள மலைகளை
ஒத்தன.
————–
7858.
இறுவன கொடியவை, எரிவன இடை இடை
துறுவன சுடு கணை, துணிவன மதகரி;
அறுவன, அவை அவை கடவினர் தடி தலை;
வெறுமைகள் கெடுவன, விழி குழி கழுதுகள்.–132-
எரிவன இடை இடை துறுவன சுடுகணை – (இலக்குவன் எய்த)
எரியுந்தன்மை வாய்ந்தவையும், இடை இடையே (இலக்குகளைத்)
தேடுகின்றவையுமாகிய சுடுகணைகள்;கொடியவை இறுவன – (யானை மீது உள்ள) கொடிகளைத் துண்டு
படுத்தின; மதகரி துணிவன – (மேலும் அவை) மதங்கொண்ட
யானைகளைத் துண்டுபடுத்தின; அவை அவை கடவினர் தடிதலை
அறுவன – (அதற்கு மேல்) அவ்வவற்றைச் செலுத்திய பாகர்களின்
தடித்த தலையை அறுத்தன; விழி குழி கழுதுகள் வெறுமைகள்
கெடுவன – (அதனால்) குழிகள் பேய்களின் (உணவில்லாத) வெறுமை
நிலை கெடுவனவாயின.
———
7859.
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
படலொடும், உரும் எறி பரு வரை நிலையன,
உடலொடும் உருள் கரி உதிரமது, உரு கெழு
கடலொடு பொருதது, கரியொடு கரி என.-133-
மிடலொடு விடுகணை- (இலக்குவனால்) வலிமையோடு விடப்பட்ட
அம்புகள்; மழையினும் மிகை உள படலொடும் – மழையைக்
காட்டிலும் மிகுதியாக உள்ளவை படுதலினால்; உரும் எறி பருவரை
நிகர்வன – இடியால் எறியுண்ட பெரிய மலையின் தன்மையை
அடைந்தனவாய்; உடலொடும் உருள் கரி – உடல்களோடு கீழ்
உருண்டு விழுகின்ற யானைகளின்; உதிரமது கரியொடு கரியென-
குருதி யானையொடு யானை பொருவது போல்; உரு கெழு கடலொடு
பொருதது – அச்சம் விளங்குகின்ற கடலோடு பொருவது போல்
மிக்குப் பெருகியது.
———
7860.
மேலவர் படுதலின், விடும் முறை இல, மிடல்
ஆலமும் அசனியும் அனையன, அடு கரி
மால் உறு களியன, மறுகின, மதம் மழை
போல்வன, தம தம எதிர் எதிர் பொருவன.–134-
மேலவர் படுதலின் – மேல் ஏறிச் செலுத்தும் (பாகர்கள்)
பட்டமையால்; விடும் முறை இல – செலுத்தும் முறை இல்லாத; மிடல்
ஆலமும் அசனியும் அனையன அடுகரி – வலிமை உள்ள ஆலகால
நஞ்சையும், இடியையும் ஒத்தனவாகிய கொல்லும் தன்மை உள்ள
யானைகள்; மால் உறு களியன மறுகின – மயக்கம் மிக்க மதக்
களிப்பினை உடையனவாகிக் கலங்கி; மதம் மழை போல்வன – மதநீரை மழைபோல் (மிகுதியும்) சொரிந்து கொண்டு;
தம தம எதிர் எதிர் பொருவன – தாம் தாம் எதிர் எதிர் நின்று
போரிடலாயின.
————
7861.
கால் சில துணிவன; கரம் அறுவன; கதழ்
வால் சில துணிவன; வயிறுகள் வெளி பட,
நால் சில குடர் அன; நகழ்வன சில-வரு
தோல் சில, கணை பல சொரிவன மழை என. –135-
மழை என கணை பல சொரிவன – மழை போல் (இலக்குவன்)
அம்புகள் பலவற்றைச் சொரிந்ததனால்; வருதோல் – போருக்கு வந்த
யானைகளில்; கால் துணிவன சில – சிலகால் அறுபட்டவை; கரம்
அறுவன சில – சில துதிக்கைகள் துணியுண்டவை; கதழ் வால்
துணிவன சில – சில விரைவாக வீசும் வால் இழந்தவை; வயிறுகள்
வெளிபட நால்குடர் சில – சில வயிறுகள் பிளந்ததனால் வெளித்
தொங்குகின்ற குடலை உடையன; நகழ்வனசில – அழுந்தி
வருந்தியவை சில.
———
7862.
முட்டின முட்டு அற, முரண் உறு திசை நிலை
எட்டினும் எட்ட அரு நிலையன எவை? அவன்
விட்டன விட்டன விடு கணை படுதொறும்
பட்டன பட்டன, படர் பணை குவிவன.–136-
முரண் உறு திசை நிலை முட்டு அற முட்டின-மாறுபாடு கொண்ட
திசை நிலைகளில் தடுப்பு இன்றி முட்டியவைகளான (இலக்குவன்
எய்த அம்புகள்); எட்டினும் எட்ட அரு நிலையன எவை – தாக்கும்
தன்மை இன்றி எட்டுதற்கு முடியாத தன்மை உடைய (யானைகள்)
எவை உள (ஒன்றும் இல்லை); அவன் விட்டன விட்டன விடுகணை
படுதொறும் – அவ்விலக்குவன் பலமுறை செலுத்தியவை ஆன
எய்யப்படும் அம்புகள் படுந்தொறும் படுந்தோறும்; பட்டன பட்டன –
(எதிர்த்து வந்த) மதயானைகள் பல
————
7863.
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம்
இறுதிய மத கரி இறுதலும், எரி உமிழ்
தறுகணர், தகை அறு நிலையினர், சலம் உறு
கறுவினர், அவன் எதிர் கடவினர், கடல் என.–137-
அறுபதின் முதல் – அறுபது என்ற எண்ணில் இருந்து; இடை நால்
ஒழி ஆயிரம் – பின் நான்கு என்ற எண்ணைக் கழித்த ஆயிரம்
(ஐம்பத்து ஆறாயிரம்); இறுதிய மதகரி இறுதலும் – என்ற கணக்குள்ள
மதயானைகள் இறந்த உடனே; எரி உமிழ் தறுகணர் – நெருப்பை
வெளிக்காலும் கண்களைக் கொண்ட அஞ்சாமை உடையவரும்; தகை
அறு நிலையினர் – நற்பண்புகள் இல்லாத நிலையினரும்; சலம் உறு
கறுவினர் – வஞ்சம் மிக்க சினங் கொண்டவரும் (ஆகிய அரக்கர்கள்);
அவன் எதிர் கடல் என கடவினர் – அந்த (இலக்குவனுக்கு) எதிரே
கடல் போல (யானைப் படையை) மீண்டும் செலுத்தினார்கள்.
———-
7864.
எல்லை இல் மத கரி, இரவினது இனம் நிகர்
செல்வன, முடிவு இல, தெறு தொழில் மறவனை,
வில்லியை, இனிது உற விடு கணை மழையினர்,
‘கொல்லுதி’ என, எதிர் கடவினர்-கொடியவர்.–138-
கொடியவர் – கொடுமைத் தன்மை உள்ள அரக்கர்கள்; இனிது உற
விடுகணை மழையினர் – எளிதாக விடும் அம்புகளை மழை போல்
செலுத்தியவர்களாய்; முடிவு இல தெறு தொழில் மறவனை – முடிவு
இல்லாமல் கொல்லும் தொழிலை மேற்கொண்டுள்ள வீரனும்; வில்லியை
– வில்லாளியும் ஆன (இலக்குவனைக்); கொல்லுதி என –
கொல்லுவாய் என்று; இரவினது இனம் நிகர் செல்வன – இரவின்
கூட்டத்தைப் போல் செல்வனவான; எல்லை இல் மதகரி –
எண்ணிக்கை எல்லை இல்லாத மதங் கொண்ட யானைகளை; எதிர்
கடவினர் – எதிராகச் செலுத்தினார்கள்.
—————-
7865.
வந்தன மத கரி வளைதலின், மழை பொதி
செந் தனி ஒரு சுடர் என மறை திறலவன்,
இந்திரதனு என, எழு சிலை குனிவுழி,
தந்தியின் நெடு மழை சிதறின, தரையின.–139-
மதகரி ந்தன வளைதலின் – அந்த மதம் பொருந்திய யானைகள்
வந்து வளைத்த அளவில்; மழை பொதி செந்தனி ஒரு சுடர் என
மறை திறலவன் – மேகத்தால் மூடப்பட்ட சிவந்த கதிரவன் போன்று
மறைக்கப்பட்ட வல்லமை உடையவன் ஆகிய வலிமை உள்ள
இலக்குவன்; இந்திர தனு என எழுசிலை குனிவுழி – இந்திர வில்
போல் (தன் அம்பு) எழுகின்ற வில்லினை வளைத்த அளவில்;
தந்தியின் நெடுமழை தரையின சிந்தின – யானைகள் ஆகிய நீண்ட
மேகங்கள் தரை இடத்துச் சிந்தின.
——–
7866.
மய்யல் தழை செவி முன் பொழி மழை பெற்றன, மலையின்
மெய் பெற்றன, கடல் ஒப்பன, வெயில் உக்கன விழியின்,-
மொய் பெற்று உயர் முதுகு இற்றன, முகம் உக்கன, முரண்
வெங்
கய் அற்றன; மதம் முற்றிய கணிதத்து இயல்,-கத மா.–140-
கதமா- கோபம் மிக்க யானைகள்; மய்யல் தழை செவிமுன் பொழி
மழை பெற்றன – மத மயக்கம் உள்ள தழைத்த (பெரிய) தன்
காதுகளின் மூலம் மதநீர் ஆகிய மழையைப் பொழிவனவும்;
மலையின் மெய் பெற்றன – மலை போன்ற உடலைப் பெற்றனவும்;
கடல் ஒப்பன – கடல் போல் (கருநிறம்) உள்ளனவும்; விழியின்
வெயில் உக்கன – கண்களில் சினத்தை வெளியிடுவனவும் ஆகிய
வலிமிகு யானைகள்; மொய் பெற்று உயிர் முதுகு இற்றன – வலிமை
பெற்று உயர்ந்த முதுகு உடைந்தனவும்; முகம் உக்கன – முகம்
அழிந்தனவும்; முரண் வெங்கய் அற்றன – மாறுபாடு கொண்ட கொடிய
துதிக்கைகள் அற்றனவும் ஆய் இருந்தன எனினும் அவை; கணிதத்து
இயல் மதம் முற்றிய – கணத்துக்குக் கணம் மாறுபடும் இயல்புள்ள
மதக்களிப்பு மாத்திரம் முற்றி இருந்தன.
மய்யல் – மத மயக்கம். கதமா – கறுவு கொண்ட விலங்கு.
—————
7867.
உள் நின்று அலை கடல் நீர் உக, இறுதிக் கடை உறு கால்
எண்ணின்தலை நிமிர்கின்றன, இகல் வெங் கணை, இரணம்
பண்ணின் படர் தலையில் பட, மடிகின்றன பல ஆம்,
மண்ணின்தலை உருள்கின்றன-மழை ஒத்தன மதமா.–141-
உள் நின்று அலை கடல் நீர் உக – தன் எல்லைக்குள் கட்டுப்
பாட்டில் நின்று வீசுகின்ற அலைகளை உடைய கடல் நீர் பெருகி
வருமாறு; இறுதிக் கடை உறுகால் – யுக முடிவுக் காலத்தில் வீசும்
பெருங்காற்றைப் போல; எண்ணின் தலை நிமிர்கின்ற இகல்
வெங்கணை – அளவுக்குரிய எல்லை கடந்து வருகின்றவையாகிய
(இலக்குவனின்) வலிய கொடிய அம்புகள்; இரணப் பண்ணின் படர்
தலையில் பட – பொன்னால் இயன்ற அலங்காரத்தை உடைய பரந்த
மத்தகத்தில் படுதலால்; மழை ஒத்தன மதமா- மேகத்தை ஒத்த மதங்
கொண்ட யானைகள்; மண்ணின் தலை உருள்கின்றன – மண்ணில்
வெட்டுண்டு உருள்கின்ற காரணத்தால்; மடிகின்றது பல ஆம் –
இறந்து போனவை பல ஆகும்.
————-
7868.
பிறை பற்றிய எனும் நெற்றிய, பிழை அற்றன பிறழ,
பறை அற்றம் இல் விசை பெற்றன, பரியக் கிரி, அமரர்க்கு,
இறை, அற்றைய முனிவில் படை எறியப் புடை எழு பொன்
சிறை அற்றன என, இற்றன-சினம் முற்றிய மதமா.–142-
பறை அற்றம் இல் விசை பெற்றன – பறவை (போல் பறத்தலை
உடைய) குற்றம் இல்லாத வேகத்தை உடைய; பிழை அற்றன –
குறி தவறுதல் இல்லாத; பிறை பற்றிய எனும் நெற்றிய பிறழ –
பிறை வடிவுடைய நெற்றியை உடையனவாகிய இலக்குவனது அம்புகள்
பாய்தலால்; அமரர்க்கு இறை – தேவர்கட்குத் தலைவன் ஆகிய
இந்திரன்; அற்றைய முனிவில் படை எறிய – அப்போது தோன்றிய
சினத்தால் வச்சிரப்படையை வீச; கிரி பரிய புடை எழு பொன் சிறை
அற்றன என இற்றன – மலைகள் அறுந்து பட இரு பக்கங்களிலும்
உள்ள அழகிய சிறகுகள் வீழ்ந்தன போல உயிரொழிந்து கிடந்தன.
————
7869.
கதிர் ஒப்பன கணை பட்டுள, கதம் அற்றில, கதழ் கார்
அதிரத் தனி அதிர்கைக் கரி அளவு அற்றன உளவா,
எதிர்பட்டு அனல் பொழிய, கிரி இடறி, திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகி, கடல் நடு உற்றவும் உளவால்.–143-
கதிர்ஒப்பன கணை பட்டுள – (யானைகள்) கதிரவனுக்கு ஒப்பான
(வெம்மை மிக்க இலக்குவனது) அம்புகள் பட்டுள்ளன வாயும்; கதம்
அற்றில – சினம் நீங்காதனவாயும்: கதழ்கார் அதிரத் தனி அதிர்
கைக்கரி அளவற்றன உளவா – விரைவாகச் செல்லுகின்ற மேகத்தின்
இடியொலி கூட அதிருமாறு ஒப்பற்றுப் பேரொலி செய்யும் கையை
உடைய யானைகள் எண்ணிக்கையில் அடங்காதனவாயும் இருக்க:
எதிர்பட்டு அனல் பொழிய – (இலக்குவன் அம்புகளுக்கு) நேரே
எதிர்ப்பட்டு வெப்பம் வெளிப்பட: கிரி இடறி – (அதனால்) மலைகளில்
தடுமாறி விழுந்து: திசை எழு கார் உதிரத்தொடும் ஒழுகி- திசைகளில்
எழுகின்ற மிக்க குருதி (வெள்ளத்தில்) யில் இழுபட்டுப் போய்,: கடல்
நடு உற்றவும் உளவால் – கடலின் நடுவில் சென்று சேருவனவும்
(யானைகளும்) உள.
—————
7870.
கண்ணின்தலை அயில் வெங் கணை பட நின்றன, காணா,
எண்ணின்தலை நிமிர் வெங் கதம் முதிர்கின்றன, இனமா
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன, மலைபோல்
உள் நின்று அலை நிருதக் கடல் உலறிட்டன உளவால்.-144-
கண்ணின் தலை அயில் வெங்கணை பட – கண்ணினிடத்துக்
கூர்மையான கொடிய அம்புகள் படுதலால்: காணா நின்றன – காண
முடியாதபடி நின்றனவாகிய: இனமா – தொகுதியாகிய யானைகள்:
எண்ணின் தலை நிமிர் வெங்கதம் முதிர்கின்றன-அளவிடற்கரியதாய்
நிமிர்கின்ற கொடிய சினம் முதிரப் பெற்றனவாய்: மலை போல்
மண்ணின் தலை நெரியும் படி திரிகின்றன – மலைகள் நடத்தல்
போல் நிலத்தின் இடம் நெரியும்படி திரிவனவாய், உள் நின்று அலை
நிருதக் கடல் உலறிட்டன உளவால்- (எதிரிகளை நோக்கிச் செல்லாது)
உள்ளேயே சுற்றித் திரிந்து அரக்கர் படையாகிய கடலையே வற்றச்
செய்து விட்டனவுமுள.
———–
7871.
ஓர் ஆயிரம் அயில் வெங் கணை, ஒரு கால்
விடுதொடையின்,
கார் ஆயிரம் விட தாரையின் நிமிர்கின்றன, கதுவுற்று,
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன; இனி மேல்
ஆராய்வது என்? அவன் வில் தொழில் அமரேசரும்
அறியார்!–145-
ஒருகால் விடு தொடையின் – ஒரு தொடுப்பினில்: ஓர் ஆயிரம்
அயில் வெங்கணை – ஓர் ஆயிரம் கூர்மையான கொடிய அம்புகள்:
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன – கரிய மேகங்கள்
பொழியும் ஆயிரக்கணக்கான தாரைகள் போல் வெளிப்படுவன வாய்:
(உள்ளதால்) கதுவுற்று – அவ்வம்புகள் கவ்வுதலால் (பட்டுப்
பிளத்தலால்): ஈராயிரம் மதமால் கரி விழுகின்றன – ஈராயிரம் மத
மயக்கம் கொண்ட யானைகள் இறந்து விழுகின்றன: இனிமேல்
ஆராய்வது என்? – (என்றால்) அவனது விற்றொழில் பற்றி இனிமேல் ஆராய்வதற்கு என்ன உள்ளது. அவன் வில்
தொழில் அமரேசரும் அறியார் – அந்த இலக்குவனின் சித்திர வில்
தொழிலைத் தேவர் தலைவர்களும் அறிய மாட்டார்கள்.
—————
7872.
தேரும், தெறு கரியும், பொரு சின மள்ளரும், வய வெம்
போரின்தலை உகள்கின்றன புரவிக் குலம் எவையும்,
பேரும் திசை பெறுகின்றில-பணையின் பிணை மத வெங்
காரின் தரு குருதிப் பொரு கடல் நின்றன கடவா.–146-
பணையின் மதபிணை வெங் காரின் தரு குருதிப் பொரு கடல்
நின்றன கடவா – தந்தங்களோடு மதம் பொருந்திய கொடிய கரு
மேகம் போன்ற யானைகளின் உடம்பில் இருந்து பெருகி வருகிற
குருதியால் ஆகிய கடலில் நின்று அதைக் கடந்து செல்ல
முடியாதனவாய்: தேரும் – அழிந்த தேரும்: தெறு கரியும் – அழிக்கும்
தன்மை கொண்ட யானைகளும்: பொரு சின மள்ளரும் – போர்
செய்யும் சினம் மிகுந்த அரக்கவீரரும்; புரவிக் குலம் எவையும் –
குதிரைக் கூட்டங்கள் முதலிய எல்லாமும்; வயவெம் போரின் தல
உகள்கின்றன – வெற்றியுள்ள கொடிய போர்க் களத்திலேயே
புரள்கின்றனவாகிப்; பேரும் திசை பெறுகின்றில – இடம் பெயர்ந்து
செல்லும் திசையைப் பெறாதவையாயின.
————-
இராவணன் அனுப்பிய யானைப் படையை இலக்குவன் அழித்தல்
7873.
நூறாயிரம் மத வெங் கரி, ஒரு நாழிகை நுவல,
கூறு ஆயின; பயமுற்று ஒரு குலைவு ஆயின; உலகம்
தேறாதன, மலை நின்றன, தெரியாதன, சின மா
வேறு ஆயின, அவை யாவையும் உடனே வர விட்டான். –147-
மத வெங்கரி நூறாயிரம் – மதங்கொண்ட கொடிய யானைகள்
நூறாயிரமும்; ஒரு நாழிகை நுவல கூறு ஆயின – ஒரு நாழிகை
கடந்தது என்று சொல்லும் அளவினில் துண்டு துண்டாகி இறந்தன;
உலகம் பயமுற்று ஒரு குலைவு ஆயின – உலகத்து உயிர்கள்
அச்சங்கொண்டு ஒப்பற்ற கலக்கம் அடைந்தன; (இச்செய்தியை ஒற்றர்
சொல்லக் கேட்ட இராவணன்) தேறாதன – மத மயக்கம்
நீங்காதனவும்; மலை நின்றன – மலை போல் நின்றனவும்,
தெரியாதன சினமா – (பிறர் இதுவரை) காணாதனவுமாகிய யானைகள்;
வேறு ஆயின – வேறாக உள்ளவை அவையாவையும்; உடனே
செலவிட்டான் – உடனே (இலக்குவன் மீது) செல்லுமாறு
அனுப்பினான்.
————–
7874.
ஒரு கோடிய மத மால் கரி, உள வந்தன உடன் முன்
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய, பொழி மத யாறு
அருகு ஓடுவ, வர உந்தினர்-அசனிப் படி கணை கால்
இரு கோடுடை மத வெஞ் சிலை இள வாள் அரி எதிரே.–148-
உடன் முன் பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய-உடனேமுன்
போர் செய்த போர் முனையில் உயிர் விட்ட யானைகளைத் தவிர;
உளவந்தன பொழி மத யாறு அருகு ஓடுவ – உயிருள்ளனவாய் வந்த
பொழிகின்ற மத ஆறு அருகில் ஓடுகிற; ஒரு கோடிய மத மால்கரி –
ஒரு கோடி மத மயக்கம் கொண்ட களிறுகளை; அசனிப்படி
கணைகால் இரு கோடுடை மத வெஞ்சிலை இளவாள் அரி எதிரே-
இடி போன்று அம்புகளைச் செலுத்துகிற இரு முனைகளையுடைய
வலிமையான கொடிய வில்லை ஏந்திய இளைய சிங்கம் போன்ற
(இலக்குவனுக்கு) எதிராக; வர உந்தினர் – (அதிகாயனுடைய அரக்க
வீரர்) வருமாறு செலுத்தினார்கள்.
————
7875.
உலகத்து உள மலை எத்தனை, அவை அத்தனை உடனே
கொல நிற்பன, பொருகிற்பன, புடை சுற்றின; குழுவாய்
அலகு அற்றன, சினம் முற்றிய, அனல் ஒப்பன, அவையும்
தலை அற்றன, கரம் அற்றன, தனி வில் தொழில் அதனால்,–149-
உலகத்து உள மலை எத்தனை – (அரக்க வீரர் செலுத்திய
யானைகள்) உலகத்தில் உள்ள மலைகள் எத்தனையோ; அவை
அத்தனை உடனே கொல நிற்பன பொருகிற்பன – அவை
அத்தனையையும் உடனே அழிக்குமாறு நிற்பனவற்றை ஒத்தனவாகி;
அலகு அற்றன குழுவாய்ப் புடை சுற்றின – அளவு இல்லாதனவாய்க்
கூட்டமாய் (இலக்குவனைப்) பக்கங்களில் சூழ்ந்து கொண்டன; சினம்
முற்றிய அனல் ஒப்பன – ‘(அந்த யானைகள்) சினம் முதிர்ந்த
தீயினைப் போன்றன; அவையும் – (அவ்வாறு சுற்றிய அந்த
யானைகள்) யாவும்; தனி வில் தொழில் அதனால் – (இலக்குவனது)
ஒப்பற்ற வில் தொழில் ஆற்றலால்; தலை அற்றன கரம் அற்றன –
தலைகளை இழந்தனவும் துதிக்கைகளை இழந்தனவுமாயின.
————-
7876.
நாலாயின, நவ யோசனை நனி வன் திசை எவையும்,
மால் ஆயின மத வெங் கரி திரிகின்றன வரலும்,
‘தோல் ஆயின, உலகு எங்கணும்’ என அஞ்சினர்; துகளே-
போல் ஆயின, வய வானமும்; ஆறானது, புவியே.–150-
நாலாயின நவயோசனை நனிவன் திசை எவையும் – முப்பத்தாறு
யோசனை தூரம் உள்ள மிக வலிய திசைகளில் எல்லாம்; மால்
ஆயின மத வெங்கரி திரிகின்றன வரலும் – மயக்கம் கொண்ட
மதத்தினை உடைய கொடிய யானைகள் திரிகின்றனவாகி மிகுதியாக
வருதலும்; உலகு எங்கணும் தோல் ஆயின என அஞ்சினர்-உலகம்
முழுவதும் யானைகளே ஆய்விட்டன என்று (அனைவரும்)
அஞ்சினர்; வய வானமும் துகளே போல் ஆயின – வலிய வானம்
எல்லாம் (மண்ணின்) துகள் போல் ஆயின; புவியே
ஆறானது – நிலவுலகம் (அவ்வியானைகளின் மதநீர்ப் பெருக்கால்)
ஆறாக மாறிவிட்டது.
—————
7877.
கடை கண்டில, தலை கண்டில, கழுதின் திரள், பிணமா
இடை கண்டன, மலை கொண்டென எழுகின்றன; திரையால்
புடை கொண்டு எறி குருதிக் கடல் புணர்கின்றன,பொறி
வெம்
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால்.–151-
கழுதின் திரள் பிணமா தலை கண்டில கடைகண்டில- பேய்களின்
கூட்டம் பிணமாகி விட்ட யானைகளின் தலைப் பக்கத்தையும் வால்
பக்கத்தையும் காணாதனவாய்; இடை கண்டென மலை கொண்டென
எழுகின்றன – (அவற்றை) இடையில் கண்டு மலைகளைத் தூக்கிச்
செல்வன போல் (அந்த யானைகளின் பிணங்களைத்) தூக்கிக்
கொண்டு செல்வனவாயின; திரையால் புடை கொண்டு எறி குருதிக்
கடல் – அலைகளால் பக்கங்களில் எறியப்படுகின்ற குருதியாகிய கடல்;
பொறி வெம் படை கொண்டு இடை படர்கின்றன – தீப்பொறி
வெளிப்படும் கொடிய படைக் கலங்களை இடையில் அடித்துக்
கொண்டு பரவிச் செல்லுகிற; மத யாறுகள் பல புணர்கின்றன – மதநீர்
ஆறுகள் பல (சென்று) சேர்வனவாயின.
————
7878.
ஒற்றைச் சரம்அதனோடு ஒரு கரி பட்டு உக, ஒளிர
வாய்
வெற்றிக் கணை, உரும் ஒப்பன, வெயில் ஒப்பன,
அயில்போல்
வற்றக் கடல் சுடுகிற்பன, மழை ஒப்பன பொழியும்
கொற்றக் கரி பதினாயிரம் ஒரு பத்தியில் கொல்வான். –152-
ஒற்றைச் சரம் அதனோடு ஒருகரி பட்டு உக-ஓர் அம்புக்கு ஒரு
யானை இறந்து விழுமாறு; உரும் ஒப்பன, வெயில் ஒப்பன, அயில்
போல் வற்றச் சுடுகிற்பன – இடியைப் போன்றவையும், வெய்யிலை
ஒத்துத் தகிப்பனவும், உக்கிர குமார பாண்டியன் உடைய வேற்படை
போல் கடலை வற்றச் செய்வனவுமாகிய; ஒளிர் வாய் வெற்றிக் கணை
– ஒளி விடுகிற வாயை உடைய வெற்றி பொருந்திய அம்புகளால்;
மழையொப்பன பொழியும் கொற்றக் கரி-மழையை ஒத்து (மதநீரைப்)
பொழியும் வெற்றி பொருந்திய யானைகள்; பதினாயிரம் ஒரு பத்தியில்
கொல்வான் – பதினாயிரத்தை ஒரு வரிசையில் கொன்றான்
(இலக்குவன்).
———-
7879.
மலை அஞ்சின; மழை அஞ்சின; வனம் அஞ்சின; பிறவும்
நிலை அஞ்சின, திசை வெங் கரி; நிமிர்கின்றன கடலில்
அலை அஞ்சின; பிறிது என், சில? தனி ஐங் கர கரியும்,
கொலை அஞ்சுதல் புரிகின்றது-கரியின் படி கொளலால்.–153-
கரியின் படி கொளலால் – (இலக்குவன்) யானைப் படையைத்
தேடிக் கொல்லும் தன்மை கண்டு; மலை அஞ்சின – (யனைகள்)
போல் வடிவும் நிறமும் உடைய) மலைகள் அஞ்சின; மழை அஞ்சின
– (கரு நிழல் படிந்துள்ள) காடுகளும் அஞ்சின; பிறவும் திசை
வெங்கரி நிலை அஞ்சின – இவைகளின் வேறான திசை யானைகளும்
தங்கள் நிலையில் நிற்க அஞ்சின; கடலின் நிமிர்கின்ற அலை
அஞ்சின – கடலில் உயர்ந்து வருவனவாகிய (கருநிறம்உள்ள) அலைகள் அஞ்சின; சில பிறிது என் – வேறு சிலவற்றைப்
பற்றித் தனியாகக் கூற என்ன உள்ளது? தனி ஐங்கர கரியும் கொலை
அஞ்சுதல் புரிகின்றது – ஒப்பற்ற ஐந்து கைகளை உடைய கணபதி
ஆகிய யானையும் (யானை வடிவில் இருத்தலால்) இலக்குவன்
கொல்வானோ என்று அச்சத்தைக் கொண்டுள்ளது.
————-
7880.
கால் ஏறின சிலை நாண் ஒலி, கடல் ஏறுகள் பட, வான்-
மேல் ஏறின, மிசையாளர்கள் தலை மெய்தொறும் உருவ,
கோல் ஏறின-உரும்ஏறுகள் குடியேறின எனலாய்,
மால் ஏறின களி யானைகள் மழைஏறு என மறிய.–154-
கால் ஏறின சிலை நாண் ஒலி – (இலக்குவனுடைய) இரு
முனைகளும் பொருந்துமாறு வளைத்த வில் நாணின் ஒலி; கடல்
ஏறுகள் படவான் மேல் ஏறின – கடலில் உள்ள சுறா மகரம் முதலிய
பெரு மீன்களை அழியச் செய்து வானத்திலும் தோன்றின; உரும்
ஏறுகள் குடியேறின எனலாய் – (அதற்குப்பின்பு) பேரிடிகள்
ஓரிடத்தில் குடியேறின என்னும் படி; மால் ஏறின களியானைகள்
மழை ஏறு எனமறிய – மயக்கம் மிக்க மதக்களி கொண்ட யானைகள்
மழைக்கால இடியேறு என்னுமாறு மடங்கி விழவும்; மிசையாளர்கள்
தலை மெய் தொறும் உருவ கோல் ஏறின-(பின்) யானை மேலுள்ள
வீரர்களின் தலைகள் மற்றும் உடம்புகளிலும் ஊடுருவி (அவ்)
அம்புகள் பாய்ந்தன.
————–
அனுமன் யானைப் படையை அழித்தல்
7881.
இவ் வேலையின், அனுமான்,-முதல் எழு வேலையும்
அனையார்,
வேவ் வேலவர், செல ஏவிய கொலை யானையின் மிகையைச்
செவ்வே உற நினையா, ‘ஒரு செயல் செய்குவென்’
என்பான்,
தவ்வேலென வந்தான்,-அவன் தனி வேல் எனத் தகையான்.–155-
இவ்வேலையின் – இந்த நேரத்தில்; முதல் எழு வேலையும்
அனையார் வெவ்வேலவர் – சிறப்புடைய ஏழு கடல்களை
ஒத்துள்ளவரான கொடிய வேலை ஏந்திய அரக்கர்; செல ஏவிய
கொலை யானையின் மிகையைச் – செல்லுமாறு ஏவி அனுப்பிய
கொலைத் தன்மை கொண்ட யானைகளின் மிகுதியை; அனுமான்
செவ்வே உறநினையா – அனுமன் செம்மையாகப் பொருந்த
நினைத்துப் பார்த்து; ஒரு செயல் செய்குவென் என்பான் – ஒரு
(வீரச்) செயலைச் செய்வேன் என்று (மனத்துள் நினைத்து); அவன்
தனிவேல் எனத் தகையான் தவ்வேலென வந்தான் – அந்த
இலக்குவன் உடைய ஒப்பற்ற வேலின் தன்மையை உடையவனாய்
திடீரென்று (அங்கு) வந்தான்.
——————
ஆர்த்து அங்கு அனல் விழியா, முதிர் மத யானையை
அனையான்,
தீர்த்தன் கழல் பரவா, முதல் அரிபோல் வரு திறலான்,
வார்த் தங்கிய கழலான்,-ஒரு மரன், நின்றது, நமனார்
போர்த் தண்டினும் வலிது ஆயது, கொண்டான்-புகழ்
காண்டான்.–156-
முதிர் மத யானையை அனையான் – முதிர்ந்த மதங் கொண்ட
யானையைப் போன்றவனும்; முதல் அரி போல் வரு திறலான்- முழு
முதற் பொருளாகிய நரசிங்க மூர்த்தியை ஒத்த வலிமை
கொண்டவனும்; வார்த் தங்கிய கழலான் – வாரால் பிணைத்துக்
கட்டப்பட்ட வீரக்கழலை அணிந்தவனும்; புகழ் கொண்டான் –
(பெரும்) புகழ் கொண்டவனும் ஆகிய (அனுமன்); தீர்த்தன் கழல்
பரவா – தூயவன் ஆகிய இராமபிரானது திருவடிகளைத் துதித்து;
அங்கு ஆர்த்து அனல் விழியா – அப்போது பேரொலி செய்து,நெருப்பு வெளிப்பட விழித்து; நமனார் போர்த்தண்டினும் வலிது
ஆயது – யமனுடைய போரிடும் தண்டினும் வலிமை உடையதாகிய;
ஒரு மரன் நின்றது கொண்டான் – (அருகில் இருந்து) ஒப்பற்ற
மரத்தைக் (போர் செய்யக்) கைக் கொண்டான்.
முதல் அரி – முழுமுதற் பொருளாகிய நரசிங்க மூர்த்தி.
—————–
7883.
கருங் கார் புரை நெடுங் கையன களி யானைகள்
அவை சென்று
ஒருங்கு ஆயின, உயிர் மாய்ந்தன; பிறிது என், பல
உரையால்?-
வரும் காலனும், பெரும் பூதமும், மழை மேகமும் உடனாப்
பொரும்காலையில் மலைமேல் விழும்
உரும்ஏறு எனப் புடைத்தான்.–157-
(அனுமன் தண்டு கைக்கொண்ட அப்பொழுது) வரும் காலனும்-
கொல்லும் தொழிலில் கைவந்த யமனும்; பெரும் பூதமும் – ஐம்பெரும்
பூதங்களும்; மழை மேகமும் – பெருமழை மேகமும்; உடனாப்
பொரும் காலையில் – ஒன்றாகி (உலகைப்) பொருது அழிக்கும்
யுகமுடிவுக் காலத்தில்; மலை மேல் விழும் உரும் ஏறு எனப்
புடைத்தான் – மலை மேல் விழுகின்ற ஆணிடி என்னுமாறு
(யானைகளை) அடித்தான் (அதனால்); கருங்கார் புரை நெடுங்கையன
களி யானைகள் – கரிய மேகத்தை ஒத்தனவும், நீண்ட துதிக்கைகளை
உடையனவும் ஆகிய மத மயக்கம் மிக்க யானைகள்; அவை சென்று
– தொகுதியாக (அனுமன் எதிர்) சென்று; ஒருங்கு ஆயின உயிர்
மாய்ந்தன – ஒன்றாகச் சேர்ந்தனவாய் உயிரொழிந்தன; பல உரையால்
பிறிது என் – (இது பற்றி) பலவற்றைக் கூறுவது வேறாக என்ன உளது.
—————-
7884.
மிதியால் பல, விசையால் பல, மிடலால் பல, இடறும்
கதியால் பல, தெழியால் பல, காலால் பல, வாலின்
நுதியால் பல, நுதலால் பல, நொடியால் பல, பயிலும்
குதியால் பல, குமையால் பல, கொன்றான்-அறம் நின்றான். –158-
அறம் நின்றான் – தருமத்தின் தனிமை தீர்ப்பான் துணை
நின்றவனாகிய அனுமன் (யானைகளில்); மிதியால் பல – மிதித்த
மிதியால் பலவற்றையும்; விசையால் பல – வேகத்தால் பலவற்றையும்;
மிடலால் பல – வலிமையால் பலவற்றையும்; இடறும் கதியால் பல –
இடறும் நடையினால் பலவற்றையும்; தெழியால் பல – பேரொலியால்
பலவற்றையும்; காலால் பல – காலினால் பலவற்றையும்; வாலின்
நுதியால் பல – வாலின் நுனியால் பலவற்றையும்; நுதலால் பல –
நெற்றியால் முட்டிப் பலவற்றையும்; நொடியால் பல – கைவிரல்
இரண்டையும் முறுக்கித் தெறித்தலால் பலவற்றையும்; பயிலும் குதியால்
பல – பழகிய குதிப்பினால் பலவற்றையும்; குமையால் பல –
குமைத்தலால் பலவற்றையும்; கொன்றான் – கொன்றான்.
——————
7885.
பறித்தான் சில, பகிர்ந்தான் சில, வகிர்ந்தான் சில,
பணை போன்று
இறுத்தான் சில, இடந்தான் சில, பிளந்தான் சில, எயிற்றால்
கறித்தான் சில, கவர்ந்தான் சில, கரத்தால் சில பிடித்தான்,
முறித்தான் சில, திறந்து ஆனையின் நெடுங்
கோடுகள்-முனிந்தான்.–159-
முனிந்தான் – சினம் கொண்டவன் ஆன அனுமன்; திறத்து
ஆனையின் நெடுங் கோடுகள் – சில வலிய யானையின் நீண்ட
கொம்புகளை; சில பறித்தான் – சிலவற்றைப் பிடுங்கி எறிந்தும்; சில
பகிர்ந்தான் – சிலவற்றைப் பிளந்தும்; சில வகிர்ந்தான் – சிலவற்றைக்
கூறுபடுத்தியும்; சில பணை போன்று இறுத்தான்- சிலவற்றை மூங்கில்
போல் முறித்தும்; சில இடந்தான் – சிலவற்றைத் தோண்டியும்; சில
பிளந்தான் – சிலவற்றை (பல துண்டாகப்) பிளந்தும்; சில எயிற்றால்
கறித்தான் – சிலவற்றைப் பற்களால் கடித்தும்; சில கவர்ந்தான் –
சிலவற்றைக் கவர்ந்தும்; சில கரத்தால் பிடித்தான் – சிலவற்றைக்
கைகளால் பிடித்தும்; சில முறித்தான் – சிலவற்றை முறித்தும்
அழித்தான்.
———————
7886.
வாரிக் குரை கடலில் புக விலகும்; நெடு மரத்தால்
சாரித்து அலைத்து உருட்டும்; நெடுந் தலத்தில் படுத்து
அரைக்கும்;
பாரில் பிடித்து அடிக்கும்; குடர் பறிக்கும்; படர் விசும்பின்
ஊரில் செல, எறியும்; மிதித்து உழக்கும்; முகத்து உதைக்கும்;–160-
வாரிக் குரை கடலில் புக விலகும் – (அனுமன் யானைகளை)
எடுத்து ஒலிக்கிற கடலில் புகும்படி எறிவான்; நெடு மரத்தால் சாரித்து
அலைத்து உருட்டும் – நீண்ட மரத்தைக் கொண்டு சாரி திரிந்து
அலைத்து உருட்டுவான்; நெடுந் தலத்தில் படுத்து அரைக்கும் –
பெரிய நிலத்தில் தள்ளி அரைப்பான்; பாரில் பிடித்து அடிக்கும் –
நிலத்தில் பிடித்து அடிப்பான்; குடர் பறிக்கும் – குடலைப் பறிப்பான்;
படர் விசும்பின் ஊரில் செல எறியும் – படர்ந்த வானுலகத்து ஊரில்
செல்லுமாறு எறியும்; மிதித்துக் கலக்கும் – மிதித்துக் கலக்கும்; முகத்து
உதைக்கும் – (அவ்வியானைகளின்) முகத்தில் உதைப்பான்.
—————
7887.
வாலால் வர வளைக்கும், நெடு மலைப் பாம்பு என வளையா,
மேல் ஆளொடு பிசையும்; முழு மலைமேல் செல, விலக்கும்;
ஆலாலம் உண்டவனே என, அகல் வாயின் இட்டு அதுக்கும்;
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரிஏறு எனத்
தொலைக்கும்;–161-
வாலால் நெடுமலைப் பாம்பு என வர வளைக்கும்-(அதற்கு மேல்
அனுமன்) வாலினால் நீண்ட மலைப்பாம்பு போல (யானைகளை)
வளைப்பான்; வளையா மேல் ஆளொடு பிசையும் – வளைத்து அதன்
மேல் உள்ள வீரர்களோடு அழிக்கும்; முழுமலை மேல் செல விலக்கும் – சில யானைகளை பெரிய மலை மீது மோதி
உயிர்விடச் செய்வான்; ஆலாலம் உண்டவனே என அகல்வாயின்
இட்டு அதுக்கும் – ஆலகால நஞ்சினை உண்ட சிவபெருமான் போல
(சிலவற்றை) அகன்ற வாயில் இட்டு அதுக்குவான்; அரி ஏறு என
தோல் ஆயிரம் இமைப் போதினின் தொலைக்கும் – ஆண் சிங்கம்
போல யானைகள் ஆயிரத்தை இமைப் பொழுதின் அளவுக்குள்
அழிப்பான்.
—————–
7888.
சய்யத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா,
நொய்தின் கடிது எதிர் உற்றன, நூறாயிரம், மாறா
மய்யல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய,
தொய்யல் படர் அழுவக் கொழுஞ் சேறாய் உகத்
துவைப்பான்.–162-
சய்யத்தினும் உயர்வுற்றன – (மேலும் அனுமன்) மலைகளைக்
காட்டிலும் உயர்ந்தனவும்; தறுகண் களி மதமா – அஞ்சாமையும்
மயக்கமும் உடைய மதங் கொண்டவையும்; மாறா மய்யல் கரி –
மயக்கம் நீங்காதனவுமாகிய யானைகள்; நூறாயிரம் நொய்தின் கடிது
எதிர் உற்றன – நூறாயிரம் அளவுள்ள எளிமையாயும் விரைவாயும்
(தன்) எதிர்வந்தவைகளை; உகிரின் சில குழைபுக்கு உரு மறைய –
தன் நகத்தால் சில தழைகளைப் போன்று உள்ளே அழுந்தி உருவம்
மறைய; தொய்யல் படர் அழுவக் கொழுஞ் சேறாய்
உகத்துவைப்பான்- குழம்பாய்ப் படர்ந்து நீர் நிலத்தில் கொழுவிய
சேறாகுமாறு துவைத்தான்.
————–
7889.
வேறாயின மத வெங் கரி ஒரு கோடியின், விறலோன்,
நூறாயிரம் படுத்தான்; இது நுவல்காலையின், இளையோன்;
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான்;
தேறாதது ஓர் பயத்தால் நெடுந் திசை காவலர் இரிந்தார்.–163-
விறலோன் – வலிமை உடையவன் ஆன அனுமன்; வேறாயின
மதவெங்கரி ஒரு கோடியின் நூறாயிரம் படுத்தான் – வேறாக வந்த
மதத்தை உடைய கொடிய யானைகள் ஒரு கோடியில் (மேல்
கூறியவாறு போரிட்டு) நூறாயிரத்தைக் கொன்றான்; இது
நுவல்காலையின் – இதனை (அவ்வனுமன்) விரும்பிச் செய்வதைக்
கூறும் அளவில்; இளையோன் கூறாயின என அன்னவை கொலை
வாளியின் கொன்றான் – இளையவனாகிய இலக்குவன் (தன்) பாகமாக
நின்றவை என்று கருதி (அனுமன் கொல்லாமல் விட்ட) அந்த (மீதி)
யானைகளைத் தன் கொல்லும் தனமை உள்ள அம்புகளால்
கொன்றான். நெடுந்திசை காவலர் தேறாதது ஓர் பயத்தால்
இரிந்தார்- (அச்செயல் கண்ட) எண்திசைக் காவர்கள் தெளிய முடியாத
பேரச்சத்தால் நிலை குலைந்து ஓடினார்கள்.
————
7890.
இரிந்தார், திசை திசை எங்கணும் யானைப் பிணம் எற்ற,
நெரிந்தார்களும்; நெரியாது உயிர் நிலைத்தார்களும்
நெருக்கால்
எரிந்தார்; நெடுந் தடந் தேர் இழிந்து எல்லாரும் முன்
செல்ல,
திரிந்தான் ஒரு தனியே, நெடுந் தேவாந்தகன், சினத்தான்.–164-
திசை திசை எங்கணும் யானைப்பிணம் எற்ற நெரிந்தார்களும்
இரிந்தார் – எல்லாத் திசைகளிலும் யானைகளின் பிணங்கள்
மோதுவதனால் நெரிபட்டவர்கள் நிலை கெட்டு ஓடினார்கள்; நெரியாது
உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் எரிந்தார்- (அவ்வாறு)
நெரிபடாமல் உயிரோடு இருந்தவர்களும் நெருக்கினால்
அழிந்திட்டனர்; (அவ்வாறு எங்கும் யானைப் பிணங்கள்
கிடைத்தலால்) நெடுந் தடந்தேர் இழிந்து எல்லோரும் முன்
செல்ல – நெடிய பெரிய தேரில் இருந்து இறங்கி எல்லாரும் (தேரைச் செலுத்த முடியாமல்) முன்னே ஓட; ஒரு தனியே நெடுந்
தேவாந்தகன் சினத்தான் திரிந்தான் – தன்னந்தனியே நெடிய
தேவாந்தகன் (போர்க்களத்தில்) சினத்துடன் திரிந்தான்.
—————-
7891.
உதிரக் கடல், பிண மால் வரை, ஒன்று அல்லன பலவாய்
எதிர, கடு நெடும் போர்க் களத்து ஒரு தான் புகுந்து
ஏற்றான்,
கதிர் ஒப்பன சில வெங் கணை அனுமான் உடல் கரந்தான்,
அதிரக் கடல்-நெடுந் தேரினன்-மழைஏறு என ஆர்த்தான்.–165-
உதிரக்கடல் – குருதிக்கடலும்,; பிணமால் வரை – பிணக்
குவியல்களாகிய (யானை உடல்களின்) பெரிய மலையும்; ஒன்று
அல்லன பலவாய் எதிர – ஒன்றல்லாமல் பலவாய் எதிர்ப்பட;
நெடுந்தேரினன் – பரிய தேரை உடைய தேவாந்தகன்; கடு நெடும்
போர்க்களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – கடுமையான பெரிய
போர்க்களத்தில் தான் ஒருவனாய்ப் புகுந்து எதிர்த்தவனாய்; கதிர்
ஒப்பன சில வெங்கணை அனுமான் உடல் கரந்தான் – கதிரவனின்
ஒளிக் கதிர்களை ஒத்த (சுடுகணைகளாகிய) சில கொடிய அம்புகளை
அனுமன் உடலில் மறைந்து புதையுமாறு செலுத்தி; கடல் அதிர மழை
ஏறு என ஆர்த்தான் – கடல் அதிரும்படி மழைக்கால இடி போல
பேரொலி செய்தான்.
———-
7892.
அப்போதினின், அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று
ஆர்த்தான்,
‘இப்போது இவன் உயிர் போம்’என, உரும்ஏறு என
எறிந்தான்;
வெப்போ என வெயில் கால்வன அயில் வெங் கணை,
விசையால்
‘துப்போ?’ என, துணியாம் வகை, தேவாந்தகன் துரந்தான். –166-
அப்போதினின் அனுமானும் – அப்போது அனுமானும்; ஓர் மரம்
ஓச்சி நின்று ஆர்த்தான் – ஒரு மரத்தை உயரத் தூக்கிச் சுழற்றிப்
பேரொலி செய்தவனாய்; இப்போது இவன் உயிர் போம் என –
இப்போது இவனுயிர் (தேவாந்தகன்) போய் விடும் என்று சொல்லி;
உரும் ஏறு என எறிந்தான் – பேரிடி போன்ற ஒலியோடு எறிந்தான்;
வெப்போ என வெயில் கால்வன அயில் வெங்கணை – கொடிய
நெருப்போ என எண்ணும்படி வெப்பத்தை வெளியிடும் கூர்மையான
கொடிய அம்புகளை; விசையால் – மிக வேகமாக; துப்போ என –
(அந்த மரம் ஒரு) வலிமை உடைய பொருளோ என எண்ணுமாறு;
துணியாம் வகை – (அது) துண்டுபட்டுச் சிதறுமாறு; தேவாந்தகன்
துரந்தான் – தேவாந்தகன் செலுத்தினான்.
————-
7893.
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன், வய வானரக்
குலத்தோர்க்கு
ஏறு, ஆங்கு அதும் எறியாதமுன், முறியாய் உக எய்தான்;
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான்,
பாறு ஆங்கு எனப் புகப் பாய்ந்து, அவன் நெடு
வில்லினைப் பறித்தான்.–167-
வயவானரக் குலத்தோர்க்கு ஏறு – வலிமை மிக்க வானரக்
குலத்தவர்க்கு தலைவன் ஆகிய அனுமன்; மாறு ஆங்கு ஒரு மலை
வாங்கினன் – வேறாகப் பிறிது ஒரு மலையைக் (கையில்) எடுத்தான்;
ஆங்கு அதும் எறியாத முன் – அப்போது அந்த மலையை
எறிவதற்கு முன்னமேயே; முறியாய் உக எய்தான் – அம்மலை
துண்டுபட்டுச் சிதறும்படி (தேவாந்தகன்) அம்பினை எய்தான்; கோல்
தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான் – அம்பு
பொருந்திய வில்லினை உடைய தேவாந்தகனுடன் சிறப்புப் பொருந்திய
அனுமன் மிகச் சினந்து; ஆங்கு பாறு எனப் புகப்பாய்ந்து – அங்குப்
பருந்து போலப் பாய்ந்து; அவன் நெடு வில்லினைப் பறித்தான் –
அந்தத் தேவாந்தகனுடைய நெடிய வில்லைப் பறித்தான்.
மாறு – வேறாக, வயம் – வலிமை, ஏறு – தலைவன், சிங்க
மெனினுமாம். கோல் – அம்பு பாறு – பருந்து.
————
7894.
பறித்தான் நெடும் படை, வானவர் பலர் ஆர்த்திட, பலவா
முறித்தான்; அவன் வலி கண்டு, உயர் தேவாந்தகன்
முனிந்தான்.
மறித்து ஆங்கு ஓர் சுடர்த் தோமரம் வாங்கா, மிசை ஓங்கா;
செறித்தான், அவன்இடத் தோள்மிசை; இமையோர்களும்
திகைத்தார்.–168-
நெடும் படை பறித்தான்-(தேவாந்தகன் உடைய) நீண்ட வில்லைப்
பிடுங்கியவனாகிய (அனுமன்); பலர் வானவர் ஆர்த்திட- பல
தேவர்கள் (மகிழ்ச்சியால்) பேரொலி செய்ய; பலவா முறித்தான் –
(அந்த வில்லைப்) பல துண்டுகள் ஆகும்படி முனித்தான்; உயர்
தேவாந்தகன் – (வீரத்தில்) சிறந்த தேவாந்தகன்; அவன் வலி கண்டு
முறிந்தான் – அந்த அனுமனுடைய வலிமையைக் கண்டு
சினந்தவனாய்; ஆங்கு மறித்து ஒரு சுடர்த் தோமரம் வாங்காமிசை
ஓங்கா – அப்போது மீண்டும் ஒரு ஒளி பொருந்திய தோமரம்
என்னும் படையை எடுத்து மேல் ஓங்கி; அவன் இடத்தோள் மிசை
செறித்தான் – அந்த அனுமனுடைய இடது தோளின் மீது நெருங்க
அடித்தான்; இமையோர்களும் திகைத்தார் – (அச்செயல் கண்ட)
தேவர்களும் திகைத்தார்கள்.
————-
7895.
சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும், கனல் ஆம்
எனச் சுளித்தான்,
அடல் தோமரம் பறித்தான், திரிந்து உரும்ஏறு என
ஆர்த்தான்,
புடைத்தான்; அவன் தடந்தேரொடு நெடுஞ் சாரதி
புரண்டான்;-
மடல் தோகையர் வலி வென்றவன்-வானோர் முகம்
மலர்ந்தார்.–169-
மடல் தோகையர் வலி வென்றவன்- மடப்பம் பொருந்திய மகளிர்
ஏதுவாக உண்டாகும் காமம் ஆகிய (அகப் பகையை) வென்றவன்
ஆகிய அனுமன்; சுடர்த் தோமரம் எறிந்து ஆர்த்தலும் – (தன்
இடத்தோள் மிசை) ஒளி பொருந்திய தோமரப் படையை வீசித்
(தேவாந்தகன்) பேரொலி செய்த உடனே; கனல் ஆம் எனச்
சுளித்தான் – தீ ஆகும்படி எனச் சினந்து; அடல் தோமரம்
பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான்-அந்த வலிமை மிகு
தோமரத்தைத் (தேவாந்தகன் கையில் இருந்து) பறித்துத் திரிந்து
இடியேறு எனும்படி பேரொலி செய்து; புடைத்தான் – (அந்தத்
தோமரம் கொண்டு தேவாந்தகனைப்) புடைத்தான்; அவன்
தடந்தேரொடு நெடுஞ் சாரதி புரண்டான் – அதனால் அவனுடைய
பெரிய தேரோடு வலிமை மிகு தேர்ப்பாகனும் இறந்தான்; வானோர்
முகம் மலர்ந்தனர் – (அது கண்டு) தேவர்கள் மகிழ்ச்சியால் முகம்
மலர்ந்தனர்.
———–
7896.
சூலப் படை தொடுவான்தனை இமையாதமுன் தொடர்ந்தான்;
ஆலத்தினும் வலியானும் வந்து, எதிரே புகுந்து அடர்த்தான்;
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின்
மூலத்திடைப் புடைத்தான், உயிர் முடித்தான், சிரம
மடித்தான்.–170-
சூலப்படை தொடுவான் தனை – சூலப் படையைக் கையில்
கொண்ட தேவாந்தகனை; இமையாத முன் தொடர்ந்தான் – (அனுமன்)
கண்ணிமைப்பதற்கு முன்னமே நெருங்கிப் போர் செய்யலானான்;
ஆலத்தினும் வலியானும் – ஆலகால நஞ்சைக் காட்டிலும் வலிமை
பொருந்திய தேவாந்தகனும்; எதிரே வந்து புகுந்து அடர்த்தான் –
அவனுக்கு எதிரில் வந்து புகுந்து போரிட்டான்; காலற்கு இரு
கண்ணான் – யமனுக்கு இரு கண்களைப் போன்றவனாகிய (அனுமன்);
தன் கையால் – தனது கையினால்; அவன் கதுப்பின் மூலத்திடைப்
புடைத்தான் – அந்தத் (தேவாந்தகனுடைய) கன்னத்து உயிர்ப்
பாகத்தில் அடித்தான்; சிரம் மடித்தான் உயிர் முடித்தான்- அதனால்
அவன் தலை தொங்கி உயிர் விட்டான்.
—————
அதிகாயன் – அனுமன் வீர உரை
7897.
கண்டான் எதிர் அதிகாயனும், கனல் ஆம் எனக் கனன்றான்,
புண்தான் எனப் புனலோடு இழி உதிரம் விழி பொழிவான்,
‘உண்டேன் இவன் உயிர் இப்பொழுது; ஒழியேன்’ என
உரையா,
‘திண் தேரினைக் கடிது ஏவு’ என, சென்றான்; அவன்
நின்றான்.–171-
அதிகாயனும் எதிர் கண்டான் – (தேவாந்தகன் இறந்ததை)
அதிகாயனும் கண் எதிரே கண்டான்; கனல் ஆம் எனக் கனன்றான்-
(அவன்) நெருப்புப் போலக் கொதித்து; புண்தான் எனப் புனலோடு
இழி உதிரம் விழி பொழிவான் – புண்தான் என்று (கண்டோர்க்குத்)
தோன்றுமாறு கண்ணீரோடு வழியும் குருதியை விழிகளில்
சோரவிட்டவனாய்; இவன் உயிர் இப்பொழுது உண்டேன் – இந்த
அனுமனுடைய உயிரை இப்பொழுதே அழிப்பேன்; ஒழியேன் என
உரையா – செய்யாது விட மாட்டேன் என்று உரைத்து; திண்
தேரினைக் கடிது ஏவு என – வலிய நம் தேரினை விரைவாகச்
செலுத்து என்று (பாகனுக்குச் சொல்லி); அவன் நின்றான் சென்றான் –
அந்த அனுமன் நின்ற இடத்துக்குச் சென்றான்.
————–
7898.
அன்னான் வரும் அளவின்தலை, நிலைநின்றன அனிகம்;
பின் ஆனதும் முன் ஆனது; பிறிந்தார்களும் செறிந்தார்;
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர்
புக்கான்,
சொன்னான் இவை, அதிகாயனும், வடமேருவைத்
துணிப்பான்; –172-
அன்னான் வரும் அளவின் தலை – அந்த அதிகாயன் வரும்
பொழுது; அனிகம் பின் ஆனதும் முன் ஆனது நிலை நின்றன –
சேனைகள் பின்னிட்டவை முன்னிட்டவையாய் நிலை பெற்று நின்றன;
பிறிந்தார்களும் செறிந்தார் – பிரிந்து சென்றவர்களும் ஒன்று சேர்ந்து
நெருங்கினார்கள்; வடமேருவைத் துணிப்பான் அதிகாயனும் –
வடக்கின் கண் உள்ள மேரு மலையையும் துண்டாக்க வல்ல (வலிமை
உடைய) அதிகாயனும்; பொன்னால் உயர் நெடு மால் வரை
போல்வான் – பொன்னால் ஆகிய உயர்ந்த பெரிய மேரு மலை
போன்றவனாகிய அனுமனுக்கு; எதிர் புக்கான் இவை சொன்னான் –
எதிரே புகுந்து இந்தச் சொற்களைச் சொன்னான் (அதை அடுத்த
இரண்டு பாடல்களில் காண்க.)
———–
அதிகாயன் உரை
7899.
‘தேய்த்தாய், ஒரு தனி எம்பியைத் தலத்தோடு ஒரு
திறத்தால்;
போய்த் தாவினை நெடு மா கடல், பிழைத்தாய்; கடல்
புகுந்தாய்,
வாய்த்தானையும் மடித்தாய்; அது கண்டேன், எதிர்
வந்தேன்.
ஆய்த்து ஆயது முடிவு, இன்று உனக்கு; அணித்தாக வந்து,
அடுத்தாய்.–173-
ஒரு தனி எம்பியைத் தலத்தோடு தேய்த்தாய் – (முன்பு நடந்த
பழைய போரில்) ஒப்பற்றுத் தனித்த என் தம்பியாகிய
(அக்ககுமாரனைத்) தரையோடு சேர்த்து அழித்து; ஒரு திறத்தால்
நெடுமா கடல் – ஒப்பற்ற உன் வலிமையால் பெரிய கரிய கடலை;
போய்த் தாவினை பிழைத்தாய் – போய்த் தாவிப் பிழைத்தாய்; கடல்
புகுந்தாய் வாய்த்தானையும் மடித்தாய்- (இப்போது நடக்கும் போரில்)
அரக்கர் சேனையாகிய கடலில் புகுந்து பொருதற்கு வாய்த்தவனாகிய
தேவாந்தகனையும் உயிர் இழக்கச் செய்தாய்; அது கண்டேன் எதிர்
வந்தேன் – அச்செயல் கண்டு உன் எதிர் வந்து உள்ளேன்; இன்று
உனக்கு முடிவு ஆய்த்து ஆயது – இப்போது உனக்கு முடிவு
(நெருங்கி) ஆயிற்று ஆயிற்று; அணித்தாக வந்து அடுத்தாய் –
(அதனால்தான்) என்னை நெருங்கி வந்துள்ளாய்.
வாய்த்தான் – பொருதற்குக் கிடைத்தவன்; தேவாந்தகன். ஆய்த்து
ஆயது – ஆயிற்று ஆயிற்று விரைவு பற்றி வந்த அடுக்கு. இதனை
ஒரு பொருட் பன்மொழி என்பாரும் உளர்.
—————–
7900.
‘இன்று அல்லது, நெடு நாள் உனை ஒரு நாளினும்
எதிரேன்;
ஒன்று அல்லது செய்தாய் எமை; இளையோனையும்
உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெங் கணை
மழையால்
கொன்று அல்லது செல்லேன்; இது கொள்’ என்றனன்,
கொடியோன்.–174-
உனை இன்று அல்லது – உன்னை இன்றைக்குக் (கொன்றால்)
அல்லது; நெடுநாள் ஒரு நாளினும் எதிரேன் – (இனிவரும்) நீண்ட
காலத்தில் ஒருநாள் கூட எதிர்த்துப் போரிட மாட்டேன்; எமை ஒன்று
அல்லது செய்தாய் – (நீ) எமக்கு ஒரு தீங்கு அல்லாது பல
தீங்குகளைச் செய்துள்ளாய் (அதனால்); வென்று அல்லது மீளாத என்
மிடல் வெங்கணை மழையால் – வெற்றி பெற்று அன்றி வீணாக
மீளுதல் இல்லாத என்னுடைய வலிமை பொருந்திய கொடிய
அம்புகளின் மழையினால்; இளையோனையும் உனையும் கொன்று
அல்லது செல்லேன் – (இராமனுக்கு) இளையவனாகிய
இலக்குவனையும் உன்னையும் கொன்றல்லது மீள மாட்டேன்; இது
கொள் என்றனன் கொடியோன் – இதை (நீ மனதில் உறுதியாகக்)
கொள்க என்று கூறினான் கொடியவனாகிய அதிகாயன்.
————
அனுமன் திரிசிரனை அழை எனக் கூறல்
7901.
‘பிழையாது; இது பிழையாது’ என, பெருங் கைத்தலம்
பிசையா,
மழை ஆம் எனச் சிரித்தான்-வட மலை ஆம் எனும்
நிலையான்-
‘முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக
முனிவாய்;
அழையாய் திரிசிரத்தோனையும், நிலத்தோடும் இட்டு
அரைப்பான்.–175-
வட மலை ஆம் எனும் நிலையான்- வடக்கின் கண் உள்ள மேரு
மலை ஆம் என்று கூறும்படி சலியா நிலையுடைய அனுமன்;
முழைவாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் –
குகையில் உள்ள சிங்கத்தை ஒத்த இலக்குவனையும் என்னையும்
மிகச் சினக்கின்றாய்; நிலத்தோடும் இட்டு அரைப்பான் – (நான்)
நிலத்தில் சேர்த்தி அரைத்து அழிப்பதற்காக; திரி சிரத்தோனையும்
அழையாய் – திரிசிரனையும் (நாங்கள் இருவர் நீ ஒருவன் எனவே)
துணையாக அழைத்துக் கொள்வாய்; இது பிழையாது பிழையாது என –
(நான் சொல்லும்) இது தவறாது தவறாது என்று கூறி; பெருங்கைத்தலம்
பிசையா – (தன்னுடைய) பெரிய கைகளைச் சேர்த்துப் பிசைந்து
கொண்டு; மழை ஆம் எனச் சிரித்தான் – மேகம் போல் பெரிய ஒலி
எழுமாறு சிரித்தான்.
———
திரிசிரன் அனுமன் போர்
7902.
‘ஆம், ஆம்!’ என, தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து,
அடர்த்தான்;
கோமான் தனிப் பெருந் தூதனும், எதிரே செருக
கொடுத்தான்,
‘காமாண்டவர், கல்லாதவர், வல்லீர்!’ எனக் கழறா,
நா மாண்டு அற, அயல் நின்று உற நடுவே புக நடந்தான்.–176-
ஆம் ஆம் என தலை மூன்றுடையான் ஆர்த்து வந்து
அடர்த்தான் – (அனுமன் சொல் கேட்டு) ஆம் ஆம் என்று சொல்லிக்
கொண்டு முத்தலையனான திரிசிரன் பேரொலி செய்து கொண்டு வந்து
தாக்கினான்; கோமான் தனிப் பெருந் தூதனும் எதிரே செருக்
கொடுத்தான் – தலைவன் ஆகிய இராமனது ஒப்பற்ற பெருந்தூதன் ஆகிய அனுமனும் (அவனுக்கு)
எதிராகப் போர் தொடுத்து; காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் எனக்
கழறா – காமத்தால் மிக்கவரும் கல்லாதவரும் ஆகிய (நீங்கள்) (காமம்
இல்லாத கற்ற எங்களை) வெல்ல வல்லீராவீரோ என்று சொல்லி;
அயல் நின்று உற – தூரத்தில் இருந்து நெருங்கி; நாமாண்டு அற –
(கண்டவர்) நாக்கு வற்றி ஒழிய; நடுவே புக நடந்தான் – நடுவில்
புகுந்து நடந்தான்.
——
திரிசிரனை அழித்தல்
7903.
தேர்மேல் செலக் குதித்தான், திரிசிரத்தானை ஓர் திறத்தால்,
கார் மேல் துயில் மலை போலியைக் கரத்தால் பிடித்து
எடுத்தான்,
பார்மேல் படுத்து அரைத்தான், அவன் பழி மேற்படப்
படுத்தான்.
‘போர் மேல்திசை நெடு வாயிலின் உளது ஆம்’ என,
போனான்.–177-
தேர் மேல் செலக் குதித்தான் – (அனுமன் அந்தத் திரிசிரன்
உடைய) தேரின் மேல் சென்று சேரும்படி குதித்து; கார் மேல் துயில்
மலை போலியை திரிசிரத்தனை – மேகம் மேல் படியப் பெற்ற
மலையைப் போன்றவன் ஆன அந்தத் திரிசிரனை; ஓர் திறத்தால்
கரத்தால் பிடித்து எடுத்தான் – ஒப்பற்ற வலிமையால் கையால் பிடித்து
எடுத்து; பார் மேல் படுத்து அரைத்து – பூமியின் மீது தள்ளி
அரைத்து; அவன் பழி மேல் படப் படுத்தான் – அவனுக்குப் பழி
மிகுதியாக உண்டாகுமாறு கொன்றான்; போர் மேல் திசை நெடு
வாயிலின் உளது ஆம் என போனான் – (அதற்குப் பிறகு) போர்
மேற்குத் திசை வாயிலில் உள்ளது என்று அங்குப் போனான்.
——————
அதிகாயன், இலக்குவனுடன் பொர வருதல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
7904.
இமையிடையாகச் சென்றான்; இகல் அதிகாயன் நின்றான்,
அமைவதுஒன்று ஆற்றல் தேற்றான், அருவியோடு
அழல்கால் கண்ணான்,
‘உமையொருபாகனேயும், இவன் முனிந்து உருத்த போது,
கமையிலன் ஆற்றல்’ என்னா, கதத்தொடும் குலைக்கும்
கையான்,–178-
இமையிடையாகச் சென்றான் – (நடுவில் புகுந்து நடந்தவனாகிய
அனுமன்) கண்ணிமை காலத்துக்கு முன்பே (மேற்குத் திசை
வாயிலுக்குச்) சென்று விட்டான்; இகல் அதிகாயன் அமைவது ஒன்று
ஆற்றல் தேற்றான் – வலிமை மிகு அதிகாயன் தக்கதொரு செயலைச்
செய்வதற்கு அறியாமல்; அருவியொடு அழல் கால் கண்ணான்
நின்றான் – நீர் அருவியோடு நெருப்பையும் வெளிப் படுத்துகின்ற
கண்களை உடையவனாகித் (திகைத்து) நின்றவனாகி; உமையொரு
பாகனேயும் இவன் முனிந்து உருத்த போது கமையிலன் ஆற்றல்
என்னா – உமை அம்மையை இடப்பாகத்திலே கொண்ட சிவபிரானும்
இந்த அனுமன் சினம் கொண்டு சீற்றத்தை வெளியிடும் போது
பொறுத்தற்கு வல்லமை உடையவன் அல்லன் என்று கூறி;
கதத்தொடும் குலைக்கும் கையான் – சினத்துடன் நடுங்குகின்ற கையை உடையவன்
ஆனான்.
————–
7905.
‘பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான்,
புறத்து நின்று,
பாணித்தல் வீரம் அன்றால்; பரு வலி படைத்தோர்க்கு
எல்லாம்
ஆணிப்பொன் ஆனான்தன்னைப் பின்னும் கண்டு
அறிவென்’என்னா,
தூணிப் பொன் புறத்தான், திண் தேர் இளவல்மேல்
தூண்டச்சொன்னான்.–179-
பூணிப்பு ஒன்று உடையன் ஆகிப் புகுந்த நான் -(இலக்குவனை
அழிப்பது என்ற) குறிக்கோள் ஒன்றினைக் கைக் கொண்டவனாகிப்
(போர்க்களத்துப்) புகுந்த நான்; புறத்து நின்று பாணித்தல் வீரம்
அன்றால் – பிறிதொரு எண்ணம் கொண்டு நின்று காலத்தை
நீட்டித்தல் வீரம் அல்ல; தூணிப் பொன் புறத்தான் – அம்பு
அறாத்தூணியை அழகிய முதுகில் கட்டியுள்ளவனும்; பரு வலி
படைத்தோர்க்கு எல்லாம் ஆணிப் பொன் அனான் தன்னை- மிக்க
வலிமை படைத்தவர்களுக்கெல்லாம் ஆணிப் பொன் போல்
சிறந்தவனும் ஆகிய இலக்குவன் தன்னைப்; பின்னும் கண்டு
அறிவென் என்னா – மேலும் கண்டு அறிவேன் என்று கூறி; திண்தேர்
இளவல் மேல் தூண்டச் சொன்னான் – தனது வலிய தேரை
இலக்குவனை நோக்கிச் செலுத்துமாறு (தேர்ப்பாகனிடம் அதிகாயன்)
சொன்னான்.
————–
7906.
தேர் ஒலி கடலைச் சீற, சிலை ஒலி மழையைச் சீற,
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்துப் போக,
தார் ஒலி கழற் கால் மைந்தன் தானையும் தானும்
சென்றான்;
வீரனும் எதிரே நின்றான், விண்ணவர் விசையம் வேண்ட,–180-
தேர் ஒலி கடலைச் சீற – தேர்களின் ஒலி கடலைச் சீறுவது போல்
மிகவும்; சிலை ஒலி மழையைச் சீற – வில்களின் ஒலி மழை ஒலியைச்
சீறுவது போல் மிகவும்; போர் ஒலி முரசின் ஓதை திசைகளின்
புறத்துப் போக – போர்க்களத்தில் ஒலிக்கின்ற முரசின் ஒலி திக்குகள்
கடந்து வெளியில் செல்லவும்; தார் ஒலி கழற்கால் மைந்தன் – போர்
மாலை தழைத்த (மார்பினையும்) வீரக்கழல் அணிந்த காலினையும்
உடைய அதிகாயன்; சேனையும் தானும் சென்றான் – படைகளும்
தானும் ஆகச் சென்றான்; விண்ணவர் விசையம் வேண்ட – தேவர்கள்
(வெல்க வெல்க என) வெற்றியே விரும்ப; வீரனும் எதிரே நின்றான் –
வீரனாகிய இலக்குவனும் (அவன்) எதிரே (போரிட) நின்றான்.
————–
அங்கதன் தோள் மேலேறி இலக்குவன் போரிடல்
7907.
வல்லையின் அணுக வந்து வணங்கினான், வாலி மைந்தன்;
‘சில்லி அம் தேரின் மேலான், அவன் அமர் செவ்விது
அன்றால்;
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்கப்
புல்லியன் எனினும், என் தோள் ஏறுதி, புனித!’ என்றான்.–181-
வல்லையின் அணுக வந்து வணங்கினான் வாலி மைந்தன் –
விரைவாக (இலக்குவனை) நெருங்கி வந்து வணங்கியவனாகிய வாலிக்கு
மகனான அங்கதன்; அவன் சில்லி அம் தேரின் மேலான் –
அவ்வதிகாயன் சக்கரம் அமைந்த அழகிய தேரின் மேல் உள்ளான்;
அமர் செவ்விது அன்றால் – (அவனோடு நிலத்தில் இருந்து)
போரிடுவது செம்மை உடையதல்ல; வில்லியர் திலதம் அன்ன நின்
திருமேனி – வில்லாளிகளில் திலகம் போன்ற உனது அழகிய
மேனியை; தாங்கப் புல்லியன் எனினும் – தாங்குவதற்கு (ஒவ்வாத) புன்மை உடையவன் என்றாலும்; புனித என் தோள்
ஏறுதி என்றான் – தூய்மையானவனே என் தோளின் மீது ஏறுக
என்றான்.
————–
7908.
‘ஆம்’ என, அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்மேல்
தாமரைச் சரணம் வைத்தான்; கலுழனின் தாங்கி நின்ற
கோமகன் ஆற்றல் நோக்கி, குளிர்கின்ற மனத்தர் ஆகி,
பூ மழை பொழிந்து வாழ்த்திப் புகழ்ந்தனர், புலவர் எல்லாம்.–182-
அமலன் தம்பி ஆம் என – குற்றம் அற்றவனாகிய இராமனுக்குத்
தம்பியாகிய இலக்குவன் (நீ சொல்வது சரி) ஆம் என (ஏற்று);
அங்கதன் அலங்கல் தோள் மேல் – அங்கதனுடைய மாலையணிந்த
தோளின் மீது; தாமரைச் சரணம் வைத்தான் – தன் தாமரை போன்ற
கால்களை வைத்து ஏறினான்; கலுழனின் தாங்கி நின்ற கோமகன்
ஆற்றல் நோக்கி – கருடாழ்வார் போல் (அவனைத்) தாங்கி நின்ற
அரச மகனான அங்கதனது வலிய ஆற்றலைக் கண்டு; புலவர்
எல்லாம் குளிர்கின்ற மனத்தர் ஆகி – தேவர்கள் எல்லாம் குளிர்ந்த
மனத்தை உடையவர்கள் ஆகி; பூ மழை பொழிந்து – பூவாகிய
மழையைச் சொரிந்து; வாழ்த்திப் புகழ்ந்தனர் – (நீடு வாழ்க என)
வாழ்த்திப் புகழ்ந்தனர்.
————–
7909.
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண் தேர்
போயின திசைகள் எங்கும், கறங்கு எனச் சாரி போமால்;
மீ எழின் உயரும்; தாழின் தாழும்; விண் செல்லின்
செல்லும்;-
தீ எழ உவரி நீரைக் கலக்கினான் சிறுவன் அம்மா! –183-
உவரி நீரை தீ எழக் கலக்கினான் சிறுவன் – பாற்கடல் நீரைத் தீ
வெளிப்படும்படி கலக்கியவனாகிய வாலியின் மகனான அங்கதன்;
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனித் திண்தேர் – ஆயிரம்
குதிரைகள் பூட்டியதும் ஒலிக்கும் இடியைப் போன்றதுமாகிய
(அதிகாயனது) வலிய தேர்; போயின திசைகள் எங்கும் – சென்ற
திசைகள் எல்லாவற்றிலும்; கறங்கு எனச் சாரி போமால் – (அங்கதன்
தானும்) காற்றாடி போல சுற்றிப் போவான்; மீ எழின் உயரும் – (தேர்)
மேல் எழுந்தால் (தானும்) மேலெழுவான்; தாழின் தாழும் – (தேர்
கீழே) தாழ்ந்தால் (தானும்) தாழ்வான்; விண் செல்லின் செல்லும் –
தேர் ஆகாயத்தில் சென்றது என்றால் (தானும்) ஆகாயத்தில்
செல்லுவான்.
————-
7910. அத் தொழில் நோக்கி, ஆங்கு வானரத் தலைவர் ஆர்த்தார்;
‘இத் தொழில் கலுழற்கேயும் அரிது’ என, இமையோர்
எல்லாம்
கைத்தலம் குலைத்தார் ஆக, களிற்றினும் புரவிமேலும்
தைத்தன, இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி.–184-
அத்தொழில் நோக்கி – (அங்கதனது) அந்தத் தொழிலைப் பார்த்து;
அங்கு வானரத் தலைவர் ஆர்த்தார் – அப்போது வானரத் தலைவர்
மகிழ்ச்சிப் பேரொலி செய்தனர்; இமையோர் எல்லாம் – தேவர்கள்
எல்லாம்; இத்தொழில் கலுழற்கேயும் அரிது என – இவ் (அங்கதனது)
தொழில் திறமை கருடாழ்வானுக்குக் கூட இயலாது என்று சொல்லி;
கைத்தலம் குலைத்தார் ஆக – கைகள் விதிர் விதிர்த்தார் ஆக;
இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – இளைய வீரனுடைய
அம்புகள் என்னும் தாரையாகப் பொழிகிற மழை; களிற்றினும் புரவி
மேலும் தைத்தன – (அரக்கரின்) யானைகள் மீதும் குதிரைகள் மீதும்
தைத்தன.
————–
7911. முழங்கின முரசம்; வேழம் முழங்கின; முரித் திண் தேர்
முழங்கின; முகரப் பாய்மா முழங்கின; முழு வெண் சங்கம்
முழங்கின; தனுவின் ஓதை முழங்கின; கழலும் தாரும்
முழங்கின; தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின, முகிலின்
மும்மை.–185-
முரசம் முழங்கின – முரசங்கள் முழங்கின; வேழம் முழங்கின –
யானைகள் முழங்கின; மூரித் திண்தேர் முழங்கின – மிக்க வலிமை
உடைய தேர்கள் முழங்கின; முகரப் பாய்மா முழங்கின – கனைக்கும்
பண்புள்ள குதிரைகள் முழங்கின; முழு வெண் சங்கம் முழங்கின –
முழுதும் வெண்மையான சங்குகள் முழங்கின; தனுவின் ஓதை
முழங்கின – வில்லின் ஓசை முழங்கின; கழலும் தாரும் முழங்கின –
வீரக் கழலும் மாலைகளும் முழங்கின; தெழிப்பும் ஆர்ப்பும் முகிலின்
மும்மை முழங்கின – (வீரர்களின்) அதட்டலும் ஒலிப்பும் மேக
ஒலியினும் மும்மடங்கு முழங்கின.
————-
7912. கரி பட, காலாள் வெள்ளம் களம் பட, கலினக் காலப்
பரி பட, கண்ட கூற்றும் பயம் பட, பைம் பொன் திண் தேர்
எரிபட, பொருத பூமி இடம் பட, எதிர்ந்த எல்லாம்
முரிபட, பட்ட, வீரன் முரண் கணை மூரி மாரி.–186-
கரி பட – (அப்போர்க்களத்தில்) யானைகள் இறந்து படவும்;
காலாள் வெள்ளம் களம் பட – காலாட் படையின் கூட்டம் போர்க்
களத்தில் அழிந்து படவும்; கலினக் காலப் பரிபட – சேணம் பூட்டிய
காற்றைப் போல் செல்லும் குதிரைகள் அழிந்து படவும்;கண்ட
கூற்றும் பயம்பட – (போர்க்கள அழிவினைக்) கண்ட யமனும் அச்சம்
மேம்படவும்; பைம்பொன் திண்தேர் எரிபட – பசும் பொன்னால்
செய்யப்பட்ட வலிய தேர்கள் எரிந்து படவும்; பொருத பூமி இடம் பட
– போர்க்களம் படைகள் இறந்து போனதால் இடம் அகன்று தோன்றவும்; எதிர்ந்த எல்லாம் முரி பட
– எதிர்த்து வந்த படைகள் எல்லாம் அழிந்து படவும்; வீரன்
முரண்கணை மூரி மாரி – வீரனாகிய இலக்குவன் உடைய வலிமையான
அம்புகளால் ஆகிய பெருமழை; பட்ட – மிகுதியாகத் தோன்றியது.
————–
இலக்குவன் அதிகாயன் உரையாடல்
7913. மன்னவன் தம்பி, மற்று அவ் இராவணன் மகனை நோக்கி,
‘என் உனக்கு இச்சை? நின்ற எறி படைச் சேனை எல்லாம்
சின்னபின்னங்கள் பட்டால், பொருதியோ? திரிந்து நீயே
நல் நெடுஞ் செருச் செய்வாயோ? சொல்லுதி, நயந்தது’
என்றான்.–187-
மன்னவன் தம்பி – இராமபிரான் தம்பியாகிய இலக்குவன்; மற்று
அவ் இராவணன் மகனை நோக்கி – அந்த இராவணன்
மகனாகிய அதிகாயனை நோக்கி; உனக்கு என் இச்சை – உனக்கு
என்ன விருப்பம்; நின்ற எறிபடைச் சேனை எல்லாம் –
(போர்க்களத்து) நின்ற எறிதற்குரிய படைக்கலங்களைக் கொண்டுள்ள
சேனை முழுவதும்; சின்ன பின்னங்கள் பட்டால் பொருதியோ –
சின்ன பின்னமாய்ச் சிதறி அழிந்த (பிறகு) போர் செய்வாயோ?
திரிந்து நீயே நல் நெடுஞ் செருச் செய்வாயோ – பிரிந்து நீ
மட்டும் நல்ல நெடிய போரினை (இப்போதே) செய்வாயோ?; நயந்தது
சொல்லுதி என்றான் – (நீ) விரும்பியதைச் சொல்லுவாயாக என்றான்.
—————–
7914. ‘யாவரும் பொருவர் அல்லர், எதிர்ந்துள யானும் நீயும்,
தேவரும் பிறரும் காண, செருவது செய்வ எல்லாம்;
‘காவல் வந்து உன்னைக் காப்பார் காக்கவும் அமையும்;
வேறே
கூவியது அதனுக்கு அன்றோ?’ என்றனன்-கூற்றின்
வெய்யோன்.–188-
கூற்றின் வெய்யோன் – யமனைக் காட்டிலும் கொடியவன் ஆகிய
அதிகாயன்; யாவரும் பொருவர் அல்லர் – எல்லோரும் போரிடுவார்
அல்லல்; தேவரும் பிறரும் காண – (குழுமியுள்ள) தேவர்களும்
மற்றவர்களும் காணும்படி; செருவது செய்வ எல்லாம் – போரது
செய்யப் போவதெல்லாம்; எதிர்ந்துள யானும் நீயும் – (போருக்காக)
எதிர்க்கப்பட்டுள்ள யானும் நீயுமே ஆகும்; உன்னைக் காவல் வந்து
காப்பார் காக்கவும் அமையும் – உனக்குக் காவலாக வந்து காப்பவர்
காப்பதும் பொருந்தும்; (உன்னை யார் வந்து காத்தாலும் சரியே
என்றபடி) வேறே கூவியது அதனுக்கு அன்றோ என்றனன்- (உனக்கு
ஆள் அனுப்பி) தனியாகப் போருக்கு அழைத்தது தனியாகப்
போரிட்டு வெல்வதற்காக அல்லவா? என்று கூறினான்.
———-
7915. ‘உமையனே காக்க; மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க;
இமையவர் எல்லாம் காக்க; உலகம் ஓர் ஏழும் காக்க;
சமையும் உன் வாழ்க்கை, இன்றோடு’ என்று, தன்
சங்கம் ஊதி,
அமை உருக் கொண்ட கூற்றை நாண் எறிந்து,
உருமின் ஆர்த்தான்.-189-
உமையனே காக்க – உன் அண்ணனாகிய இராமனே காக்கட்டும்;
மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – அன்றி அங்கு
உமையம்மையை இடப்பாகத்தில் கொண்ட சிவபிரானே (வந்து)
காக்கட்டும்; இமையவர் எல்லாம் காக்க – தேவர்கள் எல்லாம் (சேர்ந்து
வந்து) காக்கட்டும்; உலகம் ஓர் ஏழும் காக்க – உலகம் ஓர் ஏழில்
வாழும் (அனைவரும் வந்து) காக்கட்டும்; இன்றோடு உன் வாழ்க்கை
சமையும் – இன்றுடன் உன் வாழ்வு முடிந்து விடும்; என்று தன்
சங்கம் ஊதி – என்று கூறித் தன் சங்கினை எடுத்து ஊதி; அமை உருக் கொண்ட கூற்றை – மூங்கில் உருவம் கொண்ட
யமனை (தன் வில்லினை); நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் –
நாணினைத் தெறித்து இடி போல் பேரொலி செய்தான்.
உமையன் – உம் தமையனாகிய இராமன்,
—————-
இலக்குவன் அதிகாயனுடன் பொருதல்
7916. அன்னது கேட்ட மைந்தன், அரும்பு இயல் முறுவல் தோன்ற,
‘சொன்னவர் வாரார்; யானே தோற்கினும், தோற்கத் தக்கேன்;
என்னை நீ பொருது வெல்லின், அவரையும் வென்றி’ என்னா,
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெஞ் சரம்
கோத்து விட்டான்.–190-
அன்னது கேட்ட மைந்தன் – அச்சொற்களைக் கேட்ட வீரனாகிய
இலக்குவன்; அரும்பு இயல் முறுவல் தோன்ற – முல்லை அரும்பினை
ஒத்த பற்கள் தெரியப் புன்னகைத்து; நீ சொன்னவர் வாரார் – (நீ)
சொன்னவர்கள் யாரும் வரமாட்டார்கள்; யானே தோற்கினும்
தோற்கத்தக்கேன் – (ஒருவேளை) நானே தோற்கத் தக்கவன்; என்னை
நீ பொருது வெல்லின் – என்னை நீ போரிட்டு வென்றால்; அவரையும்
வென்றி என்னா – அவர்களை எல்லாம் வென்றவன் ஆவாய் என்று
கூறி; மின்னினும் மிளிர்வது – மின்னலைக் காட்டிலும் ஒளி
விடுவதாகிய; வெஞ்சரம் ஆங்கோர் கோத்து விட்டான் – கொடிய
அம்பினை அப்போது (வில்லில்) கோத்து அதிகாயன் மீது
செலுத்தினான்.
—————–
7917. விட்ட வெம் பகழிதன்னை, வெற்பினை வெதுப்பும் தோளான்,
சுட்டது ஓர் பகழிதன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி,
எட்டினோடு எட்டு வாளி, ‘இலக்குவ! விலக்காய்’ என்னா,
திட்டியின் விடத்து நாகம் அனையன, சிந்தி, ஆர்த்தான்.–191-
வெற்பினை வெதுப்பும் தோளான் – மலையினையும் வெப்ப
வலிமையால் அழிக்கவல்ல தோள்களை உடைய அதிகாயன்; விட்ட
வெம் பகழி தன்னை – (இலக்குவன்) விட்ட கொடுமையான
அம்பினை; விசும்பிடை சுட்ட ஓர் பகழி தன்னால் துணித்து நீக்கி –
ஆகாயத்தின் கண்ட சுடும் தன்மையுள்ள ஒப்பற்ற (தன்) அம்பு
ஒன்றினால் துண்டாக்கி நீக்கி; இலக்குவ – இலக்குவனே; விலக்காய்
என்னா – (இவ்வம்புகளை) விலக்குவாய் என்று கூறி; திட்டியின்
விடத்து நாகம் அனையன – திட்டி விடம் என்னும் நாகத்தை
ஒத்தனவாகிய; வாளி எட்டினோடு எட்டு – அம்புகள் பதினாறினைச்;
சிந்தி ஆர்த்தான் – (இலக்குவன் மீது) எய்து பேரொலி செய்தான்.
————-
7918. ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து
மாற்றி,
வேர்த்து, ஒலி வயிர வெங் கோல், மேருவைப்
பிளக்கற்பால,,
தூர்த்தனன், இராமன் தம்பி; அவை எலாம் துணித்துச்
சிந்தி,
கூர்த்தன பகழி கோத்தான், குபேரனை ஆடல்
கொண்டான்.–192-
அவன் ஆர்த்து எய்த வாளி அனைத்தையும் – அந்த அதிகாயன்
பேரொலி செய்து எய்த அம்புகள் அனைத்தையும்; இராமன் தம்பி
அறுத்து மாற்றி – இராமனுக்குத் தம்பியாகிய இலக்குவன் துண்டித்துப் போக்கி; வேர்த்து மேருவைப் பிளக்கற்
பால – சினம் கொண்டு மேரு மலையினையும் பிளக்கும் வல்லமை
உடையவனாகிய; ஒலி வயிர வெங்கோல் தூர்த்தனன் – ஒலிக்கும்
திண்மையான கொடிய அம்புகளை நிரப்பினான்; குபேரனை ஆடல்
கொண்டான் – குபேரனை வெற்றி கொண்டவன் ஆகிய அதிகாயன்;
அவை எலாம் துணித்துச் சிந்தி – அந்த அம்புகள் எல்லாவற்றையும்
துண்டமாக்கித் தள்ளி; கூர்த்தன பகழி கோத்தான் – கூர்மை
உடையனவாகிய அம்புகளை (வில்லில்) கோத்து எய்தான்.
—————
7919. எய்தனன் எய்த எல்லாம், எரி முகப் பகழியாலே,
கொய்தனன் அகற்றி, ஆர்க்கும் அரக்கனைக் குரிசில்
கோபம்
செய்தனன், துரந்தான் தெய்வச் செயல் அன்ன கணையை;
வெங்கோல்
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன, பிழைப்பு இலாத.–193-
குரிசில் – ஆடவர் திலகனாகிய இலக்குவன்; எய்தவன் எய்த
எல்லாம் – எய்தவன் ஆகிய (அதிகாயன்) எய்த எல்லா
அம்புகளையும்; எரி முகப் பகழியாலே கொய்தனன் அகற்றி –
நெருப்பை முகத்தில் கொண்ட அம்பால் அறுத்து அகற்றி; ஆர்க்கும்
அரக்கனை – பேரொலி செய்யும் அரக்கனாகிய அதிகாயனைக்;
கோபம் செய்தனன் – சினந்தவன் ஆகி; தெய்வச் செயல் அன்ன
கணையைத் துரந்தான் – (தவறாது பயன் விளைக்கும்)
தெய்வச்செயலை ஒத்த அம்புகளைச் செலுத்தினான்; பிழைப்பு இலாத
வெங்கோல் – (இலக்குத்) தவறாத அந்தக் கொடிய அம்புகள் எல்லாம்;
அவன் கவசம் நொய்து கீறி நுழைவன – அந்த அதிகாயனுடைய
கவசத்தை எளிமையாகப் பிளந்து நுழைவன வாயின.
————
7920.
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும், குழைவு தோன்றத்
தேறல் ஆம் துணையும், தெய்வச் சிலை நெடுந் தேரின்
ஊன்றி,
ஆறினான்; அதுகாலத்து அங்கு அவனுடை அனிகம்
எல்லாம்
கூறுகூறாக்கி அம்பால், கோடியின் மேலும் கொன்றான்.–194-
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் – நூறு அம்புகள் கவசத்தைப்
பிளந்து உடம்பின் உட்புகுந்த உடனே; குழைவு தோன்ற – வருத்தம்
தோன்ற; தேறல் ஆம் துணையும் – (அதிகாயன்) தான் தேறும்கால
அளவும்; தெய்வச் சிலை நெடுந்தேரின் ஊன்றி ஆறினான் – (தன்)
தெய்வத்தன்மை உள்ள வில்லினைப் பெரிய தேரில் ஊன்றியவனாய்க்
களைப்பு ஆறினான்; அதுகாலத்து அங்கு – அக்காலத்தில் அந்த
இடத்தில்; அவனுடை அனிகம் எல்லாம் – அதிகாயன் உடைய
படைகளை எல்லாம்; கூறு கூறாக்கி கோடியின் மேலும் அம்பால்
கொன்றான் – (இலக்குவன்) துண்டு துண்டாக்கிக் கோடிக்கும் மேலாகத்
(தன்) அம்பால் கொன்று அழித்தான்.
—————
7921. புடை நின்றார் புரண்டவாறும், போகின்ற புங்க வாளி
கடைநின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும்
கண்டான்;
இடைநின்ற மயக்கம் தீர்ந்தான்; ஏந்திய சிலையன் காந்தி,
தொடை நின்ற பகழி மாரி, மாரியின் மும்மை தூர்த்தான்.–195-
இடை நின்ற மயக்கம் தீர்த்தான் – இடையே தோன்றிய மயக்கம்
நீங்கியவனாகிய அதிகாயன்; புடை நின்றார் புரண்ட வாறும் – (தன்)
பக்கத்தில் நின்றவர்கள் (உயிர் ஒழிந்து) புரண்ட தன்மையினையும்;
போகின்ற புங்கவாளி – (தன்னைச் சற்றிப் போகின்ற
இலக்குவனுடைய) கூர்மையான அம்புகள்; கடை நின்று கணிக்க
முழுதும் நின்று கணக்கிட; அங்கு ஓர் கணக்கு இலாவாறும்
கண்டான் – அங்கு ஒரு கணக்கு இல்லாத தன்மையில் மிகுதியாகச்
செல்வதையும் கண்டவனாகி; காந்தி ஏந்திய சிலையன் – கொதித்து
ஏந்திய வில்லை உடையவனாய்; தொடை நின்ற பகழி மாரி –
தொடுக்கப் பெற்ற அம்பு மழையை; மாரியின் மும்மை தூர்த்தான் –
மழையினும் மூன்று மடங்கு செலுத்தி மிகுதியாக நிரப்பினான்.
————–
7922. வான் எலாம் பகழி, வானின் வரம்பு எலாம் பகழி, மண்ணும்
தான் எலாம் பகழி, குன்றின் தலை எலாம் பகழி, சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி, நின்றோர் உயிர் எலாம் பகழி, வேலை
மீன் எலாம் பகழி, ஆக வித்தினன்-வெகுளி மிக்கோன்.–196-
வெகுளி மிக்கோன் – சினம் மிக்கவனாகிய அதிகாயன்; வான்
எலாம் பகழி – ஆகாயம் எல்லாம் அம்புகள்; வானின் வரம்பு எலாம்
பகழி – ஆகாய எல்லை எல்லாம் அம்புகள்; மண்ணும் தான் எலாம்
பகழி -நிலவுலகம் எல்லாம் அம்புகள்; குன்றின் தலை எலாம் பகழி –
மலை உச்சிகளில் எல்லாம் அம்புகள்; சார்ந்தோர் ஊன் எலாம் பகழி
– (அதிகாயனைச்) சார்ந்திருப்பவர் உடம்பு எல்லாம் அம்புகள்;
நின்றோர் உயிர் எலாம் பகழி – எதிர்த்து நின்றவர்களுடைய
உயிர்களில் எல்லாம் அம்புகள்; வேலை மீன் எலாம் பகழி – கடலில்
உள்ள மீன்கள் மேல் எல்லாம் அம்புகள்; ஆக வித்தினன் – (என)
ஆகுமாறு (எல்லா இடத்தும்) அம்புகளை விதைத்திட்டான்.–
————
7923. மறைந்தன திசைகள் எல்லாம்; வானவர் மனமே போலக்
குறைந்தன, சுடரின் மும்மைக் கொழுங் கதிர்;
குவிந்து, ஒன்று ஒன்றை
அறைந்தன, பகழி; வையம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே;
நிறைந்தன, பொறியின் குப்பை; நிமிர்ந்தன, நெருப்பின்
கற்றை.–197-
திசைகள் எல்லாம் மறைந்தன – (அதிகாயன் செலுத்திய
அம்புகளால்) திசைகள் எல்லாம் மறைந்தன; வானவர் மனமே போல
– தேவர்களின் மனம் போல; மும்மைச் சுடரின் கொழுங் கதிர்
குறைந்தன – மூன்று சுடர்களின் கொழுவி விளங்கிய ஒளி குறைந்தன;
பகழி குவிந்து ஒன்று ஒன்றை அறைந்தன – அம்புகள் ஒன்றாகச்
சேர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன; வையம் அதிர்ந்தது –
நிலவுலகம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே – ஆகாயமும் அவ்வாறே
(அதிர்ந்தது); பொறியின் குப்பை நிறைந்தன – அனற் பொறிகள்
மிகுதியாக நிறைந்தன; நெருப்புக் கற்றை நிமிர்ந்தன – நெருப்புக்
கற்றை ஓங்கி வளர்ந்தன.
—————
7924. ‘முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை?
மற்று இவன்தன்னை வெல்ல வல்லனோ, வள்ளல் தம்பி?
கற்றது காலனோடோ, கொலை இவன்? ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே!’ என்னா, தேவரும் வெருவலுற்றார்.–198-
முழங்கு வானர தானை – ஒலிக்கின்ற வானரப் படை; முற்றியது
இன்றே அன்றோ – தீர்ந்து ஒழிவது இன்றே முடியுமல்லவா? வள்ளல் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லனோ
– இராமன் தம்பி இவன் தன்னை வெல்ல வல்லவன் ஆவனோ?
இவன் கொலை கற்றது காலனோடோ? – இந்த அதிகாயன்
கொலையைக் கற்றுக் கொண்டது யமனிடம் தானோ? ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே – ஒப்பற்ற (இவன்) கற்றுள்ள வில்வித்தை
என்ன (சிறப்புத்) தன்மை உடையது; என்னா தேவரும் வெருவலுற்றார்
– என்று கூறித் தேவர்களும் அஞ்சத் தொடங்கினார்கள்.
—————
7925. அங்கதன் நெற்றிமேலும், தோளினும், ஆகத்துள்ளும்,
புங்கமும் தோன்றாவண்ணம், பொரு சரம் பலவும் போக்கி,
வெங் கணை இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி, மேகச்
சங்கமும் ஊதி, விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான்.–199-
அங்கதன் நெற்றி மேலும் தோளினும் ஆகத்துள்ளும் –
(அந்நிலையில் அதிகாயன்) அங்கதனது நெற்றியிலும், தோள்களிலும்
மார்பின் உள்ளும்; பொருசரம்பலவும் – பொருகின்ற அம்புகள்
பலவற்றைப்; புங்கமும் தோன்றா வண்ணம் போக்கி – நுனிகூட
வெளித் தோன்றாதபடி (அழுந்துமாறு) செலுத்தி; வீரன் மேல்
வெங்கணை இரண்டும் ஒன்றும் ஏவி – இலக்குவன் மீது கொடிய
அம்புகள் மூன்றைச் செலுத்தி; மேகச் சங்கமும் ஊதி – மேகம் போல்
ஒலிக்கும் (தன்) சங்கினை ஊதி; விண்ணோர் தலை பொதிரெறிய
ஆர்த்தான் – தேவர்களின் தலை நடுக்கமுறுமாறு பேரொலி செய்தான்.
———–
7926. வாலி சேய் மேனிமேலும், மழை பொரு குருதி வாரி,
கால் உயர் வரையின் செங் கேழ் அருவிபோல் ஒழுகக்
கண்டான்;
கோல் ஒரு பத்து-நூற்றால் குதரையின் தலைகள் கொய்து,
மேலவன் சிரத்தைச் சிந்தி, வி்ல்லையும் துணித்தான்-வீரன்,–200-
வீரன் – இலக்குவன்; வாலி சேய் மேனி மேலும் – வாலிக்கு
மகனாகிய அங்கதன் மேனி மேல்; கால் உயிர் வரையின் – (சற்று)
ஓங்கி உயர்ந்த அடிபரந்த மலையில்; செங்கேழ் அருவி போல் –
சிவந்த நிறமுடைய அருவி போல; மழை பொரு குருதி வாரி ஒழுகக்
கண்டான் – மழையை ஒத்த குருதி வெள்ளம் ஒழுகுவதைக் கண்டான்;
கோல் ஒரு பத்து நூற்றால் – (உடனே அவன்) அம்புகள்
ஓராயிரத்தால்; குதிரைகள் தலைகள் கொய்து – (தேரில் பூட்டப் பட்ட)
குதிரைகளின் தலைகளை அறுத்து; மேலவன் சிரத்தைச் சிந்தி –
(தேர்) மேல் உள்ள பாகனின் தலையைக் கொய்து; வில்லையும்
துணித்தான் – (அந்த அதிகாயனுடைய) வில்லையும் துண்டித்து
வீழ்த்தினான்.
———
7927. மாற்று ஒரு தடந் தேர் ஏறி, மாறு ஒரு சிலையும் வாங்கி,
ஏற்ற வல் அரக்கன்தன்மேல், எரி முகக் கடவுள் என்பான்,
ஆற்றல் சால் படையை விட்டான், ஆரியன்; அரக்கன்
அம்மா,
வேற்றுள, ‘தாங்க!’ என்னா, வெய்யவன் படையை
விட்டான்.–201-
மாற்று ஒரு தடந்தேர் ஏறி – வேறு ஒரு பெரிய தேரில் ஏறி; மாறு
ஒரு சிலையும் வாங்கி – வேறாக ஒரு வில்லையும் கையில் எடுத்து
கொண்டு; ஏற்றவல் அரக்கன் தன்மேல் – (தன்னை) எதிர்த்து வந்த
வலிமை உள்ள அரக்கனாகிய (அதிகாயன்) மேல், ஆரியன் –
இலக்குவன்; எரிமுகக் கடவுள் என்பான் ஆற்றல் சால் படையை
விட்டான் – தீக்கடவுள் என்பானது வலிமை மிகுந்த படைக்கலத்தைச்
செலுத்தினான்; அரக்கன் – அதிகாயன்; தாங்க என்னா – (அதைத்)
தடுக்க என்று கூறி; வேற்றுள வெய்யவன் படையை விட்டான் – வேறாகத் (தன்னிடம் உள்ள) தீக்கடவுளின்
படையை விட்டான்.
————-
7928. பொரு படை இரண்டும் தம்மில் பொருதன; பொருதலோடும்,
எரி கணை, உருமின் வெய்ய, இலக்குவன் துரந்த, மார்பை
உருவின, உலப்பு இலாத; உளைகிலன், ஆற்றல் ஓயான்,
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன்,
தெழிக்கும் சொல்லான்.–202-
பொருபடை இரண்டும் – போரிடுகின்ற அந்த (எரியம்புகள்)
இரண்டும் தங்களுக்குள் மோதின; பொருதலோடும் – அவ்வாறு
போரிடுகையில; இலக்குவன் துரந்த – இலக்குவன் எய்த; உருமின்
வெய்ய – இடியினும் கொடுமை உடைய; எரிகணை – வெய்ய
அம்புகள்; உலப்பு இலாத – (தடுத்து) அழிக்க இயலாதவையாய்;
மார்பை உருவின – (அதிகாயனது) மார்பில் பட்டு ஊடுருவின;
உளைகிலன் – (அதற்கு) வருந்தாதவனாகவும்; ஆற்றல் ஓயான் –
(தன்) வலி குறையாதவனுமாகிய (அதிகாயன்); சொரிகணை –
(இலக்குவன்) துரந்த அம்புகளை விட; மும்மை – மூன்று மடங்கு
அம்புகளை; தெழிக்கும் சொல்லான் – அதட்டுகின்ற சொற்களை
உடையவனாய்; மழையின் சொரிந்தனன் – மேகம் போல்
சொரிந்திட்டான்.
——————
7929. பின் நின்றார் முன் நின்றாரைக் காணலாம் பெற்றித்து ஆக,
மின் நின்ற வயிர வாளி திறந்தன, மேனி முற்றும்;
அந் நின்ற நிலையின், ஆற்றல் குறைந்திலன், ஆவி
நீங்கான்,
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை எனப் பொழியும்
வில்லான்.–203-
மின் நின்ற வயிரவாளி – (இலக்குவன் எய்த) ஒளி பொருந்திய
வலிமையான அம்புகள்; பின் நின்றார் முன் நின்றாரைக் – பின்னே
நிற்பவர்கள் முன்னே நிற்பவர்களைக்; காணலாம் பெற்றித்து ஆக –
காணும் தன்மையுடையது எனும்படி; மேனி முற்றும் திறந்தன –
(அந்த அதிகாயனுடைய) உடம்பு முழுவதையும் துளைத்து விட்டன;
அந்நின்ற நிலையின் – அவ்வாறு நின்ற நிலைமையிலும்; ஆற்றல்
குறைந்திலன் – வலிமை குறையாதவனாய்; ஆவி நீங்கான் – உயிர்
போகாதவனாய்; பொன் நின்ற வடிம்பின் வாளி – பொன் போன்ற
நிறம் பெற்ற கூர்மையை உடைய அம்புகளை; மழை எனப் பொழியும
வில்லான் – மழை போலச் செலுத்துகிற வில்லை உடையவனானான்.
————-
காற்றரசன் கூறியபடி இலக்குவன் நான்முகன் படையைச் செலுத்திக்
கொல்லுதல்
7930. கோல் முகந்து, அள்ளி அள்ளி, கொடுஞ் சிலை
நாணில் கோத்து,
கால்முகம் குழைய வாங்கி, சொரிகின்ற காளை வீரன்-
பால் முகம் தோன்ற நின்று, காற்றினுக்கு அரசன், ‘பண்டை
நான்முகன் படையால் அன்றிச் சாகிலன், நம்ப!’ என்றான்.–204-
கோல் முகந்து – அம்புகளை எடுத்து; அள்ளி அள்ளி – அள்ளி
அள்ளி; கொடுஞ்சிலை நாணில் கோத்து – வளைந்த வில்லின்
நாணில் கோத்து; கால்முகம் குழைய வாங்கி – இரு நுனிக்
கால்களும் சேருமாறு வளைத்து; சொரிகின்ற – (அதிகாயன் மேல்)
செலுத்துகிற; காளை வீரன் பால் – காளை போன்ற வீரனாகிய
இலக்குவன் பக்கத்தில்; முகம் தோன்றி நின்று – (நேரிடையாக) முகம்
தோன்ற வந்து நின்று; காற்றினுக்கு அரசன் நம்ப – வாயுதேவன்,
விரும்பத்தக்க குணங்களை உடையவனே; பண்டை நான்முகன்
படையால் – பழமையான பிரமனது படைக்கலத்தால்; அன்றிச்
சாகிலன் என்றான் – அல்லாமல் இவன் சாக மாட்டான் என்றான்.
——————
7931. ‘நன்று’ என உவந்து, வீரன், நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான்
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினைக் கொண்டு, அவ்
வாளி
சென்றது, விசும்பினூடு; தேவரும் தெரியக் கண்டார்.-205-
வீரன் – வீரனாகிய இலக்குவன்; நன்று என உவந்து – நல்லது
என்று மகிழ்ந்து சொல்லி; நான்முகன் படையை வாங்கி – நான்முகன்
படைக் கலத்தை எடுத்து; மின்தனி திரண்டது என்ன – மின்னல்
தனியே திரண்டுவிட்டது என்று கூறும்படியாகக்; சரத்தொடும் கூட்டி
விட்டான் – அம்புடன் சேர்த்துச் செலுத்தினான்; அவ்வாளி – அந்த
அம்பானது; குன்றினும் உயர்ந்த தோளான் – குன்றினும் உயர்ந்த
தோள்களை உடைய (அதிகாயனது); தலையினைக் கொண்டு –
தலையை அறுத்துக் கொண்டு; விசும்பினூடு சென்றது – ஆகாய
வழியாகச் சென்றது, தேவரும் தெரியக் கண்டார் – அதனைத்
தேவர்களும் தெளிவாகக் கண்டார்கள்.
—————-
7932. பூ மழை பொழிந்து, வானோர், ‘போயது, எம்
பொருமல்’ என்றார்;
தாம் அழைத்து அலறி, எங்கும் இரிந்தனர், அரக்கர் தள்ளி;
தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது, குரக்குச் சேனை;
கோமகன் தோளின்நின்றும் குதித்தனன், கொற்ற வில்லான்.–206-
வானோர் பூமழை பொழிந்து – தேவர்கள் மலர் மழை சிந்தி;
எம்பொருமல் போயது என்றார் – எம்முடைய பெருவருத்தம் நீங்கி
விட்டது என்றார்கள்; அரக்கர் – அரக்கர்கள்; தாம் அழைத்து அலறி
– தாங்கள் ஒருவருக்கொருவர் பெயரிட்டு அழைத்து அலறிக்
கொண்டும்; தள்ளி எங்கும் இரிந்தனர் – தள்ளிக்கொண்டும் எல்லா
விடங்களிலும் தறிகெட்டு ஓடினார்கள்; குரக்குச் சேனை – குரங்குப்
படை; தீமையும் தகைப்பும் நீங்கித் தெளிந்தது – (தனக்கு ஏற்பட்ட)
தீங்கும், தடையும் நீங்கித் தெளிவு பெற்றது; கோமகன் – அரச
மகனாகிய அங்கதனது; தோளின் நின்றும் – தோளில் இருந்து; கொற்ற
வில்லான் – வெற்றி பொருந்திய வில்லாளியாகிய இலக்குவன்;
குதித்தனன் – கீழே குதித்தான்.
—————
வீடணன் இந்திரசித்து இறத்தல் உறுதி எனல்
7933. வெந் திறல் சித்தி கண்ட வீடணன், வியந்த நெஞ்சன்,
அந்தரச் சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான்; ‘ஐயன்
மந்திரசித்தி அன்ன சிலைத் தொழில் வலி இது ஆயின்,
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது’ என்றான்.-207-
வெந்திறல் – இலக்குவனது பெரு வலிமையினது; சித்தி கண்ட –
பயனைக் கண்ட; வீடணன் – வீடணன்; வியந்த நெஞ்சன் –
வியப்புடைய நெஞ்சத்தை உடையவனாய்; அந்தர சித்தர் -வானத்தில் உலவும் சித்தர்கள்; ஆர்க்கும் அமலையும் கேட்டான் –
ஒலிக்கிற பேரொலியைக் கேட்டான்; ஐயன் – (பின்பு அவன் மனதில்
இவ்வாறு எண்ணினான்) தலைவனாகிய இலக்குவனுடைய; மந்திர
சித்தி அன்ன – மந்திர சித்தியினைப் போன்ற; சிலைத்தொழில் வலி –
வில்லாற்றல் தொழிலின் வலிமை, இது ஆயின் – இத்தன்மையது
ஆனால்; இந்திர சித்தனார்க்கும் – இந்திரசித்தனுக்கும்; இயைவது
இறுதியே – வந்து பொருந்துவது மரணமே; என்றான் – என்று
கூறினான்.
—————
நராந்தகன் அங்கதனுடன் போரிட்டு அழிதல்
7934. ‘”ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன்” என்று, நீ நின்
சாந்து அகல் மார்பு, திண் தோள், நோக்கி, நின் தனுவை
நோக்கி,
போம் தகைக்கு உரியது அன்றால்; போகலை; போகல்!’
என்னா,
நாந்தகம் மின்ன, தேரை நராந்தகன் நடத்தி வந்தான்.–208-
எழில் ஏந்து ஆகத்து – அழகு பொருந்திய மார்பினை உடைய;
எம்முன் இறந்தனன் – எமக்கு முன்னவன் ஆகிய (அதிகாயன்)
இறந்து விட்டான்; என்று – என்று எண்ணி; நீ நின் – நீ உன்னுடைய;
சாந்து அகல் மார்பு – சந்தனம் பூசப்பட்ட அகன்ற மார்பினையும்;
திண் தோள் நோக்கி – அதற்குப் பிறகு உனது வில்லினையும்
பார்த்துக் கொண்டு; போம் தகைக்கு உரியது அன்றால் – போகின்ற
தகுதிக்கு உரியது அல்ல (இச்செயல்); போகலை போகல் என்னா –
போகாதே போகாதே என்று (இலக்குவனைப் பார்த்துக்) கூறிக்கொண்டு;
நராந்தகன் – நராந்தகன் என்பவன்; நாந்தகம் மின்ன – (தனது) வாள்
மின்ன; தேரை நடத்தி – தேரைச் செலுத்திக் கொண்டு; வந்தான் –
வந்தான்.
—————
7935. தேரிடை நின்று, கண்கள் தீ உக, சீற்றம் பொங்க,
பாரிடைக் கிழியப் பாய்ந்து, பகலிடைப் பரிதி என்பான்,
ஊரிடை நின்றான் என்ன, கேடகம் ஒரு கை தோன்ற,
நீருடை முகிலின் மின்போல், வாளொடு நிமிர வந்தான்.–209-
கண்கள் தீ உக – (நராந்தகன் தன்) கண்களில் இருந்து தீ
வெளிப்பட; சீற்றம் பொங்க – சினம் மிகப் பொங்கி வர; தேரிடை
நின்று – தேரில் இருந்து; பாரிடை கிழியப் பாய்ந்து – நிலவுலகு
கிழியுமாறு பாய்ந்து; பகலிடைப் பரிதி என்பான் – பகலில் கதிரவன்
என்பவன்; ஊரிடை நின்றான் என்ன – ஊர்கோளிடை நின்றுள்ளான்
என்று சொல்லும்படி; கேடகம் ஒருகை தோன்ற – கேடயம் ஒரு
கையில் விளங்க; நீருடை முகிலின் மின் போல் – நீருடைய
கருமேகத்தின் இடையில் மின்னலைப் போல; வாளொடு நிமிர
வந்தான் – வாளோடு நிமிர்ந்து வந்தான்.
——————
7936. வீசின மரமும் கல்லும் விலங்கலும், வீ்ற்று வீ்ற்றா,
ஆசைகள்தோறும் சிந்த, வாளினால் அறுத்து மாற்றி,
தூசியும், இரண்டு கையும், நெற்றியும், சுருண்டு, நீர்மேல்
பாசியின் ஒதுங்க, வந்தான்; அங்கதன் அதனைப் பார்த்தான்.–210-
வீசின – (நராந்தகன் வருதல் கண்டு குரங்குப் படைகள்) வீசிய;
மரமும், கல்லும் விலங்கலும் – மரங்களும், கற்களும், மலைகளும்;
ஆசைகள் தோறும் – திசைகள் தோறும்; வீற்று வீற்றா சிந்த –
துண்டு துண்டாகச் சிதறும்படி; வாளினால் அறுத்து மாற்றி –
(நராந்தகன் அவற்றை); வாளால் அறுத்து விலக்கி, தூசியும் –
முன்னணிப் படையும்; இரண்டு கையும் – இரு பக்கத்தில் உள்ள
படைகளும்; நெற்றியும் – நடுவில் நின்ற பெரும் படையும்; நீர்மேல்
பாசியின் – நீர் மேல் உள்ள பாசம் போல; சுருண்டு ஒதுங்க –
திரண்டு ஒதுங்கி வழிவிட; வந்தான் அதனை – அவன் அவ்வாறு
வருவதை; அங்கதன் பார்த்தான் – அங்கதன் கண்டான்.
—————-
7937. மரம் ஒன்று விரைவின் வாங்கி, வாய் மடித்து
உருத்து, வள்ளல்
சரம் உன்றின் கடிது சென்று, தாக்கினான்; தாக்கினான்தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனைத்
தன் கை
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் துண்டம் கண்டான்.–211-
ஒன்று மரம் விரைவின் வாங்கி – ஒரு மரத்தை விரைவாக
எடுத்து; வாய் மடித்து உறுத்து – வாயை மடித்து சினந்து;
வள்ளல் சரம் ஒன்றின் – வள்ளல் தன்மை உடைய இராமனுடைய
அம்பு ஒன்று போல; கடிது சென்று தாக்கினான் – (அங்கதன்)
விரைவாகச் சென்று (நராந்தகனைத்) தாக்கினான்; தாக்கினான் தன்-
தன்னைத் தாக்கிய அவனுடைய; கரம் ஒன்றில் – கையொன்றில்;
திரிவது – மரம் ஒன்று சுழல்வதை; ஆரும் காண்கிலாது – யாரும்
காணமுடியாதபடி; அதனை – அம்மரத்தைத்; தன்கை – தன்
கையில் உள்ள; அரம் ஒன்று – அரத்தினால் அராவிச் செய்த;
வயிரவாளால் – உறுதியான (தன்) வாளால்; ஆயிரம் துண்டம்
கண்டான் – ஆயிரம் துண்டுகளாக ஆக்கினான்.
——————
7938. அவ் இடை வெறுங் கை நின்ற அங்கதன்.
‘ஆண்மை அன்றால்
இவ் இடை பெயர்தல்’ என்னா, இமையிடை ஒதுங்கா
முன்னர்,
வெவ் விடம் என்னப் பொங்கி, அவனிடை எறிந்த வீச்சுத்
தவ்விட, உருமன் புக்கு, வாளொடும் தழுவிக் கொண்டான்.-212-
அவ்விடை – அவ்விடத்து; வெறுங்கை நின்ற அங்கதன்
– வெறுங் கையோடு நின்ற அங்கதன்; இவ் இடை – இப்பொழுது;
பெயர்தல் – திரும்பிப் போவது; ஆண்மை அன்றால் என்னா –
ஆண்மை அன்று என்று எண்ணி; இமையிடை ஒதுங்கா முன்னர் –
இமைப்பொழுது கழிவதற்கு முன்னமேயே; வெவ்விடம் என்னப்
பொங்கி – கொடிய நஞ்சு என்னுமாறு சீறி; அவனிடை எறிந்த வீச்சு –
(அந்த நராந்தகன்) வீசியவாள் வீச்சு; தவ்விட – தவறும் படி; உருமின்
புக்கு – இடி போலப் புகுந்து; வாளொடும் தழுவிக் கொண்டான்
– வாளுடன் (அவனைத்) தழுவிக் கொண்டான்.
————-
7939. அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி
ஆர்த்தார்;
‘இத் தொழில் இவனுக்கு அல்லால், ஈசற்கும் இயலாது’
என்பார்;
குத்து ஒழித்து, அவன் கைவாள் தன்கூர் உகிர்த் தடக்
கை கொண்டான்,
ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்.–213-
அத்தொழில் கண்டவானோர் – (அங்கதனுடைய) அந்த (வீரத்)
தொழிலைக் கண்ட தேவர்கள்; ஆவலம் கொட்டி ஆர்த்தார் – கை
கொட்டிப் பேரொலி செய்தார்கள்; இத்தொழில் – இந்த வீரத்
தொழிலை; இவனுக்கு அல்லால் – இவனால் செய்ய இயலுமே
அல்லாமல்; ஈசற்கும் – சிவபிரானுக்கும்; இயலாது என்பார் – செய்ய
இயலாது என்பர்; குத்து ஒழித்து – அங்கதன் (நராந்தகனைக்)
குத்துதல் தொழிலை விட்டு; அவன் கைவாள் – அந்த
நராந்தகனுடைய கையில் உள்ள வாளைத்; தன் கூர் உகிர்த் தடக்கை
கொண்டான் – தனது கூரிய நகங்களை உடைய நீண்ட கையால்
(பற்றிப் பிடுங்கிக்) கொண்டானாய்; இரு கூறாய் ஒத்து வீழ வீசி –
(அது) இரு துண்டங்களாய் ஒத்து அமைந்து விழுமாறு (ஒடித்து) வீசி;
வான் உலைய ஆர்த்தான் – தேவர்கள் கூட நடுங்கும் படியாகப்
பேரொலி செய்தான்.
————–
போர் மத்தன் நீலனுடன் போரிட்டு இறத்தல்
7940. கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான், நிறை மத்த மதுவைத்
தேக்கி
ஊர்மத்தம் உண்டாலன்ன மயக்கத்தான், உருமைத் தின்பான்,
போர்மத்தன் என்பான், வந்தான்-புகர் மத்தப் பூட்கை
மேலான்.–214-
கூர்மத்தின் – யாமையின்; வெரிநின் வைத்து – முதுகில் வைத்து;
வானவர் அமுதம் கொண்ட – தேவர்கள் அமுதத்தைக் (கடைந்து)
கொண்ட; நீர்மத்தின் – கடலில் நின்ற மத்தான மேரு
மலையைக்காட்டிலும்; நிமிர்ந்த தோளான் – உயர்ந்த தோளினை
உடையவனும்; உருமைத் தின்பான் – இடியைக் கூடத் தின்ன
வல்லவனும் ஆன; போர் மத்தன் என்பான் – போர் மத்தன் என்ற
பெயருடையவன்; நிறை மத்த மதுவைத் தேக்கி – நிறைந்த
மயக்கத்தை உண்டாக்கவல்ல மதுவை மிக உண்டு; ஊர் மத்தம்
உண்டாலன்ன மயக்கத்தான் – ஊமத்தம் காயை உண்டதைப் போன்ற
மயக்கத்தவனாய்; புகர் மத்தப் பூட்கை மேலான் – புள்ளிகளை
உடைய மத்தகத்தை உடைய யானையின் மேல் ஏறி; வந்தான்.
—————–
7941. காற்று அன்றேல், கடுமை என் ஆம்? கடல் அன்றேல்,
முழக்கம் என் ஆம்?
கூற்று அன்றேல், கொலை மற்று என் ஆம்? உரும்
அன்றேல், கொடுமை என் ஆம்?
சீற்றம்தான் அன்றேல், சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது
எங்கே?
மாற்று அன்றே மலை; மற்று என்னே? – மத்தன்தன்
மத்த யானை.–215-
மத்தன் தன் – போர் மத்தனுடைய; மத்த யானை – மத மயக்கம்
கொண்ட யானை; காற்று அன்றேல் கடுமை என் ஆம் – காற்று
அல்லவாயின் விரைவு எவ்வாறு ஆகும்; கடல் அன்றேல் முழக்கம்
என் ஆம் – கடல் அல்லவாயின் முழக்கம் எவ்வாறு ஆகும்; கூற்று
அன்றேல் கொலை மற்று என் ஆம் – யமன் அல்லவாயின் கொலைத்
தொழில் எவ்வாறு ஆகும்; உரும் அன்றேல் கொடுமை என் ஆம் –
இடி அல்லவாயின் கொடுஞ் செயல் எப்படி ஆகும்; சீற்றம் தான்
அன்றேல் – சீற்றம் (கொண்ட வடிவம்) அல்லவாயின்; சீற்றம் வேறு
ஒற்று தெரிப்பது எங்கே – சீற்றத்தை வேறு ஒன்றாகத் தெரிவிப்பது
எப்படி; மலை மாற்று அன்றே – அதற்கு மலை ஒப்புடையது அல்ல;
மற்று என்னே – பின் (அதை) எப்படி விளக்குவது என்றவாறு.
—————
7942. வேகமாக் கவிகள் வீசும் வெற்பினம் விழுவ, மேன்மேல்,
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும்
பற்றா;
மாக மா மரங்கள் எல்லாம், கடாத்திடை வண்டு சோப்பி
ஆகினும் ஆம்; அது அன்றேல், கரும்பு என்றே
அறையலாமால்.–216-
கவிகள் – குரங்குகள்; வேகமா வீசும் வெற்பினம் மேன்மேல்
விழுவ – வேகமாக வீசுகின்ற மலைக்கூட்டங்கள் மென்மேல்
விழுபவை; பாகர் கால் சிலையின் தூண்டும் உண்மை ஆம் எனவும்
பற்றா – பாகர்கள் முனை கொண்ட வில்லிலே வைத்துச் செலத்துகிற
களிமண் உருண்டைகள் ஆகும் என்று கூறுவதற்கும் கூடப்
பொருந்தாது; மாகமா மரங்கள் எல்லாம் – மிகப் பெரிய மரங்கள்
எல்லாம்; கடாத்திடை வண்டு சோப்பி ஆகினும் ஆம் – (கன்ன)
மதத்தில் படியும் வண்டுகளை ஓட்டுதற்குரிய ஈயோட்டி ஆகினும்
ஆகும்; அது அன்றேல் – பொருத்தமானது அன்று எனின்; கரும்பு
என்றே அறையலாமால் – கரும்பு என்றே சொல்லலாம்.
———–
7943. காலிடைப்பட்டும், மானக் கையிடைப்பட்டும், கால
வாலிடைப்பட்டும், வெய்ய மருப்பிடைப்பட்டும், மாண்டு,
நாலிடைப்பட்ட சேனை, நாயகன் தம்பி எய்த
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது – குரக்குச் சேனை.–217-
குரக்குச் சேனை – குரங்குப் படை; காலிடைப்பட்டும் – (அந்த)
யானையினது காலின் கீழ் அகப்பட்டும்; மானக் கையிடைப் பட்டும் –
(அதன்) பெரிய துதிக்கையில் அகப்பட்டும்; கால வாலிடைப்பட்டும் –
யமனைப் போன்ற வாலில் அடிபட்டு அகப்பட்டும்; வெய்ய
மருப்பிடைப் பட்டும் – கொடிய தந்தங்களில் அகப்பட்டும்; நாலிடைப்
பட்ட சேனை – நான்காக வகுக்கப்பட்ட (இராவணது) படை,; நாயகன்
தம்பி – தலைவனின் தம்பியாகிய இலக்குவன்; எய்த கோலிடைப்
பட்டது எல்லாம் – எய்த அம்புகளினால் பட்ட பாட்டை எல்லாம்;
பட்டது மாண்டு – பட்டு இறந்தது.
—————-
7944. தன் படை உற்ற தன்மை நோக்கினான், தரிக்கிலாமை,
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அனலன்தன்
புதல்வன், ஆழி
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி
வந்தான் –
பின் படை செல்ல, நள்ளார் பெரும் படை இரிந்து பேர.–218-
அனலின் தன் புதல்வன் – தீக் கடவுளின் மகனாகிய நீலன்;
அன்படை உள்ளத்து அண்ணல் – அன்பு நிறைந்த மனத்தை உடைய
தலைவன்; (ஆகையால்) தன் படை உற்ற தன்மை நோக்கினான் –
தனது படை அடைந்த நிலையை நோக்கியவனாய்; தரிக்கிலாமை –
மனம் தரிக்காது உருகி; ஆங்கு ஓர் மராமரம் – அப்போது ஒரு
மராமரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு; படை பின் செல்ல –
தன்படை பின்னால் தொடர்ந்து வர; நள்ளார் – பகைவர்களுடைய;
பெரும்படை இரிந்து பேர – பெரிய படை நிலை கெட்டு ஓட;
ஆழிவன் படை அனையது – மாலின் வலிய சக்கரப் படையைப்
போன்று; சுழற்றி வந்தான் – சுழற்றிக் கொண்டு வந்தான்.
———–
7945. சேறலும். களிற்றின் மேலான், திண் திறல் அரக்கன்,
செவ்வே,
ஆறு-இரண்டு அம்பினால் அந் நெடு மரம் அறுத்து
வீழ்த்தான்;
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான்; அதனை விண்ணில்,
நூறு வெம் பகழி தன்னால், நுறுக்கினான், களிறு நூக்கி.–219-
சேறலும் – முன் சொன்னபடி நீலன் வருதலும்; களிற்றின் மேலான்
– யானையின் மேல் உள்ளவனாகிய; திண்திறல் அரக்கன் – மிக்க
வலிமை உடைய அரக்கனாகிய போர் மத்தன்; செவ்வே – நேராக;
ஆறு இரண்டு அம்பினால் – பன்னிரண்டு அம்புகளால்; அந்நெடு
மரம் – (அவன் ஏந்தி வந்த) அந்த நீண்ட மராமரத்தை; அறுத்து
வீழ்த்தான் – அறுத்து வீழ்த்தினான்; நீலன் – நீலன்; வேறு ஒரு
குன்றம் வீசினான் – மற்றொரு குன்றை (எடுத்து) வீசினான்; அதனை
– அக்குன்றத்தை; களிறு நூக்கி – தன் யானையைமுன்னால் செலுத்தி; விண்ணில் – ஆகாயத்தில்; நூறு வெம்பகழி
தன்னால் – நூறு கொடிய அம்புகளால்; நுறுக்கினான் –
பொடியாக்கினான்.
———
7946. பின், நெடுங் குன்றம் தேடிப் பெயர்குவான் பெயராவண்ணம்
பொன் நெடுங் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல,
அந் நெடுங் கோப யானை, அமரரும் வெயர்ப்ப, அங்கி –
தன் நெடு மகனைப் பற்றிப் பிடித்தது, தடக் கை நீட்டி.–220-
பின் – அதற்குப் பின்பு; நெடுங்குன்றம் தேடிப் பெயர்குவான் –
(மேலும்) பெரிய மலையைத் தேடிச் செல்கின்றவனாகிய (நீலன்);
பெயரா வண்ணம் – செல்ல முடியாதபடி; அந்த நெடுங் கோபயானை
– அந்தப் பெரிய சினம் மிக்க யானை; தடக்கை நீட்டி – (தன்) நீண்ட
துதிக்கையை நீட்டி; பொன் நெடுங்குன்றம் சூழ்ந்த – பொன் போன்ற
நீண்ட மந்தரமலையைச் சுற்றிய; பொறி வரி அரவம் போல – படப்
பொறியும் உடல் கோடும் கொண்ட (வாசுகி என்னும்) பாம்பு போல;
அமரரும் வெயர்ப்ப – (அதனைக் கண்ட) தேவர்களும் உடல்
வியர்க்குமாறு; அங்கிதன் நெடு மகனை – தீக் கடவுள் மகனாகிய
நீலனைப்; பற்றிப் பிடித்தது – பற்றிப் பிடித்தது.
————
7947. ‘ஒடுங்கினன், உரமும், ஆற்றல் ஊற்றமும், உயிரும்’ என்ன,
கொடும் படை வயிரக் கோட்டால் குத்துவான் குறிக்கும்
காலை,
நெடுங் கையும் தலையும், பிய்ய, நொய்தினின்
நிமிர்ந்து போனான்;
நடுங்கினர், அரக்கர்; விண்ணோர், ‘நன்று, நன்று!’ என்ன
நக்கார்.–221-
உரமும் – (பற்றிப் பிடித்த போது நீலன்) வலியையும்; ஆற்றல்
ஊற்றமும் – வலிமையால் வந்த மன ஊக்கமும்; உயிரும் – உயிரும்;
ஒடுங்கினன் என்ன – ஒடுங்கி விட்டான் என்று (பார்த்தவர்
எண்ணும்படி); கொடும்படை – வளைந்த பூணணிந்த; வயிரக்
கோட்டால் – தன் வலிமை உள்ள கொம்புகளால்; குத்துவான் –
குத்துவதற்கு, குறக்கும் காலை (அவ்வரக்கனது யானை) எண்ணும்
அளவில்; நெடுங்கையும் – (அவ்வியானையினுடைய) நீண்ட
துதிக்கையையும்; தலையும் பிய்ய – தலையையும் பிய்த்துக் கொண்டு;
நொய்தினின் – விரைவாக; நிமிர்ந்து போனான் – மேல் ஓங்கிச்
சென்றான்; அரக்கர் நடுங்கினர் – (அச்செயல் கண்டு) அரக்கர்கள்
நடுங்கினார்கள்; விண்ணவர் நன்று நன்று என்ன – தேவர்கள் நல்லது
நல்லது என்று கூறி; நக்கார் – சிரித்தனர்.
————
7948. ‘தறைத்தலை உற்றான் நீலன்’ என்பது ஓர் காலம் தன்னில்,
நிறைத் தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடுங் குன்று
என்னக்
குறைத் தலை வேழம் வீழ, விசும்பின்மேல் கொண்டு
நின்றான்,
பிறைத் தலை வயிர வாளி மழை எனப் பெய்யும் கையான்.–222-
நீலன் – நீலன்; தறைத்தலை உற்றான் – தரையினிடத்துப்
பொருந்தினான்; என்பது ஓர் காலம் தன்னில் – என்னும் ஒரு கால
அளவுக்குள்; நிறைத்தலை – கனமான தலையிலிருந்து (யானைத்
தலை); வழங்கும் சோரி நீத்தத்து – வடிகிற குருதி வெள்ளத்தி்ல்;
நெடுங்குன்று என்ன – பெரிய குன்று (விழுந்தது) என்னுமாறு; தலை
குறை வேழம் வீழ – தலையில்லாத (அந்த) யானை விழ; விசும்பின்
மேல் கொண்டு நின்றான் – (அதன்மேல் ஏறி இருந்த போர் மத்தன்)
வானத்தின் மேல் நின்றவனாகி; பிறைத்தலை – (நிலவுப்) பிறையின்
உருவத்தை உடைய; வயிர வாளி – வலிமையான அம்புகளை; மழை
எனப் பெய்யும் கையான் – மழை போலச் செலுத்தும் கையை
உடையவன் ஆனான்.
———–
7949. வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி,
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்மேல் செல்ல விட்டான்;
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து,
ஓர் அம்பால்,
ஓங்கல்போல் புயத்தினான்தன் உரத்திடை ஒளிக்க, எய்தான்.–223-
நீலன் – நீலன்; வாங்கிய சிரத்தின் – (தாள்) வீழ்த்திய (யானைத்)
தலையில் உள்ள; மற்றை வயிரவான் கோட்டை – அந்த வயிரம் ஏறிய
உறுதியான கொம்பை; வவ்வி – பிடுங்கி (பறித்து); வீங்கிய விசையின்
– மிக்க வேகத்தோடு; அரக்கன் மேல் செல்ல விட்டான் –
அரக்கனாகிய போர் மத்தன் மீது செல்லுமாறு செலுத்தினான்; அவன்
– அந்தப் போர் மத்தன்; ஆங்கு – அப்பொழுது; அவற்றை ஆண்டு
– அக்கொம்புகளை அவ்விடத்திலேயே; ஓர் அம்பினால் அறுத்து –
ஓர் அம்பினால் துண்டாக்கி; ஓர் அம்பால் – ஓர் அம்பை; ஓங்கல்
போல் புயத்தினான் தன் – மலை போன்ற தோளை உடையவனாகிய
(அங்கதன்) தன்; உரத்திடை ஒளிக்க – மார்பில் பதிந்து மறையும்படி;
எய்தான் – எய்தான்.
—————
7950. எய்த அது காலமாக, விளிந்திலது யானை என்ன,
கையுடை மலை ஒன்று ஏறி, காற்று எனக் கடாவி வந்தான்;
வெய்யவன், அவனைத்தானும் மேற்கொளா, வில்லினோடு
மொய் பெருங் களத்தின் இட்டான், மும் மதக் களிற்றின்
முன்னர்,.–224-
எய்தது காலமாக – எய்த அந்தக் காலத்தில்; யானை விளிந்திலது
என்ன – (போர் மத்தனுடைய) யானை இறக்க வில்லை என்று;
(பார்ப்பவர் எண்ணும்படி) கையுடை மலை ஒன்று ஏறி –
(அவ்வரக்கன்) கையுடைய மலையைப் போன்ற வேறு ஒரு யானை
மீது ஏறி; காற்று எனக் கடாவி வந்தான் – (அதனைக்) காற்றினைப்
போல் (விரைவாகச்) செலுத்திக் கொண்டு வந்தான்; வெய்யவன் –
சினம் உடைய நீலன்; அவனை வில்லினோடு தானும் மேற்கொளா –
அந்தப் போர் மத்தனை வில்லோடுதான் (யானையில் இருந்து) மேலே
தூக்கி; மும்மதக் களிற்றின் முன்னர் – மூன்று மதங்களைப்
பொழிகின்ற (அந்த) யானையின் முன்பு; மொய் பெருங் களத்தின் –
(வீரர்கள்) நெருங்கிப் போரிடுகிற பெரிய போர்க்களத்தில்; இட்டான் –
எறிந்தான்.
————–
7951. இட்டவன் அவனிநின்றும் எழுவதன் முன்னம், யானை
கட்டு அமை வயிரக் கோட்டால் களம் பட வீழ்த்தி, காலால்
எட்டி, வன் தடக் கைதன்னால் எடுத்து, எங்கும் விரைவின
வீச,
பட்டிலன், தானே தன் போர்க் கரியினைப் படுத்து
வீழ்த்தான்.–225-
இட்டவன் – இடப்பட்டவனாகிய (போர் மத்தன்); அவனி நின்றும்
– பூமியில் இருந்து; எழுவதன் முன்னம் – எழுவதற்கு முன்பே;
யானை – (மத வெறி மிக்க அவனுடைய) யானை; கட்டு அமை வயிரக்
கோட்டால் – பூண் அமைந்த (தன்) வலிய கொம்புகளால்; களம் பட
வீழ்த்தி – அவனைக் களத்தில் விழுமாறு வீழ்த்தி; காலால் எட்டி –
காலினால் (எட்டி) மிதித்து; வன் தடக்கை தன்னால் எடுத்து – வலிய
பெரிய கையினால் எடுத்து; எங்கும் விரைவின் வீச – பல இடத்திலும்
விரைவாக வீசியும்; பட்டிலன் – இறந்து ஒழியாதவனாய்; தான தன்
போர்க் கரியினை – தானே தன் போர் யானையினைப்; படுத்து
வீழ்த்தான் – கொன்று வீழ்த்தினான்.
————
7952. தன் கரி தானே கொன்று, தடக் கையால் படுத்து வீழ்த்தும்
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி,
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக, நீலன் புக்கான்,
வன் கரம் முறுக்கி, மார்பில் குத்தினான்; மத்தன் மாண்டான்.–226-
தடக்கையால் – (தன்) பெரிய கைகளினால்; தன் கரி தானே
கொன்று – தன் யானையைத்தானே கொன்று; படுத்து வீழ்த்தும் –
உயிர் ஒழிய வீழ்த்திய; மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் –
மின்னலும் கருமையானது என்று கூறுமாறு ஒளிவீசும் பற்களை
உடைய போர் மத்தனுடைய; வெகுளி நோக்கி – சினத்தைப் பார்த்து;
நீலன் – நீலன்; பொன்கரிது என்னும் கண்கள் – பொன்னும் கூடக்
கரியது எனும்படி உள்ள (தன்) கண்களில்; பொறி உக – நெருப்புப்
பொறி வெளிப்பட; புக்கான் – புகுந்தவனாய்; வன்கரம் முறுக்கி –
(போர் மத்தனுடைய) வலிய கைகளை முறுக்கி; மார்பில் குத்தினன் –
மார்பில் குத்தினான்; மத்தன் மாண்டான் – மத்தன் இறந்தான்.
————–
வயமத்தன்-இடபன் போர்
7953. உன்மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற
வன்மத்தைக் கண்டும், மாண்ட மத மத்தமலையைப்
பார்த்தும்,
சன்மத்தின் தன்மையானும், தருமத்தைத் தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக்கூட்டானும், வயமத்தின் கடிதின் வந்தான்.–227-
மாண்ட – இறந்த,; மத மத்தமலையைப் பார்த்தும் – மதங்
கொண்ட மத்தகத்தை உடைய யானையைப் பார்த்தும்; உன் மத்தன் –
உன் மத்தனது; வயிர மார்பில் – வலிமையான மார்பில்; உரும்
ஒத்தகரம் – (நீலனது) இடியை ஒத்த கை; சென்று உற்ற – சென்று
பொருந்திய; வன்மத்தைக் கண்டும் – வலிமையின் (விளைவினைக்)
கண்டும்; சன்மத்தின் தன்மையானும் – பிறவியின் (குணத்)
தன்மையாலும்; தருமத்தைத் தள்ளி வாழ்ந்த கன்மத்தின் கடைக்
கூட்டானும் – தருமத்தை விலக்கி வாழ்ந்த தீவினையால் ஏற்பட்ட
முடிவாலும்; வயமத்தன் கடிது வந்தான் – வயமத்தன் விரைந்து
(போர்க்களம்) வந்தான்.
————
7954. பொய்யினும் பெரிய மெய்யான்; பொருப்பினைப் பழித்த
தோளான்;
‘வெய்யன்’ என்று உரைக்கச் சாலத் திண்ணியான்;
வில்லின் செல்வன்
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ, பிறங்கு பல்
பேய்
ஐ-இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான்;–228-
பெய்கழல் அரக்கன் – அணிந்த வீரக் கழலை உடைய வயமத்தன்;
பொய்யினும் பெரிய மெய்யான் – மாயம் (அல்) வஞ்சனையைக்
காட்டிலும் பெரிய உடம்பினை உடையவன்; பொருப்பினைப் பழித்த
தோளான் – மலையை எள்ளிய தோள்களை உடையவன்; வெய்யன்
என்று உரைக்கச் சாலத் திண்ணியான் – கொடியவன் என்று
உரைப்பதற்கு ஏற்ப மிக வலிமை உடையவன்; வில்லின் செல்வன் –
வில்லாற்றலில் செல்வன் எனத் தக்கவன்; சேனை ஆர்த்து எழ –
இராவணன் படைவீரர் மகிழ்ச்சியால் பேரொலி செய்து எழ; பிறங்கு
பல்பேய் – விளங்குகிற பற்களை உடைய பேய்கள்; ஐ- இருநூறு
பூண்ட – ஆயிரம் பூட்டிய; ஆழி அம் தேரின் மேலான் – சக்கரத்தை உடைய அழகிய தேரின் மேல்
எறியவன்.
———-
7955. ஆர்க்கின்றான், உலகை எல்லாம் அதிர்க்கின்றான்,
உருமும் அஞ்சப்
பார்க்கின்றான், பொன்றினாரைப் பழிக்கின்றான், பகழி மாரி
தூர்க்கின்றான், குரங்குச் சேனை துரக்கின்றான், துணிபை
நோக்கி,
‘ஏற்கின்றார் இல்லை’ என்னா, இடபன் வந்து, அவனோடு
ஏற்றான்.–229-
ஆர்க்கின்றான் – (அந்த வயமத்தன்) பேரொலி செய்பவனாயும்;
உலகை எல்லாம் அதிர்க்கின்றான் – உலக உயிர்களை எல்லாம்
அதிரச் செய்பவனாயும்; உருமும் அஞ்சப் பார்க்கின்றான் – இடியும்
அஞ்சுமாறு பார்ப்பவனாயும்; பொன்றினாரைப் பழிக்கின்றான் –
(தனக்கு முன்) இறந்தவர்களின் (வலிமையைப்) பழிக்கின்றவனாயும்;
பகழி மாரி தூர்க்கின்றான் – அம்பு மழையைப் (பொழிந்து
போர்க்களத்தைத்) தூர்க்கின்றவனாயும்; குரங்குச் சேனை
துரக்கின்றான் – குரங்குப்படையை ஓடச்செய்பவனாயும் (உள்ள);
துணிபை நோக்கி – அவனது துணிவைப் பார்த்து; ஏற்கின்றார்
இல்லை என்னா – (இவனைப்) போர் எதிர்ப்பவர் இல்லையே என்று
எண்ணி; இடபன் வந்து – (வானரத் தலைவனாகிய) இடபன் என்பவன்
வந்து; அவனோடு ஏற்றான் – அந்த வயமத்தனோடு போர் எதிர்த்தான்.
———–
7956. சென்றவன் தன்னை நோக்கி, சிரித்து, ‘நீ சிறியை; உன்னை
வென்று அவம்; உம்மை எல்லாம் விளிப்பெனோ?
விரிஞ்சன் தானே
என்றவன் எதிர்த்த போதும், இராவணன் மகனை இன்று
கொன்றவன் தன்னைக் கொன்றே குரங்கின்மேல்
கொதிப்பேன்’ என்றான்.–230-
சென்றவன் தன்னை நோக்கி – தன்னை நோக்கிச் சென்றவனாகிய
(வந்தவனாகிய) இடபனைப் பார்த்து; சிரித்து – வயமத்தன் எள்ளிச்
சிரித்து; நீ சிறியை – நீ மிகச் சிறியவன்; உன்னை வென்று அவம் –
உன்னை வெல்லுதல் வீண்; உம்மை எல்லாம் விளிப்பெனோ –
உங்களைப் போன்ற (சிறியவர்களை) எல்லாம் போருக்கு
அழைப்பேனோ (அழையேன் என்றபடி); விரிஞ்சன் தானே என்றவன்
– பிரமதேவன்தான் என்று சொல்லத் தக்கவன்; எதிர்ந்த போதும் –
(என்னை) எதிர்த்துவந்த போதும்; இன்று இராவணன் மகனை –
இப்போது இராவணனது மகனாகிய அதிகாயனைக்; கொன்றவன்
தன்னைக் கொன்றே – கொன்றவனாகிய இலக்குவன் தன்னைக்
கொன்றபிறகே; குரங்கின் மேல் கொதிப்பென் – குரங்குகளின் மீது
சினம் பொங்கப் போரிடுவேன்; என்றான் -என்று கூறினான்.
—————
7957. ‘வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு, பலி உண்
வாழ்க்கைப்
பேய் கொண்டு, வெல்ல வந்த பித்தனே! மிடுக்கைப் பேணி
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ! நின் நோன்மை
எல்லாம்
ஓய்கின்றாய் காண்டி!’ என்னா, உரைத்தனன், இடபன்
ஒல்கான்.–231-
வாய் கொண்டு – வாயைக் கொண்டு; சொற்றற்கு ஏற்ற –
சொல்லுவதற்கு ஏற்புடைய; வலி கொண்டு – வலிமையைக் கொண்டு;
பலி உண்வாழ்க்கை – பிறர் தரும் உணவை உண்டு வாழும்
வாழ்க்கையை உடைய; பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே –
பேய்களைக் கொண்டு வெற்றிபெற வந்த பித்தனே!; மிடுக்கைப் பேணி
– (தன்) வலிமையைப் புகழ்ந்து; நோய் கொண்டு மருந்து செய்யா
ஒருவ – நோயை (உடலில்) கொண்டிருந்தும் (அதற்குத் தேவையான)
மருந்தைச் செய்யமுடியாத ஒருவனே!; நின் நோன்மை எல்லாம் –
உன் வலிமை எல்லாம்; ஓய்கின்றாய் – ஓயப் போகிறாய், காண்டி
(அதனைக்) காண்பாயாக; என்னா – என்று; இடபன் – இடபன் என்ற
குரங்குத் தலைவன்; ஒல்கான் உரைத்தனன் – தளர்ச்சி
அடையாதவனாய்க் கூறினான்.
————
7958. ‘”ஓடுதி” என்ன, ஓடாது உரைத்தியேல், உன்னோடு இன்னே
ஆடுவென் விளையாட்டு’ என்னா, அயில் எயிற்று அரக்கன்,
அம் பொன்
கோடு உறு வயிரப் போர் வில் காலொடு புருவம் கோட்டி,
ஈடு உற, இடபன் மார்பத்து ஈர்-ஐந்து பகழி எய்தான்.-232-
அயில் எயிற்று அரக்கன் – வேல் போலக் கூர்மையான பற்களை
உடைய வயமத்தன்; ஓடுதி என்ன – (நான்) ஓடிப்போ என்று சொல்ல;
ஓடாது உரைத்தியேல் – ஓடாமடல் (எதிர்த்துச்) சொல்லுவாய் ஆனால்;
உன்னோடு – உன்னுடன்; இன்னே – இப்பொழுதே; விளையாட்டு
ஆடுவென் – விளையாட்டு விளையாடுவேன்; என்னா – என்று
சொல்லி; அம்பொன் கோடு உறு வயிரப் போர் வில் – அழகிய
பொன்மயமான மேருமலையை ஒத்த (தன்னுடைய) வலிமையான
போரிடும் வில்லின்; காலொடு புருவம் கோட்டி – முனைகளோடு தன்
புருவத்தையும் வளைத்து; ஈடு உற – வலிமை மிக; இடபன் மார்பத்து
– இடபனுடைய மார்பின் கண்ணே; ஈர் ஐந்து பகழி – பத்து
அம்புகளை; எய்தான் – எய்தான்.
———————
7959. அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான், வேகத்தால் அத்
தசும்புடைக் கொடுந் தேர்தன்னைத் தடக் கையால் எடுத்து
வீச,
பசுங் கழல் கண்ண பேயும் பறந்தன, பரவை நோக்கி;
விசும்பிடைச் செல்லும் காரின் தாரைபோல் நான்ற
மெய்யான்.-233-
அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான் – ஊற்றுப் பெருக்கைப்
போல் இரத்தம் (வெளியில்) கொட்டுகிற உடம்பை உடையவனாகிய
(இடபன்); வேகத்தால்- விரைவோடு; அத் தசும்புடைக் கொடுத்தேர்
தன்னை – அந்தக் கலசம் அமைந்த பெரிய தேர் தன்னை;
தடக்கையால் எடுத்து வீச – தன் வலிய கையினால் எடுத்து வீசி
எறிய; பசுங்கழல் கண்ண பேயும் – (அத்தேரில் பூட்டப்பட்டிருந்த)
பசுமையான கழற்சிக் காய் போன்ற கண்களை உடைய (ஆயிரம்)
பேய்களும்; பரவை நோக்கிப் பறந்தன – கடலை நோக்கிப் பறந்து
சென்றன; விசும்பிடைச் செல்லும் காரின் தாரை போல்-(அத்தேரின்
மேல் இருந்த வயமத்தன்) விண்ணில் செல்லும் மேக ஒழுங்கு போல்;
நான்ற மெய்யான் – தொங்குகின்ற உடலை உடையவன் ஆனான்.
————–
7960. தேரொடும் கடலின் வீழ்ந்து, சிலையும் தன் தலையும்
எல்லாம்
நீரிடை அழுந்தி, பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
பாரிடைக் குதியாமுன்னம்,, இடபனும், ‘பதக! நீ போய்
ஆரிடைப் புகுதி!’ என்னா, அந்தரத்து ஆர்த்துச்
சென்றான்.–234-
தேரொடும் – தேருடன்; கடலின் வீழ்ந்து – கடலில் விழுந்து;
சிலையும் – வில்லும்; தன்தலையும் எல்லாம் – தன் தலையும் (பிற)
எல்லாமும்; நீரிடை அழுந்தி – கடல் நீரிலே அழுந்தி; பின்னும்
நெருப்பொடு நிமிர வந்தான் – மறுபடியும் பெருஞ்சினத்தோடு மேல் எழுந்து வந்தவனாகிய வயமத்தன்; பாரிடைக் குதியா
முன்னம் – நிலத்தில் குதிப்பதற்கு முன்பே; இடபனும் – இடபன்
என்பவனும்; பதக – பாதகனே; நீ போய் – நீ விலகிப் போய்;
ஆரிடைப் புகுதி – எங்கு (சென்று தப்பிப்) புகுவாய்; என்னா – என்று
சொல்லிக்கொண்டு; அந்தரத்து ஆர்த்துச் சென்றான் – விண்ணில்
பேரொலி செய்து கொண்டு சென்றான்.
———
7961. அல்லினைத் தழுவி நின்ற பகல் என, அரக்கன் தன்னை,
கல்லினும் வலிய தோளால், கட்டியிட்டு இறுக்கும் காலை,
பல்லுடைப் பில வாயூடு பசும் பெருங் குருதி பாய,
வில்லுடை மேகம் என்ன, விழுந்தனன், உயிர் விண் செல்ல.–235-
அல்லினைத் தழுவி நின்ற பகல் என – இரவினைத் தழுவி நின்ற
பகல் போல; அரக்கன் தன்னை – அரக்கனாகிய வயமத்தன் தன்னை;
கல்லினும் வலிய தோளால் – (இடபன் தன்னுடைய) கல்லைக்
காட்டிலும் வலிமையுள்ள தோள்களால்; கட்டியிட்டு – கட்டிப்பிடித்து;
இறுக்கும் காலை – இறுக்கமாய் நெருக்கிய பொழுது; பல்லுடைப் பில
வாயூடு – பல்பொருந்திய குகை போன்ற வாயின் வழியாக; பசும்
பெருங்குருதிபாய – பசிய மிகுதியான உதிரம் வெளிப்பட; உயிர் விண்
செல்ல – உயிர் வானுலகம் செல்ல; வில்லுடை மேகம் என்ன –
வில்லை உடைய மேகம் போல; விழுந்தனன் – நிலத்தில் விழுந்தான்;
—————
சுக்ரீவன் கும்பன் போர்
7962. குரங்கினுக்கு அரசும், வென்றிக் கும்பனும், குறித்த
வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார்,
மரம் கொடும், தண்டு கொண்டும், மலை என
மலையாநின்றார்;
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர்.–236-
குரங்கினுக்கு அரசும் – குரங்குகளுக்கு அரசனாகிய சுக்ரீவனும்;
வென்றிக்கும்பனும் – வெற்றி உடைய கும்பன் என்னும் (அரக்கர்
தலைவனும்); குறித்த வெம்போர் – (அங்குக்)குறித்துச் செய்த
கொடியபோர்; அரங்கினுக்கு அழகுசெய்ய – அப்போர்க் களத்திற்கு
அழகினைச் செய்ய; ஆயிரம் சாரி போந்தார் – ஆயிரம் முறை
(என்னும் அளவு) வலசாரி, இடசாரியாகச் சுற்றிச் சுற்றிவந்தார்கள்;
மரம்கொடும் – (அவர்கள்) மரத்தைக் கொண்டும்; தண்டுகொண்டும்-
தண்டாயுதம் கொண்டும்; மலைஎன மலையாநின்றார் – இருமலைகள்
போரிடுவது போல் போரிட்டார்கள்; கண்டதேவர் –
அச்செயலைக்கண்ட தேவர்கள்; சிரங்களும் கரமும் எல்லாம்
குலைந்தனர் – தலையும் கைகளும் எல்லாம் நடுங்கினர்.
————–
7963. கிடைத்தார், உடலில் கிழி சோரியை வாரித்
துடைத்தார், விழியில் தழல் மாரி சொரிந்தார்,
உடைத் தாரொடு பைங் கழல் ஆர்ப்ப உலாவிப்
புடைத்தார், பொருகின்றனர்-கோள் அரி போல்வார்.–237-
கோளரி போல்வார் – வலிமையான சிங்கத்தைப் போன்றவர்களான
(சுக்ரீவ கும்பர்கள்); கிடைத்தார் – ஒருவரை ஒருவர்
நெருங்கியவர்களாய்; உடலில் கிழி சோரியை வாரித்துடைத்தார் –
உடலில் கிழிசல் (ஏற்பட்டு அதிலிருந்து) பெருகிவருகிற இரத்தத்தை
வாரித்துடைத்தார்கள்; விழியில் தழல் மாரி சொரிந்தார் – கண்களில்
நெருப்பு மழையைப் பொழிந்தார்கள்; உடைத்தாரொடு – அணிந்துள்ள
மாலையோடு; பைங்கழல் ஆர்ப்ப – பசும்பொன்னால் செய்யப்பட்ட
வீரக் கழல்கள் ஒலிக்க; உலாவிப் புடைத்தார் – இங்கும் அங்கும்
நகர்ந்து அடித்துக் கொண்டவர்களாய்ப்; பொருகின்றனர் – போர்செய்கின்றனர்,
————–
7964. தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன்,
அண்டங்கள் வெடிப்பன என்ன, அடித்தான்;
கண்டு, அங்கு, அது மா மரமே கொடு காத்தான்;
விண்டு அங்கு அது தீர்ந்தது; மன்னன் வெகுண்டான்;–238-
தண்டம் கையின் வீசிய – தண்டாயுதத்தைக் கையில் எடுத்துச்
சுழற்றிய; தக்க அரக்கன் – (போர்த்தொழில்) தகுதியுள்ள
அரக்கனாகிய கும்பன்; அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் –
அண்டங்கள் எல்லாம் வெடிக்கின்றன என்று கண்டோர் எண்ணும்படி
பேரொலி எழச் (சுக்ரீவனை) அடித்தான்; அங்கு அதுகண்டு –
அப்போது அந்தச் செயலைக்கண்டு; மாமரமே கொடு காத்தான் –
(சுக்ரீவன்) பெரியமரத்தைக் கொண்டு (அடி தன் மீது விழாதபடி)
காத்துக் கொண்டான்; அங்கு அது விண்டு தீர்ந்தது – அப்போது
அப்பெரியமரம் துண்டாகி அழிந்தது; மன்னன் வெகுண்டான் –
(அதைக்கண்டு) மன்னனாகிய சுக்ரீவன் சினம் கொண்டான்.
———-
7965. ‘பொன்றப் பொருவேன், இனி’ என்று, பொறாதான்,
ஒன்றப் புகுகின்றது ஓர் காலம் உணர்ந்தான்,
நின்று அப் பெரியோன் நினையாதமுன், நீலன்
குன்று ஒப்பது ஓர் தண்டு கொணர்ந்து கொடுத்தான்.–239-
பொறாதான் – மனம் பொறுக்காதவன் ஆகிய சுக்ரீவன்; இனி –
இனி; பொன்றப் பொருவேன் என்று – (நீ) இறக்கும்படி போர்
செய்வேன் என்று கூறி; ஒன்றப் புகுகின்றது – மும்முரமாய்ப் போரிடப்
போகின்ற; ஓர் காலம் உணர்ந்தான் – ஒரு காலத்தை எண்ணியவனாய்;
அப்பெரியோன் நின்று – அந்தப் பெருமை மிக்க சுக்ரீவன் நின்று;
நினையாதமுன் – நினையாததற்கு முன்பே; நீலன் – நீலன்; குன்று
ஒப்பது ஓர் தண்டு – குன்றினை ஒத்த ஒப்பற்ற தண்டாயுதம்
ஒன்றினைக்; கொணர்ந்து கொடுத்தான் – கொண்டு வந்து கொடுத்தான்.
———-
7966. அத் தண்டு கொடுத்தது கைக்கொடு அடைந்தான்,
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்,
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்;
சித்தங்கள் நடுங்கி, அரக்கர் திகைத்தார்.–240-
கொடுத்தது அத்தண்டு – (நீலன் கொணர்ந்து) கொடுத்தாகிய
அந்தத் தண்டினை; கைக்கொடு அடைந்தான் – கையில் கொண்டு
போரிட அடைந்தவனாகிய (சுக்ரீவன்); அண்டமும் மண்ணும் ஒத்து
நடுங்க உருத்தான் – விண்ணும் மண்ணும் ஒன்று போல் நடுங்குமாறு
சினந்தவனாகி; பித்தன் – (போர்) வெறிகொண்டவனாகிய
(கும்பனுடைய); தடமார்பொடு தோள்கள் பிளந்தான் – பரந்த
மார்பையும் தோள்களையும் பிளந்திட்டான்; அரக்கர் – (அதுகண்ட)
அரக்கர்கள்; சித்தங்கள் நடுங்கி திகைத்தார் – மனங்கள் நடுங்கித்
திகைத்தனர்.
—————–
7967. அடியுண்ட அரக்கன், அருங் கனல் மின்னா
இடியுண்டது ஓர் மால் வரை என்ன, விழுந்தான்;
‘முடியும் இவன்’ என்பது ஓர் முன்னம், வெகுண்டான்,
‘ஒடியும் உன தோள்’ என, மோதி உடன்றான்.–241-
அடியுண்ட அரக்கன் – அடிபட்ட அரக்கனாகிய கும்பன்;
அருங்கனல் மின்னா – பெருநெருப்போடு மின்னி; இடியுண்டது ஓர்
மால் வரை என்ன விழுந்தான் – இடியால் தாக்கப்பட்ட ஒரு
பெரியமலை என்று கூறுமாறு (நிலத்தில்) விழுந்து; இவன் முடியும்
என்பது ஓர் முன்னம் – இவன் இறந்து முடிவான் என்று கருதுதற்கு
முன்பே; வெகுண்டான் – சினம் கொண்டவனாய்; உனதோள் ஒடியும்
என – (சுக்ரீவனைப் பார்த்து) உன்தோள் (இப்போது) ஒடியும் என்று
கூறி; மோதி உடன்றான் – மோதிப் போரிட்டான்.
—————-
7968. தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்,
தாளில் தடுமாறல் தவிர்ந்து, தகைந்தான்,
வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டி,
ஆளித் தெழில் அன்னவன் மார்பின் அறைந்தான்.–242-
தோளில் புடையுண்டு – தோளில் அடியுண்டு; அயர் சூரியன்
மைந்தன் – வருந்துகிற கதிரவன் மகனாகிய சுக்ரீவன்; தாளில்
தடுமாறல் தவிர்ந்து – (அவனைக் கொல்லும்) தன் முயற்சியில்
தடுமாறுதலைத் தவிர்த்து; வாளிக் கடுவல் விசையால் -அம்பு போன்ற
கடுமையான அதிகவேகத்தோடு; எதிர் மண்டி தகைந்தான் – (அந்தக்
கும்பனுக்கு) எதிரே சென்று நெருங்கி; ஆளித் தொழில் அன்னவன் –
யாளியின் வீரம் போன்ற வீரத்தொழிலை உடைய (அக்கும்பனுடைய);
மார்பின் அறைந்தான் – மார்பில் அறைந்தான்.
————–
7969. அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்;
‘முடிவு ஆனவன் யார்?’ என, வானவர் மொய்த்தார்;
இடியோடு இடி கிட்டியது என்ன, இரண்டும்
பொடியாயின தண்டு; பொருந்தினர் புக்கார்.–243-
ஆயிர கோடியின் மேலும் – ஆயிரம் கோடிக்கு மேலாக; அடி
அடித்தார் – (தண்டாயுதத்தால்) அடிகளை அடித்துக் கொண்டார்கள்;
வானவர் – தேவர்கள்; முடிவு ஆனவன் யார் என – (இவ்விருவரில்)
முடிவு காலம் வந்து நெருங்கியவர் யாவர் என (அறிய); மொய்த்தார் –
நெருங்கிச் சூழ்ந்தார்கள்; இரண்டும் தண்டு – இரண்டு தண்டுகளும்;
இடியோடு இடி கிட்டியது என்ன – இடியோடு இடி மோதியது
எனும்படி (மோதி); பொடியாயின – துகள்களாயின; பொருந்தினர்
புக்கார் – (அவ்விருவரும்) நெருங்கினவர்களாகி; (மற்போரிடத்)
தொடங்கினர்.
————–
7970. மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்;
பத்துத் திசையும் செவிடு எய்தின; பல் கால்
தத்தித் தழுவி, திரள் தோள்கொடு தள்ளி,
குத்தி, ‘தனிக் குத்து’ என, மார்பு கொடுத்தார்.–244-
மத்தச்சினமால் களிறு என்ன மலைந்தார் – (சுக்ரீவன் கும்பன்
ஆகிய இருவரும்) மதமும் சினமும் கொண்ட மயக்கமுள்ள களிறுகளைப்
போல் போரிட்டார்கள்; பத்துத் திசையும் செவிடு எய்தின –
(அதனால் ஏற்பட்ட ஓசையால்) பத்துத்திசைகளும் செவிடுபட்டன;
பல்கால் தத்தித் தழுவி – பலமுறை பாய்ந்து தழுவி (நெருக்கியும்);
திரள்தோள் கொடு தள்ளி – (தங்கள்) திரண்ட தோள்களைக் கொண்டு
தள்ளியும்; குத்தி – (ஒருவரை ஒருவர்) குத்திக்கொண்டும்;
தனிக்குத்துஎன – தனியாகக் குத்துவாய் என்று; மார்பு கொடுத்தார் –
(அடுத்தவருக்கு) மார்பினைக் காட்டியவர்களாயும்; (போர் செய்தனர்.)
————–
7971. நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க,
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க,
மலையின் பிளவுற்றது, தீயவன் மார்பம்,–245-
நிலையில் – (மேலே சொன்னவாறு போர்) செய்யும் நிலையில்;
சுடரோன் மகன் – கதிரவன் மகனாகிய சுக்ரீவனது; வன் கை நெருங்க
– வலிமை உடைய கை நெருக்கிக்குத்தியதால்; கலையில் படு கம்மியர்
– தமக்கு உரிய தொழிலை நன்கு பயின்றிருக்கும் கம்மியரது; கூடம்
அலைப்ப – சம்மட்டி மோதுவதால்; உலையில் படு இரும்பென –
உலைக்களத்தில் உள்ள இரும்பு போல; வன்மை ஒடுங்க – வலிமை
கெட; தீயவன் மார்பம் – தீயவனாகிய (அந்தக் கும்பனுடைய) மார்பு;
மலையின் பிளவுற்றது – மலைபிளவுபட்டதைப் போல பிளவுபட்டது.
————–
7972. ‘செய்வாய் இகல்?’ என்று அவன் நின்று சிரித்தான்;
ஐ வாய் அரவம் முழை புக்கென, ஐயன்
கை வாய் வழி சென்று, அவன் ஆர் உயிர் கக்க,
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான்.–246-
அவன் – (மார்பு பிளந்த நிலையிலும்) அந்தக் கும்பன்; இகல்
செய்வாய் என்று – போர் செய்வாய் என்று கூறி; நின்று சிரித்தான் –
நின்று கொண்டு சிரித்தான்; ஐயன் – தலைவனாகிய சுக்ரீவன்; ஐவாய்
அரவம் முழை புக் கென – ஐவாய்ப் பாம்பு குகையில் புகுந்ததைப்
போல; கை வாய் வழி சென்று – (தன்)கையை (அவனது) வாய்க்குள்
செலுத்தி; அவன் ஆர் உயிர் கக்க – (அவன்) (தனது) அரிய உயிரை
(வெளிக்)கக்கும்படியாக; பைவாய் நெடு நாவை – பைபோன்ற வாயில் உள்ள நீண்ட நாக்கை; முனிந்து
பறித்தான் – சினந்து பிடுங்கினான்.
—————
கும்பன் இறக்க, நிகும்பகை அங்கதன் எதிர்த்தல்
7973. அக்காலை, நிகும்பன், அனல் சொரி கண்ணன்,
புக்கான், ‘இனி, எங்கு அட போகுவது?’ என்னா,
மிக்கான் எதிர், அங்கதன் உற்று வெகுண்டான்;
எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார்.–247-
அக்காலை – அந்தப் பொழுது; நிகும்பன் – நிகும்பன் என்பவன்;
அனல் சொரி கண்ணன் – நெருப்பை வெளிக்காலுகிற கண்களை
உடையவனாய்; புக்கான் – புகுந்தான்; இனி எங்கு அட போகுவது
என்னா – இனி எங்கே அட போகப் போகிறார் என்று
சொல்லிக்கொண்டு (வந்து); எதிர் மிக்கான் – சுக்ரீவன் எதிரில்
செருக்கி நின்றான்; உற்று அங்கதன் வெகுண்டான் – (அவன் முன்)
நெருங்கி அங்கதன் சினந்து நின்றான்; எக்காலமும் இல்லது ஓர் பூசல்
இழைத்தார் – (அவ்விருவரும் எக்காலத்திலும் (காண) நிகழாத
(பெரும்) போரைத் (தொடங்கி) நிகழ்த்தினார்கள்.
————-
7974. சூலப் படையானிடை வந்து தொடர்ந்தான்,
ஆலயத்தினும் வெய்யவன் அங்கதன், அங்கு ஓர்
தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான்,
நீலக் கிரிமேல் நிமிர் பொற்கிரி நேர்வான்.–248-
நீலக் கிரி மேல் நிமிர் பொற்கிரி தேர்வான்-நீலமலையின் மேல்
நிமிர்ந்து செல்லும் பொன்னால் ஆகிய மலை போல்பவனாகிய;
ஆலத்திலும் வெய்யவன் அங்கதன் – நஞ்சினும் கொடுமை உடைய
அங்கதன்; சூலப்படையானிடை வந்து தொடர்ந்தான்-சூலப்படையை
ஏந்தியவனான (நிகும்பகை) வந்து தொடர்ந்து; ஆங்கு ஓர் –
அப்பொழுது ஒரு; தாலப் படைகைக் கொடு – பனைமரம் ஆகிய
படையைக் (கைக்) கொண்டு; சென்று தடுத்தான் – சென்று
(அவனைத்) தடுத்தான்.
————–
நிகும்பன் சூலத்தைத் தடுத்து அனுமன் அவனை அழித்தல்
7975. எறிவான் உயர் சூலம் எடுத்தலும், ‘இன்னே
முறிவான் இகல் அங்கதன்’ என்பதன் முன்னே,
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்,
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான்.–249-
எறிவான் – (நிகும்பன்) எறிவதற்காக; உயர் சூலம் எடுத்தலும் –
சிறந்த சூலத்தை (உயர்த்தி) எடுத்த உடனே; இகல் அங்கதன் –
போர்த் தொழில்வல்ல அங்கதன்; இன்னேமுறிவான் என்பதன்
முன்னே – இப்பொழுதே அழிந்து படுவான் என்பதற்கு முன்பே;
அடல் மாருதி – கொல்லும் தொழில்வல்ல அனுமன்; அறிவான் –
(அதனை) அறிந்தவனாய்; அற்றம் உணர்ந்தான் – (அங்கதனின்)
முடிவை உணர்ந்து; பொறிவான் உகு தீ என – பொறியை மிகுதியாக
வெளிப்படுத்துகிற தீயினைப் போல; வந்து புகுந்தான் –
(அவ்விருவரிடையே) வந்து புகுந்தான்.
—————-
7976. தடை ஏதும் இல் சூலம் முனிந்து, சலத்தால்,
விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை,
இடையே தடைகொண்டு, தன் ஏடு அவிழ் அம் கைப்
புடையே கொடு கொன்று, அடல் மாருதி போனான்.–250-
தடை ஏதும் இல் சூலம் – (உயிரைப் போக்குவதில்) தடை எதுவும்
இல்லாத சூலத்தை; முனிந்து – சினந்து; சலத்தால் – வஞ்சனையோடு;
விடையே நிகர் அங்கதன் மேல் விடுவானை – காளையை ஒத்த
அங்கதன் மீது செலுத்துபவனாகிய நிகும்பனை; இடையே தடை
கொண்டு – இடையே (சென்று) தடுத்துக் கொண்டு; தன் – தன்னுடைய;
ஏடு அவிழ் அம் கைப் – இதழ் விரிந்தது போல் அமைந்த அழகிய
கைகளால்; புடையே கொடு கொன்று – புடைத்துக் கொன்று; அடல்
மாருதி போனான் – கொல்லும் தொழில் வல்ல மாருதி சென்றான்.
————–
தலைவர்களை இழந்த அரக்கர் சேனையின் நிலை
7977.
நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்,
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்;
வன் தாள் மரம் வீசிய வானர வீரர்
கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார்.–251-
நின்றார்கள் – (இதுவரை) பின்னிடாது நின்ற (அரக்க வீரர்கள்);
தடுப்பவர் இன்மை நெளிந்தார் – (குரங்குப்படைகளைத்) தடுத்திடும்
(தலைவர்கள்) இல்லாமையால் தத்தளித்து; பின்றாதவர் பின்றி –
புறங்கொடாதவர் புறங்கொடுத்து; இரிந்து பிரிந்தார் – நிலைகெட்டுப்
பிரிந்தார்கள்; வன்தாள் மரம் வீசிய – வலிய அடிப்பகுதியைக்
கொண்ட மரங்களை வீசிய; வானர வீரர் – குரக்கு வீரர்கள்;
மிகுதானை கொன்றார் – (அரக்கரின்) பெரும் படையைக்
கொன்றார்கள்; அரக்கர் குறைந்தார் – அதனால் அரக்க வீரர்
எண்ணிக்கையில் குறைந்தார்கள்.
—————–
7978. ஓடிப் புகு வாயில் நெருக்கின் உலந்தார்,
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்; குத்தால்
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்,
பாடித்தலை உற்றவர், எண் இலர் பட்டார்,–252-
புகுவாயில் ஓடி – நகரத்துக்குள் ஓடி; புகுவாயில் – புகுகின்ற
வாயிலின்கண்; நெருக்கின் உலந்தார் – (ஏற்பட்ட) நெருக்கத்தால்
உயிரிழந்தவர்; கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்-கோடிக்கு மேல்
அதிகமாக உள்ளனர்; குத்தால் – (வானர வீரர் குத்திய) குத்தினால்;
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் -உண்டாகிய புண் உடலோடு
திரும்பிப் போய்; பாடித்தலை உற்றவர் – பாசறைக் கண்
சேர்ந்தவர்கள்; எண் இலர் பட்டார் – எண்ணில்லாதவர்கள்
இறந்துபட்டார்கள்.
————-
7979. ‘தண்ணீர் தருக’ என்றனர் தாவுற ஓடி,
உண் நீர் அற, ஆவி உலந்தனர், உக்கார்;
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர்; காலால்
மண் ஈரம் உற, கடிது ஊர் புக வந்தார்.–253-
தண்ணீர் தருக என்றனர் – தண்ணீர் தருக என்று கேட்டவர்கள்;
தாவுற ஓடி – தண்ணீர் உள்ள இடத்தை நோக்கி ஓடி, உண் நீர் அற –
நாக்கில் இருந்த நீர் முற்றும் வரண்டு விட; ஆவி உலந்தனர் உக்கார்
– உயிர் வாடியவர்களாய் அழிந்தார்கள்; கண்ணீரொடும் – கண்ணீர்ப்
பெருக்கோடு; ஆவி கலுழ்ந்தனர் – உயிருக்காக அழுதவர்கள்; காலால்
மண் ஈரம் உற – காலின்வழிப் பெருகும் கண்ணீரினால் மண்ணில்
ஈரம் மிக; கடிது ஊர்புக வந்தார் – விரைவாக ஊரின்கண் புக
வந்தார்கள்.
————–
7980. விண்மேல் நெடிது ஓடினர், ஆர் உயிர் விட்டார்
மண்மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்;
எண் மேலும் நிமிர்ந்துளர், ஈருள் தயங்கப்
புண் மேலுடை மேனியினார், திசை போனார்.–254-
விண்மேல் நெடிது ஓடினர் – ஆகாயத்தின் மேல் நீண்ட தூரம்
ஓடியவர்களாகி; ஆர் உயிர் விட்டார் – தங்களது அரிய உயிரை
விட்டவர்களும்; மண் மேல் – நிலத்தின் மேல்; நெடுமால் வரை
என்ன மறிந்தார் – உயர்ந்த பெரிய மலைகள் (விழுந்துள்ளன)
என்னும்படி இறந்து கிடந்தவர்களும்; ஈருள் தயங்க – ஈரல் வெளியே
தெரிய; புண் மேலுடை மேனியினார் – புண்கள் மிக்குடைய
உடம்பினை உடையவராய்; திசை போனார் – திசைகளின் கண் ஓடிச்
சென்றவர்களும்; எண் மேலும் நிமிர்ந்துளர் – எண்ணிக்கைக்கு
அடங்காமல் மிகுந்துள்ளனர்.
————-
7981. அறியும்மவர்தங்களை, ‘ஐய! இவ் அம்பைப்
பறியும்’ என வந்து, பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண் இலர்; தம் மனை பெற்றார்,
குறியும் அறிகின்றிலர், சிந்தை குறைந்தார்.-255-
அறியும் மவர் தங்களை – (தங்களுக்கு) அறிமுகமாகி இருப்பவர்
தங்களை நோக்கி; ஐய – ஐயனே; இவ்அம்பைப் பறியும் என – இந்த
அம்பை (உடலை விட்டுப்) பறித்து விடுங்கள் என்று சொல்ல; வந்து
பறித்தலும் – (அவர்கள்) வந்து பறித்த உடனே;ஆவி பிறியும் அவர் எண் இலர் – உயிர் பிரிந்த அவர்கள்
எண்ணிக்கை இல்லாதவர் ஆவர்; தம்மனை பெற்றார் – தங்கள்
வீட்டைச் சென்று அடைந்தவர்கள்; குறியும் அறிகின்றிலர் – (அதன்)
அடையாளத்தையும் அறியாதவர்களாய்; சிந்தை குறைந்தார் – மனம்
ஒடுங்கியவர்களும் (எண்ணிலர்) என்றபடி
————
7982. பரி பட்டு விழ, சிலர் நின்று பதைத்தார்;
கரி பட்டு உருள, சிலர் கால்கொடு சென்றார்;
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார்,
எரி பட்ட மலைக்கண் இருந்தவர் என்ன,–256-
பரிபட்டு விழ – குதிரைகள் இறந்து விழுந்ததால்; சிலர் நின்று
பதைத்தார் – சிலர் (தடுமாறி) நின்று பதைப்பு எய்தினார்கள்; கரிபட்டு
உருள – யானைகள் இறந்து விழுந்து உருண்டதனால்; சிலர் கால்
கொடு சென்றார் – சிலர் காலினைக் கொண்டு ஓடிச் சென்றார்கள்;
எரிபட்ட மலைக்கண் இருந்தவர் என்ன – நெருப்பில் எரிந்த
மலையிடத்து இருந்தவர்கள் என்னும்படியாக; நெரிபட்டு அழி
தேரிடையே – நெருக்கத்தினால் அழிந்து போன தேர்களின் இடையே;
பலர்நின்றார் – பல (அரக்கர்) நின்றார்கள்.
—————-
7983. மண்ணின் தலை வானர மேனியர் வந்தார்,
புண் நின்ற உடற் பொறையோர் சிலர் புக்கார்,
‘கண் நின்ற குரங்கு கலந்தன’ என்னா,
உள் நின்ற அரக்கர் மலைக்க, உலந்தார்.-257-
மண்ணின் தலை-நிலத்திடத்தில்; புண் நின்ற உடற் பொறையோர்
– புண்பட்ட உடல் பாரம் உடையவர்களாகச் சிலர்; வானர மேனியர் –
சிலர் குரங்கு மேனி உடையவர்களாக; வந்தார் புக்கார் – வந்து
புகுந்தார்கள்; கண் நின்ற குரங்கு – தங்கள் கண் எதிரே நின்ற
குரங்கு(ப் படைவீரர்) கலந்தன என்னா – தங்கள் படையோடு
கலந்தன என்று எண்ணி; உள் நின்ற அரக்கர் – (அரக்கர் படையின்)
உள்ளே இருந்த அரக்கர்கள்; மலைக்க -(அவர்களோடு) போர் செய்ய; உலந்தார் – (அவ்வரக்கர்கள்)
அழிந்தார்கள்.
———-
7984. இரு கணும் திறந்து நோக்கி, அயல் இருந்து இரங்குகின்ற
உருகு தம் காதலோரை, ‘உண்ணும் நீர் உதவும்’ என்றார்,
வருவதன் முன்னம் மாண்டார் சிலர்; சிலர் வந்த தண்ணீர்
பருகுவார் இடையே பட்டார்; சிலர் சிலர் பருகிப் பட்டார்.–258-
இருகணும் திறந்து நோக்கி – தங்களது இரண்டு கண்களையும்
திறந்து பார்த்து; அயல் இருந்து இரங்குகின்ற – அருகில் இருந்து
(தங்களது நிலைக்கு) இரங்கி; உருகு தம் காதலோரை – மனமுருகுகிற
(தங்களின்) அன்புக்கு இடமானவரைக் (கண்டு); உண்ணும் நீர் உதவும்
என்றார் – (நீங்கள் எங்கட்கு) உண்பதற்கு உரிய நீரைத் தந்து
உதவுங்கள் என்று கேட்டார்கள்; சிலர் வருவதன் முன்னம் மாண்டார்
– (அவ்வாறு கேட்டவர்களில்) சிலர் (தண்ணீர்) கொண்டு வருவதற்கு
முன்பே இறந்தார்கள். சிலர் வந்த தண்ணீர் பருகுவார் இடையே
பட்டார் – சிலர் (கொண்டு) வந்த தண்ணீரை உண்டு நடுவில் இறந்து
அழிந்தார்கள்; சிலர் சிலர் – மிகச் சிலரே தண்ணீரைப் பருகி
இறந்தார்கள்.
————–
7985. மக்களைச் சுமந்து செல்லும் தாதையர், வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி, தம்மைக் கொண்டு ஓடிப் போனார்;
கக்கினர் குருதி வாயால், கண்மணி சிதற, காலால்
திக்கொடு நெறியும் காணார், திரிந்து சென்று, உயிரும்
தீர்ந்தார்.–259-
மக்களைச் சுமந்து செல்லும் தாதையர் – (போரில் புண் பட்டு
விழுந்த தம்) மக்களைச் சுமந்து செல்லுகின்ற தந்தையர்; வழியின்
ஆவி உக்கனர் என்ன வீசி – (அம்மக்கள்) வழியில் உயிர் துறந்தமையால் (அவர்தம் உடலை) வீசிவிட்டுத்; தம்மைக் கொண்டு
ஓடிப் போனார் – தங்களைக் (காப்பாற்றிக்) கொள்வதற்காக ஓடிப்
போய்; வாயால் குருதி கக்கினர் – (துன்பமிகுதியாலும் நெடுந் தூரம்
ஓடினமையாலும்) வாயில் இரத்தம் கக்கிக்; கண்மணி சிதற –
கண்ணின் மணிகள் தெறித்து விழுந்ததால்; திக்கொடு நெறியும் காணார்
– திசையும் செல்லும் வழியும் தெரியாதவர்களாகி, திரிந்து சென்று –
(காலால்) தடவி (வழிமாறிச்) சென்று; உயிரும் தீர்ந்தார் – உயிர்
விட்டார்கள்.
————
அதிகாயனும் பிறரும் இறந்து பட்டமையை இராவணனுக்குத் தூதர் கூறல்
7986. இன்னது ஓர் தன்மை எய்தி, இராக்கதர் இரிந்து சிந்தி,
பொன் நகர் புக்கார்; இப்பால், பூசல் கண்டு ஓடிப் போன,
துன்ன அருந் தூதர் சென்றார், தொடு கழல் அரக்கர்க்கு
எல்லாம்
மன்னவன் அடியில் வீழ்ந்தார், மழையின் நீர் வழங்கு
கண்ணார்.–260-
இன்னது ஓர் தன்மை எய்தி – இப்படிப் பட்ட ஒரு நிலைமையை
அடைந்து; இராக்கதர் இரிந்து சிந்தி – அரக்கர்கள் நிலைகெட்டுச்
சிதறி; பொன் நகர் புக்கார் – அழகிய இலங்கை நகரத்தை
அடைந்தார்கள்; இப்பால் – இப் பகுதியில்; பூசல் கண்டு – நடந்த
போரினைக் கண்டு; ஓடிப் போன – (அங்கு நடந்ததைக் கூறுவதற்காக)
ஓடிப்போன; துன்ன அருந்தூதர் சென்று – நெருங்குவதற்கு
அருமையான தூதுவர்கள் சென்று; மழையின் நீர் வழங்கு கண்ணார் –
மழை போல நீர் சொட்டுகிறகண்களை உடையவராய்; தொடு கழல்
அரக்கர்க்கு எல்லாம் மன்னவன் – வேலைப்பாடு தோன்ற
அமைக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த அரக்கர்களுக்கு எல்லாம்
தலைவனாகிய இராவணனது; அடியில் வீழ்ந்தார் – அடிகளில் விழுந்து
வணங்கினர்.
—————-
7987. நோக்கிய இலங்கை வேந்தன், ‘உற்றது நுவல்மின்’ என்றான்;
‘போக்கிய சேனைதன்னில் புகுந்துள இறையும் போதா;
ஆக்கிய போரின், ஐய! அதிகாயன் முதல்வர் ஆய
கோக் குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர், ஆவி’ என்றார்.–261-
நோக்கிய இலங்கை வேந்தன் – (தூதர் காலில் விழுந்ததைப்)
பார்த்த இலங்கைக்கு வேந்தனாகிய இராவணன்; உற்றது நுவல் மின்
என்றார் – (நீர்) நடந்ததைச் சொல்லுங்கள் என்றான்; போக்கிய
சேனை தன்னில் – (நீ) அனுப்பிய படைதன்னில்; புகுந்துள – திரும்பி
நகருக்கு வந்துள்ளவை; இறையும் போதா – சிறிது என்று
சொல்லுவதற்குக் கூடப் போதாது; ஐய – ஐயனே; ஆக்கிய போரின் –
நடந்த போரில்; அதிகாயன் முதல்வர் ஆய – அதிகாயனைத்
தலைவனாகக் கொண்ட; கோக்குலக்குமரர் எல்லாம் – அரசகுலத்துக்
குமரர்கள் எல்லாம்; ஆவி கொடுத்தனர் என்றார் – உயிரைக்
கொடுத்துவிட்டனர் என்று கூறினார்கள்.
—————–
இராவணன் நிலையும் செயலும்
7988. ஏங்கிய விம்மல் மானம், இரங்கிய இரக்கம் வீரம்,
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று
தாங்கிய தரங்கம் ஆகக் கரையினைத் தள்ளித் தள்ளி,
வாங்கிய கடல்போல் நின்றான்-அருவி நீர் வழங்கு
கண்ணான்.–262-
அருவி நீர் வழங்கும் கண்ணான் – (கோக்குலக்குமரர் இறந்ததைக்
கேள்விப்பட்டதால்) நீரருவி போன்று கண்ணீர் வெளிப்படுகின்ற
கண்களை உடையவனாகிய இராவணன்; ஏங்கிய விம்மல் – ஏக்கம்
கொள்ளக் காரணமாகிய; மானம் இரங்கிய இரக்கம் – மானமும்
இரங்குகின்ற இரக்கமும்; ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை –
மிக்க சினமும், துன்பமும் என்ற இவை,; ஒன்றற்கு ஒன்று – ஒன்றோடு
ஒன்று; தாங்கிய தரங்கம் ஆக – மேலும் மேலும் தள்ளி வருகின்ற
அலைபோல இருக்க;கரையினைத் தள்ளித் தள்ளி – (அவ்வலை) கரையளவு (வந்து)
தள்ளித் தள்ளி; வாங்கிய – பின்னால் செல்லுகின்ற; கடல் போல்
நின்றான் – கடல் போல் நின்றான்.
————-
7989. திசையினை நோக்கும்; நின்ற தேவரை நோக்கும்; வந்த
வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப்
பிசையுறும் கையை; மீசை கறுக்கொள உயிர்க்கும்; பேதை
நசையிடைக் கண்டான் என்ன, நகும், அழும், முனியும்,
நாணும்.–263-
திசையினை நோக்கும் – (அதற்குப் பின்னால் இராவணன்)
திசைகளை எல்லாம் நோக்குவான்; நின்ற தேவரை நோக்கும் –
(தனக்குப் பணிவிடை செய்து நின்ற) தேவர்களை நோக்குவான்; வந்த
வசையினை நோக்கும் – (தனக்கு) ஏற்பட்ட பழியினை நோக்குவான்;
கொற்ற வாளினை நோக்கும் – வெற்றி பொருந்திய வாளினை
நோக்குவான்; கையைப் பற்றிப் பிசையுறும் – கையைப் பற்றிப்
பிசைவான்; மீசை சுறுக்கொள உயிர்க்கும் – மீசை தீய்ந்து போகும்படி
பெருமூச்சு விடுவான்; நசையிடைப் பேதை கண்டான் என்ன –
விருப்பம் மிகுதியால் பேதமைக் குணங்களை அடைந்தவன் போல;
நகும் அழும் முனியும் நாணும் – நகுவான், அழுவான், முனிவான்,
நாணுவான்.
———–
7990. மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்;
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்;
‘பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென்’ என்று
எண்ணும்; எண்ணி,
புண்ணிடை எரி புக்கென்ன, மானத்தால் புழுங்கி நையும்.–264-
மண்ணினை எடுக்க எண்ணும் – (மேலும் இராவணன்) நிலவுலகை எடுக்க எண்ணுவான்; வானினை இடிக்க எண்ணும் –
வானத்தை இடிக்க நினைப்பான்; எண்ணிய உயிர்கள் எல்லாம் –
(உலகில்) எண்ணிக் கணக்கிடப்பட்டுள்ள உயிர்கள் அனைத்தையும்;
ஒரு கணத்து எற்ற எண்ணும் – ஒருகண நேரத்தில் அழிக்க
எண்ணுவான்; பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் – பெண்
என்ற பெயரைக் கொண்ட பொருள்களை எல்லாம் பிளந்து
அழிப்பேன்; என்று எண்ணும் – என்று நினைப்பான்; எண்ணி –
அவ்வாறு நினைத்து; புண்ணிடை எரிபுக்கென்ன – புண்ணில் தீப்
புகுந்தது போல; மானத்தால் புழுங்கி நையும் – மான உணர்வினால்
(மனம்) புழுங்கி வருந்துவான்.
————
தானியமாலி இராவணன் அடி வீழ்ந்து அரற்றல்
7991. ஒருவரும் உரையார் வாயால், உயிர்த்திலர், உள்ளம் ஓய்வார்,
வெருவரும் தகையர் ஆகி, விம்மினர் இருந்த வேலை,
தரு வனம் அனைய தோளான்தன் எதிர் தானிமாலி
இரியலிட்டு அலறி, ஓயாப் பூசலிட்டு, ஏங்கி வந்தாள்;–265-
ஒருவரும் வாயால் உரையார் – (இராவணனைச்
சூழ்ந்திருந்தவர்கள்) ஒருவரும் வாயால் எதுவும் பேசாமல்;
உயிர்த்திலர் – மூச்சுக்கூட விடாதவர்களாய்; உள்ளம் ஓய்வார் –
மனம் (தடுமாறி) ஓய்ந்து; வெரு வரும் தகையர் ஆகி – அஞ்சுகிற
தன்மை உடையவர்களாகி; விம்மினர் இருந்த வேலை –
அழுதவர்களாய் இருந்த பொழுது; தருவனம் அனைய தோளான் –
மரங்கள் அடர்ந்த வனம் போன்ற தோள்களை உடைய இராவணன்;
தன் எதிர் – தன் எதிரில்; தானிமாலி – தானிய மாலி (என்ற அவன்
மனைவி); இரியலிட்டு – நிலைகெட்டு; அலறி – அலறிக் கொண்டு;
ஓயாப் பூசலிட்டு – ஓயாத பேரொலி செய்து கொண்டு; ஏங்கி வந்தாள்
– அழுது கொண்டு வந்தாள்.
———–
7992. மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன, வளைகளோடு
ஆரம் ஏங்க,
முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன
வாயாள்;
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி,
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும்
கண்ணாள்;–266-
மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன – (ஏங்கி அரற்றி வந்த
தானியமாலி) மலை உச்சியில் இடி விழுந்தது போல; வளைகளோடு
ஆரம் ஏங்க – (கையில் அணிந்துள்ள) வளையல்களும் (கழுத்தில்
அணிந்துள்ள) ஆரமும் ஒலிக்க; முலைக் குவட்டு எற்றும் கையால் –
முலையாகிய மலைமீது மோதுகிற கையை உடையவளாய்; முழை
திறந்தன்ன வாயாள் – குகை திறந்தது போன்ற வாயை உடையவளாய்;
தலைக்குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன – மேற்கு மலையில்
பொருந்திய செவ்வானம் (கீழே) சரிந்தது போன்ற; குழல்கள் தத்தி –
சிவந்த நிறமுடைய கூந்தல் அவிழ்ந்து பரவ; உலைக்கு – உலைக்
களத்தின் கண்; வட்டு செம்பு உருகு ஒத்து – திரண்ட பொருளாகிய
செம்பு உருகுவதை ஒத்து; உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – குருதி நீர்
ஒழுகுகிற கண்களை உடையவள் ஆனாள்.
——————-
993. வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல், மென்மைத் தோள்
நிலத்தை மேவ;
போழ்ந்தனள், பெரும்பாம்பு என்னப் புரண்டனள்;
பொருமிப் பொங்கி,
‘சூழ்ந்தனை, கொடியாய்!’ என்னா, துடித்து, அருந்
துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள், அழக் கண்டும்
அறிந்திலாதாள்;–267-
அழக்கண்டும் அறிந்திலாதாள் – (இதுநாள்வரை பிறர்) அழுவதைப்
பார்த்து இருந்தும் துன்பத்தை அறிந்திலாதவளாகிய தானியமாலி;
மென்மைத் தோள் நிலத்தை மேவ – தன் மெல்லிய தோள்கள்
நிலத்தைப் பொருந்த; அரக்கன் தாள் மேல் வீழ்ந்தனள் –
அரக்கனாகிய இராவணனது கால்களின் மீது விழுந்து; போழ்ந்தனள் –
வாயைத் திறந்து கொண்டு; பெரும் பாம்பு என்னப் புரண்டனள் –
(பெரிய) மலைப் பாம்பு போல (நிலத்தில்) புரண்டு; பொருமிப் பொங்கி
– மனத்தில் (துன்பப்) பொருமல் பொங்கி (வர); கொடியாய் –
கொடியவனே; சூழ்ந்தனை என்ன – (எனக்குக் கேடு) செய்தனை
என்று கூறித்; துடித்து – துடித்து; அருந்துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள் – கடத்தற்கரிய துன்பமாகிய வெள்ளத்தில் ஆழ்ந்து;
புலம்பலுற்றாள் – புலம்பத் தொடங்கினாள்.
————–
7994. ‘மாட்டாயோ, இக் காலம் வல்லோர் வலி தீர்க்க?
மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோள் ஆற்றல்?
கேட்டாய் உணர்ந்திலையோ? என் உரையும் கேளாயோ?
காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ?–268-
இக்காலம் – இப்பொழுதே; வல்லோர் வலிதீர்க்க மாட்டாயோ –
(மகனைக் கொன்ற) வலியவர்களின் வலிமையைத் தீர்க்க மாட்டாயா?;
வீரம் மீட்டாயோ – வீரத்தை மீண்டும் பெற்று விட்டாயா?; தோள்
ஆற்றல் மெலிந்தாயோ – தோள் வலிமை மெலிந்து விட்டாயா?; கேட்டாய் உணர்ந்திலையோ – (நான்
கூறுவதைக்) கேட்டு உணரவில்லையா?; என் உரையும் கேளாயோ –
(அல்லது) என் பேச்சை (நீ) (காது) கொடுத்துக் கேட்கமாட்டாயா?;
என்னுடைய கண்மணியை – என்னுடைய கண்ணின் மணிபோன்ற
(மகனைக்); காட்டாயோ காட்டாயோ – காட்டமாட்டாயா?
காட்டமாட்டாயா?
———-
7995.
‘”இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள்” என்று,
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன்தன்
உந்து சிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே!–269-
இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாள் என்று-இந்திரனுக்கும்
தோல்வியடையாத (வலிமையுள்ள) நல்ல மகனைப் பெற்றவள் என்று
(சொல்லி); அந்தரத்து வாழ்வாரும் – வானத்தில் வாழுகின்ற தேவரும்;
ஏத்தும் – புகழ்கின்ற; (புகழ்ச்சி பெற்ற நான்) அளியத்தேன் –
இரங்கத்தக்கவளாய்; மந்தரத் தோள் என் மகனை – மந்தரமலை
போன்ற தோள்களை உடைய என் மகனை; மாட்டா மனிதன் தன் –
(வலிமையால் ஒப்பாக) மாட்டாத மனிதன் தன்னுடைய; உந்து
சிலைப்பகழிக்கு – செலுத்தும் வில்லினது அம்புக்கு; உண்ணக்
கொடுத்தேனே – உண்ணப் பலி கொடுத்தேனே.
————
7996. ‘அக்கன் உலந்தான்; அதிகாயன்தான் பட்டான்;
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்;
மக்கள் இனி நின்று உளான், மண்டோதரி மகனே;
திக்குவிசயம், இனி, ஒருகால் செய்யாயோ?–270-
அக்கன் உலந்தான் – முன்பு அனுமனால்) அக்ககுமாரன்
அழிந்தான்; அதிகாயன் தான்பட்டான் – (இப்போது) அதிகாயன்
தானும் பட்டான்; மிக்க திறத்து உள்ளார்கள் – மிக்க வலிமை
உடையவர்கள்; எல்லாரும் வீடினார் – எல்லோரும் அழிந்தார்கள்;
மக்கள் இனி நின்று உளான் – மக்களில் இனி (உயிருடன்)
நின்றிருப்பவன்; மண்டோதரி மகனே – மண்டோதரி மகனாகிய
(இந்திர சித்தன்) மட்டுமே; திக்கு விசயம் இனி – திக்கு விசயத்தை
இனி; ஒருகால் செய்யாயோ – ஒரு முறை செய்து வரமாட்டாயா?
—————–
7997. ‘ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய்’ எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ?
பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ?
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ?–271-
ஐயா ஏது சிந்தித்து இருக்கின்றாய் – (இராவணன் மௌனியாய்
இருத்தல் கண்டு) ஐயா எதைச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றாய்;
எண் இறந்த – எண்ணிக்கை கடந்த; கோதை ஆர் வேல் – மாலை
பொருந்திய வேலை ஏந்திய; அரக்கர் பட்டாரைக் கூவாயோ –
அரக்கர்களாகிய இறந்தவர்களை (உயிருடன் திரும்பிவரக்)
கூப்பிடமாட்டாயோ?; பேதைஆய் – அறிவற்றுப்போய்க்; காமம்
பிடிப்பாய் பிழைப்பாயோ – காமத்தைக் கைக்கொண்ட (நீ) உயிர்
பிழைப்பாயோ?; இன்னும் -இன்னமும்; சீதையால்வருவ – சீதை
காரணமாக வருந்துன்பங்கள்; சிலவேயோ – சிலதானோ (அன்று பல).
————–
7998.
‘உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்;
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்;
கும்பகருணனையும் கொல்வித்து, என் கோமகனை
அம்புக்கு இரை ஆக்கி, ஆண்டாய் அரசு, ஐய!’–272-
உணர்வுடையான் உம்பி – அறிவு உடையவனாகிய உன் தம்பி
(வீடணன்); சொன்ன உரை கேளாய் – கூறிய சொற்களைக்
கேளாதவனாயும்; நம்பி குலக்கிழவன் கூறும் – ஆடவரிற் சிறந்த
குலத்தலைவனாகிய மாலியவான் கூறிய; நலம் ஓராய் – (சொற்களின்)
நன்மையை எண்ணாதவனாயும்; கும்பகருணனையும் கொல்வித்து –
(இருந்து) கும்பகருணனைப் (பகைவர் கையால்) கொல்வித்து; என்
கோமகனை – என் சிறந்த மகனாகிய அதிகாயனை; அம்புக்கு இரை ஆக்கி – (பகைவர்) அம்புக்கு
இரையாகக் கொடுத்து; ஐய – ஐயனே; அரசு ஆண்டாய் – அரசு
புரிந்தாய்.
—————–
தானியமாலி அரண்மனை சேறல்
7999. என்று, பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து,
கன்று படப் பதைத்த தாய்போல் கவல்வாளை,
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து,
குன்று புரையும் நெடுங் கோயில் கொண்டு அணைந்தார்.–273-
என்று – என்று; பலப்பலவும் – பலவற்றையும்; பன்னி – பலமுறை;
எடுத்து அழைத்து – எடுத்துக்கூறி; கன்று படப்பதைத்த – கன்று
உயிர் இழந்ததால் பதைப்பு எய்திய; தாய்போல் – தாய்ப் பசுவைப்
போல்; கவல்வாளை – கலங்கி அழுகின்றவளாகிய தானியமாலியை;
நின்ற உருப்பசியும் – (அங்கு அருகில்) நின்ற உருப்பசியும்;
மேனகையும் – மேனகையும்; நேர்ந்து எடுத்து – நெருங்கி வந்து
எடுத்து; குன்று புரையும் – குன்றினை ஒத்த; நெடுங்கோயில் – பெரிய
அரண்மனைக்குக்; கொண்டு அணைந்தார் – கொண்டு சேர்த்தார்கள்.
———–
இலங்கையர் வருத்தம்
8000. தானை நகரத்துத் தளரத் தலைமயங்கி,
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்;-
ஏனை மகளிர் நிலை என்ன ஆகும்?-போய் இரங்கி,
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார்.-274-
நகரத்துத்தானை தளர – இலங்கை நகரத்தின்கண் (தங்கள்)
சேனைகளின் தோல்வியைக் (கேள்விப்பட்டு); தலைமயங்கி –
அரக்கர்கள் எல்லாரும் ஒன்று கூடி; போன மகவுடையார் – (போரில்
இறந்து) போன மக்கள் உடையவர்கள்; எல்லாம் புலம்பினார் –
எல்லோரும் புலம்பி அழுதார்கள்; வானமகளிரும் – (அப்
புலம்பலைக் கேட்ட) தேவமகளிரும்; இரங்கிபோய் – இரக்கம் (மிக்குப்)
போய்; வாய் திறந்து மாழ்கினார் – வாயைத் திறந்து அழுதனர்; ஏனை
மகளிர் நிலை – அரக்க மகளிரது நிலைமை; என் ஆகும் –
என்னவாகும்?
————-
8001.
தார் அகலத்து அண்ணல் தனிக் கோயில் தாசரதி
பேர, உலகு உற்றது உற்றதால், பேர் இலங்கை;
ஊர் அகலம் எல்லாம், அரந்தை, உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது, அழுத குரல் ஓசை.–275-
பேர் இலங்கை – பெரிய இலங்கை மாநகரம்; தார் அகலத்து
அண்ணல் – மாலையை மார்பில் அணிந்த தலைவனாகிய; தாசரதி –
‘தசரத ராமன்; தனிக் கோயில் – ஒப்பற்ற தன் அரண்மனையிலிருந்து;
பேர – (காடு நோக்கிச்) செல்ல; உலகு உற்றது உற்றதால் – உலகம்
அடைந்த துன்பத்தை அடைந்தது; ஊர் அகலம் எல்லாம் –
ஊர்ப்பரப்பு முழுவதும்; அரந்தை – தோன்றிய துன்பம் கலந்த;
அழுத குரலோசை – அழுங்குரலோசை; உவா உற்ற-முழு மதி நாளில்
தோன்றிய; ஆர்கலியே ஒத்தது – கடலின் ஓசையை ஒத்து
விளங்கியது.
——————–
மிகைப் பாடல்கள்
முதிர் போர் உறு மொய்ம்பன், முனைத்தலையில்
சதிர் ஏறிய தானை தழைத்திட, அங்கு
எதிர் தேரிடை ஏறினன்; மற்று ஒரு வெங்
கதிரோன் இகல் கண்டிட ஏகினனால். 20-1
தேர் வெள்ளம் அளப்பு இல; திண் புரவித்
தார் வெள்ளம் அளப்பு இல; தந்தி இனக்
கார் வெள்ளம் அளப்பு இல; கண்டகராம்
பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால். 20-2
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து
எல் ஏறிய வாள், எழு, வல் முசலம்,
வில்லோடு அயில், வெங் கதை,
வேல் முதலாம் பல் ஆயுத பத்தி பரித்து உடையார். 25-1
என, வந்த நிசாசரன், இவ் உரையைத்
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்,
சனகன் மகள்தன் ஒரு நாயகன் ஆம்
அனகன் அது கேட்டு, இது அறைந்திடுவான். 50-1
என்றே உலகு ஏழினொடு ஏழினையும் தன்
தாமரைபோல் இரு தாள் அளவா-
நின்றான் உரை செய்ய, நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால். 52-1
வெங் கொலை மத கரி வெள்ளம் ஆயிரம்
துங்க நீள் வரைப் புயத்து அரக்கர் தூண்டினார்;
வெங் கணை இலக்குவன் வெகுண்டு,
உகாந்தத்தில் பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான். 103-1
முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின்
விடு கணை மழை நெடுந் தாரை,
வெம் மதக் கட களிறு அடங்கலும் கழிய, கால்,
கரம், குடல், தலை, குறைந்தமை கூறல் ஆவதோ? 103-2
அறுந்தன, தலை, கழுத்து; அறுந்த, தாள், கரம்;
அறுந்தன, செவி, முகம்; அறுந்த, வால், மருப்பு;
அறுந்தன, குடல், உடல்; அறுந்த, வாய், விழி;
அறுந்தன, கட களிறு ஆய நாமமே. 103-3
அறுத்தன, சில கணை; அறுத்த கூறுகள்
செறுத்தன, சில கணை; சின்னபின்னமாய்
ஒறுத்தன, சில கணை; உம்பர் ஊர் புகத்
தெறித்தன, சில கணை; செப்பல் ஆவதோ? 103-4
மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற,
முதிர் சினத்து இலக்குவன், கடிகை மூன்றினில்,
கொதி கொள் வெஞ் சர மழை கொழிப்பக் கண்டு,
தாள் அதிர்வுறு பொலன் கழல் அரக்கர் அண்மினார். 103-5
அடுத்தனர் ஆனை, தேர், புரவி, ஆழியை;
தொடுத்தனர் அணி படச் சூழ்ந்து, வள்ளல்மேல்
விடுத்தனர் படைக் கலம்; வெகுண்டு வீரனும்
தடுத்தனன், ஒரு தனித் தனுவின் வன்மையால். 103-6
பெருங் கடை யுக மழை பிறழ,
தன் ஒரு கரம் படு சிலையினின் கான்ற
மாரியின், சரம் படச் சரம் பட, தாக்கு
இராக்கதக் கருங் கடல் வறந்தது கழறல் ஆகுமோ? 103-7
இலக்குவக் கடவுள் தன் ஏவின் மாரியால்,
விலக்க அருங் கரி, பரி இரதம், வீரர் என்று
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற
நிலப் படச் சாய்ந்தமை நிகழ்ந்த போதிலே. 119-1
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
பாய்ந்திட, பருஞ் சிலை விசையின் பற்றினான்;
மாய்ந்தது குரங்கு; அது கண்டு, மா மறை
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே. 121-1
கார்முக விசை உறும் கணையின் மாரியால்
பார வெஞ் சிலை அறுத்து, அவன் தன் பாய்
பரித் தேரினைப் பாகனோடு அழியச் சிந்தி,
மற்று ஓர் கணை அவன் சிரம் உருளத் தூண்டினான். 121-2
‘தாருகன் எனும் படைத் தலைவன் தன் வயப் போர்
அழிந்தவன் உயிர் பொன்றினான்’ என,
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே,
வீரனை வளைத்தனர், வெகுளி மிக்குளார். 122-1
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத
வழியே விழ உற்றன, வெறி வெங் கணை நிமிரப் பொறி சிதற,
முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய,
உழை உற்றன உலவும்படி உலவுற்றன-கரிகள். 140-1
துள்ளிக் களி வய வானரர் ஆர்த்தார்; அவை தோன்றக்
கள்ளக் கடு நிருதக் குலம் கண்டப்படக் கண்டே,
உள்ளக் கடு வேகத்தொடு தேவாந்தகன்,
உளத்தே கொள்ளைப் படை அனையஃது ஒரு கொடுஞ் சூலம் கைக் கொண்டான். 169-1
ஆங்கு அது நிகழக் கண்ட அடல் அதிகாயன் சீறி,
தாங்கு பல் அண்ட கோடிதான் பிளந்து உடைய, தன் கை
வாங்கினன் சிலை; நாண் ஓசை படைத்தபின், வாளி மாரி
பாங்குறு கவியின் சேனைக் கடல்மிசைப் பரப்பி ஆர்த்தான். 186-1
ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும்
தூர்த்து, அடல் கவியின் சேனை துகள் படத் துணிந்து சிந்தப்
பேர்த்தனன் சிலை நாண் ஓதை; பிறை முகப் பகழி பின்னும்
கோத்தனன், அனந்த கோடி கோடியின்-கொதித்து வெய்யோன். 186-2
உருத்து, அதிகாயன், மேன்மேல் ஒண் சுடர்ப் பகழி மாரி
நிரைத்தலின், இடைவிடாது நெடுங் கவிச் சேனை வெள்ளம்
தரைத் தலம் அதனில் பட்டுத் தலை உடல் சிதற, சோரி
இரைத்து எழு கடலின் பொங்க, இமையவர் அலக்கணுற்றார். 186-3
கரடியின் சேனையோடு கவிக் குலத் தானை எல்லாம்
தரைப் பட, சரத்தின் மாரித் தசமுகன் சிறுவன்-சீறா,
கரை அறு கவியின் சேனைத் தலைவர்கள், கனலின் பொங்கி,
வரையொடு மரமும் கல்லும் வாங்கினர், விரைவின் வந்தார். 186-4
வானரத் தலைவர் பொங்கி வருதலும், அரக்கன்
மைந்தன், போன திக்கு அறிவுறாமல், பொழிந்திடும் பகழிதன்னால்
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன்; குருதி பொங்க,
தான் அறிவு அழிந்து, யாரும் தனித் தனி தலத்தின் வீழ்ந்தார். 186-5
திசை முகம் கிழிய, தேவர் சிரம் பொதிர் எறிய, திண் தோள்
தசமுகன் சிறுவன், பின்னும், தடஞ் சிலை குழைய வாங்கி,
விசை கொள் நாண் எறிந்து, மேன்மேல் வெங் கவித் தானை
வெள்ளம் பசை அறப் புலர்ந்து போகப் பொழிந்தனன், பகழி மாரி. 186-6
‘வீரருக்கு ஒருவரான விறல், அதிகாயன் வெம் போர்
ஆர் இனித் தடுக்க வல்லார்?’ எனப் பதைத்து,
அமரர் எல்லாம், சோர்வுறத் துளங்கி, நில்லாது ஓடினர்;
சுடரும் வை வேல் போர் வலி அரக்கன் சேனை புகுந்தது, கடலின் பொங்கி. 186-7
அங்கதன் தோளில் நின்ற அண்ணல், ஆங்கு அதனைக் கண்டே,
செங் கையில் பிடித்த வீரச் சிலையை நாண் எறிந்து, தீரா,
வெங் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி,
துங்க வேல் நிருதர் சேனை துணி படச் சொரிந்தான், வாளி. 186-8
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து,
ஏழு கரு முகில் பொழிவதென்னக் கணை மழை சொரிந்து,
காலாள் இரதமொடு இபங்கள் வாசி யாவையும் களத்தின் வீழ்த்தி,
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து, அமர் கடிதின் ஏன்றான். 186-9
புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம் திரிதர,
அரக்கன் சீறி, திண் சிலை குழைய வாங்கி,
எரி முகப் பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி
சொரிதர, அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார். 195-1
வில்லினுக்கு ஒருவன் ஆகி, உலகு ஒரு மூன்றும் வென்ற
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான்,
கல் இடும் மாரி என்னக் கணை மழை பொழியக் கண்ட
வில்லியும், விடாது, வெய்ய கணை மழை விலக்கி நின்றான். 203-1
விறல் அதிகாயன் வீழ, வெந் திறல் அரக்கன் மைந்தர்
குறுகினர், மும்மையான ஆயிர கோடி உள்ளார்;
எறி கடற் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து,
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர், தெழிக்கும் சொல்லார். 207-1
வருதலும் அரக்கன், மற்று(அவ்) வானரச் சேனை பின்னும்
பொரு சினம் திருகி முற்றா, பொங்கு அழல் என்னப் பொங்கி,
மரமொடு மலைகள் ஏந்தி, மாதிரம் மறைய, வல்லே
உரும் எனச் சொரிய வீசி உடற்றினர், ஒழிவு இலாதார். 209-1
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும், கொற்றம் கொள்
இராவணன் மைந்தர் குலைந்தே முற்றும்படி
மோதினர்; மோத முடிந்தே அற்று, அங்கு
அவர் யாவரும் ஆவி அழிந்தார். 250-1
அளப்பு இல் மைந்தர் எல்லாம், ஆனை, தேர், பரி,
ஆள் என்னும் வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய,
தாமும் களத்திடைக் கவிழ்ந்தார் என்ற மொழியினைக் காதில் கேளா,
துளக்கம் இல் அரக்கன், மேருத் துளங்கியது என்ன, சோர்ந்தான். 261-1
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply